Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் ,தமிழ்ப்புத்தாண்டு தொடக்க நாள் அறிவிப்பு,உலகத் தமிழர்களைப் புறக்கணித்தது ஏன்?- பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

தமிழ்ப்புத்தாண்டு தொடக்க நாள் அறிவிப்பு

உலகத் தமிழர்களைப் புறக்கணித்தது ஏன்?- பழ. நெடுமாறன்

தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு ஒன்றினைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்தகுடியினரான தமிழர் களுக்கும் தனியாக புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத் தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்க காலத் தமிழர் ஓர் ஆண்டினை ஆறு பருவங்களாக பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்திணை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்ல தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்து கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்ட தும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படை யாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர்

க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடை பெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளி யில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படை யாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாட்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாக கொண்டி ருந்தது. இதுதவிர

பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றினை அடிப் படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது. பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படை யாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்திபெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைபிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்கவேண்டுமென என முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டை தொடக்கமாக கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது என கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ்ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளு வராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றிவருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்த போது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாட் காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றிலும் இம் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல் களிலும் திருவள்ளுவராண்டினை நடை முறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப் பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப் பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதின் நோக்கம் முழுமையாக நிறைவேற வில்லை. அதனை அரசு ஏற்றுக் கொண்டபோதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாக கடைப் பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கி யிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனாலும் இம்முயற்சி இன்னும் விரிவான முறையில் உலகத் தமிழர்களின் ஆலோசனைகளைப் பெற்று நிறை வேற்றப்பட்டிருக்க வேண்டும்.

தமிழர் ஆண்டின் தொடக்க நாளாக தை முதல் நாள் கொண்டாடப் படவேண்டும் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர் களுக்கும் உரியதாகும். உலகத் தமிழ் இனம் முழுமையும் இதை ஏற்றுப் பின்பற்றவேண்டும். ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத் திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப் படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலை முறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது மாகும்.

தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக் கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகி யோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச் சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத்தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

86 ஆண்டுகளுக்கு முன்னாள் 1921ஆம் ஆண்டில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் இந்த முடிவு எடுத்தபோது இருந்த நிலை வேறு. இப்போது உலகம் பூராவிலும் தமிழர்கள் அதிகமாகப் பரவியிருக் கிறார்கள். பல்வேறு நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

உலகநாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு நடை பெறுகிறது. இந்தப் புதிய சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உலகத் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கலக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப் பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத் தின் முடிவில் மாணவர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடை முறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்விக் கேட்டார்.

"தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?" என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்த கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

"தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்து பேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத் திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ் வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத் தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச் சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

இத்தகைய தவறுகள் ஒருபோதும் இழைக்கப்படக்கூடாது. தமிழ்மொழி, தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி அல்ல, உலகம் பூராவும் பல்வேறு நாடுகளிலே பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானது. மொழி, பண்பாடு, கலை போன்றவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும்போது உலகத் தமிழர்களையும் கலந்துகொண்டு எடுக்கவேண்டும்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமை நமக்கு மட்டும் சொந்த மானது அல்ல உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்துநிற்கும்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.