Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

இலங்கை, பிரிட்டன், புதிய விசா விதிகள்

கட்டுரை தகவல்

  • பிபிசி சிங்கள மொழி சேவை

  • 14 பிப்ரவரி 2026, 02:56 GMT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும்.

பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார்.

தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது.

காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இந்த வசதியை 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இந்த காலவரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம்.

மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Mahesh Kelum

படக்குறிப்பு,மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

'ஐ.எல்.ஆர் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது'

பிரிட்டன் அரசின் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படுபவர்களில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு குடிபெயர்ந்த இலங்கை குடிமக்களும் அடங்குவர். புதிய மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் மக்களிடம் பிபிசி சிங்கள மொழி சேவை பேசியது.

மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இங்கு குடிபெயர்ந்த பிறகு ஐ.எல்.ஆர் பெற்றவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருவரும் இருந்தனர்.

ஆனால் இந்தப் புதிய சட்டம் அதற்குத் தடையாக அமையலாம் என அஞ்சுகின்றனர்.

"இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய பணிச் சூழலில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால் 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம் எனக் குறிப்பிடுகிறார் மகேஷ்.

இந்த மாற்றங்களால் தனது எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதாகக் கூறும் மகேஷ், "இங்கே ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது மிகவும் கடினம். நீண்ட காலம் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பது நடைமுறையில் கடினமானது" எனத் தெரிவிக்கிறார்.

2023-ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா

பட மூலாதாரம்,Kushani Suraweera

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா

'நான் அனைத்தையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும்'

கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா, விருந்தோம்பல் துறையில் மூத்த அலுவலராக வேலை செய்து வருகிறார்.

தனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த அவர் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறும் காலம் நீட்டிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினமாகிவிடும் என்கிறார்.

"ஐந்து ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக மாற்றினால் பொருளாதார ரீதியாகவும் சரி மனநல ரீதியாகவும் சரி நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் திட்டப்படி 5 ஆண்டுகளின் ஐ.எல்.ஆர் கிடைத்துவிடும் என்பதால் எனது கணவர் இலங்கையிலே இருந்தாலும் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் பேசி குழந்தைகளுக்கு சிறப்பானதைத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு போய்விட்டது, இந்த 5 ஆண்டுகள் பத்தாக மாறினால் இவை அனைத்தையும் நான் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு இந்த வசதி தனக்குக் கிடைத்தால் தனது குழந்தைகள் பிரிட்டன் குழந்தைகள் செலுத்தும் அதே கட்டணத்தில் கல்வி பெற முடியும் என்கிறார் குஷானி சுரவீரா. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குஷானி சுரவீரா இலங்கையை விட்டு கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம்

பட மூலாதாரம்,Kushani Suraweera

படக்குறிப்பு,குஷானி சுரவீரா இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம்

'கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை'

குஷானி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரிட்டனில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

"நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும்.

அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை," என்று தெரிவித்தார் குஷானி.

இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குஷானி கோரிக்கை வைக்கிறார்.

'வேறு நாடுகளைத் தேடும் குழந்தைகள்'

"இந்தச் சட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட இரவு என் குடும்பத்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலை 4 மணி வரை விழித்திருந்த குழந்தைகள், நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்று கேட்டனர்," என பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்தார் காஞ்சனா ரனசிங்கே. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரிட்டனில் வசித்து வரும் காஞ்சனா, இந்தச் சட்டம் தொடர்பாக கேள்விப்பட்டதில் இருந்தே இதுவொரு உளவியல் சுமையாக இருந்து வருவதாகக் கூறுகிறார்.

தற்போது சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் காஞ்சனா, இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஐ.எல்.ஆர் வசதி செயல்பாட்டுக்கு வரும் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என கருதுகிறார்.

காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Kanchana Ranasinghe

படக்குறிப்பு,காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

"எனது மூத்த மகள் பல்கலைக் கழகத்திற்குச் சென்றால் 2029இல் நாங்கள் மிகப்பெரிய பிரச்னையைச் சந்திப்போம். ஏனெனில் அவரின் விருப்பப்படி மருத்துவராக வேண்டுமென்றால் ஐ.எல்.ஆர் வசதி இல்லாமல் நாங்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தங்களின் குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடும் அவர், "இந்த அறிவிப்பு வந்த அன்று இரவே எனது குழந்தைகள் என்னிடம் வந்து, 'அம்மா, எங்களுக்கு இலங்கை பிடிக்கும். எங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். ஆனால் நாம் இலங்கையில் குடியேற முடியாது என அவர்கள் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தனர். நாம் வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல முடியுமா என்றும் குழந்தைகள் இணையத்தில் தேடி வருகின்றனர்" என்றும் கூறினார்.

பிரிட்டன் அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம் என்ன?

இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்ட நிவாரணம் பெற ஒருங்கிணைந்து முயன்று வருகின்றனர்.

அதன் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சசிந்தா ஹெட்டிதாந்திரி பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், "நாங்கள் பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்ற தேதியிலிருந்து செயல்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சட்டம் மக்களைப் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், "இந்தச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டால் அதற்கு முன்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்குப் பழைய விதிகள் பொருந்த வேண்டும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் வருபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.

எனினும், குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் புதிய சட்டம் அமலானால் சட்ட நிவாரணம் பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன?

தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, ஐ.எல்.ஆர் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எனினும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இந்தக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

  • குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாக அரசின் பலன்களைப் பெற்று வரும் சட்டபூர்வ குடியேறிகள் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சுகாதார விசா மற்றும் சோஷியல் கேர் விசா மூலம் பிரிட்டன் வந்தவர்கள் ஐ.எல்.ஆர் பெற விண்ணப்பிப்பதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது முன்னர் 5 ஆண்டுகளாக இருந்தது.

  • பன்னிரண்டு மாதங்களுக்கும் மேலாக அரசின் பலன்களைப் பெற்று வரும் புலம்பெயர்ந்தோர், குடியிருப்பு உரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகம். ஐரோப்பாவிலேயே அதிகமான காத்திருப்பு காலமாக இது உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gq5v92nvqo

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2026 at 17:49, ஏராளன் said:

"இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பு.

5 வருடத்தில் நிரந்தர வதிவுரிமை எடுத்த பின், குழந்தை பெற்றால் - இருவரும் உழைக்க தேவையில்லை, ஒருவர் உழைக்க மற்றவர் பிள்ளையை பார்க்க, சோசல் காசில் காலம் தள்ளலாம் என நினைத்தோம்.


இதில் சரி பிழை சொல்ல நான் வரவில்லை.

ஆனால் இப்படியான திட்டமிட்ட சோசல் சுரண்டலால்தான் 5 வருடத்தில் இருந்து 10, 15 என யோசிக்கிறார்கள்.

ரிபோர்ம் பார்ட்டி அரசு அமைக்கின், பிரிதானிய பிரஜைகளுக்கு மட்டுமே சோசல் காசாம். நிரந்தர வதிவுடமை இருந்தாலும் கிடையாதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மொழிபெயர்ப்பு.

5 வருடத்தில் நிரந்தர வதிவுரிமை எடுத்த பின், குழந்தை பெற்றால் - இருவரும் உழைக்க தேவையில்லை, ஒருவர் உழைக்க மற்றவர் பிள்ளையை பார்க்க, சோசல் காசில் காலம் தள்ளலாம் என நினைத்தோம்.


இதில் சரி பிழை சொல்ல நான் வரவில்லை.

ஆனால் இப்படியான திட்டமிட்ட சோசல் சுரண்டலால்தான் 5 வருடத்தில் இருந்து 10, 15 என யோசிக்கிறார்கள்.

ரிபோர்ம் பார்ட்டி அரசு அமைக்கின், பிரிதானிய பிரஜைகளுக்கு மட்டுமே சோசல் காசாம். நிரந்தர வதிவுடமை இருந்தாலும் கிடையாதாம்.

வேலை விசாவில் வந்து வேலை செய்து வரி கட்டுவோர் நிலை என்ன மாதிரி அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

வேலை விசாவில் வந்து வேலை செய்து வரி கட்டுவோர் நிலை என்ன மாதிரி அண்ணை?

விதிமுறை மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதே என்கிறார்கள். ஆனால் குறித்த நாட்டுக்கு தேவைப்படும் வேலை செய்ய வந்தோருக்கு 3,5 வரிடத்திலேயே நிரந்தர வதிவுரிமை கிட்டுமா போல கூட மாற்றலாமாம்.

நான் நினைக்கிறேன். ரிபோர்ம் வெற்றி தவிர்க்க முடியாதது என.

இரு பெரிய கட்சிகளும் இந்த விடயத்தில் அவர்களுக்கு மக்கள் கொடுத்த கடைசி வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.