Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விதைக்க வந்திருக்கிறீர்களா இல்லை புதைக்க வந்திருக்கிறீர்களா ?

Featured Replies

விதைக்க வந்திருக்கிறீர்களா இல்லை புதைக்க வந்திருக்கிறீர்களா ?

புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 30.05.09.

தலைவர் வருவார் போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என்று பழ. நெடுமாறன், வை.கோ போன்றோர் கூறுகிறார்கள். இனி ஆயுதப்போராட்டம் இல்லை அரசியல் நீரோட்டத்தில் கலந்து பேச்சுக்களில் ஈடுபடுவதே ஒரே வழி என்று செல்வராசா பத்மநாதன் தரப்பினர் கூறுகிறார்கள்…..

புவனசுந்தரம் மாஸ்டர் சொன்ன கதை.

புவனசுந்தரம் மாஸ்டர் இளவாலையைச் சேர்ந்தவர். வல்வை சிதம்பராக்கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக நீண்டகாலமாக பணியாற்றியவர். வரலாற்றை வெறும் பாடமாகக் கற்காமல் அதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது என்ற கலையை எமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.

வடமராட்சி ஒப்பிரேசன் லிபரேசன் நடைபெற்றபோது, அதன் தொழில்நுட்பமும் தாக்குல் முறையும் எங்கு போகும் எங்கு சென்று முடியும் என்பதை நாமெல்லாம் கண்டறிய உதவியது அவருடைய வரலாற்றுப் பாடம்தான். உதாரணமாக சிங்கள அரசன் 1ம் இராஜசிங்கன் இலங்கையில் இருந்த போத்துக்கேயருடைய கோட்டையை 22 மாதங்கள் முற்றுகையிட்டதும், பின் அந்த முற்றுகை போத்துக்கேயரால் உடைக்கப்பட்டதும் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். அதை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் படித்தபடியால்தான் எமக்கு ஒப்பிரேசன் லிபரேசனையும், சூரியக்கதிரையும் சரியாக அடையாளம் காண முடிந்தது. இதற்கான வரலாற்றுப் பாடத்தை நடாத்தியவர் புவனசுந்தரம் மாஸ்டர்.

இப்போது நடைபெற்ற வன்னிமீதான தாக்குதல் மாவிலாற்றில் ஆரம்பித்தபோது அன்று அதிகாலையே ஐ.பி.சி வானொலியில் அதனுடைய ஆபத்துபற்றி செய்தியின் பின்னணியில் பேசியிருந்தேன். பின்னர் இதே பகுதியில் வரும் வாரமொரு கட்டுரையில் துட்டகைமுனு, 1ம் விஜயபாகு ஆகியோருடைய படை வியூகங்களும் இதுவும் ஒன்றுதான் என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சுட்டிக்காட்டியிருந்தேன். மூன்று முனைகளில் புறப்பட்ட சிங்களப்படையை ஒன்பது முனைகளில் சந்திக்கத் தவறினால் இந்தப்போரில் எல்லாளனும், சோழரும் சந்தித்த அதே அனுபவங்களை நம்மவரும் சந்திக்க நேரிடும் என்றும் எழுதியிருந்தேன்.

சரி.. நடந்தது முடிந்தது, இனி நடப்பதைப் பார்ப்போம் !

அன்றுபோல இன்றும் நம்முன்னுள்ள சூழ்நிலையை அறிந்துகொள்ள வரலாற்றுக் கல்வியில் ஏதாவது இடமிருக்கிறதா என்பதை இக்கட்டுரையில் தேட முயல்கிறேன். புவனசுந்தரம் மாஸ்டர் சொன்ன வராலற்றுக் கதைகளில் மிகவும் இக்கட்டான கதை ஒன்று இருக்கிறது. இலங்கைத் தீவின் அதிகாரம் ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரின் கைக்கு மாறிய ஒருவார காலத்து நிகழ்வுகளில் இச்சம்பவம் பொதிந்து கிடக்கிறது. ஒல்லாந்தர் தலைவிதியை மட்டுமல்ல ஈழத் தமிழரின் அவலாமான தலைவிதியையும் இந்த இரவு தீர்மானித்திருந்ததை கதை முடிவில் அறியலாம்.

ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து சிறீலங்காவை கைப்பற்றுவதற்கான தருணத்தை பல காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். மறுபறம் இலங்கையில் இருந்து ஒல்லாந்தரை விரட்டி, ஆங்கிலேயரைக் கொண்டுவர சிங்கள அரசர் எத்தனமாக இருந்தாலும், ஆங்கிலேயரால் அது முடியாமல் இருந்தது. ஒல்லாந்தருடன் பகைக்க அவர்களுக்கு ஒரு தருணம் வந்து வாய்க்காமல் நழுவியபடியே இருந்த வழுகல் நிலையும் ஒருநாள் முடிவுக்கு வந்தது.

அப்போது ஒல்லாந்தில் ஓர் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. அரசனாக இருந்த ஸ்ரற்கோல்டர் ஆட்சியிழந்து, பிரிட்டனிடம் அடைக்கலம் புகுந்து கொண்டான். அவனுடைய உயிரை கலகக்காரரிடமிருந்து காப்பாற்ற உடன்பட்ட ஆங்கிலேயர், ஒல்லாந்தரின் குடியேற்ற நாடான இலங்கையையும் தாம் பாதுகாக்க விரும்புவதாகக் கூறினார்கள். அப்போது தனது உயிருக்காக ஏங்கிய ஸ்ரற்கோல்டர் வேறு வழியின்றி ஆங்கிலேயருக்கு அந்த உரிமையை எழுதிக் கொடுத்துவிட்டான்.

ஆங்கிலேயர் சிறீலங்கா வந்து, அப்போதைய ஒல்லாந்தத் தேசாதிபதி கோபாட்டிடம் அக்கடிதத்தைக் கொடுத்தனர். இலங்கையை நிர்வகிக்கும் உங்களுடைய படைகளை பராமரிக்கும்படி உங்கள் அரசர் ஸ்ரற்கோல்டர் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்கள். அப்படிக் கூறியபோதே ஒல்லாந்துத் தேசாதிபதி அதற்கு சம்மதிக்காவிட்டால், தமது அன்பைப் பெற்ற ஸ்கோல்டரின் எதிரணி என்று அவர்மீது களங்கம் கற்பித்து, இலங்கையில் இருந்த ஒல்லாந்தப் படைகளை தோற்கடிக்கவும் ஆங்கிலேயர் தயாராக இருந்தனர்.

இந்த இக்கட்டான நிலை ஒல்லாந்து தேசாதிபதி கோபாட்டிற்கு பலத்த சிக்கலை ஏற்படுத்தியது. ஒல்லாந்தில் ஆட்சியிழந்து தப்பியோடிய ஸ்ரற்கோல்டரின் கடிதத்தை ஏற்பதா அல்லது ஆட்சியை பிடித்துள்ள கலகக்காரருக்காக ஆஙிகிலேயருடன் போர் தொடுப்பதா என்று தடுமாறினார்.

கடைசியாக தனது புத்தியை சாதுர்யமாகப் பயன்படுத்தினார். ஆங்கிலேயர் தமக்கு பாதுகாப்புதர வந்தமைக்காக அவர்களை வாயார மனமார பாராட்டுவதாக தெரிவித்தார். உங்கள் உதவி கண்டிப்பாக எங்களுக்குத் தேவை, ஆனால் இப்போதல்ல, சிறிது காலம் கழித்து நாமே உங்களுக்கு அறியத்தருகிறோம். இப்போது நமது படைகள் பலமாக இருக்கின்றன என்று பதில் கடிதம் கொடுத்தார்.

அதற்கு பதில் கொடுத்த ஆங்கிலேயர், உங்களுடைய பதில் எம்மை பரவசமடைய வைக்கிறது. இருந்தாலும் உங்கள் மன்னன் ஸ்ரற்கோல்டருக்கு உங்களைப்போலவே நாமும் விசுவாசமாக இருக்க விரும்புகிறோம் என்று கூறி, படையெடுப்பை நடாத்தி, ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினார்கள். அன்று இலங்கையை கைப்பற்றிய ஆங்கிலேயர் சுதந்தரத்தின்போது அங்கிருந்த தமிழ் மக்களை சிங்களவருக்கு விற்றுப்போனதால் வந்த அவலத்தின் காயங்களையே இன்று நாம் பட்டிருக்கிறோம். ஆகவேதான் ஒல்லாந்தில் ஸ்ரற்கோல்டர் ஆட்சியிழந்தது எம்மையும் பாதித்தது என்று எழுதியிருந்தேன்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய பாத்திரம், ஒல்லாந்திற்கான தளபதி கோபாட்டின் பாத்திரமே. நாட்டில் ஆட்சியிழந்த மன்னனுடைய உத்தரவை ஏற்பதா அல்லது புதிதாக வந்த கலகக்கார ஆட்சியின் உத்தரவை ஏற்பதா ? உண்மையின்படி அந்த நாட்டுக்கு யார் உரிமையாளர் என்பதை அவரால் தீர்மானிக்க முடியாதிருந்ததே ஆங்கிலேயரிடம் அவர் இலங்கையை பறிகொடுக்கக் காரணமாகும்.

இதே ஒல்லாந்து தேசாதிபதியின் நிலைதான் இப்போது புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர் நிர்வாக அலகுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரற்கோல்டர் பதவியிழந்த நிலையை வன்னிக்குள் திருப்பிப் போட்டால் கோபாட்டின் நிலையில் நாமிருப்பதை எளிதாக உணரலாம். அங்கே நடைபெற்ற போரினால் விடுதலைப்புலிகள் கட்டமைப்பு பலத்த சேதத்தைச் சந்தித்துவிட்டது. அதனுடைய தலைவர் இருப்பதாக ஒரு சாரரும் இல்லையென்று இன்னொரு சாரரும் தெரிவிக்கிறார்கள்.

தலைவர் வருவார் போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என்று பழ. நெடுமாறன், வை.கோ போன்றோர் கூறுகிறார்கள். இனி ஆயுதப்போராட்டம் இல்லை அரசியல் நீரோட்டத்தில் கலந்து பேச்சுக்களில் ஈடுபடுவதே ஒரே வழி என்று செல்வராசா பத்மநாதன் தரப்பினர் கூறுகிறார்கள். இவை இருவேறான கருத்துக்கள் மட்டுமல்ல இருவேறான வேலைத்திட்டங்களாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இதில் எந்தவழியை இங்கிருக்கும் செயற்பாட்டாளர் பின்னபற்றப்போகிறார்கள் என்பதே நம்முன்னுள்ள முக்கிய கேள்வியாகும். சகல பணிகளையும் வன்னியில் இருந்தே பெற்று நிர்வாகம் நடாத்தியதால் இப்போது வன்னியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் அடுத்த கட்டத்திற்கு போக முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வரலாற்றில் மிகமிக முக்கியமான ஆபத்தான இடம் இப்படியான வெற்றிடமென்று புவனசுந்தரம் மாஸ்டர் ஒன்றுக்கு நூறுதடவைகள் எம்மிடம் கூறியிருக்கிறார். மலை உச்சியில் ஒற்றைக்காலில் நிற்பவன் சறுக்கினால் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று காரணம் கூறமுடியாது, எந்தப்பக்த்தால் சறுக்கினாலும் அவன் பாதாளத்திற்குள்தான் போக வேண்டி வரும். இதுதான் யதார்த்தம், அரசியல், இவை உலகில் முன்னரே நடக்காத புதுமைகள் அல்ல.

இப்படியான சந்தர்ப்பத்தில் ஆற்றலுள்ள உலக மாந்தர் வரலாற்றை எப்படி மாற்றினார்கள் என்பதை அறிவதற்கு நெப்போலியன் கில் எழுதிய நூலில் இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன. யூலியஸ்சீசரை புரூட்டஸ் நயவஞ்சகமாகக் கொலை செய்தபோது அந்த உடலுடன் மக்கள் முன்பு வருகிறான் மார்க் அன்ரனி என்ற பேச்சாளன். அவன் யூலியஸ்சீசரின் இறந்த உடலைப்பார்த்து, நாம் சீசரைப் புதைக்க வரவில்லை விதைக்கவே வந்திருக்கிறோம் என்று ஆரம்பித்து அவனை நயவஞ்சகமாகக் கொன்ற புரூட்டஸ்சை அடையாளம் காட்டுகிறான்.

இதனுடைய கருத்து, சீசரின் இறந்த உடலை வைத்துக்கொண்டு அழுது நம்பிக்கை இழப்பதைவிட, அதே உடலை வைத்தே வெற்றியின் சிகரத்தை கைப்பற்றிவிடு என்பதுதான். சீசர் இறந்தான் என்றோ, இறந்தமைக்காக அவனுக்கு அஞ்சலி செலுத்துவோமென்றோ மார்க் அன்ரனி சொல்லியிருந்தால், சீஸரின் வரலாறு மண்ணில் புதைந்து போயிருக்கும். மேலும் மார்க் அன்ரனி தனது உரையை ஆற்ற எங்கிருந்தாவது உத்தரவு வருமெனக் காத்திருக்காது தானே துணிந்து எடுத்த முடிவே இறுதி வெற்றியைக் கொடுத்தது.

இதன் பிறகு அதே புத்தகத்தில் இன்னொரு கதைவரும். ஓர் ஏழைக்குடியானவன் புதைத்து வைக்கபட்ட தங்கத்தைத் தேடி வாழ்நாளெல்லாம் கிடங்குகளை வெட்டி நொந்து நூலாகிவிட்டான். இப்போது அவனிடம் ஒரேயொரு கழுதை மட்டுமே எஞ்சியிருந்தது. கடைசியாக ஒரு நாள் அதுவும் கிடங்கில் விழுந்து காலை முறித்துவிட்டது. அந்தக் கழுதையை சுட்டுக் கொன்று, ஏதுமற்ற மனிதனாகி அழுதபடியே அதைப் புதைப்பதற்காக கிடங்கைக் கிண்டுகிறான். அங்கே அவன் தேடிய தங்கப்புதையல் கட்டிகட்டியாக மண்ணோடு கலந்து வந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் தான் புதைக்கவரவில்லை விதைக்க வந்திருக்கிறேன் என்பதைக் கண்டு கொண்டான்.

இந்த இரண்டு கதைகளும் இலட்சியத்தின் வெற்றியை புதை குழியில் இருந்தும் ஆரம்பிக்கலாம் என்று நமக்கு உணர்த்துகின்றன. மேலும் ஒரு போராட்டத்தின் முழுமையை பேணி அதன் இலக்கை அடையவே இழப்புக்களை பயன்படுத்த வேண்டுமேயல்லாது, மேலும் இழப்பதற்காக அதைப்பயன்படுத்தக் கூடாது என்பதையும் உணர்த்துகின்றன. ஒவ்வொரு தோல்விகளும் ஒவ்வொரு பாடப்புத்தகங்கள் என்பதை உணர்த்த இந்த மூன்று கதைகளும் இங்கே தரப்படுகின்றன. இன்றைய சூழலில் புலம் பெயர் தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்திக்கவும், சரியான தடத்தில் கால் பதிக்கவும் இக்கதைகள் உதவலாம்.

நீங்கள் புதைக்கப்போகிறீர்களா ? விதைக்கப்போகிறீர்களா ? புதை குழியா ? புதிய பழமரமா ? முடிவு உங்கள் கையில்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

அதுவரை நம்பிக்கைகளுடன்

கி.செ.துரை 30.05.2009

http://www.alaikal.com/

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 05.06.09

உலகப்புகழ் தன்னம்பிக்கை எழுத்தாளர் நெப்போலியன் ஹில் எழுதிய You can work your own miracles என்ற 176 பக்க நூலில் இருந்து அலைகள் வாசகருக்காக சுருக்கி எடுக்கப்பட்ட சாராம்சங்கள்.

01. ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு விரும்பத்தகாத சூழ்நிலையும், ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு உடல் வலியும் அதேயளவு நன்மை தரக்கூடிய விதையையும் கொண்டிருக்கிறது. வலியில் இருந்து விடுபடவும், வெற்றியைக் காணவும் இது உனக்கு அவசியம்.

02. உணர்ச்சியின் வசப்படாதீர்கள் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். விருப்பப்படாத சூழ்நிலையை உங்களால் தவிர்க்க முடியாது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஒருநாள் அதைவிட பரிதாப நிலையை அடைய நேரலாம்.

03. நீங்கள் வாகனத்தை ஓட்டும்போது பாதுகாப்பான வாகன ஓட்டுநரா, அல்லது உங்கள் வாழ்வையும், அடுத்தவர் வாழ்வையும் நாசமாக்கும் சிக்கலான நபரா என்பதை உங்கள் மனோபாவம்தான் தீர்மானிக்கிறது. வாழ்வில் உங்களுக்குக் கிடைத்தது நின்மதியா அல்லது ஏமாற்றமா என்பதையும் உங்கள் மனோபாவமே தீர்மானிக்கிறது.

04. உங்கள் பிறப்பையும், இறப்பையும் உங்களால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். இந்தச் சிறப்புரிமை உங்கள் வாழ்வை சுவர்க்கமாக்க இறைவன் தந்த மிகப்பெரிய சக்தியாகும். மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை உலகில் வாழும்போது என்ன மனோபாவத்துடன் வாழ்ந்தீர்கள் என்பதே தீர்மானிப்பதால், உங்கள் மனதை கட்டுப்படுத்த வேண்டியது உங்கள் கடமையே.

05. எண்ணங்களுக்கு ஈடான பலனை வெளிப்படுத்த மனம் எப்போதும் தவறுவதில்லை. ஏழ்மையை சிந்தியுங்கள், ஏழ்மையில் வாழ்வீர்கள், செல்வத்தை சிந்தியுங்கள் செல்வத்தில் வாழ்வீர்கள். எண்ணங்களின் தன்மைக்கு ஈடான விளைவுகள் வாழ்வில் தொடரும்.

06. விரக்தி மனோபாவம் என்பது ஒரு விசை. இந்தச்சக்தியை ஆரோக்கிய விசையாக மாற்றி மதுப்பழக்கம், புகைத்தல் போன்ற தீய பழக்கங்களில் இருந்து மக்களைத் திருத்த முடியும். எல்லாவித பயங்களையும் அகற்றி, புதிய குறிக்கோள்களை விரக்தியின் விசையை அடிதலையாக மாற்றிப் போடுவதனாலேயே எட்டித்தொட முடியும். எதிரான எண்ணம், நேரான எண்ணம் இரண்டுமே விசைகள்தான்.

07. ஒரு வழியாக வெற்றியை அடையவும், மறுவழியாக தோல்வியை அடையவும் மனோபாவம் இருவழியான கதவுகளை வைத்துள்ளது. பெரும்பாலானவர்கள் தவறான கதவைத்திறந்து துயரடைகிறார்கள்.

08. விரக்தியடையும் மனதிற்கு சுயமாக கட்டளையிட்டு, நேர்வழியில் செலுத்துங்கள். தோமஸ் அல்வா எடிசன் பத்தாயிரம் தடவைகள் தோல்வியடைந்த பின்னரே இன்றய உலகை ஒளிமயப்படுத்தியுள்ள மின்சாரத்தைக் கண்டு பிடித்தார்.

09. நேர்மையான வழியில் நேர்மறையாக சிந்தித்த காரணத்தால் மகாத்மா காந்தி என்ற தனி மனிதனால் இங்கிலாந்து சாம்ராஜ்யத்தையே வெல்ல முடிந்தது. ஆனால் மகாத்மாவை விட பெரு வலிகொண்ட படைகளை வைத்திருந்த ஹிட்லரால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது. காந்தியிடமிருந்தளவு நேர்மை ஹிட்லரிடம் இருக்கவில்லை.

10. மாற்றத்தோடு ஒன்று சேர்ந்து நகராத வியாபாரங்களும், தொழில்களும் தோல்வியிலேயே முடிவடையும், ஏனென்றால் மாற்றங்களே நிரந்தரமானவை. மிகச்சிறந்த அமெரிக்க வழி என்பது மாற்றங்களினால் ஏற்பட்ட விளைவுதான்.

11. எந்த உயிரினமும் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அப்படியே இருப்பதில்லை. மனித உடலில் உள்ள செல்கள் எல்லாமே ஏழு மாதங்களில் முற்றாக மாற்றப்படுகின்றன. மாற்றத்தை ஏற்க முடியாத காரணத்தினால்தான் போர்கள் வெடிக்கின்றன, நோய்கள் ஏற்படுகின்றன, அழிவுகள் நடைபெறுகின்றன. அழிவைத்தடுக்க ஒரே வழி மாற்றத்தை ஏற்பதுதான்.

12. ஒட்டுமொத்த திட்டத்திற்கு நீ கட்டுப்படு ! இல்லை நீ அழிந்துபோ ! என்பதுதான் இயற்கையின் கட்டளை. உலக இயல்பை மீறி ஒட்டுமொத்த உலக இயல்பை மதிக்கத்தவறினால் உனது அழிவு நிஜமாகும்.

13. மனிதர்களின் பயங்கள், படு தோல்விகள், மனித உறவுகளின் அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள் யாவும் மனிதன் பிடிவாதமாக வைத்திருக்கும் பழக்கங்களை விட்டு விலகி நடக்க வேண்டும் என்பதற்காக, இறைவனால் வழங்கப்படும் எச்சரிக்கைகளாகும்.

14. மாறுவதை நிறுத்தி பிடிவாதமான போக்கில் ஒரு நாடோ அல்லது தனி நபரோ நடந்தால், அப்போதெல்லாம் ஓர் இரகசியமான சக்தி உள்ளே நுழைந்து அந்த அமைப்பை அழித்து, பழைய பழக்கங்களை தகர்த்து, புதிய மேலான

பழக்கங்களுக்கான அடித்தளத்தைப் போடுகிறது.

15. நீ இந்தப்புவியில் இருக்கும்போதே உன் வேலையை செய்து முடிக்க விரும்பினால் மாற்றத்தின் விதிக்கேற்ப உன்மை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறு. உன் மனம் தினசரி உன்னிடம் மகனே ! எழுந்திரு ! உனக்காகவாவது புத்திசாலித்தனமாக நடந்துகொள் ! உன் பழைய பழக்கங்களை தூக்கி எறிந்து புதிய பழக்கங்களோடு வாழ் ! என்று மன்றாடுவதை உற்றுக்கேட்டு உற்சாகமாக அதன்வழி நட !

16. உன் வாழ்க்கை இயந்திரமானது, அனுபவம் என்ற தானியத்தை அரைக்கும்போது எழும் ஓசைதான் ஆன்மாவின் ஓலமாகும். எனவே ஆன்மாவின் ஓலத்தை உற்றுக்கேட்டு எச்சரிக்கை கொள், பக்கத்து வீட்டுக்காரனுக்காக பரபரத்து அழியாதே.

17. சர்வாதிகாரிகளும், உலகை வெல்பவர்களும் தோன்றுகிறார்கள், தோன்றிய வேகத்திலேயே அழிந்தும்விடுகிறார்கள். மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவது பிரபஞ்சத் திட்டத்தின் பாகமாக இல்லை என்பதால்தான் சர்வாதிகாரிகள் சட்டென மறைகிறார்கள். ஒவ்வொருவரும் சுதந்திரமாக தனக்குப் பிடித்த வழிகளில் தன் எண்ணங்களை கட்டுப்படுத்தி, தன் தலைவிதியை நிர்ணயிப்பதுதான் பிரபஞ்ச விதியாக இருக்கிறது. மற்றவர்களை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால் உங்கள் அழிவை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

18. தாமஸ் அல்வா எடிசன் மூன்றாம் வகுப்பிலேயே பாடசாலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார், இளம் பருவத்தில் வேலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆனால் ஒவ்வொரு விரட்டியடிப்பும் எதையோ தேடுவதற்கு இறைவன் தரும் உதைப்பென நினைத்து சுயமாக முயன்றார் மின் விளக்கைக் கண்டு பிடித்தார்.

19. ஏழு அடிப்படைப் பயங்களை வெற்றிகொள்ள முடியாதவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது. அவையாவன. 01.ஏழ்மை பற்றிய பயம் 02. குறை சொல்வார்களோ என்ற பயம் 03. உடல் நலம், வலி பற்றிய பயம் 04. அன்பின் இழப்பு பற்றிய பயம் 05. சுதந்திரத்தை இழப்பது பற்றிய பயம் 06. முதுமை பற்றிய பயம் 07. சாவு பற்றிய பயம். ஆறு பயங்களையும் வென்று, கடைசியில் சாவு பற்றிய பயத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்களே உலகில் அதிகம்.

20. நமது அன்றாட பழக்கங்களால்தான் நாம் எங்கு இருக்கிறோம், என்னவாக இருக்கிறோம் என்பது முடிவு செய்யப்படுகிறது.

21. உங்கள் கண்ணுக்கு தெரியாமலே சில வழிகாட்டிகள் உங்களோடு இருந்து வழிகாட்டி வருகின்றன. யாரும் இல்லாமல் நீங்கள் இருட்டறையில் நின்றாலும் அருகில் இருட்டாக அவை நின்று உதவுகின்றன. சாவிற்கு பயமில்லை என்று வாழ்ந்தபோது மரணம் வராமல் தடுப்பது அவைதான், சுயநலம் அதிகரித்து சாவிற்கு பயப்படும்போது மரணத்தைத் தருவதும் அவைகள்தான். உனது ஒவ்வொரு செயலையும் கண்ணுக்கு தெரியாத வழிகாட்டிகள் அவதானித்து உனக்கான தீர்ப்பையும் எழுதுகின்றன.

22. உண்ணும்போது ஒருவன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு சக்தி வடிவமாகி உணவில் சென்று இரத்தத்தில் கலக்கிறது. அந்த எண்ணம் மூளைக்கு செல்ல அது நேர்மறையா அல்லது எதிர்மறையா என்பதைப் பொறுத்து அது ஆசீர்வதிக்கிறது அல்லது சபிக்கிறது.

23. குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் எதிர்மறையாக சிந்தித்தால் அவள் மனமே பாலை நஞ்சாக்கிவிடும், அந்தப்பால் குழந்தையின் வயிற்றுக்குள் போய் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை உருவாக்கும். பெரும்பாலானவர்களுக்கு உண்டாகும் வயிற்றுப்புண்கள் அவர்களின் எதிர்மறை எண்ணங்களாலேயே உருவாகின்றன.

24. இந்த உலகில் நீ செய்ய வேண்டிய கடமைகளை கண்டுகொள்ளவும், வெற்றி பெறவும் மறைபொருளாக இருக்கும் சக்திகளோ உதவுகின்றன. கடவுளே எனக்கு நன்மையானதைத் தரவும், தேவையற்றதை விலத்தவும் அருள்தா என்று நீங்கள் வேண்ட இந்த மறைபொருள் உங்களுக்கு வழிகாட்டும். அதை நீங்கள் மதித்தால் மட்டும் அது கிடைக்கும்.

25. நாற்சந்தியில் நின்று எந்தவழியால் செல்வதென தெரியாது திண்டாடும்போது இனம்புரியாத ஒரு சக்தி உனக்கு வழிகாட்டும். அது உன் உள்ளத்தில் உள்ள நன்மைகளின் அளவுக்கு ஏற்பவே சரியான வழியைக் காட்டும்.

இதே நூலில் இருந்தே அடுத்த வாரத்திற்கான பழமொழிகளும் தரப்படும்.

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 05.06.09.

http://www.alaikal.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.