Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதற் கலைஞன் டென்னிசன் - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதற் கலைஞன் டென்னிசன்

- சுப.சோமசுந்தரம்

ஆங்கிலக் கவிஞரான (British Poet) ஆல்ஃப்ரெட்   லார்ட் டென்னிசன் (1809 -  1892) பற்றி நினைக்க நேர்கையில் நம்மில் பெரும்பாலானோருக்கு, பள்ளி அல்லது கல்லூரியில் வாசித்த அவரது 'The Brook' கவிதையின்

"For men may come and men may go

But I go on forever"

என்ற பிரபலமான வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது. நீரோடையானது, "பிறப்பதும் இறப்பதும் மானிடர்க்கு வகுக்கப்பட்டது; ஆனால் என்றும் இருப்பது (ஓடிக்கொண்டே இருப்பது) எனக்கான இயல்பு என்று தன்னுரையாய் (monologue or soliloquy) மொழிவனவே இவ்வரிகள். மனிதனின் நிலையாமையுடன் ஒப்பிடுகையில் இயற்கையின் நிலைத்தன்மை சற்று வலிமையானது என்பது செய்தி.

            டென்னிசனிடம் உறையும் காதற் கலைஞனை (the Romanticist in Tennyson), அவரை அறியாதார்க்கு நம்மால் இயன்றவரை இனங் கட்டுவதே இவ்வெழுத்தின் நோக்கம். அவர் காதலாய்ச் சுட்டுவது பரந்துபட்ட பொருளினது. எந்த இடத்தில் தலைவன் -  தலைவி காதலைக் குறிப்பது, எந்த இடத்தில் அம்மேதகு உறவினையும் கடந்து நிற்பது என்பதெல்லாம் அந்தந்த இடத்தால் விளங்கி நிற்பது.

             1833 ல் டென்னிசனின் நண்பரான ஆர்தர் ஹென்றி ஹேலம் (Arthur Henry Hallum) அவர்களின் மறைவு டென்னிசனை மனதளவில் மிகவும் பாதித்த நிகழ்வு. ஒரு கவிஞனின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு - மகிழ்ச்சி, துயரம், சினம், ஆதங்கம் எதுவானாலும் - கவிதையாகத்தானே முடியும் ! அவ்வாறே ஹேலமின் மறைவுத் துயரானது சுமார் பதினேழு வருடங்கள் கனன்ற நெருப்பாகி 1850 ல் 'In Memoriam'  என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பானது. அத்தொகுப்பில் 'Lost love' என்று தலைப்பிட்ட கவிதையின் பின்வரும் வரிகள் முழுத் தொகுப்பிலுமே பிரபலமானவை :

"I hold it true, whate’er befall,        I feel it, when I sorrow most;        ‘Tis better to have loved and lost Than never to have loved at all"

"என்னவாயினும் இதுவே உண்மை என்று அறுதியிட்டுச் சொல்வேன்  - குறிப்பாக, நான் துயரத்தில் மூழ்கும் போது இதனை உணர்கிறேன் :

காதல் (அல்லது அன்பு) கொள்ளாமலேயே வாழ்ந்து முடிவதை காட்டிலும், காதல் (அன்பு) கொண்டு அதனை இழப்பது (கூட) மேலானது".

               காதல் கொள்ளாத வாழ்வில் அதனை இழக்கும் வலியும் இல்லை என்பது பொதுப்புத்தி. அதில் டென்னிசன் மாறுபடுகிறார். இழப்பின் வலியானது,  கொண்ட காதலின் திறம் கூறுவதால் அந்த வலியை ஓர் இன்ப வேதனையாய்க் கொள்கிறார் டென்னிசன்.

             இழந்த காதலை நேர்மறையான பார்வையுடன் அணுகும் டென்னிசன், இயன்றவரை இழக்காது இருப்பதின் மேன்மையையும்  கவிதைத் தொகுப்பிலேயே உணர்த்துகிறார்.

            

"Love is too precious to be lost

A little grain shall not be spilt"

பொருள் : காதல் அல்லது அன்பு எனும் தகைமை இழப்பதற்கு மலிவான பொருளில்லை. அதன் ஒவ்வொரு குன்றுமணியையும் (துளியையும்) சிந்தாமல் சிதறாமல் கொள்வதே நலம் பயப்பது.

           காதலை இழந்தும் இருத்தலைப் பாடியவர் இழந்து இறத்தலையும் போற்றுகிறார்.

"Sweet is true love tho' giv'n in vain, in vain; And sweet is death that puts an end to pain: I know not which is sweeter, no, not I".

மேற்குறிப்பிட்ட வரிகள் டென்னிசனின் "Idylls of the King" எனும் பெருங்கவிதையின் 'Lancelet and Elaine' எனும் பகுதியில் உள்ளவை. லேன்ஸ்லெட் மீது எலைன் கொண்ட காதல் தோல்வியுற்றதால் எலைன் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வரிகளின் பொதுத்தன்மையே நமக்கான பேசுபொருள்.

"எதிர்பார்ப்பு இல்லாத காதல் வீணாய்ப் போனாலும் (தோல்வியுற்றாலும்) அக்காதல் இனிமையானதே. தோல்வியுற்ற காதல் தரும் வலியினைப் போக்கும் மரணமும் இனிமையானதே. இரண்டிலும் எது கூடுதல் இனிமை என்பது எனக்குத் தெரியாது" என்பதே பாடலின் பொருள். தோல்வியுற்றாலும் கைம்மாறு கருதாக் காதல், கொண்டாரை உணர்வுபூர்வமாய்ப் பரவசப்படுத்துவதால் அது இனிமையானது என்க.

                 அவரது 'Idylls of the King's ல் 'Merlin and Vivien' என்ற பகுதியில்,

"As love, if love be

perfect, casts out fear"

என்கிறார். நிறைவான காதல் அச்சம் கொள்ளாது என்பதே பொருள். ஆசை வெட்கமறியாது என்று நாம் கூறுவதைப் போன்றது. நிறைவான காதல் வீரம் செறிந்த காதல் என்கிறார். அகத்திணையைப் புறத்திணையில் கொண்டு நிறுத்துகிறார். தற்காலத்தில் ஆணவக் கொலைகள் எத்தனை நிகழ்ந்தாலும் சாதி மறுப்புக் காதல் மீண்டும் மீண்டும் களத்தில் வந்து நிற்கத்தானே செய்கிறது !

               தமது 'The Day dream' என்ற கவிதையின் பகுதியான 'The Departure' ல் தலைவியான இளவரசி தன் தலைவனாகிய வேற்றுநாட்டு இளவரசனுடன் தன் அரண்மனையை விட்டுச் செல்கிறாள்.

"And on her lover's arm she leant,

And round her waist she felt it fold,

And far across the hills they went

In that new world which is the old"

எனத் தொடங்குகிறார் டென்னிசன்.

அஃதாவது தலைவனின் தோளில் இவள் சாய்ந்தவாறு, அவனது கரம் இவளது இடையைச் சுற்றி ஆதரவாய் அணைத்தவாறு சென்றனர் என்று படம் பிடிக்கிறார் டென்னிசன். தொலைவில் உள்ள மலைகளையும் குன்றுகளையும் கடந்து (ஏனையோர்க்கு) பழைய உலகமான (தங்களுக்கு) புதுமையான உலகை நோக்கிச் சென்றனராம்.

           பாடலை இவ்வாறு நிறைவு செய்கிறார் :

"Beyond the night, across the day,

Thro' all the world she followed him".

பொருள் : இரவு பகலாக அவன் செல்லும் வழியெல்லாம் அவன் அடியொற்றிச் சென்றாள்.

              இவ்வரி ("முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும்) திருத்தாண்டகப் பாடலின் இறுதி வரியினைப் போலவே உள்ளதைக் காணலாம் :

"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

   தலைவன்-தலைவி தங்கள் புதுவாழ்வு நோக்கி ஒரே மாதிரியாகத்தானே செல்ல முடியும் - ஆங்கிலக் கவிதையானாலும் நம் சங்க கால, பக்தி இலக்கியங்களானாலும் !  நாம் மேற்குறிப்பிட்ட தமிழ்ப் பாடலுக்கும் டென்னிசனின் 'The Departure' கவிதைக்கும் காட்சியமைப்பில் பெரிய வேறுபாடு உண்டு. தமிழில் தலைவன்-தலைவி உடன்போக்கு எனும் அகத்திணை தழுவிச் செல்கின்றனர். மேற்கத்திய உலகில் அதற்கான தேவையே இல்லை. அங்கே தலைவன்-தலைவி போக்கு என்பதே உடன்போக்குதானே ! உற்றார் உறவினர்க்கு மறுப்போ வருத்தமோ ஏதுமில்லை. ஆனாலும் இந்த இரண்டு பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே தலைவன்-தலைவி புது வாழ்வு நோக்கிச் செல்வது குறியீட்டு இயலே (symbolism ) ! 'The Departure' ல் மனிதன் கற்பனையான மாய உலகிலிருந்து நிஜ வாழ்விற்கும், வெகுளித்தனத்திலிருந்து பக்குவத்திற்கும் (Innocence to Maturity) பயணப்படுவதைக் குறிப்பது; அப்பயணத்தில் இயற்கையை ரசிப்பது என்பது வாழ்வை ரசிப்பது. திருத்தாண்டகத்தில் பக்தனாகிய தலைவி இறை என்னும் தலைவனைச் சென்றடைவதைக் குறிப்பது.

டென்னிசனின் பொன்மொழிகளிலும் ஆங்காங்கே காதற் கனி ரசம் பருகக் கிடைப்பது :

"If I had a flower for every time I thought of you, I could walk in my garden forever"

பொருள் : உன்னை நினைக்கும் போதெல்லாம் என் தோட்டத்தில் ஒரு பூ மலரும் என்றால், (அவற்றைக் காண அல்லது பறிக்க) நான் தோட்டத்தில் நடந்து கொண்டே இருப்பேன்.

இத்தகைய ரசனையெல்லாம் நாம் மேற்கத்திய இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் கண்டவைதாமே என்று நினைக்கலாம். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகள் டென்னிசன் போன்றோர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழர் என்ற முறையில் சங்க காலத்திலேயே நாம் கண்டவை என்பது வேறு. காதலும் மற்றும் யாதொரு அழகியலும் காலம் காலமாய் மாறாதவையெனினும் காலத்திற்கேற்ப, சொல்பவரின் சொல் திறத்திற்கேற்ப புதுமையுடன் மிளிர்வதை ரசிப்பதுதானே நமக்கான பேறு !

முத்தாய்ப்பாக தலைப்பிற்கு முழுமையாகத் தொடர்பில்லாத, என் கவனத்தை ஈர்த்த ஒன்றைச் சொல்லி முடிக்க எண்ணம்.

டென்னிசனின் Becket என்னும் நாடகத்தின் அங்கம் lV, காட்சி l ல் (Act lV, Scene l) 'Love is the only Gold' என்ற வாசகம் வருகிறது. "இவ்வுலகில் அன்பு ஒன்றே பொன்னானது" என்பதே பொருள். காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும் என்பது போல, நான் மேற் சொன்ன வாசகத்தை 'Love is the only God' என்று முதலில் வாசித்து விட்டேன். அவர் அவ்வாறு சொல்ல வாய்ப்பில்லையே என்று கண நேரத்தில் சுதாரித்துக் கொண்டேன். அவரது 'Crossing the Bar' என்ற கவிதையை வாசித்திருந்ததால், இறையிலும் மரணத்தின் பின்னரான பெரு வாழ்விலும் நம்பிக்கை உள்ளவர் என்பது என் மனதில் பதிந்திருந்ததே எனது சுதாரிப்பிற்குக் காரணம். அக்கவிதையின் நிறைவுப் பகுதியைப் பேசி இக்கட்டுரையை நிறைவு செய்வது டென்னிசனின் இன்னொரு முகத்திற்கான அறிமுகமாக அமையலாம்.

"For tho' from out our bourne of Time and Place

      The flood may bear me far,

I hope to see my Pilot face to face

      When I have crost the bar"

கடற்கரையிலுள்ள நிலப்பரப்பிற்கும் துறைமுகத்திற்கும் இடையே உள்ள மலர்ப்பாங்கான இடமே Bar (Sand bar) என்று இக்கவிதையில் சுட்டப் பெறுகிறது. வாழ்வு எனும் நிலத்திலிருந்து மரணம் எனும் துறைமுகத்திற்குச் செல்வதே Crossing the Bar என்று உருவகிக்கப்படுகிறது. இனி மேற்குறித்த கவிதை வரிகளின் பொருள் காண்போம் :

"காலம், இடம் என்னும் எல்லைக்குட்பட்ட வாழ்வைக் கடந்து செல்லும்போது கடல் என்னைத் தொலைவாக இழுத்துச் செல்லும் (எனக்கு மரணப் பெருவாழ்வு கிட்டும்). (அதற்கு முன்) மணற்பரப்பைக் கடந்த பின் (கப்பலைச் செலுத்தும்) என் மாலுமியை (இறைவனை) நான் நேர்கொள்ளும் வாய்ப்பு அமையும் என நம்புகிறேன்".

இதுகாறும் டென்னிசனின் ஒரு பானைச் சோற்றில் நாம் கண்டது ஒரு சோறு பதம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.