Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழன் வளம் பெறுவதே - தமிழ் வளர வழியாகும்-உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பழ. நெடுமாறன் தலைமையுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழன் வளம் பெறுவதே - தமிழ் வளர வழியாகும்"

உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பழ. நெடுமாறன் தலைமையுரை

இந்த ஆண்டு மாநாட்டினை எந்தத் தலைப்பை மையமாக வைத்து நடத்துவது என்று நாங்கள் யோசித்த போது இன்றைக்கு தமிழர்களின் தொழில் வணிக வளர்ச்சியை மையமாக வைத்து நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அரசியலும் பொருளாதாரமும் இணை பிரியாதவை-பிரிக்க முடியாதவை . எந்த ஒரு இனம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறதோ அந்த இனத்தின் மொழிக்கு ஒரு மரியாதை நிச்சயமாக ஏற்படும். இன்றைக்கு ஆங்கிலம் உலகம் பூராவும் செல்வாக்கு செலுத்துகிறது என்று சொன்னால் அதற்கு முதன்மையான காரணம் - பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பல நாடுகளை அடக்கி ஆண்டது, அங்கெல்லாம் ஆங்கிலத்தை அவர்கள் கட்டாயமாக்கினார்கள் என்பது ஒன்று. ஆனால் இன்றைக்கும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆசுதிரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளம் நிறைந்த நாடுகளாக இருக்கின்ற காரணத் தினால் அவர்கள் பேசுகிற அந்த ஆங்கில மொழிக்கு உலகம் பூராவும் ஒரு மதிப்பு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது.

எந்த மொழி உலக நாடுகளிலே தொழில் வணிகத்திலே சிறந்து விளங்குகிறதோ அந்த மொழிக்கும் அந்த மொழி பேசுகிற மக்களுக்கும் உலகத்திலே தனியான மதிப்பு உருவாகிறது என்பதை மறுக்க முடியாது. சின்னஞ்சிறிய சப்பானிய நாடு - இன்றைக்கு அமெரிக்காவையே மிஞ்சும் அளவுக்கு பொருளா தாரத்திலே அவர்கள் வளர்ந்திருக ¢கிறார்கள் என்று சொன்னால் அதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அதன் காரணமாகச் சப்பானிய மொழிக்கு உலகத்திலே தனி மரியாதை இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டிலே உள்ள இளைஞர்களும் இளம் பெண்களும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் சப்பானுக்குச் சென்று அங்கு கணினி அல்லது மின்னணுவியல் - இந்தத் துறைகளிலே அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டுமானால் சப்பானிய மொழியைக் கற்றுத் தான் ஆகவேண்டு மென்று அவர்கள் வற்புறுத்து கிறார்கள். ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு சப்பானில் எதுவும் செய்ய முடியாது. என்னுடைய மகள் கூட அங்கே போய் ஒரு ஆறு மாத காலம் அங்கு வேலைக்குச் சென்ற போது ஆறு மாத காலத்தில் சப்பானிய மொழியைக் கற்றுத் தேர்ந்து தான் அதற்குப் பிறகு தான் சப்பானில் வேலை பார்க்க முடிந்தது. ஆங்கிலம் தெரிந்து அங்கு பயன் இல்லை. காரணம் இன்றைக்கு சப்பான் உலகத்திலே தொழில் வணிகத்திலே சிறந்து விளங்குகிறது. அதற்குக் காரணம் அவர்களுடைய உழைப்பு, அவர்களுடைய அறிவியல் முன்னேற்றம். அதன் காரணமாக அவர்கள் மொழிக்கு ஒரு மரியாதை வந்திருக்கிறது. நாம் தொழில் ரீதியிலே வணிக ரீதியிலே ஒட்டு மொத்தமாகப் பொருளாதார ரீதியில் வளம் பெற வேண்டும். வளம் பெற்றால் நம் மொழிக்கு ஒரு மரி யாதை வரும். ஏறத்தாழ நம்முடைய தமிழர்கள் சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே உலக நாடுகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந் தார்கள். உரோமாபுரிக்கும் கிரேக்கத் திற்கும் எகிப்திற்கும் சீனத்திற்கும் நம்முடைய தமிழ் வணிகர்கள் சென்று வணிகம் செய்திருக்கிறார்கள். வரலாற்று ரீதியான சான்றுகள் இங்கேயும் உண்டு. அந்த நாடுகளிலும் உண்டு.

தமிழ்நாட்டு அகழ்வாராய்ச்சி யிலே உரோமாபுரி நாணயங்கள், கிரேக்க நாணயங்கள், சீன நாண யங்கள் எல்லாம் அகழ்ந்து எடுக்கப ¢பட்டிருக்கின்றன. அது எல்லாம் எதைக் காட்டுகிறது? நம்முடைய தமிழ் வணிகர்கள் இந்த நாடுகளுக்கெல்லாம் சென்றார்கள். வணிகம் செய்தார்கள். பெரும் பொருள் ஈட்டினார்கள். உரோமாபுரி நாட்டு அறிஞர் பிளினி குறிப்பிடும் போது சொல்கிறான். நம் நாட்டு சீமாட்டிகளெல்லாம் தமிழ்நாட்டி லிருந்து முத்து, மணிக்கற்கள் மற்றும் துணிகள் போன்றவற்றை எல்லாம் விரும்பி வரவழைத்து வாங்கி அணிகிறார்கள். அதன் காரணமாக நம் நாட்டிலிருந்து கப்பல் கப்பலாகத் தங்கம் தமிழ்நாட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று அவன் வயிறெரிந்து எழுதக் கூடிய அளவுக்கு அன்றைக்கு தமிழன் வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறான். உலகம் பூராவும் இப்படி வணிகம் செய்த தமிழன் எந்த மொழியில் அந்த வணிகத்தைச் செய்திருப்பான்?

அவன் என்ன ரோமாபுரிக்குப் போகும் போது உரோம் நாட்டு மொழியைக் கற்றுக் கொண்டு போனானா? கிரேக்க நாட்டுக்குப் போகும் போது கிரேக்க மொழியைக் கற்றுக் கொண்டு போனானா? சீனத்துக்குப் போகும் போகும்போது சீன மொழியைக் கற்றுக் கொண்டு போயா வியாபாரம் செய்தான்? அன்று தமிழ் வணிகர்கள் தமிழ் மொழி ஒன்றின் உதவி கொண்டே உலகம பூராவும் வணிகம் செய்திருக்கிறார்கள். அதைப் போலத் தமிழ்நாட்டுக்கு வந்த சீன வணி கர்களும் மற்றவர்களும் கூட இங்கே வந்து தமிழ் மொழியில் அவர்கள் பேசித் தான் வணிகம் செய்திருக்கிறார்கள். அறிஞர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆகவே நம்முடைய மொழிக்கு உரிய மதிப்பு வரவேண்டும் என்று சொன்னால் நாம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். இன்று காலையில் நடைபெற்ற "திரு வளர் திருப்பூர்" கருத்தரங்கிலே இந்த நகரத்தைச் சேர்ந்த முக்கியமான தொழிலதிபர்கள் எல்லாம் வந்து பேசினார்கள். அவர்கள் தங்கள் நகரத்தைப் பற்றி திருப்பூரின் பெருமையைப் பற்றிச் சொன்னார்கள். இந்த திருப்பூரிலே தொழில் வணிகம்் சிறந்து விளங்குகிற காரணத்தினாலே ஆண்டுக்கு பதினோராயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறோம் என்று சொன்னார்கள். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியிலே இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நாங்கள் நிச்சயமாக அன்னியச் செலாவணி ஈட்டித் தருவோம் என்று அவர்கள் செம்மாந்து சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. நான் எண்ணிப் பார்க்கிறேன். இந்த திருப்பூர நகரம் மிக எளிய கைத்தறி நெசவாளர்கள் வாழ்ந்த நகரம். தியாக சீலனனான திருப்பூர் குமரன் ஒரு கைத்தறி நெசவாளி. அப்படி இருந்த ஒரு நகரம் இன்று உலக அரங்கிலே இடம் பெறக் கூடிய அளவிற்கு மட்டுமல்ல இந்த நகரத்தின் ஏற்றுமதி என்பது உலக நாடுகளுக்கெல்லாம் செல்கிறது என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு தமிழர்களுக்குப் பெருமை அளிக்கக் கூடிய ஒன்று. என்னுடைய நண்பர் அகில் இரத்தினசாமி இங்கே பேசும்போது குறிப்பிட்டார். எனக்கு மிகப் பெருமிதமாக இருந்தது. ஒரு திருப்பூர் மட்டும் போதாது தமிழ் நாட்டிற்கு. ஒவ்வொரு மாவட்டத் துக்கும் ஒரு திருப்பூர் இரண்டு திருப்பூர் உருவாக வேண்டும் இதன்மூலம் தமிழர்களின் தொழில்வளம் செழிக்க வேண்டும் என்று சொன்னார்.

பொதுவாகத் தொழிலில் இருப்பவர்கள் போட்டாபோட்டியில் இருக்கும்போது இன்னொருவர் அந்தத் தொழிலில் முன்னேறுவதையே விரும்பமாட்டார்கள். ஆனால் அவர் என்ன சொன்னார்? நாங்கள் மட்டும் முன்னேறிப் பிரயோசனமில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நகரம் திருப்பூராக மாற வேண்டும் . எங்களைப் போல் மற்ற தமிழர்களும் இந்தத் தொழில் துறையிலே முன்னேற வேண்டும் என்று அவர் சொன்னார். உலகத் தமிழர் பேரமைப்பின் பதாகையிலே பொறித்திருக்கிறோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று. அந்த வார்த்தைக்கு ஒப்ப அவர் இங்கே சொன்னார்கள். அந்த வகையிலே நம்முடைய தொழில் வளம் சிறக்க வேண்டும் என்பதைப் பற்றி அந்த கருத்தரங்கிலே நல்ல கருத்துகள் சொல்லப்பட்டன என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் நண்பர் வெள்ளையன் அவர்கள் இங்கே பேசும்போது ஆழமான கருத்துகளை இங்கே முன்வைத்தார். இங்கே தமிழ்நாட்டு சுதேசித் தொழில்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று சொன்னார். எப்படி எல்லாம் சுதேசித் தொழில் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கே முந்திய கருத்தரங்கிலே பேசிய மற்ற நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். சுதேசித் தொழிலுக்குப் பாதுகாப்பு என்பது அரசிடமிருந்து வரவேண்டும். அதை விட முக்கியமாக மக்களிடமிருந்து வரவேண்டும். நம்முடைய நாட்டில் அதிலும் குறிப்பாக நம்மவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டும் அன்னிய பொருட்களை வாங்கக் கூடாது ஆதரிக்கக் கூடாது என்ற உறுதியை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் மக்களும் எடுத்துக் கொள்வார்களோயானால் இன்றைக்கு தமிழ்நாட்டில் நம்முடைய பல தொழில்கள் அழிந்து போயிருக்காது. நம்முடைய குளிர்பானத் தொழில் காளி மார்க் போன்ற நம்மவர் தொழில் எப்படியெல்லாம் அழிந்தது இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது என்று சொன்னார்.

அமெரிக்காவிலிருந்து வந்து கொகோகோலா மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் வந்தபோது அதன் காரணமாக எப்படி தமிழ்நாட்டுத் தொழில்கள் நசிந்தன என்று அவர் வேதனையோடு சொன்னார்். அவர்கள் சொன்னது போல உலகமயமாக்கல் என்ற கொள்கையை நாம் ஏற்றுக் கொண்ட போதே அடிமைச் சாசனத்தில் நாம் கையெழுத்து போட்டோம். பதினெட்டாம் நூற்றாண்டிலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஐரோப்பிய நாட்டு அரசுகள், ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் படையெடுத்து அல்லது வணிகத்திற்குச் சென்று அவர்களை அடிமைப்படுத்தி அந்த நாடுகளை எல்லாம் தங்கள் காலனி நாடுகளாக ஆக்கிக் கொண்டு அவர்கள் சுரண்டிக் கொழுத்தார்கள். இந்தியாவில் வெள்ளைக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், போர்த்துகீசி யர்கள், டச்சுக்காரர்கள் பல்வேறு பகுதிகளை அடக்கி ஆண்டார்கள். அந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளை வெளியேற்றுவதற்காக, நாம் விடுதலை பெறுவதற்காக எப்பேற்பட்ட விலையெல்லாம் கொடுக்க நேர்ந்தது. திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை நாம் இழந்தோம். எத்தனை பேர் சிறைகளிலே அடைக்கப்பட்டார்கள். எத்தனை பேர் கொடுமைகளுக்கு ஆளானார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து பகத்சிங் வரை எத்தனை பேர் தூக்குக் கயிற்றிலே ஊசலாடினார்கள். அப்படியெல்லாம் செய்து தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நாம் இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்க முடிந்தது. ஆனால் உலகமயமாக்கல் என்ற பெயரிலே அதே அன்னிய ஏகாதிபத்தியங்கள், இங்கே பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரிலே இப்போது சுரண்டுகிறார்கள். என்ன வேறுபாடு இரண்டுக்கும்? அன்றைக்கு கிழக்கிந்திய கம்பெனி என்ற பேரிலே நுழைந்தவன் பின்னாலே அரசையே அமைக்கக் கூடிய அளவுக்குப் போனான். அதற்கும் இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு வாயில் கதவைத் திறந்து விட்டிருக்கிறோமே அதனாலே என்ன விளைவாகும்? நம்முடைய சுதேசித் தொழில்களெல்லாம் அழிந்து நசிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் என்பதிலே எந்த சந்தேகமும் இல்லை.

சுதேசித் தொழில்கள் இப்படி அழியுமானால் நம்முடைய பொருளாதாரம் என்ன ஆகும்? தாழ்ந்து போகும். எல்லாவற்றிற்கும் மற்றவர்களுக்கு அடிமையாக அவர்களை நாம் எதிர்பார்க்கும் நிலை வரும். இங்கே தம்பி இரவிக்குமார் பேசும்போது சொன்னாரே -மார்வாடிகளும் குசராத்திகளும் இங்கே எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அவர்கள் பிடியிலே திருப்பூர் நகரம் மட்டுமல்ல சிவகாசி நகரம் மட்டுமல்ல இன்றைக்கு தமிழகத்தின் முக்கியமான தொழில்கள் வணிகம் எல்லாம் அவர்கள் பிடியிலே சிக்கியிருக்கிறது. அவர்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய அளவிற்கு இங்கே ஆதிக்க சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மேலாக இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் தமிழர்களின் நிலை என்ன? இந்த தமிழ்நாட்டு வணிகர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள் நிலை என்ன? விவசாயத்தைக் கூட அவர்கள் விட்டு வைக்கத் தயாராக இல்லை. மரபணு விதை என்ற பெயரிலே இங்கே அவர்கள் விதையை இறக்குமதி செய்கிறார்கள். பின்னாலே விதைக்குக் கூட நாம் அவர்களை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலையிலே ஆளாக்குகிறார்கள் நம்மை. நம்முடைய இந்தத் தமிழ் மண்ணின் சுற்றுப்புற சூழலை அவர்கள் மாசுபடுத்துகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் எந்தெந்தத் தொழில்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றனவோ அந்தத் தொழில்களை தமிழ்நாட்டில் ஆரம்பிக்கிறார்கள். மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் செருப்புகள் உற்பத்தி செய்யும் இத்தாலிய தொழிற்சாலை தொடங்கப ¢படும் என்று அறிவிக்கப்படுகிறது. அதைத் தமிழக அரசு வரவேற்று அதற்கு வேண்டிய இடம், மின்சாரம், தண்ணீர் வசதி எல்லாம் கொடுப்பதாக உறுதி தருகிறது. தோல் பதனிடும் தொழிலின் விளைவாக ஆம்பூரும் வாணியம்பாடியும் தமிழகத்தில் எப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதன் சுற்றுவாரத்தில் இருக்கிற விவசாய நிலங்கள் எல்லாம் எப்படி பாழ்பட்டுப் போயிருக்கின்றன? அங்கே வாழுகின்ற மக்கள் எல்லாம் எப்படி தோல் சம்பந்தமான நோய் களுக்கு ஆளாகி அழிந்து கொண்டிருக் கிறார்கள். இதையெல்லாம் பார்த்த பின்னாலும் இத்தாலிக்காரனை செருப்பு தைக்க இங்கே அழைத்து வரலாமா என்ன? (கரவொலி) ஏன் நம் நாட்டில் செய்ய மாட்டார்களா? இத்தாலிக்காரன் வந்து தான் செருப்பு தைத்து நமக்கு விற்க வேண்டுமா? காரணம் இந்தத் தொழிலை இத்தாலியில் ஆரம்பிக்க அவன் விரும்பவில்லை. இத்தாலி மண் மாசு படுவதை, சுற்றுப்புற சூழல் கெடுவதை அவன் விரும்பவில்லை அந்த மக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவதை அவன் விரும்பவில்லை. இந்தியாவிலே அதைச் செய்ய வேண்டுமென்று வருகிறான். இவர்களும் இங்கே மூவாயிரம் கோடி ரூபாயிலே தொழில் வருகிறது. அதற்கேற்ப நமக்கு கணிசமாகக் கமிசன் கிடைத்தால் போதும் என்று உள்ளே விட்டார்கள்.(கரவொலி) வேறு என்ன அர்த்தம் அதற்கு? யோசித்துப் பார்த்தார்களா? எதையும் யோசிக்க வில்லை. ஐரோப்பிய நாடுகளில் எந்தெந்தத் தொழில்களை அந்த அரசுகள் அனுமதிக்க மறுக்கிறதோ அந்தத் தொழில்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து போடுகிறார்கள். ஆயிரம் கோடி, ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடியிலே தொழில் ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொன்னால் வாயைப் பிளக்கிறார்கள். இந்தப் போக்குக்கெல்லாம் நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேணடும். வெறுமனே தமிழ் தமிழ் என்று சொல்வதாலோ தமிழ் வாழ்க என்று நாம் முழக்கமிடுவதாலேயோ மட்டும் நாம் தமிழையும் தமிழர்களையும் பாதுகாத்திட முடியாது. தொழில் துறையிலே, வணிகத் துறையிலே, வேளாண்மைத் துறையிலே காலம் காலமாக நாம் ஈடுபட்டு அதிலே அளப்பறிய சாதனைகளை நாம் செய்திருக்கிறோம்.

வேளாண்மைத் துறையிலே நாம் நெல் உற்பத்தி செய்கிறோம். தென்கிழக்கு ஆசியா பூராவிலும் பர்மாவாக இருந்தாலும், மலேசியாவாக இருந்தாலும், இந்தோனேசியாவாக இருந்தாலும் பிலிப்பைன்சு வரை இருக்கக் கூடிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் அத்தனையிலும் நெல் சாகுபடியைக் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். வரலாறு இதற்குச் சான்றாக என்றைக்கும் இருக்கும். இப்படியெல்லாம் வாழ்ந்த நம் நாட்டு விவசாயிகளுக்கு அமெரிக்காகாரன் மரபணு விதை கொடுக்கிறான். அமெரிக்காகாரன் நமக்கு இரசாயன உரத்தைக் கொடுக்கிறான். அன்னிய நாட்டுக்காரன் அளிப்பதை நம்பித் தான் நமது விவசாயத்தை நடத்த வேண்டுமா என்ன? இயற்கை வளத்தை நம்பி நம்முடைய வேளாண்மையிலே எவ்வளவோ சாதித்து இருக்கிறார்கள் நம்முடைய விவசாயிகள். ஆனால் இன்று இராசாயன உரத்தை வாங்கிப் நிலத்திற்குப் போட்டு போட்டு நிலமெல்லாம் நஞ்சாகிவிட்டது. நம்முடைய நிலத்தின் வளம் என்பது குன்றி விட்டது. இன்று சகல துறைகளிலும் அன்னிய ஆதிக்கத்தின் ஊடுருவலை தொழிலாக இருந்தாலும் வணிகமாக இருந்தாலும் வேளாண்மையாக இருந்தாலும் அல்லது தமிழகத்தின் மண்ணை - நீரை மாசுபடுத்துகிற ஒன்றாக இருந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும். அந்த உணர்வை நம்முடைய மக்களுக்கு ஊட்டுவதற்காகத் தான் இன்று இந்த தமிழர் தொழில்-வணிக மாநாடு. அதைத் தான் நான் மீண்டும் மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

வெள்ளையன் அவர்கள் பேசும்போது இன்னொன்றையும் சொன்னார்கள். நமது பண்பாட்டைச் சீரழிக்கும் அபாயத்தைத் தடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். ரொம்ப நியாயமான ஒன்று. இன்று தொலைக்காட்சி மூலம் ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் இந்தப் பண் பாட்டுச் சீரழிவு என்பது வேகமாகப் பரப்பப்படுகிறது. திட்டமிட்டு பரப்பப்படுகிறது. விளம்பர யுகம் என்ற பெயராலே இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ,அந்நிய நிறுவனங்கள், மார்வாடி குசராத்தி நிறுவனங்கள் இங்கே அவர்கள் விளம்பரத்தின் மூலமே நம்முடைய மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்பாவி மக்களும் விளம்பரங்களைக் கண்டு மயங்கிப் போய் அந்தப் பொருட்களை வாங்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். காசை வீணாகச் செலவு செய் கிறார்கள். அன்னிய நாட்டு நிறுவனங்கள் இங்கே விளம்பரங்கள் செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்று வெள்ளை யன் அவர்கள் சொன்னதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். (கைதட்டல்). கட்டுப்பாடு மட்டும் போதுமென்று நான் நினைக்கவில்லை. அந்த விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகளானாலும் தொலைக்காட்சிகளானாலும் அந்த தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் நாம் புறக் கணிப்போம் என்ற நிலை தமிழர்கள் மத்தியிலே வரவேண்டும், இயற்கை யாக வரவேண்டும்.

ஒரு பொருளை நாம் வாங்குகிறோம் என்று சொன்னால் குறிப்பாக நம்முடைய தாய்மார்கள் சாதாரண கத்திரிக்காய் வாங்குவது என்றால் கூட அது சொத்தையா என்பதையெல்லாம் பார்த்து வாங்குவார்கள். நாம் படிக்கிற பத்திரிகைகள், நாம் பார்க்கிற தொலைக்காட்சிகள் எது நல்லது என்று நாம் பார்க்க வேண்டாமா? ஏதாவது என்றாலும் அதைப் போட்டு பார்ப்பது என்றால் நமது குழந்தைகள் எப்படியெல்லாம் சீரழிகிறார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இந்தப் போக்குக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே மக்களுக்கு உலகத். தமிழர்கள் பேரமைப்பு இதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பாக மாறவேண்டுமென்று வெள்ளையன் அவர்கள் அவரது ஆசையை வெளியிட்டார்கள். பிரான்சு நாட்டில் பிரஞ்சு மொழிக்காக பிரஞ்சு அகாதமி அமைத்திருக்கிறார்கள். அந்த நாட்டில் பிரஞ்சு மொழி சம்பந்தமாக எந்த முடிவானாலும் பிரஞ்சு அகாதமி எடுக்கும் முடிவு தான் இறுதியானது. உச்சநீதிமன்றம் மாதிரி. ஆங்கிலத்திலே அந்த நாட்டில் வெளிவரக்கூடிய முக்கியமான பத்திரிகைகளில் ஒன்றில் பதினாறு பக்கம் கொண்ட ஒரு நாளிதழில் மூன்று நான்கு ஆங்கில வார்த்தைகள் வந்து விட்டன என்பதற்காக பிரஞ்சு அகாதமி சார்பாக அந்த பத்திரிகை காரர்களை வரவழைத்து எப்படி நாலு ஆங்கில வார்த்தை இதிலே வந்தது? யார் பொறுப்பு? முதற் தடவை எச்சரிக்கிறாம். இன்னொரு முறை இப்படி வருமானால் - பிரஞ்சு மொழியை நீங்கள் சிதைப்பீர்களே யானால் பிற மொழிக் கலப்பை ஏற்படுத்துவீர்களேயானால் உங்கள் பத்திரிகை வெளியிடுவதைத் தடை செய்வோம் என்று சொன்னார்கள். அந்த அதிகாரம் பிரஞ்சு அகாதமிக்கு இருக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் வானளாவிய அதிகாரம் தேவையில்லை. ஐயா நாங்கள் இதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்கு உரிமை கொடுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். மக்களிடம் சனநாயக ரீதியில் பிரசாரம் செய்ய உரிமை கேட்கிறோம். ஆனால் உனக்குப் பேசத் தடை மாநாட்டுக்குத் தடை என்று தான் இங்கே சொல்கிறார்கள். இந்த போக்குகள் எல்லாம் மாற வேண்டும்.

நண்பர் அழகிரிசாமி அவர்கள் பேசும்போது யாழ்ப்பாண மக்களுக்கு பட்டினியாலே அங்கே மடிந்து கொண்டிருக்கக் கூடிய மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்புவதற்குக் கூட முடியாத நிலைமையில் நாம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். நம்முடைய சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் பாடல் ஒன்றில் என்னென்ன பொருட்கள் பூம்புகார் துறைமுகத்திலே வந்து இறங்கின என்பதைப் பற்றி அந்த பாடல் சொல்கிறது. அதாவது கங்கை வாரியும் காவிரிப்பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் என்று அந்த வரிகள் சொல்கின்றன. ஈழத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து இறக்குமதி ஆன பொருட்களில் உணவுப் பொருட்களும் இருந்தன என்பது தான் அந்த பாடலின் பொருள். நமக்கே உணவு அளித்தவர்கள் இன்று உணவில்லாமல் பட்டினியால் செத்துக் கொண்டிருக் கிறார்கள். நாம் அவர்களுக்கு உணவு அனுப்ப முடியவில்லை மனமிருந் தாலும் முடியவில்லை. இப்பிரச்சனை சம்பந்தமாக நான் விரிவாக இங்கே பேசுவதற்கு நேரமில்லை. ஆனாலும் எத்தனை முட்டுக்கட்டைகள் யார் போட்டாலும் எந்த உருவத்தில் அந்த முட்டுக்கட்டைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி அந்த உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் நிச்சயமாக யாழ்ப்பாணத்து மக்களுக்கு அனுப்பி வைப்போம் என்பதில் சந்தேகமில்லை.(கைதட்டல்). அது நமது கடமை. நமது சகோதர மக்கள் அங்கே பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. மனிதநேயம் அற்றவர்கள் வேண்டுமானால் அப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். மனிதநேய உணர்வு படைத்த ஒவ்வொரு தமிழனும் இந்தப் பிரச்சனையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் உணரவில்லை உணர மறுக்கிறார்கள் உணர்ந்தாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். இதை ஒரு மனிதநேயப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும். மனித நேயப் பிரச்சனையாகப் பார்க்க மறுத்து அரசியல் பிரச்சனையாகப் பார்ப்பீர்களேயானால் உங்களது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு ஒரு கரும்புள்ளியை நீங்கள் குத்திக் கொள்வீர்கள் என்று தான் நான் சொல்ல வேண்டும். (கைதட்டல்).

தமிழீழ விடுதலைப் போர் என்பது எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்று பார்க்க வேண்டும். உலகத்திலேயே விமானப்படையை அமைத்த முதல் தமிழன் பிரபாகரன் தான். (கைதட்டல்) உலகத்திலேயே. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நமது வரலாற்றில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனோ அல்லது கரிகால் பெருவளத்தானோ பின்னாலே தோன்றிய இராசராசனோ இராசேந்திரனோ அல்லது மற்றவர்களோ யாரும் வான்படை அமைத்ததே இல்லை. ஒரு தமிழன் வான் படை அமைத்து அதுவும் சிங்களனுக்கு அமெரிக்காகாரனும் சீனாகாரனும் பிரிட்டிஷ்காரனும் டில்லிக்காரனும் விமானங்களைக்் கொடுத்து உதவுகிறார்களே தவிர - எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் யாருடைய தயவும் இல்லாமல் வான்படையை உலகத்திலே முதன்முதலாக உலகத்தில் ஒரு தமிழன் அமைத்திருக்கும் போது அதிலே நாம் எவ்வாறு பெருமித உணர்வு பட வேண்டும் .ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக இல்லாத ஒன்று - ஒரு மகத்தான சாதனை ஒன்று நிகழ்த்தப் பட்டிருக்கிறது. அனுராதபுரம் விமானதளத்தை கரும்புலிகளும் வான்புலிகளும் இணைந்து தாக்கியதன் விளைவாக 25 விமானங்கள் 2000கோடி ரூபாய் பெருமான விமானங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதற்காக நாம் கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா? 21 இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். புதிய புறநானூறு அந்த மண்ணிலே படைக்கப்பட்டு வருகிறது. 21 பேர் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால் இறந்து போன அந்த மாபெரும் வீரர்களின் உடல்களை சிங்களர்கள் மிகவும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகளை எல்லாம் களைந்து நிர்வாணமாக்கி குப்பை வண்டியில் போட்டு பின்னர் அனுராதபுரம் வீதிகளிலே அவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிங்களவர்களுக்கு கொடுமனம் இருந்திருக்கிறது. சர்வதேச பண்பாட்டின்படி எதிரி நாட்டு படைவீரன் இறப்பானேயானால் அவனது உடலைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து அவர்கள் மூலமாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால் சிங்களவர்கள் அங்கே போர்முகத்தில் வாங்கிய அடியின் காரணமாக ஆத்திரவயப்பட்டு செத்துப ¢போனவர்கள் உடல் மீது தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பண்பாடற்ற, நாகரிகமற்ற, சிங்கள வெறி பிடித்த ஒரு கூட்டததை எதிர்த்து தான் அங்கே நமது தமிழர்கள் போராடும்போது நாம் அவர்களுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை. (கைதட்டல்) பதவி சுகம் கண்டவர்களுக்கு இந்த கடமை உணர்வு ஒருபோதும் இருக்காது என்பது எனக்குத் தெரியும். (கைதட்டல்) ஆனால் அவர்களுக்கு எப்படி உணர வைப்பது என்ற வழியும் எனக்குத் தெரியும். (பலத்த கைதட்டல்) என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை மீறுமானால் நாங்களும் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகி விடுவோம் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டை நடத்த வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்த போது கால அவகாசம் மிகக் குறைவு. ஒரு பதினைந்து , இருபது நாட்கள் கூட நான் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. வரவேற்புக்குழுத் தலைவர் நம்முடைய ஈகி.ப.பெரியசாமி அவர்கள், வரவேற்புக் குழுப் தம்பி மு.சக்திவேல் , பொருளாளர் முத்துச்சாமி அவர்கள் வரவேற்புக் குழுவின் துணைத்தலைவர்கள், நம்முடைய நண்பர் சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தித் தந்தவர்கள் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் சந்திரசேகர் அவர்கள், தென்மொழி துரையரசன் அவர்கள், மற்றும் மருத்துவர் சண்முகநாதன், வான்மதி வேலுச்சாமி, மனோகரன் மற்றும் பல தோழர்கள் -பல்வேறு குழுக்கள் - அவர்கள் பேரையெல்லாம் நான் சொல்ல வேண்டும் - நேரமில்லை என்ற காரணத்தால் சொல்ல முடியவில்லை. இவர்கள் எல்லாம் இரவுபகலாக ஓடியாடி வேலை செய்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக குறுகிய கால அவகாசத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள். அவர்களை உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பிலும் உங்களின் சார்பிலும் உளமாற நான் பாராட்டுகிறேன்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.