Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் சு.வில்வரெத்தினம் காலத்துயரும் காலத்தின் சாட்சியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் சு.வில்வரெத்தினம் காலத்துயரும் காலத்தின் சாட்சியும்.

யதீந்திரா

கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும் எந்தவொரு இடத்திலும் நேரக் கூடிய ஒன்றுதான் இது. இராணுவ வெற்றிகளே எமக்கான நற்செய்தியாக இருக்கும் சூழல். எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் சமகாலத்தின் உண்மை. உண்மைகளை நிமிர்ந்து எதிர்கொண்டு அதன் சாட்சியாக இருக்கவேண்டிய பொறுப்பு சமகாலத்தின் படைப்பாளிகளுக்கு உண்டு. அப்படியொரு கவிஞராக சு.வில்வரெத்தினம் இருந்திருக்கிறார் என்பதற்கு அவரது கவிதைகளே சாட்சி. (கவனிக்க எல்லாக் கவிதைகளும் அல்ல)

vilvarathinam370at7.jpg

வில்வரெத்தினம் அவர்களுடன் எனக்கு கிட்டத்தட்ட பத்துவருடகால பழக்கமுண்டு. சு.வி, எல்லோருடனும் இனிமையாகப் பழகக் கூடிய ஒருவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை தவளும். அவரைப்பற்றி பொதுவாகச் சொல்வதானால் இப்படித்தான் சொல்ல முடியும் ஆனால் இதற்காகவெல்லாம் ஒருவரை நினைவு கூரமுடியாது. கவிஞர் சு.வி பல கொந்தளிப்பான காலகட்டங்களின் நேரடி சாட்சியாக இருந்தவர். அவர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவராக இருந்ததும் ஈழ விடுதலை அரசியலின் முன்னோடிகள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்களாக இருந்ததும் இதற்கொரு காரணம். இந்த காலகட்டங்களின் அரசியலை பேசும், தனது தேசம் எதிர்கொண்ட இன்னல்களை, சிதைவுகளை நிமிர்ந்து பேசும் ஒரு காலத்தின் கவிஞராக சு.வி இருந்திருக்கிறார் என்பதற்கு அவரது பல கவிதைகள் சான்றுபகர்கின்றன. நமது தலைமுறைகளுக்கு சு.வி விட்டுச் சென்றிருக்கும் பதிவுகள் அவை.

ஒரு கவிஞன் அதைத்தான் செய்யவும் முடியும். ‘எல்லா கவிஞர்களும் எப்போதும் புரட்சியாளர்களே’ என்று கூறி படுகொலைக்கு உள்ளான கவிஞர் லோர்கோவை முன்வைத்து இங்கு நாம் கவிஞர்களை தேட வேண்டியதில்லை. அப்படி நாம் தேடுவோமாயின் பலர் கானாமல் போய்விடக் கூடும். படைப்பாளிகள் காலத்தின் கண்ணாடி என்று பொதுவாகச் சொல்வதுண்டு. அந்த கண்ணாடி வெறும் சமகாலத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. தலைமுறைகள் தம்மை பார்த்துக் கொள்வதற்கான கண்ணாடி அது. தங்களது இன்றைய பிரகாசமான முகத்திற்காக எத்தனையாயிரம் முகங்கள் தளும்புகளை சுமந்திருக்கின்றன, எத்தனையாயிரம் பேர் முகங்களையே இழந்திருக்கின்றார்கள் என்ற உண்மையை பிரதிபலிக்கும் கண்ணாடிதான் படைப்பு. இந்த இடத்தில்தான் கவிஞர்கள் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். கவிஞர் சு.விக்கும் அப்படியொரு முக்கியத்துவம் உண்டு.

கவிஞர் சு.வியை நினைவு கொள்வதற்கான ஆயத்தங்களில் நன்பர்கள் சிலர் ஈடுபட்டிருந்த வேளை, முன்னர் படித்த அவரது சில கவிதைகளை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

இப்போதெல்லாம்

எமது நகரத்து வீதிகள்

காவற் கருவிப் பேய்களுக்கென்றே

எழுதப் பட்டதாய் போனதே போலும்.

‘எவரையும் சுடலாம் விசாரனையின்றியே

எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்’ என்று

இயற்றப்பட்ட புதிய விதிகளால்

குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.

இன்றைய இரவை அவனிடம் இழந்தோம்

இனிவரும் பகலும் எமதென்பதில்லை,

எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின்

எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.

எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்

இன்புறு நாட்கள் எங்கோ தொலைந்தன.

இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?

வீடு நிறைந்த பீதி விடுத்தே

கோடரி ஏந்தியே யாவரும் வருக

விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.

(‘எங்கள் வீதியை எமக்கென மீட்போம்’ - மரணத்துள் வாழ்வோம், ப.ம் - 84)

இந்த கவிதை 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டது. இன்று காலம் பல வருடங்களை தனக்குள் சேமித்துக் கொண்ட பின்னரும், நபர்களிலும் சுலோகங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதே தவிர தமிழர்கள் எதிர்கொள்ளும் துயர் அப்படியேதான் இருக்கிறது. நிலைமை அப்படியே இருப்பதால் 85களில் எழுதப்பட்ட இந்த வரிகள் இன்றும் உயிர்பாகத்தான் இருக்கின்றன.

ஒரு கவிஞனின் முக்கியத்துவம் தனது காலத்தை பிரதிபலிப்பதில்தான் முழுமை பெறுகிறது. படைப்பாளிகள் காலத்தை வென்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் சிலர் சொல்வதுண்டு. உண்மையில் காலத்தை வெல்லுதல் என்ற கூற்று ஒரு அழகியல் நிலைப்பாடே தவிர அரசியல் நிலைப்பாடல்ல. படைப்பாளிகள் காலத்தின் சாட்சியாக இருக்க முடியுமே தவிர காலத்தை வென்றவர்களாக இருக்க முடியுமென நான் கருதவில்லை. ஆனால் ஒரு படைப்பாளி அவரது காலத்திற்கு அப்பாலும் பேசப்படுகின்றார் என்றால், குறிப்பிட்ட படைப்பாளியின் காலவாழ்வு பிறிதொரு வகையில் தொடர்கின்றது என்பதுதான் அதன் அர்த்தம். ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் கவிஞர்கள் தொடர்ந்தும் பேசப்படுவதன் பின்புலமும் இதுதான்.

இதில் ஒரு கவிஞரின் படைப்பாளியின் பேசுபொருள்தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசுபொருளுக்கு ஏற்பவே அவர்களின் முக்கியத்துவத்திலும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக நமது சூழலில் முதன்மையான இடதுசாரிக் கவிஞர்களாக இனங்கானப்படும் சுபத்திரன், சாருமதி போன்றவர்களை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய சூழலில் அவர்கள் பேசப்பட்டது போன்று, முதன்மை பெற்றது போன்று இன்றும் அவர்கள்; முக்கியத்துவம் பெற முடியுமா? ஒரு புரட்சிகர இலங்கை என்ற கனவில் நிலைகொண்டு, சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைவரும் ஒன்றிணைந்த வர்க்கப் புரட்சியொன்றை அவாவி நின்ற அந்த கவிஞர்களின் குரல் அன்றைய சூழலில் தேவையானதாக இருந்தது. இன்று இலங்கை என்ற கருத்தே அரசியல் அர்த்தத்தில் இல்லாமல் போய்விட்ட சூழலில் அவர்களது குரல்களின் தேவைப்பாடு என்ன? என்ற கேள்வியில் இருந்துதான் அவர்கள் நோக்கப்படுவார்கள். ஆனால் இப்படியொரு காலத்தையும் நாம் தாண்டி வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்வதில் அவர்கள் ஒரு சாட்சியாக இருக்கின்றனர்.

இப்படித்தான் நமது காலத்தின் ஒவ்வொரு கவிஞர்களும் முதன்மை பெறுகின்றனர் அல்லது கனதி இழந்து போகின்றனர். இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் பாரதிதாசன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிக உச்சத்தில் இருந்த ஒருவர் பாரதிதாசன். தமிழர் எழுச்சியின் குறியீடாக இருந்தவர். ஆனால் திராவிட எழுச்சி அரசியல் படிப்படியாக சிதைவடையத் தொடங்கியதும் அந்த எழுச்சிக்கான உந்துசக்தித் தேவைகளும் குறைவடையத் தொடங்கியது. பாரதிதாசனின் தேவையும் படிப்படியாக குறைந்தது. ஒரு குறிப்பிட்ட அரசியல் போக்கு பாராளுமன்ற அரசியலுக்குள் சுருங்கி பணம் சம்பாதிப்பதற்கான போட்டி அரசியலாக சுருங்கிப்போன பின்னர் அங்கு எழுச்சி, புரட்சி என்ற சொற்களுக்கு என்ன பெறுமதி இருக்க முடியும்? பாராதிதாசனின் சமூக முக்கியத்துவம் குறைந்து போனதை இந்த பின்புலத்தில்தான் நாம் பார்க்க வேண்டும்.

இன்று பாரதிதாசன் பேரில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அவர் பற்றி பெரிய ஆய்வு கோவைகளும், எத்தனையோ பல்கலைக்கழகம் சார் ஆய்வுகளும் உண்டு. ஆனால் இது மட்டும்தான் பாரதிதாசனின் முக்கியத்துவம் என்றால் அவர் இப்போதும் உச்சத்தில்தான் இருக்கிறார். நம்மத்தியில் இப்படியெல்லாம் சிந்திக்கக் கூடிய மொட்டை மூளையாளர்களும் இருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பற்றி பேசியது சிலர் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கே தவிர மக்களின் நன்மைக்காகவல்ல. இன்று புரட்சியின் குறியீடுகளாக இருக்கும் லெனின், மாவோ, சேகுவேரா, ஹொசிமின், காஸ்ரோ இப்படிப் பலரும் கொஞ்சப் பேரின் பி.எச்.டி பட்டங்களுக்காகத்தான் சிந்தித்தார்களே தவிர புரட்சி, விடுதலை அப்படியெல்லாம் ஒரு மசிரும் கிடையாது. இன்று ஜரோப்பிய பல்கலைக்கழங்களில் மார்க்சியம் அத்தகையதொரு நிலையில்தான் இருக்கிறது. அங்கு மார்க்சியம் என்பது வெறும் பாடபோதனை மட்டுமே.

3

சு.வியைப் பற்றி நினைக்க வந்து, வேறு எங்கோ போய்விட்டதாக நினைக்க வேண்டாம். சு.வியின் முக்கியத்துவம் எவ்வாறு அமையும் என்பதைச் சுட்டத்தான் இப்படியான சில விடயங்களை குறிப்பிட்டேன். சு.வியுடையது மட்டுமல்ல பொதுவாக எல்லோருடைய முக்கியத்துவமும் இப்படித்தான் அமையும். சு.வி, சூழலால் நிலைபெறப்போகும் தனது கவிதைகளில் வாழ்வார். சு.வியின் கருத்தியல் சற்று சிக்கலானது. சு.வி. தன்னையொரு ஆன்மீகவாதி என்றே சொல்லிக் கொள்பவர். குறிப்பாக தளைசிங்கத்தின் மெய்யுள் வகை சிந்தனையின் நீட்சியாகவே தன்னை நிறுவிக் கொள்ள விழைந்தவர். அவரது கவிதைகள் அவ்வாறானதொரு தன்மையை வலுவாக வழங்காவிட்டாலும் கூட சு.வி எப்போதும் அவ்வறானதொரு தளத்திலேயே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார்.

சு.வியுடன் இது பற்றி கதைத்துக் கொண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டார். மற்றவர்கள் முன்னிறுத்தும் ஆன்மீகத்திற்கும் தாங்கள் முன்னிறுத்தும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்கிச் சொல்வார். அவருக்கு ஒரு ஆன்மீக குருநாதரும் இருந்தார். நந்த கோபாலகரி என்னும் அந்த நபருக்குத்தான் சு.வி தனது காலத்துயர் தொகுப்பை சமர்ப்பணம் செய்திருக்கிறார். சு.வி ஒரு ஆன்மீகவாதி என்பது மிகவும் வெளித்தெரியும் ஒன்று. ஒருவர் இதுதான் எனது கருத்துநிலை என்று குறிப்பிடும்போது அங்கு உடன்பாடு அல்லது முரண்பாடு என்ற நிலையில்தான் நமது பார்வை இருக்க முடியுமே தவிர பெரும் விவாதங்களுக்கு இடமிருக்க வேண்டியதில்லை என்றே நான் நினைக்கிறேன். சு.வியின் இவ்வாறான ஆன்மீக வாதங்களில் அன்றும் சரி இன்றும் சரி எனக்கு உடன்பாடு கிடையாது.

என்னைப் பொருத்தவரையில் ஆன்மீகம் என்பது ஒரு தனிமனித விடயம் அதற்கு சமூகப் பெறுமதியை கொடுக்க விழையும் போது அங்கு செயலற்ற அந்தரத்து மனோநிலைதான் முதன்மைபெறும். ஒரு சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகும் போது அங்கு தனிமனித இருப்புக்கள் குறித்த வாதங்கள் உயிரற்றவையாகவே விளங்கும். இன்று வன்னியில் மரத்தின் கீழ் அடுத்த வேளை உணவுக்கான கேள்வியுடன், மழைபெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீகத்தின் பதில் என்ன? ரவிசங்கரின் வாழும் கலையில் போதிப்பது போன்று எல்லோரும் சேர்ந்து நடனமாடுவதா? இப்படியான கேள்விகளிலிருந்துதான் நான் ஆன்மீகத்தை அளவிடுகின்றேன்.

தனது கவிதைகள் பற்றி கவிஞர் புதுவை இரத்தினதுரை குறிப்பிடும் ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. ‘புதிய விதிகளின் பிறப்பில் என் கவிதைகளிலும் வேண்டியன நிலைத்தும், வேண்டாதன அழிந்தும்போக எஞ்சியவற்றில் வாழ்வேன் நான்.” உண்மையில் நாம் எந்தவொரு கவிஞரைப் பற்றிப் பேசுவதானாலும் இதுதான் விடயம். புதிய சூழல்களிலும் வாழும் தகுதியைப் பெறுவன நிலைக்கும், மற்றவை அழியும். ஆனால் எந்தவொரு கவிஞனும் நிலைக்க வேண்டும் என்பதற்காக எழுதுவதாக நான் கருதவில்லை. ஒவ்வொருவரும் தனது காலத்திற்கு விசுவாசமாக இருக்கின்றனர். காலம் அவர்களை அடையாளம் கான்கிறது. நமது சூழலில் பாரதியாரின் நிலைமை மட்டும் சற்று வித்தியாசமானது.

ஓவ்வொரு தலைமுறையும் எடுத்தாளும் கவிஞர் ஒருவர் இருக்கிறார் என்றால் அந்த பெருமை பாரதியாருக்கு மட்டும்தான் உண்டு. இதற்கு காரணமும் கருத்துநிலைதான், ஏனென்றால் பாரதியாருக்கு என்று ஒரு திடகாஸ்தரமான கருத்து நிலையே கிடையாது. ஆகவேதான் அவரை எல்லோராலும் எடுத்தாள முடிகிறது. அவர் விடுதலையை பாடியிருக்கிறார். பராசக்தியை பாடியிருக்கிறார், குயிலை பாடியிருக்கிறார். பெண்விடுதலையை பேசியிருக்கிறார். சாதியை எதிர்த்து பேசியிருக்கிறார். புரட்சிiயும் பாடியிருக்கிறார். இப்படி எல்லாவற்றையும் பாடியிருப்பதால் ஒவ்வொருவரும் தமது தேவைக்கு ஏற்ப அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். செயலற்று சதா பராசக்தியை துதித்துக் கொண்டிருக்கும் ஒரு சக்திதாசனுக்கும் பாரதி மகாகவிதான் ஏனென்றால் அவர் அவனுக்கு தேவையானதை பாடியிருப்பதால்.

சு.வியின் கவிதைகளின் இருப்பு அல்லது அது குறித்த உரையாடல் காலத்தின் தேவைக்கு ஏற்ப உயிர்பெறும். அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சு.வியை தமிழகத்தில் இருக்கும் சிலர் பாப்லோ நெருடா, வால்ட் விட்மின், மர்முத் தர்விஸ் இப்படியெல்லாம் அவரது மறைவின்போது குறிப்பிட்டிருந்தனர். சிலவேளைகளில் இவ்வாறான வாதங்களே சு.வியை இல்லாமலாக்கிவிடும் ஆபத்துண்டு. சு.வில்வரத்தினம் என்னும் கவிஞர் என்றுமே சு.வில்வரத்தினம்தான். அவர் இன்னொருவராக ஆக முடியாது. சு.வியின் தனித்துவங்களில்தான் அவர் நிலைபெறவும் முடியும். நமது கடந்த காலத்தை புரட்டிப் பார்க்கும் போது, அன்றைய காலத்தின் அரசியல், மக்களின் துயரங்கள், மக்களின் எழுச்சிகள் என்பவற்றை புரிந்து கொள்வதற்கான தடயங்களை தேடும் ஒருவர், சு.வில்வரத்தினம் என்னும் கவிஞரை விட்டுவிட்டு செல்ல முடியாது. இதுதான் சு.வியின் முக்கியத்துவம்.

சு.வியின் இரண்டாவது ஆண்டு நினைவில் என்னுள் எழுந்த சில அபிப்பிராங்களையே இங்கு பதிவு செய்திருக்கிறேன். சு.வியை நினைவு கூரும் இந்த வேளை நான் நினைவு கூர எண்ணியும் சூழலின்; காரணத்தால் முடியாமல்; போன, நான் மிகவும் உயர்வாக மதிக்கும் இராணுவ ஆய்வாளர் டி.பி.சிவராமையும் நினைத்துக் கொள்கிறேன். இப்படியாவது நினைத்துக் கொள்வதில் ஒரு திருப்தி. நமது காலத்தின் மிகப் பெரிய பிரச்சனை முதுகெலும்பற்ற சூழலில் முதுகெலும்பின் நிமிர்வை தேடித் திரிவதுதான். சு.வியின் நினைவு பிறிதொரு வகையில் ஆக்கபூர்வமான சில விடயங்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்சி.

- யதீந்திரா

http://www.keetru.com/literature/essays/yathindra_4.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.