Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய நெருக்கடிக்குள் படை நகர்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய நெருக்கடிக்குள் படை நகர்வுகள்

-விதுரன்-

வன்னிக்கள முனையில் கடந்த சில தினங்களாக மோதல்கள் சற்றுத் தணிந்துள்ளன. எதிர்பார்த்தபடி முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களால் படையினர் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையிலும் வன்னிக்கள முனையில் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

வன்னிக்கள முனையில் பாரிய அளவில் படைநகர்வு, சிறு சிறு குழுக்களாகச் சென்று தாக்குவதென்று படையினர் தங்கள் தந்திரோபாயங்களையும், உத்திகளையும் மாற்றி மாற்றி அமைக்கின்றபோதும் விடுதலைப் புலிகளும் அதனை மிக நுட்பமாக எதிர்கொண்டு அவர்களது தந்திரோபாயங்களுக்கும், உத்திகளுக்கும் பதிலடி கொடுக்கின்றனர். இது படையினருக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.

வடபகுதி கள முனையைப் பொறுத்தவரை புலிகளின் பகுதிகளை நோக்கி பாரிய முன்நகர்வு முயற்சிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும் அல்லது சிறுசிறு படையணிகள் மூலம் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவல் தாக்குதல்களை மேற்கொள்ள வேணடுமென்றதொரு நிலையேற்பட்டுள்ளது. இவ்விரு தாக்குதல் உத்திகளில் ஏதாவதொன்றைப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் புலிகளின் பாரிய பாய்ச்சலை எதிர்கொள்ள வேண்டுமென்றதொரு நிலையேற்பட்டுள்ளது.

வடபகுதியில் படையினர் பாரிய தாக்குதலை ஆரம்பித்தபோது, பெருமெடுப்பில் படையினரை ஒன்று திரட்டி ஆட்லறி ஷெல்கள், மோட்டார் குண்டுகள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடத்தியவாறு புலிகளின் பகுதிகளுக்குள் நுழைய முற்பட்டனர். இதனை நன்கு எதிர்பார்த்த புலிகள் படையினரின் பாரிய முன்நகர்வு முயற்சிக்கு எதிராக கடும் பதில் தாக்குதல்களைத் தொடுத்து அதனை முறியடித்ததுடன், அவர்களுக்கு பலத்த இழப்புகளையும் ஏற்படுத்தினர்.

வவுனியா அல்லது மன்னார் அல்லது மணலாறு களமுனையில் இந்தப் பாரிய படைநகர்வுகளை படையினர் தொடுத்தபோது அந்தப் படை நகர்வுகளின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பதில் தாக்குதல் திட்டங்களைத் தயாரித்து தங்கள் பீரங்கிப் படையணிகளை ஒன்றுபடுத்தி, முன்னேற முயலும் படையணிகள் மீது புலிகள் ஒரேநேரத்தில் கடும் தாக்குதலைத் தொடுக்கவே படையினரால் முன்நகர முடியாது போனதுடன் பாரிய இழப்புக்களையும் அவர்கள் சந்தித்தனர்.

பல முனைகளிலும் பலதடவைகள் மேற்கொண்ட இந்தப் பாரிய படையெடுப்புக்கள், எதிர்பார்த்த பலனைத் தராததுடன், தோல்விகளைச் சந்திக்கவே, பாரிய படைநகர்வுகள் என்ற தாக்குதல் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலையுருவானது. அதேநேரம், தங்கள் தாக்குதல் திட்டத்தை மாற்றியமைத்தாலும் தற்காப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை படையினருக்கு ஏற்பட்டது.

புலிகளின் பகுதிக்குள் பாரிய படைநகர்வை மேற்கொள்ள வேண்டும் அல்லது புலிகளின் பாரிய பாய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தாக்குதல் சமரை தொடுக்கவேண்டும் இல்லையேல் தற்காப்புத் தாக்குதலை நடத்த வேண்டுமென்றதொரு நிலையேற்பட்டது. அந்த நிலைமை இன்று மிகத் தீவிரமடைந்துள்ளது. புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதல்களால் எந்த முனையில் சமரைத் தொடுப்பதென்பதில் படையினர் தடுமாறி வருவது தெரிகிறது.

கடந்த சில நாட்களாக வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடா களமுனைகளில் படையினரின் பாரிய முன்நகர்வு முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனாலும், புலிகளின் பகுதிகளை நோக்கிப் படையினர் தொடர்ந்தும் கடும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். படையினரின் முன்நகர்வு முயற்சிகளை புலிகள் முறியடித்த நிலையில் புலிகளின் பாரிய தாக்குதல்களை முறியடிக்க வேண்டிய நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. இதனால் புலிகள் பாரிய தாக்குதலொன்றுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக தொடர்ந்து அவர்களது பகுதிகள் மீது கடும் ஷெல் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வடபகுதி களமுனையில் படையினர் குழப்பமானதொரு பொறிக்குள் சிக்குண்டுள்ளனர். பாரிய படைநகர்வையும், சிறு சிறு அணிகளாகச் சென்றும் தாக்குதலை நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன், புலிகளின் பாரிய தாக்குதல்களைத் தடுக்க வேண்டிய சூழ்நிலையுமேற்பட்டுள்ளது. இதனால்தான் புலிகளைத் தாக்குதல் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை படையினருக்கேற்பட்டுள்ளது.

வடபகுதி களமுனையில் படையினர் புதிய புதிய தந்திரோபாயங்களைக் கடைப்பிடித்தபோது புலிகளும் தங்கள் உத்திகளையும், தந்திரங்களையும் மாற்றியமைத்தனர். வன்னிக் களமுனை அடர்ந்த காடுகளாயிருப்பதாலும், அந்தக் களமுனையில் மரபுவழிச் சமரை விட கெரில்லா தாக்குதலுக்கேற்ற சூழ்நிலையே உள்ளதாலும் அதற்கேற்ப தங்கள் தாக்குதல் சமரையும் தற்காப்புச் சமரையும் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நான்காவது ஈழப்போரில் புலிகளின் தற்காப்புச் சமரில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகள் பெரும் பங்கு வகிக்கப்போகின்றன. அண்மைக்கால சமர்களில் இவற்றால் பாதிப்படையும் படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். மிதிவெடிகள், பொறிவெடிகளால் எந்தக்கள முனையிலும் முன்நகர்வுப் பாதையை தேர்ந்தெடுக்க முடியாது படையினர் தடுமாறுகின்றனர். எந்தக் களமுனையை திறந்து நகர்ந்தாலும் அங்கு இவை விதைக்கப்பட்டுள்ளதால் அப்பால் செல்வதற்கிடையில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன.

மிதிவெடிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்கையில் பொறிவெடிகளால் பேராபத்து ஏற்படுகிறது. அடர்ந்த காடுகளினுள் உருமறைப்புச் செய்தவாறு ஆழ ஊடுருவ முனையும் படையினர் மிதிவெடிகள் அல்லது பொறிவெடிகளில் சிக்கவேண்டியுள்ளது. அவற்றை தாண்டியவர்களை புலிகளின் `சினைப்பர் தாக்குதல்' அணிகள் சுட்டு வீழ்த்துகின்றன. இவ்வாறு, புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கப்பால் நுழைவதில் படையினர் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர்.

வன்னிக்கள முனையைப் பொறுத்தவரை புலிகளின் லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு முழு அளவில் செயற்படுகிறது. புலிகளின் தாக்குதல் சமருக்கும், அவர்களது தற்காப்புச் சமருக்கும் இந்தப் பிரிவு முழு அளவில் உதவுகிறது. புலிகளின் வேவு அணிகள் படையினரின் பகுதிகளுக்குள் புகுந்து, நுழைந்து உளவுத் தகவல்களை சேகரிக்க, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.

படைமுகாம்களின் பாதுகாப்புக்கு படையினரும் இன்று கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகளையே முக்கியமாக நம்பியுள்ளனர். முகாம்களைச் சூழ இவற்றை விதைத்துவிட்டே தங்கள் கண் காணிப்புக்களை மேற்கொள்கின்றனர். அவற்றையும் மீறி பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, அங்கு புகுந்து கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளை அகற்றி தங்கள் வேவு அணிகளுக்கு பாதைகளை அமைத்துக் கொடுக்க, வேவு அணிகளும் உளவுத் தகவல்களை திரட்டிச் செலகின்றன.

இதேநேரம், படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பகுதிகளிலும் படையினரின் சிறு சிறு அணிகள் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவும் இடங்களையும் மோப்பம் பிடித்து அப்பகுதிகளில் இவர்கள் கண்ணிவெடிகளையும், மிதிவெடிகளையும் விதைப்பதாலும், பொறிவெடிகளை பொருத்தி விடுவதாலும், புலிகளின் பகுதிகளினுள் ஆழ ஊடுருவும் படையணிகளும் சிறு சிறு தாக்குதல் அணிகளும் முன்நகர்வதில் சிக்கல்களேற்படுகின்றன.

படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொள்ளும் போது புலிகள் அவர்களை குறிப்பிட்டளவு தூரம் வரை முன்நகர அனுமதித்து அதன் பின்பே தங்கள் பதில் தாக்குதல்களை உக்கிரமாக மேற்கொள்கின்றனர். முன்நகர்ந்த படையினர் இந்த உக்கிர தாக்குதலால் நாலா புறமும் சிதறிச் செல்லும்போது, அங்கு மிதிவெடிகளும், மிதிவெடிகளுடன் வயர்கள் மூலம் தொடுக்கப்பட்ட பொறிவெடிகளும் படையினருக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன.

2000 ஆம் ஆண்டு பிற்பகுதியில் குடாநாட்டில் படையினர் மேற்கொண்ட `அக்கினி கீல' (தீச்சுவாலை) படைநடவடிக்கையை புலிகள் சில மணிநேரத்தில் மிகவும் வெற்றிகரமாக முறியடித்தனர். தென்மராட்சியில் முகமாலைப் பகுதியிலிருந்து ஆனையிறவைநோக்கி `ஏ9' வீதியூடாக பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதம் ஆயிரக்கணக்கான படையினர் முன் நகர்ந்தபோது புலிகள் அவர்களை முன்நகர அனுமதித்தனர்.

குறிப்பிட்டதொரு எல்லைக்கு அவர்கள் வந்த பின்னரே பதில் தாக்குதலைத் தொடுப்பதென்பது அவர்களது திட்டம். அதற்கேற்ப `ஏ9' வீதியின் இருமருங்கிலும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகளைப் புதைத்து விட்டு புலிகள் காத்திருந்தனர். தாங்கள் எதிர்பார்த்த எல்லைக்குள் படையினர் வந்தபோது `ஏ9' வீதியை மட்டுமே இலக்குவைத்து, அந்த வீதியில் படையினர் வந்த அனைத்து இடங்களை நோக்கியும் ஆட்லறி ஷெல்களையும், மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழியத் தொடங்கினர்.

புலிகளின் தந்திரத்தை எதிர்பாராது, ஷெல் மழையிலிருந்தும் மோட்டார் குண்டுகளிலிருந்தும் தப்புவதற்காக, `ஏ9' வீதியில் வந்த ஆயிரக்கணக்கான படையினர் வீதியின் இருமருங்கிலுமுள்ள பகுதிகளை நோக்கி சிதறியோடினர். அங்கு `கண்ணிவெடி வயல்கள்' இருப்பதை உணராது வீதியின் இரு பக்கங்களிலும் பாய்ந்தோடிய படையினர் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகளில் சிக்கிச் சிதறுண்டனர். சில மணிநேரத்தில் எண்ணூறு படையினர் வரை கொல்லப்பட்டனர். உயிர் தப்பியவர்களில 200 க்கும் மேற்பட்டவர்கள் கால்களை இழந்தனர். சில மணிநேரத்தில் மிகப்பெருமிழப்பு ஏற்படவே எஞ்சியவர்கள் படை நடவடிக்கையை கைவிட்டு பின் வாங்கினர். இன்றும் அதனை படையினர் மறந்திருக்கமாட்டார்கள்.

கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகளைப் பயன்படுத்தி தங்களுக்கு மிகமிகக் குறைந்த இழப்புடன் சில மணிநேரத்தில் படையினருக்கு மிகப்பெருமிழப்பை ஏற்படுத்தி பெரும் அதிர்ச்சியளித்த தாக்குதல் இதுவாகும். இதனையடுத்தே சந்திரிகாவின் அரசு ஆனையிறவு நோக்கிய படைநகர்வை முற்று முழுதாகக் கைவிட்டது. `தீச்சுவாலை' படைநடவடிக்கை பெரும் தோல்வியில் முடிவடைந்ததை அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இதேபோன்ற உத்தியைத் தான் 2006 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முகமாலை பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிராக புலிகள் மேற்கொண்டனர். கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகளைப் பயன்படுத்தி தங்களின் ஒரு சிலரை மட்டுமே இழந்து 190 படையினரை கொன்றதுடன் 600 இற்கும் மேற்பட்ட படையினரை இந்தச் சமரில் புலிகள் படுகாயப்படுத்தினர். மூன்று டாங்கிகளைக் கூட புலிகள் வசம் விட்டுச் செல்லும் நிலையில், மிகச் சில மணிநேரத்தில் படையினர் இங்கு பேரிழப்புகளைச் சந்தித்தனர்.

இவ்வாறு தற்காப்புச் சமரில் கண்ணிவெடிகள் மிதிவெடிகளை புலிகள் மிகவும் வெற்றிகரமாக பயன்படுத்திய நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முல்லைத்தீவு படைத்தளத்தை தாக்கியழித்தபோது, கண்ணிவெடிப் பிரிவே பெரும் பங்காற்றியது. முல்லைத்தீவு படைத்தளத்தை படையினர் கண்ணிவெடிகள் மிதிவெடிகள் மூலமே பாதுகாக்க முனைந்தனர். படைத்தளத்தை சுற்றி இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு கடல் வழியால் விநியோகத்தை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி அந்தப் படைத்தளத்திற்குள் நுழைந்து அந்தப் படைத்தளத்தை முற்றுமுழுதாக அழித்தனர். இந்தச் சமரில் 1,200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். கண்ணிவெடியகற்றும் பிரிவின் செயற்பாட்டாலேயே புலிகளால் இந்தப் படைத்தளத்தை தாக்கியழிக்க முடிந்தது. இதுபோல் ஜெயசிக்குரு படை நடவடிக்கையின் போதும் புலிகளின் கண்ணிவெடிப் பிரிவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் படைநகர்விலும் கண்ணிவெடிகள், மிதிவெடிகளால் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்தனர்.

இந்த நிலையில், வன்னியில் கொக்குத்தொடுவாய் முதல் மன்னார் வரையிலும் யாழ்.குடாநாட்டில் நாகர்கோவில் முதல் கிளாலி வரையிலும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள், பொறிவெடிகள் படைநகர்வு முயற்சிகளுக்கு பெரும் சவாலாகவேயுள்ளது. இவை குறித்து மிகவும் எச்சரிக்கையாகவிருந்து கள நடவடிக்கைகள் குறித்து திட்டமிடுமாறு வன்னி இராணுவத் தளபதி தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்.

யாழ். குடாநாட்டில் படையினரின் பாரிய நகர்வு முயற்சிகள் புலிகளின் கண்ணிவெடிகளாலும் மிதிவெடிகளாலும் பொறிவெடிகளாலும் செயலிழந்துள்ளன. மிதிவெடியொன்றுடன் வயர்கள் மூலம் பல ஷெல்கள் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட பொறிவெடிகள் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

யாழ். குடாநாட்டில் படையினரின் பாரிய நகர்வு முயற்சிகள் புலிகளின் கண்ணிவெடிகளாலும் மிதிவெடிகளாலும் பொறிவெடிகளாலும் செயலிழந்துள்ளன. மிதிவெடியொன்றுடன் வயர்கள் மூலம் பல ஷெல்கள் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட பொறிவெடிகள் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

எங்காவது ஓரிடத்தில் மிதிவெடியொன்று வெடிக்கும் போது அதில் பொருத்தப்பட்ட ஷெல்கள் வெடிக்க அந்தப் பிரதேசத்தில் பல படையினர் கொல்லப்படும் நிலையேற்படுகிறது.

இவ்வாறு புலிகளின் கண்ணிவெடிப் பிரிவு செயற்படுகையில் `சினைப்பர் தாக்குதல்' அணிகளும் வன்னிக் களமுனையில் இறக்கி விடப்பட்டுள்ளன. புலிகளின் பகுதிகளுக்குள் உருமறைப்புச் செய்தவாறு முன்னரங்க காவல் நிலைகளூடாக பதுங்கி ஊடுருவும் படையினருக்கு, புலிகளின் சினைப்பர் தாக்குதல் அணி பெரும் அச்சுறுத்தலாயுள்ளது.பற்றை, செத்தைகளுக்குள் பதுங்கிக் கிடந்தும் மரங்களோடு மரங்களாகவும் மரக் கொப்புகள், கிளைகளிலிருந்தும் இந்தச் சினைப்பர் தாக்குதல் அணி படையினரைத் தினமும் இலக்கு வைக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, மன்னார் பாலைக்குழியிலிருந்து அடம்பன் நோக்கி நகர்ந்த படையணியொன்று திறந்த வெளிக்களத்தில் பொறிக்குள் சிக்குண்டதாக புலிகள் தெரிவித்தனர். பிற்பகல் 1.30 மணியளவில் இந்தப் பொறிக்குள் சிக்குண்ட படையினரால் எந்தத் திசையிலும் முன்நகரவோ அல்லது பின்நகரவோ முடியாது போகவே புலிகள் அங்கு தங்கள் `சினைப்பர் தாக்குதல்' அணியை வரவழைத்துள்ளனர். சில மணிநேரத்தில் அந்த அணி அங்கு வந்து சேர்ந்த நிலையில், மாலை 4.30 மணியளவில் புலிகளின் நீண்டதூர சினைப்பர் தாக்குதலணி படையினரை இலக்கு வைக்கத் தொடங்கியது.

இந்தத் தாக்குதல் மாலை 6.30 மணிவரை தொடர்ந்துள்ளது. கடும் இருள் சூழும் வரை தங்கள் அணி 22 படையினரை சுட்டுக் கொன்றதாக புலிகள் தெரிவித்தனர். வன்னிக்கள முனையில் `சினைப்பர் தாக்குதல்' அணிகளை புலிகள் எவ்வாறு பயன்படுத்துகின்றனரென்பதற்க

புதிய படையணிகளின் உருவாக்கம், படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு செய்து வரும் களப்பணிகளும் சேர்ந்து படை நடவடிக்கைகளை திக்கு முக்காடச் செய்கின்றன. என்பது விதுரன் கருத்து. வெளிநாட்டு இராணுவ ஆலோசனைகளுடன் போரிடும் படைத்தரப்பு தடுமாற்றங் கொண்டால் உலக இராணுவ ஆலோசனைகள் தோற்றுவிட்டதாகத்தானே அர்த்தம் கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.