Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு

Featured Replies

அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்கள் எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடித்தது போலும்.

இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As freedom fighters and belonging to an army, they had certain practices, which we may like or dislike.

சீக்கியர் இனத்தில் குரு கோவிந்த் சிங் , ”கல்சா” என்ற இயக்கத்தைத் (அந்தக் காலத்தில், அது ஒரு அரண - military - இயக்கம் தான்.) தொடங்கி, அதன் எல்லா உறுப்பினரும் 5 அடையாளங்களை எப்பொழுதும் வெளிக்காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை ஏற்படுத்தினார். நீட்ட சடைமுடி(kesh - long hair), சீப்பு (kangha - comb), பிச்சுவாள் (kirpan - dagger), இரும்புக் காப்பு (kara - steel bracelet), குறுங்காற் சட்டை (kaccha - a pair of knicker-bockers) என்ற இந்த அடையாளங்கள் இயக்கத்திற்கு ஒற்றுமையையும், உடன் பிறந்தோர் போன்ற உணர்வையும், ஒக்குமையையும் தந்ததாகவே எல்லோரும் கொண்டார்கள். இந்த அடையாளங்கள் தாங்கள் ஒரு குழு என்ற ஆழ் உணர்வையும் வளர்த்தன. பிச்சுவாள்க் கத்தியை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் தவறாக இன்றுவரை நினைக்கவில்லை. அது வீர உணர்வின் வெளிப்பாட்டாகவே கருதப் பட்டது.

அது போல வெவ்வேறு குழுக்களிடம் வெவ்வேறு அடையாளங்கள் இருந்ததாய் வரலாறு சொல்லுகிறது. இவை சரியா, தப்பா என்று விழுமிய நயப்புகளுக்குள் (value judgements) நான் போகவில்லை. இந்த அடையாளங்கள் இருந்தன என்று மட்டுமே சொல்லுகிறேன்.

காபாலிகர்கள் என்ற வீரசிவ நெறியாளர்கள் இருந்தார்கள். அப்பர் இந்த நெறியை ஒட்டியே இருந்தார் என்பது வரலாறு. [இவர்கள் சுடுகாட்டுச்சாம்பலைத்தான் நெற்றியில் பூசிக் கொள்ளுவார்கள். இவர்களுக்கு இருக்கும் சில விந்தையான பழக்கங்களை இன்று சொன்னால் கேட்பதற்கு வியப்பாய் இருக்கும்.] காளாமுகர்கள் என்று இன்னொரு வகை சிவ நெறியாளர் இருந்தார்கள். ஞான சம்பந்தர் இந்த வழிக்கு நெருக்கமானவர் என்பதும் ஆய்வுவழி அறியப்பட்டிருக்கிறது. இவர்களுக்கும் விந்தையான நடைமுறைகள், அடையாளங்கள் உண்டு. பல சிவன் கோயில்கள் மயானத்தில் எழுப்பப் பட்டிருக்கின்றன. மற்ற சிவ நெறியாளர்களும் பல்வேறு அடையாளங்களை அணிந்திருந்தார்கள். இதுபோல விண்ணவநெறியாளர்களிடத்தும் அடையாளங்கள் உண்டு. குழு அடையாளங்களைக் கொண்டு ஒருவரை “நல்லவர். கெட்டவர்” என்று சொல்லுவது எப்படி?

தென்பாண்டிநாட்டில், முக்குலத்தோரிடையே, வீட்டுக்கு ஒரு வீச்சரிவாள் இருக்கும். முன்னோர் நினைவு நாட்களில் படையலின் போது விளக்கணி செய்யப்பட்டு அது நடுநாயகமாய் இருந்து ஆட்சிசெய்யும். எங்கள் ஊர்ப்பக்கம் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரிடமும் ”கிலிக்கி” என்ற கூர்மையான குத்துக் கம்பி [இரும்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற மாழைகளில் அவரவர் செல்வநிலைக்கு ஏற்ப மணிகளால் அழகு செய்யப்பட்டு இருக்கும்] ஒன்பான் இரவு [நவராத்திரி நாள்] முடிந்து பத்தாம் நாளில் “வெற்றித் திருநாள் [விசய தசமி]” கொண்டாடி ஊரின் நடுவில் இருக்கும் வாழையைப் போய் குத்தி வருவார்கள். இன்றைக்கு வாழை, அன்றைக்கு அது ஒரு விலங்கு, குறிப்பாக எருமை. இன்னும் சொல்லலாம், பல சிவன் கோயில்கள், அம்மன் கோயில்கள், ஐயனார் கோயில்கள், மாலவன் கோயில்களில் கிடாவெட்டு நடந்திருக்கிறது. இன்றைக்கு அதை நிறுத்திப் பூசனிக்காயை உடைக்கிறோம்.]

ஆயுதம் இல்லாத வீடு பாண்டிநாட்டில், ஏன் தமிழ்நாட்டில், கிடையாது. [நான் ஆயுதத்தைப் போற்றுகிறேன் என்று எண்ணாதீர்கள். அதன் பின்புலத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.] அதற்காகத் தமிழர் எல்லோரும் தீவிரவாதியும் அல்லர்.

சையனைடு குப்பி என்பது ஓர் அடையாளம். அத்தோடு அதை விடுங்கள்.

சிறுவர் புலிகள் இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் மெய்யும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது. புலிகளே முன்னால் இந்த நடைமுறை பற்றி பல தன்னிலை விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தத் தவறுகள் அலசப் படத்தான் வேண்டும். [ஆனால் எதிராளியின் அரணமும் இதே குற்றத்தை கிட்டத்தட்ட இதே அளவிற்குப் புரிந்திருக்கிறது. இப்பொழுது புலிகளின் குற்றத்தை விரைந்து பேசும் யாரும் அதைக் கண்டு கொள்ளவே காணோம். வெற்றி பெற்றவன் செய்ததெல்லாம் சரி போலும்.]

”இனி வெடி குண்டுகளை மடியில் கட்டிக் கொண்டு” என்ற கருத்து.

நாம் பார்க்காத இரண்டாம் உலகப் போர்ப்படங்களா? வலிந்த எதிரியைத் தாக்க முனையும் மெலிந்த படை இது போன்ற அதிரடியான போர் உத்திகளை நடத்துவது முன்னும் நடந்திருக்கிறது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும். கௌரவர்களின் சுற்றிவளைப்பை உடைக்க அபிமன்யுவை அனுப்பியது என்ன செயல் என்று எண்ணுகிறீர்கள்? கரும்புலி வேலை தானே? ”தம்பி, நீ உள்ளே போ, சுற்றிவளைப்பை உடை, நாங்கள் பின்னால் வருகிறோம்” என்று பாண்டவப் பெரியோர்கள் சொல்ல, ஏன் அந்தக் கண்ண பெருமானே சொல்ல, இவன் கரும்புலி வேலை நடத்தவில்லையா? அபிமன்யு செய்தால் அது அறப்போர். யாரோ ஒரு யாழினி செய்தால், அது தீய போரா?

கரும்புலி வேலைகளில் பொதுமக்கள் குறைந்த அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றனரா என்று பாருங்கள். இல்லையென்றால் புலிகள் மேல் குற்றம் சொல்லுங்கள். மடியில் வெடிகுண்டு கட்டிக் கொள்ளும் போர் உத்திகளைப் பற்றிப் பேசுவதற்கு நீங்களும் போர் நிபுணர் இல்லை, நானும் அறிந்தவன் இல்லை. திண்ணையில் உட்கார்ந்து, செய்தித்தாளைப் பக்கத்தில் வைத்துப் படித்துக் கொண்டு, எங்கோ நடந்த போரை/நிகழ்வுகளை நாம் நேரே பார்த்தது போல் அலசி அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டு, எல்லாவற்றையும் கிடுக்கிக் கொண்டு, அட்டைக் கத்திச் சண்டை போட்டு, அறப்போர்/ மறப்போர் என்று சொல்லுவது நம்மை எங்கு கொண்டு சேர்க்கும்?

இனி ஏழை, எளியவரைக் கவசச் சுவராகக் கட்டிவைத்துப் போர் புரிவது பற்றிப் பார்ப்போம்.

இங்கும் பாருங்கள் வெறுமே வெற்றுச்சொற்களை மட்டுமே வீசுகிறோம். சிங்களவர் கணக்குப் படி சனவரியில் மூவாயிரம் புலிகள் தான் வன்னியில் இருந்தார்களாம், [புலிகளின் கணக்குப்படி அது இருபதாயிரத்திற்கும் மேல்.] அன்றைக்கு அங்கு இருந்த மக்கள் தொகை 3,89,000 பக்கம். கிட்டத்தட்ட 4 இலக்கம். 3000 பேர் 4 இலக்கத்தை மிரட்டிச் சுவராக்கியிருக்க முடியுமா, அதோடு அன்றைக்கு (சனவரியில்) இருந்த களத்தின் சுற்றளவு அஞ்சு கிலோமீட்டர், பத்துக் கிலோமீட்டர் அல்ல, நூற்றுக்கணக்கில் ஆன கிலோ மீட்டர். 4 இலக்கம் மக்களை 20000 பேர் கூட மிரட்டியிருக்க முடியாது. தப்பிக்கிறவர்கள் இந்தச் சுற்றளவில் எங்கு வேண்டுமானாலும் தப்பியிருக்கலாம். ஆனாலும் தப்பவில்லை. புலிகளோடே தான் நகர்ந்தார்கள், ஏனென்றால், 20000 பேருக்கு 5 பேர் என்று வைத்தாலே, 100000 மக்கள் அவர்களின் உறவினராகவே இருப்பர். மீந்துள்ளவர் புலிகளின் நாட்டில் தமிழீழத்தில் [ஆம், அது ஒரு நாடாகவே சென்ற 7, 8 ஆண்டுகளாய் இருந்தது.] வாழ்ந்தவர்கள். அவர்கள் புலிகளை நம்பினார்கள், சிங்களவனைக் கண்டு பயந்தார்கள், எனவே புலிகளோடு பெயர்ந்தார்கள்.

இந்தக் களச்சுற்றளவு சுருங்கச் சுருங்க இது ஒரு முற்றுகை போலவே அமைந்தது. இங்கும் அரண் உண்டு. அவை முல்லைத்தீவின் பாழாய்ப் போன கடற்கரையில் ஒரு முக்கால் வட்டமாய் அமைந்த நிலத்தில் புதைத்த மிதிவெடிகளாய் இருந்தன. சுவருக்குப் பகரியாய் மிதிவெடிகள். மிதிவெடிகளுக்கும் பின்னால் புலிகள் புலிகளுக்கும் பின்னால் பொதுமக்கள். நடுவில் புலிகளின் அமைச்சகம். எந்தப் பாசறையும் இப்படித்தான் இருக்கும். [அர்த்த சாத்திரக் காலத்தில் இருந்து இப்படித்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு கோட்டையோ, பாசறையோ இருந்தது.] முட்டாள் தனமாக யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) மக்களுக்குப் பின்னால் புலிகள் இருந்தார்கள் என்று சொல்கிறார் என்றால், அவருக்குப் போரைப் பற்றி ஒன்றுந் தெரியாது என்று பொருள். That person must have been very naive.

நான் புலிகளின் அரண் ஏன் குலைந்தது என்று பேச வரவில்லை. அதைப் பற்றிப் பேசுவது நம்மைப் போர் உத்திக்குள் கொண்டு செல்லும். மக்கள் ஏன் அங்கு இருந்தார்கள் என்று மட்டுமே பார்க்கிறேன். இரண்டாம் உலகப் போரில் இலண்டன் முற்றுகைப் போரில் இலண்டன் மக்கள் ஏன் இலண்டனுக்குள் இருந்தார்கள்? இதே போல செருமன் முற்றுகையின் போது மாசுக்கோ மக்கள் ஏன் உள்ளிருந்தார்கள்?, இதற்கு மாற்றாக ஆங்கில, பிரஞ்சு, அமெரிக்க, உருசிய அரணங்களின் முற்றுகையின் போது பெர்லின் மக்கள் ஏன் உள்ளிருந்தார்கள்? அதே காரணங்களுக்காகத் தான் 1.69, 000 மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு அருகில், மிதிவெடி அரண்களுக்கு உள்ளே புலிப் போராளிகளுக்குப் பின்னே இருந்தார்கள்.

வெள்ளைக்காரன் செய்தால் அது பெரிய தற்காப்புப் போர்? புலிகள் செய்தால் மட்டும் இந்த வகைப் போர் “கோழைப்போர்” என்று ஆகிவிடுமோ?

இது போன்ற உள்ளிருந்து போரிடும் அகப்போர் நிலைகள் இன்று நேற்று இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்னிருந்து உண்டு. உழிஞைப் போர் என்பது முற்றுகைப் போர். “முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்றாகும் என்ப” என்பார் தொல்காப்பியர்.

அரணுக்கு உள்ளிருந்து எதிர்த்து நிற்பது நொச்சிப் போர். அது முற்றுகையை உடைப்பது. சிலசமயம் வெல்லும், சில சமயம் தோற்கும்.

ஒரு நூறாயிரம் போர்களாவது உழிஞை - நொச்சித் திணைவகையில் உலகில் நடந்திருக்கின்றன. நொச்சிப்போர் நடக்கிற போது, மக்களை ஒதுங்கச் சொல்லித் தான் நொச்சிப் படைத்தலைவர்கள் கேட்பார்கள். ஆனால் ”உழிஞைக்காரனிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம், நாம் தோற்றாலும், நடப்பது நடக்கட்டும்” என்று கோட்டைக்கு உள்ளேயே நொச்சிக் கோட்டை மக்கள் தங்கிவிடுவார்கள். இதுதான் உலகெங்கணும் நடந்திருக்கிறது.

ஆனால் அந்தக் காலத்தில் அறநெறி இருந்தது. [பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தர்கள் உள்ளே இருந்த மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கப் பார்த்தார்கள். முடிவில் பல மாதங்கள் முற்றுகை நீடித்து, மேற்கொண்டு உணவுப் பண்டம் இல்லாத நிலையில் வேள்பாரி வெளியே வந்தான். போர் தும்பை நிலைக்கு மாறியது. பாரி தோற்றான்.]

இன்றோ, ஊரில் உள்ள அத்தனை புறம்பு முறைகளையும் கொண்டு [கொத்துக் குண்டு, ஒளிய (phospherus) வெடிக் குண்டு, நச்சுப் புகைக் குண்டு (phosgene - இது இந்தியாவில் இருந்து போனதாகப் பலரும் சொல்லுகிறார்கள் - உண்மை ஏதென்று தெரியாது.)] இத்தனையும் வானத்தின் வழி விட்டெறிந்து நொச்சிப்போரை ஒன்றுமில்லாமற் செய்து சிங்களவன் முறியடித்து விட்டான்.

முடிவில் வெறும் பீரங்கி வண்டிகளைக் கொண்டு உழுதே 50000 பேரை மூன்றே நாளில் கொன்றிருக்கிறான். நாமோ, இதைப் பற்றியெல்லாம் பேசாமல், கொதிக்காமல், புலிகளைக் குறைகூறிக் கொண்டிருக்கிறோம்.

இதைச் செய்தது புலிகளா?

புலிகள் செய்தது தவறான போர் உத்திகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்களுடைய கருதுகோள்கள் அவர்களை ஏமாற்றிவிட்டன.

“எதிரி அறநெறியோடு போரிடுவான்,

உலகம் ஈர நெஞ்சு கொண்டு உள் நுழைந்து இந்தப் போரை நிறுத்தும்,

சென்னையில் இருக்கும் கிழவர் ஏதேனும் செய்வார்,

தில்லியில் இருக்கும் முட்டாள்களுக்குக் கொஞ்சமாவது விளங்கும்

அல்லது ஏதோ ஒரு அற்புதம் நடந்து இந்திய ஆட்சி மாறும்,

முடிவில் நல்லார்க் கந்தன் எப்படியாவது காப்பாற்றிவிடுவான்”

என்று ஏமாளித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்கள் செய்த பெருந் தவறு. இல்லையென்றால் வெறும் தொலைபேசித் தொடர்பை [அது மகிந்தவிற்குப் போய்ச் சேர்ந்திருந்தாலும்] நம்பி வெள்ளைக் கொடியேந்திச் சரணடையப் போயிருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் ஏமாளிகளாகிப் போனார்கள். இன்றைக்கு ஏமாளிகளை அரக்கர் என்றும், ஏமாற்றியவரைத் தேவர் என்றும் சொல்லுகிறோம். [அதுதானே நாவலந்தீவு என்று சொல்லப்படும் இந்தியத் துணைக்கண்ட வழக்கம்:-)]

“30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்று குறிப்பிட்டிருந்தவர், அறிவியல் வழிமுறைகளைக் கொண்டு, ”இந்தப் புள்ளிவிவரம் எங்கிருந்து கிடைத்தது? அதன் நம்பகத் தன்மை என்ன? இதன் “நதிமூலம், ரிஷிமூலம்” என்ன? - என்று ஆய்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

எங்கு பார்த்தாலும் ”புலிகள் அதைச்செய்தார்கள், இதைச் செய்தார்கள்” என்று கேட்டு என் செவி மரத்துப் போயிற்று. 30 ஆண்டு ஈழப் போரில் 25000 புலிகள் இறந்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். 20ன் கீழ் 75 என்பது 35 விழுக்காடு வருகிறது. அப்பொழுது 20 விழுக்காடு தான் புலிகள் செய்த கொலை என்று மேலே உள்ள கணக்கு சொல்கிறது.

70000, 55% என்ற இரண்டையுமே சரிபாருங்கள் என்றே கணக்குரைத்தவருக்குச் சொல்ல முடியும்..

எனக்கு இந்தப் புள்ளிவிவரம் தேவையில்லை. 2007க்கு முன் மூன்றில் ஒரு பங்கு தீவு நிலத்தில், தமிழீழத்தில், வாழ்ந்த மக்களின் அமைதி வாழ்வும், அப்பொழுது அங்கு போய்வந்த எண்ணற்ற மக்களின் நேரடி அறிக்கைகளும் எனக்கு அங்கு மக்களால் விரும்பப்பட்ட அரசே நடந்தது என்ற நிறைவைத் தருகிறது. இவ்வளவு பேரைக் கொலை செய்திருந்தால், அப்படி ஓர் அரசு 7,8 ஆண்டுகளுக்கு நடந்திருக்க முடியாது.

மீண்டும் சொல்லுகிறேன். புலிகள் தவறு செய்திருக்கிறார்கள். அவை அலசப் படவேண்டும். ஆனால் சிங்களவனின் கண்ணாடி வழியாகப் பார்த்து அல்ல. தமிழனின் பார்வையில் அவை செய்யப் படவேண்டும். அதே பொழுது, அந்த அலசலுக்கு இது நேரமல்ல.

என் பார்வையில் அவர்கள் போற்றப் படவேண்டிய போராளிகளே. என்ன செய்வது? இந்த முறை தோற்றுப் போய்விட்டார்கள். .

இடையில் நலிந்து போன நம் மக்களைத் தேற்றிக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு ஒரு ஆறுதல் வேண்டும். வேதனை போகவேண்டும். அடிமையாகக் கூடாது.

அன்புடன்,

இராம.கி.

http://valavu.blogspot.com/2009/06/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.