Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்?

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது.

வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது.

டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானா தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார்.

இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் - இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல... நியூசிலாந்துக்காக.

யார் இந்த தமிழ் வம்சாவளி வீரர்?

2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அப்போதிருந்து அவர் நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்த வதோதரா ஒருநாள் போட்டிக்கு முன்பு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் அதன்பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார்கள். பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருவருமே வேலை பெற்றார்கள். அவருடைய நான்கு வயதிலிருந்து நியூசிலாந்தில் இருக்கிறார். இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் வரிசையில் இவரும் இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடுகிறார்" என்று கூறினார்.

சோதி, அஜாஸ் படேல் போல் ஆதித்யாவும் ஸ்பின்னர் தான். இவர், கூக்ளி அதிகம் வீசக்கூடிய லெக்பிரேக் பௌலர். நியூசிலாந்து முன்னாள் வீரர் தருன் நேதுலாவிடம் பயிற்சி பெற்று அவர் தன்னுடைய கூக்ளியை மெருகேற்றியிருக்கிறார்.

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா.

ஆந்திராவில் பிறந்தவரான நேதுலா, நியூசிலாந்துக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தியின்படி, 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான இண்டோர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக ஆதித்யா செயல்பட்டிருக்கிறார்.

இவர், 2020-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி அவர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார்.

ஆக்லாந்து அணிக்காக 2021-ஆம் ஆண்டு உள்ளூர் டி20 போட்டிகளில் அறிமுகமான ஆதித்யா, ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் அணிக்கும் அறிமுகமான இவர், 2 போட்டிகளில் ஆடினார்.

ஆனால், அதன்பிறகு அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில், அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக பெரிதளவு அவதிப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவுக்கு எதிராக வாய்ப்பு பெற்றிருக்கிறார் ஆதித்யா அஷோக்.

ஆதித்யா அஷோக்

பட மூலாதாரம்,Instagram/Adhitya Ashok

படக்குறிப்பு,ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார்.

ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார்.

இதுபற்றி இந்தப் போட்டிக்கு முன்பாக பேசிய அவர், "நானும் என் தாத்தாவும் எங்கள் பூர்வீக வீட்டில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். மதிப்புகள், ஒழுக்கங்கள் என அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் உரையாடினோம். அப்போது பின்னால் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தது."

"அப்போது அந்த வசனம் வந்தது. அது எனக்கு மிகவும் பெர்சனலான ஒரு விஷயம். அந்த உரையாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அதன்பிறகு சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். அடுத்த சில நாள்களில் நான் அந்த வசனத்தை டாட்டூ குத்திக்கொண்டேன். இது எனது தமிழ் வேர்களுடனும், வேலூருடனும், பிரபலமான ஒரு தமிழ் சின்னத்துடனும், அதே சமயம் உலகளாவிய சின்னத்துடனும் உள்ள ஒரு தொடர்பாகும்" என்று இஎஸ்பிஎன்-க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் ரசிகர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wzdr0ldg4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சினை விஞ்சி புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி - நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரம்

விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்தார்.

13 நிமிடங்களுக்கு முன்னர்

"விராட் தற்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அவர் விளையாட்டில் தென்படும் அந்த சுதந்திரம், நிதானம் மற்றும் உற்சாகம் போன்றவை அவர் இந்த விளையாட்டை எவ்வளவு ரசித்து விளையாடுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது."

ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கோலி குறித்து இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் தொடங்கிய விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பயணம், வதோதராவிலும் தொடர்ந்தது.

இதன் மூலம் சங்கக்காராவை முந்தி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வதோதரா ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது.

சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்கள்

விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார்.

வதோதரா ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி 25 ரன்களைக் கடந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அத்துடன், சச்சினை விஞ்சி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை எட்ட 644 இன்னிங்ஸ்களையும், சங்ககாரா 666 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், விராட் கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களில் 28 ஆயிரம் ரன்களை நிறைவு செய்துள்ளார்.

இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி, சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அவர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த கோலி, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசினார். மூன்றாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்கத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக 'தொடர் நாயகன்' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 54வது சதத்தை அடிக்கத் தவறவிட்டார், அவர் 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான சாதனையைப் படைத்த விராட் கோலி, இது குறித்து கூறுகையில், "எனது ஒட்டுமொத்தப் பயணத்தையும் திரும்பிப் பார்த்தால், இது ஒரு கனவு நனவானது போல உள்ளது. எனது திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். இருப்பினும், இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், நான் தற்போது எந்த சாதனைகளைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அதிரடியாக விளையாடியிருப்பேன். அனுபவம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது," என்று தெரிவித்தார்.

கில் மற்றும் ஸ்ரேயாஸ்

சுப்மான் கில்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரைத் தவறவிட்ட பிறகு, கேப்டன் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றிகரமாகத் திரும்பினார்.

301 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் சேர்த்தது.

ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 29 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பிறகு, கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 107 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது.

அரைசதம் கடந்த பிறகு சுப்மன் கில்லால் தனது இன்னிங்ஸை நீண்ட நேரம் தொடர முடியவில்லை, அவர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஷுப்மன் கில்லைத் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார். அணியின் துணை கேப்டனான ஐயர் 49 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது.

கோலி ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 234 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வெறும் எட்டு ரன்கள் இடைவெளியில் இந்தியா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் ஹர்ஷித் ராணா 23 பந்துகளில் 29 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "விராட் கோலி இப்போது பேட்டிங் செய்யும் விதம், அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் விராட் கோலி அதை மிக எளிதாக மாற்றிக்காட்டினார்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy05kk0gwdwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம்

12 Jan, 2026 | 07:24 PM

image

(நெவில் அன்தனி)

மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்கக்காரவை முந்திச்சென்ற விராத் கோஹ்லி, அந்த பட்டியலில் டெண்டுகல்கருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

நியூஸிலாந்துக்கு எதிராக வரோதரா, கோட்டம்பி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியல் அரைச் சதம் குவித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்து சாதனை ஏடுகளில் தனது பெயரை பதித்துக்கொண்டார்.

1101_virat_kohli.png

டெஸ்ட், சர்வதேச ஒருநாள், சர்வதேச ரி20 ஆகிய மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 100 சதங்கள், 164 அரைச் சதங்களுடன் 34357 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

அவரைவிட 127 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள விராத் கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

557 போட்டிகளில் 624 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள விராத் கோஹ்லி 84 சதங்கள், 146 அரைச் சதங்களுடன் 28068 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

குமார் சங்கக்கார 594 போட்டிகளில் 666 தடவைகள் துடுப்பெடுத்தாடி 63 சதங்கள், 153 அரைச் சதங்களுடன் 28016 ஓட்டங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில்  விராத் கோஹ்லி   93 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்தப் போட்டியின்போது சிரேஷ்ட வீரர்களான விராத் கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் கௌரவிக்கப்பட்டனர்.

1101_virat_kohli_and_rohit_sharma_felici

இந்தியா சார்பாக விராத் கோஹ்லி 18 வருடங்களாகவும் ரோஹித் ஷர்மா 19 வருடங்களாகவும் விளையாடி வருகின்றனர்.

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 20074 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 2ஆவது விக்கெட்டில் ஷுப்மான் கில்லுடன் 118 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயருடன் 77 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

ஷுப்மான் கில் 56 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 49 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ஹர்ஷித் ரானா 29 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கைல் ஜெமிசன் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

1101_darryl_mitchel.png

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கல்ஸ் 62 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்சித் ராணா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணான கே.எல். ராகுல் சதம் – நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சறுக்கியது எங்கே?

வீணான கே.எல்.ராகுல் சதம் - இந்தியா சறுக்கியது எங்கே?

பட மூலாதாரம்,Getty Images

14 ஜனவரி 2026

புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது.

285 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 131 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இப்போது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

டாஸ் வென்ற நியூசிலாந்து

இந்தியா VS நியூசிலாந்து, ஒருநாள் போட்டி, கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சுப்மன் கில்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தை தொடங்கினர். முதல் 5 ஓவர்களில், இந்த ஜோடி 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து சற்றே நம்பிக்கை அளித்தனர்.

12வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அவர் 38 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார்.

மறுமுனையில் பொறுமையாக ஆடி, அரைசதம் கடந்த கேப்டன் சுப்மன் கில், 16வது ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக, விராட் கோலி- ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் ஆடியது. இந்திய அணி 17 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஆனால், 21வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ். அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்தியா VS நியூசிலாந்து, ஒருநாள் போட்டி, கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கே.எல்.ராகுல்

22 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, 117 ரன்களுடன் இந்திய அணி தடுமாறியபோது கே.எல்.ராகுல் களமிறங்கினார்.

விராட் கோலி 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள், நிதிஷ் ரெட்டி 20 ரன்கள், ஹர்ஷித் ராணா 2 ரன்கள் என இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவின் முன்னணி வீரர்கள் மிக விரைவாக ஆட்டமிழந்த நேரத்தில் அவரது இந்த சதம் அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 112 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி வெற்றிபெற 285 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணியின் கிறிஸ்டின் கிளார்க் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டேரில் மிட்செலின் அதிரடி சதம்

இந்தியா VS நியூசிலாந்து, ஒருநாள் போட்டி, கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

285 ரன்கள் என்ற இலக்குடன், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த கான்வே, 5வது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பின்னர் வில் யங் களமிறங்கினார். நிதானமாக ஆடி, ரன்களை உயர்த்திய நிக்கோல்ஸ்- வில் யங் ஜோடி 12வது ஓவரில் பிரிந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில், நிக்கோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த டேரில் மிட்செல்- வில் யங் ஜோடி, சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணி 200 ரன்களைக் கடக்க உதவியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த கூட்டணியை உடைக்க பெரிதும் போராடினர்.

இந்தியா VS நியூசிலாந்து, ஒருநாள் போட்டி, கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டேரில் மிட்செல்

சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த வில் யங், 37வது ஓவரில் நிதிஷ் ரெட்டி வீசிய பந்தில், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 98 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் 88 ரன்களுடன் மிட்செல் களத்தில் இருந்தார்.

அதன் பின்னர், க்ளென் பிலிப்ஸ் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் 96 பந்துகளில் சதமடித்தார்.

இறுதியாக 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணியின் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gl865dkgko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.