Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இந்தியத்தழிழனின் இலங்கை தொடர்பான எழுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும்

இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது.

படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீட்டாது. சமாதானத்தை நோக்கிப் போக, விடுதலைப் புலிகளின் தன்மானமும் இடம் கொடுக்காது. கடந்த ஒவ்வொரு தடவையும் சமாதானத்தை நோக்கிச் சென்றபோது புலிகளின் கையே (மிகக் குறைவான அளவுக்கு) மேலோங்கி நின்றது. சிங்கள அரசும் ராணுவமும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது குழம்பிய நிலையில் இருந்தபோதே அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.

-*-

இரு தரப்பினருமே எதிரிகளின் தலைமையை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கி அழிப்பதில் மும்முரமாகவே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை அரசின் அமைச்சர்களை, முக்கியஸ்தர்களை தற்கொலைப் படை மூலம் அழித்துள்ளனர். பிரேமதாச, ரஞ்சன் விஜெரத்னே, லலித் அதுலத்முதலி, காமினி திஸ்ஸநாயகே, குணரத்னே, லக்ஷ்மண் கதிர்காமர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சந்திரிகா குமாரதுங்க மயிரிழையில் கொல்லப்பட்டிருந்திருப்பார்.

நேரடியான போரல்லாது தற்கொலைப் படையால் ஏவி அழிக்கப்பட்ட ராணுவ துணைத்தளபதி பரமி குலதுங்க. கொலையிலிருந்து தப்பியவர் தற்போது ராணுவத் தலைவராக இருக்கும் சரத் ஃபொன்சேகா.

அதேபோல இலங்கை ராணுவம் போரில் நேரடியாகக் கொல்லாமல் பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை நிச்சயமாகக் கொன்றிருக்கும். இதற்கான தகவல்கள் சீராகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த இலங்கை ராணுவம் முயன்றதில் பெற்ற வெற்றி கருணா.

இந்த நேரடி மற்றும் மறைமுகமான சண்டைகளில் எது நியாயம், எது அநியாயம் என்பது முற்றிலுமாக மறைந்துவிட்டது.

-*-

தமிழ்ச்செல்வன் கொலையை முதலில் கேள்விப்பட்டதும் எனக்கு இது அநியாயம் என்றுதான் தோன்றியது. போர்க்கோலம் பூணாத - குறைந்தபட்சம் இந்த நேரத்தில் போர்க்கோலம் பூணாத - ஒருவரை; பிற நாடுகளுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் ராஜதந்திரப் பிரமுகரை குறிப்பிட்டு, குறிவைத்து, விமானங்களை அனுப்பிக் கொலை செய்வது முறையா? அந்த வகையில் இலங்கை அரசு கட்டாயமாகக் கண்டிக்கப்படவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மிகவும் மோசமான சண்டைகளுக்கு ஊடாகவும் சில குறைந்தபட்ச நாகரிகங்களைக் கடைப்பிடிப்பது இரு தரப்பினருக்கும் தேவையானது. ராணுவ இலக்குகள் என்று அறியப்பட்ட இலக்குகளைத் தவிர்த்து, பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது அநாகரிகமானது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.

பல நேரங்களில் போர் நடக்கும் அதே நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். போர் நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சிங்களப் பகுதிகளிலும் சரி, தமிழ்ப் பகுதிகளிலும் சரி, சிவிலியன் நிர்வாகம் நடக்கிறது. அந்த நிர்வாகத்தின் அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்படுவது அநாகரிகமான செயல் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

-*-

தமிழர்களுக்கு இனியும் ஃபெடரல் கூட்டாட்சி முறை என்பது நடைமுறை அளவில் ஒத்துவராத விஷயம். சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை மட்டுமே எடுக்கக்கூடியது. ஆனால் மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும். தமிழக காங்கிரஸ் தனியான ஒரு கொள்கையை எடுக்கக் கூடியதல்ல. மத்திய காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

எனவே பிற கருத்துருவாக்கங்களை முன்வைக்காமல் தனித் தமிழீழம் என்ற நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய விடுதலைப் புலிகளும் தமிழகக் கட்சிகளும் முன்வரவேண்டும்.

இதற்கான சில வழிமுறைகள்:

1. விடுதலைப் புலிகள் offense அன்பதை விடுத்து defense என்ற நிலைக்கு மாறவேண்டும். இன்று சிங்கள அரசின் கையே ஓங்கியுள்ளது. 'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இலங்கை விமானப் படை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திகொண்டே இருக்கும்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்லி பேச்சுவார்த்தை மேசைக்குத் தயாராக வேண்டும். இதன்மூலமும் சர்வதேச அழுத்தம் மூலமும் தமிழர் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடைபெறாவண்ணம் செய்யவேண்டும்.

2. இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது. இது வருத்தம் தரத்தக்க வகையில் தனித் தமிழீழத்துக்கு எதிரானதாகவே இருக்கும். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் மத்திய அரசுக்கு கிலியூட்டக்கூடியவர்கள். தமிழகத்தைத் துண்டாக்கி, ‘அகண்ட தமிழ்நாடு' என்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்று அவர்களைக் காரணம் காட்டி மத்திய அரசை பயமுறுத்த சில திறமையான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் முன்வருவர்.

இதை மாற்றவேண்டுமானால் விடுதலைப் புலிகள் தங்களது ஆதரவை இந்திய மைய நீரோட்டக் கட்சிகளிடமிருந்து பெற வேண்டும். இதில் சில கட்சிகள் தமிழகத்துக்கு வெளியே உள்ள பிற மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். உதாரணத்துக்கு தெலுகு தேசம், ஜனதா தளம் (செகுலர் மற்றும் இதர சில்லறைகள்), பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியோருடன் புலிகள் தொடர்பு கொண்டு, தங்களது நிலையை விளக்கவேண்டும்.

3. பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகியோரோடு நேரடித் தொடர்பு தேவை. இந்தக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்குப் பரிந்து பேசினால்தான் இந்தியா ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்கும். இந்திய நேரடியாக யுத்த தளவாடங்களை அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு சீரிய விவாதம் வந்தால் அதுவே நல்லது. இலங்கையில் தமிழர்கள் நலன் என்பது தனித் தமிழீழத்தில்தான் சாத்தியமாகும் என்பது பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தால் அதை உலகம் கூர்ந்து கவனிக்கும்.

-*-

விடுதலைப் புலிகள் இனியும் தமது சொந்த முயற்சியால், படை பலத்தால் தனி ஈழத்தைப் பெறக்கூடும் என்று என்னால் நம்பமுடியவில்லை.

எவ்வளவு விரைவில் பிரபாகரனுக்கும் இந்த எண்ணம் தோன்றும் என்பதை வைத்தே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லமுடியும்.

Posted by Badri at 23:15

Labels: அண்டைநாடு, இலங்கை, ஈழம், விடுதலைப் புலிகள்

29 comments:

அருண்மொழி said...

இலங்கை பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாஜ்பாய் முதல் பெர்ணான்டஸ் வரை தமிழகத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர். So it will not be a problem for LTTE (or) Srilankan Tamils to approach them.

ஆனால் இந்த விஷயத்தில் பிரச்சனை கிளப்புவது Narayanan போன்ற அதிகாரிகள்தான். Everyone knows that RAW & Tigers do not get along. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பின்னே நின்று பெரும் பணி ஆற்றுவது அதிகாரிகள்தான். அவர்களின் நிலை மாறும் வரை இந்தியாவின் நிலை மாறாது.

-/சுடலை மாடன்/- said...

நல்லெண்ணத்துடனும், நிதானத்துடனும் எழுதப் பட்ட இடுகையாகவே தோன்றுகிறது. குறிப்பாக இந்திய அரசின் அணுகுறையை விமர்சிக்க இயலாத இந்தியர்களுக்கு இதுவே சரியான நிலைப்பாடாகவும் இருக்க முடியும். தமிழ்தேசிய ஆதரவு கட்சிகளல்லாத, குறிப்பாக பிற மாநில அரசியல்கட்சிகள் மூலமான தொடர்புகளைப் பெருக்கி இந்திய அரசியல் வட்டத்தில் தனித்தமீழத்திற்கான அவசியத்தை உணர்த்த ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

இந்திய இறையாண்மை, இந்திய நலன் போன்ற அடிப்படைகளை நானும் ஒரு இந்தியன் என்ற அளவில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், இந்திய அதிகார வர்க்கம் வேண்டுமென்றே தமிழர்களுக்கெதிராக (புலிகளுக்கெதிராக மட்டுமென்று என்னால் இதைக் குறுக்க முடியவில்லை) இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்து நடந்து வருகின்றது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவை இந்திய நலனுக்காகச் செய்யப் பட்டதாகக் கூடத் தெரியவில்லை. அதற்கான காரணங்களை இங்கு விளக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட ஒரு அதிகார வர்க்கம் இந்திய அரசை ஆட்டிப் படைக்கும் வரை இந்தியா முழுவதும் ஏகோபித்த ஆதரவில்லாமல் பலவீனப்பட்டு இருக்கும் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளாலும் எதுவும் உருப்படியாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.

அடுத்து, //இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது// என்ற உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. ஒருவேளை ஆவேசமாக அறிக்கை விடுவதை ஆதரவு என்று கருதுவீர்களானால், சரியென்று ஒத்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அதிகார வர்க்கம் பல மிரட்டல்களைச் செய்து கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து கொண்டு இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சுற்றிவர வாய்க்கும் பொழுது முன்பின் அறியாதவர்களிடமும், சகபயணிகளிடமும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக் காண்பித்துப் பேசுவதுண்டு. பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால் இந்தப் பிரச்னை பற்றி எதுவுமே தெரியாதவன் போல் கருத்துக் கேட்கும் பொழுது நான் அறிந்த உண்மை இது. குறிப்பாக கிராமங்களில் விடுதலைப்புலிகள் பற்றி பயங்கரவாதிகள் என்ற அபிப்ராயமே இல்லை. ஏன, தமிழில் வலைப்பதிவெழுதும் இளைஞர்களின் கருத்துக்களைப் படித்தாலே இந்த உண்மை தெரியும்.இதைப் பற்றிய கருத்துக் கணிப்பை ஏன் எந்தவொரு தமிழக அமைப்பும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அதற்குக் கூட சுதந்திரம் நம் நாட்டில் இல்லையோ என்னவோ. இலங்கையில் ஈழ மக்கள் மத்தியில் கூட புலிகளுக்கு ஆதரவில்லை என்று புளுகிக் கொண்டிருக்கும் இராமும், இராமசாமிகளும் இருக்கும் நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அரசியல் கட்சிகளை விட, வட இந்தியப் பத்திரிகையாளர்களை அணுகுவது ‘தெகெல்க்கா’ போல் இலங்கைக்குத் தனிப்பட்ட அளவில் சென்று வந்து அங்குள்ள நிலவரத்தை எழுதுவதற்குத் தூண்டலாம். அதன்மூலம் மற்ற மாநிலத்தவர் தமிழ் நாட்டு அரசியலைக் குழப்பிக் கொள்ளாமல் இருக்க உதவும்.

எதுவென்றாலும், ஈழப்பிரச்னையில் தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து நடந்து வரும் அதிகார வர்க்கமும், இராம்-இராமசாமிகளும் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், தமிழ் தேசியம் வளரவே செய்யும்.

அதுவும், மிதவாத அரசியல் கட்சிகளான தி.மு.க வலுவிழக்கும் பொழுது தீவிரவாதம் வளர்வதற்கு வழி வகுக்கும். இந்த விசயத்தில் இராம்-இராமசாமிகள் முட்டாள்களாகத்தான் நடந்து வருகின்றனர்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

பாரதிய நவீன இளவரசன் said...

//சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.//

வரவேற்கப்படவேண்டிய வரிகள்.

//இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.//

தமிழகத்தில் மட்டுமல்ல, நீங்கள் இதே பதிவில் கூறியதுபோல அகில இந்திய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயல வேண்டும். 'ஒருமித்த' கருத்து என்பது இயலாத ஒன்றாகப் போனாலும், தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் அளவில் விவாதங்கள் நடைபெறும்; ஈழத்தமிழர்படும் துயரம், இலங்கை அரசின் பாரபட்ச ஆட்சிமுறையினால் தமிழர் அடைந்த அவல நிலைகுறித்த செய்தியை உலகுக்குக் கொண்டுபோகும் கடமை இந்தியராகிய நமக்கும் உண்டல்லவா?

'இந்திய ஏகாதிபதியம்', 'சுரண்டும் இந்தியா' என்றெல்லாம் பேசும் சிங்கள இனவாதிகளை expose செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

மோகன்தாஸ் said...

--//சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.//

வரவேற்கப்படவேண்டிய வரிகள்.--

ரிப்பீட்டு

தமிழ் சசி / Tamil SASI said...

பத்ரி,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

இந்தியாவின் அரசியல்வாதிகளால் இந்தப் பிரச்சனையில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. உண்மையிலேயே இந்திய அரசியல்வாதிகளால் இந்தப் பிரச்சனையில் எதுவுமே செய்ய முடியாது என்பது தான் உண்மை. ஏனெனில் இந்திய வெளியுறவு, பாதுகாப்பு போன்ற விடயங்கள் பெரும்பாலும் ரா அதிகாரிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய பாதுகாப்பு செயலரான எம்.கே.நாராயணன் போன்றவர்களை மீறி இந்திய அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாது என்பது தான் எனது கருத்து.

எம்.கே.நாராயணன் மிகத்தீவிரமான புலிகளின் எதிர்ப்பாளர். கடந்த காலங்களில் எம்.கே.நாராயணன் நேரடியாகவே பிரபாகரன், பாலசிங்கம் போன்றவர்களுடன் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக பெங்களூரில் ராஜீவ்காந்தி பிரபாகரனை கிட்டதட்ட கைது செய்து ஜெயவர்த்தனேவுடன் கையெழுதுத்து போடு என நெருக்குதல் உள்ளாக்கிய சமயத்தில் IB அதிகாரியாக இருந்தவர் எம்.கே.நாராயணன். எம்.கே.நாராயணன், பாலசிங்கம், பிரபாகரன் இடையே பல சந்திப்புகள் இந்தியாவில் நடந்துள்ளது. தற்பொழுது பாதுகாப்பு/வெளியூறவு உயர்பதவியில் இருப்பவர்கள் எல்லாருமே விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக ஒரு காலத்தில் இருந்த ரா அதிகார்கள் தான்.

ராவின் செல்லக்குழந்தையாக இருந்து இன்று அவர்கள் எதிராகவே ஒரு பெரிய சக்தியாக விடுதலைப்புலிகள் விஸ்ரூபம் எடுத்துள்ள நிலையில் அவர்களுடைய அணுகுமுறை விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இருக்கும். "ராஜீவ்காந்தியின் படுகொலை மட்டுமே காரணம் அல்ல".

மற்றபடி சில தமிழ்தேசியவாதிகள் தமிழகத்தில் தனித்தமிழ்நாடு குறித்து பேசினாலும் அதனால் எந்தப் பலனும் விளையப்போவதில்லை என்பதை கூட அறியாத முட்டாள்கள் அல்ல இந்திய அதிகாரிகள்.

இந்திய வெளியூறவுத்துறையில் நியாயம் என்ற பேச்சிக்கே இடமில்லை என்பதை சமீபத்தில் மியான்மார் இராணுவ தலைவர்களுக்கு இந்தியா கொடி தூக்கிய பொழுதே தெளிவானது தான். இதனை கடந்த காலங்களில் கூட "Interstate Relations are not governed by the principles of Moral Phenemonen. They are and will remain an Amoral Phenemonen" என்று ஜெ.என்.தீக்ஷ்த் கூறியிருக்கிறார்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பது புலிகளின் முழுமையான இராணுவ வெற்றியால் நடக்க கூடிய வாய்ப்பு "இல்லை". ஆனால் தற்பொழுது மிக அதிக வட்டிக்கு 500மில்லியன் டாலர் கடன் உதவியை வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ளது. இலங்கையில் பொருளாதார நிலைகள் மீது புலிகள் தாக்குதல் தொடுக்கும் பொழுது தற்பொழுது 21% என்ற நிலையில் இருக்கும் அந் நாட்டின் பணவீக்கம் இன்னும் உயரும் பொழுது, இன்னும் அதிக அளவில் கடன் வாங்க வேண்டிய தேவை எழும் பொழுது தானாக பேச்சுவார்த்தை நோக்கி செல்லக்கூடிய சூழல் ஏற்படும். அதைத் தான் புலிகள் செய்ய முயற்சிப்பார்கள்.

prakash said...

//உண்மையிலேயே விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அதிகார வர்க்கம் பல மிரட்டல்களைச் செய்து

கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக

மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன்.//

சங்கரபாண்டி, உங்கள் அனுமானம் தவறு என்று தோன்றுகிறது. தமிழக மக்கள், விடுதலைப்புலிகளை, பயங்கரவாதிகளாக அல்ல, எதுவாகவுமே கருதுவதில்லை என்பது தான் என்னுடைய ஊகம். இந்த முடிவுக்கு வர சில காரணங்கள் இருக்கின்றன.

டிஸ்கி : இந்தப் பின்னூட்டம் புலிகள் மீதான விமர்சனம் அல்ல. புலிகளைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்ற என் தனிப்பட்ட அபிப்ராயம்.

1. ஈழப் போராட்டம் பற்றி பரவலாகத் தமிழக ஊடகங்களில் வரத்துவங்கியது 1983 க்குப் பிறகுதான். கலைஞர்

ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக கலைஞர் தன் பதவியைத் துறந்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான

வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளித்தன. பிரபாகரன் household name ஆனார். ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பதாக, பத்திரிக்கை கேள்வி பதில்களில் சிலாகிக்கப்பட்டார். கலைப்புலி பட நிறுவனம் தயாரித்த 'யார்' என்ற திரைப்படத்தில், இந்திய ராணுவ வீரன் பாத்திரம் ஏற்ற அர்ஜுனுக்கு ஜெகன் என்று பெயர் சூட்டப்பட்டது. 'என் அப்பா பேர் குட்டிமணி, தாத்தா பேரு தங்கதுரை' என்று வில்லன்களை விளாசுவதற்கு முன் அவர் வசனம் பேசிய போது, திரையரங்கம் அதிர்ந்தது. ராமச்சந்திர

ஆதித்தனின் தேவி வார இதழில், பிரபாகரன் பற்றிய வரலாற்றுத் தொடர் எழுதப்பட்டது. பல அபூர்வமான புகைப்படங்கள் தாங்கி வந்த அந்தத் தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. விதிவிலக்காக, அகடாமிக்

வருஷத்தின் நடுவிலே கூட, வினோதமாகத் தமிழ் பேசிய மாணவர்களை, மயிலையின் ப்ராமின் ஸ்கூல்களில் இணைத்து கொண்டார்கள் [அக்கா ஃப்ரான்ஸில், அண்ணன் ஆஸ்திரேலியாவில் என்று சொன்ன போது பொறாமையாகக் கூட இருந்தது.]. சிங்கள அரசின் கொடூரம் பற்றி வீட்டிலும், தெருமுக்குகளிலும்

பேசினார்கள். ஈழப் போராட்டம் பற்றி ப.நெடுமாறன் எழுதிய குறுநூல் என்னுடைய வீட்டிலேயே படிக்கக்

கிடைத்தது. சிங்கள அரசு, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ் மக்களை ஒழிக்கத் தலைப்படுகிறது. அதனால்,

தங்கள் இருப்புக்காக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்பதுதான் எல்லோருக்கும் கிடைத்த செய்தி.

இது எண்பதுகளின் இறுதி வரையிலான நிலைமை. ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக எல்டீடீஈ அமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, தமிழக ஊடகங்கள் - ஹிந்து, தினமலர், துக்ளக் வகையறா தவிர்த்து - வாயைத் திறக்கவேயில்லை. இதற்கு ராஜிவ் காந்தியின் கொலை மட்டுமே காரணமில்லை. ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் எல்லாம் பேசாது.

காரணம் எதுவாக இருந்தாலும், கடந்த பதினைந்து வருடங்களாக தமிழக மைய நீரோட்டப் பத்திரிக்கைகளில், செய்திகளாகவோ, வாசகர் கடிதமாகவோ, துணுக்குகளாகவோ, கேள்வி பதில்களிலோ, ஈழத்தமிழர் விவகாரம் குறித்து எந்தவிதமான அபிப்ராயங்களையும் காணவே முடியாது.

தமிழ்மணம் வழியாக சில வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வலைப்பதிவு எழுதாத, சுமாராக நாட்டு நடப்புத் தெரிந்த நண்பன் ஒருவன், " என்னடா தமிழ்ச்செல்வன் பத்தி நிறையப் பேர் எழுதிட்டு இருக்காங்க, அவர் என்ன அவ்ளோ பெரிய கையா? " என்று ஹிந்துவில் செய்தி வருவதற்கு முன்பாக என்னைக் கேட்டான். சில சுட்டிகள் கொடுத்தேன்.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்யாமல் விட்டிருந்தால், சிக்கல் பெருசாயிருக்காது, சுமுகமாக பிரச்சனையை தீர்த்திருக்கலாம் என்று பாமரத்தனமாக நம்புபவர்களில் நானும் ஒருவன். ஆனால், மையநீரோட்டப் பத்திரிக்கைகளில் கிடைக்காத தகவல்கள் இணையத்தில் கிடைத்த போது, எனக்கு ஆர்வமும் இருந்ததால், தேடிப்பிடித்து வாசித்து ஓரளவுக்குத் தெளிவு கிடைதது. இந்த வசதிகள் இல்லாமல், தொலைக்காட்சியின் சீரியல்களிலும், சிவாஜி படத்திலும், ரியாலிடி ஷோக்களிலும், நாற்பதாயிரம் ரூபாய் சம்பள வேலைக்குத் தயார்

செய்துகொள்வதிலும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு , ஈழப்போராட்டம் குறித்து

என்ன அபிப்ராயம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

'சதாம் ஹூசேனை தூக்கிலே போட்டாங்களாம் மச்சீ, கேள்விப்பட்டியா? "

'ஓ அப்படியா?... சரி'

'எல்டீடீஈ சுப.தமிழ்ச்செல்வனை போட்டுத் தள்ளிட்டாங்களாமே, தெரியுமா?'

' தமிழ்ச்செல்வனா? எல்டிடீயிலே பிரபாகரனுக்கு அடுத்தது பாலசிங்கம். அந்த ஆளும் போய்ட்டார்... இவர்

யாரு? அவரை விடப் பெரியவரா?'

இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அப்புறம் பார்த்துக்கலாம். ஆனால், பிரச்சனை இதுதான்னு முதலிலே கண்டுகொள்வதுதான், தீர்வு காண்பதற்கும் கற்பிதங்களில் இருந்து வெளியே வருவதற்கும் முதல் படி.

2. தமிழ் வலைப்பதிவுகளில் அனேகம் பேர், தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தியதால், விடுதலைப்புலிகளுக்கு, தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில், ஆதரவு இருக்கிறது என்று பொருள் வருமாறு

சொல்லி இருக்கிறீர்கள். இந்த கணிப்பும் தவறு என்று தான் தோன்றுகிறது. என்ன காரணத்துக்காக

மையநீரோட்ட ஊடகங்களில் ஈழப்பிரச்சனை பற்றிப் பேசப்படுவதில்லையோ, அதே சூழ்நிலைதான் தமிழ் வலைப்பதிவு உலகிலும் நிலவுகிறது. ஆட்சியின் பொருட்டும் கூட்டணிக் கட்சியின் சுமுக உறவுக்காகவும்,

கதறிக்கூட அழமுடியாமல், கவிதை எழுதி, அதற்கும், விளக்கம் சொல்லியாக வேண்டிய நிலைமைதான் கருணாநிதிக்கே.

தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் தவிர, எதிலும் கலக்காமல் இருக்கும்

பெருவாரியான பர்சனல் ப்ளாகர்கள் யாரும் - இந்த me too வலைப்பதிவாளர்கள் தவிர்த்து - வாயைத் இந்த விஷயத்தில் திறக்க யோசிப்பார்கள் என்பதுதான் நிலைமை.

புலிகளைக் குறித்த கேள்வி எழுப்பினாலே, அவர்களை, ஜேவிபியின் உறுப்பினர்கள் போலப் பார்ப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இல்லை 'பாமரத்தனமான இருக்கிறது, எலிக்குட்டி வெளியே வந்துடுச்சு' என்று கமண்ட்டுகள் தான் கிடைக்கிறது. நல்லதோ கெட்டதோ, பேசினால்தான், பேச விட்டால் தான் விவாதம் கிளம்பும், அது பரவும். குடுமிப்பிடி சண்டை நடக்கும். ஊடகங்களில் இருப்பவர்கள் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். கலந்து கொள்வார்கள். நியூஸ்சானலில் வரும். மக்கள் பார்வைக்குப் போகும். அபிப்ராயம் உருவாகும். சட்டமன்றத்தில் பேசுவார்கள். கனிமொழி மாதிரி ஆட்கள் மாநிலங்களவையின் உரை

நிகழ்த்துவார். தேசிய கவனம் பெறும் என்று நினைக்கிற பாமரன் நான். [ ஆர்ட்கோர் ஈழப்பதிவர்கள் வந்து

'முழுசா விஷயம் தெரிஞ்சுகிட்டு பேசு' என்று மென்னியைப் பிடிப்பதற்கு முன்னால், நானே என்னை பாமரன் சொல்லிக் கொள்கிறேன்.]. சண்டை சச்சரவு எல்லாம் ஓய்ந்து, தமிழர்கள், சுய அடையாளத்துடன் வாழ என்ன

வழி இருக்கிறதோ அதைச் செய்ய வேண்டும் என்பதுதான், ஓரளவுக்காவது ஈழ விவகாரம் தெரிந்த தமிழகத் தமிழர்களின் நிலை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட, பிரபாகரன் சரண் அடையவேண்டும் என்ற நிலை வந்தால், அதை ஆதரிப்பேன், அல்லது இலங்கையின் பிக் ஷாட்டுகளைப் போட்டுத் தள்ளி, பிரபாகரன் மூலமாகத்தான் விடுதலை கிடைக்கும் என்றால் அதையும் ஆதரிப்பேன்.

இறுதியிலே என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெரும்பான்மையான மெய்ன்லாண்டு மக்கள், ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கவலை கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஊடகங்கள் தான் சதி செய்கிறது என்கிற கணிப்பு தவறு. அப்படி மக்கள் அக்கறை கொண்டிருந்தார்களானால், அது, எந்த ரூபத்திலாவது - சிறுகதை, நாவல்,

குறும்படம், திரைப்படம், கட்டுரை, ஓவியம், தொலைக்காட்சிகளின் talk show, - என்று வெளியே வந்தே

தீரும். ' இந்தாளே அமுக்கி வாசிக்கிறார் ( கலைஞர் ), அப்ப ஏதோ மேட்டர் இருக்கு... நமக்குத்தான் கெரவம் புரிஞ்சு தொலைக்க மாட்டேங்குது' என்று நினைத்து ஒதுங்குபவர்கள் - உண்மை விவரம் கிடைக்காததால் - தான் அதிகம்.

ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்குமான இப்போதைய ஒரே தொடர்பு, சினிமா பாட்டு நிகழ்ச்சி

நடத்தும் அப்துல் அமீது பேசும் தமிழ் தான் என்று சொன்னால் கேட்க கொடுமையாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

பாமரத்தான் said...

//'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. //

உங்களின் இக் கருத்தினையொட்டி புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் கீழ் வருமாறு கூறுகிறார்.

சிங்கள தேசம் தமிழ்ச்செல்வனை வீழ்த்தியதற்கு பதில் என்னென்று கேட்கிறார்கள். அதற்கு சொல்லக்கூடியது ஒரு பதில் தான். ஒரு சில படையினரோ அல்லது ஓராயிரம் படையினரோ ஒரு சில அரசியல் தலைவர்களோ ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வனின் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு தமிழீழத்திதற்காக தமது உயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் கனவை ஈடுசெய்ய உழைப்பதே தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலை.

ஆயினும் புலிகள் ஒரு தாக்குதல் பதிலடியை கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதை எதிர்பார்க்கும் சாதாரண மக்களுக்காகவாவது..

மோகன்தாஸ் said...

//'பாமரத்தனமான இருக்கிறது, எலிக்குட்டி வெளியே வந்துடுச்சு' என்று கமண்ட்டுகள் தான் கிடைக்கிறது. நல்லதோ கெட்டதோ, பேசினால்தான், பேச விட்டால் தான் விவாதம் கிளம்பும், அது பரவும்.//

பிரகாஷ்,

சுஜாதாவைப் பத்தி விமர்சனம் ஒருத்தர் செய்றாங்கன்னு வையுங்களேன் நீங்க எப்ப அவர்கிட்ட பேசலாம்னா, அவருக்கு சுஜாதான்னா ஒரு பெண் கிடையாது ஆண்ங்கிற பேஸிக் மேட்டர் தெரிஞ்சாதானே!

இல்லை சுஜாதாங்கிறது ஏதோ பிராமண மாமின்னு நினைச்சிக்கிட்டு ஏன் அவங்க ப்ராமண மாமி இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு கேட்டா பாமரத்தனமா இருக்கிறது என்ற பதில் தான் உங்களிடம் இருந்தும் வரும்னு நினைக்கிறேன்.

அப்படியும் இல்லாமல் அவர் ஆண் என்று தெரிஞ்சும் இல்லை அவர் பெண் தான்னு சொல்றவங்க கிட்ட விவாதம் செய்யமுடியாது தல. வருத்தம் தான் படமுடியும்.

prakash said...

மோகன், நீங்க சொல்ற உதாரணம் தப்பு. சுஜாதா யார் என்கிற தகவல் இருநிலைத் தன்மை கொண்டது. சுஜாதா ஒரு பிராமண மாமி என்று தப்பாக நினைத்துக் கொண்டிருப்பவர்களை, சுஜாதா முன்னாலேயே கொண்டு போய் நிறுத்தினால், அசடு வழிந்து கொண்டே உண்மையைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால், புலிகள் செய்வது சரி அல்லது தவறு என்ற இரண்டு நிலைகளுக்குள்ளே அடங்கி விடுகிற விஷயமா? இரண்டிற்கும் நடுவிலே நின்று பேச வேண்டிய விஷயம் எதுவுமே இல்லையா? அவரவர்களுக்கு கிடைக்கிற தகவல்களின் படியும், தங்கள் கருத்தியல் படியும், எவர் குறித்தும் தங்களுக்குச் தோதான பிம்பத்தை கட்டமைத்துக் கொள்வது இயற்கைதான்.

மேலும் , நீங்க quote செய்திருப்பதை நான் ஒரு கேஷுவல் ரிமார்க் ஆகத்தான் சொன்னேன். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டாம். முக்கியமாகச் சொல்ல வந்தது, அந்தப் பின்னூட்டத்திலேயே இருக்கிறது.

-/சுடலை மாடன்/- said...

பிரகாஷ்,

நான் சந்தித்த மிகப்பல சாதாரண மக்களிடம் பேசியபோது வெளிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், “விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர்.” என்று மட்டும் கூறினேன். அவர்களெல்லாம் புலிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பப் போகிறார்கள் என்றோ அல்லது ஈழத்தமிழர்களுக்காக தெருவில் இறங்கி போராடப் போகிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தங்களைப் பாதிக்காத எந்தப் பிரச்னைக்காகவும் துரும்பைக் கூட நகர்த்தப் போவதில்லை அவர்கள்.

மேலும் என் அனுமானம் தவறாக இருக்கலாம் என்று நான் கருதுவதால் தான் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன். உங்களைப் போல இந்துப் பத்திரிகை மட்டுமே படிக்கும் கூட்டம் சொல்வதை திருப்பிச் சொல்லி இதுதான் தமிழ் நாட்டு மொத்த மக்களும் சொல்கிறார்கள் என்று சொல்ல வில்லை.

//தொலைக்காட்சியின் சீரியல்களிலும், சிவாஜி படத்திலும், ரியாலிடி ஷோக்களிலும், நாற்பதாயிரம் ரூபாய் சம்பள வேலைக்குத் தயார்

செய்துகொள்வதிலும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு , ஈழப்போராட்டம் குறித்து என்ன அபிப்ராயம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?// என்று சொல்லும் நீங்களே தமிழக மக்கள் மத்தியில் எந்த விவாதமும் இல்லை என்பதை புலிகளுக்கு எதிரான நிலைப்பாடாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

மேலும் நீங்களே சொல்கிறீர்கள், //ஹிந்து, தினமலர், துக்ளக் வகையறா தவிர்த்து// வேறு எந்தப் பத்திரிகையும் எதுவும் எழுதுவதில்லை என்று. புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களைப் பரப்பும் பத்திரிகைகள் மட்டுமே மைய நிரோட்டத்தில் இயங்குகின்றன என்பதையும் கூட ஒட்டு மொத்த தமிழக மக்களின் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடாகப் புரிந்து கொள்கிறீர்கள். புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவான குரல்கள் (அவை முதலமைச்சரே ஆனாலும்) எப்படியெல்லாம் ஒடுக்கப் படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒடுக்குமுறைக்கு பார்ப்பனியப் பத்திரிகைகளும், அதிகார வர்க்கமும் பின்னால் இருப்பதை உங்களால் புரிந்து கொண்டாலும் ஒப்புக் கொள்ள முடியாதுதான்.

இப்படிப்பட்ட ஒடுக்குமுறைக்கு உதவியாக இருந்த இராஜீவின் கொலையை புலிகள் செய்ததன் மூலம் தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்களுக்குப் பெரும் தவறிழைத்து விட்டனர் என்பதில் எனக்கு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை (இராஜீவ் அரசின் இராணுவம் ஈழத்தமிழர்களின் மேல் நடத்திய வன்முறைக்குப் பதிலடியாக அது செய்யப் பட்டாலும் கூட). பார்ப்பனிய அடக்குமுறையிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் எத்தனைத் தொல்லைகளை இன்னமும் தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் அனுபவித்து வருகின்றனர். இங்கு வைக்கோவையோ, நெடுமாறனையோ நினைத்துச் சொல்லவில்லை. எந்தவித அமைப்பு/பண பலமும் இல்லாத எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியிருக்கிற

Edited by kural

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி kural .மேற்கூறிய கருத்துக்களை (பல)இயக்குனர் சீமான் அவர்களும்,கனடாவில் வாழும் தமிழ் நாட்டு சகோதரர்களும் கனேடிய வானொலி பேட்டியில் கூறி இருந்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.