Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானில் இன்று 6 கோள்களின் அணிவகுப்பு - இந்தியாவில் எப்போது காணலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வானில் இன்று 6 கோள்களின் அணிவகுப்பு - இந்தியாவில் எப்போது காணலாம்?

ஆறு கோள்களின் அணிவகுப்பு, வானியல், அறிவியல், புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிப்ரவரி 28 அன்று வானில் ஒரு அரிய விண்வெளி நிகழ்வைக் காணலாம். புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன் ஆகிய ஆறு கோள்களும் வானில் நிலைகொள்வது போன்ற காட்சியை காண முடியும். இதனுடன் கூடுதலாக நிலவும் வானில் தென்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அடிவானத்திற்கு அருகே புதன், வெள்ளி, சனி, நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களும் ஏறக்குறைய நேர்கோட்டில் நிலைபெறும். சூரியன் மறைந்த பின்னர் சில நிமிடங்கள் மட்டுமே இந்த கோள்கள் புலப்படும். அதன் பின்னர் இந்த நான்கு கோள்களும் மறைந்துவிடும்.

எனவே, மேற்கு அடிவான திசையில் மரங்கள், வீடுகள், குன்றுகள் அற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உயரமான கட்டடம் அல்லது மலை உச்சியில் நின்றுகொண்டு பார்ப்பது சிறந்தது. வியாழன் மற்றும் யுரேனஸ் கோள்கள் வானில் தலைக்கு மேலே இருப்பதால், அவற்றை சில மணி நேரங்கள் காண முடியும்.

எப்போது, எங்கே காணலாம்?

ஆறு கோள்களின் அணிவகுப்பு, வானியல், அறிவியல், புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

மதுரையை எடுத்துக்கொண்டால், பிப்ரவரி 28 மாலை சூரியன் மறையும் நேரமான சுமார் 6:28 மணி முதல் மேற்கு அடிவானத்தை கூர்ந்து கவனிக்கத் தொடங்க வேண்டும்.

அதேபோல நம்மிடத்தில் சூரியன் மறையும் நேரம் நாம் மேற்கு அடிவானத்தை உற்றுநோக்கவேண்டும்.

சூரிய ஒளி மங்கி இருட்டு பரவும்போது முதலில் வெள்ளிக் கோள் பிரகாசமான ஒளிப்புள்ளியாக தென்படும். அதைத் தொடர்ந்து, இருட்டு அதிகமாகும்போது சற்று மேலே சனிக் கோள் காட்சி தரும். சனிக் கோளுக்கு அருகில்தான் நெப்டியூன் இருக்கும். ஆனால் இது வெறும் கண்களுக்குத் தென்படாது. இதைக் காண ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி தேவைப்படும்.

ஒளி மங்கி இரவாகும் போது, சில நிமிடங்கள் மட்டுமே புதன் கோள் அடிவானத்துக்கு அருகே தென்படும். இவை அனைத்தும் 6:45 மணிக்குள் நடந்து முடிந்துவிடும். வெள்ளி மற்றும் புதன் கோள்கள் 6:55 மணிக்குள் மேற்கில் மறைந்துவிடும். 7:20 மணியளவில் சனிக் கோளும் மறைந்துவிடும். இவையெல்லாம் அடிவானுக்கு மிக நெருக்கமாக புலப்படும்.

இந்த மூன்று கோள்களை இனம் காண முயன்ற பிறகு, தலையை உயர்த்திப் பார்த்தால் நிலவும் அதன் அருகே வியாழன் கோளும் தென்படும்.

வளர்பிறை நாள் என்பதால், நிலவின் 92% பகுதி ஒளிபெற்று காட்சியளிக்கும். பைனாகுலர் உதவியுடன் நிலவு நிலைகொண்ட பகுதிக்கு அருகே கூர்ந்து கவனித்தால், 'பீ ஹைவ்' (தேன்கூடு) விண்மீன் தொகுப்பு தென்படும். இது மிகவும் கவர்ச்சிகரமான விண்மீன் தொகுப்புகளில் ஒன்றாகும். இதில் 1000க்கும் மேற்பட்ட விண்மீன்கள் உள்ளன. இந்தத் தொகுப்பு சுமார் 577 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

நிலவுக்கு அருகே சுமார் நான்கு டிகிரி தொலைவில் வியாழன் கோளைக் காணலாம்.

கையை நீட்டி நான்கு விரல்களையும் சேர்த்துப் பிடித்தால் உருவாகும் கோணம்தான் நான்கு டிகிரி ஆகும். அதாவது, நிலவுக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள இடைவெளியை சேர்த்துப் பிடித்த நான்கு விரல்களால் மூடிவிட முடியும். நிலவுக்கும் வியாழனுக்கும் சற்று தொலைவில் கார்த்திகை விண்மீன் தென்படும். அதன் அருகில்தான் யுரேனஸ் கோள் இருக்கும்.

யுரேனசும் வெகு தொலைவில் இருப்பதால் வெறும் கண்களால் காண முடியாது. தொலைநோக்கி வழியாக மட்டுமே தென்படும். செவ்வாய் கோள் சூரியன் மறைவதற்கு சற்று முன்னரே மறைந்துவிடும். எனவே, அன்று வானில் அதைக் காண முடியாது. எட்டு கோள்களில் பூமியைத் தவிர்த்து ஆறு கோள்கள் அன்றிரவு வானில் நிலைகொள்ளும். நிலவும் அவற்றுடன் இணைந்துகொள்ளும்.

ஆறு கோள்களின் அணிவகுப்பு, வானியல், அறிவியல், புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வியாழன் (விளக்கப்படம்)

கோள்கள் அணிவகுப்பு என்றால் என்ன?

வெறும் கண்களுக்குப் புலப்படும் புதன், வெள்ளி, சனி ஆகிய மூன்று கோள்களும், தொலைநோக்கி வழியே தென்படும் நெப்டியூனும் சேர்ந்து மொத்தம் நான்கு கோள்கள் அடிவானில் அருகருகே நிலைகொள்வதைத் தான் 'கோள்கள் அணிவகுப்பு' என்கிறார்கள்.

ஆனால், இது ஒரு காட்சித் தோற்றம் மட்டுமே. மெய்யான அணிவகுப்பு இதில் இல்லை. கோள்கள் ஒன்றையொன்று நெருங்குவதும் இல்லை.

இதை ஓர் எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்ளலாம். ஓட்டப்பந்தய மைதானத்தின் நடுவே நாம் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட ஓடுபாதையில் ஓட்டப்பந்தய வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வருகின்றனர்.

வேகமாக ஓடும் வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயல்வார்கள். அவ்வாறு முந்திச் செல்லும்போது, அவர்கள் இருவரும் ஏறக்குறைய நேர்கோட்டில் இருப்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்படும். அதுபோலவே, சூரியனையும் கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருகின்றன. எனவே, சில சமயம் ஒரு கோள் மற்றொரு கோளை முந்திச் செல்லும். அந்தக் கட்டத்தில், வானில் அந்தக் கோள்கள் அருகருகே அணிவகுத்து நிற்பது போன்ற காட்சித் தோற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக சூரியனுக்கு அப்பால் சுற்றிவரும்போது இந்தத் தோற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது வெறும் தோற்ற மயக்கமே தவிர, பார்வைக்கு ஒரே கோட்டில் இருப்பது போலத் தோன்றினாலும், மெய்யாக விண்ணில் அவை ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை. அனைத்துக் கோள்களும் ஒரே சமதளத்தில் சுற்றி வருவதில்லை; மேலும், ஒப்பிட்டளவில் வெள்ளிக் கோள் நமக்கு அருகில் இருக்கும்போது, சனிக் கோள் மிகமிகத் தொலைவில் இருக்கும்.

எட்டு கோள்களும் எப்போது அணிவகுக்கும்?

முன்னதாக, வெறும் கண்களுக்குப் புலப்படும் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் கடந்த 2022 ஜூன் மாதம் அணிவகுத்துக் காட்சியளித்தன. அடுத்த முறை 2040ஆம் ஆண்டில் மட்டுமே வானில் இந்த ஐந்து கோள்களும் மீண்டும் அணிவகுத்துத் தென்படும்.

கடந்த 2020 ஜூலை 4 அன்று அனைத்து எட்டுக் கோள்களும் அணிவகுக்கும் அரிதான நிகழ்வு ஏற்பட்டது. அதற்கு முன்னர் இதேபோன்ற எட்டுக் கோள்களின் முழு அணிவகுப்பு நிகழ்வு 1982ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அடுத்த முறை இவ்வாறான முழு அணிவகுப்பு 2161ஆம் ஆண்டில்தான் நடைபெறும்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg1wz1rg1eo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.