Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாற்புறத்துப் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்" அவள் மகுடம் ஏந்த இன்று வன்னியில் நடப்பது உலகத் தமிழர்களின் உரிமைப் போர்!

Featured Replies

தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலைப் புலிகளை தங்கள் காவல் தெய்வங்களாகவே பத்து கோடித் தமிழர்களும் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.

நெருக்கடிகளுக்குப் பயந்து பேசாதவர்கள் உண்டு. காவல்துறை வந்து தொந்தரவு கொடுப்பான் என்று அமைதி காத்தவர்கள் உண்டு. கட்சி சார்ந்திருப்போர் தலைமைக்கு அஞ்சி அடங்கிப் போனவர்கள் உண்டு. மூடிக்கிடந்த இச் சாம்பல் அடக்குமுறைகளுக்குள் செந்நெருப்பு இருக்கிறது என்பது இப்போது திண்ணமாகிறது. வெற்றி கொடுக்கிற உற்சாகத்தைவிட தோல்வி கொடுக்கிற பாடமும், பட்டறிவும் தமிழின விடியலுக்கு மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்திருக்கிறது. அந்த விதத்தில் கிளிநொச்சியின் இழப்பு மாபெரும் வெற்றியின் ஒரு படிக்கட்டு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தமிழினத்தின் எதிரிகள் சிங்களன் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது. சிங்களனோடு கைகோர்த்து நிற்கும் அனைவரையும் நாம் இன்று அடையாளம் காண வேண்டும். தன் எதிரி யார்? நண்பன் யார்? என்று அடையாளம் காண இயலா நிலையிலேயே கடந்த கால வரலாற்றில் தமிழன் தடுமாறியிருக்கிறான். இந்தத் தற்காலிகப் பின்னடைவுக்கும் நெருக்கடிக்கும்கூட அத் தடுமாற்றமும் தெளிவின்மையுமே கரணியங்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியனை நம்பியக் கொடுமை.

தமிழ்நாட்டுத் தமிழனையே எச்சில் இலை போல நடத்துகிற தில்லி வல்லாதிக்க அரசு ஈழம் அமைய என்றாவது ஒரு நாள் அள்ளி அள்ளிக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் சில அரசியல் தலைவர்கள் முற்காலத்தில் நினைத்தது உண்டு. இன்னும்கூட சிலர் அதை நம்பிக்கொண்டு இருக்கலாம். மும்பாய் நகரத்தில் 200 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்காக வட எல்லையில் போருக்கு அணி வகுத்து நிற்கும் இந்தியா, 600 தமிழக மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிற சிங்கள அரசுக்கு படை, ஒட்டு, உதவி என்று அள்ளி அள்ளி வழங்குவதிலிருந்தே அதன் உள்ளக்கிடக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறதே. கைப்புண்ணைப் பார்க்க தொலை நோக்குக் கருவியா வேண்டும்?

திராவிடக் குழப்பம்

கருணாநிதியை நம்பிக் கெட்ட தமிழர்கள் ஏராளம். செயலலிதாவின் எதிர் நிலைப்பாடு தெரிந்ததே. தமிழ்நாட்டிலிருக்கிற இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையும் கடுமையான தமிழரெதிப்பு நிலைப்பாடு கொண்ட கட்சிகள் என்பதைத் தமிழர்கள் நாம் புரியவேண்டும். உதட்டளவில் தமிழ் பேசும் கருணாநிதி அவர்கள் உள்ளத்தால் வடித்தெடுக்கப்பட்ட பச்சைத் திராவிடர், (தெலுங்கர்) ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் அண்மைக் காலத்தில் தமிழக மக்கள் நடுவில் கனன்று எழுந்த நிலையில் கருணாநிதி அடித்த குட்டிக் கர்ணங்கள் ஒன்றிரண்டு அல்ல. தன்னையும் மீறி எழுந்த அந்த அலையால் அவர் அல்லாடிப்போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதை எப்படி கரைத்தொழிக்க வேண்டும் என்றே அவர் களமாடிக் கொண்டிருக்கிறார். டிசம்பர் 26ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்தும் வேளையில் 25 அன்று அடக்குமுறை அறிக்கை விடுத்து எச்சரிக்கிறார். ஆனால், மறுநாள் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈழத் தமிழருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பதாக 16வது அல்லது 17வது தடவையாக அறிக்கை நாடகம் நடத்துகிறார். கோலும் முறியாமல் பாம்பும் சாகாமல் பார்த்துக் கொள்ளும் பகுத்தறிவு பக்குவம் அவருக்கு! செயலலிதாவிற்கு ஒரு கோர முகம் என்றால் கருணாநிதிக்கு இரண்டு அழகு முகங்கள்! பிந்தியது அதிக ஆபத்து நிறைந்தது. எதிரியை எதிர்கொள்வதைவிட இரண்டகத்தின் உருவை எதிர்கொள்வது எவ்வளவு இடர் நிறைந்தது என்பது தமிழருக்கு இப்போது விளங்கக்கூடியதே! தமிழர் தம்மைத் திராவிடராக எண்ணிக் கொண்டு, தம் அடையாளங்களை இழந்து, இன்று ஆறரைக் கோடித் தமிழர்கள் நெருப்பாற்றில் தவிக்கும் ஈழத் தமிழருக்கு ஏதும் உருப்படியாகச் செய்ய இயலா நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இது எதனாலென்றால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் விட்ட மிகப் பெரிய ஒரு பிழையினால்தான்! தமிழ்நாட்டில் ஆட்சியை திராவிடருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கொடுமைதான் அம் மாபெரும் பிழை! ஈழத் தமிழர்களையும் அப்பிழையின் வழியாகவே வழிகாட்டி நம்ப வைத்திருக்கிறோம்.

உலக நாடுகளின் கபட நாடகங்கள்.

பாக்கிசுத்தானைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிற இந்தியா அவனுடைய படைத் தளபதியோடு அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளின் பகராளிகள் கூட்டாக வன்னிக்குள் புகுந்து சிங்களனுக்கு படைவழி உந்துதல் கொடுத்தது. கனடா போன்ற நாடுகளும் கமுக்கமான உதவிகளை அள்ளி அள்ளி சிங்களனுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரின் நோக்கமும் தாய் மண்ணைக் காக்கப் போராடும் புலிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதுதான். வல்லாதிக்க வெறி கொண்ட நாடுகளெல்லாம் ஓரணியில் திரண்டு நின்று சிங்களனுக்கு முட்டுக் கொடுக்கின்றன. வேதனையான வேடிக்கை இது.

இப்படி உலகே திரண்டு நின்று கொல்லத் துடிக்கும் வேளையில், இந்தியா ஆறரைக் கோடித் தமிழர்களின் வேண்டுகோளை குப்பையில் வீசி எறிந்துவிட்டு ஓர் இன அழிப்புப் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் வேளையில், தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தெலுங்கர்களும் கன்னடர்களுமாய் இருந்து தொலைத்து தமிழ்நாட்டு எழுச்சியை கரைத்துக் கசக்கி எறியும் வேளையில் தாய் மண்ணின் மானம் காக்க ஒரு தலைவன் வீரம் செறிந்த ஒரு படையணியோடு நின்று தாக்குப் பிடித்து போராடிக் கொண்டிருக்கிறான் என்பது எண்ணிப் பார்க்கவியலா ஓர் வியத்தகு நிகழ்வுதான். அதை சொற்களால் குறுக்கிட, விளக்கிட இயலாது.

எத்துனைப் பெரிய நெருக்கடிக்குள் நம் இளம் பெண்களும் இளையோரும் நின்று போராடுகிறார்கள்! உலகில் வாழும் 10 கோடித் தமிழர்களும் இதை இந்நேரத்தில் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "நாற்புறத்துப் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்" என்ற பாவேந்தரின் பாடல் வரிகள் நினைவை நெருடுகின்றன. நமக்குள் இருக்கும் அற்ப கொள்கை வேறுபாடுகள், சின்னச் சிக்கல்கள், உதறித் தள்ள வேண்டிய உரசல்கள் அனைத்தையும் கடந்து நம் இன விடுதலைக்காகப் போராடும் அந்த ஈக மறவர்களை எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.

உலகே எதிர்த்து நின்றாலும் பத்து கோடித் தமிழர்களும் ஓரணியில் இன்று நாம் திரண்டுவிட்டால் இந்த எதிர்ப்புகளையெல்லாம் நாளையே ஊதித் தள்ளலாம். அத்தகைய தகுதியும் திறமையும் உளஉறுதியும் தமிழருக்கு உண்டு. நடப்பதை வேடிக்கை பார்க்கும் வழிப்போக்கர்களாக இல்லாமல் இந்த வேதனைக் களத்தில் என் வியர்வைத் துளிக்கும் பொருள் உண்டு, பங்கு உண்டு என்று நம்பத் தொடங்கிவிட்டால் விடியல் வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் இருக்கிற இடத்திலிருந்து எத்தனையோ கடமைகளை நீங்கள் செய்யலாம். தமிழரின் எதிரிகள் எதிரிகளின் துணைவர்கள் இலங்கையில் மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், உலகெங்கும் கால் பரப்பி நிற்கிறார்கள்.

எனவே,

ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க நடத்தப்படும் நிகழ்வுகள், போராட்டங்கள், அடையாள வடிவங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணா நோன்புகள் ஆகியனவற்றில் கலந்து கொண்டு அறப்பணியாற்றுங்கள்.

ஈழத் தமிழருக்கு எதிராக கொடுமையான நிலைப்பாடு எடுத்துச் செயலாற்றும் காங்கிரசுக் கட்சிக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும் தேர்தலில் ஒட்டு மொத்தத் தமிழர்களும் இணைந்து பாடம் கற்பிக்கச் சூளுரைப்போம்! மக்களின் இன மான உணர்வை மதியாத கட்சிகளைத் தமிழர்கள் முற்றாக மூழ்கடிக்க வேண்டும்.

தமிழகம் முள் மேல் விழுந்த துணி போல் சிக்கிவிட்டது. தமிழ்நாட்டைத் தமிழரல்லா வந்தேறித் தலைவர்களிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இன்று தமிழர்கள் தவியாய்த் தவிக்கும் நிலை மாற வேண்டும். பக்குவமாய் இதை மீட்டு எடுத்து தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும் நிலை வரவேண்டும்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், வலது கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க. மற்றும் எண்ணற்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்தக் கால கட்டத்திலாவது ஓரணியில் திரண்டு மக்கள் நடுவில் விழிப்பு ஏற்படுத்தி தேர்தலைத் துணிவோடு சந்திக்க வேண்டும். கருணாநிதியிடமும் செயலலிதாவிடமும் சிக்கித் தவிக்கிற தமிழ்த் தேசியத் தலைவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்களோ என்கிற மனநிலை மக்கள் நடுவில் பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக மருத்துவர் இராமதாசு ஒரு குட்டிக் கருணாநிதியாகி விட்டாரோ என்று மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டார்கள். மக்களை மடையர்களாக நினைத்து அரசியல் செய்யும் காலம் மலையேறிவிட்டது. மக்கள் உன்னிப்பாக பார்க்கிற காலம் இது. ஆகவே, தமிழர் தலைவர்களும் தமிழர் ஆதரவுத் தலைவர்களும் ஓரணியில் துணிச்சலுடன் இணைவதே சாலச் சிறந்தது. கருணாநிதி, செயலலிதாவை கடுமையாக எதிர்த்து அரசியல் களம் காண்போர் மாபெரும் வெற்றி அடைவர் என்பது திண்ணம். மக்கள் இந்த இரு பெரும் அரசியல் விற்பனர்களை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். சரியான மாற்று வந்தால் மதித்து உயர்த்துவார்கள் அல்லது "குடிகாரன்" போடும் வேடத்திற்கு மடைமாற்றி வேறு வழியின்றி வாக்களித்துவிடுவார்கள். தமிழகம் மற்றொரு வந்தேறித் திராவிடனிடம் சிக்கிச் சீரழியும்.

ஊடகங்களும் தமிழரல்லா வந்தேறிகளிடம் சிக்கிக் கிடக்கின்றன. தினமலர், தினமணி, தி இந்து, துக்ளக், தினகரன் உள்ளிட்ட நாளேடுகளும் பிற தொலைக்காட்சி ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நேரடி மற்றும் கமுக்க தமிழரெதிர்ப்புப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இதைத் தமிழர்கள் முறியடித்தாக வேண்டும். இன்று இணையத்தின் ஊடாக அறியவரும் உண்மைச் செய்திகளை படித்த இளைஞர்கள் எளிதாக எடுத்து பரப்புரை செய்ய இயலும். அவர்கள் அச் செய்திகளை உடனுக்குடன் பிற தமிழர்களோடு பகிர்வதும் மாற்றுக் கருத்துருவாக்கத்திற்கு இயன்ற அனைத்தையும் மேற்கொள்வது இப்போது அவசியமாகிறது. வந்தேறி ஊடகங்கள் சம்மட்டி கொண்டு அடித்தாலும் சிற்றுளியால் கல்லும் தகரும் என்பதை நாம் அறிந்து நம்பிச் செயலாற்றிட வேண்டும்.

ஆக, போர்க்களம் இன்று பரந்து விரிந்து விட்டது. இது விடுதலைப் புலிகளின் போர் என்று இனியும் குறுக்கிட முடியாது. இது ஈழத் தமிழர்களின் போர் என்று இன்னும் நினைப்பது மடமை. உண்மையில் சொன்னால், இது ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் உரிமைப் போர்!

தமிழனுக்கு மலேசியாவில் அடி, உதை! மியான்மரில் (பர்மாவில்) உதைத்து வெளியே அனுப்பினார்கள்! மலையகத் தமிழர்களில் பல்லாயிரம் பேரை நாடு கடத்தினார்கள், பம்பாய் நகரத்திலிருந்து தமிழர்களை ஓட ஓட விரட்டினார்கள்! மணிப்பூரில் விரட்டினார், கர்நாடகத்தில் கொன்று குவித்து இன்று தமிழர்களின் திறந்தவெளிச் சிறைக்கூடமாக அதை மாற்றி வைத்திருக்கிறார்கள்! கேரளாவில் தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாது, போய்வர இயலாது. 60 ஆண்டுகளாக ஈழத் தமிழனுக்கும் அதே கதிதான். ஆனால் அவன் மட்டும்தான் திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறான். உலகெங்கும் தமிழன் நசுக்கப்பட்டாலும் தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு முதல் உரு கொடுத்தவன் ஈழத் தமிழன்தான். ஆனால் இன்று காலத்தின் கட்டாயத்தினால் இந்தப் போர்முனை என்பது பரந்து விரிந்து விட்டது. ஈழத் தமிழனை ஒடுக்க ஒட்டு மொத்த உலகமும் ஓரணியில் திரள்கிறது. நாமும் திரள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

போர்க்கள விரிவு என்பது பரப்பில் மட்டுமல்ல செயற்பாடுகளிலும்தான். ஆயுதம் தாங்கியப் போராளிகள் என்பதில் மட்டுமல்ல பிற களப்பணியாற்றும் அனைவருமே போராட்டத்தில் பங்கேற்கிறோம். அப்பங்கேற்பு வன்னிக் களமுனையில் தமிழரின் ஆற்றலை பன்மடங்காக்கும்.

அது, முல்லைத் தீவில் நிற்கிற வீரரை எண்ணிப் புழங்காகிதம் அடைவது மட்டும் போதாது, அவனை எண்ணிக் கவிதை வடித்தால் கடமை முடிந்தது என்று எண்ணிவிட்டால் காரியம் ஆகாது. உன் திறமைக்கேற்ற களப்பணியாற்று. சோம்பிக் கிடந்து புலிகளின் வெற்றி எப்போது வரும் என்று காத்துக் கிடக்காதே. அது விண்ணிலிருந்து மண்ணில் வந்து விழாது. நீயும் களமாடும் ஒரு வீரர்தான்! எனவே, போராடு. உன் திறன் அறிந்து போராடு! உழை! ஒத்துழை! ஒன்றுபடு! 21ஆம் நூற்றாண்டு தமிழரதே!

இன்போதமிழ்

உலகத்தமிழர்கள் ஒவ்வொருவரனதும் பார்வைக்கு செல்ல வேண்டிய காலத்தின் தேவையான சிறந்த ஆய்வு...

வாசியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள் ஆர்பாட்டம்மின்றி, தமிழர் எதிரிகள் ஒன்று கூடி உங்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழில் பேசி, உறவாடி அவதானித்துக்கொண்டு இருக்கிறான் என்பத்தை எப்போதும் மறக்காதீர்கள்...

எனவே இத்தைதிரு நாளிலிருந்து எல்லோரும் சிறந்த ஒற்றுமையான இறுக்கமான இரகசியகங்கள் காக்கும் பலமான தமிழினமாக மாறி எம்மினத்தை காப்பாற்றி உலக அரங்கில் சிறந்த மற்ற இனங்களுக்கு நிகராக மாற்றியமைக்க உறுதி பூணூவோம்..

இது வரை யாரும் ஊரே யாவரும் கேளிர் என இருந்தோம்... அது நாம் இருக்குமிடத்தில் பலமாக இருந்த போது பொருந்தும்...அதனையே மற்ற இனங்கள் எம்மை இழிச்சவாய் இனமாக நினைத்து எம்மை எல்லாம் சிறிது சிறிதாக அழிக்க புறப்பட்டு விட்டார்கள்.. எனவே விழிப்பு நிலை அவசியம்..

இந்த ஆய்வை எழுதியவருக்கும், யாழில் தந்தவருக்கும் நன்றிகள். நீண்ட ஆய்வு என்றாலும் எல்லாமக்களும் வசித்து விழிபுணர்ச்சிபெற்று செயலாற்றவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.