Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவில் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவில் தமிழர்கள்

-அன்பரசு-

பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யார் என்ற வினாவை எழுப்பி விடை காணவேண்டிய தேவை ஏற்படுகிறது. தென்னாபிரிக்காவில் அது தோன்றிவிட்டது எனலாம்.

தென்னாபிரிக்காவின் மூத்த சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் தொழில்சார் நிபுணர் குழுச்சந்திப்பில் கலந்து கொள்ள நியூயோர்க் நகர் சென்றார். இந்த நிபுணர் ஒரு தமிழர். நிபுணர் குழுவுக்குத் தலைமை வகித்தவர் ஒரு வெள்ளை அமெரிக்கன். அவர் தமிழ் நாட்டின் வேலூர் மருத்துவ மனையில் ஐந்து வருடமாகப் பணியாற்றியவர். அவருக்கு நன்றாகத் தமிழ் பேசவரும். தென்னாபிரிக்க நிபுணரைக் கண்டவுடன் இந்த அமெரிக்கர் அகமும் முகமும் மலர ஐயா வணக்கம், மிகவும் மகிழ்ச்சி, வாருங்கள் ஐயா வாருங்கள் என்று பெருங்குரலில் வரவேற்றார். தென்னாபிரிக்கத் தமிழருக்குத் தமிழில் ஒரு சொல்கூடத் தெரியாது. முகமனுக்குப் பதில் கூற முடியாது திணறினார். இப்போது அவர் ஆங்கில மொழி மூலம் தமிழ் படிப்பதாக அறிகிறோம். உலகத் தமிழர்களுக்குக் கண்ணைத் திறக்கும் பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

என்றும் உள தென் தமிழ் என்று கம்பர் கூறியிருக்கிறார். மும்மை வாழ்வு பெற்ற உலக மொழிகளில் தமிழும் ஒன்று. மும்மை என்பது முக்காலத்தையும் குறிப்புணர்த்தும். பொது மக்கள் நாவில் வாழ்ந்த மொழிதான் நிலைபெறும். தமிழினத்தின் உலகப் பரவலுக்கு ஐரோப்பியர்களின் ஆசியா வருகை முக்கிய காரணமாக அமைகிறது. தொழிலாளர் தேவைக்காகப் பெருந்தொகையான தென்னிந்தியத் தமிழர்களை ஒல்லாந்த, ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு அரசுகள் அள்ளிச்சென்று தமது ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளில் விதைத்துள்ளனர். பசுபிக் தீவுக் கூட்டங்களிலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும், மொறீசியசு, தென்னாபிரிக்கா ஆகியவற்றிலும் தமிழர்கள் இன்றுவரை காணப்படுகிறார்கள். ஆனால் தமிழ் அவர்கள் நாவிலிருந்து இறங்கி விட்டது. நெஞ்சு இருக்கும் வரை உணர்வு இருக்கும் என்பார்கள். தமிழுணர்வு இருக்கத்தான் செய்கிறது.

தென்னாபிரிக்காவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தொகை ஏழைத் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றனர். சில தெலுங்கர்களும் குஜராத்திகளும் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் ஐந்து ஆண்டு காலம் வெள்ளை முதலாளியிடம் பணியாற்ற வேண்டும். ஐந்து ஆண்டு முடிவில் விரும்பினால் அதே முதலாளியிடம் வேலை பார்க்க முடியும். விடுதலை பெற்று விலக விரும்பினால் 25 பவுண்டு பணம் செலுத்த வேண்டும். ஒப்பந்தக் கூலிகளுக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. வெள்ளையர்கள் வாழும் பகுதிகளுக்குள் அவர்கள் நடமாட முடியாது. பொதுமக்கள் போக்குவரத்துச் சாதனங்களில் பயணிக்கும் போது தரையில் உட்கார வேண்டும். ஒரு வழக்கு நிமித்தம் தென்னாபிரிக்கா வந்த மகாத்மா காந்தி இவர்களின் உரிமைக்காகப் போராட உறுதிபூண்டு நேற்றால் இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். விடுதலை பெற்று விலக விரும்பும் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய 25 பவுண்டு தலைவரிப் பணத்தைக் காந்தி எதிர்த்தார். அது ஒரு தொழிலாளியின் ஆறுமாத மொத்த ஊதியமாக அமைந்தது.

காந்தியின் கடும் எதிர்ப்பால் 25 பவுண்டு மூன்று பவுண்டாகக் குறைக்கப்பட்டது. தலைவரிப் பணம் கட்டுவது அடிமைத்தனம் என்று கூறிய காந்தி அதையும் எதிர்த்தார். காந்தியின் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு ஒரு நாள் பாலசுந்தரம் என்ற தமிழ் இளைஞர் வந்தார். அவருடைய முன் பற்களில் இரண்டை வெள்ளை முதலாளி அடித்து உடைத்து விட்டான். காந்தியின் உதவியாளன் ஒரு தமிழன். அவருடைய மொழி பெயர்வு அனுசரணையோடு பாலசுந்தரம் சொல்வதைக் காந்தி கேட்டறிந்தார். நீதிமன்றத்தின் மூலம் தலைவரிப் பணம் கட்டாமல் பாலசுந்தரத்திற்கு காந்தி விடுதலை வாங்கிக் கொடுத்தார். காந்தியின் தொழிலாளர் சார்பான போராட்டம் சத்தியாக்கிரக இயக்கமாகப் பரிணமித்தது. அவர் இந்த வகைப் போராட்டத்தை முதன் முதலாகத் தென்னாபிரிக்காவில் தொடங்கினார். 1914 இல் இந்தியா வந்த பின் அதேவகைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். அவர் தென்னாபிரிக்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியபோது அதில் மிகக் கூடுதலாகக் கலந்து கொண்டவர்கள் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களே. இவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் என்று சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்கள். அவர்கள் தமது வாழ்வைக் காந்தியின் போராட்டத்திற்கு அர்ப்பணித்தார்கள். அப்படியானவர்களில் ஒருவர் வெள்ளை நிறப் பொலிசாரால் சுடப்பட்டு உயிரிழந்தார். அவர் தமிழ் நாட்டின் தரங்கம்பாடிக் கிராமத்திற்குப் பக்கத்திலுள்ள வள்ளியாபாடிக் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஒருமுறை காந்தி வள்ளியாபாடிக்கு வந்தார். அது விடுதலை வீரன் பிறந்த புண்ணியபூமி என்று சொன்னார். இறந்தவரின் மனைவியையும் காந்தி சந்தித்தார். அப்போது அந்த அம்மாளின் புத்திரர்களில் ஒருவரைத் தனது பொறுப்பில் விடும்படி காந்தி வேண்டினார். ஆனால் அது நிறைவேறவில்லை. சத்தியாக்கிரகத்தின்போது காந்தி சட்டமறுப்புப் போராட்டத்தின் அங்கமாகப் பாத யாத்திரைகளை நடத்தினார். பெரும்பாலும் இதில் தமிழர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவர் கையில் குழந்தையோடு நடந்த ஒரு தமிழ்ப் பெண்ணும் ஆவார். நடுவழியில் குழந்தை இறந்துவிட்டது. நேற்ராலுக்கும் (Natal) டிரான்ஸ்வாலுக்கும் (Transvaal) இடையில் செல்லும் நெடுஞ்சாலையில் இறப்பு நிகழ்ந்தது. அந்த வீரத் தாய் சாலையோரத்தில் ஒரு குழி தோண்டிக் குழந்தையின் உடலைப் புதைத்துவிட்டு பேரணியில் சென்றார்.

இதுபற்றி அறிந்த காந்தி அடிகள் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தார். காந்தியைப் பார்த்து அந்தப் பெண் பின்வருமாறு சொன்னார், 'நாம் இறந்தவர்களுக்காகச் சட்டமறுப்புச் செய்யவில்லை உயிரோடு உள்ளவர்களுக்காகவே செய்கிறோம். பயணம் தொடரட்டும்" தமிழ் மொழியில் முதன் முதலாக வெளிவந்த பயண நூல்களில் ஒன்றான 'உலகம் சுற்றும் தமிழன்" என்ற நூலில் இந்த விவரம் கூறப்படுகிறது. இந்த நூலை எழுதியவர் ஏ.கே.செட்டியார் எனப்படும் அ.கருப்பண்ணன் செட்டியார். அவர் ஜேர்மனி, அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர். 1930களில் இவர் பயணம் செய்தார். அமெரிக்காவில் புகைப்படக் கலையைப் பயின்ற ஏ.கே.செட்டியார் காந்தி பற்றிய வாழ்க்கைச் சித்திரப் படங்களைச் சேகரித்துத் தொகுத்து வெளியிட்ட சிறப்புடையவர். 'புண்ணியவான் காந்தி" என்ற தலைப்பில் ஒரு நூலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

தென்னாபிரிக்காவுக்குச் சென்ற போது குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுபெற்ற இடத்தைச் செட்டியார் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். தென்னாபிரிக்காவின் சாஸ்திரி கல்லூரியில் ஆசிரியராக இருந்த லாசரஸ் ( Lazarus ) என்பவர் செட்டியாருக்கு அந்த இடத்தைக் காண்பித்தார். லாசரஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தமிழ்க் கிறிஸ்தவர். அவர் அமெரிக்காவின் யேல் (yale) பல்கலைக்கழகப் பட்டதாரி. தென்னாபிரிக்காவில் வாழ்ந்த லாசரசின் தாயும் தந்தையும் காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார்கள். தென்னாபிரிக்காவின் நியூகாஸ்சிலில் ( New Castle ) இவர்கள் வாழ்ந்த வீடு காந்தியின் சத்தியாக் கிரகப் போராட்டத்தின்போது அதன் தலைமைச் செயலகமாக இடம்பெற்றது.

காந்தி அடிகளின் போராட்டத்தில் பங்கு பற்றிய தொண்டர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை அதிகாரிகளால் செய்யப்பட்ட கடும் சித்திரவதை காரணமாகப் பலர் உயிரிழந்தனர். இன்னும் பலர் நோய் வாய்ப்பட்டனர். சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்த இளம் தமிழ்ப் பெண் தில்லையாடி வள்ளியம்மை உலகத் தமிழர் தம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். பதினேழு வயதினரான வள்ளியம்மை காந்தியின் போராட்டத்தில் இணைந்து சிறை சென்றார். சிறையில் அனுபவித்த சித்திரவதை காரணமாக இவர் விடுதலையாகிச் சில நாட்களில் உயிர்நீத்தார். வள்ளியம்மையின் பெற்றார் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், தில்லையாடிக் கிராமத்தில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வள்ளியம்மைக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளார்.

சுரங்கத் தொழில் செய்யும் குடும்பத்தில் வள்ளியம்மை 1898 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க நகரான ஜோகானஸ்பேர்க்கில் பிறந்தார். தனது சத்திய சோதனை என்ற தன் வரலாற்று நூலில் காந்தி அடிகள், 'வள்ளியம்மையின் உடல் மறைந்தாலும் அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று எழுதியுள்ளார். வள்ளியம்மையைப் போல் நாகப்பன், நாராயணசாமி போன்ற தமிழ் இளைஞர்களும் சிறையில் மாண்டிருக்கிறார்கள். தமிழ்த் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகக் காந்தி தமிழ் கற்றார். தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் இந்தியன் ஒப்பீனியன் ( Indian Opinion ) என்ற ஆங்கிலப் பத்திரிகையைக் காந்தி நடத்தினார். தமிழர்களின் வாசிப்பிற்காக இந்தப் பத்திரிகையைத் தமிழிலும் அவர் வெளியிட்டார். இந்தியாவின் வட இந்திய ஆட்சியாளர்கள் மத்தியில் தமிழர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு பல தசாப்தங்களாக நிலவுகிறது. ஆனால் தமிழர்கள் பற்றிக் காந்தி கொண்டிருந்த கருத்து வித்தியாசமானது. 'தென்னாபிரிக்க இந்தியரிடையேயுள்ள பல்வேறு பிரிவினர்களில், போராட்டத்தின் கடுமையைத் தாங்கியவர்கள் தமிழர்களே. உயிர்த்தியாகம் செய்தவர்களில் மிக அதிகமானவர்கள் தமிழர்களே. கடைசிவரை போராடியவர்களும் கடைசியாகச் சிறையில் இருந்து வெளிவந்தவர்களும் தமிழர்களே" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். காந்தி சொன்னதையாவது வட இந்தியர்கள் கருத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

நன்றி: ஈழநாதம் (18.02.08)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.