Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய நிலை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய நிலை

- சொ.யோகரூபன் -

தமிழ்த் தேசிய அரசியல் இராணுவ ரீதியில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அரசியல் ரீதியில்; தோற்கடிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு தற்போது இறங்கியிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லாத நிலையிலும், ஆயுதப் போராட்டம் ஏதோவொரு வகையில் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் தாயகத்தில் தமிழ்த் தேசிய அரசியலைத் தாங்கிப் பிடிப்பனவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் ஊடகங்களும் தான் உள்ளன.

இன்று அவை இரண்டையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கி விட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் முயற்சி இரண்டு வழிகளில் இடம்பெறுகின்றன. முதலாவது வழிமுறை கடுமையான பயமுறுத்தல்களையும், எச்சரிக்கையையும் விடுப்பதனுடாக அவர்களை பலவீனப்படுத்துவது.

இதனால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், நாடாளுமன்ற அரசியல் செயற்பாட்டிலிருந்தே அகற்றப்பட்டு வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தற்போதும் இரகசிய காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இன்னோர் பிரிவினர் சிறிலங்கா அரசுடன் ஓர் இணக்கப்பட்டு அரசியலை மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் இது தொடர்பாக ஏற்கனவே முடிவுகளை எடுத்து அவசரகாலச்சட்ட வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிக்காது இருந்திருக்கின்றார்.

இதற்கு அவர் கூறிய பிரதான காரணம் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதேயாகும். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தாவும், வேறு சிலரும் சிறிலங்கா அரசுடன் இணங்கிப் போவதற்கு அவசரம் காட்டி வருகின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா, கருணா போல சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நப்பாசையும் இவர்களிடம் இருப்பது போலத் தெரிகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசிற்குச் சுட்டிக்காட்டுவதை விட, அரசிற்குத் துதிபாடுவதிலேயே இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனைச் சற்று மௌனமாக்கி விட்டு சிறீகாந்தாவே தற்போது ஊடக அறிக்கைகளையும் விட்டு வருகின்றார்.

ஆயினும், சம்பந்தன் இந்தியாவைச் சார்ந்து நின்றாலும் தமிழ்த் தேசிய அரசியலை விலை கொடுக்க தயங்குகின்றார். அதற்கு அவரது தமிழரசு மரபுவழி அரசியல் காரணமாக இருக்கலாம்.

தமிழ்த் தேசிய அடையாள அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கும் சிந்தனை சிறீகாந்தா பிரிவினருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பிரிவினரின் அழுத்தத்தினாலேயே அண்மையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ளும் முடிவை கூட்டமைப்பு எடுத்திருந்தது.

அனைத்து கட்சிக் குழுக் கூட்டம் கூட அரசியல் தீர்வு யோசனைகளை மையமாக வைத்துக் கூட்டப்படவில்லை. மாறாக வடக்கு அபிவிருத்தி என்பதை மையமாக வைத்தே கூட்டப்பட்டது.

இந்த வடக்கு அபிவிருத்தி என்பது அரசியல் தீர்வு முயற்சிகளை பிற்போட்டு அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக அரசினால் எடுக்கப்படும் முயற்சிகளாகும்.

சிறீகாந்தா பிரிவினர் எவ்வளவு தான் சிறிலங்கா அரசினை தடவிச் சமாளிக்க முற்பட்டாலும், இடம்பெயர்ந்த முகாம்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்வதற்கு தயாரான சமிக்ஞையைக்கூட அரசு இன்னமும் காட்டவில்லை.

மூன்றாவது பிரிவினர் தமிழ்த் தேசிய அடையாள அரசியலை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர்களே இவர்கள் ஆவர்.

தமிழரசுக் கட்சியின் மரபு அரசியலை எவ்வாறாவது தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதில் இவர்கள் அக்கறையாக உள்ளனர்.

எனினும் வெறும் அறிக்கை அரசியலுக்கு அப்பால் மக்களை இணைத்து வெகுஜன அரசியல் ஒன்றை நடத்துவதற்கான ஆற்றல் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

நாடாளுமன்ற அரசியல்வாதிகளிடம் இருக்கும் சமரச அரசியல் சிந்தனையாலும் பாதிக்கப்பட்டவர்களாக இவர்கள் உள்ளனர்.

அதேவேளையில் பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தூய்மையான தேசியப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புகின்றவர்களாக உள்ளனர்.

தமது பாதுகாப்பு அச்சம், அரசியல் தீர்விற்கு அழுத்தம் கொடுத்தல் என்பதற்காக இந்தியாவைச் சார்ந்து நிற்கவே சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர்கள் விரும்புகின்றனர்.

இந்தியாவும் இவர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசில் தன் செல்வாக்கை அதிகரிப்பதில் அக்கறை செலுத்துகின்றதே தவிர, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க முயல்வதாகத் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்திக்கும் பிரதானமான பிரச்சினை கூட்டமைப்பு பிளவுபடுவதை எவ்வாறு தவிர்த்தல் என்பதே ஆகும்.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு சலுகை அரசியல் கட்சியாக சிதைத்தல் அல்லது அதனை பிளவுபடுத்தி அழித்தல் அல்லது பயமுறுத்தி செயலற்ற தாக்குதல் என்பதே சிறிலங்கா அரசின் நோக்கம் என்பது மிகத் தெளிவானதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் இரண்டாவது வழிமுறை சலுகை அரசியலையும், சரணடைவு அரசியலையும் ஒரு அரசியல் போக்காக தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியாகும்.

இதற்காக அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற தமிழ்க் குழுக்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. போர் அழிவுகளினால், மிகவும் நொந்துபோயிருக்கும் மக்களிடம் போராட்டங்களை நடாத்தி எதுவும் கிடைக்கப் போவதில்லை. அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என இக்குழுக்கள் பிரச்சாரம் செய்கின்றன.

எப்போதும் பலவானுடன் இருக்க விரும்பும் தமிழ்ப் புலமையாளர்கள் சிலரும் இதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலின் புலமைத் தளமாக விளங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினை அங்குள்ள புத்திஜீவிகள் சிலர் டக்ளஸ் தேவானந்தாவின் சலுகை அரசியல் களமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் தொடக்கம் சில விரிவுரையாளர் வரை இதற்குள் அடக்கம்.

இவ்வளவிற்கும் விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்தவேளை இவர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களாவர். தற்போது அரசுடன் இணங்கிப் போவதே நல்லது என மாணவர்களுக்கும் போதனை செய்து வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1974 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஒருபோதும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றாத டக்ளஸ் தேவானந்தா தற்போது விரிவுரையாளர்களின் உதவியுடன் உரையாற்றியுள்ளார்.

தமிழ் மக்களின் அடையாளத்தினை விட்டுக் கொடுக்காமல் அரசுடன் இணைந்து செயற்படுவோம் என டக்ளஸ் தேவானந்தா கூறி வருகின்றார். தனது கட்சியின் அடையாளத்தையே பாhதுகாக்க முடியாமல் யாழ். மாநகர சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் இவர் எவ்வாறு தமிழ்த் தேசிய அடையாளத்தை பாதுகாக்கப் போகின்றார் என்பது அவருக்கே வெளிச்சம்.

யாழ். வீதிகளில் இறங்குவதற்கே அச்சமுற்றிருந்த சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் கூட்டம் இன்றும் பல்லைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, அரச செயலகம் என பல இடங்களிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

வன்னியில் இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிங்கள அரசின் அமைச்சர்களுக்கு யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் மணவறை அமைத்து அதில் அவர்களை இருத்தி வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சர் கூட்டமும் அபிவிருத்தி எனப் பிரச்சாரம் செய்கின்றனவே தவிர அரசியல் தீர்வு பற்றியோ, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது பற்றியோ, குறைந்தபட்சம் ஏ-9 வீதியை மக்களின் போக்குவரத்திற்குத் திறந்து விடுவது பற்றியோ வாயைத் திறக்கவில்லை.

டக்ளஸ் தேவானந்தா மட்டும் அரச தலைவரின் சார்பில் அவரது பிரதம செயலாளர் எனக் கருதி சில அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ~கிழக்கின் வசந்தம்| மூலம் 1,500 பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க முடியாதவர்கள், ~வடக்கின் வசந்தம்| மூலம் வடக்கு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தான் தீர்க்கப் போகின்றனர்?

இன்னோர் பக்கத்தில் சிங்கள வர்த்தகர் கூட்டமும், இதுவரை காலமும் யாழ். குடாநாட்டையே எட்டிப் பார்க்காத சம்பத் வங்கி போன்ற தனிச் சிங்கள வங்கிகளும், தமிழ் மக்களைச் சுரண்டுவதற்காக குடாநாட்டினை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

குடாநாட்டு மக்களிடம் இருக்கும் பணத்தை எப்படியாவது சிறிலங்காவின் தென்பகுதிக்கு கொண்டுசெல்வதே இக்கூட்டத்தின் இலக்காகும். வெளிநாட்டுப் பணம் குடாநாட்டில் அதிகமாக இருப்பதினால் அதனைக் கவர்வதற்கு இவை முயல்கின்றன.

இந்த சலுகை அரசியல் கூட்டம் கிழக்கிலும் இவ்வாறு தான் தம்பட்டம் அடித்து வந்தது. வெளிநாட்டு உதவிகளினால் அமைக்கப்பட்ட வீதிகளையும், பாலங்களையும் தங்களின்

பெரும் செயல்கள் என்று கூறி வந்தன.

தற்போது அவையெல்லாம் அடங்கிப் போயுள்ளன. தமக்கு வேலை வாய்ப்புக் கோரி தொடர்ச்சியாக உண்ணாநிலை இருக்கும் 1,500 கிழக்குப் பட்டதாரிகளின் விடயத்தில் பிரபல சலுகை அரசியல்வாதி கருணா கூட கையை விரித்து விட்டார்.

வடக்கின் சலுகை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா வேலையற்ற ஆயிரக்கணக்கான யாழ். பட்டதாரிகளிடம் 'தன்னைப் பலப்படுத்துங்கள்; தான் வேலை பெற்றுத் தருகின்றேன்" எனக் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான புனர்வாழ்வு அமைப்பின் செயலணியில் கூட அங்கத்துவம் பெற முடியாதவர் வேலை பெற்றுத் தருவதாகப் பாசாங்கு செய்கின்றார்.

சலுகை அரசியலினாலும், சரணடைவு அரசியலினாலும் தமிழ் மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்க முடியுமா? கூட்டிருப்பை பாதுகாக்க முடியுமா? கூட்டுரிமையைப் பாதுகாக்க முடியுமா? என்பதற்கு இந்தச் சலுகை அரசியல்காரரிடம் பதிலேதும் இல்லை.

சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக வளர்ந்து வந்த அடையாள அரசியலை வேருடன் அழிப்பதற்கு சிறிலங்கா அரசு முயற்சிக்கின்றது. இந்தச் சலுசை அரசியல் கூட்டம் அதற்குத் துணை போகின்றது.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை கிழக்கினைப் போல, வடக்கையும் சலுகை அரசியலினாலும், சரணடைவு அரசியலினாலும் களமாக்க முயற்சிக்கின்றது. கிழக்கில் கருணாவும், வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவும் இதன் உச்ச நிலையில் உள்ளனர். முஸ்லிம்கள் ஆட்சியாளர்களைத் தடவித்தானே பாரிய சலுகைகளைப் பெற்றனர். நாமும் அவ்வாறு செய்து அதிக சலுகைகளைப் பெறுவோம் என்பது கருணாவின் கருத்தாக உள்ளது.

இந்த விடயத்தில் அவர் முஸ்லிம் தலைவர்களை விட ஓரடி பாய்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஆகியிருக்கின்றார். அரசுடன் மிக நெருக்கமாக இருக்கும் முஸ்லிம் தலைவர்களில் அதாவுல்லாவோ, ஹிஸ்புல்லாவோ, அமீர் அலியோ அல்லது ரிசாத் பதியுதீனோ இன்னமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர்களாகச் சேரவில்லை. தமக்கென முஸ்லிம் கட்சிகளை உருவாக்கி அதன் பெயரில் தான் அரசியலை நடாத்துகின்றனர்.

உண்மையில் முஸ்லிம் தலைவர்கள் இன்று கருணாவைப் பார்த்து பிரமித்துப் போய் நிற்கின்றனர். அதாவது தங்களை விட ஆட்சியாளர்களைத் தடவுபவராக இருக்கின்றாரே என்பதனால் தான் அந்த பிரமிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்கள் மிக நீண்ட காலமாகவே தமிழ்த் தேசியத்திற்கான கொள்கை வழி அரசியலைப் பேணியும், பராமரித்தும் வந்தன. அரசு சார்புத் தமிழ் ஊடகங்களைத் தவிர ஏனைய அனைத்து ஊடகங்களும் இது விடயத்தில் பாரிய பங்களிப்பைச் செய்திருந்தன. கொலைகள், அச்சுறுத்தல்கள் என தொடர்ச்சியாக வந்தபோதும் இவை தமது பணிகளை நிறுத்தவில்லை. இதற்கான வலிமையை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் அவைக்கு கொடுத்திருந்தன.

தற்போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோல்வியடைந்த பின்னர் பின்பலம் எதுவுமில்லாமல், அரச அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அவை திணறுகின்றன.

வித்தியாதரன் கைது, யாழ். குடாநாட்டுப் பத்திரிகைகள் எரிப்பு என்பற்றிற்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் மிகுந்த அச்சமும் விரக்தியும் அடைந்துள்ளனர். சோர்வு மனப்பான்மையும் அவர்களை வாட்டுகின்றது. ஒருபுறம் தீவிரமான அச்சுறுத்தல், மறுபுறம் சோர்வு. இந்த இரண்டும் அவர்களை வாட்டவே சுயதணிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் பிரதான ஆசிரியர் இதனை நேரடியாகவே வாய்விட்டுக் கூறினார். 'தமிழ்த் தேசிய அரசியல் நெருக்கடியான நிலையில் இருக்கும் போது நாம் கையாலாகத்தனத்துடன் இருக்கின்றோம்" என கவலை தெரிவித்தார்.

இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நீண்ட காலமாகவே கொள்கை வழி அரசியல் வளர்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கவில்லை. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் களத்தில் இருந்ததால் சிறிய வாய்ப்புகள் இருந்தன. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதற்கான களமாக காணப்பட்டது. தமிழ் ஊடகங்களும் அதனைப் பாதுகாத்து வந்தன. தமிழ்த் தேசிய அரசியலின் கருத்துக் களமாகவும், போராட்ட களமாகவும் யாழ். பல்கலைக்கழகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியின் பின்னர் அதற்கான வாய்ப்புக்கள் அறவே அற்றுப் போயுள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை வேருடன் அழிப்பது என்பதில் அரசு மிகத் தீவிரமாக இருப்பதால், தேசிய சக்திகள் அடங்கிப் போயுள்ளன. சலுகை அரசியல் ஒரு போக்காக வளர்கின்ற சூழலில் இவர்கள் எதுவும் செய்ய முடியாமல் மௌனித்துப் போயுள்ளனர்.

சலுகை அரசியல் தொடர்ச்சியான போக்காக இருந்தால் மக்கள் சீரழிந்து சலுகைகளுக்கு கையேந்தும் கூட்டமாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இதன் பின்னர் மக்களை அதிலிருந்து விடுவிப்பது என்பது இலகுவானதாக இருக்காது.

இன்று மலையகத்திலும், தமிழ் நாட்டிலும் அதுதான் நடக்கின்றது. மலையகத்தில் கொள்கை வழி அரசியலை நடாத்த வேண்டும் என விரும்புகின்றவர்கள் இன்று சிறு அடிகூட முன்னேற முடியாத நிலையில் உள்ளனர். தமிழ் நாட்டிலும் அதே நிலைதான்.

தேர்தல் அரசியல் என்பதே ஒரு வகையில் சலுகை அரசியலுக்கு வழி செய்கின்ற சீரழிவு அரசியல் தான். கொள்கை வழி அரசியல் நடத்தும் போது தான் தேர்தல் அரசியலிலிருந்து சிறிய பயன்களையாவது பெற்றுக்கொள்ள முடியும்.

நமது தாயகத்தில் தமிழ் அரசியல் இன்று சீரழிவு அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய சக்திகள் சிந்திக்க தொடங்க வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் இன்று இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அது அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட நாம் விடப்போகின்றோமா? இதுதான் இன்று எம்முன்னுள்ள மிகப் பெரிய கேள்வி!.

http://www.tamilnaatham.com/articles/2009/...an_20090728.htm

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.