Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு முடி மீண்டும் வளருமா? புற்றுநோய் மருத்துவர் விளக்கம்

புற்றுநோய் தினம், மலக்குடல் புற்றுநோய், தொடர் மலச்சிக்கல்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சண்முகப்பிரியா

  • பிபிசி தமிழுக்காக

  • 4 பிப்ரவரி 2026, 02:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக புற்றுநோய் தினமான இன்று மக்கள் மத்தியில் அதுகுறித்து இருக்கக்கூடிய அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்க உதவும் வகையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.

புற்றுநோய் வருவது எப்படி? ஒரு சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாற்றமடைவது எப்படி? தொடர் மலச்சிக்கல் புற்றுநோயின் அறிகுறியா? கீமோதெரபி பற்றி நிலவும் தவறான கருத்துகள் உள்பட அவர் பகிர்ந்த பல்வேறு அறிவியல்பூர்வமான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?

மனித உடலில் செல்கள் தொடர்ந்து பிரிகின்றன. செல்கள் இரண்டாகவும், இரண்டு செல்கள் நான்காகவும் பெருகி உறுப்புகள் உருவாகின்றன. இயல்பான நிலையில், செல் பகுப்பு ஒரு கட்டுப்பாடான செயல்முறையின் படி நடக்கிறது.

ஆனால், சில நேரங்களில் இந்தக் கட்டுப்பாடான முறை செயலிழக்கும் போது, செல்கள் கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகத் தொடங்குகின்றன. இவ்வாறு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் செல்கள் கட்டியை உருவாக்குகின்றன. இந்தக் கட்டியையே புற்றுநோய் என்று அழைக்கிறோம்.

கட்டுப்பாடற்ற செல் பகுப்பால் உருவாகும் கட்டிகளை, சாதாரண கட்டிகள் (Benign Tumors), புற்றுநோய் கட்டிகள் (Malignant Tumors) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

சாதாரண கட்டிகளில் இருந்து புற்றுநோய்க் கட்டிகள் வேறுபட்டவை. புற்றுநோய் கட்டிகள் உயிருக்கு ஆபத்தானவை. பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை.

புற்றுநோய் செல்களால் ரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள் போன்ற உறுப்புகளுக்குப் பரவ முடியும். இதை மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று அழைக்கிறோம். நோய் உருவான இடத்திலேயே தங்கியிருப்பது முதல் நிலை. ஆனால், மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிட்டால் அது முற்றிய நிலை.

சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாறுமா?

புற்றுநோய் தினம், மலக்குடல் புற்றுநோய், தொடர் மலச்சிக்கல்

படக்குறிப்பு,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பன்

சாதாரண கட்டிகள் பொதுவாக அப்படியே தொடரும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் ஆண்டுக்கணக்கில் இருக்கும் சாதாரண கட்டிகள் திடீரென பெரிதாகத் தொடங்கினால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவது மிகமிக அரிது என்றாலும், சில அரிதான சந்தர்ப்பங்களில், சாதாரண கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

இது சார்கோமா (Sarcoma) வகையில் ஏற்படலாம். நூறு பேரில் ஒருவருக்கு இத்தகைய மாற்றம் ஏற்படக்கூடும். எனவே, மருத்துவரிடம் அவ்வப்போது கட்டியைப் பரிசோதித்து அதன் நிலையை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அது தாமதமாகக் கண்டறியப்படுவதே பல சவால்களுக்குக் காரணமாக உள்ளது.

ஒரு சில உறுப்புகள் தவிர, பெரும்பாலான உறுப்புகளில் ஆண், பெண் இருபாலருக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை, நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

புற்றுநோய் தினம், மலக்குடல் புற்றுநோய், தொடர் மலச்சிக்கல்

பட மூலாதாரம்,Getty Images

பெருங்குடல் புற்றுநோய் அதிகரிக்க என்ன காரணம்?

சமீப காலமாக பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடல் (Rectum) ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

பெருங்குடல், மலக்குடல் ஆகியவை செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதிகளாகும்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், போதிய காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பது, அதிக அளவிலான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

குறிப்பாக, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடலுக்கு அதிக இயக்கத்தைக் கொடுக்காமல் இருப்பது போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.

மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுதல், தொடர் மலச்சிக்கல், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அடைப்பு போன்ற காரணங்களால் மலக்குடல் புற்றுநோய் வரலாம்.

இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு மிகக் குறைவு. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே இருக்கும்.

மலக்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்:

  • ரத்தப்போக்கு: மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் மிக முக்கியமான அறிகுறி. ஆசனவாயில் ரத்தம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

  • ரத்தசோகை: ரத்தசோகை, மூச்சுத்திணறல், கால் வீக்கம்

  • திடீர் எடை இழப்பு: காரணமின்றி திடீரென எடை குறைதல் ஓர் எச்சரிக்கை அறிகுறி.

  • மலம் கழித்தலில் மாற்றங்கள்: மலத்தை வெளியேற்றுவதில் சிரமம், மலச்சிக்கல் போன்றவையும் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

தொடர் மலச்சிக்கல் புற்றுநோய் அறிகுறியா? எச்சரிக்கும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

பட மூலாதாரம்,Getty Images

வயிற்றுப் புண் புற்றுநோயாக மாறுமா?

பெருங்குடல் புண்கள் மற்றும் இரைப்பை புண்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும்.

பெருங்குடலில் காணப்படும் புண்களில் 99% புற்றுநோயுடன் தொடர்புடையதாகவே உள்ளன. இவை மிகுந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டியவை.

இரைப்பையில் காணப்படும் புண்களில் பெரும்பாலானவை சாதாரண புண்களே. அவற்றை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.

அப்படி கவனிக்காமல் விட்டால், பல ஆண்டுகள் கழித்து அவை புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியமுள்ளது. சாப்பிடுவதில் சிரமம் இருந்தாலோ, வலி இருந்தாலோ, எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கீமோதெரபியால் கொட்டும் முடி மீண்டும் வளருமா?

புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை என மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன.

இவற்றில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பது கீமோதெரபி முறை. கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கதிரியக்க சிகிச்சை முறை.

கீமோதெரபி செய்கையில் கொட்டும் முடி மீண்டும் வளருமா என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். அதற்குப் பதிலளித்த மருத்துவர் ஐயப்பன், "அதைச் செய்யும்போது முடி கொட்டினாலும், சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மீண்டும் நிச்சயம் நன்றாக வளர்ந்துவிடும்" என்றார்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்ற அவர், "தொடக்க நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை புற்றுநோயை எதிர்கொள்வதற்கான முக்கியக் கருவிகள். தடுப்பூசிகள், தொடர் மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக" அவர் தெரிவித்தார்.

நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறைகள் புற்றுநோய் சிகிச்சையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மருத்துவர் ஐயப்பன், புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது முழுமையாகக் குணப்படுத்துவதைச் சாத்தியமாக்கும் என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0ke03edx7do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.