Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்

பாலியல் குற்றச்சாட்டு, தேனி,  அரசுப் பள்ளி ஆசிரியர், கல்வி

படக்குறிப்பு,ஆசிரியர் கோகில பாண்டியன்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 28 பிப்ரவரி 2026, 08:13 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓர் ஆசிரியர், மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்வது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று' என, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.

முன்விரோதம் காரணமாக தன் மீது சக ஆசிரியைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கில், இரு ஆசிரியைகள் உள்பட 5 கல்வி அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனைக்கு ஆளான அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேனியில் உள்ள ஓர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த கோகில பாண்டியன் மீது 2016-ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

"பாலியல்ரீதியாக தொல்லை தரும் வகையில் செயல்பட்டதாக சக ஆசிரியைகள் மற்றும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி இடையூறு செய்வதாக பள்ளியின் சத்துணவு அமைப்பாளரும் புகார் அளித்ததாக செய்திகள் வெளிவந்தன" என பிபிசி தமிழிடம் கோகில பாண்டியன் தெரிவித்தார்.

புகார்களின் அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோகில பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

'போலி கடிதம் தயாரித்த ஆசிரியைகள்'

பாலியல் குற்றச்சாட்டு, தேனி,  அரசுப் பள்ளி ஆசிரியர், கல்வி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

சத்துணவு பெண் அமைப்பாளரின் பெயரில் சக ஆசிரியைகள் போலியான கடிதத்தை தயார் செய்தது தெரியவந்ததாக கோகில பாண்டியன் தெரிவித்தார்.

"கடிதத்தை தான் எழுதவில்லை என மாவட்ட ஆட்சியரிடமும் சத்துணவு அமைப்பாளர் புகார் அளித்திருந்தார்'' என்கிறார், கோகில பாண்டியன்.

தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான புகார் மனுக்களை அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோகில பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

"குற்றச்சாட்டு தொடர்பான புகார் மனுக்களைத் தருவதற்கு தொடக்கக் கல்வி அலுவலர் தொடர்ந்து மறுத்து வந்ததால் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் அவர்.

"ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளிடம் இருந்து மனுக்களைப் பெற முடியவில்லை. 'ஆவணங்களைக் கேட்டு இடையூறு செய்வதால் தர முடியாது' என அதிகாரிகள் கூறிவிட்டனர்" என கோகில பாண்டியன் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடந்து கொள்வதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.

"இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி முன்பாக ஆஜரான சத்துணவு பெண் அமைப்பாளர், 'நான் புகார் கடிதமே தரவில்லை' எனக் கூறிவிட்டார்" என்கிறார், கோகில பாண்டியன்.

பாலியல் புகார் சுமத்தியது ஏன்?

"உங்கள் மீது பாலியல் புகார் சுமத்த வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?" என, அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"என் மனைவியின் சொந்த ஊர் தேனி என்பதால் 2012 ஆம் ஆண்டு அங்குள்ள பள்ளியில் பணியில் சேர்ந்தேன்" எனக் கூறும் அவர், பள்ளியில் அங்கு சக ஆசிரியை ஒருவர், மாணவிகளிடம் தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறுகிறார்.

"இதனை தலைமை ஆசிரியர் கண்டுபிடித்து ஆசிரியைக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தார். இதற்கு நான் சாட்சிக் கையெழுத்து போட்டதால் என் மீது அவர் கோபத்தில் இருந்தார்" என்கிறார்.

''2015- ஆம் ஆண்டு வேறு பள்ளிக்கு அந்த ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருடன் நட்பில் இருந்த அறிவியல் ஆசிரியை ஒருவர் நான் பணியாற்றிய பள்ளிக்கு பணிமாறுதல் பெற்று வந்தார்''

"பணிமாறுதல் பெற்று வந்த ஆசிரியை, கழிவறைக்குச் செல்லும்போது நான்கு மாணவிகளை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியை விசாரித்தபோது, கழிவறையில் தண்ணீர் ஊற்றுவதற்காக அழைத்துச் செல்வது தெரியவந்தது" என்கிறார் கோகில பாண்டியன்.

'இவ்வாறு செல்லக் கூடாது' என மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை அறிவுறுத்தியதாகக் கூறும் அவர், "இந்த விவகாரம் தொடர்பாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமுருகன் விசாரணை நடத்தினார். இதனை ஏற்காமல் அதிகாரியுடன் அந்த ஆசிரியை வாக்குவாதம் செய்தார்" எனக் கூறுகிறார்.

இதுதொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கல்வித்துறை நடத்திய விசாரணையில் ஆசிரியை தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறை நடத்திய விசாரணை

பாலியல் குற்றச்சாட்டு, தேனி,  அரசுப் பள்ளி ஆசிரியர், கல்வி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

தன்னை ஆசிரியர் கோகில பாண்டியன் உள்பட ஐந்து பேர் அவமதித்துவிட்டதாக காவல்நிலையத்தில் ஆசிரியை தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

"நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் பொய்ப் புகார் எனக் காவல்துறை அறிக்கை அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார்" என்கிறார் கோகில பாண்டியன்.

"இவரும் இதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை ஆகியோர் இணைந்து தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டனர். இதற்காக சத்துணவு பெண் அமைப்பாளர் எழுதியதாக போலி கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு உடந்தையாக மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"சத்துணவு அமைப்பாளர் என் மீது புகாரே கூறாத நிலையில் ஐந்தரை மாதங்களாக பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளானேன்" எனக் கூறும் கோகில பாண்டியன், " வேறு பள்ளிக்கு என்னை இடமாறுதல் செய்தனர்" என்கிறார்.

பணியிடை நீக்கத்தை ரத்து செய்வதற்கு அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்காலிக பணியிடை நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, தன் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு கூறிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் கோகில பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

'கற்பனை செய்ய முடியாதது' - நீதிபதி

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஃபாசில் முகமது, ஆவணங்களை உருவாக்குதல், பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், குற்றவியல் சதி ஆகியவை சான்றுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு ஆசிரியைகளும் தன்னை தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிக்க வைப்பதற்கான நோக்கத்தை மனுதாரர் தெளிவாக நிறுவியுள்ளதாக தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தவறான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் நற்பெயர், சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார் ஊடகங்களில் வெளியானதை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி ஃபாசில் முகமது, "தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே நடத்தப்படும் ஊடக விசாரணைகள் பெரும்பாலும் குற்றம் சுமத்தப்பட்ட நபரை குற்றவாளியாக சித்தரிக்கின்றன" என்கிறார்.

'வழக்கின் மனுதாரர் பள்ளி ஆசிரியராக இருப்பதால் தவறான பாலியல் குற்றச்சாட்டுகளின் நிழலின்கீழ் மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இது பரிதாபகரமானது மட்டுமல்ல, கற்பனை செய்ய முடியாதது' எனத் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

'தன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் மனைவியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகும் ஒருவர், தனது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரால் இதையெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா?' எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தனி நபரின் கண்ணியம், குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக அந்தஸ்தையே பாதிப்பதாகக் கூறியுள்ள நீதிமன்றம், பாதிக்கப்படும் நபருக்கு ஆழ்ந்த மனவேதனையும் சரிசெய்ய முடியாத தீங்கும் ஏற்படுவதாகக் கூறியுள்ளது.

6 மாதம் முதல் 1 வருட சிறைத் தண்டனை

பாலியல் குற்றச்சாட்டு, தேனி,  அரசுப் பள்ளி ஆசிரியர், கல்வி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

'இதனை வெறும் நிர்வாகக் குறைபாடாக மட்டும் கருத முடியாது' எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி ஃபாசில் முகமது, 'மனுதாரருக்கு எதிராக ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது' என்கிறார்.

"இந்த வழக்கில் 134 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். வழக்கின் முடிவில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது" எனக் கூறுகிறார் கோகில பாண்டியன்.

கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சட்டத்துக்குக் கீழ்படியாமல் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்படுவது என தண்டனைக்குரிய செயல்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளதாக, நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதில், ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 6 மாதம் முதல் 1 வருட சிறைத் தண்டனையும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 'அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

'மொத்த அபராதத் தொகையான 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயில் மனுதாரருக்கு ஏற்பட்ட வேதனைக்காக 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தர வேண்டும்' எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

"வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒவ்வொரு பிரிவுக்கும் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் பிணை பெற்றுவிட்டனர். சிலர் அபராதமும் செலுத்திவிட்டனர்" எனக் கூறுகிறார் ஆசிரியர் கோகில பாண்டியன்.

'பாலியல் குற்றவாளியாக பார்த்தனர்'

"என் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டபோது நான் வசிக்கும் கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 'பள்ளியில் ஆசிரியருக்கு இது தான் வேலை' என்றெல்லாம் கேலி பேசினர். சக ஆசிரியர்கள் என்னை பாலியல் குற்றவாளியாக பார்த்தனர்" என்கிறார் அவர்.

"உறவினர்கள் வீட்டு நிகழ்வுக்கு சென்றால் பாலியல் புகாரைக் கூறி விசாரிப்பார்கள். அவர்களிடம், 'உண்மை என்றால் வருத்தப்படலாம்' என்று மட்டும் பதில் அளிப்பேன்" என கோகில பாண்டியன் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளாக போராடியதாகக் கூறும் அவர், "ஆசிரியைகளுக்கு உடந்தையாக இருந்த ஒரு கல்வி அலுவலர் ஓய்வுபெற்றுவிட்டார்." எனக் கூறினார்.

"சட்டப் போராட்டம் நடத்தி வந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் என்னைப் பழிவாங்கியிருப்பார்கள். அனைத்தையும் எதிர்கொண்டு தான் வழக்கை நடத்தினேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தண்டனை பெற்ற கல்வி அதிகாரி கூறுவது என்ன?

வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களில் தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த பி.என்.கணேஷ் தற்போது திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" எனக் கூறினார்.

நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் சரியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் கூறும் பி.என்.கணேஷ், "ஆவணங்கள் போலியானவை என தற்போது தான் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் இருந்து துறைரீதியாக எனக்கு எந்தவித தண்டனையும் வரவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய நன்னடத்தையைப் பார்த்து மாவட்ட கல்வி அலுவலராக இருந்த என்னை திருநெல்வேலிக்கு முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்தனர்" எனக் கூறுகிறார்.

கோகில பாண்டியன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, "அதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய காலகட்டத்தில் இந்தச் சம்பவம் நடக்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியபோது, "தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

"சுமார் 100 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு வெளிவந்துள்ளதாக அறிகிறேன். அதனை முழுமையாக படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.