Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேய்கிறதா ரஜனியின் ஒளிவட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pg1xz7.jpg

ரஜினி படித்த அதே திரைப்படக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். சுமாரான முகத் தோற்றம் உள்ள ரஜினியால் சினிமாவில் வெற்றி பெற முடிந்தபோது, ஏன் நம்மால் முடியாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்ட கேள்விதான் என்னையும் சூப்பர் ஸ்டாராக்கியது. அந்த வகையில் நான் ஜெயிக்க ரஜினியும் ஒரு காரணம்!''

-ஒரு பேட்டியின்போது இப்படிச் சொன்னவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவிதான். திருப்பதியில் பல லட்சம் பேருக்குமேல் திரண்ட கூட்டத்தில் தனது `பிரஜா ராஜ்ஜியம்' கட்சியை பிரமாதமாகத் தொடங்கி, ``சூப்பர் ஸ்டார் ரஜினியும் அரசியலுக்கு வருவாரா? புதிய கட்சித் தொடங்குவாரா?'' என்று பல்லாண்டு காலமாக ரஜினி ரசிகர்களின் மனதில் எரிந்து கொண்டிருந்த ஏக்கத்துக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் சிரஞ்சீவி. அவரது அதிரடி அரசியல் பிரவேசம் ரஜினி ரசிகர்களின் மனதில் மீண்டும் ஆசையை விதைத்திருக்கிறது.

`தளபதி' படம் வெளியானபோது `வருங்கால முதல்வர்' என்ற ரீதியில், ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தான் ரஜினியை அரசியல் வட்டத்துக்குள் இழுத்த தூண்டில். அதைத் தொடர்ந்து, அப்போது ஆட்சியிலும் அரசியலிலும் தனிப் பெரும் சக்தியாக இருந்த ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினியை முன்னிலைப்படுத்தின பத்திரிகைகள். `ரஜினி அரசியலுக்கு வருவாரா?' என்ற ரீதியில் அப்போது கவர் ஸ்டோரி வெளியிடாத பத்திரிகைகளே தமிழகத்தில் இல்லை எனலாம். 1992-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ``நேற்று கண்டக்டர். இன்று நடிகன். நாளை... யாருக்குத் தெரியும்? ஆனால் `அரசியலில் மட்டும் இழுத்துவிடாதே' என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்'' என்று பேசினார் ரஜினி. அதுபோல நடிகர் திலகம் சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழாவில், ``ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி பெயர் வைத்திருக்க வேண்டும். எப்படியோ இந்தப் பாராட்டு விழாவை நடத்தினார்களே அதுவே சந்தோஷம்'' என்று ஜெ.வை வைத்துக் கொண்டே தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அதன்பின்பு டாப்கியரில் எகிறிய ரஜினியின் அரசியல் வாய்ஸ், `பாட்ஷா' பட விழாவில் இயக்குநர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கூறி, தமிழகத்தில் குண்டு கலாசாரம் நடக்கிறது என்று ஆட்சியை விமர்சனம் செய்தது வரை போனது. `காங்கிரஸில் சேரப் போகிறார், தி.மு.க.வில் சேரப்போகிறார்' என்றெல்லாம் திசைக்கொரு செய்திகள் பரவ, இறுதியில் திடீரென உதயமான மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். `அப்போது இருந்த எதிர்ப்பு அலையால்தான் ஜெயலலிதா தோற்றார். அதில் ரஜினியின் பங்கென்று ஒன்றும் இல்லை' என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துச் சொன்னார்கள். 1998-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜெ. கூட்டணி வெற்றி பெற்றது, அந்தக் கருத்தை உறுதிப்படுத்தியது.

2001-ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அவருக்குப் பூங்கொத்து அனுப்பி, அவரை `அஷ்டலட்சுமி' என்றார் ரஜினி. ``மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. ஜெயலலிதாவை இனி ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது'' என்று பஞ்ச் டயலாக் பேசிய அவரே, பூங்கொத்து கொடுத்தது அவரது இமேஜை புஸ்வாணம் ஆக்கியது.

2002-ல் காவிரிநீர் பிரச்னையில் `தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது' என்று கர்நாடக திரையுலகத்தினர் ஊர்வலம் சென்றதைக் கண்டித்து, நெய்வேலியில் தமிழ்த் திரையுலகத்தினர் ஊர்வலம் நடத்தியபோது அதில் கலந்து கொள்ளாத ரஜினி, காவிரி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, மொட்டைத் தலையுடன் வந்து உண்ணாவிரதம் இருந்தார். அப்போது நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்த ரஜினி, அதுபற்றி பிறகு வாயே திறக்கவில்லை என்பது வேறு விஷயம்!

இதே காலகட்டத்தில்தான் இவரது `பாபா' படம் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியது. சினிமாவில் ரஜினி சிகரெட் பிடிப்பதைக் கண்டித்து இந்தப் படத்துக்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்புக் காட்டிய நிலையில், 2004 மக்களவைத் தேர்தலில் மனம் திறந்த வாய்ஸ் என்று கருத்துகூறிய ரஜினி, ``பா.ம.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் அவரைத் தோற்கடிக்க ரஜினி ரசிகர்கள் கடுமையாகப் போராடுவார்கள்.

அதையும் மீறி ஜெயித்தால் அது ராமதாஸ் முந்தைய ஜென்மத்தில் செய்த புண்ணியம்'' என்றார். ராமதாஸின் பூர்வ ஜென்ம புண்ணியமே வெற்றிபெற்றது.

`ரஜினி கொஞ்சம் சுயநலவாதி. தினமும் ஜெயலலிதா செல்லும் பாதையில் ஏற்பட்ட டிராஃபிக் நெரிசலால் பாதிக்கப்பட்டதால்தான் ஜெ.வுக்கு எதிராக ரஜினி பேசத் தொடங்கினார்' என்ற கருத்து கூறுவோரும் உண்டு. `பாபா' எதிர்ப்பினால்தான் பா.ம.க.வுக்கு எதிராக தனது ரசிகர்களை ரஜினி உசுப்பி விட்டார். அதாவது, தன் நலன் சார்ந்து தனக்கு நெருக்கடி வரும்போது நண்பர்கள் என்ற போர்வையில் சிலர் கொடுக்கும் தவறான ஆலோசனைப்படி அரசியலை கையில் எடுப்பதால்தான் ரஜினிக்கு தொடர்ந்து தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைக்கிறது என்பது மேற்சொன்ன சம்பவங்களில் நிரூபணம் ஆகியிருப்பதாகவும் ரசிகர் வட்டாராங்கள் கூறுகின்றன.

ஒகேனக்கல் பிரச்னையில் ``தமிழனுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்பவர்களை உதைக்க வேண்டாமா?'' என ஆரம்பத்தில் பஞ்ச் வசனம் பேசிவிட்டு பிறகு, கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்ததோடு, ``எப்படிப் பேசவேண்டும் என்று கன்னடர்களிடம் கற்றுக் கொண்டேன். எனது குசேலன் படம் ரிலீஸாக ஆதரவு கொடுங்கள்'' என்று அவர்களிடம் வேண்டியது தலைகீழ் மாற்றம். கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்து, ரூ.60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட `குசேலன்' படம் ஊற்றிக் கொள்ள, இத்தனை நாள் ரஜினியைக் கொண்டாடிக் கொண்டிருந்த தியேட்டர் ஓனர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டத்தை ஈடுசெய்யக் கோரி, இப்போது அவருக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதிலும் மௌனத்தையே கடைப்பிடிக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இந்தநிலையில்தான் சிரஞ்சீவி தொடங்கியிருக்கும் `பிரஜா ராஜ்ஜியம்' ரஜினியை எதிர்பார்த்து ஏமாற்றடைந்திருந்த அவரது ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. ரஜினிக்கு ரசிகர் மன்றங்களை உருவாக்கிய இளைஞர்கள் இப்போது ஐம்பதைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடையில் அவருடைய பேச்சுகளாலும் சினிமா டயலாக்குகளாலும் எப்படியும் அரசியலுக்கு வந்தே விடுவார் என்று காத்திருந்து பொறுமையிழந்த பலர், தற்போது மன்றப் பணிகளில் இருந்து ஒதுங்கி விட்டார்கள் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

அதிலும் `குசேலன்' படத்தில் `நான் அரசியலுக்கு வருவேன் என்று படங்களில் பேசிய வசனங்கள் எல்லாம் யாரோ ஓர் எழுத்தாளர் எழுதியது. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்' என்ற ரீதியில் ரஜினி பேசிய டயலாக், கொஞ்சம் நஞ்ச ஆர்வத்தையும் முடக்கி விட்டதாகக் கூறுகிறார்கள் ரசிகர்கள். மன்றப் பொறுப்பில் இருந்து கட்சிப் பொறுப்பு கிடைக்கும் என்று இவர்கள் காத்துக் கொண்டிருக்க விஜயகாந்த், கார்த்திக்கைத் தொடர்ந்து சரத்குமாரும் புதிய கட்சி தொடங்கி விட்டார்.. ரஜினி படங்களின் ரிலீஸின் போது டிக்கெட் விநியோகம் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே ரசிகர்களுக்கு ஒரே ஆதாரமாக இருந்தநிலையில் சில ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ``தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம். ரஜினியின் அரசியல் அத்தியாயம் ஆரம்பமான போது, அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்ட வழக்கறிஞரணி, மகளிரணி போன்றவை எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. மொத்தத்தில் எந்தத் தலைவனால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தோமோ, அதே தலைவனால் தலைகுனிந்து மனம் புழுங்கி ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

ரசிகர் மன்ற விழாக்களில் கலந்து கொள்ள சத்யநாராயணாவுக்கு ரஜினி தடை போட்டதும் ரசிகர்களின் சோர்வுக்கு ஒரு முக்கியக் காரணம். இத்தகைய சூழலில் மதுரை மன்ற நிர்வாகிகள் சோலைராஜா, பால தம்புராஜ் போன்றவர்கள் இப்போது `அஞ்சா நெஞ்சனிடம்' அடைக்கலம் ஆகிவிட்டார்களாம். அதே மதுரையில் `பாபா' படத்துக்கு பா.ம.க. காட்டிய எதிர்ப்பைச் சமாளிக்கப் போராடிய ரஜினி ரசிகர்களும், வழக்கறிஞர்களுமான சிங்கராசு, மணவாளன் போன்றவர்களும் ஒதுங்கியிருக்கிறார்களாம்.

திருச்சியில், ரஜினி நின்றால் ஒரு போஸ்டர், நடந்தால் ஒரு போஸ்டர் என்று கலக்கிய கிளை மன்ற நிர்வாகியான சக்திவேல் என்பவர் இப்போது, தான் உண்டு தன் வேலை உண்டென்று அமைதியாகி விட்டாராம். நாற்பது வயதைத் தாண்டி விட்ட நிலையில், இன்னும் தங்களை ஒரு நடிகரின் ரசிகராகக் காட்டிக் கொள்ள சங்கடப்பட்டு இவர்கள் முடங்கிக் கிடக்கிறார்களாம். ஆனாலும் `ரஜினியால் வீணாகி விட்டோம்' என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ள எந்த ரசிகரும் தயாராக இல்லை. என்றைக்காவது ரஜினி புதுக் கட்சித் தொடங்கிவிட மாட்டாரா? என்ற ஆசைதான் இதற்குக் காரணம்.

கன்னடர்களிடையே, ரஜினி வருத்தம் தெரிவித்ததைக் கண்டித்து, கோவையில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட `குசேலன்' பட போஸ்டர்களை, அதை வைத்த ரஜினி ரசிகர்களே கிழித்துச் சேதப்படுத்திய சம்பவம் ஒட்டுமொத்த ரஜினி எதிர்ப்பின் பிரதிபலிப்புதான்.

``பதின்மூன்று வயதில் மன்றப் பணிகளில் இறங்கிய எனக்கு இப்போது நாற்பத்து மூன்று வயது. முப்பது ஆண்டுகளாக தலைவர் புகழ் பாடி வரும் எங்களை எங்களது அம்மா, மனைவி, பிள்ளைகள் கூட ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இந்த வயதிலும் ரஜினி படம் ரிலீஸாகும் போது பேனர், கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்ய முடியுமா? ஆனாலும் அதையெல்லாம் செய்கிறோம். அரசியலில் 1996-ல் அவருக்கு நல்ல வாய்ப்பு வந்தது. அதை அவரே உதறித் தள்ளிவிட்டார். ரசிகர் மன்றப் பணிகளால் தொழிலையும், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் போய்விட்டது. கல்லூரிக்குச் செல்லும் என் மகன்கூட என்னை மதிப்பதில்லை. இத்தனைக்குப் பிறகும் அவர் அரசியலுக்கு வந்தால், பழைய இமேஜைப் பெற கஷ்டப்பட வேண்டியிருக்கும்'' என்று மன்றப் பணிகளில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விலகிவிட்ட பெயர் வெளியிட விரும்பாத கோவை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் புலம்பித் தள்ளினார்.

கோவை மாவட்டச் செயலாளர் உலகநாதனிடம் பேசினோம். ``ரசிகர் மன்றப் பணிகளில் இருந்து நிர்வாகிகள் விலகி விட்டார்கள் என்று சொல்வதைவிட, சோர்ந்து போய்விட்டார்கள் என்று சொல்வதே சரி. எனக்கும் நாற்பது வயதுக்கு மேலாகிவிட்டது. ஒகேனக்கல் பிரச்னையில் அவர் வருத்தம் தெரிவித்ததை பத்திரிகைகள் வேறுமாதிரி விமர்சனம் செய்துவிட்டன.

நேர்மையானவர்களால் மட்டுமே மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியும். பெரிய பெரிய அரசியல் கட்சிகள் கூட இளைஞர்களை இழுக்க `மாநாடு', `பாசறை' என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் இருக்கும் இளைஞர்கள், நாளைக்கே ரஜினி கட்சி ஆரம்பித்தால் ஒரு தொண்டனாக ரஜினியிடம் வந்துவிடுவார்கள். ரஜினி சாரின் மௌனத்தால் நாங்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறோம். அரசியலுக்கு அவர் வந்துவிட்டால், பழைய சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கிவிடுவோம்'' என்று ஒரே போடாகப் போட்டார் உலகநாதன்.

எது எப்படி இருந்தாலும், `குசேலன்' விவகாரத்தில் தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள் கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கும் ரஜினி, மீண்டும் தடுக்கி விழுந்த யானையாகக் கிடப்பாரா? குதிரையாக எழுந்து ஓடுவாரா? தெரியவில்லை. ``இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். ஒரு ஹிட் படம் கொடுத்தால் மீண்டும் ரஜினி காய்ச்சல் தமிழகத்துக்கு வந்துவிடும்'' என்கிறார், பிரபல இயக்குநர் ஒருவர்.

ஆனால், அரசியலைப் பொறுத்தவரை சறுக்கலையே சந்தித்து வரும் ரஜினி, காவிரி நீர் பிரச்னையிலும் தமிழக மக்களின் பொறுமையைப் பல சந்தர்ப்பங்களில் சோதித்துவிட்டார். ஆன்மிகத்திலும் ராகவேந்திரா, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பாபா, தயானந்த சரஸ்வதி என்று ஒரு குழப்பமான நிலைகளையே முன்வைக்கிறார் ரஜினி என்கிறார்கள் பொதுவான பார்வையாளர்கள். ``முப்பதாண்டுகளாக தான் இருக்கும் சினிமாவுக்காக தரமான படம் எதையும் செய்யத் தயாராக இல்லாத ரஜினியால், அரசியலுக்கு வந்து மக்களுக்கு மட்டும் என்ன நல்லது செய்துவிட முடியும்?'' என்று இயக்குநர் தங்கர்பச்சான் ஒரு சமயத்தில் கேட்ட கேள்விதான் இப்போது நம் மனதில் வந்து மின்னி மறைகிறது.

இந்தக் கேள்விக்கு என்ன சொல்லப் போகிறார் ரஜினி? காத்திருக்க தமிழகம் தயார்! ஆனால், ரசிகர்கள்?

http://www.kumudam.com/magazine/Reporter/2008-09-04/pg1.php

  • கருத்துக்கள உறவுகள்

குமுதத்துக்கு வேற வேலையில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உச்சிக்குப் போனால் இறங்கித்தான் ஆகணும்.. தேய்ந்தால் என்ன, வளர்ந்தால் என்ன.. மனுஷன் சம்பாதித்து அனுபவிக்கிறார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.