Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ

கட்டுரை தகவல்

  • வனேசா புஷ்லூட்டர்

  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர், பிபிசி நியூஸ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தீவிரமடைந்ததன் ஒரு பகுதியாக, டிசம்பர் 10 அன்று, தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டி, வெனிசுவேலா கடற்கரையில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது.

அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீதான தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரோவைப் பிடிப்பதற்கான தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதியையும் டிரம்ப் நிர்வாகம் இருமடங்காக உயர்த்தியுள்ளது.

யார் இந்த நிக்கோலஸ் மதுரோ ?

மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.

நிக்கோலஸ் மதுரோ இடதுசாரித் தலைவரான ஹியூகோ சாவேஸ் மற்றும் அவரது வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சியின் (United Socialist Party of Venezuela - PSUV) தலைமையில் முக்கியத்துவம் பெற்றார்.

முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.

சாவேஸும் மதுரோவும் ஆட்சியில் இருந்த 26 ஆண்டுகளில், அவர்களின் கட்சி தேசிய சட்டமன்றம் , நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது.

2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளால் சேகரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கைகள், அவர்களின் வேட்பாளரான எட்முண்டோ கோன்சலஸ் அமோக வெற்றி பெற்றதாகக் காட்டின.

முதன்மை எதிர்க்கட்சித் தலைவரான மரியா கோரினா மச்சாடோ தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டதால், அவருக்குப் பதிலாக கோன்சலஸ் நிறுத்தப்பட்டார்.

"சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அவரது போராட்டத்திற்காக" அவருக்கு அக்டோபர் மாதத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அதனையடுத்து, மச்சாடோ பயணத் தடையை மீறி, பல மாதங்களாக மறைவில் இருந்த பின்னர், டிசம்பர் மாதம் பரிசைப் பெறுவதற்காக ஓஸ்லோவுக்குப் புறப்பட்டார்.

டிரம்ப் ஏன் வெனிசுவேலா மீது கவனம் செலுத்துகிறார்?

வெனிசுவேலாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக வந்ததற்கு, டிரம்ப் மதுரோவையே குற்றம் சாட்டுகிறார்.

2013-ஆம் ஆண்டு முதல் வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக, சுமார் 80 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்படுகிறது.

ஆதாரம் எதுவும் வழங்காமல், மதுரோ தனது "சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களை காலி செய்து", அங்கிருந்தவர்களை அமெரிக்காவுக்கு குடியேற "கட்டாயப்படுத்துவதாக" டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் போன்ற போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதிலும் டிரம்ப் கவனம் செலுத்தியுள்ளார்.

அவர் வெனிசுவேலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா மற்றும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார். பிந்தைய குழுவுக்கு மதுரோவே தலைமை தாங்குவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

தான் ஒரு போதைப் பொருள் குழுத் தலைவர் என்ற கூற்றை மதுரோ வலுவாக மறுத்துள்ளார்.

மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக, தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா "போதைப் பொருள் மீதான போர்" என்ற கூற்றைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என்பது ஒரு படிநிலை அமைப்பு அல்ல, மாறாக ஊழல் மிகுந்த அதிகாரிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் என்றும், இவர்கள் வெனிசுவேலா வழியாக கோகெய்ன் கடத்தலை அனுமதித்து லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்கா ஏன் கரீபியனுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது?

கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் யுஎஸ்எஸ்  ஜெரால்ட் ஃபோர்ட் ஒன்றாகும்.

பட மூலாதாரம்,US Navy/Reuters

படக்குறிப்பு,கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் ஒன்றாகும். வெனிசுவேலா கரையோரத்தில் அமெரிக்கா எண்ணெய் டாங்கரை கைப்பற்றியபோது அது செயல்பாடுகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்கா 15,000 வீரர்கள் மற்றும் பல்வேறு வகையான விமானந்தாங்கி கப்பல்கள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள், மற்றும் நீர் தாக்குதல் கப்பல்கள் ஆகியவற்றை கரீபியன் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

1989-இல் அமெரிக்கா பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து, இந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய படை இது தான்.

இதன் நோக்கம், அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் கடத்தலைத் தடுப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு இந்த கப்பல்களில் ஒன்றாகும். வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்படுவதற்கு முன்னர், இதிலிருந்துதான் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டேங்கர் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானில் இருந்து தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது" என்று அமெரிக்கா கூறியது. ஆனால், வெனிசுவேலா இந்த நடவடிக்கையை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கண்டித்துள்ளது.

சமீப மாதங்களில், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீது சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அமெரிக்கா ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளது என்று வாதிடுகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒழுங்கற்ற போர் நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்கா, படகில் இருந்தவர்களை "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" என்று விவரித்தது. ஆனால், இந்தத் தாக்குதல்கள் "சட்டபூர்வமான ராணுவ இலக்குகளுக்கு" எதிரானவை அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, செப்டம்பர் 2 அன்று நடந்த முதல் தாக்குதல், கவனத்தை ஈர்த்தது.

ஏனெனில் அன்று ஒரு தாக்குதல் அல்ல, மாறாக இரண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதல் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்த ராணுவ நடவடிக்கை பொதுவாக அமைதியான காலத்தில் பொதுமக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட, முறையான தாக்குதல் எனும் பிரிவுக்குள் வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் "உயிர்களை அழிக்கும்... விஷத்தை எங்கள் கரைகளுக்குக் கொண்டு வர முயற்சிக்கும்" போதைப்பொருள் குழுக்களிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, ஆயுத மோதலுக்கான சட்டங்களின்படி தாங்கள் செயல்பட்டதாகத் தெரிவித்தது.

வெனிசுவேலா போதைப்பொருட்களை அனுப்புகிறதா?

உலகளாவிய போதைப்பொருள் கடத்தலில் வெனிசுவேலா ஒரு சிறு பங்களிப்பாளராகவே உள்ளது. இது, வேறு இடங்களில் தயாரிக்கப்படும் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்லப் பயன்படும் ஒரு வழித்தட நாடாகவே செயல்படுகிறது என போதைப்பொருள் தடுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியா, உலகின் மிகப்பெரிய கோகெய்ன் உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், இதன் பெரும்பகுதி வெனிசுவேலா வழியாக அல்லாமல், பிற வழிகளில் அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (US Drug Enforcement Administration - DEA) அறிக்கைப்படி, அமெரிக்காவை அடையும் கோகெய்னில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பசிபிக் வழியாகவே கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் வேகப் படகுகள் மூலம் வரும் கோகெய்னின் அளவு மிகக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, அமெரிக்கா நடத்திய பெரும்பாலான தாக்குதல்கள் கரீபியன் பகுதியில் தான் நடந்துள்ளன, பசிபிக் பகுதியில் சில தாக்குதல்களே நடந்துள்ளன.

செப்டம்பர் மாதம், டிரம்ப் அமெரிக்க ராணுவத் தலைவர்களிடம், தாங்கள் குறிவைத்த படகுகளில் "வெள்ளை நிறப் பவுடர் நிரம்பிய பைகள் குவிந்துள்ளன, அதில் பெரும்பாலானவை ஃபென்டனைல் மற்றும் பிற போதைப்பொருட்கள்" என்று கூறினார்.

ஃபென்டனைல் என்பது ஹெராயினை விட 50 மடங்கு வீரியம் கொண்ட ஒரு செயற்கை போதைப்பொருள்.

மேலும் அமெரிக்காவில் ஓப்பியாய்டை அதிக அளவு உட்கொள்ளுதலால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணமாகவும் இது உள்ளது.

ஆனால், முக்கியமாக மெக்சிகோவில் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானைல், அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடந்து நிலம் வழியாக அமெரிக்காவை அடைகிறது.

அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய போதைப்பொருள் அச்சுறுத்தல் மதிப்பீட்டில் , அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் ஃபெண்டனைலின் மூல நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா குறிப்பிடப்படவில்லை.

வெனிசுவேலா எவ்வளவு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது ?

எண்ணெய், மதுரோ அரசாங்கத்தின் வெளிநாட்டு வருவாய்க்கான முக்கிய ஆதாரம் ஆகும். இந்தத் துறையில் இருந்து கிடைக்கும் லாபம் அரசாங்க பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான நிதியை வழங்குகிறது.

தற்போது வெனிசுவேலா ஒரு நாளைக்கு சுமார் 900,000 பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முதன்மை நாடாக சீனா உள்ளது.

அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, வெனிசுவேலா உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தாலும், அந்த வளத்தை மிகக்குறைவாகவே பயன்படுத்துகிறது.

தொழில்நுட்ப மற்றும் பட்ஜெட் சவால்கள் காரணமாக, 2023-ஆம் ஆண்டில் வெனிசுவேலா உலகளாவிய கச்சா எண்ணெயில் 0.8% மட்டுமே உற்பத்தி செய்ததாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) தெரிவித்துள்ளது.

எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை அறிவித்த பிறகு, டிரம்ப் செய்தியாளர்களிடம், "எண்ணெயை நாங்கள் வைத்துக்கொள்வோம் என கருதுகிறேன்" என்று கூறினார்.

மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், நாட்டின் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை அணுகுவதற்கான முயற்சி என்று வெனிசுவேலா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா இதற்கு முன்னர் மறுத்துள்ளது.

வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியுமா?

அதிபர் டிரம்ப், நவம்பர் 21 அன்று மதுரோவுடன் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொலைபேசி உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை என்றாலும், டிரம்ப், மதுரோவுக்கு அவருடைய நெருங்கிய குடும்பத்துடன் வெனிசுவேலாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதுகாப்பான வழியில் வெளியேறும் அந்த வாய்ப்பை மதுரோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறியது.

இந்த காலக்கெடு முடிவடைந்த ஒரு நாள் கழித்து, வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை மூடப்பட்டதாக அறிவித்தார் டிரம்ப்.

வெனிசுவேலாவின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக "நிலம் வழியாக" நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளார். ஆனால், அத்தகைய ஒரு நடவடிக்கை எவ்வாறு செயல்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

டிரம்பின் பத்திரிகைச் செயலாளர், வெனிசுவேலாவில் அமெரிக்கத் துருப்புக்களை நிலத்தில் நிலைநிறுத்தும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை. "அதிபரின் வசம் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் அந்த வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவில்லை என்றாலும், கரீபியன் பகுதியில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள படைகள், ஒரு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையானதை விட மிகப் பெரியது என்று ராணுவ ஆய்வாளர்கள் பல வாரங்களாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் அதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக சிபிஎஸ் நியூஸுக்கு நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் அளித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyxxn6wdrjo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.