Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும்

-க.வே.பாலகுமாரன்-

மிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்? என்பதே எமது கேள்வி.

இக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு; சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார்.

13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய விரிவாதிக்கத்திற்கு வழியமைக்கவே இவற்றினைக் கடுமையாக எதிர்ப்போம் என்றார்.

இப்பொழுது ஜே.வி.பி.யினர், மீண்டும் றோவின் தலையீடு, இந்தியப் பணித்துறை ஆட்சியாளரின் அடாவடித்தனம், பெரியண்ணன் நினைப்பு, தென்னாசியாவைத் தமது கொல்லையாக நினைக்கும் போக்கு என விளாசுகின்றனர்.

இவையெல்லாம் எமக்குப் பின்னோக்கி ஒட்டப்படும் திரைப்படமொன்றின் காட்சிகளாகின்றன. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினர் தமது உறுப்பினர்களுக்கு எடுத்த ஐந்து பாடங்களுள் ஒன்று இந்திய விரிவாதிக்கம். இன்று, அன்று அதைக் கற்பித்தோரில் உயிரோடு இருப்பவர் சோமவன்சர் மட்டுமே. அது போலவே 1987&88 களில் இந்தியாவை மிக இழிவாகப் பேசி இந்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இடம் கொடோமென்றும் ஏகாதிபத்தியத்தின் காவல் நாய்களே தமிழர் இயக்கங்களென்றும் இலங்கை - இந்திய உடன்பாடு அடிமைச்சாசனமென்று அலறியதும் தெரிந்ததே. இப்பொழுதும் அதே தான் நிகழ்கின்றது.

அதிரடி அறிக்கைகளுக்கும் அரசியல் அதிர்வேட்டுக்களுக்கும் ஜே.வி.பி.யினரிடம் எப்பொழுதும் பற்றாக்குறையிருந்தது கிடையாது. என்றாலும் அவர்களது இந்த அதிர்வேட்டு வெறும் அரசியல் நாடகமா? அல்லது சிங்களத்தின் ஆழமான மனநிலையின் வெளிப்பாடா? இது பற்றி எவரும் மேலோட்டமான முடிவிற்கு உடனடியாக வர முடியாது.

இருண்மை நிறைந்த மருமங்கள் புதைந்த ஐதீகங்களால் வனையப்பட்ட சிங்களத்தாரின் அடிமனத்தில் சில ஆழமான வெறுப்பு நோய்க் கூறுகள் உறைந்திருக்கின்றன. அதிலே வெளிநாட்டவர் மீதான வெறுப்பு நோயும் ஒன்று.

சோமவன்சர் அனுராதபுரத்தில் பேசிய பொழுது 'யார் எங்கள் எதிரி?" என வினா வெழுப்பித் தானே விடையும் தந்தார். முதலில் நோர்வே பிறகு பிரசல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியம்), வோசிங்டன், ரோக்கியோ, மேற்கு ஐரோப்பிய நாடுகள். இவர்கள் எங்களுக்கெதிராக நேரடியாக செயற்படுபவர்கள். ஆனால் இங்கே இன்னொரு பகை மறைந்திருக்கின்றது. அதுதான் புதுதில்லி என்றார்.

எனவே இங்கே விடுபட்டிருக்கின்ற நாடு சீனா மட்டுமே. இங்குள்ள துயரம் அல்லது விபரீதம் என்னவென்றால் ரோக்கியோவோ வோசிங்டனோ, புதுதில்லியோ பெய்ஜிங்கோ ஏதோவொரு விதத்தில் சிங்களத்திற்கு ஒன்றில் நிதியுதவிகளை அல்லது இராணுவ உதவிகளை அல்லது இரண்டையுமே பெருமளவில் வழங்கிவருபவை தான்.

அதேவேளை ஏதோ ஒப்பிற்கு சிங்களத்தின் மனித உரிமை மீறல் எல்லை கடந்துவிட்ட நிலையில் வேறு வழியின்றிக் கடுமையான கண்டனங்களையும் மெலிதான சில தடைகளையுமிட்டு ஏனோதானோவென செயற்படுபவை.

ஆனால் இதனைக் கூட பெய்ஜிங் செய்ய ஆயத்தமாகவில்லை. ஆகவே இவ்வகையில் தான் சீனா வேறுபடுகின்றது. ஆனால் சீனா இங்குதான் என்றில்லை. எங்கும் இதே கதை தான். மியான்மாரில், கென்யாவில், சூடானில் இன்றும் பல நாடுகளில் இதுவே அவர்கள் கதை. என்றாலும் சூடானில் தார்பூர் பகுதி மனித அவலத்தைப் புறந்தள்ளிச் சீனா சூடானுக்கு வழங்கிய உதவி அனைத்து நாடுகளின் கண்டனத்திற்குள்ளாகிச் சீனா சங்கடப்பட்டு, ஏன்? அவமானப்பட்ட நிலையிற் தனது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளது. எனவே எம் மக்களும் என்றோவொரு நாள் சீனா மட்டுமல்ல ஏனைய நாடுகளும் வரலாற்று நீதியின் முன் தலைகுனிய நேரிடும். இதனால் தத்தம் போக்கினை மாற்ற நேரிடும் என்று திடமாக நம்புகின்றார்கள்.

எனவே இத்தகைய சீனத் தொடர்பு குறித்து சற்று பின்னோக்கிப் பார்த்தால் இன்றைய நிலையைப் புரிய அது உதவிடும். இற்றைவரை சிங்களத்தில் எக்கட்சி ஆண்டாலும் அது எவ்வித கொள்கையைக் கொண்டிருந்தாலும் அது பற்றிச் சீனா அலட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆயத்தமாகவே இருந்துள்ளது.

எனினும் இப்பொழுது ஜே.வி.பி.யோடு கூட நெருக்கம் கொள்கின்றது. அது பதவிக்கு வருவதை விரும்புகிறது எனக் கூறப்படுகின்றது. சீனாவோடு தமது உறவு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதென சிங்களத்தார் பெருமையடித்துக் கொள்கின்றார்கள்.

முதன் முறையாக ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் தான் சீன உறவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாக அப்போது தான் தோற்றம் பெற்ற சீனாவை 1950 களில் சிங்களம் அங்கீகரித்தது.

1952 இல் ஆர் ஆர் உடன்பாடெனப்படும் அரிவி இறப்பர் உடன்பாடு கைச்சாத்தாகியது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின் பொழுது அதனை அடக்க ஆயுதங்களை அள்ளி வழங்கியது. இதை ஜே.வி.பி. மறந்தாலும் வரலாறு மறக்காது. பின் ஜே.ஆர் காலத்தில் 1983 இன் பின் விடுதலைப் போர் முனைப்புப் பெறத் தொடங்கவே. முதன் முறையாக நொறின்கோ (Norinco) எனப்படும் வட சீனத் தொழிற் கூட்டுத்தாபனத்தோடு ஆயுதக் கொள்வனவு உடன்பாடு செய்யப்பட்டது.

அன்று தொட்டு நொறின்கோ இங்கு ஆயுதக் களஞ்சியங்களைப் பேணத் தொடங்கியது. இவ்விராணுவ உதவிகளில் சீனாவால் முதலில் தமக்கு வழங்கப்பட்ட ரி-56 இலகு சுடுகலன் புலிக்கெதிரான தமது போரிடும் ஆற்றலைப் பெருமளவு அதிகரித்ததாகச் சிங்கள இராணுவம் நன்றியோடு கூறிக்கொள்கின்றது.

ருசிய ஏ.கே 47 இன் சீனப் பதிப்பான இச் சுடுகலன் பாரம் குறைந்தது, பயன்படுத்த இலகுவானது. அதுவரை சிங்களம் பிரித்தானிய என்பீல்ட் குழுமத்தின் இரண்டாம் உலகப் போரின் பின்னாகப் பயன்பாட்டிலிருந்த எஸ்.எல்.ஆர் சுடுகலன்களையே பயன்படுத்தி வந்தது.

சிறீமா காலத்தில் 1973 இல் பண்டாரநாயக்கா நினைவு மாநாட்டு மண்டபம், 1980 களில் ஜே.ஆர் காலத்தில் உயர் நீதிமன்ற வளாகக் கட்டடம், இப்பொழுது சீன மக்சிம் வங்கி வழி அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரிய நிதியுதவி Y8,Y12,Y22 வான் கலங்கள் வழங்கியது. அந்தக்காலம் இப்போது (மிக் 29 வான் கலங்களை வாங்க வக்கற்ற சிங்களத்திற்கு) F-7G வான்கலம். இவ்வாறாக சீனா படிப்படியாக சிங்களத்தின் முதன்மை ஆயுத விற்பனையாளராக, கொடையாளராக, பொருண்மிய உதவியாளராகத் தோற்றம் பெற்றுவிட்டது.

அண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் ஏட்டிற்குத் தான் வழங்கிய செவ்வியில் பாலித கோகண பின்வருமாறு கூறினார். சிறிலங்காவின் பழமையான மரபுவழி கொடையாளரான கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் எல்லோருமே இப்போது ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். எமக்கு கீழைத்தேய உதவி குறிப்பாக சீனா போன்றவை அந்த இடத்தைப் பெறுகின்றன. சென்ற வருடத்தில் சீன உதவி ஐந்து மடங்காக, ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து யப்பானை விட கூடுதல் உதவி வழங்கும் நாடாக சீனா மாறியுள்ளது. இப்பொழுது சீனா எமது நாட்டில் ஒரு புதிய துறைமுகம், நெடுஞ்சாலை, இரு மின்னுற்பத்தி நிலையங்கள் என்பனவற்றை அமைத்துத் தருகின்றது என்றார் அவர்.

எனவே இப்பொழுது சீனக் காதல் புதிய கட்டமொன்றுக்குள் நுழைகின்றது. இதற்கேற்ப ஜே.வி.பி.யினர் செயற்படுவதும் அதற்கு மறைமுகமாக மகிந்தர் ஆதரவு வழங்குவதும் புலப்படும் விடயங்கள். எனவே இப்பொழுது ஒரு புதிய வாய்ப்பாட்டு மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது.

20 வருடங்களுக்கு முன் இந்தியாவே இப் பகுதியில் ஒரேயொரு மேலாதிக்க நாடு. ஆனால் இப்பொழுது சீனா தன் நுட்பம் மிகுந்த செயற்பாடுகளால் இந்தியாவின் கொல்லைக்குள் சீனா புகுந்து விட்டது. சிங்கப்பூர் பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ராஜா மோகன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; 'சீனா இப்பொழுது இந்திய அயல் நாடுகளில் வீதிகள், துறைமுகங்கள் போன்றவற்றைக் கட்டி அவற்றினைத் தொடர்புபடுத்தித் தொடர்பு வட்டமொன்றை உருவாக்கி வருகின்றது.

இந்து சமுத்திரத்தின் கடற்பாதை அதன் வளங்கள் யாவற்றின் மீதும் சீனா கண் வைத்துள்ளது". மனித உரிமை காப்பு அமைப்பின் தென்னாசிய ஆய்வாளர் மீனாட்சி கங்குலி சொல்கிறார் 'சிறிய நாடுகளெல்லாம் இப்பொழுது சீனா பக்கம் சாய்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய நலன் தொடர்பிலான அதன் கொள்கையில் அழுத்தம் கொடுக்கவும் மனித உரிமை விடயத்தில் இந்தியாவை வாயடைக்கவும் இதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்" இப்பொழுது இந்தியா கவலைப்படத் தொடங்கியுள்ளது.

இப்பொழுது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவால் ஒரு தெளிவான போக்கினை எப்போதும் வெளிப்படுத்த முடியாமலிருப்பது இப்பொழுது உணரப்படுகின்றது. தனது நலன்கள் அதற்குத் துணைபோகிறவர் என்கிற விடயங்களில் அதன் போக்கு பல தடுமாற்றங்களைக் கொண்டதாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக முதலில் மியான்மார் இப்பொழுது சிறிலங்கா சான்றாவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

1990 களில் மியான்மாரில் சனநாயகம் மீள வேண்டுமெனக் குரல் கொடுத்த இந்தியா, இப்போது இராணுவ ஆட்சிக் குழுவின் பக்கம் சாய்ந்துள்ளது. இங்கோ இமாலய குத்துக் கரணத்தை அடித்துள்ளது. கோகண தொடர்ந்து தன் செவ்வியில் சொல்கிறார் 'இந்தியாவின் உதவியும் அதிகரிக்கின்றது. இவ்வருடம் 500 மில்லியன் டொலரை ஈட்டும் அனல்மின் நிலையம், கைத்தொழில், பூங்காக்கள், தொலைத் தொடர்புத்துறை போன்ற வற்றில் முதலிட இந்திய நிறுவனங்களை அழைத்துள்ளோம்" காங்கேசன் சீமெந்து ஆலையை மீள இயக்க பிர்லா குழுமம் முயல்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய நலன்களுக்கு என்றும் தடையாக இருக்கக் கூடாதென்பது தமிழ் மக்கள் நிலைப்பாடு. இதனைப் பயன்படுத்தி தன்மீது அவநம்பிக்கையும் ஐயுறவும் கொண்ட சிங்களத் தரப்பை வழிக்குக் கொண்டு வர இந்தியா முயன்றது. இதனால் தமிழ் மக்கள் நலன்கள் என்பது இந்திய நலன்களுக்கு வாய்ப்பானது என்கின்ற சமன்பாடு சிங்களத்தில் உருவானது. இதுவே சீனா, பாகிஸ்தான் நிலையும் இதன் வழி தமிழ் மக்கள் வாழ்வில் தீ அள்ளிப் போடப்படுகின்றது. ஒரு தொடர்ச்சியான விவேகமிக்க இராசதந்திர வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாமல் இந்தியா தடுமாறுவதால் இந்நிலை. 1970 களிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளாக வகுத்துப் பார்த்தால் இது புரியும்.

2002 ஆம் ஆண்டு அமைதி முயற்சிகளைக் குழப்ப ஜே.வி.பி, சந்திரிகா போன்றோர் பயன்படுத்தப்பட்டதாகக் கொழும்பில் முன்னர் செய்திகள் அடிபட்டன. ஆனால் சீனா இதனை எவ்விதம் கையாள்கின்றது?. தனது ஸ்ரீலங்காவின் உடைவு என்கிற நூலில் ஏ.யே வில்சன் பின்வருமாறு எழுதியுள் ளார். '1979 இன் இறுதி வாக்கில் தன்னை இரவுணவிற்கு சீனத் தூதர் அழைத்திருந்தார். அங்கு நான் அவரிடம் தமிழர் தனிநாட்டு வேண்டுகை பற்றி சீன நிலைப்பாடென்னவென்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் தமது ஆபிரிக்க நட்பு நாடுகளுடனும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குமான நல்லுறவினை இது பாதிக்கும் சோவியத்தின் இரையாகும் என்றார்".

இதுதான் இன்றைய நிலை, தமிழர் நலன்கள் என்பது இன்று சீனத் தரப்பிற்கும் இந்தியத் தரப்பிற்கும் தமது நலன்களை முன்னெடுக்க ஒரு ஏவுதளம். சர்வதேசத்திற்கும் இங்கு தனது மூக்கை நுழைக்க தமிழர் மீதான மனித உரிமை மீறல் ஒரு வாய்ப்பு. எல்லோர் நலன்களும் தமிழர் நலன்களுக்கு முன்னெடுக்கப்படும் விடுதலைப் போரின் அச்சிலே சூழல்கின்றது. இத்தனை பாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும் வீறுடன் நடத்தப்படும் விடுதலைப் போர் உலகின் முதன்மைக் கவனத்திலு முள்ளது. இவையாவையும் வரலாற்றன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கணக்கிலெடுத்து வருகின்றார். இன மானமிகு பொன் கணேசமூர்த்தியின் வரிகளை மீண்டும் நினைவுறுகின்றோம்.

'சலிக்காமல் நடக்கும் சக்தியினை அருளும்

செல்லும் வழிகளைச் செம்மைப்படுத்தி வையும்

பாய்ச்சல் நிகழ்கையிலே பக்கத்துத் துணையிருந்து

காற்றுச் சங்கூதும்".

நன்றி:-

டெய்லிமிரர் ஏப்ரல் 06.2005

சீன சிறிலங்கா உறவு நிலை

சம்பிகா லியனாராச்சி.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (14.04.08)

http://www.tamilnaatham.com/articles/2008/...ran20080415.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.