Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

Featured Replies

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை.

ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் - 400 குடும்பங்கள், சக்கிலியர் சமூகத்தினர் - 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில குடும்பங்கள்- என்பதுதான் பண்ணைப்புரம் மக்கள் தொகையின் சாதிவாரியான சேர்க்கை.

நிலங்கள் மற்றும் சிறிய, நடுத்தர எஸ்டேட்டுகளும் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒக்கலிக கவுண்டர்கள். தாழ்த்தப்பட்டோரில் ஆகப்பெரும்பான்மையினர் நிலமற்ற கூலி விவசாயிகள் அல்லது எஸ்டேட் தொழிலாளிகள். பெரும் பண்ணையாரான பிரசாத்தின் பண்ணையில் சக்கிலியர், பறையர் சமூகத்தைச் சேர்ந்த பலர் பண்ணையடிமைகள். பறையர் சமூகத்தில் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் விவசாயம் தவிர சாதி ரீதியான அடிமைத் தொழில்களெதுவும் செய்வதில்லை. மேலும் பறையர் சமூகத்தில் ஓரளவு படித்தவர்களும் உள்ளனர்.

இருப்பினும் பண்ணைப்புரம் தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தேநீர்க் குவளைதான்; சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ கடைக்ககு வெளியே ஒதுங்கி உட்கார்ந்துதான் தேநீர் குடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளூர் சலூனில் முடி திருத்த முடியாது; துணியும் சலவைக்குப் போட முடியாது. பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுதான் நிலைமை.

இந்த இழிவைச் சகிக்க முடியாத தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் தேநீர்க் கடைக்குள் போவதில்லை; அல்லது தேவைப்படும்போது யாரையேனும் அனுப்பி வாங்கிவரச் செய்து குடித்துக் கொள்வார்கள்.

உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல; சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்டவர் வீட்டுத் திருமணத்துக்கு வந்த உறவுக்கார இளைஞர்கள் தேநீர் குடிக்கச் சென்றபோது அவர்களுக்கும் தனிக்குவளை தரப்பட்டது. டாக்டர் படிப்பு போன்ற உயர்கல்வி கற்ற அந்த இளைஞர்கள் மனம் குமுறி தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாகக் காசைக் கொடுத்து விட்டு தேநீர் குடிக்காமல் சென்றிருக்கின்றனர்.

உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி ஒடுக்கும் சாதி வெறியர்களுக்கு அருகாமையிலுள்ள மீனாட்சிபுரத்து இளைஞர்கள் என்றால் மட்டும் நடுக்கம். சுமார் 8 மாதங்களுக்கு முன் தங்களுக்குத் தனிக்குவளை என்று புரிந்து கொண்ட மீனாட்சிபுரத்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவர் தனிக்குவளை தந்தால் உடனே வேல்கம்பால் பாய்லரை ஓட்டை போட்டுவிட்டுப் போய்விடுவார் என்றும் பழைய சம்பவங்களை மக்கள் நினைவு கூர்கின்றனர்.

1956, 57 வாக்கில் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராசன், சாமுவேல், கருப்பண்ணன், சின்னையா போன்ற ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து ” ராயல் உணவு விடுதி ” என்ற கடையில் சாதி ஒதுக்கலும் தீண்டாமையும் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியுள்ளனர். அது பாவலர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த காலம். அதன்பின் 1972 வாக்கில் நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக மாறிய பாவலர், தனது இறுதிக் காலத்தில் தி.மு.க.வில் இணைந்தார்; பின் 1976-இல் மரணமடைந்தார்.

தனித் தேநீர்க் குவளைக்கெதிராக யாராவது குரல் கொடுத்தால் பிரச்சினை பெரிதாகும் எனத் தெரிந்தால் உடனே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கண்ணாடி கிளாஸ் வைப்பது, ஆனால் அதில் லேசாக ஆணியால் கீறி அடையாளம் செய்து கொள்வது - பிறகு சிறிது நாளில் பழைய வடிவத்துக்கே திரும்பி விடுவது என்பதுதான் பண்ணைப்புரத்தில் நடந்து வருகிறது.

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி பண்ணைப்புரத்தில் தனி தேநீர்க் குவளை ஒழிப்புப் போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் விடுதலை முன்னணி ( மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பு ). தனித் தேநீர்க் குவளை வைப்பது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

பண்ணைப்புரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கவுண்டர், கள்ளர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ” 31.10.97 அன்று போராட்டம் ” என்று அறிவிக்கும் தட்டியைப் பார்த்தவுடன் சாதி வெறியர்களிடையே சூடு பரவத் தொடங்கியது. பண்ணையார் பிரசாத் வீட்டில் சாதிவெறியர்களின் சதியாலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இரவோடிரவாகத் தட்டிகள் எரிக்கப்பட்டன.

தட்டி எரிக்கப்ட்டது பற்றி புகார் கொடுக்கப் போன பண்ணைப்புரம் வி.வி.மு தோழர் ( கள்ளர் சாதியில் பிறந்தவர் ) காவல் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் கோம்பை நகரில் குத்தகை விவசாயியை வெளியேற்றிய டி.இ.எல்.சி பாதிரியாருக்கு எதிராக வி.வி.மு போராடிக்கொண்டிருந்தது. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று தோழர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சுமார் 11 பேர் மீது பாதிரியாரைக் கொல்ல முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

இதுவன்றி கம்பம் வட்டாரம் முழுவதும் வி.வி.மு. தோழர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். முன்னணியாளர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டதால் போராட்டம் நடைபெறாது என்று பிரச்சாரத்தையும் போலீசே கட்டவிழ்த்துவிட்டது.

இருப்பினும் 31.10.97 காலை பண்ணைப்புரம் நேநீர்க்கடை வாயிலில் போலீசு இறக்கப்பட்டுவிட்டது. சாதிவெறியர்கள் சுமார் 300 பேர் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் தயாராக நின்று கொண்டிருந்தனர். வரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வந்தார்கள்; கையில் கொடியுடன் தீண்டாமைக்கெதிராக முழக்கமிட்டபடியே வந்தார்கள்; முன்னணியாளர்கள் சிறை பிடிக்கப்பட்டாலும் சோர்ந்து முடங்கிவிடாத தோழர்கள் வந்தார்கள்; எதிரில் கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்த சாதி வெறியர்களையும், கோபத்தால் துடித்துக் கொண்டிருந்த போலீசாரையும் சட்டை செய்யாமல் நேநீர்க் கடையை நோக்கி வந்தார்கள்; சாதி வெறியர்கள் வீசிய கற்கள் தலையில் பட்டுத் தெரித்த போதும் பார்வை சிதறாமல் தேநீர்க்கடை நோக்கி வந்தார்கள்.

தனிக்குவளையைப் பாதுகாப்பதற்காகவே தருவிக்கப்பட்டிருந்த போலீசு அவர்களைப் பாய்ந்து மறித்துப் பிடித்தது. போராட வந்த வி.வி.மு. தோழர்களில் பாதிப்பேர் தேவர் சாதிக்காரர்கள் என்பதை அங்கே கூடிநின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொஞ்சம் ஆச்சரியத்துடன் கவனித்தார்கள்; அதுவும் அவர்கள் சாதிவெறிக்கும், வெட்டு குத்துக்கும் பேர் போன கூடலூரிலிருந்து வந்தவர்கள் என்பதை உள்ளூர் மறவர்களும், கவுண்டர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தார்கள்; அப்போது ஊருக்கு வந்திருந்த இளையராஜாவின் மனைவி, வீட்டு வாசலில் நின்றபடியே இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவர், கைது செய்யப்பட்ட தோழர்கள் வண்டியில் ஏற்றப்பட்டவுடன் காரில் ஏறிக் கிளம்பினார்.

கைது செய்து கொண்டு போன தோழர்களை கோம்பை நகரத் தெருவில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கிக் குதறின காவல் நாய்கள். ” திமிரெடுத்த பள்ளன் - பறயனையும், அவனுடன் கூடப்போகும் மானங்கெட்ட கள்ளனையும்” வாய்க்கு வந்தபடி ஏசவும் செய்தார்கள்.

போராட்டத்தில் பங்கு கொண்ட பண்ணைப்புரத்தைச் சேர்ந்த தேவர் சாதியிற் பிறந்த தோழர்களின் குடும்பங்களைச் சார்ந்த சாதிவெறி கொண்ட பெண்கள் சாடை பேசினார்கள். ” கொண்டு போய் மகளைப் பள்ளனுக்குக் கட்டிக் கொடு ” என்று வைதார்கள். கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘வசவு’ ஆத்திரப்படுத்தாது என்பது கூட சாதிவெறி கொண்ட அந்த மண்டைகளுக்கு உரைக்கவில்லை.

போலீசாரின் சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து கூடலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார் ஆண்டிப்பட்டி வி.வி.மு. தோழர் செல்வராசு. ” சூத்திரன் என்றால் பாப்பானின் வைப்பாட்டி மகன் என்ற மனுதர்ம ரகசியத்தை பெரியார் அம்பலப்படுத்தினார். தமிழக போலீசில் எத்தனை பேர் ‘தேவடியா மக்கள் ‘ என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஊரில் இன்னின்னார் இருக்கிறார்கள் ” என்று பேசினார் செல்வராசு.

ஆத்திரம் கொண்ட போலீசு அதிகாரிகள் நள்ளிரவில் வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டினர். ராஜத்துரோக (124-ஏ) குற்றத்தில் அவர்மீது வழக்குப் போட்டனர்.

வசவுகள், தாக்குதல்கள், வழக்குகள் …. அனைத்தும் ஒருபுறமிருக்க பண்ணைப்புரத்தில் தனிக்குவளை எடுக்கப்பட்டு விட்டது. பண்ணைப்புரத்தில் பண்ணையாருக்கும் சாதி வெறியர்களுக்கும் அடங்கி மவுனமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். “இந்த ஊரில் தீண்டாமை இல்லை ” என்று ஊர்க் கூட்டம் போட்டு எழுதிக் கையெழுத்து வாங்க பிரசாத் முயன்றபோது “முடியாது ” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள் தாழ்த்தப்ட்ட மக்கள்.

தனிக்குவளை எடுக்கப்பட்டதைக் காட்டிலும் முக்கியமான வெற்றி இதுதான்.

- புதிய கலாச்சாரம், மார்ச் - 1998 இதழிலிருந்து.

பின்னுரை

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடியங்குளம் கலவரம் முடிந்து தென்மாவட்டங்களில் நிர்ப்பந்தமாக அமைதி வந்த நேரத்தில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினை தமழிகம் முழுவதும் நடத்தினர். அந்தச் சமயத்தில் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியைக் கண்டித்து இயக்கம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மை என்பதாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பான்மை என்பதாலும் தீண்டாமை இயக்கத்திற்கெதிராக இரு பிரிவிலிருந்தும் உழைக்கும் மக்களை திரட்டுவது அவசியம். மேல்சாதியனரை ஜனநாயகப்படுத்துவதும், தலித் மக்களை தைரியமுள்ளவர்களாக மாற்றுவதும் நடைமுறையில் அவ்வளவு சுலபமானதல்ல. இந்த முள் நிறைந்த பாதையில் இன்றும் வி.வி.மு போராடிக் கொண்டிருக்கிறது. பண்ணைப்புரம் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

பத்தாண்டுகளுக்கு பின்னரும் பண்ணைப்புரத்தின் வழக்குகளுக்காக தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த தேநீர்க்கடை உரிமையாளரும் இறந்து விட்டார். இன்று இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் யூஸ் ஓன் த்ரோ பிளாஸ்டிக் குவளை கொடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் சமத்துவம் வந்து விட்டது என்பதல்ல. தீண்டாமையை பாதுகாப்பதற்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது என்பதுதான். பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆதிக்கசாதியினர் கேட்டுக் கொண்டால் கண்ணாடி குவளையும், தலித் மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிளாஸ்டிக் குவளைகளும் கொடுக்கப்படுவதாக தோழர்கள் கூறுகின்றனர். வி.வி. மு இன்னமும் போராடிக்கொண்டுவருகிறது. சென்னையில் செட்டிலாகிவிட்ட இசைஞானிக்கும் அவரது நவீன வாரிசுகள் எவருக்கும் இந்தப் போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. கருப்பு பார்ப்பனராகிவிட்டபடியால் தலித்துக்களின் அவலம் அவர்களைப் பொறுத்தவரை பாவலர் வரதராசனின் காலத்தைச் சேர்ந்தது. நிகழ்காலத்தின் ஒளியில் இறந்தகாலத்தின் இருட்டு புதைக்கப்பட்டு விட்டது.

பண்ணைப்புரம் வட்டாரத்து தலித் மக்களோ இன்னமும் சமத்துவத்தைக் கண்டபாடில்லை.

இந்த பதிவு வினவு தளத்தில் வெளிவந்த்து :http://vinavu.wordpress.com/2008/11/19/cas4/

இதன் மறுமொழிகளை வாசிக்க : http://vinavu.wordpress.com/2008/11/19/cas4/#comments

தொடர்புடைய பதிவுகள் மற்றும் விவாதங்கள் நடக்குமிடம்

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

பசும்பொபன்னில் தேவர் ஜெயந்தி ! பந்தப்புளியில் தீண்டாமை !!

Edited by வினவு

  • தொடங்கியவர்

சட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில ‘பழைய’ கதைகளைப் பதிவு செய்கிறோம் - ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை.

மீண்டும் மீண்டும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்படியொரு பிரச்சினை வெடிக்கும்போது மட்டும்தான் ஆதிக்க சாதியில் பிறந்த ‘நல்லவர்களின்’ கவனம் கூட இதன்பால் திரும்புகிறது. சில பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இது கொஞ்சம் அலுப்பாகக் கூட இருக்கலாம். நமக்கு மெகா சீரியல் அலுப்பதில்லை, கிரிக்கெட் அலுப்பதில்லை, அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாக்கள் அலுப்பதில்லை, உண்மை மட்டும்தான் சீக்கிரம் அலுத்துவிடுகிறது.

சட்டக்கல்லூரி தலித் மாணவர்களைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்திருக்கிறார்களாம். அப்பன், ஆயி, மாமன், மச்சான் எனக் கையில் கிடைத்தவர்களையெல்லாம் பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு ‘குற்றவாளிகளை’ பொறி வைத்துப் பிடிக்கிறது காவல்துறை.

“வீடியோ காமெராவின் முன் பப்ளிக்காக உலகமே பார்க்கும்படி ஒரு ‘குற்றத்தை’ செய்த குற்றவாளிகளை போலீசு பிடிக்கத்தானே செய்யும்?” என்று சிலர் மனதிற்குள் முணுமுணுத்துக் கொள்ளலாம்.

தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்பவையெல்லாம் கூட சட்டப்படி குற்றம்தான். இந்தக் குற்றங்களும் பப்ளிக்காக நாடறியத்தான் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தக் குற்றங்களுக்காக எந்தக் காலத்திலாவது தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறதா, அத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா என்பதை “வன்முறையைக் கண்டு மனம் வெதும்பியிருக்கும்” பதிவர்கள் கூறவேண்டும்.

மாறாக, தீண்டாமைக் குற்றத்தை எதிர்ப்பவர்கள்தான் பொய் வழக்குகளின் கீழ் சிறை வைக்கப்படுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் பண்ணைப்புரத்தில் ‘தனிக்குவளைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்’ குறித்த செய்தியை கீழே தந்திருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது ராஜத்துரோக வழக்கு (124-A) உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

ராஜத்துரோக குற்றம் என்றால் என்ன தெரியுமா? சட்டபூர்மாக அமைந்த இந்திய அரசை, சட்டவிரோதமாக வன்முறையின் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதுதான் ராஜத்துரோகம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.

“தனிக்குவளையைத் தூக்கியெறிவது எப்படி இந்திய அரசைத் தூக்கியெறிவதாக ஆக முடியும்? அப்படியானால் இந்திய அரசு = தனிக்குவளை என்று ஆகிறதே!” என்று கேட்காதீர்கள்.

அது அப்படித்தான்!

தனிக்குவளை = தனிப்படை

பண்ணைப்புரம் = சட்டக்கல்லூரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.