Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டிரம்ப்

பட மூலாதாரம்,Reuters

கட்டுரை தகவல்

  • அந்தோனி ஜூர்ச்சர்

  • வட அமெரிக்க செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போரின் மூன்றாவது வாரத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவியின் எஞ்சிய காலத்தை வடிவமைக்கக் கூடிய முக்கியமான முடிவுகளை எதிர்கொண்டுள்ளார்.

இந்தப் போர் மேலும் தீவிரமடையக் கூடியதாகவும், கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும் என்ற போதிலும், டிரம்ப் இத்தகைய கவலைகளைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.

வெள்ளை மாளிகையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு உரையில், அவர் இந்தப் போர் குறித்துப் பேசினார். ஆனால், ஜான் எஃப் கென்னடி மையத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள், வெள்ளை மாளிகையில் புதியதொரு நடன அரங்கம் அமைக்கும் திட்டங்கள், இந்த ஆண்டின் ஃபிஃபா உலகக் கோப்பை, ஒரு குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நிலை மற்றும் பிற விவகாரங்கள் எனப் போருடன் தொடர்பில்லாத பல தலைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார்.

இத்தகைய பரந்த மற்றும் முன்னரே திட்டமிடப்படாத பேச்சுமுறை டிரம்புக்கு இயல்பான ஒன்று. வார இறுதியில், அவர் தனது ஃப்ளோரிடா ஓய்வு விடுதியில் கோல்ஃப் விளையாட்டிலும் ஈடுபட்டார். தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' இரானுடனான போர் குறித்துப் பேசுவதற்கு அவர் செலவிட்ட நேரத்திற்குச் சமமான நேரத்தை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விமர்சிப்பதிலும் செலவிட்டார்.

டிரம்ப் பல தலைப்புகளில் கவனம் செலுத்தினாலும், ஒரு தலைவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், போர் என்பது பெரும்பாலும் ஓர் அதிபரின் பதவிக் காலத்தையே முழுமையாக ஆட்கொண்டு விடும் என்று வரலாறு காட்டுகிறது.

இந்தப் போர் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. முன்னதாக, இந்தப் போர் "ஏற்கெனவே வெல்லப்பட்டுவிட்டது" என்றும் "முழுமையாக முடிந்துவிட்டது" என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது அது இன்னும் பல வாரங்களுக்கு அல்லது அதற்கும் மேலாகத் தொடரக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

திங்கட்கிழமை பிற்பகலில், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சீன பயணம், இந்தப் போரின் காரணமாக ஒரு மாதம் தாமதமாகும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் பின்வருமாறு விளக்கினார்:

"தற்போதைய சூழலில், முப்படைகளின் தலைமைத் தளபதியாகிய அதிபரின் தலையாய கடமை, 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' நடவடிக்கையின் தொடர் வெற்றியை உறுதி செய்வதே ஆகும்."

இது இரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரைக் குறிக்கிறது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டிரம்ப்

பட மூலாதாரம்,PTI

இந்த வார இறுதியில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்க உதவும் வகையில், நாடுகளின் ஒரு கூட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். இந்தப் பகுதி உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறது.

அதுகுறித்துப் பதிவிட்ட டிரம்ப், "இந்தச் செயற்கையான தடையால் பாதிக்கப்படும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பி வைக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

"எப்படியிருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை விரைவில் திறந்த நிலையிலும், பாதுகாப்பான நிலையிலும், தடையற்ற சூழலுக்கும் நாம் கொண்டு வருவோம்," என்று அவர் எழுதியுள்ளார்.

இருந்தாலும், அவரது வேண்டுகோளுக்குப் பிறகு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்படப் பல நாடுகள், இந்த முயற்சியில் இணைய விரும்பவில்லை என்று தெரிவித்தன.

"நாங்கள் ஒரு விரிவான போருக்குள் இழுக்கப்பட மாட்டோம்," என்று பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

அந்த நீரிணையில் நிலவும் சூழலைக் கையாள்வதற்கு ஏற்றதொரு "செயல்படக்கூடிய கூட்டுத் திட்டத்தை" வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிற நாடுகள் இதில் இணையாத காரணத்தால், குறுகியதாக இருப்பினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழிப் பாதையைப் பாதுகாக்க, அமெரிக்க கடற்படையின் கூடுதல் படைகளை அனுப்புவதா என்பது குறித்து டிரம்ப் தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது.

திங்கள் கிழமை, கடலில் கண்ணிவெடிகளைப் பதித்து, பிற கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரானிய கப்பல்களை அமெரிக்கா ஏற்கெனவே அழித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். அதேவேளையில், ஒரேயொரு கண்ணிவெடி கூடப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்தார்.

மேலும் அவர், "இது சற்றும் நியாயமற்றது. நாம் போரில் வென்று வருகிறோம். இந்தச் சூழலில் தற்போது செய்துகொண்டிருக்கும் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று கூறினார்.

காணொளிக் குறிப்பு,கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையங்களில் இரான் கை வைத்தால் வளைகுடா ஸ்தம்பிக்குமா?

இரானுடனான மோதலில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை செயல்பாட்டில் வைத்திருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 5,000 வீரர்கள் மற்றும் மாலுமிகளை கொண்ட ஒரு கடற்படை பிரிவை ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு நகர்த்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

டிரம்ப் மேலும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தால், அது அமெரிக்க படைகளை அதிக ஆபத்தில் தள்ளக்கூடும். ஏனெனில் அவர்கள் இரானுக்கு மிக அருகில் இருப்பார்கள்.

அவர் நடவடிக்கை எடுக்காமல், மாறாக இரானின் ராணுவத்தைப் பலவீனப்படுத்தும் தனது இலக்கை அமெரிக்கா ஏற்கெனவே அடைந்துவிட்டது என்று கூறினால், நிலைமை நிலையற்றதாகவே நீடிக்கக்கூடும். இரான் தொடர்ந்து கப்பல்களை அச்சுறுத்தலாம். எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கலாம்.

அப்படியானால், மத்திய கிழக்கில் அதிகாரச் சமநிலையைத் தெளிவாக மாற்றாமலேயே, அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கக்கூடும்.

இப்சோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கிளிஃபோர்ட் யங்கின் கூற்றுப்படி, ஏற்கெனவே மக்கள் ஆதரவு கலவையாக உள்ள நிலையில், டிரம்புக்கு எரிபொருள் விலை அதிகமாக நீண்ட காலம் நீடிப்பது ஒரு கடுமையான அரசியல் பிரச்னையாக மாறக்கூடும்.

தற்போதைக்கு, இரான் போர், குடியேற்றம், வர்த்தக வரிகள் போன்ற பிற பிரச்னைகள் குறித்து அவர்களில் சிலருக்கு சந்தேகங்கள் இருந்தாலும், டிரம்பின் முக்கிய ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவளித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆதரவுக் குறைவில் முக்கியமாக மிதவாத குடியரசுக் கட்சியினர் மற்றும் எந்த கட்சியையும் சாராத வாக்காளர்கள் பங்கு வகிக்கின்றனர்.

டிரம்பின் ஏற்பு மதிப்பீடுகள் 40% என்கிற குறைந்த அளவில் உள்ளன. இது குடியரசுக் கட்சியினருக்கு கவலையளிக்கக்கூடும். இருப்பினும், இதுவரை இரான் போர் அவரது செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவில்லை.

அமெரிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான, அன்றாட வாழ்க்கையை இந்தப் போர் பாதித்தால் இந்த நிலை மாறக்கூடும்.

டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்திருந்தாலும், வீட்டு வசதி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

இந்தப் போர் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்புகிறது. எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், அது டிரம்பின் அரசியல் நிலையைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை, ஒரு மாதத்திற்கு முன்பு 2.94 டாலராக இருந்த நிலையில், தற்போது 3.72 டாலராக உயர்ந்துள்ளது.

அதன் தாக்கத்தை விளக்கிய யங், "இது எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. குடியரசுக் கட்சியின் பார்வையில் மலிவு விலைத் திட்டம் தகர்க்கப்படுகிறது," என்றார்.

எளிதாகச் சொல்வதெனில், அதிகரிக்கும் வரும் விலைகள், மக்களின் வாழ்க்கையை இன்னும் இலகுவானதாக மாற்ற அரசு வகுத்துள்ள திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் அரசியல் ஆதரவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டிரம்ப்

பட மூலாதாரம்,EPA

மறுபுறம், அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்தால், ஒரு கடுமையான ஆபத்தும் உள்ளது.

ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பது, இரானின் எண்ணெய் ஏற்றுமதிப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது இரானின் அணுசக்தித் திட்டத்தின் பகுதிகளை அழிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகத் தரைப்படைகளைப் பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்யக்கூடும்.

இருப்பினும், அமெரிக்க வீரர்களை இந்த மோதலுக்கு அனுப்புவது கடுமையான பொது விமர்சனத்திற்கு வழிவகுக்கும். பல அமெரிக்கர்கள் நீண்ட போர்களால் சோர்வடைந்துள்ளனர். மற்றொரு நீடித்த ராணுவ ஈடுபாட்டை அவர்கள் விரும்பவில்லை. வெளிநாட்டுப் போர்களைத் தவிர்ப்பதாக டிரம்ப் உறுதி அளித்ததால், அவரைப் பலரும் ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உணர்வை விளக்கிய கிளிஃபோர்ட் யங்க், "முடிவில்லா போர்ச் சோர்வு நிலை நிலவுவதாக" கூறினார்.

"நாம் தரைப்படைகளை அனுப்பினால் நிர்வாகத்திற்கு முற்றிலும் புதிய ஆபத்து ஏற்படும், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும்," என்றார் அவர்.

இதன் பொருள், மக்கள் நீண்டகாலப் போர்களால் சோர்வடைந்துள்ளனர் என்பதாகும். வீரர்களை அனுப்புவது அரசுக்குப் புதிய அரசியல் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வான்வழித் தாக்குதல்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தினால், டிரம்ப் தனது மக்கள் ஆதரவை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கக்கூடும். அமெரிக்காவில் எரிபொருள் விலை உயரும்போது மக்கள் அடிக்கடி கோபமடைகிறார்கள். ஆனால், விலை மீண்டும் குறைந்தால் அந்தக் கோபமும் பொதுவாகக் குறைந்துவிடும்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் அவகாசம் இருப்பதால், நிலைமையைச் சமாளித்து, உள்நாட்டில் ஒரு பெரிய பொருளாதாரப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு டிரம்புக்கு இன்னும் நேரம் இருக்கிறது.

"நமக்கு யாரும் தேவையில்லை. நாம் உலகின் வலிமையான தேசம்" என்று திங்கள் கிழமை டிரம்ப் கூறினார்.

இருப்பினும், அவரிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே டிரம்புக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy57xzl9v1yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.