Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!!

Featured Replies

கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!!

பெ.மணியரசன்

காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை!

ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏற்படும் என்றும் கூறித் தடுத்திருக்கும். ஆனால் தமிழ் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஒரு நாடில்லை. பத்துக்கோடித் தமிழர்கள் நிலக்கோளமெங்கும் பரவிக்கிடந்தாலும், நமக்கென்று ஒரு நாடில்லை, ஓர் அரசு இல்லை. அரசியல் அநாதைகளாய்க் கிடந்து அழிகிறோம்.

சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள். உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல் கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

பன்னாட்டுச் சட்டங்களும், ஐ.நா. மன்றமும் தடை செய்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி இலட்சக்கணக்கான தமிழர்களைக் கடந்த சில மாதங்களில் மட்டும் கொன்றது சிங்களப்படை. உறுப்புகளை இழந்தும் தசைகள் அறுந்தும் உயிருக்குப் போராடியோர்க்கு மருத்துவ வசதி கிடையாது. அவர்களுக்குச் சிகிச்சையளித்த தமிழின மருத்துவர்களான சண்முகராசா, சத்தியமூர்த்தி, வரதராசா ஆகியோரைச் சிறையிலடைத்தார் இராசபட்சே. அம்மக்களுக்கு ஆதரவு காட்டியதற்காக மாவட்ட ஆட்சியர் பார்த்திபனைச் சிறையிலடைத்தார்.

விடுதலைப்போரில் உலகம் வியக்க வீரமும், போர் உத்திகளும் காட்டிய தளபதிகள் சொர்ணம், தீபன், ரமேசு, பெண் தளபதிகள் விதிஷா, துர்க்கா எனப் பலர் வீரச்சாவெய்தினர். மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில் கடைசி நேரத்தில் போர் நிறுத்தப்பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப்படை அழைத்ததின் போரில், வௌ;ளைக்கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப்பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப்படை சுட்டுக்கொன்றது.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (!6, 17.05.209), உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர். கடைசி நாட்களில் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக டைம்ஸ் ஏடு குறிப்பிடுகிறது.

போரில் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆன குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து பிரபாகரன் காப்பாற்றினார். அந்த ஆயிரத்து ஐநூறு குழந்தைகள் என்ன ஆனார்கள்? எப்படி மரித்தார்கள் ? யார் அறிவார்? சாட்சியில்லாத, சாவுக் களமாயிற்றே அது! ஐ.நா.மனித உரிமைகள் அமைப்போ அல்லது செஞ்சிலுவைச் சங்கமோ எதையுமே அங்கு அனுமதிக்கவில்லை. உலக நாடுகளின் ஊடகத்துறையினரை போர்க்களப்பகுதியில் அனுமதிக்கவில்லை.

ஆரிய ரத்னாவான ஸ்ரீலங்கா ரத்னா என். ராமின் ‘இந்து’ ஏட்டின் செய்தியாளர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். தமிழ் இன எதிர்ப்பில் சிங்கள வெறியர்களையும் விஞ்சிய ஏடான ‘இந்து’ உண்மைச் செய்திகளைத் தராது. சிங்களப்படை உருவாக்கிய செய்தியை அந்நோக்கில் மேலும் மெருகேற்றித் தந்து கொண்டிருக்கிறது.

மூன்றரை லட்சம் தமிழர்களை “இடைத்தங்கல் கூடாரம்”, “நல் வாழ்வுச் சிற்றூர்’ என்ற பெயர்களில் உள்ள இட்லர் கால வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடாதபடி, மின்கம்பி வேலி எடுத்துக் காவல் புரிகின்றனர் சிங்களப் படையாட்கள். இந்த வதை முகாம்களில் படுகாயமுற்றுத் துடிக்கும் தமிழர்களின் சிறுநீரகம், கண்கள் போன்ற பல உறுப்புகளை அறுத்து எடுத்து சிங்களர்களுக்குப் பயன்படுத்த கொழும்புக்கு அனுப்புகிறார்களாம். அதுவும் மயக்கமருந்து கூட கொடுக்காமல் அறுக்கிறார்களாம். இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா?

எவ்வளவு காலத்திற்கு, இந்த மந்தை அடைப்புகள் நீடிக்கும்? இராசபட்சே சொல்கிறார் “குறைந்தது மூன்றாண்டுகளுக்காவது இவர்கள் இங்கே தங்கியிருக்க வேண்டும் ; அவர்களின் சொந்த ஊர்களில் அவர்களின் வீடுகள் போரில் நாசமடைந்துவிட்டன. புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். அந்த ஊர்களில் புலிப்படை கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய மூன்றாண்டுகள் தேவை” என்கிறார். ஆனால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் சொந்த வீடுகளில் சிங்களரைக் குடியேற்றிக் கொண்டுள்ளார் இராசபட்சே. தமிழர்களின் ஊர்களைச் சிங்கள மயமாக்கிக் கொண்டுள்ளார். தமிழர்களுக்கெனத் தாயகப்பகுதியாக, வரலாற்றுக் காலம் தொட்டு இருக்கும் மண்ணை சிங்களர் குடியேற்றங்களாக மாற்றுகிறார். தமிழர் தாயகத்தை அழிப்பதே அவர் நோக்கம்.

எதிர்காலத்தில் எஞ்சியுள்ள, தமிழர்களிடையே, உதவித்தொகைகள் மூலம், போதைப்பழக்கத்தையும், பாலியல் சிதைவுகளையும் ஏற்படுத்தி, ஒரு தேசிய இன உணர்வற்று, சிங்களரை அண்டிப்பிழைக்கும் மக்களாகத் தமிழர்களை ஆக்கவேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம்.

அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய ஆங்கிலேயர்களும் மற்ற ஐரோப்பிய இனத்தவரும், வரலாற்றுக் காலம் தொட்டு அங்கு வாழ்ந்துவந்த மண்ணின் மைந்தர்களாகிய செவ்விந்தியர்களைப் போரிட்டுத் தோற்கடித்தனர். அதன்பின் உதவித்தொகைகள் மூலம் அவர்களிடம் இடைவிடாத போதைப் பழக்கத்தையும், வரம்பற்ற பாலியல் நாட்டத்தையும் உருவாக்கினர். இன்று செவ்விந்தியர்கள், வந்தேறிகளான வௌ;ளையரை எதிர்க்கவில்லை. அவர்களை அண்டிப் பிழைக்கின்றனர். அந்த அடிமை நிலைக்குத் தமிழர்களைக் கீழே தள்ளுவது தான் சிங்கள அரசின் திட்டம்.

இவ்வளவு பெரிய இனப் பேரழிவு இந்திக்காரர்களுக்கோ, வங்காளிகளுக்கோ, மலையாளி களுக்கோ அல்லது வேறு இனத்தவர்க்கோ எங்காவது அடுத்த நாட்டில் நடந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதைப் போல் அமைதி காத்திருக்குமா? இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள தலித் தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களும் அமைதி காத்திருப்பார்களா? திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படுகின்ற ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்கள் அமைதி காத்திருக்குமா?

கடந்த ஓராண்டுக்குள் இலட்சக் கணக்கில் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதை ஒரே ஒரு தடவையாவது மன்மோகன் கண்டித்ததுண்டா? சோனியாகாந்தி கண்டித்ததுண்டா? வடநாட்டுத்தலைவர்கள் கண்டித்த துண்டா? இல்லை. ஏன்? தமிழர்கள் அவர்கள் இனமில்லை. அது மட்டுமா? ஆயுதங்களால் தமிழர்களைக் கொன்றது இலங்கை. அதற்கு ஆயுதங்களை வழங்கியது இந்தியா. ஆயுதங்களை மட்டுமா வழங்கியது? அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று சிங்களப் படையினர்க்குப் பயிற்சி கொடுத்தது இந்தியா. விடுதலைப் புலிகளுக்கு எதிராக உளவு வேலை பார்த்தது. ரேடார்கள் கொடுத்தது. செயற்கைக் கோள்கள் வழியாக, விடுதலைப் புலிகளின், பாசறைகள், நடமாட்டம் அனைத்தையும் அறிந்து இலங்கைப் படைக்கு அன்றாடம் துப்புச் சொன்னது.

உயிர்காக்கக் கடல் வழியே தப்பி ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துவிடாமல் இலங்கை எல்லை நெடுகத் தனது கப்பல் படையை நிறுத்தி அவர்களைத் தடுத்தது இந்தியா. இதனால், சுற்றி வளைக்கப்பட்டு இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கடந்த ஓராண்டாக, ஈழத்தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு வர முடியவில்லை. ஈழத்தமிழர்கள், கேரளக் கடலில் கரையேற முயல்வார்கள் என்று கருதி அங்கும் காவலை வலுப்படுத்தியது இந்தியா.

இவற்றை அறிந்த ஈழத்தமிழர் 22 பேர், ஆந்திரக்கடலில் கரையேறப் பயணம் செய்தனர். ஆனால் திசை தடுமாறி, பல நாட்கள் கடலில் சுற்றித் திரிந்து இறுதியில் காக்கி நாடாவில் கரை சேர்ந்தனர். அப்போது அப்படகில் 12 பேர் பிணமாகக் கிடந்தனர். உணவு தீர்ந்து, தண்ணீரும் தீர்ந்து, தாகம் தாங்காமல், கடல் நீரைக்குடித்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு - இப்படிப் பட்டினியாலும் வயிற்றுப் போக்காலும் 12 பேர் செத்துப்போயினர். இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா தமிழர்களுக்கு இழைப்பதேன்?

இந்தியா தமிழர்களுக்கான தாயகம் அல்ல. தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இந்தியாவில் ஒரு காலனியாக இருக்கிறது. “இராசீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார் ; அது விடுதலைப் புலிகளால் நடந்தது ; அதனால் இப்படி இந்தியா பகையாகிப் போனது “ என்று நடுநிலையாளர் சிலர் வாதிடக்கூடும். இந்தியாவின் இனச்சார்பு மற்றும் இனப்பகை அரசியலை அறியாதவர்களும், தமிழ்நாட்டுக்கு இந்தியா இழைத்து வரும் இரண்டகங்களை அறியாதாரும் இராசீவ் கொலையைக் காரணமாகக் கருதிக்கொள்வர்.

தமிழர்கள் மீது வரலாற்றுக் காலந்தொட்டு ஆரியர் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை பழிவாங்கும் திட்டத்தை மறைக்க விரும்புவோரும் இராசீவ்காந்தி கொலையை நயவஞ்சகமாகக் காரணம் காட்டுகின்றனர். இராசீவ்காந்தி இந்திய அமைதிப்படை என்ற பெயரில் ஓர் ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி ஆறாயிரம் தமிழர்களை - ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்றொழித்தார். இந்தியப்படையினர் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு சீரழித்தனர். இவற்றின் எதிர்வினைதான் இராசீவ் கொலை.

நல்ல பாம்பு யாரையும் தேடிப் போய் கடிக்காது; “விதித்தால் கடிக்கும் அல்லது மிதித்தால் கடிக்கும்” என்பர். இங்கு மிதித்ததால் கடிபட்டார் இராசீவ்! இதேபோல், சீக்கிய மக்களை மிதித்ததால், இந்திராகாந்தி கொல்லப்பட்டார். அந்த சீக்கிய இனத்தோடு கூடிக் குலாவுகிறது இந்தியா. அவர்களுக்குப் பிரதமர் பதவியே கொடுக்கிறது! அது எப்படி?

இந்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும் தமிழ் ஈழம் அமைவதை எதிர்ப்பார்கள். இழந்த பகுதிகளை மீட்டு ஆனையிறவையும் மீட்டனர் புலிகள் 2001-இல்! அடுத்து யாழ்ப் பாணத்தை மீட்கப் படையெடுக்கப்போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டது. யாழ்ப் பாணத்தில் அப்போது 16 ஆயிரம் சிங்களப் படையினர் இருந்தனர். அந்தப் 16 ஆயிரம்பேரையும் பிணமாகவோ உயிருடனோ புலிகள் பிடித்துவிடுவார்கள் என்ற நிலை. அன்று ஆட்சியிலிருந்த பா.ஜ.க. புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டது. சிங்கள அரசுக்குப் போர்க்கப்பல் கொடுத்தது. யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்காமல் புலிகளைத் தடுக்கவேண்டும் என்று சி.பி.எம். கட்சி அறிக்கை வெளியிட்டது. அக்கட்சித்தலைவர்களில் ஒருவரான உமாநாத் இலங்கைக்கு இந்தியா இலவசமாக ஆயுதம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதுதான் இந்தியா!

தில்லி ஏகாதிபத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும், இடதுசாரிகள் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதை ஏற்க மாட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளது. அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையின் நிலை வேறு; அனைத்திந்தியத் தலைமையின் நிலை வேறு.

இராசீவ்காந்தியின் மனைவி என்பதால் சோனியா, ஈழத்தமிழர் அழிப்பில் மிகை முனைப்புக் காட்டுகிறார். மற்றபடி, காங்கிரசில் வேறு யாருமோ அல்லது பா.ஜ.க.வோ அல்லது இடதுசாரிகளோ இந்திய ஆட்சிக்கு, யார் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதைத் தடுத்திட அவர்கள் படையினரைப் பயன்படுத்துவார்கள். இந்தியா, தமிழ் இனத்தோடு, தமிழ்நாட்டிலும் சமரசம் ஆகவில்லை. ஈழத்திலும் சமரசம் காணவில்லை.

காவிரி நீர் உரிமையைக் கன்னடர் பறிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் இந்திய அரசு கன்னடர் பக்கம் சாய்காலாக இருந்து அத்தீர்ப்புகளை செயல்படுத்த மறுத்தது. அதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் ஞாயத்தை ஏற்றுத் தீர்ப்புக் கொடுத்தாலும், இந்திய அரசு மலையாளிகளுக்குச் சாய்காலாக இருந்து அத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தது. இவற்றைப்பார்த்த தெலுங்கர், ஆந்திராவில் பாலாற்றில் அணைகள் கட்டிக் கசிவு நீரும் தமிழகத்திற்கு வராமல் தடுக்க முற்பட்டுள்ளனர்.

ஒரு சுண்டைக்காய் நாடான சிங்களம், 450-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்ல ஊக்க மூட்டியது இந்தியாதான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடல் இருக்கிறது. இரண்டு நாடுகளும் நான்குமுறை போரிட்டுக் கொண்டன. அடுத்த போர் எப்போது என்ற ஆயத்தத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லைதாண்டி வந்த மீனவர்களை இருநாடுகளும் சிறைப்பிடித்தார்களே அன்றி சுட்டுக்கொல்லவில்லை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்குமான அடிப்படை முரண்பாடு இனப்பகைமைதான். இது மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது.

அக்காலத்தில் இந்தியா இல்லை. இக்கால இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மைப்பிரிவினரின் முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் இனத்தின் பெயர் ஆரியர். இந்த இனப்பகைமைக்கு அடுத்த இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை முக்கியத்துவம் கொண்டவைதான், இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கையும் (புவிசார் அரசியலும்) பொருளியல் சுரண்டலும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இந்தியாவை நோக்கி நட்புக் கை நீட்டினார். மதியுரைஞர் ஆண்டன் பாலசிங்கம் இந்திய அரசு அதிகாரிகளுடன் பேசினார்; ஊடகங்கள் வழியாக விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை வெளிப் படுத்தினார். (இந்திய அரசு குறித்த புலிகளின் நிலைபாட்டை அப்போதிருந்தே த.தே.பொ.க. ஆதரிக்கவில்லை) தமிழீழ அரசு அமைய இந்தியா உதவி செய்தால், இந்தியப் பெருங்கடலில் அது இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்றார் பிரபாகரன்.சிங்களப்படைக்கு இந்தியா ஆயுதம், நிதி பன்னாட்டு அரசியல் ஆதரவு ஆகிய உதவிகளை அள்ளி அள்ளி வழங்கிய போதும் கூட கடைசிவரை, பிரபாகரன் இந்தியாவைக் கண்டிக்கவில்லை. மாறாக நட்பிற்குத்தான் நாடினார்.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வழிவகுத்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை சீனாவுக்குக் கொடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கப் பரவலை எதிர்கொள்ள தமிழீழத்தை ஏற்பதுதானே இந்தியாவின் புவிசார் அரசியலுக்கு உகந்த உத்தியாகும். ஏன் அத்திசையில் இந்தியா திரும்பவில்லை?

தமிழர்களை நம்பத் தயாராக இல்லை இந்தியா. தமிழீழத் தமிழர்களையும் நம்ப முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என்பது அதன் கணக்கு. ஆரியர்கள் வரலாற்று பகைமையைக் கணக்கில் எடுக்கத் தவறமாட்டார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாறும் குணமுடையோர் தமிழர்கள். வங்காள தேசத்தைப் பிரித்துத் தந்தது போல், ஈழத்தைப் பிரித்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள வங்காளிகளை இந்தியா நம்புகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களை நம்பவில்லை. தமிழைத்தவிர, இந்தியாவில் உள்ள பெரிய மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தமிழிலிருந்து பிரிந்த “திராவிட” மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை வடமொழிக் கலப்பால் உருவானவை. வடமொழிச்சார்பின்றித் தனித்து நிற்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மட்டுமே!. தமிழ் இனம் மட்டுமே இன்னும் மரபினக் கூறுகளைக் கூடுதலாகக் கொண்டு பார்ப்பனியத்தையும் வடநாட்டு அரசியல், பண்பியல் ஆதிக்கத்தையும் கூடுதலாக எதிர்த்து வருகிறது. நமக்கு இணையாக, இந்தியத்தையும், ஆரியத்தையும் எதிர்ப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களில் மங்கோலிய மரபினத்திலிருந்து பிறந்த தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்மாநிலங்களில் வங்காளிகள் குடியேற்றத்தை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது இந்தியா. வங்காளிகளை வெளியேற்றக் கோரி அசாமில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதில் உள்ள ஞாயத்தைப் பார்க்காமல் படையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது இந்தியா. அப்போது மக்கள் எழுச்சியை அடக்கமுடியாமல, அசாம் மாணவர் அமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டார் இராசீவ்காந்தி. அந்த உடன்பாட்டை செயல்படுத்தாமல் இந்தியா முடக்கிவிட்டது. அப்போதைய மாணவர்களில் ஒரு பிரிவினர் தேர்தல் கட்சி அமைத்துச் சீரழிந்தனர். இன்னொரு பிரிவினர் (உல்பா) அசாம் விடுதலைப் போராட்டம் நடத்துகின்றனர்.

காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் தேசிய இனம் சார்ந்ததே. அப்போராட்டத்திற்கு வெறும் மதச்சாயம் பூசுவது இந்தியாவின் பார்ப்பனிய உத்தியாகும். அயல் இனப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறப்போராடும் சிறுபான்மை இனம், மக்களைத் திரட்ட ஓரளவு மதத்தையும் பயன்படுத்தத்தான் செய்யும். அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் முதல் விடுதலைக் குரல் 1938- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எழுந்தது. அப்போது, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தந்தை பெரியார் குரல் கொடுத்தார். மறைமலை அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழறிஞர்கள் அப்போது பெரியாருடன் கூட்டாக இருந்து அம்முழக்கத்தைத் திரும்பக் கூறினர்.

பெரியார் இறுதிவரை தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். 1949-இல் உருவான தி.மு.க தனித் திராவிட நாடு இலட்சியத்தை முன்வைத்தது. திராவிடநாடு கிடைக்காவிட்டாலும் தமிழ்நாடு கிடைக்கும் என்ற உறுதியில் தமிழ் மக்கள், தி.மு.க.வின் தனி நாட்டுக்கோரிக்கையை ஆதரித்தனர். தனி நாட்டுக்கோரிக்கைக்குப் பெருந்திரளாக, தேர்தல் வழி ஒப்புதல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்தி தி.மு.க, இரண்டு பொதுத் தேர்தல்களைச் சந்தித்தது. 1957-ல் 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. 1962-இல் 50 சட்டமன்றத்தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஆனால், அக்கழகம் பிரிவினைத் தடைச்சட்டம் பின்னர் வரப்போகிறது என்று தெரிந்ததும் 1963-இல் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துதான் இந்தியா, தமிழர்களைச் சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தங்களின் சொந்த இனத்தின் வரலாற்றையும், அதன் தனித்தன்மையையும், அதன் பெருமிதத்தையும் உணராமலும், வரலாற்று வழிப்பட்ட இனப்பகையின் வஞ்சகத்தை முழு அளவில் அறியாமலும், தங்களை ‘இந்தியன்’ என்று சொல்லி ஏமாறுகின்றனர்.

இந்தியா, தமிழினத்தைக் காக்கும் என்று நம்பித் தோற்கின்றனர். தனது அடிமை நிலையைத் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ளாமல் மயக்குவதற்காகத் தமிழ்நாட்டில் கங்காணிகளை அரவணைத்தது இந்தியா. தனிநாடு கேட்ட தி,மு.க தில்லியின் தலைமைக் கங்காணியாக மாறியது. தி.மு.க. விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தாயை விஞ்சிய குட்டியாக இந்திய ஆதிக்கத்தைத் தீவிரமாக ஆதரிக்கிறது. பார்ப்பனியத்தில் காலூன்றி நிற்கும் பார்ப்பன அம்மையாரின் தலைமையையும் அக்கழகம் ஆராதிக்கிறது. தமிழ், தமிழன், தலித்தியம் என்று பேசிக் கொண்டிருக்கும் மற்ற சிறு சிறு தேர்தல் கட்சிகளும் சாரத்தில் கங்காணி வேலை பார்ப்பவையே.

கங்காணி வேலை பார்க்காத கட்சிக்கு தேர்தல் அரசியலில் வாய்ப்பு ஏதும் இல்லை. இந்திய ஒருமைப்பாட்டையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் ஏற்றால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்பது முதற்காரணம். பெரிய கங்காணிக்கட்சிகளில் ஒன்றுடனோ அல்லது இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றுடனோ கூட்டணி சேர்ந்தால் தான் சில இடங்களாவது இச்சிறு கட்சிகளுக்குக் கிடைக்கும் என்பது இரண்டாவது காரணம்.

இவ்வளவு பெரிய இனப்பேரழிவு ஈழத்தில் ஒருநாளில் நடத்துவிடவில்லை. ஓராண்டாகப் போர் நடந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் தீவிரம் அடைந்தது. அக்டோபர் இரண்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில், போர் நிறுத்தம் கோரித் தமிழ் நாடெங்கும் அனைத்துக்கட்சி உண்ணாப்போராட்டம் நடந்தது. அதன்பிறகு கூட்டாகவும், தனியாகவும் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டங்களைத் தொடர்ந்தன. ஆனால் தேர்தல் கட்சிகள் தலைமைதாங்கிய போராட்டம் எதுவும் இந்திய அரசை எதிர்த்து நடைபெறவில்லை.

இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு இந்திய அரசைக் கோரினார்களே அன்றி, இந்திய அரசு அலுவலகங்களை, நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் முடக்கும் போராட்டம் எதையும் நடத்தவில்லை. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய மூன்றும் அமைத்த கூட்டமைப்பான ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ தஞ்சையில் இந்திய விமானப்படைத்தள முற்றுகை, இந்திய அரசின் வரிவசூல் அலுவலங்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் ஆகியவற்றை நடத்தியது. த.தே.பொ.க.வும், த.தே.வி.இ.யும் கூட்டாக இந்திய, சிங்கள அரசுகளின் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தின.

இந்தியாதான் ஆயுதம், நிதி, அரசியல் உதவிகள் செய்து ஈழத்தமிழர் அழிப்புப் போரை இயக்குகிறது என்கிற செய்தி தேர்தல் கட்சிகளின் தலைவர்கள் அனைவர்க்கும் தெரியும். திருட்டுப்பொருளை மீட்டுத்தருமாறு, திருடியவனிடமே புகார் கொடுத்தது போல், இந்திய அரசிடமே இத்தலைவர்கள் முறையிட்டார்கள். இக்கட்சிகள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. தலைமையில் என்றைக்கும் கூட்டணி சேர்பவை. அக்கட்சிகளின் கீழ், பதவி பெறுபவை. எனவே இக்கட்சிகள் என்ன எக்காளமிட்டாலும், எதிர்த்துப்பேசினாலும் இவற்றின் கட்டுத்தறி தில்லியில் உள்ளது. அதில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் நீளத்திற்கு இக்கட்சிகளின் தலைவர்கள் கண்டிப்பார்கள், எச்சரிப்பார்கள். இவற்றையெல்லாம் ஏளனப் புன்னகையோடு தில்லி எசமானர்கள் ரசிப்பார்கள். இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்கு இக்கட்சிகள் போகமாட்டா.

தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோகும் போதும் மேற்படி சிறு சிறு தேர்தல் கட்சிகள், இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்குப் போராட்டங்களை நடத்தமாட்டா. ஈழத்தில் இன அழிப்புப்போர் நடைபெறும்போது தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, இந்திய அரசு ஏற்றது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளை நம்பித்தான் காங்கிரஸ் அரசு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இலங்கை அரசுக்கு உறுதியும் கொடுத்தது.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செயலலிதா, இயல்பிலேயே தமிழின எதிர்ப்பாளர். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதுபவர். தனித்தமிழ் ஈழத்தை எதிர்ப்பவர். இந்திய அரசு இராணுவத்தை அனுப்பிப் பிரபாகரனைப் பிடித்துவந்து இந்தியாவில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் (16.04.2002) தீர்மானம் நிறைவேற்றியவர். "போர் நடக்கும் போது பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று இரண்டு மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். ஷஈழத்தமிழர’ என்று சொல்வது தவறு, ஷஇலங்கைத் தமிழர்’ என்றே கூறவேண்டும் எனச் செய்தியாளர்களைத் திருத்தினார். அவர் தேர்தல் ஆதாயத்திற்காக திடீரென்று ஒரு நாள் (09.04.2009) ஈழத்தமிழர்களுக்காக உண்ணாப்போராட்டம் நடத்தினார். 15- வது மக்களவைத்தேர்தல் நெருங்க, நெருங்க, ஈழத்தமிழர் சிக்கல் தேர்தல் சிக்கல் ஆகிவிட்டதை அறிந்து கொண்ட செயலலிதா “இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் அமைத்துத் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில உறுதியாகப் பேசினார். அப்பேச்சு நம்பகத்தன்மை குறைந்த நபரிடமிருந்து வந்ததால் அதை உண்மை என்று கருத முடியவில்லை. மேற்கண்ட கடைசி நேரம் தவிர மற்ற காலங்களில் ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆதரித்து வந்தவர்தாம் செயலலிதா.

இப்போது தேர்தல் முடிவுகள் வந்து, ஈழத்திலும் பேரழிவு நிகழ்ந்து, விடுதலைப்புலிகளுக்கு தற்காலிகத் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஈழம் குறித்தும், புலிகள் குறித்தும் எதுவும் கருத்து தெரிவிக்காமல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயர்துடைப்புப் பணிகள் ஐ.நா.மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொண்டுள்ளார் செயலலிதா. இனி எப்படி இச்சிக்கலை அணுகுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டக் கூடிய வல்லவர். சாரத்தில் அவரின் நிலைபாடுகள் இராசபட்சே - சோனியா கும்பல் நடத்தும் தமிழ் இன அழிப்பைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையைத் தமிழர்களிடம் உண்டாக்கும் நோக்கங்கொண்டவை. தமிழினத்தை ஆயுதத்தால் அழித்தார் இராசபட்சே; அதற்கு ஆயுதம் கொடுத்தார் சோனியர் அந்த அழிவு கண்டு தமிழ்நாடு கொந்தளிக்காமல் இருக்க உளவியல் போர் நடத்தினார் கருணாநிதி.

ஐ.நா. மனித உரிமை அமைப்பும், ஐரோப்பிய நாடுகளும், போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், அது கூடாது என்று கண்டித்த போது இராசபட்சே சொன்னார்: "பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் போர் நடக்கிறது. மக்களுக்கு எதிராக அல்ல”. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றார் இராசபட்சே.

இதை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றிவளைத்து மென்மையான சொற்களில் சொன்னார் கருணாநிதி: "ஈழ விடுதலைக்கு என்று இயக்கம் ஆரம்பித்து, சகோதரச் சண்டையில் ஈடுபட்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு இன்று கேள்விக்குறியாக நிற்க்கிறது. ஆனால் பிரபாகரன் என் நண்பர்” விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்தாம் என்ற மனநிலையைத் தமிழர்களிடையே உருவாக்கும் உளவியல் பணியைக் கருணாநிதி மேற்கொண்டார். பிறகு, “இன்னும் சில நாட்களில் பிரபாகரனைப் பிணமாகவோ அல்லது உயிருடனோ பிடித்து விடுவோம்’ என்று இராசபட்சே கொக்கரித்தார். அவ்வாறு பிரபாகரன் பிடிபட்டால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதினார்கள். எனவே, பிணமாகவோ, உயிருடனோ பிடிபவடுவது உறுதி என்பதைத் தமிழ் நாட்டு மக்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, திடீர் அதிர்ச்சி வராமல் தடுத்து, அந்நிகழ்வை இயல்பான ஒன்றாக ஆக்கிட கருணாநிதி முயன்றார். அதற்காக அவர் சொன்னார்,

“பிரபாகரனைக் கைது செய்தால் அலெக்சாந்தர், போரஸ் மன்னனை நடத்தியதைப்போல் கவுரமாக நடத்த வேண்டும்.” பிரபாகரன் கைது உறுதி என்பதைத் தெரிவிக்கும் அதே வேளை அவர் மீது அக்கறைப்படுவதுபோல் காட்டிக்கொள்ளும் உளவியல் உத்தி இது. பிறகு ஆங்கிலத் தொலைக் காட்சி (என்.டி.டி.வி) செவ்வியில் “பிரபாகரன் கொல்லப்பட்டால் என்ன கருதுவீர்கள்” என்று கேட்டதற்கு “மிகவும் வருத்தப்படுவேன”; என்றார். பிரபாகரன் கொல்லப்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்று முன்கூட்டியே கூறித் தமிழர்களின் மனநிலையை இயல்புப்படுத்தும் - அதாவது உணர்வுகளைச் சமன்படுத்தும் உளவியல் உத்திதான் இந்த வினாவும்,

அதற்கான விடையும். “பிரபாகரனை ஏன் கைது செய்ய வேண்டும்? கைது செய்யக்கூடாது. அவரை ஏன் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடாது, போரை நிறுத்தி அவருடன் அமைதிப்பேச்சு நடத்த வேண்டும் என்பது தி.மு.க. நிலைபாடு; அதுவே தமிழக அரசின் நிலைபாடும;’, என்றல்லவா கருணாநிதி விடையளித்திருக்க வேண்டும.; போர் நிறுத்தம் வேண்டும் என்று தானே கருணாநிதி மனிதச் சங்கிலி நடத்தினார். சட்டப்பேரவையில் “இறுதித்” தீர்மானம் போட்டார் ; பேரணி நடத்தினார். அந்த நிலைபாட்டுக்கு நேர் முரணாக, “பிரபாகரன் கைது செய்யப்பட்டால், பிரபாகரன் கொல்லப்பட்டால”; என்ற நிலைபாடுகளை அவர் ஏன் எடுக்க வேண்டும்? திடீர் குட்டிக்கரணம் அடித்து செயலலிதா தனி ஈழத்தை ஆதரித்துப் பேசியபின், அதை முறியடிக்கக் காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடையில் “சாகும்வரை பட்டினிப்போராட்டம்” நடத்தி ‘உலகச் சாதனை’ படைத்தார் கருணாநிதி. போர்நிறுத்தம் செய்ய உறுதி அளித்து விட்டது இலங்கை அரசு என்று கூறி உண்ணாமையை நண்பகல் முடித்துக்கொண்டார். அன்று மட்டும் 272 பொதுமக்களை சிங்களப்படை கொன்றது. மறுநாள் 172 பேரைக் கொன்றது. அடுத்த நாள் ஆயிரம் பேரைக் கொன்றது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.

இவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டது வெறும் தூவானம் போன்றது தான் அவருக்கு! பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக 18.05.2009 அன்று இலங்கைப் படை அறிவித்தது. 19.05.2009 அன்று பிரபாகரன் உடல் கிடைத்ததாக, ஒட்டு வேலை செய்து ஓர் உடலைக்காட்டியது சிங்களப்படை. 20.05.2009 நாளேடுகளில் அப்படம் வெளிவந்த தினத்தந்தியில் கருணாநிதியின் வசன கவிதை ஒன்று வந்தது. புறநானூற்றில் உள்ள புலவர் பக்குடுக்கை நன்கணியார் பாடல் அது. அதற்கு விளக்கம் எழுதியிருந்தார் கருணாநிதி. அதன் பொருள் இதுதான். “ஒரு வீட்டில் திருமணப் பறையொலி கேட்கிறது; இன்னொரு வீட்டில் சாவுப்பறையொலி கேட்கிறது. ஒரு வீட்டில் இளங்காதலர்கள் தழுவிக் கொள்கின்றனர். இன்னொரு வீட்டில் கணவனைப்பிரிந்தோர், கண்ணீர் விடுகின்றனர். இவ்வாறு மகிழ்வும் துயரமும் ஒருசேரப் படைத்து விட்டான் பண்பில்லாத படைப்பவன். உலகின் இவ்வியல்பு உணர்ந்த யாவரும் துன்பந்தருவனவற்றைச் சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டும் கண்டு மகிழ்வாராக”.

தேர்தல் முடிவுகள் வந்த வெற்றிக் களிப்பில், இந்திய அரசின் அமைச்சர்களாகப் போகிறார்கள் பிள்ளைகளும் பேரனும் என்ற இன்பப் பெருக்கில் திளைத்திருக்கிறது கருணாநிதி குடும்பம். இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டு பிணங்களாகக் கிடக்கிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மை தானா என்ற தவிப்பு. இதனால் தமிழர்கள் இல்லமெல்லாம் துயரம் கவிந்து கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையை இயல்பான ஒன்றாக்கிக் காட்டி கொந்தளிப்பு வராமல் தடுக்க, கருணாநிதி கண்டெடுத்த புறப்பாடல்தான் மேலே கூறப்பட்டது.

தமிழின அழிப்பில் ஆயுதப் போரை நடத்தியவர்கள் இராசபட்சேயும், சோனியாவும்; அவர்களுக்குத் துணையாக உளவியல் போரை நடத்தியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக நிலவும் கங்காணி அரசியலை நன்கு பயன்படுத்திக் கொண்டது இந்தியா. ஈழத்தமிழின அழிப்பில் சிங்கள- இந்தியக் கூட்டுப்படைகள் ஈடுபட்டதை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கிளம்பிய எழுச்சி கட்டுமீறிப் போகாமல், ஒரு வரம்புக்குள் இருக்கும்படி கங்காணி அரசியல் கட்சிகள் பார்த்துக்கொண்டன. அதேவேளை பன்னாட்டு அரசியலில் இந்தியா தீவிரமாகத் தலையிட்டு, ஈழத்தில் நடைபெறும் மனித குல அழிப்புக்கு எதிராக எந்தநாடும் உறுதியாகத் தலையிடாதவாறு தடுத்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐ.நா.மன்றமும் இலங்கை அரசு நடத்தும் மனிதப் பேரழிவுப்போரைத் தடுத்து நிறுத்த உருப்படியாகத் தலையிடவில்லை. அரை குறையாகவே தலையிட்டன.

இந்த நாடுகளின் வணிக நலன்களுக்குத் தீனிபோடும் அளவிற்கு ஈழம் பெரிய மக்கள்தொகையையும் நிலப்பரப்பையும் கொண்டிருக்கவில்லை. இலங்கையே கூட பெரிய சந்தை இல்லை. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா மாபெரும் சந்தை. அதை இழந்துவிடக்கூடாது; அத்துடன், சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்த, இந்தியாவைப் பயன்படுத்தவேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக, இந்தியாவை எதிர்த்துக்கொண்டு, ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காதரவாக முழு அளவில் உலகநாடுகள் இறங்க முன்வரவில்லை.

பாட்டாளிவர்க்க சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட்டு நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலன்களுக்காக மற்ற நாடுகளின் நலன்களைப் பலியிட்டு வருகின்றன. லெனினுக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியம் இதைத்தான் செய்தது. மாவோ தலைமையில் இருந்த சீனமும் இதையே செய்தது. இதுபற்றி விரிவாகப் பின்னொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். இப்பொழுது நடந்த அநீதியை மட்டும் பார்க்கலாம். இன்னும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைக்காமல், அதன் பெயரிலேயே சீனா, முதலாளியச் சுரண்டல் ஆட்சி முறையைக் கொண்டுவந்துவிட்டது. அத்துடன் ஏகாதிபத்தியக் கனவுகளோடு விரிவாதிக்கக் கொள்கையைக் கடைபிடிக்கிறது.

தெற்காசிய மண்டலத்தில் தனது ஆதிக்கப் போட்டியில் குறுக்கிடும் வட அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்திக்கொள்வது சீனாவின் திட்டம். அத்திட்டத்தை நிறைவேற்றிட, இலங்கை அரசுக்கு, ஈழத்தமிழர் அழிப்புப் போருக்காக, ஏராளமான ஆயுதங்களையும்,நிதியையும் வாரி வாரி வழங்குகிறது. இலங்கை அரசு தன்னிடம் ஆயுதம் வாங்கி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்வது, மனித குல அழிப்புப் போரை நடத்துவது ஆகியவற்றைப் பற்றி சீனாவுக்குச் சிறிதளவும் கவலை இல்லை. திபெத் தேசத்தை ஆக்கிரமித்து, திபெத்தியர்களின் விடுதலைப் போராட்டத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் சீனாவுக்கு, ஈழத்தமிழர் தேசிய உரிமையும், இலட்சக்கணக்கான மனித உயிரும் ஒரு பொருட்டே இல்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இராசபட்சே, படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றவாளிகளாக விசாரிப்பது குறித்து விவாதிக்கக்கூட எதிர்ப்புத் தெரிவிக்கிறது சீனா. ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று மெக்சிகோ, உருகுவே போன்ற நாடுகள் முன்மொழிந்த போதெல்லாம் சீனாவும், ரசியாவும் ரத்து வாக்களித்து ( வீட்டோ) அதைத் தடுத்து விட்டன. கியூபா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் மார்க்சியர்கள். இந்நாடுகள் மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இலங்கை இனப்படுகொலை செய்யவில்லை, மனித உரிமைகளை மீறவில்லை என்று வாக்களித்துள்ளன. ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்படுவதை, அங்கு மனித உரிமைகள் அழிக்கப்படுவதை வெனிசுவேலா குடியரசுத்தலைவர் சாவேஸ் ஒருமுறை கூட கண்டிக்கவில்லை. இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஓர் இரங்கல்கூட அவர் தெரிவிக்கவில்லை. கியூபாவையும், பிடல் காஸ்ட்ரோவையும் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் நேசிக்கின்றனர்.

தமிழர்கள் பிடலை நெஞ்சில் வைத்துப் போற்றுகின்றனர். ஆனால் அங்கிருந்து, ஈழத்தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு சொல்கூட வரவில்லை. மாறாக இலங்கை அரசின் தமிழ் இன அழிப்புப் போருக்கு ஆதரவாக அதன் குரல் உலக அரங்கில் ஒலிக்கிறது. சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளின் நட்பும் கியுபாவுக்குத் தேவை. இந்திய, சீன நாடுகளின் உதவியுடன் உலகின் ஒரு பகுதியில் மனித இனம் அழிக்கப்பட்டால்கூட கியுபா அதற்காக வருத்தப்படாது. அக்கொடுமையைக் கண்டிக்காது. இந்திய, சீன நட்புக்காக, மனித குல அழிப்பையும் பொருட்படுத்தாது. அந்த இன அழிப்புப் போரை ஆதரிக்கும். இதுதான் கியூபா பாணி நிகரமையா? இதுதான் காஸ்ட்ரோவின் மார்க்சியமா? இதைத்தான் கியூபாவிடமிருந்து ஒடுக்கப்பட்ட தமிழர்கள் எதிர்பார்த்தார்களா? “வியட்ந்நாம் யுத்த்தம் எங்க்கள் யுத்தம், வியட்நாம் ரத்தம் எங்கள் ரத்த்தம்”; என்று தமிழ்நாட்டு வீதிகளில் முழக்கமிட்டோம். அது நடத்திய விடுதலைப் போரை ஆதரித்தோம்! அந்த வியட்நாம், இனவெறி இலங்கை அரசை ஆதரிக்கிறது. இன அழிப்புக்கு உள்ளான ஈழத் தமிழர்க்கு ஆறுதலாக வாய்திறக்கவில்லை.

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. மிகக்கொடிய சிங்கள இனவெறிக்கட்சி அது. இராசபட்சே நடத்தும் தமிழின அழிப்புப் போரின் வேகம் போதாது என்று குற்றம் சாட்டுகிறது அது. எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் முறியடித்து மனித சமத்துவத்துவத்தை நிலை நாட்டுவது தான் மார்க்சியம். அந்த மார்க்சியத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்டுகள் பலர் சொந்த தேசிய வாதத்துடனும், தேசிய வெறியுடனும் செயல்படுவது சகிக்க முடியாத முரண்பாடாக உள்ளது. புத்த மதத்தைப் பின்பற்றிக்கொண்டு இனக்கொலை செய்யும் சிங்கள புத்த பிட்சுக்களுக்கும், இந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

பாட்டாளிவர்க்க சர்வதேசியப் பதாகையை உயர்த்திப் பிடிக்க கம்யூனிஸ்ட் நாடு எதுவுமே இல்லையா? அவை, சொந்த தேசிய நலனுக்கான தூதரக உறவாகத்தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாட்டைக் கொச்சைப்படுத்தி விட்டனவா? பிாிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை அரசைத் கண்டித்தன. மனித உாிமைகளுக்காகக் குரல் கொடுத்தன. அதே வேளை, விடுதலைப்போர் நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென்று அவை தடை செய்து வைத்துள்ளன. அத்தடையை அவை நீக்கவில்லை. (இந்நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவும், சீனாவும் பாடுபட்டன.) போர் நிறுத்தம் கோரிய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒவ்வொரு தடவையும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று வலியுறுத்தின.

“பொதுமக்கள் வெளியேற பாதை உண்டாக்கித்தரவேண்டும்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பைக் கோரின. இவ்வாறு இந்நாடுகள், அரைகுறையாகப் போர் நிறுத்தம் கோரின.. ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர் பான் கி மூனும் இதே அரைகுறை முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய செயலாளர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி. அவர்தாம் அடிக்கடி, மனித உரிமை தொடர்பாக இலங்கை சென்று வந்தார். விஜய் நம்பியார் தம்பி இந்தியப் படையில் பணிபுரிகிறார். அவரை இந்தியா, இலங்கைப் படைக்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறதாம்.

ஐ.நா. மன்றத்தின் தலையீடு எந்த அலங்கோலத்தில் இருந்திருக்கும் என்று இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பிரதமரின் பாதுகாப்பு மதியுரைஞராக உள்ள மலையாளி எம்.கே. நாராயணன், இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலராக உள்ள மலையாளி சிவசங்கரமேனன் இருவரும் அடிக்கடி, இலங்கை சென்று ஏன் இன்னும் விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை என்று நச்சரித்தது நாடறியும். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்து அக மகிழ்ந்தவர்கள் அவர்கள். ஐ.நா. மன்றத்திலும் மலையாளி ஆதிக்கம்! அந்தப் பதவிகளில் மலையாளிகள் இருக்கக்கூடாது என்பது நமது கருத்தல்ல. பெரும்பான்மை மலையாளிகள் தமிழினத்தைப் பகையினமாகக் கருதுகிறார்களே என்பதுதான் நமது குற்றச்சாட்டு.

இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையவேண்டும் என்று நிபந்தனை போட்ட ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. மன்றம் ஆகியவை இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யப் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று நிபந்தனை போடவில்லையே ஏன்? இஸ்ரேலிய யூத வெறியர் களால் நாடு பறிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் நம் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் உாியவர்கள். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஹமாஸ் என்ற மதத் தீவிரவாத அமைப்புதான் இப்பொழுது முன்னெடுக்கிறது. யாசர் அராபத் மறைவிற்குப் பின் பி.எல்.ஓ. அமைப்பின் தலைமை அமெரிக்க அடிவருடி ஆகிவிட்டது. மதத் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் இப்பொழுது நாம் ஹமாசைத்தான் ஆதரிக்கவேண்டும். அந்த ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன நிர்வாக எல்லைக்குள் இருந்துகொண்டு இஸ்ரேலுக்குள் எறிகணைகள் வீசிப் பொதுமக்களைக் கொல்கிறது என்று குற்றம் சாட்டி கடந்த சனவரி மாதம் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து விமானக்குண்டு வீச்சு நடத்தியது இஸ்ரேல். காசாப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்றது. இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்கா ஆதரித்தது. இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில், தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா அத்தீர்மானத்தை எதிர்த்தது. அதையும் மீறி 142 நாடுகள் ஆதரித்துப் போர் நிறுத்தத் தீர்மானம் வெற்றி பெற்றது. அத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியாவும் வாக்களித்தது. அத்தீர்மானம், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்து, பாலஸ்தீனத்திலிருந்து தனது படையணிகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோாியதே அன்றி, ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று கோரவில்லை.

இந்தியா கூட, அப்படி ஒரு கோாிக்கையை எழுப்பவில்லை. போர் தொடங்கி 19-ஆம் நாள் போர் நிறுத்தம் செயலுக்கு வந்தது. பாலஸ்தீன மக்கள் காப்பாற்றப்பட்டனர். தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படவில்லையே, ஏன்? “கர்த்தரே? கர்த்தரே, ஏன் எம்மைக் கைவிட்டீர்?” என்று சிலுவையில் அறையப்படும் போது ஏசுபிரான் எழுப்பிய குரலைப்போல் உலகத்தைப் பார்த்துத் தமிழினம் எழுப்புகிறது, தமிழினம் என்ன பாவம் செய்தது?” தனது தாயகத்தை மீட்க பாலஸ்தீனர்கள் போராடுவது ஞாயம்! தாயக விடுதலைக்காக ஈழத் தமிழர்கள் போராடுவது குற்றமா? ஹமாசுக்கு ஒரு நீதி, விடுதலைப்புலிகளுக்கு வேறொரு நீதியா?

தமிழர்களே, தமிழ்நாட்டுத் தமிழர்களே,

உலகத்i;தைப் பார்த்து;து வினா எழுப்புவதோடு நிற்காதீர்கள்! உங்களுக்குள் வினா எழுப்புங்கள். உலகத்தோடு உரையாடும் முன் உங்கள் மனச் சான்றோடு உரையாடுங்கள்! பாலஸ்தீனர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள்! ஆனால் அவர்களின் அரபு இனத்திற்குப் பலநாடுகள் இருக்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் மதத்திற்குப் பல அரசுகள் இருக்கின்றன. எகிப்தைப் போன்ற எட்டப்ப நாடுகள் விதிவிலக்கு. ஆனால் பல அரபுநாடுகளும், இஸ்லாமியர்களும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டின. அந்த நாடுகளோடு எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல வணிகம் செய்யும் நாடுகள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுக் கை உயர்த்தின. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இப்பொழுதாவது புாிகிறதா, தமிழ் இனத்தின் அடிப்படை ஊனம் என்ன என்று? அதற்கொரு நாடு இல்லாததுதான் அந்த ஊனம்;. இந்த உண்மை இப்பொழுதாவது புாிகிறதா?

உலகில் பத்துக்கோடித் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கொரு நாடில்லை. ஒன்றரைக்கோடி மக்கள் தொகை மட்டுமேகொண்டுள்ள சிங்களர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது. அவர்களின் இறையாண்மையை மற்ற நாடுகள் ஏற்கின்றன. அவர்களால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை வளைத்துப்போட முடிகிறது. தமிழ் இன அழிப்புப் போரை தங்குதடையில்லாமல் நடத்த முடிகிறது. ஆனால் நமக்கொரு நாடில்லை.

பத்தாண்டுகள், தனியரசு நடத்தினர் விடுதலைப்புலிகள். உலக நாடுகளின் ஏற்பிசைவு இல்லாததைத் தவிர அந்த ஈழ அரசில் என்ன குறை இருந்தது? தனிப்படை, தனிக்காவல்துறை, நீதித்துறை, பொருண்மியக்கழகம், கலை பண்பாட்டுத்துறை, ஆட்சியில் முழுமையாகத் தமிழ், வரிவசூல் முறை, நலத்திட்டங்கள் செயலாக்கம், தொழில்துறை உற்பத்தி, வேளாண் உற்பத்தி, பன்னாட்டு உறவு, மேம்பட்ட தகவல் தொடர்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வணிகம் என அரசுக்குாிய அனைத்தும் இருந்தன. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தங்க்களின் குடியரசுத் தலைவராகவே ஈழ மக்க்கள் ஏற்ற்றனர்.

பிரபாகரன் நிர்வாகத்தில், மக்களிடையே இருந்த சாதிக்கொடுமை ஒழிக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமை ஒழிக்கப்பட்டது. களவு, கொலை, பாலியல், வன்முறை அறவே இல்லை. “நள்ளிரவில் ஓர் இளம்பெண் கழுத்து நிறையத் தங்க நகை அணிந்து தன்னந்தனியாக வெளியே போய்விட்டு வீட்டுக்குப் பத்திரமாகத் திரும்பினாள் என்ற நிலை நாட்டில் வரவேண்டும். அதுவே நான் விரும்பும் சுயராச்சியம்” என்றார் காந்தி. இந்தப் பாதுகாப்பு இந்தியாவில் இல்லை. பிரபாகரனின் ஈழத்தில் இருந்தது. உலக நாடுகள் உச்சிமோந்து அந்த ஈழத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். அதைச் சிங்களர்கள் அழிக்கத் துணைபோயின ஏன்? உலக அரங்கில் குரல் கொடுக்க, இதர நாடுகளின் ஆதரவைத் திரட்ட தமிழ் இனத்திற்கென்று ஒரு நாடில்லை.

ஈழ விடுதலைப்போரில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதுதான். எாிந்து போன சாம்பலிலிருந்தே உயிர்பெற்று மீண்டும் தாவிப் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவர். விடுதலைப்போர் தோற்காது. நம்பிக்கை ஊட்டுவதற்காக நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் மொழிகளல்ல இவை. உலக நடப்பு இது தான்.

ஆப்கனிஸ்தானத்தில் அரசு நடத்திய தாலிபான்களை அடியோடு அழித்தது அமெரிக்கா. இதோ அவர்கள் எழுந்து வந்து விட்டார்கள். அந்நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி இப்பொழுது அரசு நடத்துகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் பகுதிகள் சிலவற்றையும் கைபற்றி இருக்கிறார்கள். இலங்கையின் சொந்த அனுபவம் ஒன்று இருக்கிறது.

சேகுவேரா வழியில் புரட்சி நடத்திய ஜனதா விமுக்தி பெரமுனாவை தலைமை உட்பட அடியோடு அழித்தது இலங்கை அரசு. 50,000 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதே ஜே.வி.பி. இப்பொழுது மீண்டும் எழுந்து இலங்கையில் முக்கிய அரசியல்கட்சியாக உள்ளது. அக்கட்சி தமிழினத்திற்கு எதிராக உள்ளது என்பது வேறு செய்தி. விடுதலைப்புலிகள் ஈழம் முழுதும் பரவி நிற்கிறார்கள் கிழக்கு மாநிலம், மன்னார் பகுதி யாழ்ப்பாணம் போன்றவற்றில் ஆற்றல்மிகு தளபதிகள் தலைமையில் இன்றும் அவர்கள் செயல்படுகிறார்கள். ஏற்பட்ட இழப்பு பெரிது. ஆனால் வற்றாத ஊற்றிலிருந்து தண்ணீர் பீறிட்டு வருவதுபோல் விடுதலைப்பு;புலிகள் மேலும் மேலும் வருவார்க்கள்.. போர் தொடரும்.. ஈழம் மலரும்!

தமிழ்நாட்டுத் தமிழர்களே, ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அழிக்கப் பட்டார்கள். ஆற்றல் மிகு தளபதிகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி வந்ததும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல் ஆகிக் குடும்பத்தோடு குந்தி அழுகின்ற தமிழர்களே, தலைவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற வினாவை எாியும் நெருப்பாக நெஞ்சில் சுமந்து வெந்து கொண்டிருக்கும் தமிழர்களே, தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது. தலைவரின் இயக்கம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்கள் ஈழ விடுதலைப் போரை எடுத்து நிறுத்த ஆயத்தமாய் உள்ளார்கள். இவ்வளவு பேரழிவிலும் இன்னொரு நன்மை விளைந்திருக்கிறது.

ஈழத் தமிழர் விடுதலைப்போர் உலக நாடுகளின் கவனத்திற்கு அழுத்தமாக வந்துவிட்டது. “அப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா” என்று நிலக்கோளத்தின் கடைக்கோடியில் உள்ள சின்னஞ்சிறு தேசம் கூட இனி கேட்காது. எல்லோருடைய கவனத்திற்கும் அது வந்துவிட்டது. உலக ஆதிக்க நாடுகளுக் கிடையே உள்ள முரண்பாடு, ஈழத்திற்கு ஆதரவாக பெரிய நாடுகள் சிலவற்றை இனித் திருப்பிவிடும். இந்தியப் பெருங்கடலில், சீனாவும், இந்தியாவும் ஆதிக்கப்போட்டியில் இறங்கி முரண்பட்டு நிற்கப் போகின்றன. மேற்கத்திய நாடுகள் சீனாவைத் தட்டி வைக்க விரும்புகின்றன.

ஈழத்தில் இலங்கை நடத்திய மனித அழிப்பை, வாழ்வுரிமைப் பறிப்பை, இரசாயனப்போரை விசாாிக்க முனைந்துள்ளன உலக நாடுகள். போர்க்குற்றவாளிகளாக, இராசபட்சே, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராசபட்சே, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்ற கோாிக்கை உலக மனித உாிமை அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உாிமை அமைப்பு, ஐ.நா.பாதுகாப்புக்குழு ஆகியவை அவற்றை விசாாிக்கும் நிலை உருவாகி உள்ளது.

சூடானில் டார்ஃபர் பகுதியில் வாழும் ஃபர், மசாலித், ஜாகுவா இனங்களைச் சேர்ந்த மக்களை இனப்படுகொலை செய்தார் அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் உமர் ஹாசன் அல் பசீர். தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தினார். அம்மக்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காமல் தடுத்தார். மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 2009 மார்ச்சு 4- ஆம் நாள் சூடான் அதிபர் அல்பசீருக்கு எதிராகப் பிடி ஆணை பிறப்பித்தது. இன்னும் பிடிபடாமல் உள்ளார். ஒருநாள் கூண்டிலேற்றப்படுவார். ஏற்கெனவே, குரோசிய, கொசாவா மக்களை இனப்படுகொலை செய்ததற்காக, செர்பிய அதிபர் மிலோசோவிச், போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அதற்கு முன், சிலியில் தொழிலாளர்களையும், மக்களையும் கொன்று குவித்த சர்வாதிகாாி பினோசே பன்னாட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டார்.

1. இந்த வரிசையில் இராசபட்சே கும்பல் கைது செய்யப்படவேண்டும். இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாாிக்க அமெரிக்கா முன்மொழிந்து ஐ.நா.வின் மனித உாிமைக்குழு விவாதித்தது. நாற்பத்தேழு உறுப்பு நாடுகளைக்கொண்ட மனித உாிமை ஆணையத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாாிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தீர்மானம் முன்மொழிந்தது. அதை எதிர்த்து இலங்கை அரசுக்கு ஆதரவாக மேற்படி விசாரணை தேவையில்லை என்ற தீர்மானமும் முன்மொழியப்பட்டது. 28.5.2009 அன்று நடந்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து முன்மொழிந்த தீர்மானம் பதினேழு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 22 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. இந்தியா, சீனா, கியூபா, பொலிவியா, நிகரகுவா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன. இருப்பினும் நாம் மேற்கண்ட கோாிக்கையை உலகு தழுவியஅளவில் வலியுறுத்திப் போராடவேண்டும். தமிழ்நாட்டிலும்அதற்கான பரப்புரையும், போராட்டமும் நடத்த வேண்டும்.

2. போாில் படுகாய முற்று, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்ற, மன அதிர்ச்சிக் குள்ளானோரைக் குணப்படுத்த மருத்துவர் குழுக்கள் சென்று உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

3. ஈழத் தமிழர்களுக்கான அனைத்துத் துயர் துடைப்புப் பணிகளும் ஐ.நா. மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும். சிங்கள அரசின் கண்காணிப்பில் நடைபெறக்கூடாது.

4. வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மூன்றரை இலட்சம் தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பவேண்டும். அவர்களின் சொந்த வீடுகள் தகர்க்கப்பட்டிருந்தால், அவ்விடங் களில் உடனடியாகத் தற்காலிக வீடுகள் கட்டித்தரவேண்டும்.

5. இப்பொழுது ஏற்பட்டுள்ள பேரழிவைப் பயன்படுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெறாமல் ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தடுக்கவேண்டும்.

6. தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்தி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு (யுஉஉழரவெயடிடைவைல) செய்வதற்கு ஐ.நா.மன்றம் ஆவன செய்ய வேண்டும்.

7. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.

உலக நாடுகளை நோக்கி நாம் உடனடியாக எழுப்பவேண்டிய கோாிக்கைகள் இவை. இக்கோாிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்கள் நடத்தவேண்டும். விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் உலக அரசியல் அரங்கில் முன்னேறியுள்ளனர். சிங்கள அரசு போர்க்களத்தில் தற்காலிக வெற்றி பெற்ற போதிலும் உலக அரசியல் அரங்கில் தோல்வி அடைந்து வருகிறது.

அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும் ஈழத் தமிழ்த் தேசிய இனம் தனது புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்கும். தற்காலிகத் தோல்விக்கான காரணங்களைத் தன் திறனாய்வுடன் ஆராய்ந்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தமிழ்நாட்டுத் தமிழர்கள், ஈழத்தமிழர்க்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? அவர்களின் எதிர்கால இலக்கு என்ன? உடனடிக் கடமைகள் என்ன? இவையே நம்முன் உள்ள வினாக்கள்.

இவற்றிற்கான விடைகள் :

தமிழ்நாட்டை, இந்தியா தனது காலனியாகத்தான் நடத்துகிறது. போர் நிறுத்தம் கோாி நாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, படையினரை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போரை இயக்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளவில்லை.

மாவீரன் முத்துக்குமார் தொடங்கி 14 தமிழகத் தமிழர்கள் தீக்குளித்து சாவைத் தழுவியும் இந்தியா மனமிரங்கவில்லை. தமிழ் இனத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள பகை, வரலாற்று வழி வந்த தமிழர் - ஆாியர் பகையின் தொடர்ச்சியே.

நாம் “இந்தியர்” அல்லர்;, தமிழர்களே! நாம் “திராவிடர்கள்” அல்லர், தமிழர்களே!

தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம். இறையாண்மை யுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும்.

ஈழம் தனி நாடாகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்ற கருத்து, சமூக அறிவியலுக்கும், இயங்கியல் விதிகளுக்கும் புறம்பான நிலைபாடு. ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்புாியுமே அன்றி ஒன்றுக்குப்பின் இன்னொன்று செயல்படும் என்பது பிழையான கோட்பாடு. ஏனெனில் இரண்டு போராட்டங்களுக்குமே பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத் தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். தமிழகத்தின் தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றின் தாக்கம் இன்னொன்றை ஊக்கப்படுத்தும். ஈழ விடுதலைப் போர் முன்னேறிச் சென்றால் களிப்படைவது, அதில் பின்னடைவு நேர்ந்தால் துயரப்படுவது என்பது மட்டும் போதாது. ஈழ விடுதலைப்போர் கிாிக்கெட் விளையாட்டல்ல. நாம் காலரியில் உட்கார்ந்து கையொலி எழுப்புவோரும் அல்லர். அது இன விடுதலைப்போர். விடுதலைப் புலிகள், தங்கள் தாயகத்திற்குப் போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்குப் போராட வேண்டாமா? தமிழ்மொழி உணர்ச்சி மட்டும் போதாது, தமிழ் இன உணர்ச்சியும் வேண்டும். தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டத்தைத் தேர்தல் கட்சிகளால் நடத்த முடியாது. தமிழர்களிடையே இன உணர்ச்சி எழுச்சி கொள்வதற்கேற்ப, அதற்கு ஈடு கொடுத்துத் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, போலியாக இன முழக்கங்களை எழுப்பி, உணர்வாளர்களைத் திசைதிருப்பிவிடும் அக்கட்சிகள்.

தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டக்களம் இருக்கிறது. அப்போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டமாக எழுந்தால்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆயுதக் குழுப்போராட்டம் இங்கு மக்களை ஈர்க்காது. பணம் - பதவி - விளம்பரம் மூன்றிற்கும் ஆசைப்படாத இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு முன்வரவேண்டும்.

தேனீக்கு அஞ்சினால் தேனெடுக்க முடியாது. தியாகத்திற்கு அஞ்சினால் தேசம் அமைக்க முடியாது. அன்னையின் மடியில் அனாதையாய், சொந்த மண்ணில் ஏதிலியாய் இழிவடையக் கூடாது. தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தேவை. நேரடியாகப் போராட்டங்களில் பங்கு பெறுவோர், சிறைக்கஞ்சாதவர், முழுநேரச் செயல்வீரர்கள், பகுதி நேரச் செயல்வீரர்கள்;, ஓய்வு நேரத்தில் பணிபுாிவோர், ஒதுங்கி நின்று உதவி புாிவோர், கருத்துரை வழங்குவோர், கலை இலக்கியப் படைப்பாளிகள், இவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளும் மக்கள்; இவ்வாறான தேசியச் சமூக ஒருங்கிணைப்பு தேவை.

தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தில் இவர்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பு இதற்கு முதன்மைத் தேவை. யார் யாருக்கு எந்த அளவில் செயல்ப்பட முடியுமோஅந்த்த அளவில் செயல்ப்பட வாருங்க்கள்! கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரியம் பெறுவோம்! கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்!

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள். எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு அறிவிப்போம்!

எங்கிருந்து தொடங்குவது? இங்கிருந்து தொடங்குவோம்!

தமிழ்நாட்டிலிருந்து தொடங்குவோம்! கண்ண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!

http://www.keetru.com/kannottam/jun09/maniyarasan.php

நன்றி : கீற்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.