Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமூர் வல்லூறு

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 19 நவம்பர் 2025, 02:42 GMT

இயற்கை உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பறவைகளின் வலசை. கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் அவற்றைக் காண பறவை ஆர்வலர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலங்களுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம்.

அப்படி வரும் வலசைப் பறவைகளின் பயணப் பாதைகளை, பயணிக்கும் தொலைவை, ஓய்வெடுக்கும் இடங்களைக் கண்டறியும் முயற்சிகளை பறவை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர்.

அத்தகைய ஒரு முயற்சியாக, இந்திய காட்டுயிர் நிறுவனம் (WII), மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தை முன்னெடுக்கிறது. அந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில், மூன்று அமூர் வல்லூறுகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி ரேடியோ பட்டைகளை அணிவித்து, அவற்றின் பயணத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

அப்பபாங், அலாங், அஹு எனப் பெயரிடப்பட்ட மூன்று அமூர் வல்லூறுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றான அப்பபாங், "5 நாட்கள் மற்றும் 15 மணி நேரத்தில்" 5,400 கி.மீ தூரம் ஓய்வின்றி பயணித்து சோமாலியாவை அடைந்திருப்பதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமூர் வல்லூறுகள் நாளொன்றுக்கு சுமார் 1000 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடியவை என்றும் எங்குமே தரையிறங்காமல் நாள்கணக்கில் பறந்து வலசைப் பயணத்தை முடிக்கக் கூடியவை என்றும் கூறுகிறார் இந்தத் திட்டத்தை வழிநடத்துபவரும், இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் சுரேஷ் குமார்.

அமூர் வல்லூறுகள் ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் கிலோமீட்டர் தூரத்தை நிற்காமல் பறந்தது எப்படி? அவற்றின் உடலமைப்பு அதற்கு உதவுவது எப்படி?

ரேடியோ கருவி பொருத்தப்பட்ட நிலையில் அப்பபாங் எனப் பெயரிடப்பட்ட அமூர் வல்லூறு

பட மூலாதாரம், Dr. R Suresh Kumar

படக்குறிப்பு, ரேடியோ கருவி பொருத்தப்பட்ட நிலையில் அப்பபாங் எனப் பெயரிடப்பட்ட அமூர் வல்லூறு

அமூர் வல்லூறுகளின் கடல் பயணம்

ஆப்பிரிக்காவை நோக்கி வலசை போகும்போது, அமூர் வல்லூறுகள், இந்திய துணைக் கண்டத்தின் வழியே பயணிக்கின்றன. அப்போது இந்திய நிலப்பரப்பில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அவை தம் பயணத்தைத் தொடர்கின்றன.

சுமார் 160 முதல் 200 கிராம் வரை எடைகொண்ட இவைதான் வேட்டையாடி பறவைகளிலேயே நீண்ட தூரம் பயணிக்கக் கூடியவை. இவை ஓர் ஆண்டுக்கு 22,000 கி.மீ வலசைப் பயணம் மேற்கொள்கின்றன.

அமூர் நதி அமைந்துள்ள ரஷ்யாவின் தென்கிழக்கு மற்றும் சீனாவின் வடக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் அமூர் வல்லூறுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்திய நிலப்பரப்புக்கு வருகின்றன.

இமயமலையைச் சுற்றிப் பயணித்து, நாகாலாந்து, மணிப்பூர், கிழக்கு மேகாலயா ஆகிய பகுதிகளுக்கு இவை வருகின்றன. இந்திய நிலப்பரப்பில் ஓய்வெடுக்கத் தரையிறங்கும் இந்த வல்லூறுகள், பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கி மேற்கு கடலோரத்தை அடைகின்றன.

பின்னர் அங்கிருந்து அரபிக் கடலை மூன்றரை முதல் நான்கு நாட்கள் வரையிலான ஓய்வற்ற தொடர் பயணத்தில் கடந்து அவை சோமாலியாவை அடைகின்றன.

இந்தப் பயணத்தில் இந்தியா வரும் பல ஆயிரக்கணக்கான வல்லூறுகளில் ஒரு சில தேர்வு செய்யப்பட்டு, வடகிழக்கு இந்தியாவில் விஞ்ஞானிகளால் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

அப்படியாகக் கண்காணிக்கப்பட்ட சமீபத்திய மூன்றில் அப்பபாங் என்ற ஆண் வல்லூறு மணிப்பூரில் தொடங்கி, எங்குமே தரையிறங்காமல் முழுவீச்சில் அரபிக் கடலைக் கடந்து சோமாலியாவை அடைந்துள்ளது.

மூன்று அமூர் வல்லூறுகளும் நவம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, அரபிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தன. அதில் முன்னிலையில் இருந்த அப்பபாங் கிட்டத்தட்ட பாதி கடலை கடந்து விட்டிருந்தது

பட மூலாதாரம், Dr. R Suresh Kumar

படக்குறிப்பு, மூன்று அமூர் வல்லூறுகளும் நவம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, அரபிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தன. அதில் முன்னிலையில் இருந்த அப்பபாங் கிட்டத்தட்ட பாதி கடலை கடந்து விட்டிருந்தது

மணிப்பூர் முதல் சோமாலியா வரை எங்கும் நிற்காமல் 5,400 கி.மீ பயணம்

மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆய்வில், கண்காணிக்கப்படும் பறவைகள் பற்றித் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ள சுப்ரியா சாஹு, "அப்பபாங்கின் பயணம் அசாதாரணமானது" என விவரித்துள்ளார்.

ரேடியோ கருவிகளைப் பொருத்தி, செயற்கைக்கோள் மூலமாக இந்த மூன்று பறவைகளையும் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

"அந்த டிராக்கர்கள் மூலம் கிடைக்கும் தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரில் இருந்து புறப்பட்ட அப்பபாங், மத்திய இந்தியா மற்றும் அரபிக் கடலை கடந்து சோமாலியாவை நோக்கி கடல் கடந்து பறந்தது" என்று சுப்ரியா சாஹு குறிப்பிட்டுள்ளார்.

"அப்பபாங் அரபிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்காவின் சோமாலியாவுக்குள் நுழைந்துள்ளது. ஆண் வல்லூறான அப்பபாங், கிட்டத்தட்ட 5,400 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 5 நாட்கள், 15 மணி நேரம் மட்டுமே. அதாவது நாளொன்றுக்கு 1,000 கி.மீ என்ற கணக்கில் இடைவிடாது பறந்து அந்த பறவை சோமாலியாவை அடைந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தொலைவு பறக்க உதவும் கூர்மையான இறக்கைகள்

உலகின் மிக நீண்ட வலசை பயணங்களில் ஒன்றை மேற்கொள்ளும் இவை பார்ப்பதற்கு வியப்பூட்டும் அழகுடன் இருக்கும்.

கண்களைச் சுற்றி, மூக்கைச் சுற்றி ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும் இவற்றுடைய இரு இறக்கைகளின் முனையும் வளைந்து, சற்றே கூர்மையாக இருக்கும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற கால்களுடன், குறுகிய வால்களைக் கொண்டிருக்கும் இவை பொதுவாக கூட்டமாக வாழக்கூடியவை.

நாகாலாந்தின் டொயாங் பகுதியில் வானில் கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கும் அமூர் வல்லூறுகள்

பட மூலாதாரம், P Jeganathan

படக்குறிப்பு, நாகாலாந்தின் டொயாங் பகுதியில் வானில் கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கும் அமூர் வல்லூறுகள்

இவற்றின் வளைந்த, சற்று கூர்மையான அமைப்பைக் கொண்ட இறக்கைகள், இந்த நீண்ட பயணத்திற்கு உதவிகரமாக இருப்பதாகக் கூறுகிறார் பறவை ஆய்வாளர் முனைவர் ப.ஜெகநாதன். நெடுந்தூரம் வலசை செல்லக்கூடிய அனைத்துப் பறவைகளின் உடல் அமைப்புமே சற்று வளைந்த, கூர்மையான இறக்கைகளுடன்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

"உதாரணமாக, தவிட்டுக் குருவி பறக்கையில் அதன் இறக்கை வட்டமான வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால், அமூர் வல்லூறு, பட்டை வால் மூக்கன் போன்ற வலசைப் பறவைகளின் இறக்கைகள் கூர்மையாக வளைந்திருக்கும்," என்று விளக்கினார்.

கடந்த 18 ஆண்டுகளாக அமூர் வல்லூறுகளின் இந்த நெடுந்தூர வலசைப் பயணத்தைக் கண்காணித்து வருகிறார் இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் சுரேஷ் குமார்.

அவரது கூற்றுப்படி, "அமூர் வல்லூறுகள் பொதுவாக வடகிழக்கு இந்திய நிலப்பரப்பில் ஓய்வெடுத்த பிறகு மத்திய இந்தியாவை கடந்து மேற்கு இந்தியாவின் கடலோரப் பகுதியை அடைகின்றன. ஓரிரவு மட்டும் அங்கே தங்கிவிட்டுத் தங்கள் கடல் பயணத்தைத் தொடங்கி, அரபிக் கடலை அவை கடந்து செல்கின்றன. ஆனால், அப்பபாங் போல அவ்வப்போது சில வல்லூறுகள் இப்படியாக எங்குமே ஓய்வெடுக்காமல் ஒரே மூச்சில் முழு தூரத்தையும் கடந்து சோமாலியாவுக்கு சென்றுவிடுகின்றன" என்றார்.

அமூர் வல்லூறு

பட மூலாதாரம், Getty Images

மழைக் காலத்தில் ஈசல்களை உண்ண வரும் வல்லூறுகள்

இந்தப் பறவைகளின் உடலமைப்பு அவை பறப்பதற்கு ஏதுவான வளைந்த இறக்கைகளைக் கொண்டுள்ளன. அதேவேளையில், அவை நெடுந்தொலைவு பறக்க அதிக ஆற்றல் தேவை.

அத்தகைய ஆற்றலைச் சேமித்து வைப்பதற்கான உணவை அவை வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் அதிகம் பெறுவதாகக் கூறுகிறார் முனைவர் சுரேஷ் குமார்.

"வடகிழக்கு இந்தியாவில் அவற்றுக்குத் தேவையான இரை மிக அதிக அளவில் கிடைக்கக் கூடிய, சரியான காலகட்டத்தில் அவை அங்கு வந்தடைகின்றன. மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கத்திற்காக ஈசல்கள் பறக்கத் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் வந்து சேரும் அமூர் வல்லூறுகள், அந்த ஈசல்களை அதிகமாக உட்கொள்கின்றன. இதற்குப் பிறகு சோமாலியா சென்றடையும் வரை அவற்றுக்குப் போதுமான இரை கிடைக்காது என்பதை அவை அறிந்திருப்பதால், நன்கு சாப்பிட்டு, உடல் எடையைக் கூட்டிக் கொள்கின்றன," என்று விளக்கினார் சுரேஷ் குமார்.

அதாவது, அதிகளவிலான உணவை உட்கொள்வதன் மூலம் சேமித்து வைக்கப்படும் கொழுப்புச்சத்து அவற்றின் நீண்டதூர பயணத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குவதாகக் கூறுகிறார் அவர்.

ஈசல் மட்டுமின்றி அமூர் வல்லூறுகளின் விருப்பமான இரையாக தேசாந்திரி தட்டானும் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் ஜெகநாதன்.

"இந்த வல்லூறுகள் வலசை செல்லும் அதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு தேசாந்திரி தட்டானும் (Wandering Glider) கடல் கடந்து தங்கள் வலசைப் பயணத்தை மேற்கொள்கின்றன. வல்லூறுகள் இடைவிடாமல் பறந்து கொண்டிருக்கும்போதே, தங்கள் வழியில் செல்லும் இந்தத் தட்டான்களைப் பிடித்துச் சாப்பிட்டுக் கொள்கின்றன. அதுவும் ஓய்வின்றி நீண்ட தூரம் பறக்கத் தேவையான ஆற்றலை அவற்றுக்கு வழங்குகின்றன" என்று விளக்கினார் ஜெகநாதன்.

தேசாந்திரி தட்டான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசாந்திரி தட்டான்

அரபிக் கடலை கடக்க உதவும் காற்று

அரபிக் கடல் மீது பறக்கும் போது, சுமார் மூன்றரை முதல் நான்கு நாட்களுக்கு எங்கும் அவை தரையிறங்க முடியாது. அதோடு, தேசாந்திரி தட்டான் போல வலசை வரும் பூச்சிகள் கிடைத்தாலொழிய உணவு கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை.

அப்படியிருக்கும் சூழலில், இந்திய நிலப்பரப்பில் அதீதமாகச் சாப்பிட்டு, கொழுப்புச்சத்தினை சேமித்துக் கொள்வது மட்டுமே அவற்றுக்கு உதவுவதில்லை என்கிறார் ஜெகநாதன்.

"அவை கடல் பரப்பில் பறக்கும்போது, அங்கு நிலவும் காற்றோட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்கு ஏற்ற வகையில்தான் அவை தம் வலசைப் பயணத்தையே வடிவமைத்துள்ளன," என்றும் அவர் விளக்கினார்.

அவை வலசை செல்லும் நேரத்தில், பூமத்திய ரேகைப் பிராந்திய ஒருங்கிணைப்பு மண்டலம் (ITCZ) என்று அழைக்கப்படும் ஒரு வானிலை மண்டலம் உருவாகிறது. அந்த வானிலை மண்டலம் தென்மேற்கு நோக்கி நகரும் காற்றோட்டத்தைக் கொண்டு வருகிறது.

அமூர் வல்லூறுகள் ஆப்பிரிக்கா நோக்கிப் பறக்கும்போது, "இந்தக் காற்றோட்டத்தை ஓர் உந்துதலாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என்று விளக்கினார் ஜெகநாதன். அதாவது, மிதிவண்டியை மிதிக்கும் போது காற்று பின்னாலிருந்து வேகமாகத் தள்ளினால், மிதிவண்டியில் செல்வது எப்படி எளிதாக இருக்குமோ, அதேபோல, தான் பயணிக்கும் திசையிலேயே வீசும் காற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமூர் வல்லூறுகள் கடல் கடந்து பயணிக்கின்றன.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, அப்பபாங் அரபிக் கடலை முழுதாகக் கடந்து சோமாலியாவை அடைந்துவிட்டது

பட மூலாதாரம், Dr. R Suresh Kumar

படக்குறிப்பு, கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, அப்பபாங் அரபிக் கடலை முழுதாகக் கடந்து சோமாலியாவை அடைந்துவிட்டது

வசந்த காலத்தின் பிற்பகுதியில், ஆசியாவுக்கு மீண்டும் திரும்பி வரும்போதுகூட, அமூர் வல்லூறுகள் இதேபோல காற்று வீசும் திசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

அந்த நேரத்தில், அரபிக் கடலின் மீது வடகிழக்குத் திசை நோக்கி வீசும் காற்றை வல்லூறுகள் தங்கள் பயணத்திற்குப் பயன்படுத்துகின்றன. அதன் மூலம் கடலைக் கடந்து, இந்திய நிலப்பரப்புக்கு மேலே கிழக்கு நோக்கிப் பறந்து, பின்னர் வடக்கு நோக்கித் திரும்பி, அமூர் நதிப் பகுதியை அடைகின்றன.

உணவுக்காக வேட்டையாடப்பட்ட அமூர் வல்லூறுகள்

அமூர் வல்லூறுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகா இன மக்களால் பெருமளவில் உணவுக்காக வேட்டையாடப்பட்டன. ஆனால், அத்தகைய செயல்கள் தற்போது முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் சுரேஷ்.

அமூர் வல்லூறுகள் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வடகிழக்கு இந்தியாவில் சில காலம் தங்குவதைப் பற்றிப் பேசிய ஜெகநாதன், "நாகாலாந்தின் டொயாங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடும்போது வானம் முழுக்க அவை பறந்து கொண்டிருப்பதை, முழு மரத்தையும் அவை ஆக்கிரமித்து அமர்ந்திருப்பதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும்," என்று விவரித்தார்.

"அப்படி வரும் அமூர் வல்லூறுகளை மக்கள் கூட்டமாக வேட்டையாடி, உணவுக்காக விற்பனை செய்வது நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்தது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் மறைந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் பறவை ஆர்வலருமான ராம்கி ஸ்ரீநிவாசன் பெரும்பங்காற்றினார்" என்றும் முனைவர் ஜெகநாதன் குறிப்பிட்டார்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில், இவற்றின் இறைச்சி விற்பனைத் தொழில் பங்கு வகிப்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக சூழல் சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"இத்தகைய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாகவே அமூர் வல்லூறுகளுக்கு இந்திய நிலப்பரப்பில் இருந்த பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது."

கடந்த 2013ஆம் ஆண்டில், இறைச்சிக்காக வல்லூறுகளை வேட்டையாடுவதை மரபாகக் கொண்டிருந்த நாகா பழங்குடியின மக்கள், அவற்றைப் பாதுகாப்பதாக உறுதி பூண்டனர்.

தற்போதைய சூழலில், "அவற்றுக்கு இத்தகைய அபாயங்கள் இல்லையென்றாலும், வல்லூறுகள் வலசையின்போது ஓய்வெடுக்கும் நில அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், அவற்றின் உணவுத் தேவை பூர்த்தியாவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்," என்று தெரிவித்தார் முனைவர் சுரேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly9mdx7v18o

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் பற்றி பலதரப்பட்ட தகவல்கள் ........! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.