Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடை தேடும் வினாக்கள்!--தமிழருவி மணியன்

Featured Replies

'ஈழத் தமிழரின் எதிர்காலம் இனி எப்படி அமையும்?' என்ற சிந்தனையுடன் அமெரிக் காவின் அட்லாண்டா நகரிலிருந்து லூப்தன்சா விமானத்தில் சென்னையை நோக்கிப் பயணித்த என் கைகளில் வில்லியம் ஷைரர்

எழுதிய காந்தியைப் பற்றிய புத்தகம் விரிந்து கிடந்தது. 'வீரம் செறிந்த பயணத்தில் துன்பம் விளைவது, மூக்கு துவாரங்களில் சுவாசம் நிகழ்வது போல்... மிகவும் இயல்பானது. ஆனால், எந்தத் துன்பத்துக்கும் ஓர்

எல்லை உண்டு. துன்பத்தின் எல்லையில் நிற்கும்போதும் விழிப்படையாமல், மேலும் அதே பாதையில் பயணத்தைத் தொடர் வது விவேகமற்றது!' என்ற காந்தி யின் விளக்கத்தில் பார்வை படர்ந்தது; யோசனையில் மனம் ஆழ்ந்தது.

வார்த்தைகளில் விளக்க முடியாத சோகங்களைச் சுமந்தபடி வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைந்து கிடக்கும் ஈழத் தமிழர்கள் இன்னுமோர்

ஆயுதப் போரில் ஈடுபட இயலுமா? ஆயுதமேந்தி அளவற்ற தியாக உணர்வுடன் விடுதலைப்புலிகள் நடத்திய வீரப்போரினால், எந்த உரிமையைப் புதிதாகப் பெற முடிந்தது? போதும் இந்தப் போரென்றால், சிங்களருக்குச் சமமாக வாழ்வது எப்படி சாத்தியம்? காந்தியப் பாதையில் அவர்கள் முதலில் போராடியபோதும், அணுவளவு நன்மையையும் அடைய முடியவில்லையே! அப்படி யானால், எம்தமிழர் ஈழநிலத்தில் உரிமையோடு வாழ எதுதான் உகந்த வழி? காந்தியத்தையே மீண்டும் கைக்கொள்ளலாமா?

முன்பு அமெரிக்காவில் வி.பி.சிங் தமிழரிடையே பேசியபோது, 'ஈழத் தமிழரின் இன்னல் தீர ஒரே வழிதான் உண்டு. தமிழகம் பொங்கி எழுந்தால், இந்திய அரசு வேகம் கொள்ளும். முடிவில் இலங்கை 'இணங்கி வரும்' என்றார். நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் பொங்கினார்கள். ஜெயலலிதாவும் தேர்தல் ஆதாயத்துக்காகப் பொங்குவது போல் நடித்தார்.

ஆனால், பெரும்பான்மைத் தமிழினம் மட்டும் இன்றுவரை பொங்கவே இல்லை. அது இலவச தொலைக்காட்சியில் இனவுணர்வை இழந்து, 'மானுக்கும் மயிலுக்கும்' மதிமயங்கி நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற 69 லட்சத்து 53 ஆயிரம் வாக்குகள்கூட தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளே தவிர, ஈழ ஆதரவு வாக்குகள் இல்லை. ஈழத்துக்கான ஆதரவு அலை உண்மையில் தமிழகத்தில் வீசியிருந்தால், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவைக்கு இன்று ஜெயலலிதாவே தலைமை தாங்கியிருப்பார். இனவுணர்வுடன் வாக்குகள் விழுந்திருந்தால் வாக்குகள் பிரிந்திருக்காது; காங்கிரசுக்கு வெற்றி வந்திருக்காது. வி.பி.சிங் சொன்னாரே... அதுபோல் தமிழகத்தை எப்படித்தான் பொங்கச் செய்வது?

தமிழகத்தைப் பொங்கச் செய்வதென்றால், சட்டம்-ஒழுங்கைக் கெடுப்பதன்று; தனித் தமிழகம் கேட்பதன்று; ஆயுத கலாசாரத்தைஆதரிப்பதும் அன்று. காந்திய வழியில் ஒவ்வொரு தமிழரையும் தீமைகளுக்கு எதிராகத் திருப்புவது! இனவுணர்வு கொள்ளுமாறு தூண்டுவது! இந்திய அரசை ஈழத் தமிழரின் உரிமை காக்க, விரைந்து செயற்படுமாறு நிர்ப்பந்திப்பது! கட்சி அரசியலை ஈழத் தமிழர் நலன் காக்கவாவது கைவிடுவது! நெடுமாறனும் வைகோவும் ஒரு திசையிலும், கலைஞரும் திருமாவளவனும் மறுதிசையிலும் கொடி பிடித்து கோஷமிட்டுப் பேரணி நடத்துவதால், ஒரு பயனும் ஈழத் தமிழருக்கு எந்நாளும் ஏற்படப் போவதில்லை. உலகத்தின் எந்தப் பகுதியிலும் ஒரு தமிழன் பாதிக்கப்பட்டால், இங்குள்ள தமிழர் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு இனியாவது வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

'இனப் பிரச்னையில் கலைஞரா... ஜெயலலிதாவா?' என்ற மலிவான லாவணிக் கச்சேரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'ஈழத்தில் கெரில்லா போர் தொடரும், புலிகள் மீண்டும் பொங்கி எழுவார்கள்' என்று இங்கே சுகமாக மேடை போட்டு வாய்வீரம் பேசுவதை முதலில் விடவேண்டும். 'மாணிக் பண்ணை' முகாமில் மரணத்தின் வாசலில் உயிர்வதையுடன் பிச்சைப் பாத்திரம் சுமப்பவர்கள், இவர்களில் ஒருவரும் இல்லை. களத்தில் நின்று சாவை சந்திப்பது வேறு; கண்ணீர் விடுவதும், கவிதை எழுதுவதும், போர்ப் பரணி பாடுவதும் வேறு. தமிழகத்தில் உள்ள தலைவர்கள் முத்துக்குமார்கள் இல்லை. வெறும் வாய் வேதாந்திகள்.

காந்தியின் பாஷை, ராஜபக்ஷேக்களுக்குப் புரியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பிரபாகரனின் பாஷை சிங்களப் பேரினவாத அரசுக்குப் புரிந்துவிட்டது என்பதும். அமெரிக்காவில் அரங்கேறிய பின்லேடனின் பயங்கரவாதம், இலங்கை அரசுக்கு வரமாக வந்து சேர்ந்தது. இனவொடுக்கலுக்கு எதிரான எழுச்சியை உலகம் பயங்கரவாதமாகவே பார்க்கத் தொடங்கியதுதான் இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு.

இந்த மனப்போக்கின் மாற்றத்தைக் கணிக்கத் தவறியதுதான் பிரபாகரனின் பிழை. சிங்கள ராணுவத்தைவிட வலிமையான ராணுவக் கட்டுமானத்தை உருவாக்கிவிட்டால், தமிழீழம் அமைத்துவிடலாம் என்பது பிரபாகரனின் எண்ணம். ஆனால், சிங்களருக்குப் பின்னால் சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் படை நிறுத்தும்; சர்வதேச சமுதாயம் புலிகளின் அழிவைக் கைகட்டியபடி வேடிக்கை பார்க்கும் என்ற எதிர்வினையை அவர் கருத்தில் கொள்ளவில்லை.

அங்கேதான் இலங்கை அரசின் வெறிச் செயலுக்கான வெற்றியும், வீரம் விளைவித்த விடுதலைப்புலிகளின் தோல்வியும் ஒரே மையப் புள்ளியில் இணைந்தன. எந்தக் காரணத்துக்காக ஒருவன் கையில் துப்பாக்கியைத் தூக்கினாலும், உலகம் அவனை இனிமேல் பயங்கரவாதியாகவே பார்க்கும். அவனுடைய நியாயங்கள் குறித்து, அது கவலைப்படாது. காலத்துக்கு ஏற்றாற்போல் புரட்சியாளர்கள் யுத்த தந்திரங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

போர்முறையான காந்தியம் கோழைகளின் ஆயுதமன்று. 'பீரங்கிக்குப் பின்னால் நின்று சுடுவது வீரமா? அதற்கு முன்னால் நெஞ்சு நிமிர்த்திச் சாவை சந்திப்பது வீரமா?' என்று கேட்டவர் காந்தி. 'வெள்ளையரும் நாங்களும் ஒன்றில்லை. எங்கள் இனம், பண்பாடு, சமயம் ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் வெள்ளையருடன் நட்பாக இருப்போம். ஆனால், அடிமைகளாக ஒரு போதும் இருக்கமாட்டோம்' என்று காந்தி சொன்னதும், 'பிரிட்டிஷ் பிடியிலிருந்து முற்றாக விடுபட முடியும் என்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா?' என்று ஷைரர் கேட்கிறார். 'நான் இறப்பதற்குள் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும்' என்று உறுதிபடக் கூறி மகாத்மா புன்னகை பூக்கிறார். 'சிங்களரும் நாங்களும் ஒன்றில்லை. எங்கள் இனம், மொழி, பண்பாடு, சமயம் அனைத்தும் வேறு. அவர்களோடு நாங்கள் நட்பாக இருப்போம். ஆனால், அடிமைகளாக இருக்க இயலாது' என்று ஈழத் தமிழர் உலகம் முழுவதும் அறவழியில் குரல் கொடுக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அறுபது லட்சம் யூதர்களை விஷவாயுக் குகைகளில் அழித்து, கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து ஹிட்லரை வெல்ல முடிந்த வின்ஸ்டன் சர்ச்சில், அரைநிர்வாணப் பக்கிரி காந்தியிடம் தோற்றுத் தலைகுனிந்ததுதான் வரலாறு.

வரலாற்றிலிருந்து ஈழத்தமிழினம் சில பாடங் களைக் கற்றாக வேண்டும். இந்திய விடுதலையே காந்தி, நேதாஜி, பகத்சிங் மூவரின் லட்சியக் கனவு. துப்பாக்கியை நம்பிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டார்கள். இந்திய தேசிய ராணுவம் அமைத்த நேதாஜி படை நடத்தப் பலர் நிதியை அள்ளிக் கொடுத்தனர். ஜப்பான் துணைக் கரம் நீட்டியது. நேதாஜியின் தியாக மறவர்கள் இந்திய எல்லை வரை வெற்றி கண்டனர். அந்தமானில் சுதந்திரக் கொடியை நேதாஜி பெருமிதத்துடன் பறக்கச் செய்து பரவசப்பட்டார். ஆனால், வெள்ளையரின் வெறிபிடித்த வான்வழித் தாக்குதலில் மணிப்பூர் மண்ணில் மரணம் அவருடைய ராணுவத்தின் வலிமையை முடித்துவிட்டது. நேதாஜியின் இறுதி முடிவு இன்று வரை புதிராகவே போய்விட்டது. பிரபாகரன் விஷயத்தில் வரலாறு மீண்டும் திரும்பிவிட்டது. 'History repeats itself'' என்பது எவ்வளவு பெரிய உண்மை!

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும், விடுதலைப்புலிகளின் ஆயுத இயக்கம் இனியும் தொடர வேண்டும் என்று ஓயாமல் குரல் கொடுப்பவர்களும் நடந்து முடிந்த நிகழ்வுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. மூன்று லட்சம் தமிழரை வதை முகாம்களில் வைத்திருக்கும் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக சர்வதேச சமுதாயத்தை எப்படித் திருப்புவது? உடைமைகள் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகிவிட்ட தமிழருக்குரிய வாழ்வாதாரங்களை எந்த வகையில் மீட்டளிப்பது? வேகவேகமாக அரங்கேறும் சிங்களர் குடியிருப்புகளை வடக்கிலும் கிழக்கிலும் வளரவிடாமல் தடுத்து நிறுத்த என்ன வழி? உலக நாடுகளின் ஆதரவும், இந்தியாவின் துணையுமின்றி தனிஈழக் கனவை நனவாக்க முடியுமா? நாடு கடந்து நடத்த நினைக்கும் அரசாங்கத்தை (Government in exile) எத்தனை நாடுகள் அங்கீகரித்து ஆதரவு தரும்? இது போன்ற வினாக்களுக்கு விடைகாண வேண்டும்.

நாடு கடந்து உருவாக்க நினைக்கும் தனிஈழ அரசு வீண் முயற்சி;வேண்டாத பண விரயம். சீனாவின் ஆக்கிரமிப்புக்குள்ளான திபெத்திலிருந்து வெளியேறிய பதினான் காவது தலாய்லாமா 1959-ல் இந்தியாவில் தஞ்சமடைந்து, நாடு கடந்த அரசை அமைத்து ஐம்பதாண்டுகளாகியும் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. லட்சக்கணக்கான திபெத்தியர்கள் வேட்டையாடப்பட்ட பின்பும் சீனாவுக்கு எதிராக எந்த உலகநாடும் சினந்து எழவில்லை. தனியாட்சி காண விரும்பிய தலாய்லாமா, 'திபெத் சீனாவின் ஓர் அங்கம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். எங்கள் பண்பாடு, ஆன்மிக வாழ்வு, சுற்றுப் புறச் சூழலுக்குப் பங்கம் இல்லாமல் மாநில சுயாட்சி கொடுத்தாலே போதும்' என்று கையேந்தி நிற்கிறார். சீனாவோ இன்று வரை கருணை காட்டவில்லை. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் 'போலீஸ் வேலை' பார்க்கும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராகச் சிந்திக்கவும் தயாராக இல்லை. வர்த்தகச் சமநிலையை (Balance of Trade) அமெரிக்கா இழக்காமல் இருப்பது இன்று சீனாவின் தயவில் என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும். இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு, அமெரிக்காவின் ஆதரவோடு தனிஈழம் காணும் வாய்ப் பில்லை. உலக நீரோட்டத்துக்கேற்ப நாம் நீச்சல் பழகவேண்டும்.

ஈழத் தமிழினம் இன்று செய்ய வேண்டியது ஒன்றுதான். 'நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. சிங்களரோடு சமமாகவே வாழ விரும்புகிறோம். பாரதம் இனியும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் மறைந்து நிற்கக் கூடாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்து உருவாக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றவேண்டிய தார்மிகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. முதலில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து எங்கள் வரலாற்றுத் தமிழ் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

சிங்களக் குடியிருப்புகளை உடனே அகற்றி, இடம் பெயர்ந்த தமிழர்களைக் குடியேற்ற வேண்டும். தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவம் விரைவாக வெளியேற வேண்டும். இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகளனைத்தும், ஈழத் தமிழ் நிலத்துக்குத் தரப்பட வேண்டும். சிங்களத்துக்குச் சமமாக எங்கள் தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும். வாழ்விழந்த தமிழ்க்குடும்பங்கள் மறுவாழ்வு பெற எல்லா உதவிகளையும் இந்தியா முன்னெடுத்துச் செய்ய வேண்டும்' என்று அமைதியான வழியில் மன்மோகன் சிங்கிடம் முறையிட வேண்டும். உலகம் முழுவதும் அறவழியில் புலம்பெயர்ந்த தமிழர் இடையறாது குரல் கொடுக்க வேண்டும்.

தனிஈழம் என்றால் தயங்குகின்ற தமிழக முதல்வர் கலைஞர், இலங்கையில் கூட்டாட்சி வேண்டி நின்றால், அவருடைய பதவி நாற்காலிக்குப் பங்கம் வராது. தன்னுடைய கூட்டணியில் வெற்றி பெற்ற 28 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஈழத் தமிழரின் பிரதிநிதிகளுடன் சோனியாவையும், பிரதமரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஈழத் தமிழர் நலனில் உண்மையான ஈடுபாடு இருந்தால், எதிரணியிலுள்ள 12 எம்.பி-க்களும் தாமாகவே முன்வந்து, கலைஞர் உருவாக்கும் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தத் தமிழகமும் இந்த முயற்சியில் இறங்க வேண்டும். வி.பி.சிங் அன்று சொன்னதுபோல், தமிழகம் பொங்கட்டும். கலைஞரே அதற்குத் தலைமை ஏற்கட்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரட்டும். இலங்கை அரசை நெறிப்படுத்த இந்தியா முனையட்டும். சிங்கள அரசு திருந்தாவிடில், இந்தியா தன் தீர்ப்பைத் தமிழீழத்துக்கு ஆதரவாக மாற்றி எழுதட்டும்.

எந்த உரிமையும் தமிழருக்குத் தரவிரும்பாத சிங்கள அரசின் பேரினவாதப் போக்கை உலகம் உணரும் நடவடிக்கைகளில் தீவிரமாக நம் தேசம் இன்றே இறங்கட்டும். இவையெல்லாம் இனிதே நடக்க, தமிழகம் காந்தியக் கருவியைக் கைகளில் ஏந்தட்டும்.

'எங்கோ இழைக்கப்படும் அநீதி உலகின் எல்லாப் பகுதிகளிலும் இழைக்கப்படுவதாக உணரவேண்டும்' என்ற மார்ட்டின் லூதர்கிங், 'நண்பர்களே! நம்முடைய தேர்வு வன்முறையா, அகிம்சையா என்பதன்று; அகிம்சையா, அழிவா என்பதுதான்' என்றார். அவர்தான் அடிமைப் போரில் வென்றார். இன்று கறுப்பு மனிதன் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஆட்சி செய்கிறார். காந்தியும், லூதர்கிங்கும் துப்பாக்கி வெடிக்கு இரையானார்கள். அகிம்சை தலைவர்களைத்தான் இழக்கும்; இனத்தை அல்ல!

http://www.appaa.com/index.php?option=com_...7&Itemid=54

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப் போரில் அறுபது லட்சம் யூதர்களை விஷவாயுக் குகைகளில் அழித்து, கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து ஹிட்லரை வெல்ல முடிந்த வின்ஸ்டன் சர்ச்சில், அரைநிர்வாணப் பக்கிரி காந்தியிடம் தோற்றுத் தலைகுனிந்ததுதான் வரலாறு.

2ம் உலகப்போரின் முடிவினால் தான் பிரித்தானியா இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. காந்தியின் அகிம்சைப் போராட்டத்தினால் அல்ல. அகிம்சைப் போராட்டத்தை எடுத்த திலிபன், அன்னைபூபதி போன்றவர்களை காந்திதேசம் கண்டு கொள்ளவில்லை. எவ்வளவு காலம் தான் இந்தியர்கள் காந்தியினால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறார்கள். அகிம்சைப் போராட்டத்தை மதிக்கத் தெரியாத நாடுகளில் இந்தியா தான் முதன்மையானது.

2ம் உலகப்போரின் முடிவினால் தான் பிரித்தானியா இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. காந்தியின் அகிம்சைப் போராட்டத்தினால் அல்ல. அகிம்சைப் போராட்டத்தை எடுத்த திலிபன், அன்னைபூபதி போன்றவர்களை காந்திதேசம் கண்டு கொள்ளவில்லை. எவ்வளவு காலம் தான் இந்தியர்கள் காந்தியினால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறார்கள். அகிம்சைப் போராட்டத்தை மதிக்கத் தெரியாத நாடுகளில் இந்தியா தான் முதன்மையானது.

"காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது" என்ற சொல்வதுபோலத்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. காந்தியும் அகிம்சையும்தான் காகம்!

  • கருத்துக்கள உறவுகள்

"காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது" என்ற சொல்வதுபோலத்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. காந்தியும் அகிம்சையும்தான் காகம்!

காந்தியினால் தான் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லிச் சொல்லி கதர்ச்சட்டைக்காரர்களான காங்கிரசுக் கட்சியினர் அரசியல் நடாத்துகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.