Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு

Published By: Priyatharshan

14 Mar, 2026 | 10:10 AM

image

ஈரான் நாட்டின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி மையமாகக் கருதப்படும் கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிலடி தாக்குதல்களை ஈரானும் வளைகுடா பிராந்தியத்தில் மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச வர்த்தகமும், குறிப்பாக எண்ணெய் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் மிக முக்கியமான தீவு நகரமாகக் கருதப்படும் கார்க் தீவு மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்குவதுடன், நாட்டின் சுமார் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் இங்கிருந்தே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ஈரானின் முக்கியமான இராணுவ இலக்குகள் கார்க் தீவில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதேவேளை, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிக்காமல் இருக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு ஈரான் அல்லது வேறு யாரேனும் இடையூறு ஏற்படுத்தினால், அந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், “உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு சக்திவாய்ந்ததும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. நாங்கள் தாக்க விரும்பும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கியமான எண்ணெய் உற்பத்தி மையமாக விளங்கும் கார்க் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/240925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 20 சகிமீ பரப்பே உள்ள மிகச்சிறிய 'கார்க்' தீவு இரானின் உயிர் நாடி என்று கூறப்படுவது ஏன்?

கார்க், இரானின் உயிர் நாடி, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஃபர்ஸாத் சைஃபிகிரன்

  • பிபிசி செய்தியாளர்

  • 14 மார்ச் 2026, 07:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சற்று நேரத்திற்கு முன்பு, எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவு இரானின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது." என்று கூறியிருக்கிறார்.

தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த செய்தியைப் பதிவிட்ட டிரம்ப், தற்போதைக்கு "மனிதநேயம் மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக, இந்தத் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று எழுதியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு டேங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

இஸ்ரேலியப் படைகள் இதுவரை டெஹ்ரானில் உள்ள ரய் (Rayy), ஷஹ்ரான் மற்றும் அக்டிசியே ஆகிய எண்ணெய் கிடங்குகளையும், கரஜ் நகரத்தின் ஃபார்டிஸ் பகுதியையும் தாக்கியுள்ளன. இரானிய அரசு "ராணுவத் தளங்களை உருவாக்கப் பயன்படுத்திய" எரிபொருள் டேங்குகளே இந்தத் தாக்குதல்களின் இலக்கு என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இரானும் பதிலடி கொடுப்பதில் பின்வாங்கவில்லை. பாரசீக வளைகுடாவின் பல நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது அது தாக்குதல் நடத்தியுள்ளது.

கார்க் தீவு மீதான தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா இந்தத் தீவைக் கைப்பற்றக்கூடும் என்ற ஊகங்கள் இப்போது வலுவடைந்துள்ளன. இரானின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகள் கார்க் தீவிலேயே உள்ளன. இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த சிறிய தீவிலிருந்தே நடைபெறுகிறது.

கார்க் தீவு செய்திகளில் இடம்பெற்றிருப்பது ஏன்?

கார்க், இரானின் உயிர் நாடி, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2024

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போருக்கு முன்பே, இஸ்ரேலின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் கார்க் தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இம்முறை, டெஹ்ரான் மற்றும் கரஜ் எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலுக்கு மறுநாள், இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான யாயிர் லேபிட்-இன் சமூக ஊடக பதிவைத் தொடர்ந்து, கார்க் தீவு மீதான கவனம் மேலும் அதிகரித்தது. அவர் கூறுகையில், "கார்க் தீவில் உள்ள இரானின் அனைத்து எண்ணெய் வயல்களையும் எரிசக்தித் தொழில்துறையையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். இது இரானின் பொருளாதாரத்தை அழித்து, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்" என்று எழுதியிருந்தார்.

இரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், இஸ்ரேல் தனது "இலக்குகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"இந்த ஆட்சி வீழ்ந்த பிறகு, இரானிய மக்கள் ஒரு புதிய மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதே எமது குறிக்கோள். இந்த இலக்கை அடைவதில் இரானின் எண்ணெய் பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கும்," என்று அவர் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.

கார்க் தீவை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மார்ச் 7-ஆம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'ஆக்சியோஸ்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

பென்டகனின் முன்னாள் மூத்த ஆலோசகர் மைக்கேல் ரூபின் கடந்த வாரம் 'பொலிட்டிகோ'விடம் (Politico) பேசுகையில், கார்க் தீவின் முக்கியத்துவம் மற்றும் அதை ஆக்கிரமிக்கும் விஷயம் குறித்து டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேசியதாகத் தெரிவித்தார்.

"ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளுக்கு அப்பால் இரான் மீதான அழுத்தத்தை டிரம்ப் அதிகரிக்க விரும்பினால், கார்க் தீவைக் கைப்பற்றுவது இரானிய ஆட்சியின் மிக முக்கியமான நிதி ஆதாரத்தைப் பறிக்கும்," என்று அவர் நம்புகிறார்.

கார்க் தீவு மற்றும் எண்ணெய் வயல்கள்

கார்க், இரானின் உயிர் நாடி, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,Getty Images

கார்க் என்பது சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு பவளத் தீவாகும். இது இரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் நிர்வாகப் பிரிவுகளில் புஷெர் மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.

இங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அருகே மான்கள் உலவுவதைக் காணலாம். இத்தீவு மான்களின் வாழ்விடத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் சாதகமான இடமாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விடப்பட்ட மான்களின் எண்ணிக்கை, சமீபத்திய அறிக்கைகளின்படி தீவின் கொள்ளளவை விட அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

மிகச் சிறிய அளவிலான தீவாக இருந்தாலும், இரானுக்கு கார்க் தீவு மிகவும் முக்கியமானது, குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கார்க் திகழ்கிறது.

நாட்டின் தெற்கே உள்ள எண்ணெய் வளமிக்க பகுதிகளுக்கு மிக அருகாமையில் இருப்பது, சாதகமான கடல் சூழல் மற்றும் பெரிய எண்ணெய் டாங்கர்கள் வந்து செல்லத் தேவையான ஆழம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான இடமாக கார்க் கருதப்படுகிறது.

கார்க் தீவை இரானின் எண்ணெய் வயல்களின் மையப்புள்ளியாகக் கருதலாம். கச்சா எண்ணெயைச் சேமிப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இது ஒரு முக்கியமான தளம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

கார்க் தீவிற்கு மேற்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் இரானின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் வயலான அபுசார் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவில் இரானின் பெரும்பாலான எண்ணெய் உற்பத்திக்கான ஆதாரமாகும்.

அபுசார் எண்ணெய் வயலில் மூன்று முக்கிய உற்பத்தித் தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அபுசார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் கார்க் தீவில் அமைந்துள்ளது.

கார்க், இரானின் உயிர் நாடி, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,Kaveh Kazemi/Getty Images)

இதன் காரணமாக, இரானின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு மையங்களில் ஒன்று கார்க் தீவில் அமைந்துள்ளது.

இரான் ஆயில் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்படி, கார்க்கில் மொத்தம் 20 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட 40-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன.

நாட்டின் தெற்கு எண்ணெய் வயல்களில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் இந்த கிடங்குகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

டிசம்பர் 2023-ல், இரான் ஆயில் டெர்மினல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அப்பாஸ் கரிபி, கார்க் தீவில் கச்சா எண்ணெய் சேமிப்புத் திறனை 2 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிப்பதாக அறிவித்தார்.

கார்க் தீவு கச்சா எண்ணெயைச் சேமிப்பது மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கு முன்னதாக எண்ணெயை அளவிடவும், அதன் தரத்தை சரிபார்க்கவும் மற்றும் பல்வேறு வகையான கச்சா எண்ணெய்களை வகைப்படுத்தவும் செய்கிறது.

அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரான் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதை விற்கவும் அனுமதிக்கப்பட்டபோது, தனது எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை விரிவுபடுத்த இரான் முடிவு செய்தது.

கார்க் தீவில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதாலும், அங்கு அடிக்கடி புயல் போன்ற மோசமான வானிலை நிலவுவதாலும், 2016ஆம் ஆண்டில் புஷெர் மாகாணத்தில் உள்ள கனாவே நகருக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 10 மில்லியன் பீப்பாய் கொள்ளளவு கொண்ட ஓமித் (Omid) எண்ணெய் சேமிப்புக் கிடங்குத் திட்டம் தொடங்கப்பட்டது.

கனாவேவில் உள்ள ஓமித் எண்ணெய் கிடங்கு வளாகம் மிகப்பெரிய தனியார் எண்ணெய் சேமிப்பு வசதி என்று கூறப்படுகிறது.

கார்க்கின் துறைமுகம் மற்றும் வசதிகள்

கார்க் தீவு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு முக்கிய கடற்கரைகளைக் கொண்டுள்ளது. 1955ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கார்க்கில் எண்ணெய் ஏற்றும் தளம் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணி தொடங்கியது.

கிழக்கு தளம் 'T' வடிவிலானது மற்றும் 2,75,000 டன் கொள்ளளவு கொண்ட 6 எண்ணெய் கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மேற்கு தளத்தில் 5,00,000 டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் கப்பல்களை கையாள ஏற்றது.

கார்க் தீவில் கச்சா எண்ணெய் தரத்தை தொடர்ந்து பரிசோதிப்பதற்கான இரசாயன ஆய்வகமும் உள்ளது. இந்த ஆய்வகம் ISO/IEC 17025 தரச் சான்றிதழ் பெற்றது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகமாகக் கருதப்படுகிறது.

பெட்ரோகெமிக்கல் நிறுவனம்

கார்க், இரானின் உயிர் நாடி, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,Getty Images

கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனமும் இந்தத் தீவில் இயங்கி வருகிறது. எண்ணெய் உற்பத்தியின்போது வெளியாகும் வாயுக்களை எரிப்பதற்குப் பதிலாக, அவற்றை பயனுள்ள தயாரிப்புகளாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் மெத்தனால், சல்ஃபர், புரோபேன், பியூட்டேன் மற்றும் நாப்தா ஆகும்.

8,000-க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தத் தீவில், இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் கலைப் பிரிவும் அமைந்துள்ளது. அங்கு கற்பிக்கப்படும் முக்கியமான பாடங்களில் பெட்ரோலியம் மற்றும் கடல்சார் படிப்புகள் அடங்கும்.

இரான் - இராக் போரின் போது, இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கார்க் தீவு வழியாகவே நடைபெற்றன. இதன் விளைவாக, இராக் இந்தச் சிறிய தீவின் மீது சுமார் 2,800 முறை தாக்குதல் நடத்தியது. அக்காலத்தில் அதிக கவனம் ஈர்த்த எண்ணெய்க் கப்பல் போரின் பெரும் பகுதியும் கார்க் தீவைச் சுற்றியே நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c747k4xwwjyo

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் எண்ணை வளத்தில் 90% இங்கே இருந்து வருகிறதாம்.

இதில் எண்ணை எடுக்கும் தொழில்சார் கட்டமைப்பை உடைத்து விட்டால் அதை மீள கட்டி எழுப்பவே 5-10 வருடம் தேவைப்படுமாம்.

அதுவும் ஈரான் மீதுள்ள பொருளாதார கெடுபிடிகளின் மத்தியில், இதை அழித்து விட்டால் கிட்டதட்ட ஈரான் இனி ஆயில் ஏற்றுமதி (களவாக கூட) பண்ண முடியாது போகுமாம்.

இப்போ உள்ள கட்டமைப்பு 60/70 களில் BP கட்டியதாம்.

ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை அச்சுறுத்தினால், நாம் இதை கையில் எடுப்போம் என அமெரிக்கா மிரட்டுவதாக படுகிறது.

கள்ளமாக கிடைக்கும் எண்ணை வருவாய் இல்லை என்றால் ஈரானின் ஆயுத வல்லமையும் கூட கேள்வி குறியாகும்.

இதை அழிக்காமல் விட்டு வைத்து, பேச்சுக்கான கதவை அமரிக்கா திறந்து வைக்கிறது. ஆனால் 45 கிலோ 60% செறிவாக்கபட்ட யுரேனியத்கை திருப்பி கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனையாக இருக்கும் என நினைக்கிறேன். அது ஈரானுக்கு சாத்தியமில்லை.

20,000 தரை இறங்கும் துருப்புக்களை கொண்ட தரையிறக்கி கப்பலை அமெரிக்கா வளைகுடா அனுப்புகிறது.

இந்த தீவு அல்லது தெஹ்ரானில் இறங்க என நினைக்கிறேன். தெஹ்ரானில் கடல் இல்லை. எனவே இந்த தீவுதான் இலக்காக இருக்கும்.

நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை அவ்வளவு இலகுவில் விசேட படைகள் மூலம் எடுக்க முடியாது.

ஏதோ ஒருவகையில் பேசித்தான் எடுக்க வேண்டும்.

அந்த பேச்சுக்கான துருப்புசீட்டில் ஒன்றே இந்த தீவு.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

20,000 தரை இறங்கும் துருப்புக்களை கொண்ட தரையிறக்கி கப்பலை அமெரிக்கா வளைகுடா அனுப்புகிறது.

2500 படைவீரர்கள் என நினைவு அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

2500 படைவீரர்கள் என நினைவு அண்ணை.

அப்படியா. நான் பிழையாக வாசித்துள்ளேன். நன்றி.

இந்தளவு குறைந்த வீரர் எனில் அது இந்த தீவுக்குத்தான் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

hindutamil-prod%2F2026-03-14%2Feh292ut3%

வாஷிங்டன் டி.சி. : ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், அங்கு எஞ்சி இருப்பது மிகக் குறைவே’’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பது குறித்த செய்திகளை வெளியிடுவதை போலிச் செய்தி ஊடகங்கள் வெறுக்கின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது; அது ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒப்பந்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை மீது தனக்கு இருக்கும் அதிருப்தியையும்” அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “முழு மத்திய கிழக்கையும் கைப்பற்றவும் இஸ்ரேலை முழுமையாக அழித்தொழிக்கவும் ஈரான் திட்டமிட்டிருந்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் ஈரானைப் போலவே இப்போது அழிந்துவிட்டன” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு எனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை (அமெரிக்க ராணுவம்), மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஒன்றை செயல்படுத்தியது. ஈரானின் கிரீடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அது முற்றிலுமாக அழித்துவிட்டது. எங்கள் ஆயுதங்கள் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அதிநவீனமானவை. எனினும், கண்ணியம் கருதி, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை.

எனினும், ஈரான் அல்லது வேறு யாராவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிட ஏதாவது செய்தால், இந்த முடிவை நான் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்.

எனது முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்க ராணுவத்தை மிகவும் ஆபத்தான, சக்திவாய்ந்த, பயனுள்ள படையாக மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் தாக்க நினைக்கும் எதையும் பாதுகாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. எங்கள் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அமெரிக்காவையோ, மத்திய கிழக்கையோ அல்லது உலகையோ அச்சுறுத்தும் திறன் அவர்களுக்கு இருக்காது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம். அங்கு எஞ்சி இருப்பது அதிகம் இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.