Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையீனங்கள் உருவாதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையீனங்கள் உருவாதல்

இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் ஆன்மீகத் தலைவர்
அயத்துல்லா அலி கொமினியை கொன்று தன்னுடைய தாக்குதலை ஆரம்பதித்தது முதல் அனைவருடைய பேச்சும், எழுத்தும் வளைகுடாவை பற்றியதாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தத்தமது நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாடும் இருக்கிறது. இருக்கின்ற பிரச்சினைகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான வழிகளைத் தேடுவதே இப்போதுள்ள நெருக்கடியாகிவிட்ட நிலைதான் காணப்படுகிறது.

எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகளால் அடிப்படையான பல விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது நினைவுக்குவராமல் போய்விடுகின்றன. இது வழமையானதே. அது காலங்கடத்தல்களுக்கே காரணமாகிப் போய்விடுகின்றன. அதில் ஒன்றுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம். இப் போராட்டம் ஆரம்பமாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. தற்போதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில்  பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் வலையமைப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சமூக  இயக்கங்கள்.  ஊடகவியலாளர்கள் என அனைவரும் தமது கோரிக்கைகளை தத்தமது வழிகளில் முன்வைப்பதிலேயே காலஙகடக்கிறது. அதேநேரத்தில் அச்சுறுத்தலான நெருக்கடிகளும் உருவாகாமலில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நான் சாகும் போதாவது என் சகோதரன் எனது தலைமாட்டில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மன்றாடிய தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி மரணமானார்.  31 வருடங்களாக சிறையில் வாடும் கைதி ஒருவரின் குடும்பத்தின் நிலை அவ்வாறாக இருக்கிறது. அது போன்று பல கதைகள் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. ஏக்கங்களும், ஏமாற்றங்களும், சந்தேகங்களும், கவலைகளும் தினம் தினம் தமிழ் மக்களை ஆட்கொள்ளுகின்றன. அதே போன்று காணாமலாக்கப்பட்ட, இராணுவம் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கேட்ட வண்ணமே பல உறவுகள் உயிரை விட்டவண்ணமிருக்கிறார்கள்.

வடக்கு  கிழக்கில் வாழும் தமிழ்  மக்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்குஎதிரான  குற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ திரு;வு, நீதி வழங்கவோ முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு  வந்த  அரசாங்கங்கள் இன்று வரை தோற்றுப்போயே இருக்கின்றன.

மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 16 வருடங்கள் கடந்த  நிலையிலும் நீதியை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயமே தமிழ் மக்களுக்கு காணப்படுகிறது. அரசாங்கங்கள் மாற்றம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பு சார் அச்சத்தினை கைவிட முடியாத நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதா என்ற கவலையையும் சேர்த்தே நகர வேண்டியும் உள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கடந்த வாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள், சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதை மறுதலிக்கவில்லை. காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும். காணாமல் போனோரின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வு பூர்வமானது என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சருடைய இந்தக் கருத்தானது கடந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என நிராகரிக்கப்பட்ட,  தற்போதைய அரசாங்கத்தாலும் தொடரப்படுகின்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு நடத்துவதற்கான கருத்தாகவே பார்க்கப்படுகிறது.

காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றனவற்றின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது என்ற குற்றச்சாட்டு வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவுகளிடம் காணப்படுகின்ற நிலையில் தான் அரசாங்கம் தமது இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்பது இந்த இடத்தில் நினைவில்
கொள்ளப்படவேண்டியதாகும்.  

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிக்குக் கொண்டுவரப்பட்டாலும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், போன்றன முடிவுக்கு வரவில்லை. அத்துடன், தொடர்ச்சியாக பேசப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் போன்றவற்றிடம் தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்றவைகளாகவே இருந்தும் வருகின்றனர்.

 இந்த நிலையில் இப்போதும் இவ்விவகாரங்களுக்கு சர்வதேச பொறிமுறையினால் எதுவும் நடைபெறாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுவதானது காலங்கடந்தும் ஞானம் கிடைக்காத தன்மையாகவே சொல்ல முடியும். அதே நேரத்தில், காணாமல் போனோர் விவகாரம் தனித்துவமானது. என்றும் அதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக இருக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் இருக்கிறார்  என்பதனையே வெளிப்படுத்துகின்றது. 

அதே நேரத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது எனலாம். பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்த விடயங்களை தொடர்வதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்பதற்கப்பால் அவர்கள் கோருகின்ற சர்வதேச நீதி என்பதனை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது எனவும்கூறலாம்.

அதே நேரத்தில், நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது எனக் கூறும் அரசாங்கம் முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்காமல் இருப்பதனை அவ்வாறே வைத்துக் கொண்டு நகர முயல்வதானது ஆபத்தான நிலைமையே. பயங்கரவாத  தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்து விட்டு அதனைவிட மோசமானதொரு சட்டத்தை உருவாக்குவதும், புதியட அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டு அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கருத்து வெளியிடுவதும் பொருத்தப்பாடில்லாச் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றன.

இவையெல்லாம்,  காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை உணராமல் நகர்தல், தமிழ் அரசியல் கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமை, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்புச் செயற்பாடு, வட கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கான தீர்வை வழங்காமல் காலத்தை வீணடித்தல் போன்றவைகள் நம்பிக்கையீனங்களையே ஏற்படுத்தும் என்பதனைத் தவிர வேறொன்றில்லை. அந்தவகையில்தான், இலங்கையில் யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன, இன அழிப்புகள் நடைபெற்றன, மனித குலத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன.

இவற்றுக்கான  பொறுப்புக்கூறல் அவசியம் தேவை என்பது தொக்குகிறது. அது மாத்திரமின்றி சர்வதேச வடிவமைப்புகளை மீறுவதாக ஒரு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புகுத்த நினைப்பதும் தவறானதாக இருக்கிறது.

அவ்வேளையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை தண்டிக்கும்
பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளியோம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்பதுடனேயே முடிவு
கிடைக்கவே வாய்ப்புள்ளது என்பது மாத்திரம் நிச்சயம். இஸ்ரேல்- அமெரிக்காவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, ஈரான் நடத்தும் யுத்தம் முடியும் வரையில் காத்திருப்போம்.


https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையீனங்கள்-உருவாதல்/91-374144

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.