Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி - எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள்

வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங், சைபர் மோசடி, தொழில்நுட்பம், பாதுகாப்பு

பட மூலாதாரம்,Getty Images/EPA

கட்டுரை தகவல்

  • அமரேந்திர யார்லகடா

  • பிபிசி செய்தியாளர்

  • 24 டிசம்பர் 2025, 02:55 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்களா?

அப்படியானால் கண்டிப்பாக இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய மோசடி 'வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' (WhatsApp Ghost Pairing) என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் நடக்கும் இந்த மோசடியில் சிக்கி விடாமமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் மற்றும் தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

'வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' மோசடி எப்படி நடக்கிறது?

சைபர் குற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், குற்றவாளிகளும் மோசடி செய்ய புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பி மால்வேர்களை புகுத்தியோ மோசடிகள் செய்யப்பட்டன.

தற்போது வாட்ஸ்அப் 'பேரிங்' மூலம் மோசடி செய்யப்படுவதை காவல்துறை கண்டறிந்துள்ளது.

"ஹேய்...என் புகைப்படத்தைப் பார்த்தாயா?" என்று ஒரு லிங்க் அனுப்புவதன் மூலம் இந்த மோசடி தொடங்குகிறது என்று ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.

"இந்த லிங்க் உங்களுக்குத் தெரியாத நபரிடமிருந்து மட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வந்தாலும், தவறுதலாகக் கூட அதைக் கிளிக் செய்ய வேண்டாம்" என்று அவர் அறிவுறுத்தினார்.

இதுபோன்ற லிங்க்கை கிளிக் செய்தால், போலியான வாட்ஸ்அப் வெப் பக்கம் திறக்கப்படும் என்றும், எந்தவிதமான ஒடிபி அல்லது ஸ்கேனிங்கும் இல்லாமலே உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கரின் சாதனத்துடன் (கணினி, லேப்டாப் அல்லது மொபைல்) இணைக்கப்பட்டுவிடும் என்றும் சஜ்ஜனார் குறிப்பிட்டார்.

அந்த சமயத்தில், பயனர்கள் தங்கள் சொந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்யப்படுவார்கள் என்றும் அவர் விளக்கினார்.

ஒருமுறை அந்த லிங்கில் இணைந்தவுடன் என்ன நடக்கும்?

இதுகுறித்து தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஷிகா கோயல் கூறுகையில், சைபர் குற்றவாளிகள் பயனர்களின் தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்கை தங்கள் சாதனங்களுடன் இணைத்த பிறகு, தகவல்களைத் திருடுகின்றனர் என்று தெரிவித்தார்.

"வங்கி கணக்கு விபரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிக்கொள்கின்றன. அவர்கள் அந்தப் பயனரின் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்" என்று அவர் விளக்கினார்.

வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங், சைபர் மோசடி, தொழில்நுட்பம், பாதுகாப்பு

பட மூலாதாரம்,UGC

'இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்' என்ன கூறியது?

ஆகாசவாணி நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 'கோஸ்ட் பேரிங்' தொடர்பாக பொதுமக்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

"வாட்ஸ்அப்பில் உள்ள டிவைஸ் லிங்கிங் வசதியை பயன்படுத்தி குற்றவாளிகள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து வருகின்றனர். பேரிங் கோட் உதவியுடன், எந்த கூடுதல் அங்கீகாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங், சைபர் மோசடி, தொழில்நுட்பம், பாதுகாப்பு

பட மூலாதாரம்,UGC

மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (links) எப்போதும் கிளிக் செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளது. இதையே ஷிகா கோயல் பிபிசியிடமும் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கியுள்ள முக்கிய 3 அறிவுரைகள் பின்வருமாறு:

  • வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள "இணைக்கப்பட்ட சாதனங்கள்" (Linked Devices) என்ற ஆப்ஷனை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.

  • அறிமுகமில்லாத அல்லது தெரியாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருப்பதாக இருந்தால், உடனடியாக லாக் அவுட் (Log out) செய்ய வேண்டும்.

  • வாட்ஸ்அப் செட்டிங்ஸ் அக்கவுண்டுக்குச் சென்று "இரண்டு அடுக்கு சரிபார்ப்பு" (Two Step Verification) வசதியை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்.

வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங், சைபர் மோசடி, தொழில்நுட்பம், பாதுகாப்பு

பட மூலாதாரம்,UGC

உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், ஹேக்கிங் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

வாட்ஸ்அப் அல்லது இணைய பிரௌசர் (browser) ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், அதை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஷிகா கோயல் கூறுகிறார்.

ஹேக்கிங் நடந்த போது தோன்றக் கூடிய செய்திகள், லிங்குகள், பாப்-அப் அறிவிப்புகள் ஆகிய அனைத்தையும் ஸ்கிரீன்‌ஷாட் எடுத்து பாதுகாத்து வைக்க வேண்டும்.

பரிவர்த்தனை ஐடிகள் (Transaction ID), யுடிஆர் எண்கள்(UTR), அழைப்பு பதிவுகள் (call logs) போன்ற விபரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.

மின்னஞ்சல், வங்கி, சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

வங்கிக் கணக்கு அல்லது கட்டண செயலியில் பணம் காணாமல் போயிருந்தால், உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது செயலி நிறுவனத்தை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்.

கூகுள் குரோம் மற்றும் பிற செயலிகளை அதிகாரப்பூர்வமான புதிய பதிப்புகளுக்கு (latest versions) உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

எப்படி புகார் செய்வது?

எந்தச் சூழ்நிலையிலும் ஓடிபி (OTP), பிஐஎன் (PIN), சிவிவி (CVV), வாட்ஸ்அப் குறியீடுகள் (codes) போன்ற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது என்று தெலங்கானா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தாலோ, உடனடியாக 1930 என்ற உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று ஷிகா கோயல் அறிவுறுத்தியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93n53r0nglo

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸ்ஆப் மூலம் அரங்கேறும் புதுவித மோசடி - தடுப்பதற்கான 5 எளிய வழிகள்

வாட்ஸ்ஆப் மூலம் புதுவித மோசடி, தடுப்பதற்கான 5 விஷயங்கள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை அம்பத்தூரில் வசிக்கும் திரைப்பட உதவி இயக்குநர் ஒருவருக்கு கடந்த வாரம் நேர்ந்த அனுபவம் இது.

'50 ஆயிரம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது' என தனக்கு நெருக்கமான அரசு மருத்துவரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து உதவி இயக்குநருக்கு தகவல் வந்துள்ளது.

பணத்தை அனுப்பிய அடுத்த நொடி, 'மேலும் 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது' என வாட்ஸ்ஆப் தகவல் தெரிவித்தது. அந்தப் பணத்தையும் அனுப்பிவிட்டு சற்று சந்தேகத்துடன் மருத்துவரின் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

" எனக்கு அப்படி எந்த தேவையும் இல்லையே?" என, மருத்துவர் பதில் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி இயக்குநர் மைலாப்பூர் இணைய குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் மேற்கூறிய விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற மோசடியில் சிக்கியதாக கடந்த ஓராண்டில் மட்டும் 3,161 புகார்கள் வந்திருப்பதாகவும் சில நடவடிக்கையின் மூலம் இதுபோன்ற மோசடிகளில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ள முடியும்" எனவும் டிஜிபி சந்தீப் மிட்டல் கூறியுள்ளார்.

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

உதவி இயக்குநரின் புகாரில் இருந்தது என்ன?

சென்னை மைலாப்பூர் இணைய குற்றப் பிரிவில் திரைப்பட உதவி இயக்குநர் அளித்துள்ள புகாரில், கோபாலபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது தனக்கு வேண்டிய அரசு மருத்துவரிடம் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் ஒன்று வந்ததாகக் கூறியுள்ளார்.

அரசு மருத்துவரின் பெயரைப் பயன்படுத்தி தன்னிடம் இருந்து மர்ம நபர்கள் 65 ஆயிரம் ரூபாயைப் பறித்துவிட்டதாக அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து இணைய குற்றப்பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வழக்கின் விவரங்களை தெரிவிக்க இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.

"இந்த விவகாரத்தில் திரைப்பட உதவி இயக்குநரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

'தகவலை யாரும் சரிபார்ப்பதில்லை'

"செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதில் உள்ள தகவல்களை மோசடி நபர்கள் ஆராய்வார்கள். யார் சொன்னால் இந்த நபர் கேட்பார் என்பதைக் கண்டறிந்து பணம் பறிக்கின்றனர்" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய கார்த்திகேயன், "ஹேக் செய்யப்பட்ட செல்போனில் பயனருக்கு நெருக்கமான நபரின் பெயரை எவ்வாறு பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்த்தும் அவரது வாட்ஸ்ஆப் புகைப்படத்தைப் பயன்படுத்தியும் மோசடி செய்கின்றனர்" எனக் கூறுகிறார்.

"ஓர் எண்ணில் இருந்து மெசேஜ் வரும்போது அந்த எண்ணை யாரும் சரிபார்ப்பதில்லை" எனக் கூறும் அவர், "தான் பதிவு செய்த எண்ணில் இருந்து வரும் நபரின் புகைப்படத்தைப் பார்த்து ஏமாறுகின்றனர். பண இழப்பு ஏற்பட்ட பிறகு தொடர்பு எண்ணை சரிபார்க்கின்றனர்" என்கிறார்.

இதே தகவலைக் குறிப்பிடும் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் பிரதீப், "ஹேக் செய்யப்பட்ட செல்போனில் வாட்ஸ்ஆப் செயலிக்கு வரும் தகவல்கள், அவர் யாரிடம் எல்லாம் தொடர்பில் இருக்கிறார், யார் சொன்னால் பணம் கிடைக்கும் என்பதை துல்லியமாக கணித்த பிறகே மோசடி நடக்கிறது" என்கிறார்.

"வாட்ஸ்ஆப்பை நேரடியாக ஹேக் செய்யாமல் ஆன்டிராய்டு செல்போனை ஹேக் செய்வதன் மூலம் பயனரின் வாட்ஸ்ஆப்பில் உள்ள முழு விவரங்களையும் அவர்களால் எளிதாக அணுக முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 3 ஆயிரம் புகார்கள்': வாட்ஸ்ஆப் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

பட மூலாதாரம்,Facebook/Karthikeyan

படக்குறிப்பு,"செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதில் உள்ள தகவல்களை மோசடி நபர்கள் ஆராய்வார்கள். யார் சொன்னால் இந்த நபர் கேட்பார் என்பதைக் கண்டறிந்து பணம் பறிக்கின்றனர்" என்கிறார் கார்த்திகேயன்

'கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்புகள்'

"இது உதாரணம் தான்" என்கிறார், இணைய குற்றப் பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வாட்ஸ்ஆப்பில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை கிளிக் செய்தால் அவற்றின் செயல்பாடு வேறொரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடும்" எனக் கூறுகிறார்.

வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் கவனக்குறைவைப் பயன்படுத்தி ஹேக்கிங் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாடு இணைய குற்றப்பிரிவின் டிஜிபி சந்தீப் மிட்டல் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும் இதைக் குறிப்பிடுகிறார். "கவனக்குறைவாக இருந்தால் பண இழப்பு, மனஅழுத்தம், பெயருக்குக் களங்கம், உயிரிழப்பு எனக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்கிறார் அவர்.

"வாட்ஸ்ஆப்பில் கிரெடிட் கார்டு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், பாஸ்வேர்டு, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகப்பு, தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வைக்கக் கூடாது" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநர் பிரதீப்.

"முன்பு கணினியில் வாட்ஸ்ஆப் வெப் தளத்துக்கு பாஸ்வேர்டு இல்லாமல் இருந்தது. தற்போது பாஸ்வேர்டு வந்துவிட்டதால் அதைப் பயன்படுத்துவது நல்லது" எனவும் தெரிவித்தார்.

'தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 3 ஆயிரம் புகார்கள்': வாட்ஸ்ஆப் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

பட மூலாதாரம்,Facebook/Pradeep

படக்குறிப்பு,"முன்பு கணினியில் வாட்ஸ்ஆப் வெப் தளத்துக்கு பாஸ்வேர்டு இல்லாமல் இருந்தது. தற்போது பாஸ்வேர்டு வந்துவிட்டதால் அதைப் பயன்படுத்துவது நல்லது" என்கிறார் பிரதீப்

'ஒரே ஆண்டில் 3,161 புகார்கள்'

வாட்ஸ்ஆப் ஹேக்கிங் மோசடி பற்றி 2025 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு இணைய குற்றப் பிரிவுக்கு 3161 புகார்கள் வந்துள்ளதாகக் கூறுகிறார், டிஜிபி சந்தீப் மிட்டல்.

சில பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்பு எண்களை இலக்காக வைத்து தகவல் அனுப்பி மோசடி நடப்பது ஒருபுறம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் பேசுவதுபோல காணொளி தயாரித்து ஏமாற்றும் வேலைகளும் நடக்கின்றன" எனக் கூறுகிறார், இணைய குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோ, இருப்பிடம், மைக்ரோ போன் உள்பட அனைத்துக்கும் அனுமதி அளிக்கிறோம்" என்கிறார்.

"அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை" எனக் கூறும் அவர், "வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது ஐந்து விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்கிறார்.

தடுப்பதற்கான 5 எளிய வழிகள்

  • தொடர்பில்லாத எந்த லிங்க் வந்தாலும் அதைத் திறந்து பார்க்கக் கூடாது.

  • வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்ட சாதனங்களை (Linked devices) அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் அந்த இணைப்பை துண்டித்துவிட (log out) வேண்டும்.

  • பொது இடங்களில் இலவச வைஃபை கிடைக்கிறது என்பதற்காக பயன்படுத்தக் கூடாது.

  • பொது இடங்களில் உள்ள செல்போன் சார்ஜரை பயன்படுத்தக் கூடாது. அது என்ன மாதிரியான சார்ஜர் என்பதை அறியாமல் பயன்படுத்தினால், வெளிநபர்களுக்கு தரவுகள் பரிமாறப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

  • இலவச செயலிகள், இலவச விளையாட்டு செயலிகள் என வந்தால் அதைப் பதிவிறக்கம் செய்வதற்கு முயற்சிக்கக் கூடாது. எதையும் ஒருவர் இலவசமாக கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என உணர வேண்டும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன?

வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களில் வாட்ஸ்ஆப் மோசடிகள் பெருகிவருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது.

ஆதார் அப்டேட், டிராஃபிக் இ-சலான் என நம்பகமான குழுக்கள் போன்று வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி இதனை அனுப்புவதாகக் கூறியுள்ள தூத்துக்குடி காவல்துறை, 'Rewards', 'KYC updates', 'cashback offers' எனக் கூறி APK file அல்லது இணைப்பை (Links) அனுப்புகின்றனர்' எனத் தெரிவித்துள்ளது.

இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்யும்போது செல்போனை ஹேக் செய்யும் மோசடி நபர்கள், அதில் உள்ள வாட்ஸ்ஆப் செய்திகள், வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதாக தூத்துக்குடி காவல்துறை கூறியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட செல்போனில் உள்ள தொடர்பு எண்களில் புதிய வாட்ஸ்ஆப் கணக்கை உருவாக்கி மோசடி செய்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'ஏபிகே மென்பொருளை வாட்ஸ்ஆப், இமெயில், எஸ்.எம்.எஸ் என எந்த வழியாக வந்தாலும் அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்' எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடிகளில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் காவல்துறை பட்டியலிட்டுள்ளது.

  • Apk file அல்லது இணைப்புகளை (link) திறக்கவோ பதிவிறக்கம் செய்யவோ கூடாது.

  • வாட்ஸ்ஆப்பில் இருமுறை உறுதிப்படுத்தல் (Two-Step Verification) நிறுவுவதன் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்கலாம்.

  • நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3683gpj2yno

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.