Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பவர்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பவர்கள்.....

-பொன்னிலா-

அமெரிக்கப் படைகளால் வியட்நாம் மக்கள் மீது கொட்டப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.

அமெரிக்கப்படைகள் வியட்நாம் மக்கள் மீது கொட்டிய குண்டுகளை விட சிறிலங்கா அரசு ஈழ மக்கள் மீது கொட்டிய குண்டுகள் ஐந்து மடங்கு அதிகம்.

இரண்டாம் உலகப் போர்ச்சூழலை விட படுபயங்கரமான குண்டுக் கழிவுகள் தமிழர் தாயக நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன.

'அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல ரத்தம். எதிரிகளின் கைகளின் சிக்கக் கூடாது என்பதற்காக எங்கள் பெண் குழந்தைகளை கொன்றிருக்கிறோம். முதியவர்களை எரிய விடப்பட்ட நெல்வயல் மீது வீசினோம். கடைசியில் அவர்கள் ஹனாயைக் கைப்பற்றி எங்கள் கிராமங்களுக்குள் நுழைந்த போது அவர்களுக்காக எதுவும் மிச்சமிருக்கவில்லை. கருகிய பயிர்களையும் மறிக்கப்பட்ட ஓடைகளையும் பயன்படுத்த முடியாத படி அவர்கள் விக்கித்து நின்ற போது நாங்கள் ஹனாயைக் கைப்பற்றினோம். பின்னர் எங்கள் பழைய நகரத்தை மீட்டெடுத்தோம்."

ஹோசிமின் படைகளின் இளம் தாதியாக பணியாற்றிய ஒரு பெண்ணின் வாக்குமூலம்.

பால்யத்தில் என் அம்மா அடிக்கடி ஒரு சொல்லடை அல்லது பழமொழி சொல்வார். 'அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பதுதான் அந்தப் பழமொழி.

என் தாய் மூலம் அந்தப் பழமொழி எனக்கு அறிமுகமானதால் இன்று வரை என் நினைவுப் பரப்பில் பளிச்சென்ற ஒரு இடத்தை அது பிடித்திருக்கிறது.

உண்மையில் ஏழ்மையில் உழல்வோர், ஒடுக்கப்பட்டோர், இவர்கள் கைகளில் அவர்களுக்கு கிடைக்காத ஒன்று கிடைக்கும் போது கிடைத்ததை அவர்கள் அதிகமாக கொண்டாடுவார்கள் இல்லையா? அந்தக் கொண்டாட்டத்தை ஏளனம் செய்கிற அல்லது இழிவு செய்கிற தொனியை, குரலை இந்தப் பழமொழி கொண்டிருக்கிறது எனக் கூட எண்ணுவேன்.

அதனால் அவ்வளவு எளிதில் இந்தப் பழமொழியை வேறு எதற்கும் ஒப்புவமை வழக்காக நான் சொல்வதில்லை.

ஆனால், கிளிநொச்சி நகரம் படையினரின் வசம் சென்றதுதான் சென்றது. பவுசு வந்த சிலர் அர்த்த ராத்திரியில் பிடிக்கிற குடை மிகவும் அசிங்கமாகவும் அபத்தமாகவும் இருக்கிறது.

யார் இவர்கள்? என்னென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்றால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் காலம் தொட்டே இப்படி அர்த்த ராத்திரியில் குடை பிடித்தவர்கள் இருந்திருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு நான் கடைசியில் வருகிறேன்.

இப்போது இவர்கள் பிடிக்கிற குடைகளைப் பார்ப்போமா? இவைகள் ஓட்டைக் குடைகளா? அல்லது ஒரிஜினல் குடைகளா? என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கிளிநொச்சியை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் ஆளரவமற்ற அந்த நகரில் இருந்து ஒரு குண்டூசியைக் கூட எடுத்துக் கொள்ள முடியாத படி மக்களும் புலிகளும் தங்களின் நகரத்தை துடைத்து எடுத்துச் சென்று விட்டார்கள்.

போர் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில்

எங்கள் பழைய பயில்வான்கள் சொல்வதை வரிசையாகப் பார்ப்போம்... முதலில் மூத்த பயில்வானிடம் இருந்து தொடங்குவோம்.

'தற்போதுள்ள நிலையில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தாமல் (சிறிலங்கா அரசிற்கு) அரசியல் தீர்வை முன்வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்" ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணி.

'இது போரின் இறுதியாக அமையாது என்பது நிச்சயம். எனினும் புலிகளின் வீழ்ச்சிக்கு இதுவே துவக்கம். கிளிநொச்சியைப் போன்று கடுமையான இராணுவ நடவடிக்கையொன்றை முல்லைத்தீவின் மீது முன்னெடுத்தால் நாம் முல்லைத்தீவையும் கைப்பற்றுவோம்" தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட் என்று அழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்)

'ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படக் கூடாது" புளொட் இணைப்பாளர் ஜெகநாதன்.

'கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு ஜனநாயகச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஒரு ஜனநாயகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமானதொரு அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்" பிள்ளையான் கிழக்கு முதலமைச்சர்.

இவர்களெல்லாம் போக டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரின் அறிக்கைகளையும் சேர்த்துப் பார்த்தால் இந்த மொத்த அறிக்கைகளும் ஒரே குரலை ஒத்திருப்பதை நாம் உணரமுடியும்.

சரி இவர்களெல்லாம் யார்? யாருக்காக போராடுகிறார்கள். யாரின் பிரதிநிதிகளாக இன்று இருக்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி சிங்கள அரசின் குரலை தமிழ் மக்களின் வாழ்வுரிமையின் பெயராலும் அரசியல் உரிமையின் பெயராலும் முன்மொழிகிறார்கள்.

இத்தனை ஆண்டு காலத்தில் காணாமல் போயிருந்த இவர்களெல்லாம் இன்று திடீர் அறிக்கை நாயகர்களாகியிருப்பதைத்தான் நான் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறார்கள் என்று சொன்னேன்.

போர் நிறுத்தம் வேண்டாம் அரசியல் தீர்வு வேண்டும் என்கிற கருத்து ஆனந்தசங்கரியின் கருத்தாக இருந்தாலும் கூட இந்தியாவின் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதுதான்.

ஆனால் இவர் என்னமோ இந்தியா போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். ஆக ஆனந்தசங்கரியின் இந்தியக் குரல் ஒலிப்பது இந்தியா சொல்லித்தான்.

நீ கோரிக்கை வைப்பது போல் வை. நான் அரசியல் தீர்வுக்கு வழி சொல்கிறேன் என்கிற நாடகம்.

ஈழத்துக்கு இந்தியா என்ன அரசியல் தீர்வைச் சொல்கிறது.

இந்திரா தாயாரித்துக் கொடுத்த 'அனெக்சர் சி" இணைப்பின் மீதான சர்வ கட்சிக் கூட்டத்தை ஒரு நாடகமாக முன்னெடுத்த ஜெயவர்த்தனே. கடைசியில் அதை கைவிட்டது உங்களுக்கு நினைவிருக்கும்.

இன்று மொண்ணையான இதே 'அனெக்சர் சி" கையில் வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிற இந்தியா ஒரு பக்கம் அதையே கையில் வைத்துக் கொண்டு இப்போதும் சர்வகட்சிக் கூட்டம் என்று சர்வதேச சமூகத்தை ஏமாற்றுக் கொண்டிருக்கும் மகிந்த ஒரு பக்கம்.

ஆனால் ஜே,வி,பி சொன்னதுதான் யதார்த்தம். கிளிநொச்சியை கைப்பற்றிய பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டது.

ஜே.வி,பி மட்டும்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு தேவையில்லை என்று நினைக்கிறதா? என்றால் கருணா சில மாதங்களுக்கு முன்பு கிழக்கிற்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று சிங்கள ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஐக்கிய இலங்கை, இரண்டாம் தர குடிமக்கள், என்கிற சொல்லாடல்கள் எல்லாம் இந்திய உளவு நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது. ஆக கடந்த முப்பதாண்டுகளாக சுதந்திர தனி ஈழம் அல்லது தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமை என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருந்த புலிகளுக்கு நீங்கள் எதிரிகள் ஆனீர்கள்.

பாசிச புலிகள் என்றும் வன்னிப் புலிகள் என்றும் உங்களால் விமர்சிக்கப்படுகிற விடுதலைப் புலிகளுக்கும் உங்களுக்குமான முரண் எங்கு தொடங்குகிறது என்றால் புலிகள் சுதந்திர தனி ஈழத்துக்காக சமரசமில்லாமல் போராடுகிறார்கள்.

நீங்களோ இந்திய உளவுப் படைகளுக்கு அடியாள் வேலை பார்க்கிறீர்கள் அல்லது யாரை எதிர்த்து தமிழ் மக்கள் கிளர்ந்தார்களோ அவர்களிடமே சரணடைந்து சிங்களவனின் செருப்பாக தேய்கிறீர்கள்.

உங்களுக்கும் புலிகளுக்குமான முரண்பாடு, அல்லது சகோதர யுத்தம் துவங்கியது திம்பு பேச்சுக்களுக்குப் பிறகுதான்.

காரணம் நீங்கள் இந்திய மனநிலையை பிரதிபலித்தீர்கள். புலிகளோ தமிழ் மக்களின் குரலை பிரதிபலித்தார்கள்.

போராளிகள் மீது திணிக்கப்பட்ட இந்தியத் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். புலிகள் நிராகரித்தார்கள்.

ஆகவே நீங்களும் எதிரிகள் வரிசையில் இணைந்ததால் இயல்பாகவே சகோதரப் போர் வெடித்தது.

உண்மையில் நேற்றும் இன்றும் நாளையும் இலங்கை இனப்பிரச்சினை தீர்ந்து தமிழ் மக்கள் நிம்மதியாக அந்தத் தீவினுள் வாழ வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக நீங்கள் சொல்வது எவ்வளவு முரணான கற்பனை.

ஒரு போதும் இலங்கை இனப்பிரச்சினை தீர இந்தியா விரும்பாது. எப்போதும் இலங்கையில் போர் பதட்டம் நிலவிக் கொண்டிருக்க வேண்டும் தென்கிழக்கில் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியாவின் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

அதனால்தான் அது தன் சொல்பேச்சைக் கேட்காத புலிகளை அழித்து விட்டு வேறு ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி தான்தோன்றித்தனமான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து இலங்கையை தன் கட்டுக்குள் வைக்க நினைக்கிறது இந்தியா.

அதன் முதல் முயற்சி அமைதிப்படை இலங்கைக்குள் இருந்த போதே முன்னெடுக்கப்பட்டு விட்டது.

ஈழத் தேசிய ராணுவம் என்ற பெயரில் இந்தியா உருவாக்கிய குழந்தைப் போராளி ஆயுதக் குழுவுக்கு ஈழத் தாய்மார்களின் பிள்ளைகளை பிடித்துக் கொடுத்தது யார்?

பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை கடத்திச் சென்று இந்திய ராணுவ முகாம்களுக்கு அனுப்பி அந்த ஈழத் தேசிய ராணுவத்துக்கும் இந்தியாவுக்குமிடையில் மாமா வேலை பார்த்தது யார்?

இப்படி அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்களைப் பற்றி கேட்கவும் எழுதவும் எவளவோ இருக்கிறது. ஆனால் புலிகள் இவர்களைப் போலல்ல. அவர்கள் போராளிகள். புரோக்கர்கள் அல்ல,

தோழர்களே,

இலங்கையில் நடைபெறும் யுத்தம் பாசிசத்தின் இறுகிய வடிவம். ஒரு இன அழிப்பின் உச்சபட்ச வடிவம். கிழக்கை மீட்டு ஒரு கோமாளிக் கூட்டத்திடம் ஆட்சியை ஒப்படைத்தது போல வடக்கையும் மீட்டு இன்னொரு கோமாளியின் கையில் ஒப்படைக்க நினைக்கிறது பேரினவாதம்.

அது எந்தக் கோமாளியின் கையில் கிடைக்கும் என்றுதான் ஆனந்தசங்கரியும், டக்ளசும், மற்றுள்ளோரும் அலைகிறார்கள்.

அதனால்தான் போர்ச் சூழலை பயன்படுத்தி கோழைத்தனமாக புலிகள் மீது பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும், வட இந்தியாவிலும் இந்தக் கோமாளிகளுக்கு பெருமளவு பணமும் பயிற்சிகளும் வழங்கப்படுகிறன.

சென்னையில் இவர்கள் ரகசிய கூட்டங்களை நடத்துகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் ஏராளமான சந்திப்புகள் நிதிகள் இவர்களுக்கு இலங்கை அரசால் வழங்கப்படுகின்றன.

யார் எம் மக்களை கொன்றொழித்தார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு என்று பேசும் இவர்கள். வைக்கிற தீர்வெல்லாம் இரண்டு வகையானவை ஒன்று சிங்கள மேலாதிக்கத்துக்கு கட்டுபட்டு அடங்கி ஒடுங்கி நடப்பது. மக்களை மந்தைகளாக மாற்றுவது.

இன்னொன்று இந்திய அடாவடிகளின் பிராந்திய நலனுக்காய் சொந்த மக்களின் நலனை அடகு வைப்பது.

ஆனால், புலிகள்தான் சிறிலங்காவை எதிரிகளின் வரிசையில் எப்போதும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவை நட்பு நாடாக பார்க்கும் அதேவேளையும் ஈழ மக்களின் விடுதலை என வரும் போது இந்தியாவின் மேலாதிக்க கனவுகளுக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார்கள்.

அதனாலேயே யாருடைய ஆதரவு இல்லாமலும் தனித்து நின்று உறுதியோடு ஈழ மக்களுக்காக போரிடுகிறார்கள்.

உலகின் மிக நீண்ட வரலாறாக பதிவாகியுள்ள ஈழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் மட்டுமே பங்குண்டு.

இன்று கிளிநொச்சி எதிரிகளின் வசம் சிக்கியிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வியட்நாமின் கிராமங்களுக்குள் ஊடுருவிய போது வியட்நாம் மக்கள் தங்கள் நெல்வயல்களை எதிரிகளுக்கு உணவாகக் கூடாது என்பதற்காக எப்படி தீயிட்டு எரித்தார்களோ, அப்படி தங்களின் நிலம் எதிரிகளுக்கு பயன்படாத வண்ணம் தங்களின் தாயகத்தை எதிரிக்கு சவக்குழியாக தோண்டி வைத்து விட்டு வந்திருக்கிறார்கள்.

பிரிட்டன் படைகள் அயர்லாந்துக்குள் நுழைந்த போது தங்களின் ஆப்பிள் தோட்டங்களையும் ஆரஞ்சுப்பழங்களையும் அழித்தார்கள் அயர்லாந்து மக்கள்.

இன்று கிளிநொச்சொயின் தரித்து நிற்கும் படைகளுக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்றுதான் கிளிநொச்சி தண்ணீர் தொட்டியை உடைத்தெறிந்தார்கள் போராளிகளும் மக்களும்.

இவர்கள் கட்டவிழ்த்து விட்ட எத்தனையோ பொய்கள் அந்த தண்ணீர் தொட்டியைப் போல வீதியோரம் சிதறிக்கிடக்கிறது.

மக்களோ புலிகளோடு புலிகளாக முல்லைத்தீவிற்கு சென்று விட்டார்கள். இப்போது புலிகள் அவர்களை கடத்திச் சென்று விட்டதாக இவர்கள் சொல்கிறார்கள்.

பத்து வருடமாகவா? மக்களை ஆயுதமுனையில் மிரட்டி வைத்திருக்க முடியும் என்கிற எளிய கேள்வியைக் கூட இவர்களிடம் கேட்க மனம் ஒப்பவில்லை.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், இடையிலான அடையாளங்கள் மறுக்கப்பட்டு எல்லோருமே ஒரே குடையின் கீழ் பயங்கரவாதிகளாக பார்க்கப்படும் சூழலில் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அதுவே வாய்ப்பாக போனது.

தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க நடக்கும் போரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற அடைமொழியோடே அது சொல்லி வருகிறது.

இந்த அர்த்த ராத்திரி குடைபிடிப்பான்களும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

அதனால்தான் கிளிநொச்சியோடு போர் முடிந்து போன தோற்றத்தை உருவாக்குகிறார்கள், பிரபாகரனை சரணடையச் சொல்கிறார்கள். மரபு வழி இராணுவமாக ஆட்சி செய்த புலிகளின் கெரில்லா படையணிகளை மறந்து விட்டுப் பேசுகிறார்கள்.

ஆயுதப்போரில் இருந்து மாற்றத்தை வேண்டி நம் சமகாலத்தில் நடந்த மூன்று வேறு நிலப்பகுதிகளையும் வௌ;வேறு சித்தாந்தங்களையும் நோக்கும் போது. ஈழ மக்களுக்கு அந்த வாய்ப்புக்களோ இல்லாமல் போனதை நாம் உணர முடியும்.

மக்கள் அற்ற நிலங்களை எடுத்து நாடற்ற யூதர்களுக்கு கொடுப்பதாகச் சொல்லி பாலஸ்தீனத்தை ஆக்ரமித்த இஸ்ரேலியர்கள் இன்று காஸா மீது கொடுந்தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஒரு பக்கம் ஆயுதப் பாதையை கைவிட்டு தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்து பாலஸ்தீனத்தின் ஆட்சியமைத்திருக்கும் ஹமாஸ் மீது தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

அமெரிக்க ஆதரவுடன் இன்னொரு பக்கம் போராளி அமைப்பும் அரபு நாடுகளுள் குறிப்பாக மத்திய கிழக்கின் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புமான ஹிஸ்புல்லா மீதும் அமெரிக்காவின் பிடி இறுகி வருகிறது.

அதே சமயம் நேபாளத்தில் தேர்தல் பாதைக்கு வந்த மாவோயிஸ்டுகள் நினைத்தபடி ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

இந்தியா சட்ட விரோதமான ஆயுதக் குழுக்களை (இந்த குடைபிடிப்பான்களை எல்லாம் உருவாக்கியதோ) நேபாளத்தில் உருவாக்கி வருகிறது.

புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஈழப் போராட்டம் மட்டும்தான் அதன் சரியான திசையில் பயணிக்கிறது. புலிகள் இலங்கையை மட்டுமல்ல ஆதிக்கச் சக்திகள் எல்லோரையும் எதிர்த்தே போரிட்டு வருகிறார்கள்.

கடைசிப் புலி வீரன் இருக்கும் வரை விடுதலைப் போர் தொடரும் என்று சொல்கிற புலிகள் எங்கே.

பொலிஸ் அதிகாரம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிற இந்த துரோகக் கும்பல் எங்கே.

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாக வருகிற இவர்களின் பூர்வ வேர்கள் நம் மன்னராட்சிக் காலத்தில் இருந்தே தொடங்குகின்றன்.

எதிர்கால வரலாற்றில் எப்போதும் சரித்திர நாயர்களுக்கும் சரித்திர துரோகிகளுக்கும் இரண்டு இடங்கள் உண்டு.

ஒன்று குப்பைத் தொட்டி.. இன்னொன்று மக்கள் மனதில் வாழ்தல்..

பண்டாரவன்னியனுக்கும், எல்லாளனுக்கும், சங்கிலியனுக்கும், கட்டப்பொம்மனுக்கும், பகத்சிங்கிற்கும் இன்று வரலாற்றில் கிடைத்திருக்கும் இடம் காக்கை வன்னியன்களுக்கும் எட்டப்பன்களுக்கும் கிடைப்பதில்லை அல்லவா?

தாங்கள் வாழும் காலத்தில் எந்த இடத்திற்கு தாம் வந்து சேர விரும்பினார்களோ அதே இடத்துக்கு இவர்கள் இப்போது வந்திருக்கிறார்கள்.

தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.