Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்நவீனத்துவம் முதல் ‘பின்நவீனத்துவம் மீதான மார்க்சிய விமர்சனம்’ வரை :

Featured Replies

பின்நவீனத்துவம் முதல் ‘பின்நவீனத்துவம் மீதான மார்க்சிய விமர்சனம்’ வரை : யமுனா ராஜேந்திரன்

≡ Category: யமுனா ராஜேந்திரன், கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅

1

முக்கியமில்லாத வகையிலான ஒரு முன்குறிப்பு : “தத்துவ விளக்கும் ‘இல்லாததால்’ தான் ‘அவர்கள்’ கோபத்துடன் எழுதுகிறார்கள்” எனச் சொல்லும் சி ராஜேஸ்குமார் என்கிற ராகவனுக்கான ‘சிறப்பு’ அழைப்பு இது.

நான் பேசுகிற விடயங்கள் குறித்து அவரது ‘தத்துவ விளக்கத்தினை’ முன் வைக்குமாறு நான் அவரை, ‘கோபத்துடன்’ அல்ல ‘பணிவுடன்’ கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்சியம் - பெண்ணிலைவாதம் - தலித்தியம் என்றெல்லாம் தத்துவப் பின்னணியுடன் பேசப் புறப்பட்டிருக்கும் எனது அன்புக்கும் ‘ப்ரியத்திற்கும்’ உரிய நிர்மலா ராஜசிங்கத்தையும் இவ்விவாதத்தில் பங்கேற்குமாறு ‘பிரியத்துடன்’ அழைக்கிறேன்.

தத்துவ விளக்கம் ‘அற்றவன்’ என நீங்கள் கருதுகிற ஒருவனின் ஒரு எளிமையான அழைப்பு இது. ‘மார்க்சியத்துக்குப் பிந்திய’ (post-marxist) சிந்தனை, பின்நவீனத்துவம், தேசியம், தமிழக தலித்தியம் மற்றும் புகலிட தலித்தியம் என அனைத்தும் பற்றிக் கலந்துரையாடுவதற்கானதாக உங்களை நோக்கி இந்த அழைப்பை நான் விடுக்கிறேன்.

‘வேறு இடங்களில்’ போய்ச் ‘சொந்தப் பெயரில்’ பின்னூட்டம் போடுவதை விட்டுவிட்டு, நேரடியாகவே இந்தக் கலந்துரையாடலுக்கு வருமாறு இருவரையும் நான் அழைக்கிறேன்.

கட்டுரையின் விரிவு கருதி, கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிடுகிறேன்.

(1) முதல் பகுதியில் பின்நவினத்துவம் மற்றும் பின்-மார்க்சியம் தொடர்பான ‘எனது வாசிப்பை’ முன்வைத்து, இவைகள் குறித்த மார்க்சியர்களின் விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

(2) இரண்டாம் பகுதி ‘தேசியம் முதல் தமிழக தலித்தியம் மற்றும் புகலிட தலித்தியம் வரை’ என்பதாக இருக்கும்.

(3) மூன்றாம் பகுதியான இறதிப் பகுதி ‘தன்னிலை விளக்கம் அல்லது தனிநபர் தாக்குதல்’ எனும் பிரச்சினை குறித்ததான, ‘கடவுளின் மறுபக்கம் மிருகம்’ எனும் தலைப்பிலான இக்கட்டுரை, ‘நகல் போலி தலித்தியம்’ மற்றும் பின்நவீனத்துவத்துக்காக இன்று கச்சைகட்டி ‘வழக்காடும்’ அ.மார்க்ஸ், ராகவன், நிர்மலா, ஷோபா சக்தி மற்றும் சுகன் போன்றவர்களை நோக்கிச் சில ‘நேரடியான’ கேள்விகளை முன் வைப்பதாக இருக்கும்.

பத்து நாட்கள் கால இடைவெளியில் இரண்டாவது கட்டுரையும், அதிலிருந்து பத்து நாட்கள் கால இடைவெளியில் மூன்றாவது கட்டுரையும் வெளியாகும் என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘பிரதி இன்பத்தை’ எதிர்பார்த்து அல்லது ‘சொந்தக் கவலையை மறந்து சிரிக்க’ நினைப்பவர்கள், இங்கு வந்து ‘தலையிடியை’ வாங்கிக்கொண்டு, பிற்பாடு, ‘வருத்தப்பட்டுப் பாரம் சுமந்து’ பின்னூட்டம் போட நினைக்காமல் இப்போதே எனது கட்டுரைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்பது எனது பணிவான வேண்டுகோள்.

ஏனெனில், இக்கட்டுரைகள், தத்துவம், அரசியல் மற்றும் ‘தனிநபர் தாக்குதல்கள்’ கொண்டது என்பதை நான் முன்பாகவே அறிவித்து விடுகிறேன்.

2

பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வது என்பது எவ்வகையில் சாத்தியம்?

இன்றைய நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில், எமது அரசியல் செயல்பாட்டுக்கு பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வது எந்த வகையில் பயன்படும்?

இன்று நாம் எதிர்கொள்கிற இந்துத்துவம், இனத்தேசியம், மார்க்சிய ஜனநாயகம், சமத்துவம், மனித உரிமை, தலித்தியம், பெண்ணியம், சூழலியல் நெருக்கடிகள், அதிகார வர்க்க கம்யூனிசம், தொழில்நுட்ப விஞ்ஞானம், உலகமயமான முதலாளித்துவம் போன்றவற்றைப் புரிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து ஒரு சாத்தியமான எதிர்ப்பமைப்பைக் கட்டவும் என்ன வகையில் பின்நவீனத்துவ வாசிப்பு என்பது பயன்படும்?

பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள, அச்சிந்தனை தோன்றிய வரலாற்றுக் கட்டத்தை நாம் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை மூன்று வகைகளில் சாத்தியப்படுத்த முடியும்.

(1) முதலாவதாக, அன்று நிலவிய வரலாற்று தத்துவச் சூழலின் விமர்சனம் என்ற அளவில் எதன் நிராகரிப்பாக, எதனது மாற்றாக இந்தச் சிந்தனை தோன்றியது, இந்தச் சிந்தனைக்கு ஏதேனும் முன்வரலாற்றுத் தொடர்ச்சி உண்டா எனும் கேள்விக்கு விடை காண வேண்டியிருக்கிறது.

மேற்கத்தியத் தத்துவ மரபில் ‘சந்தேகவாதத் தத்துவமும்’ உண்டு. இம்மரபைச் சேர்ந்தவர்கள் கிரேக்க, ரோமானியத் தத்துவங்களைச் சந்தேகத்தோடு பார்த்தவர்கள். சந்தேகவாத மரபில் பிரதானமாக ‘மூன்று ஹெச்கள்’ எனப்படும் ஹெஸ்ரல், ஹெகல், ஹைடேக்கர், ஆகியோரும் இருபதாம் நூற்றாண்டின் தத்துவ, அரசியல், இலக்கியப் போக்குகளைத் தீர்மானித்தவர்களாய் இருந்த மார்க்ஸ், நீட்ஷே, பிராய்ட் ஆகியோரும் குறிப்பிடப்படுவார்கள்.

பின் மூவரே பின்நவீனத்துவ உரையாடல்களில் அதிகமும் இடம் பெறுபவர்கள்.

லியோதார்த், பூக்கோ, போத்ரிலார், தெரிதா போன்ற பின்நவீனத்துவவாதிகளையும் நாம் சந்தேகவாத மரபினராகத்தான் பார்க்க முடியும். மார்க்ஸின், ‘எல்லாவற்றையும் இரண்டாக்கிப் பார்ப்பது, எதையும் சந்தேகப்படுவது’ என்பதையும், நீட்ஷேயின் ‘அனைத்து மதிப்பீடுகளையும் மறுமதிப்பீடு செய்வது’ என்பதையும் இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும்.

பாசிசம், ஸ்டாலினிசம், சோசலிசம் போன்றவை பற்றிய விமர்சனங்களாக எழுந்த ஜெர்மனியின் ‘பிராங்க்பர்ட் பள்ளி’ச் சிந்தனையாளர்களிடமும், ‘பிரெஞ்சுத் தத்துவப் பள்ளி’ச் சிந்தனையாளர்களிடமும் இந்த சந்தேகவாத மரபின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

பாசிசம், ஸ்டாலினிசம், அரசியல் எதேச்சாதிகாரம் போன்ற அனுபவங்களிலிருந்து ‘முற்றுப்பெறாத நவீனத்துவத் திட்டத்தை நாம் நிறைவாக்க வேண்டும்’ என்றார் பிராங்க்பர்ட் பள்ளியைச் சேர்ந்த ஜர்கன் ஹேபர்மஸ்.

மாறாக, பிரெஞ்சுத் தத்துவப் பள்ளியைச் சேர்ந்த லியோதார்த் ‘நவீனத்துவத் திட்டம் காலாவதியாகி விட்டது’ என்றார். நவீனத்துவம் முன்வைத்த ‘பெருங்கதையாடலுக்கு’ எதிரான ‘குறுங்கதையாடல்’ திட்டமாக பின்நவீனத்துவ நிலையை அவர் முன்வைத்தார்.

இங்கேயொரு முக்கியமான கேள்வி வருகிறது.

நவீனத்துவத்துக்கு முந்திய சமூகத் திட்டமாக எது இருந்தது?

நவீனத்துவ மறுமலர்ச்சிக் காலத்தின் சமூகத் திட்டம் என்ன?

ஹெஸ்ரல், ஹெகல், ஹைடேக்கர் எந்த மதிப்பீடுகளை சந்தேகத்துக்கு உள்ளாக்கினார்கள்?

மார்க்சும் எங்கெல்சும் எதைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கினார்கள்?

இந்தப் பின்நவீனத்துவ யுகத்தில், லியோதார்த்தும் பூக்கோவும் எந்த மதிப்பீடுகளைச் சந்தேகிக்கிறார்கள்?

இவர்கள் அந்தந்த வரலாற்றுக் கட்டத்தில் மாற்று மதிப்பீடுகளாக முன்வைத்தவை என்ன?

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் விமர்சனத் தத்துவத்தை முன்வைத்த இம்மானுவேல் காண்ட், ‘தன்னால் அறிய முடியாத புனித அமைப்பு ஒன்றுக்கு ஆட்படுவதினின்று’ மனிதனை விடுவித்தார். ‘தன்னைத் தானே ஆண்டு கொள்வதற்கான’ வழிமுறையாக மனித இடையீட்டை முன்வைத்தார். அறிவதற்கும் அதனது எல்லைகளைத் தெரிவதற்கும் அறிவுநிலையே காரணமாக, ஆதாரமாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அறிவுநிலை மீதான தாக்குதலை நீட்ஷே தொடுத்தார். ‘கடவுள் இறந்து விட்டான், உண்மை, அறம், அறிவு எல்லாமே பிரமைகள்’ என்றார் நீட்ஷே.

மார்க்ஸ், ‘மனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட முன்னேற்றம்’ எனும் கருத்தை முன்வைத்தார். ஆனால், மார்க்ஸ் சொன்ன மனித சுதந்திரம், முன்னேற்றம் இன்றளவிலும் சாத்தியமாகவில்லை. இன்னும், அது ‘முதலாளித்துவ இலட்சியவாதமாகவும்’ சொல்லப்பட்டது.

நீட்ஷே குறித்த அக்கறை இன்று வரையிலும் மேற்கத்திய தத்துவவாதிகளிடம் நிறைந்து காணப்படுகிறது. இருத்தலியல் மார்க்சியரான ஸார்த்தரிடமும், விளிம்பு நிலை மக்கள் பற்றிப் பேசிய பூக்கோவிடமும், கட்டுடைப்பின் அரசியல் தன்மை பற்றிப் பேசிய தெரிதாவிடமும் நீட்ஷே பற்றிய அக்கறையை நாம் பார்க்கலாம்.

‘நீட்ஷே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தத்துவவாதி’ என்கிற விவாதம் தொடர்ந்து மேற்கில் நடந்து வருகிறது.

நீட்ஷேயின் ‘அதிமனிதன்’ கிறித்துவ மரபின் ஒடுக்குமுறைக்கு எதிரானவனாகவும், மனிதத் தன்னிலையை மறுத்த, மனித இடையீட்டைத் தவிர்த்த ‘நிறுவன அறவியல் இறுக்கத்துக்கு’ எதிரானவனாகவும், ‘நிலவிய மதிப்பீடுகளை மறுத்து மறுமதிப்பீடுகளை’ முன்வைத்தவனாகவும் இன்றளவும் நீட்ஷேவைக் காண்கிறவர்கள் இருக்கிறார்கள். அதற்கு அவரது பிரதிகளில் இருந்து ஆதாரம் தருகிறவர்களும் உண்டு.

ஆனால், அவரது கருத்துக்களுக்கு நேர்ந்த பாசிச சார்புத் தன்மையை லூக்காக்ஸிலிருந்து, டெர்ரி ஈகிள்டன் ஈராக ஜெர்மன் தோழரும் தமிழருமான தமிழரசன் வரை, எடுத்துக் காட்ட வேண்டிய வரலாற்றுத் தேவையும் இருக்கிறது.

நிலவும் மதிப்பீடுகளுக்கு எதிரான ‘மாற்று அறவியல் மதிப்பீடுகளுக்கான கோரிக்கை, ‘மனித இடையீடு’ போன்றவை குறித்த அக்கறைகள் இருக்கும் வரை, நீட்ஷேவின் பாலான தத்துவவாதிகளின் ஈர்ப்பு தவிர்க்க முடியாததாகும்.

அதே வேளை, அவரது கருத்துக்கள் பாசிசத்துக்குப் பயன்பட்டதையும், பாசிசத்தை ஆதரித்து நின்ற வாட்டிகன் கத்தோலிக்கத் திருச்சபையோடு நடைமுறையில் அது நின்றதையும் எவரும் விவாதத்திலிருந்து தவிர்க்கவும் முடியாது.

ஆனால், இப்படியெல்லாம் புரிந்து கொண்டுதான் நீட்ஷேயை தமிழ்ச் சூழலில் முன்வைக்கிறார்களா என்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது. அதிர்ச்சி மதிப்புக்காகத்தான் இவர்கள் அவரது பெயரைப் பாவிக்கிறார்கள் என்பதைத்தான் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

(2) இரண்டாவதாக அன்று நிலவிய அரசியல் பொருளியல் விஞ்ஞானச் சூழல் எத்தகையது, எதனது விமர்சனமாக, எதனது நிராகரிப்பாக இந்த பின்நவீனத்துவ அரசியல் தோன்றியது, இந்த அரசியலுக்கு, ஏதேனும் முன்வரலாற்றுத் தொடர்ச்சி உண்டா என்பதைக் குறித்துக் கவனிக்க வேண்டும்.

மார்க்சியப் பொருளியல் அறிஞரான எர்னஸ்ட் மண்டல், 1975 ஆம் ஆண்டு வெளியான தனது ‘பிற்கால முதலாளித்துவம்’ எனும் நூலில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறார்.

அ. வரலாற்று ரீதியில் 1848க்குப் பின்னான காலம், விஞ்ஞான தளத்தில் நீராவியால் உந்தப்பட்ட சக்தியையும், பொருளாதார தளத்தில் சந்தை முதலாளித்துவத்தையும், மனிதார்த்த தளத்தில் யதார்த்தவாதத்தையும் கொண்டு அமைந்ததாகும்.

ஆ. 1890க்குப் பின்னான காலம், விஞ்ஞான தளத்தில் மின்சாரம் மற்றும் அழுத்த இயந்திரங்களையும், பொருளியல் தளத்தில் ஏகபோக முதலாளித்துவத்தையும், மனிதார்த்த தளத்தில் நவீனத்துவத்தையும் கொண்டமைந்ததாகும்.

இ. 1940களிலிருந்து சமகாலம் வரை, விஞ்ஞான தளத்தில் மின்னியலாலும் அணுசக்தியாலும் உந்தப்பட்ட உபகரணங்களைக் கொண்டதாகவும், பொருளியல் தளத்தில் பன்னாட்டு முதலாளித்துவமும், மனிதார்த்த தளத்தில் பின்நவீனத்துவ நிலையும் கொண்டு அமைந்ததாகும்.

மூன்றாவது கட்டத்தில் சந்தை முதலாளித்துவம் என்பது ‘தேர்வுகளை’ அதிகப்படுத்தியது. ‘அரசுக் கட்டுப்பாட்டைக்’ குறைத்துக் கொண்டது. கணினிகளை உபயோகப்படுத்தி, ‘கொஞ்சம் உள்ளீடு, நிறைய இலாபம்’ என்பதுதான் அதனது கோட்பாடாக இருந்தது. இந்தக் கோட்பாடுதான் இன்றும் பொருளியல், கலாச்சார, அரசியல் தளங்களை ஆளுவதாக ஆயிற்று.

பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பாவில் தேசங்களின் உருவாக்கம் என்பது நடந்தேறுகிறது. பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் என்ற கருத்துக்கள் முன்வருகின்றன. தனிமனிதன், சமூகம், சமத்துவம் போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன.

‘தன்னிலை’ என்பது சமூக மாற்றம் பற்றிய விவாதங்களில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தனிமனிதத் ‘தேர்வு’ என்பதும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

பாசிசமும், ஸ்டாலினிய சோசலிசமும் ‘தன்னிலையை மறுத்து’ - ‘அமைப்பைக் கட்டுவதை’ முன்பாக வைக்கின்றன.

மார்க்சின் தத்துவ கையெழுத்துப் படிகள் 1930ல் பிரசுரமானவுடன், ‘தன்னிலை’ பற்றிய விவாதங்கள் தோன்றுகின்றன. ‘இருத்தலியல் மார்க்சியம்’ இந்தக் கட்டத்தில் தோன்றுகிறது. இருத்தலியல் ‘தன்னிலையை அதீதமாக’ வலியுறுத்தும்போது, தன்னிலையைக் கட்டமைப்பதில் ‘அமைப்புகளின் முக்கியத்துவத்தை’ வலியுறுத்தி, தன்னிலையை ‘விஞ்ஞான சூத்திரத்திற்குள்’ அடக்கிவிடும் முனைப்புடன், ‘அமைப்பியல்’ தோன்றுகிறது.

அது ‘அனைத்தையும் அறிந்துவிடும் விஞ்ஞானம்’ எனத் தன்னைக் கோரிக் கொண்டது. ‘அமைப்பை முன்னிறுத்துவது’ மறுபடியும் அதனது அதீத எல்லைகளுக்குச் சென்றபோது, மீண்டும் ‘தன்னிலையை வலியுறுத்தியதோடு’, ‘பிளவுண்ட தன்னிலையை’ முன்னிறுத்தி அமைப்பியலின் ‘வித்தியாசம்’ என்கிற இரட்டை நிலையை எடுத்துக் கொண்டு, அந்த வித்தியாசத்தில் ‘பன்முக வித்தியாசம்’ என்கிற நிலைபாட்டை பின்நவீனத்துவம் மேற்கொள்கிறது.

இவ்வகையில், இருபதாம் நூற்றாண்டில் பிரெஞ்சுத் தத்துவ மரபில் தன்னிலை, அமைப்பு, மறுபடியும் தன்னிலை, ஆனால், இம்முறை ‘வித்தியாசமும் பன்முகமும் கொண்ட தன்னிலை’, அமைப்பு என்கிற சுற்று வந்திருக்கிறதைப் பார்க்க முடியும்.

சுதந்திரம், சமாதானம், சகோதரத்துவம், பாசிசம், ஸ்டாலினியம் போன்ற அரசியல் கட்டங்களை இந்தத் தத்துவச் சர்ச்சைகள் தாண்டி வந்திருக்கின்றன. சமவேளையில் ‘நுகர்வில் அதீதத் தேர்வு’ என்கிற ‘பிற்கால முதலாளித்துவ’ உற்பத்தி முறையும் வந்திருக்கிறது.

அரசியலில் பன்முகம், வாழ்க்கை மோஸ்தர்களில் பன்முகம், அழகியலாக்கம், அன்றாடப் புரட்சி போன்ற வாழ்க்கைப் போக்குகளுக்கான கலாச்சார தர்க்கத்தை, பொருளியல் நுகர்ச்சியில் தேர்வு என்கிற இந்த அம்சம் வழங்குகிறது.

இவ்வகையில் தத்துவப் போக்குகளையும் அரசியல் போக்குகளையும் பொருளியல் போக்குகளையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. இவைகளுக்கிடையிலான உறவு இயங்கியல் ரீதியானதாகும்.

இப்போது மறுபடியும் பிளவுண்ட தன்னிலை அல்லது பற்பல தன்னிலைகள், வித்தியாசம், பன்முகம் போன்ற விவாதங்களை பிற்கால முதலாளித்துவம் என்கிற அமைப்புடன் வைத்துப் பார்க்கும் கோட்பாட்டு விவாதங்கள் தோன்றுகின்றன.

இவ்வாறு தன்னிலை - அமைப்பு என்கிற விவாதம் இன்றைய பிற்கால முதலாளித்துவக் கட்டத்தில் வேறொரு நிலையை எட்டியிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இவ்வகையில்தான், பின்நவீனத்துவத்தை ‘முதலாளியக் காலகட்டத்தின் ஒரு தருணமாக’ பிரெடெரிக் ஜேம்சன் போன்றவர்கள் வரையறுக்கிறார்கள்.

ஹேபர்மாஸ் இதை ‘நவீனத்துவம் : முடிவுபெறாத திட்டம்’ என்பார். இந்தப் ‘பிளவுண்ட உலக முரணை தொடர்பாடல் செயல்பாடு மூலம் தீர்க்கலாம்’ என்கிறார் அவர். இது ‘செயலுக்குப் பதிலாக பேச்சை முன்வைக்கிறது, இந்தத் திட்டம் செல்லுபடியாகாது’ என்கிறார் லியோதார்த்.

இம்மானுவல் காண்ட், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களின் மரபை லியோதார்த் ‘பெருங்கதையாடல்’ என்கிறார்.

இன்னொரு பிரெஞ்சுக் கோட்பாட்டாளரான பெலிக்ஸ் கித்தாரி, பெருங்கதையாடல்களுக்கு எதிரானவரான லியோதார்த் பற்றிய தனது நிலையை விளக்கும்போது, ‘அவரது கோட்பாட்டில் தத்துவம் என்று ஏதும் இல்லை, காற்றில் இருக்கிற ஏதோ ஒன்று அது’ என லியோதார்த்தை அவர் நிராகரித்து விடுகிறார்.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தீவிர தத்துவம் (Radical Philosophy), 1994 ஆம் ஆண்டு இதழ் நேர்முகத்தில், கட்டுடைப்பாளரான ழாக் தெரிதா, லியோதார்த்தின் பெருங்கதையாடல் நிராகரிப்பு பற்றிச் சொல்லும்போது, ‘மகத்தான மனித விமோசனத்துக்கான புரட்சிகரமான அனைத்து உரையாடல்களும் முடிந்து போய்விட்டன என்கிற பிரகடனங்களோடு நான் என்றுமே உடன்போனதில்லை’ எனக் குறிப்பிடுகிறார்.

லியோதார்த் மற்ற தத்துவங்களைப் பார்த்துக் கேட்கிற கேள்வி இதுதான் : ‘நீ சொல்கிற உண்மைதான் ஆதாரமானது என்பதற்கு என்ன ஆதாரம்?’

ஆனால், இந்தக் கேள்வியை ‘அவரையும் நோக்கித் திருப்ப முடியும்’ என்கிற கேள்விக்குள் அவர் போவதில்லை.

அனைத்துக்கும் தீர்விருக்கிறதாக பெருங்கதையாடல் கோரிக்கொள்ளும் என்கிறார் லியோதார்த். ஆனால், பெருங்கதையாடல்களுக்கு எதிராகத் தோன்றிய பின்நவீனத்துவமும் அதைத்தான் செய்கிறது, அது கருத்துச் சொல்லாத துறையோ, அறிவுப் பரப்பென்றோ எதுவுமே விட்டு வைக்கப்படவில்லை. ஆதி முதல் அந்தம் வரை உலகின் சகல பிரச்சினைகளக்கும் அது தனது அபிப்பிராயங்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்து வருகிறது.

(3) மூன்றாவதாக இந்தக் கோட்பாடுகளை முன்வைத்த சிந்தனையாளர்களின் ஈடுபாடுகளாக, அந்த வரலாற்றுக் காலகட்டத்தில் எவையெவை இருந்தன, எந்தவிதமான சொந்த அனுபவங்களின் காரணமாக, எதனது தொடர்ச்சியாக இவர்கள் இந்த அரசியல், பொருளியல், கலாச்சார நிலைப்பாடுகளைத் தேர்ந்து கொண்டார்கள் எனப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பின்நவீனத்துவச் சிந்தனையின் ஆதாரமான தத்துவ, அரசியல் வரையறைகளை வைத்தவராக லியோதார்த்தைக் குறிப்பிடுவார்கள்.

1979 இல் பிரெஞ்சு மொழியிலும், 1984 இல் ஆங்கில மொழியாக்கத்திலும் வந்த அவரது ‘பின்நவீனத்துவ நிலை’ என்கிற புத்தகம்தான் ‘பின்நவீனத்துவ நிலை’ குறித்த மிக ஆதாரமான தத்துவ வரையறைகளை முன்வைக்கிறது. இப்புத்தகம் ‘கியூபெக்’ அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ‘சமகால அறிவின் மீதான ஒரு அறிக்கை’ எனும் வகையில்தான் உருவானது.

லியோதார்த்தின் பின்நவீனத்துவத்திற்கான அரசியல் வேர்களைப் பார்ப்பது இங்கு மிகமிக முக்கியமாகும்.

1956-64 ஆண்டுகளில் லியோதார்த் அல்ஜீரியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வேளையில், அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்துக்கான நடவடிக்கைகளில் பங்குபற்றும் போது, ‘பிரெஞ்சு அரசுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளை’ நேரடியாக அனுபவம் கொள்கிறார். ‘சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்’ என்கிற இடதுசாரி அமைப்பில் அவர் செயலாற்றுகிறார். அந்தக் குழுவின் கருதுகோள் யாதெனில், ‘கம்யூனிஸ்ட் கட்சி அதிகார மயமாக்கப்பட்டுவிட்டது மட்டுமல்ல, அது முதலாளித்துவ இயந்திரத்தின் ஒரு பகுதியாவும் ஆகிவிட்டது’ என்பதுதான். பிற்பாடு இந்தக் குழுவினது நிலைப்பாடும் கெட்டிதட்டிப் போனதினால், அதிலிருந்து விலகிய லியோதார்த், ‘தொழிலாளர் சக்தி’ என்ற பெயருள்ள ‘சூழ்நிலைவாத சர்வதேசியம்’ எனும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். இவ்வியக்கம், 1958 இல் பிரான்ஸில் உத்வேகம் பெற்ற பிராய்டிய சிந்தனையினால் உந்தப்பட்டு, அதியதார்த்த நடவடிக்கைகளை முன்வைத்த ‘ஸர்ரியலிசம் - டாடாயிசம்’ என்ற ஓவியக் கொள்கைகளால் பாதிப்புப் பெற்ற ஒரு அரசியல் இயக்கமாகும்.

இவர்கள், ‘அரசையும் நிறுவனங்களையும் கைப்பற்றி’ மாற்றத்தைக் கொண்டு வருவதில் நம்பிக்கையில்லாதவர்கள். மார்க்சிய வழியிலான இயக்கத்தை நிராகரித்த இவர்கள், ‘அன்றாட வாழ்வுப் புரட்சி’ எனும் நடவடிக்கையைக் கையாண்டார்கள். இவ்வகையில், இவர்கள் அறுதியாக, ‘நிலவிய சமூக அமைப்பின் துணையுறுப்பாக’ ஆகினார்கள் என்பது வரலாறு.

லியோதார்த்தின் பல்வேறு ‘பின்னைய நாள் கருத்தாக்கங்களும்’, அவரது பின்நவீனத்துவ சர்ச்சைகளும், அவர் பாவிக்கும் சொற்றொடர்களும் அவரது இக்காலத்திய எழுத்துக்களில் இருந்துதான் உருவானது.

1966 வரையிலும் லியோதார்த் இவ்வியக்கத்தில் செயல்படுகிறார். அவ்வேளை, பிரான்ஸில் எழுச்சிபெற்று வந்த மாணவர் இயக்கத்தில் சேர்ந்து, மார்ச் 22 இயக்கத்தில் செயல்படுகிறார். 1968 மாணவர் போராட்டத்தில் ‘மாணவர்களும் - தொழிலாளர்களும் - விவசாயிகளும்’ இணைந்து, தெருவில் இறங்கிய வேளை, மார்க்சிஸ்ட் அறிவுஜீவிகளும் தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்காமல் விலகி நின்ற நிலைமையைப் பார்த்த லியோதார்த், ‘மார்க்சியம் காலாவதியாகிவிட்டது’ எனும் முடிவுக்கு வந்தார்.

மார்க்சியப் பகுப்பாய்வை அவர் கைவிடவில்லை. மாறாக, அதனது கேள்விகளை மறுபடியும் மையத்துக்குக் கொண்டு வந்தார். அதனது ‘திட்டம்’ நோக்கிய மதிப்பீடுகளை ‘மறுமதிப்பீட்டுக்கு’ உட்படுத்தினார். இந்தப் பணியை அவர் அல்ஜீரியாவில் இருந்த காலத்திலேயே தொடங்கியிருந்தார்.

அவரது ‘பின்நவீனத்துவ நிலை’ நூலில் முன்வைக்கப்பட்ட பிரதான கேள்விகள் இவைதான் :

அ. பின்நவீனத்துவ சமூகத்தில் முதலாளித்துவம் என்ன நிலையை எடுத்திருக்கிறது? முன்னைய சமூக அமைப்புகளிலிருந்து பின்நவீனத்துவ யுகத்தில் எவ்வாறு உற்பத்தி முறை மாறியிருக்கிறது?

ஆ. இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான அரசியல் வடிவம் என்னவாக இருக்கும்? ஏன்?

இவ்வாறாக, 1968 அனுபவங்கள் அவரது கேள்விகளையும் வரையறைகளையும் அமைத்த கத்திமுனையாக இருந்தது.

முதலாளித்துவ உற்பத்தியையும், தொழில்நுட்பத்தையும் இணைத்ததாக பிற்கால முதலாளித்துவம் இருந்ததை அவர் கண்டார். முன்னைய முதலாளித்துவ உற்பத்தி முறையின் அதிகாரம் ‘தொழிற்சாலையை மையப்படுத்தியதாக’ இருக்க, இன்றைய உற்பத்தி முறையின் அதிகாரம் ‘தகவலை மையமாக’க் கொண்டிருப்பதை அவர் முன்வைத்தார். ‘தகவல் தொழில் உற்பத்திதான் இன்று முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண்’ என்றார் அவர்.

இந்த புதிய நிலைமை, புதிய சமூக அமைப்புகளையும் உருவாக்கியது. ஒரு குறிப்பிட்ட அரசு அதிகாரம் என்பதற்கு மாற்றாக, புதிய நிறுவனங்களில்தான் இன்று அதிகாரம் இருக்கிறது. ஆகவே, ‘பெரும் அரசியல் என்பது சாத்தியமில்லை’. மாறாக, ‘அரசியல் சோதனைகள்தான் சாத்தியம்’ என்றார் லியோதார்த். இதை அரசியல் தளத்தில் மட்டும் செய்யமுடியாது, தொழில்நுட்ப மூலதனம் குவித்திருக்கிற அறிவு, அதிகாரம், தகவல், அந்தத் தகவல் குவித்திருக்கிற அதிகாரங்கள் போன்றவற்றை எதிர்த்துச் சோதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்கிறார் அவர்.

இதன் உச்சமாக, ‘தகவல் அறியும் முழு உரிமையும் அனைவருக்கும் தரப்பட வேண்டும்’ என முதலாளித்துவத்திற்கு ஆலோசனை வழங்குகிறார் லியோதார்த்.

ஆனால், ‘பணத்தைப் பெறுவதற்கான சுதந்திர உரிமையைத் தர வேண்டும் என முதலாளித்துவத்துக்கு மார்க்ஸ் ஆலோசனை வழங்க முடியுமா?’ எனக் கேட்கிறார் மார்க்சியரான இயான் ஹேமில்ட்டன் கிராண்ட்.

3.

1968 என்பது உலக வரலாற்றிலும் பிரெஞ்சு அறிவுத்துறையினர் வரலாற்றிலும் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும்.

லியோதார்த், பூக்கோ, அல்தூஸர், தெரிதா போன்ற அனைவருமே ஏதேனும் ஒரு கட்டத்தில் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவு கொண்டிருந்தனர். இரண்டு காரணங்களால் இத்தகைய அறிவுஜீவிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் முரண்பாடு எழுந்தது.

முதலாவதாக, அல்ஜீரியப் பிரச்சினையில் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரெஞ்சு அரசு ஆதரவு நிலைப்பாட்டை இவர்கள் நிராகரித்தனர்.

இரண்டாவதாக, மாணவர்களும் - விவசாயிகளும் - தொழிலாளர்களும் கிளர்ந்தெழுந்து போராடிய, 1968 பாரிஸ் கிளர்ச்சியை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றதை நிராகரித்தனர்.

ழாக் தெரிதா அல்ஜீரியாவில் பிறந்தவர். மிஷேல் பூக்கோவும், பிரான்சுவா லியோதார்த்தும் அல்ஜீரியாவில் கல்வி கற்பித்தவர்கள். அல்ஜீரியப் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்றவர்கள். இவ்விருவரும் மாணவர், தொழிலாளர் கிளர்ச்சிகளிலும் பங்கேற்றவர்கள். இவர்களது கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாலான எதிர்ப்பு என்பதை, அன்று நிலவிய அதிகார வர்க்க கம்யூனிஸ்ட் கட்சிகள், கட்சிக்குள் நிலவிய ஸ்டாலினியப் போக்குகள் போன்றவற்றின் எதிர்ப்பாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

கோட்பாட்டுச் செயல்பாடற்ற கட்சிகளின் கருத்தியல் வெறுமையிலிருந்துதான் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4

‘பின்-மார்க்சிய’ எனச் சொல்லப்பெறும் ‘உலகம்’ குறித்து பின்-மார்க்சியர்களில் ஒருவரான எர்னஸ்ட் லக்லாவின் கருத்துக்களை நாம் தொகுத்துக் கொள்வோம் :

“ நாம் பின்மார்க்சிய உலகில் இருக்கிறோம் என்று நான் வலியுறுத்துவதற்கு, இன்றைய நாளின் நிகழ்ச்சிகளை முழுக்க அறிகிற வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

என்னளவில் ஐரோப்பிய புரட்சிகர மரபில் மார்க்சியம் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு நிச்சயமாக முடிந்து விட்டது. மார்க்சியத்தின் மையமான கருதுகோள் எது எனப் பார்த்தோமாயின், முதலாவதாக, ‘முதலாளித்துவத்தின் கீழ் ஒற்றைப்படையான சமூகம்’ அதன் அமைப்புக்குள் இருக்கிறது என வலியுறுத்திச் சொல்லும். இந்நிலைமை மேன்மேலும் தொழிலாளி வர்க்கமயமாக்கலுக்கும், இறுதியில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான போராட்டமாக முடியும் என்று சொல்லும். இவ்வகையிலான வரலாற்றுப் போக்கு ‘நிச்சயமாக முழுக்கவும் தவறானதாகும்.

இரண்டாவதாக, ‘தொழிலாளி வர்க்கம்தான் மையப்பாத்திரம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். தொழிலாளி வர்க்கம்தான் வரலாற்றுப் பாத்திரம் என்று மார்க்சியம் சொல்கிறது. மறுபடியும் இந்த மையப்பாத்திரம் என்பது எங்கெங்கும் மறைந்து வருகிறது. மார்க்சியம் என்பது, ‘ஜனநாயகப் புரட்சி என்கிற பரந்த நிகழ்வுப் போக்கில் ஒரு தருணம்’ என்றுதான் கருதப்பட வேண்டும். தாராளவாதத்தைக் ‘குடியுரிமை’ என்ற அம்சத்தில் மட்டும் அங்கீகரிக்கும் சமநிலையை, ‘பொருளாதார ரீதியிலும்’ அனுமதிக்க வேண்டும் என அகலித்தது மார்க்சியத்தின் பங்களிப்பு.

ஆனால், இந்த நிகழ்வுப் போக்கில் மார்க்சியம் என்பது ஒரு அத்தியாயம். புதிய வரலாற்றுப் பாத்திரங்கள் தோன்றிய பிறகு, அதாவது ‘புதிய சமூக இயக்கங்கள்’ தோன்றியுள்ள இன்று, ஜனநாயகப் புரட்சி என்பது பரந்த அடித்தளத்தைக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். நாம் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும் - மார்க்சியம் என்பது ‘அதீதச் சிக்கலான வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட’ ஒரு பிரச்சினை.

மார்க்சியத்தின் கோட்பாட்டு அமைப்பிலிருந்து மிகச் சிலவே இன்று எடுத்துக் கொள்ளப்பட முடியும்.

மார்க்சியம் என்பது புரட்சி பற்றிய கோட்பாடு, முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு, வர்க்கத்தை மையமாகக் கொண்ட சமூகம் பற்றிய கோட்பாடு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், இப்போது இதில் மிகக் கொஞ்சம்தான் இன்றைக்குப் பொருத்தமுள்ளதாக இருக்கும்.

அரசியல் கருத்துக்களின் வரலாறு எனப் பார்க்கும்போது மார்க்சியத்திற்கு இன்று ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்த நிஜம் நிலைத்திருக்கும். அரசியல் பகுப்பாய்வுக்கான முக்கியமான கருவிகள் மார்க்சிய வெளியிலிருந்து எழுந்தன. உதாரணமாக, கிராம்ஸியினால் வடிவமைக்கப்பட்ட மேலாண்மை எனப்படும் கருத்தாக்கம்.

சோசலிசத்தின் இறுதியில் நிற்கிறோம் என நான் நம்பவில்லை.

சோசலிச மரபின் எல்லைகளைப் பார்த்தோமானால், சோசலிசம் எதை நம்பியதெனில், சமூகத்தைத் திட்டமிடும் அரசானது ஓர் உறுதியான சமூக ஒழுங்கைத் தரும் என்பதை. இந்த நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. ஆனால் ஒன்றை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு மாற்றாக எந்த இயக்கமும் இல்லை.

அதாவது, சந்தை போல. அதுவும் அந்த நிலை நோக்கித்தான் செல்கிறது. நாம் இன்று அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், சமூக மறுஉற்பத்தியும் சீராக்கமும் மிகவும் சிக்கலான செயல்போக்கு ஆகும். சமூகப் பிரச்சினைகளின் பன்முகப்பட்ட புள்ளிகளிலிருந்து தொடரத் துவங்கும் இது, பல்வேறு சமூகப் பாத்திரங்களின் வழி செயல்படுகிறது. இதனை அங்கீகரிப்பதானது ஒரு ஜனநாயகமயமான திசை நோக்கி நம்மைக் கொண்டு செல்கிறது.

ஏனெனில், இது பல்வேறுபட்ட பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருக்கிறது. முடிவெடுப்பதில் எல்லோருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இப்படித்தான் நான் சோசலிசத்தின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். ‘பொருளாதார வாழ்வை ஜனநாயகப்படுத்துவதாக, சமூகத்தைச் சீரமைப்பதாக’ நான் சோஷலிசத்தை நான் பார்க்கிறேன்.

சோசலிசத்தின் செவ்வியல் கருத்தானது, சமூகத்தின் முழுச் சீரமைப்பும் வரைமுறையற்ற ஒரே சமூகப் பிரிதிநிதியால், சர்வதேசிய வர்க்கத்தினால், அழிவுக்குச் செல்லும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்கும் என்று சொல்கிறது. ஆனால், இன்று அனைத்து ‘சமூக பிரதிநிதித்துவ சக்திகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன’. அவர்களது ‘இணக்கமும் பங்கெடுப்புகளும்’ தான் இன்று ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

எதிர்காலத்தை மனித அளவுகோலின்படி நாம் உருவாக்க வேண்டும். மாறாக, எதேச்சாதிகாரக் கனவின் மூலமும், வரைமுறையற்ற வரலாற்றுப் பிரதிநிதியின் மூலமும் உருவாக்க முடியாது.

இதன் அர்த்தம், ஒற்றைச் சமூகச் சீரமைப்பு என்பது இனிச் சாத்தியமில்லை. சோசலிச சமூகத்தில் கலப்புப் பொருளாதாரம்தான் நிலவும். சமூகத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிற ‘பன்முகச் சக்திகள்தான்’ சோசலிச சமூகத்தில் இருக்கும்.

இந்த ஜனநாயகமயப்படுத்துதல் என்பது பொருளாதார வெளியையும் தாண்டி, வேறு வெளிகளுக்கும் செல்ல வேண்டும். மேற்கு ஐரோப்பாவில் இன்று நாம் அதிகரித்தபடியில் நிறவாதம் உருவாகி வருவதைப் பார்க்கிறோம். அது பிற பிரச்சினைகளோடு பார்க்க அதிகமாகக் குடியேற்றத்துடன் தான் தொடர்பு கொண்டிருக்கிறது.

நிச்சயமாக கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச அரசுகளின் வீழ்ச்சி என்பது ஜனநாயக சக்திகளின் வெற்றி மட்டும் அல்ல. ஒரு சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் என்பது தானாகவே நிகழக்கூடியது அல்ல. யூத எதிர்ப்பும் எல்லா வகையிலான துவேஷங்களும் நிறைந்து கிடக்கின்றன. அடுத்து வருகிற காலங்களில் ‘ஜனநாயகப் போராட்டங்களானது எதேச்சாதிகாரத்தை எதிர்த்ததாக இருக்காது. மாறாக, அனைத்து வகையிலுமான பிற்போக்குக் கருத்தியல்கள், முற்சாய்வுகளுக்கும் எதிரானதாக இருக்கும்’.

நவீன வரலாற்றில் உலக அளவில் நம் காலத்தில்தான் சர்வதேசிய அளவில் கறாராகப் பிரிக்கும் கோடு எதுவும் நமக்கிடையில் இல்லை.

கெடுபிடிப் போருக்கு முன்னால் பாசிசம் இருந்தது. அதற்கு முன்னால், ஐரோப்பிய அதிகாரங்களுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள் இருந்தன. ஆனால், இம்மாதிரியான பிரிவுகள் இல்லாத உலகத்திற்குள் நாம் நுழையப் போகிறோம். வரலாற்றுச் செயலுக்கு ஒரு முற்றிலும் புதிய சூழலை அது வழங்கப் போகிறது.

இப்போது மிக முக்கியமான விஷயமாகப்படுவது என்னவென்றால், ‘ஜனநாயகமும் குறிப்பான தன்மையும் எவ்வாறு இணங்கிப் போக முடியும்’ என்பதுதான். மிகச் சரியாக அப்படித்தான் சொல்கிறேன்.

பல்வேறு சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்துச் சொல்கிறேன். குறிப்பான தன்மை என்பது பல்வேறு வகைகளில் வெளிப்படும். ‘அதன் விளைவு ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை’. வரவிருக்கும் காலங்களில் இந்த இரண்டு பிரச்சினைகள்தான் மிகப் பெரிதாக வரப் போகிறது.

ஒரு புறம் ‘வித்தியாசமாக இருப்பதற்கான உரிமை’. அதிலிருந்து வெடித்தெழும் எல்லா வகையிலுமான ‘குறிப்பான’ தன்மைகள். முன்பு இது உலக மதிப்பீடுகள் என்பதற்குள் சில அம்சங்களை வரையறைகளுக்கு உட்பட்ட முறையில் கொண்டிருந்தது. இது பகுதியளவில் கெடுபிடிப் போரின் விளைவுகளாகும். இப்போது இந்த உலகளாவிய பரிமாணம் என்பது இல்லை.

குறிப்பான தன்மை என்பது சுதந்திரமாக வளர்ந்து வருகிறது. இது அதிகரித்த அளவில் பல வகைகளில் வளரப் போகிறது.

இந்த அதிகரித்த அளவிலான குறிப்பிட்ட தன்மையையும், ஜனநாயகத்தையும் எவ்வாறு இணங்கிப் போகச் செய்வது என்பதுதான், வரப் போகிற காலங்களில் மிகப் பெரிய கேள்வியாக வரப் போகிறது. இது தெளிவாக இருக்கிறதென நான் நினைக்கவில்லை. அதாவது, குறிப்பிட்ட தன்மை ஜனநாயக வழிமுறை நோக்கித்தான் வளரப் போகிறதா எனத் தெரியவில்லை.

ஜனநாயகத்துக்கும் குறிப்பிட்ட தன்மைக்கும் இடையிலான இந்தப் பதட்டம் இடதுசாரிகளுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

சோசலிசம் எனும் உரையாடலின் கீழ், பன்முக சமூக அடையாளங்கள் ஆதிக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்று நான் எப்போதுமே நினைத்து வந்திருக்கிறேன். தேசிய வெகுஜனப் பரிமாணம் என்பது ஒரு முக்கியமான தீர்மானிக்கும் அம்சம் என்று நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன். இடதுசாரிகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விவாதம், அவர்கள் வர்க்கத்தை மையப்படுத்திக் கொண்டு வந்தது.

இன்றைய குறிப்பான தன்மைகள் என்பது பிற்போக்குத்தனமாகப் போகும் என நான் நினைக்கவில்லை. ஆனால், ஏன் அவை ஜனநாயகம் நோக்கித்தான் வர வேண்டும் என்பதற்கும் எந்த முகாந்திரமான காரணங்களும் இல்லை. இது ஒரு அரசியல் போராட்டம். விரைவாகத் தீர்மானித்துச் சொல்ல முடியாத ஒரு போராட்டம். நிச்சயமாக.

வரலாறு முழுக்கவும் பார்த்தால், மறுமலர்ச்சியுகம் தோற்றுவித்த அரசியல் சித்திரங்கள், சர்வதேசிய மதிப்பீடுகள் போன்ற விஷயங்கள் இடதுசாரிகளைப் பிடித்து ஆட்டிக் கொண்டு வந்திருப்பதைப் பார்க்கலாம். நான் முழுக்கவும் அந்த மரபை மறுக்கவில்லை. அதிக அளவிலான இனமையவாதம் அதில் இணைக்கப்பட்டிருந்தது.

இன்று நமக்கு முன்னால் இருக்கிற மிகப் பெரிய சவால் யாதெனில், நம் சிந்தையில் இருக்கிறதுக்கு மாற்றாக, அதிகரித்த அளவில் பிளவுண்டிருக்கிற இன்றைய உலகில் ஜனநாயக அவாக்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதுதான்.

சர்வதேசியத்துக்கான யுகம் என்பது நிச்சயமாகவே முடிந்து விட்டது”.

5.

அமெரிக்கரான பிரெடெரிக் ஜேம்ஸன் தான் பின்நவீனத்துவத்தை ‘மார்க்சிய தர்க்கத்தின் வழியில்’ கோட்பாட்டு உருவாக்கம் செய்தவரில் முதன்மையானவர்.

இன்று உலக அளவில் இயங்கி வரும் மார்க்சியர்களில் மிக முக்கியமானவர் அவர். அமெரிக்காவின் டுயூக் பல்கலைக்கழகத்தில் ‘ஒப்பியல் இலக்கியம்’ படிப்பிக்கும் பேராசிரியராக அவர் இருக்கிறார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவு கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு, ‘லண்டன் நியூ லெப்ட் ரிவியு’, ஜூலை-ஆகஸ்டு இதழில் எழுதிய, பின்நவீனத்துவம் பற்றிய ஒரு கட்டுரைதான் பின்னாளில் விரிவாக்கப்பட்டு முழு நூலாக ‘பின்நவீனத்துவம்: பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம்’ எனும் பெயரில் வெளியானது.

அதற்குச் சில காலம் முன்பாக, பின்நவீனத்துவத்தின் தந்தை எனப்படுகிற லியோதார்த்தின் ‘பின்நவீனத்துவ நிலை’ எனும் நூல் பிரெஞ்சு மொழியில் 1979 ஆம் ஆண்டிலும், அதனது ஆங்கில மொழியாக்கம் 1984 ஆம் ஆண்டிலும் வெளியானது. லியேதார்த்தினது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன்தான் ‘விமர்சன முன்னுரையை’ எழுதியிருந்தார்.

லியோதார்த் எவற்றைப் ‘பெருங்கதையாடல்’ என்கிறார் என வினவும் ஜேம்ஸன், தொடர்ந்து சொல்கிறார்:

அ. முதலாவாதாக, ‘விஞ்ஞானத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘மக்களை விடுதலை செய்யும்’ விமோசனக் கோட்பாடுகள், குறிப்பாக, அமெரிக்கப் பிரெஞ்சுப் புரட்சிகளுக்கு ஆதர்ஸமாக இருந்த, இம்மானுவல் காண்ட் போன்றவர்கள் வலியுறுத்திய, பதினெட்டாம் நூற்றாண்டுப் பகுத்தறிவை லியோதார்த் இங்கு கவனம் கொள்கிறார்.

இலட்சிய அடிப்படையாக ‘கட்டுக் கதைகளிலிருந்து பகுத்தறிவு தம்மை விடுவிக்கும்’ என்ற நம்பிக்கை அப்போது இருந்தது.

லியோதார்த்துக்கு இது பொய்த்துப் போன ‘முதல் பெருங்கதையாடல்’.

ஆ. இரண்டாவதாக, மறுமலர்ச்சி யுகத்திலிருந்து தோன்றிய ‘அறிவுநிலையை அல்லது யூகத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற விஞ்ஞானத்தின் அடிப்படையிலான அறிவை’ அவர் கவனம் கொள்கிறார். இது ஹெகல் போன்றவர்களிடமும், பத்தொன்பதாம் நூற்றாண்டு நேர்க்காட்சிவாதத்திலும் செயல்பட்டது. லியோதார்த்துக்கு இது பொய்த்துப் போன ‘இரண்டாவது பெருங்கதையாடல்.

இ. மூன்றாவதாக, இந்த இரண்டு பெருங்கதையாடல்களுக்கும் இடையில், இரண்டு மாதிரிகளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருப்பதால், தான் சொன்னதிலிருந்து பொய்த்துப் போனதால், ‘மார்க்சியத்தையும் அவர் பெருங்கதையாடல்’ என்று இவற்றுடன் சேர்த்து விடுகிறார்.

இங்கே வேடிக்கை என்னவென்றால், இந்தப் பெருங்கதையாடல்கள் பற்றி அவர் செய்வதும், நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்திற்க்குப் போகும் பாதையில் அவர் மேற்கொள்வதும் ஒரு ‘எதிர்நிலைப் பெருங்கதையாடலைத்தான்’. நவீனத்துவக் கதையாடல் குறித்த ‘நம்பிக்கையும்’, கதையாடல் பற்றிய ‘அக்கறையும்’ இல்லையென்றால், ‘எதிர்நிலையிலான கருத்தாக்கம்’ தோன்றியிருக்காது.

ஆனால், பெருங்கதையாடல் சம்பந்தமான இந்த எண்ணமும், விஞ்ஞான சிந்தனையும் ‘முற்றிலும் உடனடியில் தன் கையில் கட்டுப்பட்டிருப்பது சாத்தியம்’ என்று அவர் கருதிக் கொள்வதும் ஆச்சரியம்தான்.

‘பின்நவீனத்துவ நிலை’யை ஜேம்ஸன் கீழ்வருமாறு வரையறை செய்கிறார்:

அ. மறுமலர்ச்சி யுகத்தைப் பற்றிய சந்தேகம் என்பது, உண்மைக்கும் பொய்க்கும் இடையில் ‘நிச்சயமான அடிப்படையைச்’ சார்ந்திருப்பதன் மூலம், ‘விஞ்ஞானத்துடன் மிக நெருங்கிய மரபாக’ அது இருக்கிறது.

பின்நவீனத்துவ அறிவு மரபு என்பது இதுதான்.

ஆ. மரபுரீதியான ‘மனிதாபிமானம்’ மற்றும் ‘முன்னேற்றம்’ போன்றவற்றின் மீதான பின்நவீனத்துவத்தின் ‘நிச்சயமின்மை’. இதற்கான அரசியல் ரீதியிலான சான்றுகளை பாசிசம், எதேச்சாதிகார சோசலிசம் போன்றவைகள் அதற்குக் கொடுத்திருக்கின்றன.

இ. முன்னெப்போதும் இல்லாத வகையிலான வெகுஜன ஊடக வளர்ச்சி, குறிப்பாக காட்சிக் கலாச்சாரத்தின் வளர்ச்சி, தொலைக்காட்சி, சினிமா மற்றும் விளம்பரம் போன்ற 1950 களுக்குப் பின்னான அதீத வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி போன்றன. ‘பிற்கால முதலாளித்துவத்தின் உலகவயமான தன்மை’ போன்றவற்றின் காரணங்களாக விளைந்தவை இவைகள்.

ஈ. பரந்துபட்ட அளவிலான பொருளாதார சுபிட்சம். ‘நுகர்ச்சியில் அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது’. ‘பன்முக அடையாளத்துக்கு ஒப்ப பன்முக மோஸ்தர்களில்’ பொருளுற்பத்தி நடந்து வருகிறது.

அரசியலில் ‘தலையீடுகளை’ உருவாக்காத வரை நுகர்ச்சி சுதந்திரத்திற்கான பிரச்சினை என்பது இல்லை. அதிவளர்ச்சியடைந்த அமெரிக்க மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே இது முழுக்கப் பொருந்தும்.

உ. எந்த வகையிலும் ‘மத்தியத்துவப்படுத்தப்பட்ட சமூகக் கட்டுப்பாடு இல்லாமை’. மோஸ்தர்களின் அடிப்படையிலான ஒப்புக் கொள்ளப்பட்ட வகைகளிலான அறவியல் வாழ்க்கை. ‘அரசுகளைத் தாண்டிய பன்னாட்டு மூலதன நிறுவனங்களின்’ பரவலாக்கம். ‘உயர்ந்த மற்றும் வெகுஜனக் கலாச்சாரத்திற்கு இடையிலான எல்லைகள் தகர்வு’.

அனைத்தையும் ஒப்புக் கொள்வதான ‘நுகர்வுச் சுதந்திரம்’ இதனது வெளிப்பாட்டுத் தளமாக இருக்கிறது.

இவ்வகையில் ‘பின்நவீனத்துவம்’ என்பது ‘யதார்த்தம் குறித்த உணர்வற்ற நிலை’யாகிறது.

இதிலிருந்து ஒரு வகையதான பட்டைத் தன்மை, ‘உள்ளீடற்ற தன்மை’, அறவியல் அர்த்தத்தில் சுருக்கமாகச் சொல்வதானால் ‘பிளவுண்ட தன்னிலையின் அந்நியமாதல்’ மிக வேகமாக நடைபெறுகிறது.

6

ஜேம்சனை அடுத்து, பின்நவீனத்துவம் குறித்து கோட்பாட்டுருவாக்கத்தில் ஈடுபட்ட பிறிதொரு மார்க்சியர் டெர்ரி ஈகிள்டன்.

இவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படிப்பிக்கும் பேராசிரியராக இருக்கிறார். மார்க்சியக் கோட்பாட்டாளர். அழகியல் விமர்சகர். நாவலாசிரியர். நாடகாசிரியர். ‘மார்க்சியமும் உருவமும்’, ‘மார்க்சிய இலக்கிய விமர்சனம்’, ‘அழகியலின் கருத்தியல்’ போன்ற நூல்களை எழுதியவர்.

பின்நவீனத்துவம் குறித்து இவர் எழுதிய ‘பின்நவீனத்துவத்தின் பிரமைகள்’ எனும் நூல் நையாண்டி கலந்த விமர்சன மொழியில் எழுதப்பட்ட நூலாகும்.

தனது ‘பின்நவீனத்துவத்தின் பிரமைகள்’ நூலில் ஈகிள்டன் பின்நவீனத்துவம் பற்றிக் கேட்கும் கேள்விகள் சுவாரஸ்யமானவை :

வித்தியாசம், பன்முகத்துவம், பல்முரண்கூறுகள் என்றெல்லாம் பேசினாலு ம் பின்நவீனத்துவக் கோட்பாடு என்பது கெட்டிதட்டிய ‘துருவ எதிர்மறைகளின் தளத்தில்’தான் பெரும்பாலும் செயல்படுகிறது.

வித்தியாசம் மற்றும் பன்முகத்துவம், அதைத் தொடர்ந்து வரும் சொற்களுடன், அவர்களது கோட்பாட்டு வேலியின் ஓர் பக்கத்தில் அணிவகுக்கிற எல்லாமும் அவர்களைப் பொறுத்து நேர்மறையானதாகும். அவர்களது எதிர்கருதுகோள் என்னவானபோதிலும், (ஒற்றுமை, அடையாளம், மொத்தத்துவம், உலகமயமானது) சாதாரணமாக உணர்கிற வகையில் மற்றதன் மீதான எதிர்வினையாகவே இருக்கிறது.

ஈகிள்டன் மேலும் பின்நவீனத்துவத்தின் ‘துருவ எதிர்நிலைகளின்’ மீதான ‘சார்பைக்’ குறித்துக் கூறுகிறார்:

சமூகக் கட்டமைப்புக்கும் சுதந்திரமான பிரதிநிதிக்கும், சாராம்சவாதத்துக்கும் எதிர்சாராம்சவாதத்துக்கும் இடையில் பகைமை என்பது இல்லை.

அதே போல வரலாறு கதை வடிவிலானது எனும்போது, வரலாறு, கதையாடல் என்பதற்கிடையிலும் எளிமையாகத் தேர்ந்து கொள்ள முடியாது என்கிறார். அதேபோல, இருந்தால் ஒரேயொரு கதையாடல், அல்லவெனில் அதிக அளவிலான குறுங்கதையாடல்கள் என்றும் சொல்ல முடியாது என்கிறார்.

டெர்ரி ஈகிள்டனின் விமர்சனத்தில் லியோதார்த்துக்கு அடுத்து அதிகமான விமர்சனத்துக்கு உட்படுபவர் அமெரிக்க பின்நவீனத்துவவாதியான காலஞ்சென்ற ரிச்சர்ட் ரோர்ட்டி.

இவரை ஈகிள்டனும், இங்கிலந்து மாரக்சியரான கிறஸ்தோபர் நோரிசும் ஜேம்சனும், ‘வலதுசாரிப் பின்நவீனத்துவவாதியாகவே’ மதிப்பிடுகிறார்கள்.

ரோரிட்டி தன்னை ‘வடஅமெரிக்க பின்நவீனத்துவ முதலாளித்துவ தாராளவாத அறிவுஜீவி’ என அழைத்துக் கொள்கிறார். இவர்

கலாச்சாரச் சார்புவாதத்தையும், ‘தத்துவவாதிகள் இலக்கியம் நோக்கித் திரும்ப வேண்டும்’ அதாவது தத்துவத்தை அழகியல் மயப்படுத்துவோம் என்கிற அறைகூவலையும் முன்வைப்பவர் இவர்.

இவரது ஒரு கூற்று அதனது ‘பின்நவீனத்துவ வித்தியாசத்துக்கு’ ஒரு சான்றாகும். அவர் சொல்கிறார்:

அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் உரிமைகள் இல்லாமல் இருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். நாம் எதற்காக அவருக்குக் குரல் கொடுக்க வேண்டும்? அது ஒரு உலகு தழுவிய பிரச்சினை என்பதற்காகவா? அதற்காக அல்ல. மாறாக, அவர் சக அமெரிக்கராகவும் அமெரிக்க பிரஜையாகவும் இருக்கிறார் என்பதற்காகத்தான். ஆகவே, அவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

ரோரிட்டியின் ‘மனித உரிமை’ அக்கறை ‘அமெரிக்கக் குடிமகன்’ என்பதற்கும் அப்பால் செல்வதில்லை.

இதை அவர் கலாச்சாரச் சார்புவாதம், பிராந்தியத் தன்மை, பின்நவீனத்துவ நிலை என்கிறார். இது அப்பட்டமாக அமெரிக்க தேசியவாதம் அன்றி வேறில்லை.

மூன்றாம் உலக மக்களைப் பற்றிக் கவலைப்படாத, பிற சுரண்டல்கள் பற்றிக் கவலைப்படாத, பன்னாட்டு மூலதனத்தின் கலாச்சாரக் குரல் இது என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.

கடந்த இருபது ஆண்டுகளாக, பின்நவீனத்துவத்தைக் கோட்பாட்டுருவுக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கிலும் அமெரிக்காவிலும் மார்க்சியர்கள் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் பின்நவீனத்துவ நிலை குறித்த அணுகுமுறைகள் இரு வகைகளில் அமைகின்றன.

அ. பின்நவீனத்துவத்தை எதிர்நிலையில் நின்று விமர்சிக்கிற நிலைபாடு. இந்நிலைபாட்டாளர்களாக கிறிஸ்தோபர் நோரிஸ், அலெக்ஸ் கொலின்னி கோஸ், டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சொல்லலாம்.

பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களைப் பற்றிக் கூறும்போது, ‘1968 நிகழ்ச்சிகளால் நம்பிக்கையிழந்த கல்வித்துறை சார்ந்த சிலர், தமது நிலைப்பாட்டை ஒரு தனித்த தத்துவ நிலைப்பாடாக முன்வைக்க ஏற்படுத்திக் கொண்ட போக்குதான் இது’ என்கிறார் கொலின்னி கோஸ்.

கிறிஸ்தோபர் நோரிஸ், வளைகுடா யுத்தம், அந்த யுத்தம் பற்றிய பின்நவீனத்துவ அறிவுஜீவிகளின் நிலைப்பாடுகள் பற்றிய ஆய்விலிருந்து, அவ்வேளையில் பின்நவீனத்துவவாதிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து, ‘யதார்த்த நிகழ்வுகளின் மனித அவலத்தைக் கணக்கில் கொள்ளாத, நெருக்கடி நேரங்களில் முடிவெடுக்க முடியாத வலதுசாரி நிலைப்பாட்டாளர்கள்’ என இவர்களைக் காண்கிறார். நோம் சோம்ஸ்கியின் அழுத்தமான அமெரிக்க எதிர்ப்பு விமர்சன நிலைப்பாட்டை ஒப்பிட்டு, போர்த்திலாரை ‘அவநம்பிக்கையை முன்வைக்கும் போலி’ என்கிறார் நோரிஸ்.

பிரெஞ்சுக் கோட்பாட்டாளர்களை ‘அறிவுத்துறையில் வித்தை காட்டிக் கவனம் பெறுபவர்கள்’ என சோம்ஸ்கி குறிப்பிட்டதும் இங்கு கவனம் கொள்ளத்தக்கது.

‘வித்தியாசங்களைப் பேசிக் கொண்டே கெட்டிதட்டிய துருவ எதிர்நிலைகளை முன்வைக்கிறவர்கள் பின்நவீனத்துவவாதிகள்’ என்கிறார் டெர்ரி ஈகிள்டன்.

உதாரணமாக, ‘உலகமயமானது, பிராந்தியத் தன்மையிலானது, பெருங்கதையாடல், குறுங்கதையாடல் சாராம்சம், எதிர்சாராம்சம் என்கிற அதீத துருவ எதிர்நிலைகளை இவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கிடையில் பகை உறவுகள் இல்லை, ஒன்றில்லாமல் மற்றது இல்லை’ என்கிறார் டெர்ரி ஈகிள்டன்.

ஆ. முழுக்க ஏற்பது அல்லது நிராகரிப்பது என்ற நிலைக்கு இன்றைய நிலையில் போவது சாத்தியமில்லை எனும் நிலைபாட்டாளர்கள்.

ஜேம்ஸன், ஹேபர்மாஸ், ஹால் போஸ்ட்டர் போன்றவர்கள் இத்தகைய நிலைபாட்டாளர்கள்.

‘பின்நவீனத்துவக் காலகட்டம், முதலாளித்துவத்திலிருந்து பிற்கால முதலாளித்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் இடைக்கால கட்டம். இது ஒரு புதிய நிலை’. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையைப் புரிந்து கொள்வதிலும் கோட்பாட்டுருவாக்கம் செய்வதிலும் வலதுசாரிகள் வெகுதூரம் போய்விட்டார்கள். ஆகவே இடதுசாரிகள் இதில் ஈடுபட வேண்டியது காலத்தின் தேவை’ என்கிறார் பிரெடரிக் ஜேன்ஸன்.

‘பின்நவீனத்துவத்தின், அனைத்தையும் அழகியலாக்கம் செய்வது என்பதற்கு மாறாக, அழகியலுக்கு-எதிர் நடவடிக்கைகளைக் கட்டமைப்பது’ எனும் ஹல் போஸ்ட்டர், ‘எதிர்ப்பு பின்நவீனத்துவம்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.

ஜெர்மானிய மார்க்சியரான ஜர்கன் ஹேபர்மாஸ் பின்நவீனத்துவத் திட்டத்தை நிராகரிக்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவுகள், சேதங்கள், துயரம் போன்றவற்றை ஒப்புக் கொள்ளும் அவர், ‘முற்றுப்பெறாத நவீனத்துவத் திட்டத்தை’ அறவியல், அரசியல், பொருளியல் தளங்களில் நிறுவ முடியும் என்கிறார்.

இவ்வகையில் நவீனத்துவத்தை முற்றிலும் நிராகரிப்பவர்களை ‘இளைய பழமைவாதிகள்’ என்கிறா ஜர்கன் ஹேபர்மாஸ்;.

7

பின்நவீனத்துவத்தின் கோட்பாட்டாளர்களில், இவர்களால் அதிகம் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுபவர்கள் லியோதார்த், போத்ரிலார் போன்றவர்களாவர்.

இதில் லியோதார்த்தின் ‘பின்நவீனத்துவ நிலை’ நூல், ‘அதிகமாக கலாச்சாரத்தை விடவும் விஞ்ஞானத்தையும் பொருளியலையும் குறித்துத்தான் அக்கறைப்படுகிறது’ எனும் ஜேம்ஸன், அதன் பொருட்டே அதற்கு எதிர்வினையாக ‘பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சாரத் தர்க்கமாக பின்நவீனத்துவத்தைக் காணும்’ நிலைப்பாட்டை முன்வைக்கிறார்.

லியோதார்த் பற்றிய விமர்சனம் அதிகமும் ஜர்கன் ஹேபர்மாஸ், டெர்ரி ஈகிள்டன், கொலின்னி கோஸ் போன்றவர்களிடம் இருந்து வருகிறது.

‘லியோதார்த் முன்வைக்கும் அழகியலாக்கம், மொழி விளையாட்டு, சொல்கட்டு சாம்ராஜ்யம் போன்றன கலாச்சாரச் செயல்பாட்டுக்கு வேண்டுமானால் பொருத்திப் பார்க்கக் கூடியதாக இருக்கலாம், அரசியல், பொருளியல் தளங்களில் அது எதிர்ப்புணர்வற்ற மௌனவாதமாகவே முடியும்’ என்கிறார்கள் இவர்கள்.

இன்னும், ‘லியோதார்த் முன்வைக்கிற வித்தியாசங்களின் கொண்டாட்டம், சொல் விளையாட்டு, வேட்கையின் அரசியல் போன்றவற்றை ஏற்கனவே உலகமயமாதல் சுவீகரித்து விட்டது’ என்கிறார்கள். இன்னும் வலதுசாரிகள் பல்கலாச்சாரம் எனும் போர்வையில் அதைச் சுவீகரித்து விட்டார்கள் எனும் மேற்கத்திய அமெரிக்க நடைமுறை உண்மையை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

மார்க்சியர்கள் ஒரு கட்டம் வரை ஆக்கபூர்வமாகப் பார்க்கிற உடன்பயணிகளான பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களும் உண்டு.

அமைப்பியலாளர்களான லக்கான், லெவி ஸ்ட்ராஸ், சசூர், ரோலண்ட் பார்த் (அமைப்புக்கும் தன்னிலைக்குமான உறவை இவர்கள் அவரவர் துறையில் ஆழச்சென்று பார்த்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்களது ‘மாறாநிலை அடித்தளம்’ மார்க்சியர்களால் ஒப்புக் கொள்ள முடியாததாகும்), மற்றும் இவர்களது ‘பின் அமைப்பியல்’ விமர்சகர்களான தெரிதா, பூக்கோ போன்றவர்களை மார்க்சியர்கள் ஆக்கப்பூர்வமாகப் பார்க்கிறார்கள்.

கிறிஸ்தோபர் நோரிஸ், டெர்ரி ஈகிள்டன், ஹால் போஸ்டர் போன்றவர்கள் ‘எதிர்ப்புணர்வு மிக்க கட்டுடைப்பை’ தெரிதாவிடமிருந்து பெறுகிறார்கள்.

இன்னும் கிறிஸ்தோபர் நோரிஸ், தெரிதாவைப் பற்றிச் சொல்லும்போது, ‘நவீனத்துவ அறவியல், அரசியல் விமோசனம், காண்டியச் சிந்தனை போன்றவற்றை நிராகரிக்காத, அறிவுநிலை நம்பிக்கையுள்ள எதிர்காலம் நோக்கியவர் தெரிதா’ என்று குறிப்பிடுகிறார்.

தெரிதாவின் ‘மார்க்சின் ஆவிகள்’ நூல் வெளியானதன் பின், ‘தெரிதா மார்க்சியர்களின் பக்கம் நிற்கிறார்’ என்கிறார் பின்நவீனத்துவம் குறித்தும் பின்மார்க்சியம் குறித்ததுமான வரலாற்றை எழுதிய ஸ்டூவர்ட் ஸிம்.

பூக்கோவின் ‘சிறை, மனநலக் காப்பகம், பாலியல் ஒடுக்குமுறை குறித்த ஆய்வுகளில்’ நுண்தளத்தில் செயல்படும் ஒடுக்குமுறையை அனைவருமே பங்களிப்பாகப் பார்க்கிறார்கள். ஆனால், பூக்கோ அனைத்து வகையான அதிகாரம் - அறிவு என்பவற்றை காலம், இடம், ஒடுக்குமுறையின் தன்மை, தளவித்தியாசம் போன்றவற்றைத் தாண்டி சமப்படுத்துவதை மார்க்சியர்கள் நிராகரிக்கிறார்கள்.

டெர்ரி ஈகிள்டன், தான் தெரிதாவின் கட்டுடைப்பிலிருந்து ஆதர்ஸம் பெற்றதைச் சொல்கிறார். கட்டுடைப்பைத் தனது ஆய்வுகளிலும் ஒரு பகுப்பாய்வு முறையாக அவர் மேற்கொள்ளவே செய்கிறார்.

பின்நவீனத்துவ விவாதங்களை நாம் புரிந்து கொள்வதில் ஒரு மிகப்பெரிய சிக்கல், அவர்களது தொடர் கருத்தாக்கங்கள் தொடர்பானதாகும்.

உதாரணமாக, பின், நவ, எதிர், முன் போன்ற கருத்தாக்கங்கள்.

ஒரு முக்கியமான வரலாற்றுக் காலத்தை, ஒரு மையமான கால இடத்தில் பொருத்தப்பட்ட கருத்தாக்கம் எனும் அடிப்படையில் வருவதாகும் இச்சொற்றொடர்கள்.

இவ்வகையில் நவீனத்துவத்தைச் சுற்றிய போஸ்ட், நியோ, ஆன்ட்டி, ப்ரி என இவைகள் எல்லாமுமே ‘நவீனத்துவத்தைப் பற்றிய கருத்தாக்கங்களைச் சுற்றியே’ செயல்படும்.

ஸ்டூவர்ட் ஹால் இது பற்றிக் குறிப்பிடும்போது, ‘ போஸ்ட்-மார்க்சிசம் என்பதையும் போஸ்ட்-மாடர்னிசம் என்பதையும் நாம் இந்த யுகம் மற்றும் கருத்தியலுக்கு உள்ளும் வெளியிலும், சுற்றிலும் இருந்துதான் விவாதிக்கிறோம். ஆகவே இதனூடான உரையாடல் தொடர்ந்து இருக்கும்’ என்கிறார்.

இவ்வகையில், நவீனத்துவம் கடந்த நிலை, ‘மார்க்சியம் கடந்த நிலை’அல்லது ‘மார்க்சியத்திற்குப் பிந்திய’ என்று தமிழில் இப்போக்குகளைச் சொல்வதன் அபத்தம் நமக்கு விளங்கக் கூடியதொன்றாகும்.

ழான் பிரான்சுவா லியோதார்த் மற்றும் ழான் போத்ரிலாரின் பகுப்பாய்வுகளைக் காட்டிலும் அவர்களது ‘அடிப்படை நிலைப்பாடுகளுடன்தான் மார்க்சியவாதிகள் அதிகமும் முரண்பாடு கொள்கிறார்கள்’.

ழாக் தெரிதா, மிஷேல் பூக்கோ போன்ற பின்அமைப்புவாதிகள் பிரதானமாகப் பகுப்பாய்வைத்தான் முன்வைப்பவர்களேயொழிய, லியோதார்த், போத்ரிலார் போல தீர்க்கதரிசனங்களை முன்மொழிபவர்கள் அல்லர்.

உதாரணமாக, ‘பெருங்கதையாடல்களின் முடிவுக்காலம் இது’ என அறிவிக்கிற லியோதார்த் ‘மார்க்சியத்துடன் இனி உரையாடல் அவசியமில்லை’ என்கிறார்.

போத்ரிலார், ‘யதார்த்தம் என்பதே இல்லை, இருப்பதெல்லாம் புனைவுதான்’ என்கிறார்.

ஆனால் பன்முக மார்க்சியத்தில் நம்பிக்கை தெரிவிக்கிற தெரிதா, ‘பெருங்கதையாடல் தகர்வு, மறுமலர்ச்சியுகம் காலாவதியாகி விட்டது போன்ற வாதங்களை தான் என்றுமே ஏற்றுக் கொள்ளவில்லை’ என்கிறார்.

1998 ஆம் ஆண்டு மரணமுற்ற லியோதார்த்தின் கலகக்குரலையும், அவரது பகுப்பாய்வையும், அவர் தனது இறுதி நூலில் முன்வைக்கும் ‘முதலாளித்துவ உற்பத்தி முறை தோற்றுவித்திருக்கும் மனித எதிர்ப்பு தொழில்நுட்ப விஞ்ஞானம்’ குறித்த அறிவுறுத்தலையும், எவரும் நிராகரிக்க இயலாது.

ஆனால், லியோதார்த் முன்வைக்கிற தீர்க்கதரிசனங்களை மார்க்சியவாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது.

பின்நவீனத்துவத்தின் கருத்தியல் நிலைப்பாடுகள் அல்லது முடிவுகள் எனச் சிலவற்றைச் சொல்லலாம்.

முதலாவதாக, லியோதார்த்தின் ‘பெருங்கதையாடல்’ மற்றும் ‘குறுங்கதையாடல்’ நிலைப்பாடு. இந்தப் பிரிவினையை மார்க்சியர்கள் முற்றிலும் ‘நிராகரிக்கிறார்கள்’.

இரண்டாவதாக, பூக்கோவின் ‘தளவித்தியாசங்களில் அணுகப்படாத’, வரலாறு கடந்து நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிற அதிகாரம் எனும் நிலைப்பாட்டையும் மார்க்சியர்கள் ‘நிராகரிக்கிறார்கள்’.

மூன்றாவதாக, தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வில், அதன் அதீத வெளிக்குச் சென்று மீளமுடியா அவநம்பிக்கையாளராகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும், ‘உழைப்பு என்பது சக்தியாக இல்லை, அதுவும் ஒரு குறி என மொழி விளையாட்டின்’, குறி விளையாட்டின் எல்லைக்குச் சென்று முடங்கிவிட்ட, போத்ரிலாரின் நிலைப்பாடுகளையும் மார்க்சியர்கள் ‘நிராகரிக்கிறார்கள்’.

போத்ரிலாரின் ‘காட்சிநகல்’ என்கிற கருத்தாக்கம் தான் என்ன?

தகவல் தொழில்நுட்பமும், மறுபடி மறுபடி எல்லையற்று உற்பத்தி செய்கிறதான விஞ்ஞானத் தொழில்நுட்ப சாத்தியமும், இன்று யதார்த்தத்துக்கு, நிகழ்வுக்கு அல்லது பொருண்மைக்கு முற்றிலும் சம்பந்தமற்ற, அதிலிருந்து துண்டித்துக் கொண்ட, பிம்பங்களை அல்லது பண்டங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

தொடர்ந்து, இப்போது ‘யதார்த்தம்’ என்பது அழிந்து, அங்கு அதீதக் குறிதான், ‘காட்சிநகல்’தான் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான தொலைக்காட்சியும், சினிமாவும், ‘குறிகளின் மீதான குறிகளை’ உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

ஆகவே ‘இனி யதார்த்தம் என்பதும் இல்லை, உழைப்பு சக்தி என்பதும் இல்லை, மனிதத் தன்னிலை என்பதும் இல்லை. அனைத்தும் குறிதான், அனைத்தும் மிகையதார்த்தம்தான் என்கிறார் அவர்.

போத்ரிலாரின் தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகள் மிகுந்த அவநம்பிக்கையைத் தெரிவிப்பதோடு, அவர் சொல்கிற ‘காட்சிநகல்’ அல்லது ‘மிகையதார்த்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த சங்கேதத்தையும் விட்டு வைப்பதில்லை’.

‘அமெரிக்கா என்பது டிஸ்னிலேண்ட் ஆகிவிட்டது. அதுதான் நிஜ அமெரிக்காவாக ஆகிவிட்டது’ என்ற அவர், இராக் மீதான ‘அமெரிக்காவின் வளைகுடா யுத்தம் தொலைக்காட்சிப் பெட்டிகளில்தான் நடந்தது, நிஜத்தில் நடக்கவேயில்லை’ என்றார். வளைகுடா யுத்தத்தின் மனிதப் பரிமாணத்தை முற்றிலும் நிராகரித்த, மனித அவலம் பற்றிய நடைமுறை குறித்து முற்றிலும் அக்கறைப்படாத, அறிவு வன்முறை மிகுந்த அரசியல் நிலைப்பாடு இது என்பது தெளிவு.

போத்ரிலாரும் சரி, தெரிதாவும் சரி, பூக்கோவும் சரி, தொடர்ந்து மார்க்சியவாதிகளுக்குப் பிரச்சினையாக இருக்கிற இடம், அவர்கள் தத்தமது பிரதியையே திரும்பத் திரும்ப மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

‘பின்நவீனத்துவ நிலை’ மற்றும் ‘பின்-மார்க்சியர்கள்’ தொடர்பாக மாரக்சிய அறிவுஜீவிகளின் உரையாடல்களில் இடம் பெறும் மிக முக்கியமான பிரச்சினைகள் என்ன?

அ. பிரெஞ்சுப் புரட்சி தோற்றுவித்த, தொழிலாளி வர்க்க மையத்தில் அடிப்படை கொண்ட, சோசலிசத் திட்டம் இன்று காலாவதியாகிவிட்டதா?

தொழிலாளிவர்க்கம், ஒரு புரட்சிகர சக்தியாகத் தனது வரலாற்றுத் தகைமையை இழந்து விட்டதா?

ஆ. தேசிய அரசுகளின் பாத்திரம் என்பது காலாவதியாகிவிட்டதா?

இன்றைய பன்னாட்டு மூலதன உலக மயமாக்கலில் தேசிய அரசுகளின் பாத்திரம் என்ன?;

இ. ஒரு ‘ஓன்றுபட்ட எதிர்ப்பு அரசியலை’க் கட்டுவதானால், எதிர்ப்பின் குவிமையமாக சில அதிகார அமைப்புகளை இனங்காண வேண்டும், உதாரணமாக அடக்குமுறை யந்திரமாக அரசு அல்லது ஆளும் வர்க்கம்.

இப்படியான அதிகார அமைப்பை அடையாளம் காண்பது இன்று சாத்தியமா?

ஈ. ‘வித்தியாச அரசியலின் அடிப்படையில்’ ஒரு எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைப்பது சாத்தியமா?

வித்தியாச அரசியலின் நீட்சிக்கும், ‘அடிப்படைவாதமாக அவை பரிமாணம் எய்துவதற்கும்’ இடையிலான வெளியை எவ்வாறு இணக்குமுற வைப்பது?

பின்நவீனத்துவம் குறித்த உரையாடலில் ஈடுபட்ட மாரக்சியர்கள் எவருமே ‘சோசலிசத் திட்டம்’ காலாவதியாகிவிட்டது எனும் நிலைபாட்டுக்கு வருவதில்லை.

சோசலிசம் ஏன் நெருக்கடி நிலையை எய்தியது என்பதை, அடையாள அரசியலையும் வித்தியாசங்களையும் உள்ளிடாத, அரசியல், பொருளியல், கலாச்சார ஜனநாயகமற்ற சமூகமாக சோசலிசம் இருந்ததாலேயே, சோசலிசம் வீழ்ந்தது எனக் காண்கிறார்கள் ஸ்டுவர்ட் ஹாலும், லக்லாவும். அதைப் போலவே, சமூக மாற்றத்தில் மனித இடையீடு செய்கிற ஒரே சக்தியாக தொழிலாளிவர்க்கத்தை நிறத்தியதும், அவ்வமைப்பு ஜனநாயகம் நோக்கிச் செல்ல இயலாததற்கான காரணமாகவும் அவர்கள் காண்கிறார்கள். சமூக உத்திரவாதமும், அனைத்து மனிதர்க்கும் சம உரிமையும் வழங்கும் சோசலிசச் சமூகத்தை, ஜனநாயகத்துடன் இணைப்பதுதான் அவர்களது மாற்றுத் திட்டமாக இருக்கிறது.

‘நிலவிய சோசலிசம்’ ஒரு தோல்வியடைந்த திட்டம் என்பதுதான் அவர்களது நிலைபாடாக இருக்கிறது.

நிலவிய சோசலிசம் ஒரு தோல்வியடைந்த திட்டம் என்பதை ஜேம்ஸன் ஒப்புக் கொள்வத்pல்லை.

நிலவிய சோசலிசம் ஒரு வெற்றி பெற்ற அமைப்பாக இல்லையெனில், அது அடுத்த கட்டத்திற்கு வநதிருக்கமுடியாது என்கிறார் அவர்.

நிலவிய சேசாலிச உற்பத்தி முறை, கடந்த ஐம்பது ஆண்டுகளில் உருவாகி வந்திருக்கும் பிற்கால உலகமயமான முதலாளித்துவத்தின் ‘ஊடுறுவலுக்கு’த் தன்னைத் தாயர்ப்படுத்திக் கொள்ளாமல் இருந்ததால்தான், உடனடியாக அந்த அமைப்புக்குள் வரவேண்டியேற்பட்டதால்தான், சோசலிசத் தொழில் கட்டமைப்பு என்பது சரிந்து போனது.

ஏனெனில், அது முதலாளித்துவத் தொழில் கட்டமைப்பு அல்ல என்கிறார் ஜேம்ஸன்.

இதனையே பொருள்வயமாக உருவாகிவந்த சில நிலைமைகளை சோசலிச சமூகங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பதோடு, ஜனநாயக நிறுவனங்கள் குறித்த அக்கறையும் சோசலிச அமைப்புக்குள் இல்லாதது சோசலிசத்தின் விழ்ச்சிக்கான காரணமாக இருக்கும் என்கிறார் அய்ஜஸ் அஹமது.

நிலவிய சோசலிசத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான பங்கு கூட இந்த நூற்றாண்டில் இல்லை என்கிற நிலைபாட்டையும், அது திசை மாறின ஒரு வளர்ச்சி என்றும் அக்டோபர் புரட்சியை லக்லாவ் குறிப்பிடுகிறார்.

அக்டோபர் புரட்சி இல்லையெனில் காலனியாதிக்கததை எதிர்த்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் இல்லையென்கிறார் அஹமது. அதுமட்டுமல்ல, சமத்துவம், சமதர்மம் என உலகெங்கும் அமைந்த பல்வேறு விடுதலை பெற்ற நாடுகளின் யாப்பு அமைவதற்கு, அக்டோபர் புரட்சியே ஆதர்ஷமாக இருந்தது என்கிறார் அவர். இன்னும், பெண்கள், அரசியலில், பொருளியல் வாழ்வில், சமூகத்தில் பங்கு பெறுதல், குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் ஒப்பீட்டளவிலான விடுதலை, அக்டோபர் பரட்சியின் மூலமே சாத்தியமானது என்கிறார் அஹமது.

சோசலிசம் அனைவருக்கும் வேலை உத்திரவாதப்படுத்தியதை அதன் சாதனை என்கிறார் லக்லாவ். நவீனத்துவத்தைப் பற்றி ஹேபர்மாஸ் சொல்வது சேசாலிசத்திற்கும் பொருந்தும். நவீனத்துவம் ஒரு முற்றுப் பெறாத திட்டம் என்றார் அவர். சோசலிசமும் அவ்வாறுதான் : ஒரு முற்றுப் பெறாத திட்டமாக இன்னும் அது நம் முன் இருக்கிறது.

தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரம் குறித்த விவாதங்கள், மூன்றாவது வர்க்கமாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அதிகாரவர்க்கம் தோன்றியது குறித்த மிலோவான் டிஜிலாசின் விமர்சனத்திலிருந்து, கட்சித் தலைமைக்கு எதிராகக் கலகம் செய்த கலாச்சாரப் புரட்சி கால நடவடிக்கைகள் வரை அந்த விவாதம் இருக்கிறது.

ருமேனிய அதிபர் சியாவெஸ்க்குவின் மன்னர் போன்ற மாளிகை வாழ்ககையைப் பார்த்தவர்களுக்கு, சோவியத் யூனியினில் கட்சியின் அதிகாரத்திலிரப்பவர்களுக்;கெ

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

குறித்த இணையத்தளம் மீது சரியான மதிப்புக் கிடையாது. நடுநிலை என்ற பெயரில் புலியெதிர்ப்பையும் செய்வதற்கு அவர்கள் தயங்காதவர்கள். மட்டக்களப்பில் சிறிலங்கா அரசின் நாடகமான தேர்தலைப் பற்றிய செய்திகளையும், அதில் சிங்கள அரசின் கைக்கூலிகளின் பேட்டிகளையும் பார்க்கின்றபோது அப்படித் தான் தோன்றுகின்றது.

மேலே ராகவனுக்கான அழைப்பு என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துகின்ற நிர்மலா போன்ற இன்னுமொரு நபர்.

அற்புதன் போய்க் கருத்து எழுதினார் என்பதற்காக எல்லாம் சுத்தமாகி விடாதே.

1.அமெரிக்கத் தயாரிப்புக்களை உண்டபடி, அமெரிக்க எதிர்ப்புச் செய்கின்ற தொழில் தான் மாக்கிசம் என நான் கருதுவதால் இவ பற்றி எவ்வித கருத்துக்களும் கிடையாது.

2. இந்த மாக்கிசவாதிகள் புலியெதிர்பபுச் செய்கின்றார்கள், எனவே மாக்கிச சிந்தனை புலிக்கு எதிர், தமிழினத்துக்கு எதிர் என்ற அடிமட்டப் பிரச்சாரங்களை நாம் செய்திடமாட்டோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.