Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?

5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான முடிவு, இன்றும் நாம் நேரத்தைக் கணக்கிடும் முறைக்கு நேரடி காரணமாக அமைந்தது.

பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative

படக்குறிப்பு,(க்ரெடிட்ஸ்: கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்)

கட்டுரை தகவல்

  • ஜோஸ்லின் டிம்பர்லி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான முடிவு, இன்றும் நாம் நேரத்தைக் கணக்கிடும் முறைக்கு நேரடி காரணமாக அமைந்தது.

அக்டோபர் 1793-இல், புதிதாக நிறுவப்பட்ட பிரெஞ்சு குடியரசு ஒரு துரதிர்ஷ்டவசமான சோதனையைத் தொடங்கியது. அந்த சோதனை நேரத்தை மாற்ற முடிவு செய்தது.

இனி ஒரு நாள் 24 மணிநேரத்திற்குப் பதிலாக 10 மணிநேரங்களாகப் பிரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மணிநேரமும் 100 ' நிமிடங்களை' கொண்டிருக்கும், அவை ஒவ்வொன்றும் 100 ' விநாடிகளால்'ஆனவை என்றும் புரட்சியாளர்கள் முடிவு செய்தனர்.

இந்த நேர முறைமை ஒரு விரிவான புரட்சிகர காலண்டரின் ஒரு பகுதியாகும், இது புதிய 10 நாள் வாரத்தை உள்ளடக்கிய ஆண்டின் கட்டமைப்பை பகுத்தறிவு ரீதியாக்குவதை (மற்றும் கிறிஸ்தவமயமாக்கலை நீக்குவதை) நோக்கமாகக் கொண்டது.

தற்போதுள்ள கடிகாரங்களை இந்த தசம முறைக்கு மாற்றும் பணிகள் விரைவில் தொடங்கின.

நகர அரங்குகளில் தசம கடிகாரங்கள் பொருத்தப்பட்டன மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் புதிய காலண்டரைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்டன.

இது விரைவில் தீராத தலைவலியை ஏற்படுத்தத் தொடங்கியது என்று பிரிட்டனின் லண்டனில் உள்ள ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச்சின் அறிவியல் தொடர்பாளர் ஃபின் புரிட்ஜ் கூறுகிறார். இந்த அருங்காட்சியகம் தான் ராயல் வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம் மற்றும் கிரீன்விச் மீன்டைம் நிறுவப்பட்ட இடமாகும்.

ஏற்கனவே இருந்த கடிகாரங்களை மறுவடிவமைப்பு செய்வதும் மாற்றுவதும் மிகவும் கடினமாக இருந்தது.

இந்த முறை பிரான்சை அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தியது, அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு நாள் வருவதை வெறுத்தனர். இறுதியில், இந்த தசம நேர முறை பிரான்சில் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை.

இருப்பினும், ஒரு நாளைக்கு 24 மணிநேரம், ஒரு மணிநேரத்திற்கு 60 நிமிடங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 60 விநாடிகள் என்று நாம் எவ்வாறு கணக்கிடத் தொடங்கினோம், இன்றும் எப்படி கணக்கிடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள, காலக்கணிப்பு முறை தோன்றுவதற்கு முந்தைய காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும்.

ஏனெனில் இது ஆரம்பகால எண் முறைமைகளில் ஒன்றின் கதையாகும்.

இது தான் நம்மை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியது.

மேலும் இந்தச் சிக்கலான முறை அதனை உருவாக்கிய நாகரிகங்களை விட நீண்ட காலம் நீடித்திருப்பதையும் இது விளக்குகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...   https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

அறுபதின்ம முறையின் அடித்தளம்

இதன் தொடக்கத்தில் இருப்பவர்கள் சுமேரியர்கள்.

மெசபடோமியாவில் (தற்போதைய இராக் பகுதி) சுமார் கி.மு. 5300-1940 வரை வாழ்ந்த பழங்கால மக்கள் மற்றும் நகரங்களை உருவாக்கிய முதல் நாகரிகங்களில் சுமேரியர்களும் அடங்குவர்.

நீர்ப்பாசனம் மற்றும் ஏர் உழுதல் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுடன், முதன்முதலில் அறியப்பட்ட எழுத்து முறையை உருவாக்கிய பெருமையும் இவர்களையே சாரும். இது 60-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு எண் முறையை உள்ளடக்கியிருந்தது.

உங்கள் கையை உங்களுக்கு முன்னால் உயர்த்திப் பிடித்து, ஒரு விரலை மடக்கிப் பார்த்தால் அதில் மூன்று மூட்டுகள் இருப்பதைக் காண்பீர்கள்.

ஒரு கையின் விரல்களில் உள்ள அனைத்து மூட்டுகளையும் (கட்டைவிரலைத் தவிர) எண்ணினால் 12 வரும்.

உங்கள் மற்றொரு கையின் ஒரு விரலைப் பயன்படுத்தி இந்த 12-ஐ ஒன்று எனக் கணக்கிட்டு, மீண்டும் முதல் கையில் 12 வரை எண்ணைத் தொடங்குங்கள். உங்கள் இரண்டாவது கையின் ஐந்து விரல்களும் பயன்படுத்தப்படும் வரை இதைச் செய்யுங்கள். இப்போது நீங்கள் எதை எட்டியிருப்பீர்கள்? அறுபது.

சுமேரியர்கள் தங்களின் வளர்ந்து வரும் கணித முறையை 10-ஐ அடிப்படையாகக் கொள்ளாமல், 60-ஐ அடிப்படையாகக் கொண்டு ஏன் உருவாக்கினார்கள் என்பது குறித்த ஊகக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்த முடிவு இன்றும் நாம் நேரத்தை அளவிடும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுமேரியர்கள் தங்களின் வளர்ந்து வரும் கணித முறையை 10-ஐ அடிப்படையாகக் கொள்ளாமல், 60-ஐ அடிப்படையாகக் கொண்டு ஏன் உருவாக்கினார்கள் என்பது குறித்த ஊகக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்த முடிவு இன்றும் நாம் நேரத்தை அளவிடும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பட மூலாதாரம்,The Fitzwilliam Museum, University of Cambridge

படக்குறிப்பு,18-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சிகர அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நேர முறையை ஒரு தசம கடிகாரம் காட்டுகிறது (படம் : தி ஃபிட்ஸ்வில்லியம் மியூசியம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்).

வளர்ந்து வரும் தங்கள் நகரங்களுக்கு ஆதாரமாக விளங்கிய, மேலும் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறிய விவசாய முறையைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமே, அவர்கள் எண்களை எழுதத் தூண்டுகோலாக இருந்தது என்கிறார் கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் கியூனிஃபார்ம் (பண்டைய மத்திய கிழக்கின் ஆரம்பகால எழுத்து முறைகள்) கலாச்சார நிபுணர் மார்ட்டின் வில்லிஸ் மன்ரோ.

எண்களைக் குறித்து வைப்பதற்காக, அவர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் அளவு அல்லது அதைவிட சிறியதான சிறிய களிமண் பலகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மென்மையான களிமண்ணில் விவரங்களைப் பொறித்தனர். விரைவில் மற்ற சித்திரக் குறியீடுகளும் தோன்றி, சுமேரியர்களின் புகழ்பெற்ற கியூனிஃபார்ம் வடிவ எழுத்துகளாக வளர்ந்தன .

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இந்த களிமண் பலகைகள் கண்டறியப்பட்டு அதன் பொருள் அறியப்படத் தொடங்கியது.

சுமேரியர்கள் பலவிதமான எண் முறைகளைப் பயன்படுத்தியதை அவை காட்டுகின்றன.

ஆனால் கணிதத்திற்கும், அதன் மூலம் வானியல் மற்றும் நேரத்திற்கும் மிக முக்கியமானதாக 'செக்ஸாஜெசிமல்' எனப்படும் அறுபதின்ம முறை (60-ஐ அடிப்படையாகக் கொண்ட) முறை உருவானது என்கிறார் மன்ரோ.

நாம் இப்போது 10-ஐப் பயன்படுத்துவது போன்றே சுமேரியர்கள் 60-ஐப் பயன்படுத்தினர்.

நாம் ஒன்பதை எட்டும்போது, இடதுபுறம் ஒரு இடத்திற்கு நகர்ந்து ஒன்றை எழுதி, வலதுபுறம் பூஜ்ஜியத்தைச் சேர்க்கிறோம் என்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துல்லியமான அறிவியல் மற்றும் தொல்பொருள் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற எரிகா மெஸாரோஸ் கூறுகிறார்.

"அறுபதின்ம முறைமைக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் 59 வரை சென்றுவிட்டு, 59-ஐ விட அதிக எண்ணைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒரு இடத்திற்குத் தள்ளி ஒன்றை மட்டும் பயன்படுத்துகிறார்கள்"என்று அவர் குறிப்பிட்டார்.

மேலே கூறப்பட்ட விரல் எண்ணும் கோட்பாடு கவர்ச்சிகரமாக இருந்தாலும், சுமேரியர்கள் ஏன் 60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"60 எங்கிருந்து வந்தது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று மன்ரோ கூறுகிறார். இந்த முறை சுமேரியர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இதன் பயன்பாட்டு எளிமை தெளிவாக உள்ளது.

பின்னங்கள் அல்லது தசமங்கள் தேவையின்றி 60-ஐ ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, 10, 12, 15, 20, 30 மற்றும் 60 ஆகிய எண்களால் வகுக்க முடியும். 10-ஐ ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10-ஆல் மட்டுமே வகுக்க முடியும் என்பதோடு ஒப்பிடும்போது இதன் நன்மைகள் புரியத் தொடங்கும்.

"கணக்கியல், வரிகள் அல்லது நிலங்களை அளவிடுதல் மற்றும் வாரிசுரிமைக்காக நிலங்களைப் பிரித்தல் போன்ற நடைமுறை நோக்கங்களுக்காக நீங்கள் எண்களை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்த கணிதச் செயல்பாடுகளைச் செய்ய எளிதான வழி இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்" என்கிறார் மெஸாரோஸ்.

காலத்தின் தோற்றம்

சுமேரியர்கள் நேரத்தைப் பயன்படுத்தியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்றாலும், கி.மு. 1000-இல் பாபிலோனியர்களால் (சுமேரியர்களுக்குப் பிறகு வந்த ஒரு பண்டைய மெசபடோமிய நாகரிகம்) சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் முதன்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தப் பிராந்தியத்தில் காலக்கணிப்பு முறை இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று மன்ரோ கூறுகிறார்.

ஒரு நாளை மணிநேரங்களாகப் பிரித்ததாக அறியப்படும் முதல் நாகரிகம் பண்டைய எகிப்தியர்களுடையது தான் என்று சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் வானியலாளர் ரீட்டா கௌட்ச்சி கூறுகிறார்.

இது கி.மு. 2500-ஆம் ஆண்டைச் சேர்ந்த மத நூல்களில் காணப்படுகிறது.

மணிநேரங்கள் தொடர்பாக முதலில் அறியப்பட்ட பொருட்கள் ஆரம்பத்தில் இரவின் 12 மணிநேரங்களைக் குறிக்கின்றன.

இவை கி.மு. 2100 மற்றும் 1800-க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்திய பிரபுக்களின் சவப்பெட்டிகளின் உட்புற மூடியில் காணப்பட்ட டயகனால் ஸ்டார் கிளாக் என்று கௌட்ச்சி விளக்குகிறார்.

இவை கி.மு. 2100 மற்றும் 1800-க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்திய பிரபுக்களின் சவப்பெட்டிகளின் உட்புற மூடியில் காணப்பட்ட மூலைவிட்ட நட்சத்திரக் கடிகாரங்கள் (டயகனால் ஸ்டார் கிளாக்) என்று கௌட்ச்சி விளக்குகிறார்.

பட மூலாதாரம்,The Board of Trustees of the Science Museum, London

படக்குறிப்பு,நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளில் ஒன்றான சூரியக் கடிகாரங்கள், கி.மு. 1500 வாக்கில் எகிப்தில் தோன்றத் தொடங்கின (படம் : தி போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் ஆஃப் தி சயின்ஸ் மியூசியம், லண்டன்).

எகிப்தியர்கள் ஏன் சரியாக 12 என்ற உட்பிரிவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை .

இதுவே இறுதியில் முழு நாளிலும் 24 மணிநேரங்கள் ஏற்பட வழிவகுத்தது.

எகிப்தியர்கள் 12 விண்மீன் தொகுப்புகளைக் கொண்ட ஒரு ராசி சுழற்சியைக் கொண்டிருந்தனர், ஆனால் இது 12 மணிநேரங்கள் குறித்த முதல் குறிப்புகளுக்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஒரு கையின் விரல்கள் மற்றும் மூட்டுகளைப் பயன்படுத்தி 12 வரை எண்ணுவது மற்றொரு சாத்தியமாகும். அவர்கள் தேர்ந்தெடுத்த 10 நாள் வாரம் என்ற கணக்கு சில நட்சத்திரங்களின் தெரிவுநிலையுடன் எவ்வாறு இணைந்தது என்பதன் காரணமாகவும் இது இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளான சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் கி.மு. 1500-இல் எகிப்தில் தோன்றின.

அவற்றில் சில அன்றாட வேலைகளின் போது பயன்படுத்தப்பட்டன, ஆனால் பெரும்பாலானவை காலக்கணிப்பை விட "மத ரீதியான சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் தொடர்புடையதாகவே" இருந்திருக்கலாம் என்று கௌட்ச்சி கூறுகிறார்.

"தனிப்பட்ட முறையில், அவற்றில் பல கடவுள்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் அல்லது நேர்த்திக்கடன்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறும் அவர், "அந்தக் காலத்தின் அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு குறித்து எங்களிடம் அதிக தகவல்கள் இல்லை"என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் குறித்த நூல்களில், மிகச்சிறிய நேர அலகு பொதுவாக வேலை மாற்றமாகவே இருந்தது, இது பொதுவாகக் காலை அல்லது மதியம் என்று கற்பனை செய்யப்பட்டது என்று கௌட்ச்சி கூறுகிறார்.

ஆனால் பண்டைய எகிப்தின் ரோமானிய காலத்திலிருந்து (கி.மு. 30 முதல்), மணிநேரங்கள் ஒரு தரநிலையாக மாறின, அதனுடன் அரை மணிநேரங்களும் தோன்றத் தொடங்கின என்றும் அவர் தெரிவித்தார்.

நிமிடங்களின் வருகை

இதற்கிடையில், பாபிலோனியர்களும் மணிநேரங்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுவந்தனர். நேரத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக இல்லாவிட்டாலும், ஒரு மணிநேரத்தை மிகச்சிறிய அலகுகளாகப் பிரித்த முதல் நபர்களாக இறுதியில் அவர்களே இருந்தனர்.

கி.மு. 2000 முதல் கி.மு. 540 வரை செழித்தோங்கிய பாபிலோனியர்கள், சுமேரியர்களிடமிருந்து கியூனிஃபார்ம் எழுத்து முறை மற்றும் அறுபதின்ம எண் முறை ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டனர்.

கி.மு. 1000-ஆம் ஆண்டில், சூரியன் வானில் மீண்டும் அதே நிலைக்குத் திரும்ப எடுக்கும் காலத்தை (360 நாட்களுக்குச் சற்று அதிகம்) அடிப்படையாகக் கொண்ட ஒரு காலண்டரை அவர்கள் உருவாக்கியிருந்தனர் என்று மெஸாரோஸ் கூறுகிறார்.

ஏற்கனவே 60-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணும் முறையைப் பயன்படுத்தும் ஒரு நாகரிகத்திற்கு இது ஒரு வசதியான எண்ணாக இருந்தது.

"60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையில் இது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பாருங்கள்" என்கிறார் மெஸாரோஸ்.

"உண்மையில், இது தலா 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களுக்கு மிகச் சரியாக வழிவகுத்தது" இது நிலவு சுழற்சியுடனும் ஒத்துப்போனது என்றும் அவர் கூறுகிறார்.

எகிப்தியர்களைப் போலவே, பகலையும் இரவையும் தலா 12 ஆகப் பிரிக்கும் அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறை நேர முறையை பாபிலோனியர்கள் உருவாக்கினர்.

இந்த "பருவகால மணிநேரங்களின்" நீளம், பகல் மற்றும் இரவின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும். "இரவு வானத்தை 12 மாதங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரிப்பதால், பகலையும் 12 ஆகப் பிரித்தோம்" என்கிறார் மெஸாரோஸ்.

வேறு பல பண்டைய நாகரிகங்களும் பருவகால மணிநேரங்களைப் பயன்படுத்தின, அவை 15-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் 19-ஆம் நூற்றாண்டு ஜப்பானிலும் பயன்பாட்டில் இருந்தன.

இருப்பினும், இந்த பருவகால நேரம் நடைமுறை பயன்பாட்டிற்காக ஒருபோதும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்படவில்லை என்று மன்ரோ குறிப்பிடுகிறார். "[அது] நவீன காலத்தின் ஆரம்பம் வரை ஒரு விஷயமாகவே இல்லை... மெசபடோமியா மற்றும் பிற பண்டைய கலாச்சாரங்களில் அது இல்லை, ஏனென்றால் அதற்கு உண்மையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை"என்று அவர் விளக்கினார்.

வேறு பல பண்டைய நாகரிகங்களும் பருவகால மணிநேரங்களைப் பயன்படுத்தின, அவை 15-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் 19-ஆம் நூற்றாண்டு ஜப்பானிலும் பயன்பாட்டில் இருந்தன.

பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative

படக்குறிப்பு,கி.மு. 3200 காலத்தைச் சேர்ந்த இந்தச் சுமேரியப் பலகை, மிகப் பழமையான கணிதப் பயிற்சிகளைக் கொண்டுள்ளது (படம் : கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்).

பாபிலோனியர்கள் வானியல் நிகழ்வுகளைக் கணக்கிடுவதற்கும் அளவிடுவதற்கும் மற்றொரு நேர முறையை உருவாக்கினர், ஆனால் இது அன்றாட பயன்பாட்டிற்கானது அல்ல.

இது ஒரு நாளை 12 "பெரு" ஆகப் பிரித்தது, இதனை நவீன காலத்தின் இரண்டு மணிநேரங்களுக்குச் சமமாகக் கருதலாம். இதைப் பயன்படுத்திய ஒரே பண்டைய கலாச்சாரம் பாபிலோனியா மட்டுமல்ல. உதாரணமாக, இவை பண்டைய சீனா மற்றும் ஜப்பானிலும் காணப்பட்டன.

தங்கள் கணக்கீடுகளில் இன்னும் நுணுக்கமான அளவீடுகளின் தேவை காரணமாக, பாபிலோனியர்கள் இந்த இரண்டு மணிநேர 'பெரு' அலகுகளை 'உஷ்' எனப்படும் 30 பண்டைய நிமிடங்களாகப் பிரிக்கத் தொடங்கினர்.

இதில் ஒவ்வொரு நிமிடமும் நமது தற்போதைய நான்கு நிமிடங்களுக்குச் சமம்.

இவை மேலும் 60-ஆல் வகுக்கப்பட்டு 'நிண்டா' எனப்படும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் சுமார் நான்கு நவீன வினாடிகளுக்குச் சமம்.

"அறுபதின்ம முறைமையில் நாம் விஷயங்களை 60 குழுக்களாகப் பிரிப்பதாலேயே" இந்த உட்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெஸாரோஸ் கூறுகிறார்.

இருப்பினும், பாபிலோனியர்கள் இதனை "நேரத்தைப் பிரிப்பதாக நினைக்கவில்லை" என்றும், "அவர்கள் இதனை வானில் தூரத்தை அளவிடும் எண்களை அல்லது கிரகங்களின் வேகத்தைப் பிரிப்பதாகவே நினைத்தார்கள்"என்றும் மன்ரோ குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற அனைத்து பண்டைய கால வளர்ச்சி முறைகளிலும் யார் யாருடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள் என்று துல்லியமாகக் கூறுவது கடினம் என்று கௌட்ச்சி கூறுகிறார்.

"சுமார் கி.மு. 330 முதல், அலெக்ஸாண்ட்ரியாவில் புதிய அறிவியல் மையம் உருவானதால், எகிப்து, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றிணைந்த ஒரு சங்கமமாக மாறியது," என்று கூறும் அவர், "இதைத்தான் நாம் ஹெலனிஸ்டிக் உலகம் என்று அழைக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பண்டைய கிரேக்கர்கள் பாபிலோனிய வானியல் நேர முறையை ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது என்று மெஸாரோஸ் கூறுகிறார்.

மேலும், "அவர்கள் அதே பிரிவை வைத்திருந்தனர், ஏனெனில் இது ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்புகளுடன் புதியவற்றைச் சேர்க்க அவர்களுக்கு அனுமதி அளித்தது... இது பாபிலோனியர்களுக்கு நன்றாக வேலை செய்த ஒரு அமைப்பாக இருந்ததால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் வானியல் தரவு மற்றும் மரபுகளைப் பெறுவதற்காக அதை அதை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்"என்றும் அவர் விளக்கினார்.

வினாடிகளை எண்ணுதல்

"மக்கள் பேசுவதற்கு சமமான நேரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக" கிரேக்கர்கள் தங்கள் அரசவையில் மணல் கடிகாரங்களை வைத்திருந்தாலும், அவர்கள் ஏற்றுக்கொண்ட பாபிலோனிய நேர முறையானது ஜோதிடர்களால் கருத்தியல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலும் "அன்றாட வாழ்க்கைக்கு உண்மையில் பொருத்தமற்றதாக இருந்தது" என்று கௌட்ச்சி கூறுகிறார்.

ஆனால் ஹெலனிஸ்டிக் கலாச்சார சங்கமத்திலிருந்து உருவான மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் போன்ற கருத்துக்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றைய நாள் வரை வந்துள்ளன.

இருப்பினும், சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நிமிடங்களும் விநாடிகளும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அளவிற்கு காலக்கணிப்புக் கருவிகள் துல்லியமானதாக மாறின.

வினாடி என்பது இப்போது எண்ணற்ற அறிவியல் வரையறைகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வினாடியை விடச் சிறிய நேர அலகுகளைக் கணக்கிடத் தொடங்கியவுடன், விஞ்ஞானிகள் மெட்ரிக் முறைக்கு மாறி, அதனை மில்லி மற்றும் மைக்ரோ விநாடிகளாக (முறையே ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு மற்றும் மில்லியனில் ஒரு பங்கு) பிரித்தனர்.

20-ஆம் நூற்றாண்டில், அணு கடிகாரங்கள் வினாடியை துல்லியமாக மறுவரையறை செய்யசெய்ய விஞ்ஞானிகளுக்கு உதவின.

சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வரையறையிலிருந்து, சீசியம்-133 அணுக்களால் மைக்ரோவேவ் கதிர்வீச்சை உறிஞ்சுதல் மற்றும் உமிழ்தல் அடிப்படையிலான துல்லியமான மதிப்பிற்கு அது மாறியது.

இன்று, நமது உலகளாவிய அணு கடிகாரங்களின் வலையமைப்பு கிட்டத்தட்ட அனைத்து நவீன கடிகாரங்களின் நேரத்தையும் பராமரிக்கிறது, மேலும் இது இணையம் முதல் ஜிபிஎஸ் மற்றும் அதிநவீன எம்ஆர்ஐ இமேஜிங் வரை அனைத்திற்கும் பின்னணியாக உள்ளது .

பிரச்னைகளைப் பேசுவோம்

படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்

இருப்பினும், கால கணக்கீட்டின் வரலாற்றைக் கண்டறியும்போது, அது உண்மையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், மனித முடிவுகளால் தீர்மானிக்கப்பட்டது என்பதும் வெளிப்படுகிறது.

மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் ஆகியவை தொடர்ச்சியான தேர்வுகள், தற்செயல்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக நம்மிடம் வந்தடைந்தன.

ஆனால் அவை பல நூற்றாண்டுகளாகப் பயனுள்ள பாரம்பரியமாக நம்மிடம் நிலைத்துவிட்டன. பண்டைய காலத்தின் இந்தத் தாக்கம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்றால், இப்போது இந்த அமைப்பை மாற்றுவது கையாளுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம்.

18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நேரத்தைத் தசம முறைப்படுத்த முயன்றபோது கூட, நடைமுறையில் அந்தப் புதிய முறை அரிதாகவே பயன்படுத்தப்பட்டது . அதே சமயம் , குடியரசின் தூர அளவீடுகளையும் நாணயத்தையும் தசம முறைப்படுத்துவதற்கான இதே போன்ற முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தசம நேர முறை வெறும் 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது, இருப்பினும் அந்த நாட்காட்டி சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு ஓரளவு பயன்பாட்டில் இருந்தது.

"இது தொடர்பாக முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது,அது மக்களிடையே எடுபடவில்லை," என்று புரிட்ஜ் கூறுகிறார்.

1795-ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசிய மாநாட்டின் உறுப்பினரான கிளாட்-அன்டோயின் பிரியர் ஆற்றிய உரையே, தசம நேர முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக இருந்திருக்கலாம்.

இது யாருக்கும் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நன்மையும் அளிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், மற்ற புதிய மெட்ரிக் அளவீட்டு முறைகள் மீது இது ஒரு கெட்ட பெயரை உருவாக்குவதாகவும், அவை இதற்கு மாறாகப் பயனுள்ளவை என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crk14g8vj06o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.