Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவனை எனக்குத் தெரியும்

ப.தெய்வீகன் 

தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில் சென்று அமர்ந்தேன்.

தன்னால் சுமந்துகொண்டு நடக்க முடியாத இரண்டு பெரிய படச்சட்டங்களுடன் ஒரு மூதாட்டி வந்தார். எனக்கும் அவருக்கும் இடையில் பொலித்தீன் மூடிய அந்தப் படச்சட்டங்களை இரும்புக் கதிரையில் சாய்த்து வைத்தார். அவை கீழே விழுந்துவிடக்கூடாத கவனத்தோடு அணைத்தபடி அருகிலிருந்தார். அவரது நடுங்கும் விரல்களில் ஒன்றில் அணிந்திருந்த மோதிரத்தில் ஒரு சிறுவனின் முகம் தெரிந்தது. நான் அதனை உற்றுப் பார்க்கும் இடைவெளியில்

“ஹலோ” என்று எனக்கு வணக்கம் சொன்னார்.

முதுமையின் வழக்கமான சுருக்கங்கள் படர்ந்த முகத்தில் கண்கள் ஆழத்தில் தெரிந்தன. முன்னம் மிக நெருக்கமாகக் கண்ட உருவத்தை ஒத்த பார்வை.

“ஹலோ”

“படங்கள் வழுக்கி விழுந்து விடாமல், உங்களது பக்கத்திலும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வீர்களா…”

என்னைத் தமிழர் என்று கணித்த அவரது உரையாடல் வியப்பளித்தது. சிறு புன்னகையால் எதிர்கொண்டடேன். படச்சட்டங்களின் எனது பக்க விளிம்புகளைக் கவனம் குன்றாமல் பிடித்துக்கொண்டேன்.

பதினெட்டாவது நிமிடத்தில் வந்த ரயிலில் நான் ஏறுவதற்குத் தயாரானபோது, மூதாட்டியும் அதே ரயிலில் வருவதற்கு எழுந்தார். இரண்டு படச்சட்டங்களையும் நானே ரயிலுக்குள் எடுத்துச் செல்ல உதவினேன். வெளியில் இருந்ததுபோல இப்போது ரயிலின் உள்ளே ஒரே இருக்கையில் இருவரும் அமர்ந்துகொண்டோம். எமக்கு இடையில் இரண்டு படச்சட்டங்கள். ஒரு அந்தத்தை அவரும் மறு அந்தத்தை நானும் பிடித்துக்கொண்டோம்.

எமக்கு முன்னால் அமர்ந்து மக் டோனல்ட்ஸ் உருளைக்கிழங்குப் பொரியலை ஒரு சிறுமி ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் வைத்து மென்றாள். அவளை மடியில் வைத்திருந்த தாயும் சிறுமியும் கண்ணாடி வழியாக வெளிக் காட்சியைப் பார்த்து ரசித்தப்படியிருந்தனர். என்னருகிலிருந்த மூதாட்டியும் என்னைப் போலவே அவர்களைப் பார்த்துத் தனக்குள் அசைபோடும் ஏதோ ஒரு நினைவில் புன்னகைத்தார். அவர் முகத்தில் தெரியும் அத்தனை உணர்வுகளையும் அவருக்குள் இழையோடு ஆழமான துயரொன்று மறைத்தபடியிருந்தது, முதுமையின் களைப்பையும் சலிப்பையும் மீறிய நீண்ட வடு அவரது நடுங்கும் பார்வையில் தெரிந்தது.

எங்கள் இருவருக்கும் இடையில் சகஜமான உரையாடல் ஆரம்பித்த சில நிமிடங்களில், தான் ஹோம்புஷ் பகுதியில் ஓவியங்கள் விற்கும் கடையொன்றை நடத்தி வருவதாக அந்த மூதாட்டி கூறினார்.

“அப்படியா, எனக்கு ஆஸ்திரேலியாவின் சமகால ஓவியங்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. பென் குவில்ட்டியின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்”

மூதாட்டி ஆச்சரியத்துடன் என்னை நோக்கினார். விழிகளில் மிதந்த நடுங்கும் பார்வை நிலையாக என்னில் பதிந்தது.

“மனிதன் தனக்குள் சிக்கிக்கொண்டுள்ள அக வலிகளை ஓவியங்களில் கொண்டுவருவதில் பென் குவில்ட்டிபோல் யாருமில்லை என்று நினைக்கிறேன். மனிதனை வரையாமல் மனித உணர்வுகளை வரையும் அவரது கலை எனக்குப் பிடிக்கும். உதாரணமாக போர் குறித்த தகவல்களை நாங்கள் செய்திகளில் பார்க்கிறோம், படிக்கிறோம், கடந்து விடுகிறோம். வரலாற்றில் இடம்பெற்ற பெருங்கொடுமைகளைப் பாடங்களாகப் படிக்கிறோம். ஆனால், உண்மையில் நாங்கள் படித்தபிறகு கடந்து செல்லும் அந்தச் செய்திகளை எங்களது உள்மனம் இலகுவில் கடந்து செல்கிறதா? இலகுவில் ஜீரணித்துவிடுகிறதா? நாங்கள் பார்த்த காட்சிகளிலிருந்து உண்மையிலேயே நாங்கள் வெளியேறிவிடுகிறோமா என்ற அசௌகரியமான வினாக்களை ஓவியங்களாக வெளிப்படுத்தும் பென் குவிலிட்டி உண்மையிலேயே காட்சிகளின் நாயகன்”

ஓவியம் பற்றி ஆர்வத்துடன் நான் வரைந்த சொற்களை மேலும் மேலும் ஆச்சரியத்துடனும் பெருமையோடும் அந்த மூதாட்டி பார்த்தார்.

“பொருளீட்டுவதற்குத் தமிழர்கள் எத்தனையோ வழிகளை நாடுகிறார்கள். ஆனால், நீங்கள் ஓவியக் கடையொன்றை நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது”

விழிகளை மெதுவாக மூடித் திறந்தார். சிறு புன்னகையொன்றை உதிர்த்தார்.

“நான் நடத்தும் ஓவியக்கடை எனது மகனது ஓவியங்களை விற்கும் கடை. அவன் வரைந்த ஓவியங்களை மட்டும் விற்கும் கடை. என் மகன் உலகின் ஒப்பற்ற ஓவியன். நீங்கள் கூறிய பென் குவில்ட்டியைவிட மனித வலிகளை ரத்தமும் சதையுமாகத் தன் தூரிகையில் துயர்சிந்த வரைந்தவன். ஒன்று இரண்டல்ல நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களை ஓரிரவில் வரைந்த சாதனையாளன். ஆனால், அவன் இப்போது உயிரோடு இல்லை”

தனது மகனின் ஓவியங்களைப் பற்றிய சொற்கள் அவரது பதிலில் சுவாலைகளாகச் சடைத்து கொழுந்துவிட்டெரிந்தன. குரலில் ததும்பிய அடர்த்தியும் பெருமையும் அவரது விழிகளில் புது வெளிச்சத்தை நிறைத்தது.

“உங்களது மகனின் பெயர்…..”

“ஓவியன் அருள்குமரன்”

உருளைக்கிழங்குப்பொரியலைத் தின்றுகொண்டிருந்த குழந்தை தனது தாயின் மடியிலிருந்து திடீரென்று எங்களைத் திரும்பிப் பார்த்தது.

படச்சட்டகங்களின் ஒரு அந்தத்தைப் பிடித்திருந்த கைகளில் மின்னல் இறங்கியதுபோல உதறியெழுந்தேன்.

(2)

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நூஸா படைமுகாமும் வாடிமுற்றமும் ஒளி வெள்ளத்தில் மிதந்தபடியிருந்தது. புல்பூண்டுகளின் நுனிகள்கூட அவ்வளவு தெளிவாக தெரியும் வகையில் பகல்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றும் மொபி படையணியின் ஒன்பது பேரில் நானும் உள்ளேன் என்பதை அணித்தலைவர் வந்து பட்டியலைப் படித்து உறுதிச் செய்தார். அடுத்து மருத்துவர் ஒருவர் வந்து எங்கள் எல்லோரினது கைகளைப் பிடித்து நாடித்துடிப்பினைச் சோதனை செய்தார். இரத்த அழுத்தத்தைச் சோதித்தார்.

சரியாக நள்ளிரவு தாண்டி இருபது நிமிடங்களில் ஒன்பது பேரும் வெள்ளை கோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அமெரிக்க தயாரிப்பு ‘எம்16’ துப்பாக்கிகள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோட்டடியை சென்றடைந்த போது, கறுப்பு முகமூடியால் மூடப்பட்ட ஆஸ்ரேலியாக்காரன் ஒருவன் கம்பத்தில் இறுக்கக் கட்டப்பட்டு எமக்காக தயாராக வைக்கப்பட்டிருந்தான்.

அப்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனுக்கு அருகில் சென்று தோத்திரத்தோடு ஏதோ பாடலொன்றைப் பாடியபடி சுற்றி வந்தார். பிறகு அங்கிருந்து அவர் வெளியேறி விட, எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் எங்களுக்கு அருகருகே வந்து நின்று கொண்டார்கள். நான் காதுகளைக் கூராக்கிக் கேட்டேன். அவனிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

மூன்று – இரண்டு – ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது லேசர் வட்டத்திற்குள் எங்கள் பணியை முடிக்க வேண்டும்.

எனது நாக்கில் கசப்பொன்று ஒட்டிக் கிடப்பது போலிருந்தது. தாடைகள் விறைத்தன. இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. நான் அணிந்திருந்த முகக்கவசத்துக்குள் வெப்பக்காற்றினை எனது முகம் உமிழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“பளீர்”

துவக்கின் பிடி என் நெஞ்சில் உதைத்தது. அந்தக் கணத்திலேயே உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் அருள்குமரனின் உயிரற்ற தலை சரிந்தது.

(3)

அருள்குமரனின் மரண தண்டனை தீர்ப்பு உறுதியானது. அவன் சுட்டுக்கொல்லப்படவிருந்த தினத்திற்கு முதல்நாள் அவனது இறுதி ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்குச் சிறை நிர்வாகம் அவகாசம் வழங்கியது.

அருள்குமரன் சிறையதிகாரிகளிடம் ஓவியப் பலகைகளைக் கேட்டான். அவன் கேட்ட அனைத்தையும் வழங்கினார்கள் சிறை அதிகாரிகள்.

அருள்குமரன் காலையில் எழுந்து குளித்தான். தனது வெள்ளைச் சிறை ஆடையுடன் வந்து அதிகாரிகளை வணங்கினான். சிறை அறையிலிருந்த யேசுவின் சிறு சுருவத்தின் முன்னால் கண் மூடித் தொழுதான். அவனது விரல்களுக்கு இடையில் செபமாலை உருண்டது. தியானத்தில் ஆழ்ந்தான்.

தன் விரல்களில் பூமியின் இறுதி வெளிச்சம் புகுந்துகொண்டதைப்போல, ஓவியப்பலகையின் முன்னால் தூரிகையுடன் அமர்ந்தான்.

எலும்பொடிந்த மனிதப்பேருரு ஒன்றை மண் வண்ணத்தில் வரைந்தான். இதயமுள்ள இடத்தில் பெருங்கோறையாத் துளையிட்டான். ஒற்றை விழியோடு கோரமாக அவ்வுருவம் வானை நோக்கிப் பிராத்திக்கும் – உடைந்த விரல்களுடைய – கைகளை வரைந்தான். குருதித் துளிகள் வழியும், ஆன்மாவின் ஒலியற்ற ஒப்பாரியை வரைந்து முடித்தான். சாம்பல் பீடத்தில் சம்மணமிட்டிருக்கும் அந்த ஓவியம் இறந்த இதயத்தோடு இறைஞ்சிக் குழறியது.

அடுத்த பலகையை எடுத்தான்.

கரிய வண்ணங்களை மாறி மாறித் தெரிவு செய்தான். தூரிகையில் ஒற்றியெடுத்தான். அறையில் விழுந்த கசங்கிய ஒளியில் அவனது முகம், ஏதோ ஒரு பெருங்களிப்பில் சிதையாய் சிலிர்த்தாடுவது போல தெரிந்தது.

இரவு ஒன்பது மணி வரையில் நூற்றுப் பதினாறு ஓவியங்களை வரைந்தான். வரைந்து முடித்த ஓவியப் பலகைகள் சுவரெங்கும் சாய்ந்து கிடந்தன. அறை நிறைந்தது. ஓவியத்தின் துயர்நெடியும் உயிர்வலியும் அதிகாரிகளின் அடிவயிற்றைப் பிசைந்தன.

தூரிகை சிந்திய வண்ணங்களால் தூய்மையான அருட்குமரன் அறையின் மூலையில் சாய்ந்தான். அத்தனை ஓவியங்களிலும் தன் இதய ஒலியை ஒற்றுக்கேட்டான். கீறிவிட்டதுபோல ஒரு சிறுபுன்னகையால் பிரசவித்த திருப்திக் கொண்டான்.

இறுதி மூச்சுக்களைச் சேகரித்தான். எழுந்து குளிக்கச் சென்றான்.

அதிகாரிகள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

(3)

அருட்குமரன் கொலையுண்ட பின்னர் அவனொரு தமிழன் என்று அறிந்தேன். அவன் சிறையில் எவ்வாறு ஓவியனாக உருவாகினான் என்று அதன் பிறகு செய்திகளில் படித்தேன். நூஸா தீவு அதிகாரிகளுடன் பேசும் சந்தர்ப்பமொன்றில், அவன் சாவதற்கு முதல்நாள் வரைந்த ஓவியங்களையும் அவற்றில் கொப்பளித்த அவனது உணர்வுகளையும் கேள்வியுற்றேன்.

ஒரு தமிழனை நானே சுட்டுக்கொன்ற பெருந்துயரின் ஊளை எனக்குள் ஒப்பாரியாகக் கேட்டபடியிருந்தது. என் உள்ளம் பனிப்பாளங்களாக மாறிவிட்டதைப்போல சில நாட்கள் உறைந்து கிடந்தேன். எனக்காக ஏதாவது ஒரு சொல் எனக்குத் தேவைப்பட்டது. என்னை நானே ஆறுதல் சொல்ல என் மனம் ஏங்கியது. ஆனால், எனது சொற்கள் எதுவும் எனை எட்டாது என்று என் ஆன்மா குழறியது.

கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுபவர்களின் உளவள நலன் கருதி, அந்நாட்டுப் படைத்துறைச் சட்டம் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினேன். ‘மொபி’ சூட்டுப் படையணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

அருட்குமரனின் மரணம் எனது வாழ்வை நிறுத்தி எழுப்பியது. மீண்டும் எந்தப் படையிலும் பணியாற்ற முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அவனுக்குத் தண்டனையை நிறைவேற்றிய குற்ற உணர்விலிருந்து வெளியேற முடியாத எனது நாட்கள் – மாதங்களாக – வருடங்களாக நீண்டு வதைத்தது.

இந்தோனேஷியாவின் பாலியின் ‘தீர்த்தா எம்புல்’ என்ற பாவங்களைக் கழுவும் புனிதச் சுனையில் சென்று முப்பது தண்ணீரிலும் மூழ்கி எழுந்தேன். என் துயர் சுமப்பதற்கு ஓருடல் போதாது போல கனன்றுகொண்டிருந்த என் நிலையை மனைவி வைஷாலி அச்சத்தோடு கணித்தாள்.

முழுமையான மாற்றத்திற்காக நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தோம்.

எனக்குத் தொடர்ந்தும் படைசார் பணிசெய்வதற்கு விருப்பம் உண்டா என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினர் கேட்டார்கள். இலக்குத் தவறாமல் சுடுகின்ற திறனுடைய என்னால், தங்களது நாட்டுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை ஆராயும் வகையிலும் அந்தக் கேள்வி அர்த்தம் கொண்டிருந்தது.

நான் துப்பாக்கியை வெறுப்பதாகக் கூறினேன். “சட்டப்பூர்வமாகச் செய்தாலும் ஒரு ஆயுதத்தின் மூலம் செய்யக்கூடியது வன்முறை மாத்திரமே. கொலை எந்த வடிவத்திலும் கொலையே. அதில் சட்டப்பூர்வமான கொலை – தண்டனைகொலை என்ற எந்த வேறுபாடும் இல்லை”  என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்புக்குக் கூறினேன்;

“தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பேசாதே. அது அவர்களை வேறு வகையில் சிந்திக்க வைக்கும். நீ கடந்த காலத்தில் துப்பாக்கியை உபயோகித்த காரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருப்பதுபோன்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும்”  என்று சந்திப்பு முடிந்து வரும்போது வைஷாலி எச்சரித்தாள்.

அவள் சொன்னதும் சரி. நான் சொன்னதும் சரி.

வைஷாலிக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அவளது வருமானத்திலேயே நாங்களிருவரும் சிட்னியில் வசிக்கக்கூடிய சூழல் கூடியது.

அருட்குமரனின் சொந்த இடம் சிட்னி என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அவனது குடும்பத்தை அல்லது அவனைத் தெரிந்தவர்களை நான்கு வருடங்களுக்குப் பின்னர் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவனது செய்தியும் அவன் தொடர்பான கதைகளும் முழுமையாக அனைவரின் ஞாபகங்களிலும் அகன்றிருக்கும் என்று நம்பினேன்.

“ஆஸ்திரேலியா என்பது தெற்கே விக்டோரியா முதல் வடக்கே டார்வின்வரை பரந்து விரிந்த ஒரு பெரிய கண்டம். இங்குள்ள ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கு ஆயிரம் நல்ல காரியங்கள் உண்டு. வெளிநாட்டில் இடம்பெற்ற ஒரு தண்டனையைப் பற்றியும் அதில் சம்பந்தப்பட்ட உன்னையும் தேடிக் கொண்டிருக்கமாட்டார்கள். தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளாதே”

எப்போதும்போல வைஷாலி சமரசம் செய்தாள்.

(4)

வீட்டுக்கு வந்த நான் படுக்கையில் வீழ்ந்தேன். அருள்குமரனுக்கு மரண தண்டனையைத் தீர்த்த நூஸா தீவில் அன்று இரவு வீசிய பெருங் காற்றும் மங்கிய ஒளியும் நினைவில் ஓங்கி அறைந்தன. தண்டனை நிறைவேற்றிய பின்னர் தீவின் வாசலில் எங்கள் படையணி திரும்பிய வாகனத்தின் முன்னால் தவரஞ்சனி நிலத்தில் வீழ்ந்து மண் அள்ளி வீசித் தூற்றிய கணங்கள் கண்முன்னால் எரிநட்சத்திரங்களாய் வீழ்ந்தன.

சிறுகச் சிறுக என்னைப் பின்தொடர்ந்த காலச் சர்ப்பம், சிட்னி ரயில் நிலையத்தில் வைத்து என்னை முழுமையாகப் பற்றிப் படர்ந்ததை எண்ணி நடுங்கினேன்.

தவரஞ்சனிக்கு நான் யார் என்று தெரியாது. ஆனால், அவளது கண்களின் நடுங்கிய பார்வையும், புத்திரசோகத்தின் வலியும் என்னை ஆழத்துளைத்தது.

வேலை முடிந்து வந்த வைஷாலியிடம் அனைத்தையும் குரல் நடுங்கச் சொல்லி முடித்தேன். அவள் “வெளியே நடை போய் வருவோம், வா” என்று அழைத்துச் சென்றாள்.

“தண்டனை வழங்கியதற்காக ஒவ்வொரு மனிதனும் நடுங்கிச் செத்தால், நாட்டில் ஒரு நீதிபதியும் உயிருடன் இருக்க முடியாது. நீ ஒரு சட்டத்தின் சாரதி. அந்தத் தொழிலை நேர்மையோடு செய்தாய். நிறைந்த கனவோடு செய்தவை அனைத்தும் நீடித்த பெருமையோடு உன் வாழ்வில் தங்க வேண்டியவை. இந்த உலகம் மிக மிகச் சிறியது. எல்லோரும் எல்லோரையும் எதிர்கொள்ளத்தான் போகிறோம். அதற்காக ஒளிந்துகொண்டே வாழ முடியுமா?”

வைஷாலியின் சொற்கள் எனக்குக் கரம் தந்து மீட்கப் பார்த்தன.

அருட்குமரன் சாவினால் விடுதலையாகிவிட்டான். இப்போது காலம் என்னை உயிரோடிருந்து ஒரு தண்டனையை அனுபவித்து அதிலிருந்து என்னை விடுவிக்கப் பணிக்கிறது. நான் என்னை வெல்வதுதான் இங்கே எனக்கு விடுதலை என்றானது.

அன்றைய நடை, மீண்டும் மனதில் ஒளியை மீளிருத்தியது.

“அருட்குமரனின் ஓவியக் கண்காட்சியொன்று சிட்னி நகரசபைக் கலைக்கூடலில் அடுத்த வாரம் நடைபெறுவதாக, தவரஞ்சினி சொன்னார். அந்த நிகழ்வுக்குப் போனால் என் மனது சிறிது அமைதிகொள்ளும்.  நீ என்ன நினைக்கிறாய்?”

“நிச்சயமாக, எதையும் பார்த்து நீ ஓடக்கூடாது. போதும் போதும் என்றளவு கேள்விகள் உன் மனதில் தோன்ற வேண்டும். அவற்றுக்கு நீயே கண்டுகொள்ளும் பதில்கள்தான், இந்தக் குழப்பத்திலிருந்து உன்னை நிரந்தரமாக வெளியே கொண்டு வரும். நம் ஒவ்வொருவர் மனதிலும் நாமே இருள். நாமே ஒளி”

வைஷாலியின் பதில்கள் மேலும் உறுதியைத் தந்தன.

(5)

சிட்னி நகரசபைக் கலைக்கூடத்திற்கு நானும் வைஷாலியும் போய் இறங்கும்போது அங்கு ஏற்கனவே கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது.

ஆஸ்திரேலிய அரசின் கலை – பண்பாட்டுத்துறை அமைச்சர் கதரின் மேர்பி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் கண்காட்சியைத் திறந்து வைத்தார். தவரஞ்சினி மகளுடன் வந்திருந்தார். அமைச்சர் கதரின் அவர்களோடு அருட்குமரனின் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்தவாறு அவற்றின் முன் நடந்தார்.

தன் மகனின் உயிர் நிறைத்த ஓவியங்கள் அனைத்தும் பேசும் மொழி புரிந்தவளாய் தாய் தவரஞ்சினி விழி நீர் சொரிந்தாள். தவரஞ்சினியின் கைகளை இறுகப் பற்றிய அமைச்சர் கதரின் தவரஞ்சனியை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

“ஒரு தாய் இப்படியும் பெருமையடைய வேண்டும் என்று எனக்கு இறைவன் விதித்திருக்கிறான்”

தவரஞ்சினி விம்மிய வார்த்தைகளை அமைச்சருக்கு அருகில் வந்துகொண்டிருந்த ‘சிட்னி மோர்னிங்க ஹெரால்ட்’ செய்தியாளர் குறிப்பெடுத்தார். தவரஞ்சினியை அமைச்சர் கதரின் ஆரத்தழுவிய காட்சியை கமராக்கள் ஒளிவீசிப் பிடித்தன.

உரை நிகழ்த்துவதற்கு ஒழுங்கு அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் அமைச்சர் கதரின் ஏறினார்.

“அருள்குமரனின் மரணம் துரதிஷ்டவசமானது. அவரது இறப்பு என்பது அதி திறன்வாய்ந்த ஓவியனின் இழப்பு. மரணத்தைத் தண்டனையாக வழங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பது நாகரீகமாக வளர்ச்சியடைந்துள்ள சமூகத்தின் உள்ளுணர்வாக உருமாற வேண்டும். தண்டனை என்பது ஒரு குற்றவாளியிடமிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், அந்தக் குற்றவாளி திருந்துவதற்கான காலப்பகுதியாகவும் வழங்கப்படுவது. இவை இரண்டுமே நிறைவேறிய நிலையில்தான் அருட்குமரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

இன்று நாங்கள் இங்கு கூடியிருப்பது, அருள்குமரனின் ஓவியங்களைக் கொண்டாடுவது அனைத்தும் அவரது திறமைக்கான அங்கீகாரம் மாத்திரமன்றி, இன்னொரு வகையில் பிராயச்தித்தமும்தான். அருட்குமரன் வரலாற்றில் ஒரு ஓவியனாகவே நினைவுகூரப்படுவார்”

மேடையிலிருந்து இறங்கிய அமைச்சரின் கைகளைப் பற்றிய சிட்னி நகரபிதா நன்றி கூறினார். தனக்கு இன்னொரு நிகழ்வுள்ளதாக அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்ட அமைச்சர் வெளியேற, கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களின் நீண்ட வரிசை, மெது மெதுவாக ஓவியங்களின் முன் நகர்ந்தது. நானும் வைஷாலியும் அவ்வரிசையில் இருவராய் கரைந்திருந்தோம்.

ஓவியங்கள் எதையும் என்னால் சில நொடிகளுக்கு மேல் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. நெற்றிக்கு நடுவில் நரம்புகள் கிழிவதுபோல வலியெடுத்தது. ஒவ்வொரு ஓவியமும் நான் அருகில் சென்றவுடன், குருதி வழியும் சொற்களைக் கோர்த்துப் பேச விளைவதுபோல அச்சமூட்டின. இதயத்தின் பேரிரைச்சல் செவிகளில் எதிரொலித்தது. எல்லோரும் என்னை அடையாளம் கண்டுவிட்டதைப்போல விழிப்படலம் விறைத்தது. சுவரிலிருந்த ஓவியங்கள் குற்றுயிராய் குருதி வழிய தரையில் இறங்கின. முறிந்து கால்களை இழுத்து இழுத்து அருகில் வந்து என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன. முகத்தில் ஒரு குழியும் ஒரு விழியுமுடைய உருவமொன்று, தன் நெஞ்சின் இடப்பக்கத்தில் ஒற்றை விரலைக் குத்தியபடி உரக்கச் சிரித்தது. என் முகத்தில் குருதித் துளிகள் தூவானமாய் வீழ்ந்தன.

நான் வைஷாலியின் விரல்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு கண்காட்சியின் நடு மண்டபத்திற்கு ஓடினேன். தவரஞ்சினியின் கால்களில் விழுந்தேன். குழறி அழுதேன். பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்தார்கள். தவரஞ்சினியின் பாதங்களைப் பிடித்திருந்த எனது கைகளை இழுத்தார்கள். நான் விடாது பிடித்துக் கதறினேன். ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோய் திரும்பினார்கள். மங்கல் சிவப்பு ஒளியில், நான் மண்டியிட்டுக்கிடந்தேன். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒருவாறு என்னை விடுவித்து கைத்தாங்கலாக மண்டபத்திற்கு வெளியே தூக்கிச் சென்றார்கள். வைஷாலி என் பின்னே ஓடி வந்தாள்.

பாதுகாப்பு அதிகாரிகளை உரக்க அழைத்த தவரஞ்சினி என்னை விடுதலை செய்யுமாறு கூறினார். நொடி அமைதியில் எனது அழுகை ஒலி மாத்திரம் ஈனமாய் கேட்டது. அதிகாரிகளின் பிடி என் மீது சற்றுத்தளர்ந்தது. தவரஞ்சினி அந்த அதிகாரிகளிடம் –

“அவனை எனக்குத் தெரியும்”  என்றார்.

தவரஞ்சினியின் மோதிரத்திலிருந்த அருள்குமரனின் சிரித்த முகம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.

https://vallinam.com.my/version2/?p=10815#respond

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தோனிசியாவில் போதைப்பொருள் கடத்தலிற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவரின் உண்மைக்கதை போலவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இது இந்தோனிசியாவில் போதைப்பொருள் கடத்தலிற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவரின் உண்மைக்கதை போலவே இருக்கிறது.

ஏராளன், இருக்கின்றது என்றல்ல அதேதான்.

எனக்கும் அவனைத் தெரியும். அவன் பெயர் மயூரன்.

இதை வாசித்தபோது,மயூரன் சுகுமாரன், மொட்டடையடித்தபடி இருந்த புகைப்படம் நினைவுக்குள் வந்தது. தமிழன், சிட்னி, ஓவியங்கள் என்று எலாமே ஒத்துப் போகின்றது. மிகுதி நிச்சயம் கற்பனையாகத்தான் இருக்கும். அந்தத் தாயின் வலி புரிகிறது. சர்வதேசமட்டுமல்ல உலகின் பல மனிதநேய அமைப்புகள் கேட்டும் இந்தனேசியா மரணதண்டனையை விடாப்பிடியாக நின்று எட்டுப் பேருக்கும் நிறைவேற்றியது. அவர்களுடைய சட்டம் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

ஏராளன், இருக்கின்றது என்றல்ல அதேதான்.

எனக்கும் அவனைத் தெரியும். அவன் பெயர் மயூரன்.

இதை வாசித்தபோது,மயூரன் சுகுமாரன், மொட்டடையடித்தபடி இருந்த புகைப்படம் நினைவுக்குள் வந்தது. தமிழன், சிட்னி, ஓவியங்கள் என்று எலாமே ஒத்துப் போகின்றது. மிகுதி நிச்சயம் கற்பனையாகத்தான் இருக்கும். அந்தத் தாயின் வலி புரிகிறது. சர்வதேசமட்டுமல்ல உலகின் பல மனிதநேய அமைப்புகள் கேட்டும் இந்தனேசியா மரணதண்டனையை விடாப்பிடியாக நின்று எட்டுப் பேருக்கும் நிறைவேற்றியது. அவர்களுடைய சட்டம் அப்படி.

நன்றி கவி ஐயா.

பெயரும் மயூரன் என்று நினைவில் இருந்தது.

மயூரன் சுகுமாரன் (Myuran Sukumaran, ஏப்ரல் 17, 1981 - 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந்தோனேசியாவில் பாலியில் 2005 ஏப்ரல் 17 இல் கைது செய்யப்பட்ட "பாலி ஒன்பது" என்ற ஒன்பது பேர்களின் தலைவர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். மயூரன் பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 பெப்ரவரி 14 இல் இவருக்கு "சுட்டுக் கொலை" செய்யப்படும் முறையிலான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.[2]

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.