Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பிகை எழுதிய ” இந்த ஜென்மங்களைத் திருத்த முடியாது ”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகை எழுதிய ” இந்த ஜென்மங்களைத் திருத்த முடியாது ” வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

நீண்ட நாள்களுக்குப் பின் அந்த நண்பனைச் சந்தித்தேன். மாலை வேளை மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்திருந்த அந்த “ரெஸ்டூரன்ரும்” அமைதியாய்த்தான் கிடந்தது. இருவரும் அங்கு ஒரு மூலையில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். முன்பெல்லாம் அந்த இடம் எந்தநேரமும் சுறுசுறுப்பாகவே இருக்கும். பலர் வந்துபோவார்கள். நாங்களிருவரும் தற்போதைய நாட்டுச் சூழல், அரசியல் நிலைமை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இருவரும் இடையிடையே அடித்துக் கொண்டிருந்த கைத்தொலைபேசியிலும் கதைக்க வேண்டியதாயிற்று. “இந்த அரசாங்கம் தன்ர தேவைக்கு ஏற்றமாதிரி கிழக்கில காயை நகர்த்திக் கொண்டிருக்குது.

இது இந்த ஜென்மங்களுக்கு விளங்கிறமாதிரியில்ல. தன்ர அரசியல் அட்டவணையின்படி தேவை முடிந்ததும் அரசாங்கம் இவங்களுக்கு நல்ல பாடம் புகட்டும்போதுதான் விசுவாசத்தின்ர பலனை அனுபவிப்பாங்கள்” என்று ஆதங்கத்துடன் கூறினான் அந்த நண்பன். நீண்டநேர உரையாடலின் பின் இருவரும் எழுந்து சென்றுவிட்டோம்.

அந்த நண்பனின் பேச்சில் அரசாங்கத்தின் பேய்காட்டலை அரசாங்கத்தை இன்னும் விசுவாசித்துக் கொண்டிருக்கும் அக்குழுவினர் உணர்ந்து கொள்ளவில்லையே என்ற ஆத்திரம் இருந்தது. மாகாணசபை ஆட்சியதிகாரம், கிழக்கின் அபிவிருத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று அரசாங்கம் பம்மாத்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றது. இதற்கு கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனம் நல்ல உதாரணம். பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியது இங்கு விவாதத்திற்குரிய விடயமல்ல. அவர்களுக்கு எப்போதோ அந்த நியமனம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் நியமனம் வழங்கிய காலமும் வழங்கிய விதமுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.

தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாடான “சார்க்” மாநாடு நடைபெறுகின்றபோது அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளில் இந்தியா பற்றியே இலங்கை அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதுபோன்று இந்தியா தனது ஆதிக்கத்திற்குள்ளேயே இலங்கை உள்ளது என்பதையும் சார்க் நாடுகளுக்கு மாத்திரமல்ல தன்னைப்போன்ற உலக வல்லரசுகளுக்கும் சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதற்காகவே தனது படை பாதுகாப்பு ஆலாபரணங்களுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்புக்கு வந்திருந்தார். இந்த வேளையில்தான் கிழக்கு பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் கல்வி அமைச்சரின் பிரசன்னத்துடன் நியமனக் கடிதம் அவசர அவசரமாக வழங்கப்பட்டது.

சார்க் மாநாட்டுக்கும் பட்டதாரிகள் நியமனத்திற்கும் என்ன தொடர்பு உண்டு என இக்கட்டுரையை வாசிக்கும் பலர் வாயைப் பிளக்கலாம். இதுதான் மகிந்தா அரசியலின் காய் நகர்த்தல். இது சில படித்த “முட்டாள்களுக்கு” விளங்குவதில்லை. கிழக்கு மாகாணசபைக்கு சிறிலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக ஏன் தேர்தலை நடத்தி ஆயுதக்குழுவின் கையில் கொடுத்தது என்பது பற்றி பார்ப்பதற்கு முன்னர் கிழக்கு மாகாணசபைக்கு தேர்தல் ஒன்றை நடத்தி மக்கள் பிரதிநிதிகளின் கையில் கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கும் உடன்பாடு இருந்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்கள் மீதான அக்கறையோ அனுதாபமோ கிடையாது. மாகாணசபை முறைமையை கொண்டு வந்தால் அதிகாரப் பரவலாக்கல் என்ற அம்சத்தின் கீழ் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து ஓரம் கட்டிவிடலாம் அல்லது அவர்களை பலவீனப்படுத்தி விடலாம் என்பதே பாரதத்தின் அசையாத நம்பிக்கை. இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே வடகிழக்கை உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சிறிலங்கா பிரித்தபோது இந்தியா மௌனம் காத்தது.

இந்தியா நினைத்திருந்தால் பாராளுமன்றத்திற்கு ஊடாக விசேட சட்டத்தைக் கொண்டு வந்து வடகிழக்கு பிரிப்பை நிறுத்துமாறு இலங்கை ஐனாதிபதி மகிந்த இராஐபக்சவுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது. அது இலங்கை உச்ச நீதிமன்றின் தீர்ப்பு எனக் கூறி அதிலிருந்து விலகிக் கொண்டது.

கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் ஆயுதக்குழுவான பிள்ளையானின் தலைமையில் வழங்கப்பட்டு பெரும் ஆரவாரம் நடந்தபோதும் மாகாணசபையினால் இதுவரை மக்களுக்கு எந்தவித நன்மையும் கிட்டவில்லை. இது எதிர்பார்த்த விடயம்தான். மாறாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும் அரசாங்கத்திடம் எதையும் தட்டிக்கேட்க முடியாத நிலையும் உள்ளது. அவ்வாறு தட்டிக்கேட்க வெளிக்கிட்டால் மறுநிமிடமே முதலமைச்சரின் பதவி தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திற்கு சிங்களவர் ஒருவரை அரசு நியமித்தாலும் ஆச்சரியப்படமுடியாது. ஏனெனில் அரசாங்கம் தனது திட்டத்தின்படி கிழக்கில் மாகாணசபை தேர்தலை நடத்திக் காட்டிவிட்டது. தமிழர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதையும் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியாயிற்று இனி தான் நினைத்தமாதிரி எதையும் செய்ய முடியும். அதை இந்த ஆயுதக்குழுவால் தட்டிக் கேட்க முடியாது. எனவேதான் மாகாணசபைக்கு எந்தவொரு நிதியும் வழங்கவில்லை. அரசாங்கம் நினைக்கும்போதுதான் நிதி ஒதுக்கும் அதைமீறி எவரும் எதுவும் கேட்கமுடியாது.

எனினும் இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் அமைக்கப்பட்ட இம்மாகாணசபைக்கும் கிழக்கு மக்களுக்கும் தாங்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பனவற்றை வழங்கியுள்ளோம் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே சார்க் மாநாட்டுக்கு முன்னதாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அத்துடன் இந்த நியமனத்தை வழங்குவதன் மூலம் முதலமைச்சரையும் திருப்திப்படுத்த முடியும் என்பதும் அரசின் எண்ணம். ஏனெனில் இந்த நியமனம் கடந்த வருட இறுதியில் அல்லது இந்த வருட ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திறைசேரியின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினாலேயே இந்நியமனம் வழங்குவது தள்ளிப்போடப்பட்டு வந்தது. ஆனால் இறுதியாக சார்க் மாநாட்டுக்கு முன்னதாக கிழக்கில் எதையாவது செய்துவிடவேண்டும் என்பதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் தொடர்பில் இன்னுமொன்றையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் பட்டதாரிகளுக்கு சில நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த நியமனங்களை மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் திருகோணமலையில் வைத்து வழங்கினார். ஆனால் அப்போதெல்லாம் கல்வி அமைச்சர் இதற்கு வருவதுமில்லை, முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை. ஆனால் இம்முறை மூன்று மாவட்டங்களுக்கும் முதலமைச்சரையும் அழைத்துக் கொண்டு கல்வி அமைச்சர் சுசில் பிறேமஐயந்த நேரடியாகச் சென்று நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார். இதுதான் அரசாங்கத்தின் காய் நகர்த்தல். இதன் சூட்சுமத்தை புரிந்து கொள்ளாத சிலர் அரசாங்கம் ஏதோ கிழக்கு மக்களுக்கு ஓடியோடி வேலை செய்கின்றது என நினைத்துக் கொள்கின்றனர். இதுதான் அவர்களின் முட்டாள்தனம்.

சார்க் மாநாடு நடைபெறாதிருந்திருந்தால் பட்டதாரிகள் தொடர்ந்தும் வீதியில் இறங்கிப் போராட வேண்டி வந்திருக்கும். போராட்டத்தை நிறுத்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கும். இல்லையேல் வன்முறை பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் பாவம் பட்டதாரிகளே வேலையின்றி பாதிக்கப்பட்டிருப்பார்கள். பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கிய அன்று நீண்டகாலமாக பல கஷ்டத்தின் மத்தியில் எந்தவித வேதனமுமின்றி மாணவர்களின் நன்மை கருதி சேவை செய்த தொண்டர் ஆசிரியர்கள் நாயைவிட கேவலமான முறையில் வீதியில் வைத்து சிங்கள காவல் துறையினரால் அடித்து துரத்தப்பட்டதும் தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதும் அவர்களைப் பெரிதும் புண்படுத்தியிருந்தது. இதுதான் “ஐனநாயகத்திற்கு” திரும்பியதாகக் கூறப்படும் மக்களுக்குக் கிடைக்கும் பரிசு. இன்று அடி உதை. நாளை ஆசிரியர் சங்கத் தலைவர் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கிழக்கில் இந்த “அச்சமூட்டும்” படலம்தான் நடக்கின்றது. இதனால் எதையுமே சாதித்துவிடலாம் என்ற வாய்ப்பாடு ஆயுதக்குழுவிடம் உள்ளது. இதற்குப் பின்னணி அரசும் அதன் புலனாய்வாளர்களும் என்பது மக்களால் வெளியில் சொல்ல முடியாத உண்மை.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல் மற்றும் பசில் ராஐபக்சவின் தலைமையில் கிழக்கில் நடந்த அபிவிருத்திக் கூட்டம் என்பனவற்றின் மூலம் கிழக்கு மக்களுக்கு பல நன்மைகளையும் அபிவிருத்தியையும் செய்கின்றோம் என்ற மாயையை ஏற்படுத்தி மாகாணசபை முதலமைச்சரை திருப்திப்படுத்தி சார்க் மாநாட்டுக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் முதலமைச்சருடன் சந்திக்க வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேட ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச திட்மிட்டிருந்தார்.

ஆனால் அவரின் திட்டம் இறுதியில் தவிடுபொடியானது. பாரதப் பிரதமர் முதலமைச்சராக உள்ள ஆயுதக்குழுத் தலைவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். இது உண்மையில் எதிர்ப்பாக்கப்பட்ட விடயம்தான். ஒரு ஆயுதக்குழுவின் தலைவரை தற்போது ஆயுதத்துடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி வரும் குழுவின் தலைவரை பாரதப் பிரதமர் சந்தித்திருந்தால் அது உலக நாடுகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் மத்தியில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இதனால் இந்தியப் பிரதமர் முதலமைச்சரைச் சந்திக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தியிருந்தார். தொடர்ந்தும் சந்திப்பு நடத்துவதற்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தொடர்ந்து பேசுவதற்கும் விரும்பம் தெரிவித்துள்ளார். உண்மையில் தமிழ் மக்களால் ஐனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பே என்பதை இந்திய்ப பிரதமரின் இச்செயற்பாடுகள் துலாம்பரமிட்டுக் காட்டுகின்றன. கிழக்கு முதலமைச்சரை இந்தியப் பிரதமர் சந்திக்காமல் ஒதுக்கியது இலங்கை அரசுக்கும் முகத்தில் அறைந்ததுபோன்றதாகுதம்.

எந்தவித அதிகாரமும் இல்லாத உப்புச் சப்பற்ற மாகாணசபை ஊடாக எதையுமே செய்துவிட முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை. எண்பத்தியெட்டுக் காலப்பகுதியில் அப்போது ஆயுதக்குழுவாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதராஐபெருமாளின் தலைமையில் வடகிழக்கு மாகாணசபையை இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் பெற்றிருந்தது. ஆனால் நல்ல அனுபவமும் கல்வி அறிவும் கொண்டிருந்த வரதராஐபெருமாளே இந்த மாகாணசபையின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாது என தூக்கி எறிந்துவிட்டுச் சென்றதையும் இது தொடர்பாக 18 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழீழப் பிரகடனம் செய்ததையும் யாரும் மறந்துவிட முடியாது. படித்த நல்ல கல்வி அறிவுள்ள அந்த மனிதருக்கே அப்போதே மாகாணசபையின் “இழிவாரம்” விளங்கியிருந்தது. ஆனால் இப்போது இந்த மாகாணசபையில் என்ன இருக்கின்றது என்பதையே புரிந்துகொள்ளாமல் அதன் ஆட்சியாளர்களும் அதற்குப் பின்னால் திரிபவர்களும் அரசின் மாயையில் மூழ்கிப்போயுள்ளனர். ஐனாதிபதி மகிந்தாவை மலைபோல் நம்பியுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையின் இந்த இலட்சணத்தில் வடக்குக்கும் தேர்தல் நடத்தப்போகின்றதாம் அரசாங்கம். கிழக்கில் பிள்ளையானைப்போல் வடக்கில் பிரபாகரனும் ஆயுதத்தைக் கைவிட்டு தேர்தல் கேட்டு முதலமைச்சராக வேண்டுமாம். இதைக் கேட்கும்போது வேடிக்கையாகவும் சொல்பவர்களைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருக்கின்றது. யாரை யாருடன் ஒப்பிடுகின்றார்கள். இப்போது அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் மண்டைக்குள் எதுவுமில்லை. எதையாவது தமது பங்குக்குக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் “கீரோ” ஆகிவிட வேண்டும் என்பதுதான் அர்களின் நோக்கம்.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஞானமும் போரியல் முறைகளும் இவர்களுக்கு விளங்காது. அந்த அறிவு தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு அறவே கிடையாது. எனவே அதை நாம் அலசுவதில் அர்த்தமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இந்த அரசாங்கமும் அதன் ஐனாதிபதி மகிந்தாவும் உணரவேண்டும். சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் நீண்ட நாட்களுக்கு இவ்வாறு பேய் காட்ட முடியாது. தாம் தோண்டும் கிடங்கு தங்களுக்கே பாதகமாய் முடியும் என்பதை காலம் விரைவில் பதில் சொல்லும்.

அதேபோல் வடகிழக்கு மாகாணசபை அப்போது எதை எதிர்நோக்கியதோ அதே விளைவை கிழக்கு மாகாணசபையும் சந்திக்கும் என்பதை இன்று அதில் ஆட்சியில் உள்ள ஆயுதக்குழுவும் ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டாண்டு காலமாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்தி பின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்த வரலாறே உண்டு. இந்த வரலாறு என்றுமே மாறப்போவதில்லை.

அந்த மனப்பக்குவம் சிங்கள ஆட்சியாளர்களிடமோ பேனிதவாதிகளிடமோ கிடையாது. இதைப் புரிந்து கொள்ளாத வரை இந்த “ஜென்மங்களை” திருத்த முடியாது. பேராசையும் பதவி ஆசையும் யாரைத்தான் விட்டு வைத்தது. இப்படியானவர்கள் இருக்கும்போது சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்துவதும் அவர்களைத் திரும்திப்படுத்த வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும் அவர்களுக்கென சில சலுகைகளை வழங்குவதும் என்ற அரசின் படலம் தொடரத்தான் செய்யும். ஆனால் அதற்கு தமிழ் மக்கள் பலியாவதுதான் துர்ரதிட்டவசமானது.

http://www.pathivu.com/?cat=6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.