Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்க்கான பொறியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்க்கான பொறியும்

2/17/2008 9:41:19 AM

வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர்.

அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லாதொழிப்பதனூடாகவே ஒற்றையாட்சிக்குட்பட்ட மாவட்ட சபை தீர்வொன்றை திணிக்கலாமென்பது சிங்களத்தேசத்தின் விருப்பம். அரசியல் தீர்வொன்றை முன் வைக்குமாறு விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தை, முற்று முழுதாக நிராகரிக்க மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லையென்கிற கருத்து நிலையொன்றும் உண்டு. ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதானது, சர்வதேச இராஜதந்திர தொடர்பாடல்களை அறுத்து விடலாம். அவர்களின் பிராந்திய நலன் சார்ந்த பங்களிப்பினை, தமிழர் தரப்பின் மீது விதிக்கப்படும் தடை, தடுத்து விடும் வாய்ப்புக்களையே அதிகரிக்கும்.

பயங்கரவாதமென்கிற திரைபோட்டு, விடுதலைப் புலிகளைத் தடை செய்த பல நாடுகள், அத்தகைய தடை நகர்வினை, புலிகளின் படைவலுச் சமநிலையைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகக் கருதலாம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலமும், அரசின் படை பலத்தை அதிகரிப்பதனூடாகவும் இருவழி நகர்வு உத்தியைக் கையாண்டு, பேசியே தீர்க்க வேண்டுமென்கிற அழுத்தத்தைப் புலிகள் மீது திணிக்கவே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அதேவேளை தாம் பிரயோகிக்கும் தடை அழுத்தங்களை, இலங்கை அரசு மேற்கொள்ளக் கூடாதென்கிற நிலைப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு.

பாரிய மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, வன்னி மீது வான்வெளித் தாக்குதல்களும் படை நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அவை யாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கும் சர்வதேச நாடுகள், புலிகள் மீதான தடை என்கிற இறுதி ஆயுதத்தை ஜனாதிபதி மஹிந்த பிரயோகிக்கக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளன.

சர்வதேச நாடுகளின் நகர்வுகளை அவதானித்தால், மேற்கூறப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மை புரியப்படலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளன. நிதி சேகரிப்பு மற்றும் புலிகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் யாவற்றையும் ஸ்தம்பிதமடையச் செய்வதற்கு, பயங்கரவாதமென்கிற கோட்பாட்டினூடாக இத்தகைய "தடை' உத்தியினை சர்வதேசம் மேற்கொண்டது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் தமது தொடர்பாடல்களைப் பேண, அனுசரணை வகித்த நோர்வே நாட்டை முன்னிலைப்படுத்தி, சில நகர்வுகளை பிரயோகித்தார்கள். அண்மையில் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த இணைத் தலைமை நாட்டு பிரதிநிதிகளை, அங்கு செல்லவிடாது தடுத்தது அரசு.

இன அழிப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இடையூறு விளைவிக்கும் போக்கினை சர்வதேசம் மேற்கொள்ளும் போது, அதனை வன்மையாக அரசாங்கம் எதிர்த்தாலும், சர்வதேச மனித உரிமைச் சங்கங்களை உசுப்பேற்றி, தாம் தப்பித்துக் கொள்ளும் உத்தியினை மட்டுமே சர்வதேச நாடுகள் கைக்கொள்கின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அரசாங்கம் வெளியேறிய போது, சில கண்டனச் சிதறல்களோடு சர்வதேசத்தின் ஆரவாரம் ஓய்வு நிலையை அடைந்தது. காத்திரமான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினால், புலித் தடையைப் பிரயோகித்து, தம்மை அரசியல் களத்திலிருந்து அகற்றி விடுவார்களென்கிற அச்சம் காரணமாகவே அடக்கி வாசித்தார்கள். அதேவேளை அதிக அழுத்தம் விளைவிக்கும் வெடிப்பு நிலை, சீனப் பாதையில் அரசை இழுத்துச் சென்றுவிடுமென்கிற பதட்டமும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கை அரசு புலிகளைத் தடை செய்தாலும் அது குறித்து கலவரமடையாமல் தமது முழுமையான அரச ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறது. இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் யாவரும் அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக விடுத்த செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது.

சர்வதேச மட்டத்தில், கண்ணி வெடிக்கும் எதிரான போர்க் கொடியை பல மனிதாபிமான அமைப்புக்கள் உயர்த்தி வரும் வேளையில், பாக்கு நீரிணையில் அரசால் விதைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி பொறிகளை, நியாயப்படுத்தும் வகையில் காந்தி தேசம் விடுத்த அறிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது பிராந்திய நலன்பேண, இலங்கை அரசாங்கத்தின் சகல மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊத வேண்டிய பரிதாப நிலைக்கு இந்தியா இறங்கி வந்திருப்பதையிட்டு தாயக மக்கள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை. தற்போது இந்தியாவின் கவலையெல்லாம், தமிழர் தாயகத்தில் இராணுவமும், விடுதலைப் புலிகளும் எத்தனை சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசங்களை தம்வசம் வைத்துள்ளார்கள் என்பது பற்றியே இருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் இராணுவத்தின் விசேட படையணிகள், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளும் தாக்குதல்களால், விடுவிக்கப்படும் பிரதேசங்கள் பற்றியும், கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்துமே தமது செய்தி சேகரிப்பின் முக்கிய பணியாக இந்தியா கொண்டுள்ளது.

தினமும் நூற்றிற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்துறை வெளியிடும் பொய்ப் பரப்புரைகளை, எண்ணிக்கை பிசகாமல், அப்படியே தமிழக பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. தமிழக காங்கிரஸாரும், டில்லித் தலைமையின் அறிவுறுத்தலிற்கேற்ப, விடுதலைப் புலிகள் மீது வசை பாடுவதை, முக்கிய கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட வண்ணமுள்ளனர்.

அதாவது விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களும், உளவுத் துறையினரும் பின்னணியில் நின்றவாறு செயற்படுவதனை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சிதைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படும் பொழுது, பூனேயில் இலங்கை உளவுப் படையினருக்கு, விசேட பயிற்சிகளை இந்தியா வழங்குவதாக செய்திகள் கசிகின்றன. 80களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களின் படித்த சில இளைஞர்களுக்கு, வெடிகுண்டுகளைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சிகளை இந்தியா "றோ' வழங்கியதை தற்போது நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனாலும் நலனடிப்படையில் எழும் தேவைக்கேற்றவாறு, இலங்கை இனப்பிரச்சினையை, இந்திய வெளியுறவு புலனாய்வு பிரிவினர் கையாளும் முறைமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. இவ்வேளையில், தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது இந்தியா. தற்போது, 200 கோடி டொலர் நிதியுதவி அளிக்க, இந்தியா இணங்கியுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் முறியை, போர்ச் செலவுகள் விழுங்க, ஆட்சி நடத்துவதற்குரிய நிதித் தேவையைச் சமாளிக்க இந்தியா முன் வருகிறது.

தற்போது, ஒப்பந்த முறிவினால் உருவான வெற்றிடத்தை நிரப்ப, வேறெவரும் புகாதவாறு, அகலக் கால் பதிக்கிறது இந்தியா. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன் வைக்கப்பட்ட மாகாண சபையின் அனைத்து அதிகாரங்களையும், ஒரே தவணையில் வழங்க வேண்டுமென, இலங்கை அரசைக் கோரும் தீர்மானமொன்றினை இந்தியா எடுத்திருப்பதாகவும் ஊகங்கள் வெளிவருகின்றன. தீர்வுத் திட்ட விவகாரத்தையும், ஆயுத, நிதி உதவி விவகாரத்தையும், சமாந்தரமாகக் கையாளும் இரட்டைப் போக்கு உத்தியே, இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடாகும்.

ஆயினும் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் விரிவாக்கமே, இந்தியாவின் இரட்டை போக்கினை, ஒற்றைப் போக்காக மாற்றும் திறன் கொண்டதாக்கியுள்ள தென்பதை பழைய வரலாற்று நிகழ்வுகள் புரிய வைக்கின்றன. யுத்தம் மூலம் தீர்க்கப்பட முடியாதெனக் கூறுவதும், யுத்தத்திற்கான ஆயுதங்களை வழங்குவதும், ஒன்றுக்கொன்று முரண் நிலை கொண்ட விடயமென்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிதல் வேண்டும். இத்தகைய இந்திய தந்திர நகர்வுகளை சிங்களம் புரிந்து கொண்டாலும், அவை தமக்குச் சாதகமாக அமைவதால், அதன் ஆதரவினை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது.

அதேவேளை பாதிப்புறும் தமிழினத்தின் உளவியல் பரிமாணமானது, தமிழக ஆதரவுத் தளம், இந்திய மத்திய அரசினை மாற்றும் வல்லமை கொண்டது போன்ற கற்பிதங்களில் நீண்டு செல்கிறது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமொன்று உண்டு. அதாவது தமிழக அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை, மத்திய ஆட்சியினை மாற்றக் கூடிய நாடாளுமன்ற ஆசனப் பலத்தினை கொண்டிருக்கும் யதார்த்தம் சரியாக இருந்தாலும், இந்தியாவின் மத்திய கொள்கைத் திட்டத்தினை மாற்றக் கூடிய வல்லமை அவர்களுக்கு உண்டாவென்பதிலேயே சந்தேகம் எழுகிறது.

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில், தலையிடுவதில்லையென்கிற பிரகடனத்தை, கலைஞர் முன்பொரு தடவை வெளிப்படுத்தியதை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோருவதையே கலைஞரால் மத்திய அரசை நோக்கி முன் வைக்க முடியும்.

அத்தோடு, இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களை வழங்க வேண்டாமென வேண்டுகோளையும் விடுக்கலாம். ஆயினும் ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாஷையான "சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை' அங்கீகரிக்கும்படி கலைஞரால் கூற முடியாது. ஏனெனில் தமிழக ஆதரவுத் தளத்தின் எல்லைக் கோட்டினுள் இனப் படுகொலை, ஆயுத விநியோகம் போன்ற விவகாரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதற்குமப்பால் சென்று, தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோட்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் இந்திய தேசிய நலனிற்கு அவை குந்தகம் விளைவிக்கலாமென்கிற மத்திய கொள்கை வகுப்பாளர்களின் கூக்குரலிற்கு முகம் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மாநிலக் கட்சி, மத்திய அதிகாரத்தில் பங்கேற்கும் போது இவ்வகையான அரசியல் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. ஈழப் பிரச்சினை குறித்த தமிழக, மத்திய அரசுகளின் முரண்பாடுகளையும், அதன் அரசியல் பரிமாண வீச்செல்லைகளையும் சரியாகப் புரிந்து கொண்டால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையின் சூத்திரத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது புலிகள் மீதான தடையை நீடித்து, இறுக்கமான நிலையொன்றினைப் பேணுவதனூடாகவோ இலங்கை அரசினை தமக்கு சார்பான வியூகத்துள் வைத்திருக்க முடியுமென இந்தியா கருதுகின்றது. தடையை அகற்றினால், சிங்களப் பேரினவாதமானது தமது பிராந்திய நிரந்தர நண்பர்களுடன் அணி சேரலாமென்கிற அச்சம் இந்தியாவிற்கு உண்டென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இத்தகைய இராஜதந்திர வியூகத்திற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பும் பொழுதே, பொடா, தடா சட்டங்கள் ஏவி தமிழின ஆதரவு உணர்வலைகளை அடக்க முற்படுகிறது இந்திய அரசு.

இதேவேளை "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை' என்று அறிவித்து விட்டு தேர்தலை சந்தியுங்களென இந்திய மத்திய அரசை நோக்கி சவால் விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். மத்தியில் ஆட்சி அமைக்க, தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவை. அதேவேளை மத்தியில் எடுக்கப்படும் அண்டை நாடு பற்றிய, அதுவும் அதே இனத்தின் பிரச்சினை குறித்த முடிவினை மத்திய கொள்கை வகுப்பாளர் மட்டுமே எடுப்பார்களென்பதே இந்திய ஜனநாயகமாகும். தமிழீழம் உருவாவதல்ல இந்தியாவின் பிரச்சினை. அப்படிப் பிரிவதால், தென்னிலங்கை ஆட்சி, தனது பிராந்திய எதிரிகளின் கைவசம் சென்று விடுமென்பதே இந்திய அச்சத்திற்கான முதன்மை காரணியாகும்.

தமிழீழம் உருவானால் தமிழ்நாடு பிரியுமென்கிற சோடித்த கதைகளெல்லாம் வெறும் சுயநலன் அடிப்படையில் எழும் பரப்புரைகள் என்று கருத வேண்டும். தமிழினம் அழிந்தாலும் தனது நலன் காக்கப்பட வேண்டுமெனக் கற்பிதம் கொள்ளும் இந்தியாவின் போக்கினை, எவராலும் மாற்ற முடியாது. ஆயினும் அதை மாற்றும் சக்தி, விடுதலையை வென்றெடுக்க, அணி திரளும் மக்களிடம் உள்ளதென்பதை சர்வதேசம் விரைவில் உணரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை. ஆனால் இப்படி எத்தனை கட்டுரைகள் வந்தும் எம்மில் பலருக்கு இன்னும் இந்தியா பற்றி வெளியில் பேசப் பயம். எல்லாவற்றிற்கும் "இந்தியாவைப் பகைப்பதால் மட்டும் என்ன வந்துவிடப் போகிறது " என்று ஒரு கேள்வி வைத்திருக்கிறார்கள். இந்தியாவை ஆதரிப்பதாலோ அல்லது வாயை மூடிக் கொண்டிருப்பதாலோ என்ன நடக்கும் என்பதை மேலுள்ள கட்டுரை கூறியிருக்கிறது.

இலங்கைக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் பிரச்சாரங்களில் இந்தியாவின் இலங்கைக்கான பங்களிப்பு எப்படியானது என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும். முடியுமா எம்மால் ????

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை. ஆனால் இப்படி எத்தனை கட்டுரைகள் வந்தும் எம்மில் பலருக்கு இன்னும் இந்தியா பற்றி வெளியில் பேசப் பயம். எல்லாவற்றிற்கும் "இந்தியாவைப் பகைப்பதால் மட்டும் என்ன வந்துவிடப் போகிறது " என்று ஒரு கேள்வி வைத்திருக்கிறார்கள். இந்தியாவை ஆதரிப்பதாலோ அல்லது வாயை மூடிக் கொண்டிருப்பதாலோ என்ன நடக்கும் என்பதை மேலுள்ள கட்டுரை கூறியிருக்கிறது.

இலங்கைக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் பிரச்சாரங்களில் இந்தியாவின் இலங்கைக்கான பங்களிப்பு எப்படியானது என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும். முடியுமா எம்மால் ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.