Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‌இ‌ந்து மத‌ம் – சுவாமி விவேகானந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.

யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்தவிட்டன.

அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல் உள்ளனவோ, அந்த வேதாந்தத் தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பெளத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்த மதத்தில் இடம் உள்ளது.

அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத்தான் நான் விடை கூற முயலப் போகிறேன்.

அருள் வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்

இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள் சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது கடவுள் மாறக் கூடியவர். மாறக் கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத்தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருட்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீர வேண்டும். எனவே கடவுள் இறந்துவிடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலிலும் படைப்பவனும், ஆரம்பமும் முடிவும் இல்லாது சம தூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணை கோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால், ஒழுங்கற்ற நிலையிலிருந்து பல உலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்துவிடுகின்றன. இதையே பிராமணச் சிறுவன் தினமும் ஓதுகிறான் : `பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும், சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்'. இது தற்கால விஞ்ஞானத்திற்குப் பொருந்தியதாக உள்ளது.

நான் உடலல்ல!

இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக் கொண்டு நான் நான் நான் என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் ஜடப் பொருட்களின் மொத்த உருவம் தானா நான்? இல்லை என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் உடல் அல்ல. உடல் அழிந்துவிடும், ஆனால் நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன்; இது வீழ்ந்துவிடும். ஆனால் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதல்ல. படைக்கப்பட்டதானால் அது பல பொருட்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போகும். எனவே ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.

சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள்; உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும் தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து,

வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள்.

இவர்கள் அனைவரும் படைக்கப்பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும், இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் இத்தனை வேறுபாடு காட்ட வேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவது பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?

ஆகவே படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை; மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள்.

ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா? வாழ்க்கையில் இரண்டு இணைகோடுகள் உள்ளன- ஒன்று மனத்தைப் பற்றியது, இன்னொன்று ஜடப் பொருளைப் பற்றியது. ஜடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கிவிடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்று ஆகிறது. இது, ஜடப் பொருள் ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல் பகுத்தறிவுக்குப் பொருந்தியதே; ஜடப் பொருள் மட்டுமே உள்ளது என்று சொல்வதைவிட உயர்வானதும் கூட. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.

பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளையும் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவி‌ற்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது விஞ்ஞானத்திற்கு ஏற்புடையது. ஏனெனில் விஞ்ஞானம் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால்தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.

இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில்தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதை இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள் அறிய முடியும்.

அந்த ரகசியத்தை நீங்களும் கண்டுபிடிக்கலாம்!... நாளை

இ‌ந்து மத‌ம் ப‌ற்‌றிய ‌விவேகான‌ந்த‌ரி‌ன் பே‌ச்‌சி‌ன் இர‌ண்டா‌ம் பாக‌ம்...

இது நேரானது, நிரூபிக்கப்படக் கூடியது. நிரூபிக்கப்படுவதுதான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே : `நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடக்கூடிய ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவி நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'

தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது, நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் கற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். ஜடப் பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் ஜடத்துடன் கட்டுப்பாட்டாகத் தன்னைக் காண்கிறது. எனவே தன்னை ஜடமாகக் கருதுகிறது.

சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு ஜடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்க முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக்கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பலதேவதைகளைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகிவிடாது. கேள்வி அப்படியேத்தான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வர முடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக் கொள்ள முடியும்?

இந்த நேர்மையானவன். அவன் குதர்க்க வாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இது தான் : 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், ஜடத்துடன் இணைக்கப்பட்டு அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப்பற்றி நினைக்க ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. எனக்குத் தெரியாது என்று இந்து கூறுகிறானே, அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.

ஆகவே மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு இடம்பெயர்தலே ஆகும். கடந்த கால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குக் பின் இறப்பு, என்று ஆன்மா மேல்நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது : சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் அலையின் நுரைநிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ஆ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீவினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும், படு வேகமும் சற்றும் விட்டுக் கொடுக்காத காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? அல்ல, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள் அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?

இதை நினைக்கும்போது நெஞ்சு தளர்கிறது. ஆனால் இதுதான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா? என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்ற உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார் :'ஓ அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்கள். அனைத்தும் இருளையும், அனைத்தும் மாயையையும் கடந்த ஆதி முழுமுதலை நான் கண்டுவிட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்'1

`அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!'ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நாட்ன அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரிப்த்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான், நாம் ஆண்டவனின் குழந்தைக‌ள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம்; மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல; ஜடப் பொருள் உங்கள் பணியாள், நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.

இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை; காரண காரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை; ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், ஜடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறுபகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறாள்‌; `அவனது கட்டளையால்தான் காற்று வீசுகிறது, நெரப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது'1 என்று கூறுகின்றன.

அவனது இயல்புதான் என்ன?

அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன், அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எங்களுக்கு அருள் செய்வாய்! - வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர்.

அவனை எப்படி வழிபடுவது? அன்பினால். இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும்விட அதிக அன்பிற்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளிடன் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், எப்படி மக்களுக்குப் போதித்தார் என்று பார்ப்போம்.

மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல் வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது, ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அதுபோல் மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் - இதயத்தை இறைவன்பால் வைத்த கைகளால் வேலை செய்ய வேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி. இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லதுதான். ஆனால் அன்பிற்காகவே அவளிடம் அன்பு செலுத்துவது சிறந்தது.

எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ,கல்வியோ வேண்டாம். உனது திருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்பிற்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிறது ஒரு பிரார்த்தனை.

ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யிதிஷ்டிரரிடம், அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கு ஏன் துன்பம் வர வேண்டும்? என்று கேட்டாள்.

அதற்கு யுதிஷ்டிரர், தேவி, இதோ, இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அதுபோலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே எல்லா அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்பிற்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது என்றார்.

ஆன்மா தெய்வீகமானது, ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை -நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.

அது எப்படி கிட்டும்... இதன் தொடர்ச்சியில் காணலாம்

webulagam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.