Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 Nov, 2025 | 04:57 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது  வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசாங்கம்  உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா  ரவிகரன்    வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும்  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார  அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 

போசணையிலும் வேலைவாய்ப்பிலும் உணவு பாதுகாப்பிலும் அந்நியச் செலாவணியிலும் அரச வருவாயிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுகின்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் தொடர்பான இன்றைய விவாதத்திலே வன்னி மாவட்டத்தில் இன்னமும் சீர் செய்யப்படவேண்டியுள்ள பகுதிகளை விவாதிக்க விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் மொத்த தேசிய உற்பத்தியில் 1 சதவீத பங்களிப்பை கடற்றொழில் வழங்குகிறது. கடந்த ஆண்டின் தேசிய ஏற்றுமதி வருவாயில் 2.4மூ பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கை வாழ் மக்களின் விலங்கு புரத உட்கொள்ளலில் 50மூ இற்கும் அதிகமான பங்களிப்பை கடல்சார் உணவுகள் வழங்குகின்றன.

இது உலகளாவிய சராசரியிலும் மூன்று மடங்கு உயர்வாகும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேரயாகவோ மறைமுகமாகவோ இந்த மீன்வளத்தை வாழ்வாதார மூலமாக நம்பியுள்ளனர். கடலோர மீன்பிடி, கடலோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு அனைத்தும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் வலிமை சீரற்றது.

குறிப்பாக வடகடல் பகுதியில் மிகவும் சீரற்ற அணுகல் கடற்றொழில் பரப்பில் காணப்படுகிறது.

இலங்கையின் கடந்த ஆண்டின் மொத்த மீன் விளைச்சலின் 16 சதவீத பங்களிப்பை வடகடல் வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் வடகடலின் பங்களிப்பு அதன் வளநிலையுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. உள்ளுரில்  தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய மீள்வளச்சுரண்டல் வடகடலின் மீன்விளைச்சலுக்கு சவாலாகும் முக்கிய காரணிகள் ஆகின்றன.  

சட்டத்துக்குப் புறம்பான, ஒழுங்குபடுத்தப்படாத, அறிக்கைப்படுத்தப்படாத மீன்பிடியால் (ஐயுயு) வருடாந்தம் உலகளாவிய வகையில் 26-50 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார இழப்பு ஏற்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் துறைமுக அபிவிருத்திப்பணிகள், படகுத்தள மறுசீரமைப்பு, மீன்பிடி தொழிலுக்கான துணை உபகரணங்களை வழங்கல், நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்பு, விழிப்புணர்வுத்திட்டங்கள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் உள்ளிட்டவற்றுக்கான முன்மொழிவுகளை வரவேற்பதோடு மீனவர்களுக்கும் நிலைபேறான மீன்வளச்சூழமைவுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் காரணிகளை இழிவளவாக்குவதற்கான முயற்சிகளிலும் கூடுதல் கரிசனை கொள்ளுமாறு  கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

வடமாகாணத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பல முறை இந்த அவையிலே விவாதிக்கப்பட்டன. ஏனைய துறைகளில் கொள்ளும் கரிசனையைக்கூட இத்துறையில் இதுவரை அரசு காட்டாதிருப்பது சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இதுவரை காத்திரமான முடிவுகள் எட்டப்படாது நீடித்திருக்கும் இப்பிரச்சினைகளால் கடலை நம்பி வாழும் ஓரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இழுவைமடி படகுகள்,வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல்,வெடிவைத்து மீன்பிடித்தல், சுருக்கு வலைகளில் மீன்பிடித்தல் உள்ளிட்டவை இலங்கையின் சட்டத்துக்கு அமைவாக தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள். இத்தொழில் முறைகளால் இலங்கையின் கடல் வளம் அதிலும் குறிப்பாக வடகிழக்கின் கடல் வளம் தற்போது வெகுவாக சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதிருப்பது அரசாங்கத்தின் தவறாகும். சட்டத்திற்கு புறம்பாக இயங்குபவர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலையில் தற்போது சட்டத்தை மதித்து இயங்குபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களின் நாளாந்த வாழ்வாதாரம் தண்டிக்கப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளைக் கட்டுப்படுத்தாதிருக்கும் போது நாளுக்கு நாள் அவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் எண்ணிக்கை வடகடல்பரப்பில் அதிகரித்துச் செல்கிறது. தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் நூற்றுக்கணக்கான கிலோ மீன்களை பிடித்து இலாபம் உழைக்கும் அதே கடற்பரப்பில் ஐந்து கிலோ பத்துகிலோ என  எரிபொருளுக்கும் வருவாய் ஈட்டாத அளவுக்கு பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  

முல்லைத்தீவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 12,335 மெற்றிக் தொன் அளவிலான மீன்வளங்கள் கடற்றொழில் ஊடாக பெறப்பட்டதாக தங்கள் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு தொகை மீன்களில் வெளிச்சம் பாய்ச்சியும் வெடிவைத்தும் இரவுவேளைகளில் சுருக்குவலைகளைப் பயன்படுத்தியும் பிடித்த மீன்கள் எவ்வளவு மெற்றிக் தொன் என்ற புள்ளிவிபரம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா? ஏனெனில் பெரும்பாலான நேரத்தில் எரிபொருளுக்கும் வருவாய் ஈட்டாத அளவு மீன்களுடனேயே பாரம்பரிய மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.

இந்த அரசாங்கம் யாரைக்காக்கிறது? யாரை வஞ்சிக்கிறது? என்று தெரியவில்லை. கடல் தொழிலில் இந்த அரசு ஊழலுக்கு துணைபோகின்றது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் சான்றாக்குகின்றன.இத்தகைய மீன்பிடி முறைகள் இந்த ஆண்டோடு அதாவது 2025ஆம் ஆண்டோடு முற்றாக இலங்கைக்குள் தடைசெய்யப்படும் என மீன்பிடி அமைச்சர் இவ்வாண்டு உறுதியளித்திருந்தார்.

அறத்தை மதித்து கடலை மதித்து மீன்பிடிக்கும் மீனவர்கள் உங்கள் காலத்தில் பட்டினியால் மாண்டார்கள் என்பதை நிகழ்வாக்கவேண்டாம் என தயவுடன் அரசாங்கத்திடம்  கேட்டுக்கொள்கிறேன். இலங்கை கடற்பரப்பினுள் தொடர்ச்சியாக அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தவேண்டியதும் இந்த அரசின் கடப்பாடு. இத்தகைய தொடர்ச்சியான அத்துமீறல் நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

எல்லோரும் பயன்படுத்திச் செல்வதற்கு வடக்கு கடல் ஓர் ஒழுங்குபடுத்தப்படாத, திறந்தவெளி அணுகல் வலயம் அல்ல. மாறாக இது வடமாகாணத்தைச் சார்பாக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திடல்! அவர்களின் உரித்து. இந்தக்கடல் இந்தத்தலைமுறைக்கு மட்டும் அல்ல. இனி வரும் சந்ததிகளுக்குமானது. இனிவரும் காலத்திற்குமாக இக்கடல் வளத்தை முறையாக பேணவேண்டியது எம் எல்லோரின் பொறுப்பு!

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் நீர் வாழ் உயிரினவளங்கள் சட்டத்தின் 27ஆம் பகுதியின் முதல் கூற்று இலங்கை நீர்நிலைகளில் மீன் அல்லது பிற நீர் வாழ் வளங்களை நஞ்சாக்குதல், கொல்லுதல், அதிர்ச்சி ஊட்டுதல் அல்லது  முடக்குதல் போன்ற நோக்கங்களுக்காக ஏதேனும் நஞ்சுஇ வெடிப்பு அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும் பொருள் (டைனமிக் உட்பட) அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருளைப் பயன்படுத்தல் அல்லது பயன்படுத்த முயற்சித்தலைத் தடைசெய்கிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இத்தகைய தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் இன்றளவும் நடைபெறுகின்றன.

குறித்த சட்டத்தின் இரண்டாம் கூற்று அவ்வாறான பொருள்களை தரைக்கு கொண்டுவருதல், விற்றல், வாங்குதல், வைத்திருத்தல், கொண்டுசெல்லல் போன்றவற்றையும் தடைசெய்கிறது.அத்தகைய பொருள்கள் தரைக்கு கொண்டுவரப்படுகின்றன. விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன. கொண்டு செல்லப்படுகின்றன.  சட்டத்தின் 28ஆம் பகுதி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை சாதாரண உள்ளுர் மீன்பிடி படகுகளில் வைத்திருப்பதையோ பயன்படுத்துவதையோ தடைசெய்கிறது.

அத்தகைய தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மீன்பிடி படகுகளில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சு, இராணுவம் என அனைத்து துறையினரும் இணைந்து கூட இலங்கை மீனவர்களின் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளையும் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களையும் கட்டுப்படுத்த இயலவில்லை.

முல்லைத்தீவின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில்முறைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிடச்செல்லும் போது தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என பதிலளிப்பதாகவே மீனவர்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.

 இலங்கையின் அத்தனை பாதுகாப்புக் கட்டமைப்புகள் இணைந்து கூட கட்டுப்படுத்த இயலாதிருப்பின், தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கூறுவது உண்மை எனில் போதியளவு ஆளணியை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கி இவற்றை கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள்.அவ்வாறு போதிய அளவு ஆளணி உங்களிடம் இல்லையேல் இன்றுவரை சட்டத்துக்கு இசைவாக மீன்பிடிக்கும் எங்களின் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உங்கள் திணைக்களத்துடன் வருகிறோம். கட்டுப்படுத்துங்கள்.

ஒவ்வொரு முறைகேடும் இங்கு நடைபெறும் போது எங்களுக்கு விடுதலைப்புலிகளின் நிழல் நிர்வாகத்தையே உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இங்கு இந்திய மீனவர்களும் எல்லை தாண்டி வரவில்லை. இலங்கை மீனவர்களும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை இங்கு பயன்படுத்த முனையவில்லை. அவர்களால் இயல்பாக கொண்டுவர முடிந்ததை ஓர் அரசாகக்கூட ஏன் உங்களால் இதுவரை இயலவில்ல

கரையோரங்களில் கனிய மணல் அகழ்வுக்கான முயற்சிகள் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன.

கொக்கிளாய் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 44 ஏக்கர் கரையோரமாக 32 குடும்பங்களின் கரைவலைப்பாடுகள், காலபோக நெற்செய்கைக்கான விளைநிலங்கள், மானாவாரிக் காணிகள் அடங்கிய பகுதிகள் கனியமணல் அகழ்வுக்கென கையகப்படுத்தப்பட்டு வேலியிடப்பட்டன.

முல்லைத்தீவின் கொக்கிளாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கனிய மணல் அகழ்வின் பின்னர் அப்பகுதி முறையாக மீள்நிரப்பப்படாததால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வியலை சீர்குலைத்திருந்தது. அதற்கான மண் நிரப்பல் உள்ளிட்ட பரிகாரச் செயற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கனிய மணலுக்காக அபகரிக்கப்பட்ட 44 ஏக்கருக்கு மேலதிகமாக அதற்கு முன்னர்,பூர்வீகத்தமிழ் மக்கள் வாழ்ந்து தொழில் புரிந்த  20 ஏக்கர் வரையான உறுதிக்காணிகளில் போருக்குப் பின்னர் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொக்கிளாய் கனிய மணல் அகழ்வுக்கு ஒப்பான முயற்சிகள் மீண்டும் முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக செம்மலை கிழக்கு, செம்மலை, அளம்பில், உடுப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கான மணல் ஆய்வுக்கென உரிய தரப்பினர் வருகை தந்தபோது அதனை மக்கள் எதிர்த்திருந்தனர்.

கடந்த 2024.07.31ஆம் திகதி இவ்வாறானதொரு கனிய மணல் அகழ்வுக்காக கனியமணல் கூட்டுத்தாபனம், கடலோர பாதுகாப்புத் திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வழங்கல் முகாமைத்துவப்பிரிவுஇ புவிச்சரிதவியல் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளோடு கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் அடங்கலான ஓர் அணி அளம்பில் குருசடி எனும் பகுதிக்கு வருகைதரும் போது மக்களின் கடுமையான எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அளம்பில் குருசடி தொடக்கம் தீர்த்தக்கரை வரையான சுமார் 10 கிலோமீற்றர் நீளத்துக்கும் கரையோரத்தில் இருந்து 300 மீற்றர் தூரமான மேல் பகுதி வரை அளவீடு செய்து கையகப்படுத்தி கனிய மணல் அகழ்வதற்கான தொடக்க முயற்சியே அன்று மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமானது கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சுமார் 75 கிலோமீற்றர் நீளமானது.

முல்லைத்தீவு முழுதும் இவ்வாறு பல்வேறு தேவைக்கும் கரையோரம் கையகப்படுத்தப்பட்டால் அப்பகுதிகளின் மீனவர்கள் எங்கு தொழில் செய்வது! அம்மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசின் பதில் என்ன?

மன்னாரில் பேசாலையிலும் இத்தகைய கனிய மணல் அகழ்வுக்கான தொடக்க ஆய்வு முயற்சிகள் மக்கள் எதிர்ப்பால் தடுக்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி இல்லாது இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளமுடியாது. மக்களின் கருத்துகளை புறந்தள்ளி வடகிழக்கின் கரையோரங்களை முறையற்று இவ்வாறு கையகப்படுத்தும் திட்டங்களை கைவிடுங்கள்.

மன்னார் தீவில் கடந்த காலங்களில் காற்றாலை நிறுவப்படும்போது ஏனைய சூழல் காரணிகள் தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்படாமையால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அவலநிலைகளால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். இவ்வாறு வடகிழக்கில் பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் வடகிழக்கு வளங்கள் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்படாததாலும் முழுமைப்படுத்தப்படாததாலும்

அவற்றினால் ஏற்படும் இலாபத்தை நிறுவனங்களும் பாதிப்பை மக்களுமே தான் எதிர்கொள்கின்றனர்.

கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கொண்டே கடல் வளத்தை பாதிக்கும் இத்தகையை தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளின் நீடித்த செய்கையையும் கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் கனியமணல் உள்ளிட்ட முயற்சிகளையும் எதிர்க்கிறோம். எச்செயற்றிட்டத்தை மேற்கொள்வதாயினும் முறைப்படி மக்களைத் தெளிவூட்டி அவர்களின் அனுமதியோடு அரசுகள் அவற்றை செயற்படுத்தவேண்டும் என்பதை இங்கு தெரிவிக்கிறேன்.

தேசிய அளவிலான மீன் வளக் கொள்கைகளின் பலவீனமான நடைமுறைப்படுத்தலால் வடகடல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தத்தீவிலே மிகக்கடுமையாக உழைக்கும்இ மிகவும் குறைவாக பாதுகாக்கப்படும் ஊழியக்குடிமக்கள் மீனவர்கள் தாம். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்ற வகையில் மீனவர்களின் நிலைபேறான வாழ்வு இத்தீவின் பொருளாதாரத்தை மிகவும் வலுப்படுத்தும்.

இந்நிலையில் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடைசெய்யும் அனைத்து சட்டங்களையும் உடனடியாக நடைமுறைத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எமது கடல் வளத்தைப் பாதிக்கும் அயலக நடைமுறைகள் தொடர்பில் அதீத கரிசனை கொண்டு தீவின் வடகடலின் இறையாண்மையை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வடகடல் சார் பாதுகாப்பையும் நிலைபேறான மீனவர் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கையான, செயற்கையான அழிவுகளில் இருந்து மீண்டெழும் வகையில் மீனவர்களுக்கான இழப்பீட்டையும் காப்புறுதித் திட்டங்களையும் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நிறைவாக, வடகடல் என்பது என்பதை புவியியல் சார்ந்த ஒரு தளமாக கருதுவதைத் தாண்டி,வடக்கு வாழ் மக்களின் வாழ்வாதார கருவூலம். மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் மீனவர்களின் வறுமை இயல்பாகவே விலகும். தீவுக்கே மீன் வழங்கும் இனத்தை வலுவூட்டுங்கள்  என்றார்.

https://www.virakesari.lk/article/231522

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன; அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

26 Nov, 2025 | 04:09 PM

image

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை எவ்வாறு மேம்படுத்தப்படும் என எமது விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்றொழில் விடயத்தில் நாம் இன்னமும் பழமையான நிலையிலேயே உள்ளோம் என்பதை ஏற்றாக வேண்டும். ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளது. 

இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகின்றது. நவீன படகுகள் பற்றியும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மீன்பிடித்துறை வலுவிழந்து வரும் நிலையும் காணப்படுகின்றது.

இந்நிலைமையில் இருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. 

2025 வரவு- செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்கு கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

அதேபோல மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்தமுறையைவிட இம்முறை எல்லா விடயங்களுக்கும் உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதற்குரிய ஒதுக்கீடும் உள்ளது.

மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலறிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சூழ கடல் வளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ரின் மீன் இறக்குமதி செய்யும்நிலை காணப்பட்டது. 

இதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். கடந்த காலங்களில் இவர்களுக்கு உப்பு பிரச்சினை இருந்தது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கடற்றொழில் அமைச்சால் இலங்கையில் பிரமாண்ட கண்காட்சி கடந்த வாரம் நடத்தப்பட்டது. எமது நாட்டின் மகத்துவம் இதன்மூலம் எடுத்துரைக்கப்பட்டது. சர்வதேசத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது.

மீனவர்களின் பிரச்சினைகள் எமக்கு தெரியும். அவற்றை தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளை நாம் மேற்கொள்வோம். மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று நாம் தீர்வுகளை வழங்கி வருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/231507

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.