Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்

595662198_122174169644769546_50017657207

டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்வேறு விடயங்களிலும் உள்ளூராட்சி சபைகள் ஆர்வம் காட்டின.

மழை;வெள்ளம் ;புயல் எச்சரிக்கை எனினும் மக்கள் பரவலாக துயிலும் இல்லங்களை நோக்கி வந்தார்கள். பெரும்பாலான துயிலும் இல்லங்களில் மக்கள் குடைகளைப் பிடித்தபடி அஞ்சலி செய்தார்கள். மழை சற்றுக் கடுமையாக இருந்த இடங்களில் சுடருக்குக் குடை பிடித்து அதைப் பாதுகாத்துக் கொண்டு நனைந்தபடி நின்றார்கள். குறிப்பாக ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சுடர் அணையக்  கூடாது என்பதற்காக தமது தலைக் கவசத்தை சுடருக்கு மேல் பிடித்து சுடரைப் பாதுகாத்ததாக ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார்.

இவ்வாறு பரவலாகவும் செறிவாகவும் பெருமடுப்பிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணிக்குள், அதுதொடர்பான உரையாடல்களின் மீதான கவனக் குவிப்பை புயல் திசை திருப்பியது. மாவீரர் நாளுக்காக அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்தது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் நாட்டுக்குள் வந்து விட்டது. புயலின் அகோரம் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் கவனக்குவிப்பு மாவீரர் நாளில் இருந்து புயலை நோக்கித் திரும்பியது.

புயல் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தியது. அதிக உயிரிழப்பு தெற்கில்தான். வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்கள் சிதைவடைந்தன. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் துண்டிக்கப்பட்டது; மன்னாரில் ஆயிரக் கணக்கில் மாடுகள் இறந்தன. எனினும் வடக்கில் உயிரிழப்பு என்று பார்த்தால் மொத்தம் நான்கு பேர்தான். ஒருவர் தெற்கு நோக்கி பேருந்தில் சென்ற போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் உயிரிழந்தவர். மற்றவர் கடற்தொழிலாளி. ஏனைய இருவரும் வவுனியாவிலிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்கள்.

facebook_1764824140328_74022089510750673

ஒருபுறம் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர்பாராத திசைகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இன்னொரு புறம் வணிகர்களில் ஒருபகுதியினர் மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நோக்கிப் பல்வேறு தரப்புகளும் உதவிக்கரம் நீட்டின. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள்,புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் உதவிகளைச் செய்தனர். நாடுகளைப் பொறுத்தவரை முதலில் உதவியது இந்தியா. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், மாலை தீவுகள், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் உதவி புரிந்தன.

ஆனால் உள்ளூரில், வணிகர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினார்கள். மரக்கறி,முட்டை போன்றவற்றின் விலைகளை உயர்த்தினார்கள். புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் பெரும்பாலான சிலிண்டர் கடைகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். திடீரென்று சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பாதைகள்  அடைபட்ட காரணத்தால் சிலிண்டர்கள் வரவில்லை என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிலிண்டர்களைத்தான் கடைகளில் வைத்து விற்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேவையான குறிப்பிட்ட தொகை சிலிண்டர்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அதுதான் வியாபார வழமை.பாதைகள் அடைபட்டதைச் சாட்டாக வைத்து அவர்கள் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை  உருவாக்கினார்களா?

சிலிண்டர்களுக்கு நிர்ணய விலை உண்டு. விலை கூட்டி விற்க முடியாது. ஆனால் மரக்கறிகளுக்கு அப்படியல்ல. மரக்கறிகளை விரும்பின விலைக்கு விற்றார்ர்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு  அதிகமான விலைகள். பச்சை மிளகாயில் இருந்து இஞ்சி வரை,  விலை சடுதியாக உயர்ந்தது. வெள்ளம் வடிந்த பின்னரும், புயல் ஓய்ந்த பின்னரும், மரக்கறிகளின் விலை குறையவில்லை. ஒரு பகுதி மரக்கறி வியாபாரிகளின் இதயம்  இளகவில்லை.

மரக்கறிகள் மட்டுமல்ல முட்டை, கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் பேரண்ட்ஸ் வகை இறைச்சிக் கோழிகள் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டபோது தெற்கில் இருந்துதான் அவை வருகின்றன. பாதைகள் அடைபட்டதால் அவை வரவில்லை என்று சொன்னார்கள். புயலுக்கு முன் முட்டையின் விலை 30 ரூபாய். புயலோடு முட்டை விலை 36ரூபாய். ஏனென்றால் முட்டை ஒவ்வொரு நாளும் வவுனியாவுக்கு அப்பாலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முட்டை வியாபாரி தெற்கில் தனக்கு வழமையாக முட்டை சப்ளை செய்யும் மொத்த வியாபாரி அனுப்பிய வாட்சப் ஒளிப்படம் ஒன்றைக் காட்டினார். அதில் கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் புயலில் அடிபட்டுச் செத்துக் கிடந்தன.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. புயல் வந்து, வெள்ளம் பெருகி பாதைகள் தடைபட்டதும் மரக்கறிகளின் விலை,முட்டை விலை  உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு. பேரன்ட்ஸ் வகைக் கோழிகள் கிடைக்கவில்லை. அப்படியென்றால் வடக்கின் பொருளாதாரம் மேற்கண்ட பொருட்களுக்காக தெற்கில் தங்கியிருக்கின்றதா? வடக்கிலிருந்து தெற்குக்கான பாதைகள் அடைபட்டால் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முட்டை, பச்சை மிளகாய், பேரன்ட்ஸ் கோழி இறைச்சி போன்றவை கிடைக்காதா?

புயல் எழுப்பிய கேள்விகளில் இது முக்கியமானது. மற்றொரு கேள்வி, தொலைத் தொடர்பு தொடர்பானது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் குறிப்பாக கிராமப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவது டயலக் தொலைபேசி அட்டைகளைத்தான். ஆனால் புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் டயலக் சிம்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. அந்த சிம்களை பயன்படுத்திய பலர் தொடர்புகளை இழந்து தவித்தார்கள். அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். தொலைதொடர்பு இல்லையென்றால் ஆபத்தில் இருப்பவர்கள்  தனித்து விடப்படுவார்கள். இது கடந்த புயல் நாட்களில் நடந்தது. அது இயற்கை அனர்த்தம் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அனர்த்தமும்கூட.

டயலக் கொம்பனி உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்புக் கொம்பெனிகள் சாதாரண மக்களிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பணத்தை வசூலிக்கின்றன இந்த குற்றச்சாட்டு பரவலாக உண்டு. சிம்மை விற்கும் பொழுது அல்லது சேவையை தொடங்கும் பொழுது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலமே அப்பாவி மக்களிடமிருந்து சிறுகச்சிறுக பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. கேள்வி கேட்காத அப்பாவியான ஒரு வாடிக்கையாளரிடம் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை சுரண்டினால் கூட லட்சக்கணக்கானவரிடம் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ரூபாய்களைச் சுரண்ட முடியும். இவ்வாறு ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காகியிருந்த தொலைதொடர்புக் கொம்பனிகள் குறிப்பாக டயலாக் கொம்பனி இம்முறை புயலோடு அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.

இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் டயலக் தொலைத்தொடர்பு சீராகவில்லை. பலருடைய டயலாக் இன்டர்நெட் இணைப்பு மோசமாக இருக்கிறது. உயிரிழந்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்களில் ஒருபகுதியினர் இவ்வாறு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறமுடியும். டயலக் கொம்பனி அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

IMG_1918-1024x576.jpeg

புயல் தணிந்த காலையில், யாழ்ப்பாணத்தவர்கள் பொருட்களை வாங்க தெருக்களில் தயங்கித் தயங்கி இறங்கிய வேளையில், திருநெல்வேலியில் ஒரு கொலை நடந்தது. கொலைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் இளவயதினர். சம்பவம் நடந்தது அதிகம் சனப்புழக்கமுள்ள ஓரிடம். திருநெல்வேலி சந்தைக்கு அருகே ஆடியபாதம் வீதி. ஒரு நபரை மூன்று பேர் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். அப்பகுதியில் நின்றவர்கள் அதில் சம்பந்தப்படாமல் விலகி விலகி நிற்கிறார்கள். யாருமே கொல்லப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு கிடைத்த சிசிடிவி கமரா பதிவுகளின்படி அங்கு நின்ற அனைவருமே பார்வையாளர்களாக நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அதைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, அதைத் தடுக்கும் துணிச்சலற்றவர்களாக, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்பவர்களாகத்தான் அவர்கள் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் ஒரு காலம் தன் வீரத்துக்கும் தியாகத்துக்குமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம். புயல் தணிந்த வேளை நடந்த கொலை அது. அந்தக் கொலையை விடக் கொடுமையானது, அதை கையாலாகாத சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம்.

facebook_1764743293174_74018698535367880

அதேசமயம் அதே மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்துதான் இன்னொரு தொகுதி இளையவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் போனார்கள். ஆபத்தை எதிர்கொண்டு நனைந்து நனைந்து, பாதிக்கப்பட்ட மக்களை, தனித்து விடப்பட்ட மக்களைத் தேடித்தேடி உதவினார்கள்.

இந்த இரண்டுமே ஒரே சமூகத்தில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள். ஆனால் இதற்குள்தான் இருக்கிறது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் யதார்த்தம். ஒருபுறம் தானும் தன்பாடும் என்று கூட்டுப் புழுக்களாகப் பதுங்க முற்படும் கூட்டு மனோநிலை. இன்னொருபுறம் மழை,வெள்ளம்,புயல் என்பவற்றைத் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களைத் தேடிச் செல்லும் இளையோர் கூட்டம். சரியான பொருத்தமான தலைமைகள் இந்த இளையவர்களை ஒருங்கிணைத்து இலட்சிய வேட்கை கொண்டவர்களாக வார்த்தெடுத்தால், அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது.

https://www.nillanthan.com/7971/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.