Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘நலமா தமிழினி” கட்டுரைக்கு எதிர்வினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு.. தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08௨009 அன்று படிக்க நேர்ந்தது. 1998-ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரணமாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன்.

அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங்கள் கேள்வியில் உள்ள அறியாமை உங்கள் மீது பரிதாபத்தைதான் ஏற்படுத்தியது. உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்புகொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும். தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஒவ்வொருவரும் போராளிகள்தாம்.

அதிலும் ஏதோ ஒரே நாளில்அல்லது ஒரே நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டுத் துப்பாக்கி ஏந்தியவர்கள் அல்ல. அப்படிஏந்தியிருந்தால் நீ அடித்தாயா.. நானும் பதிலுக்கு அடிக்கிறேன் என்ற நொடி நேர எதிர்வினையோடு அந்த வேகம் முடிந்திருக்கும். அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.

19 வயதில் முதுகுத் தண்டில் குண்டடி பட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்து போனார் கவுதமி என்ற ஒரு பெண் போராளி. 1993-ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அவர் இந்தியா கொண்டுவரப்பட்டார். அவருக்குத் துணை புரிய நிக்சி என்று மற்றொரு பெண் போராளி. சிகிச்சைக்காக வந்த அவர்களைப் ‘பயங்கரவாதிகள்” என கைது செய்தது இந்திய-தமிழக அரசு.

ஓராண்டல்ல..ஈராண்டல்ல.. 8 ஆண்டுகள் காவல்துறையின் பாதுகாப்பில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப்பட்டார் கவுதமி. அவருக்கு உதவி புரிய என்று வந்த நிக்சியை கைது செய்து தனியே சிறையில் அடைத்தது அரசு. அதற்கென ஒருவழக்குப் போட்டு வெளிக் கொணர்ந்து, அவரையும் உடல்நலம் குன்றிய கவுதமியுடனேயே தங்கஅனுமதி பெறப்பட்டது.

இந்த 8 ஆண்டுகளில், ஒரு நாள் கூட அவர்களின் முகங்களில் நீங்கள் சோர்வைக் கண்டிருக்க முடியாது. இருவருமே எப்போதும் புன்னகையுடன் இருப்பது மட்டுமன்றி, உடல் நலக்குறைவுள்ளவர் போன்று கவுதமி ஒருநாளும் தோற்றமளித்ததும் இல்லை. 19 வயதிலேயே இடுப்புக்குக் கீழ் செயலிழந்த நிலையில், 8 ஆண்டுகள் காவல்துறையின் கெடுபிடிகள், மன உளைச்சல்களுக்கு நடுவே புன்னகை பூத்த முகத்துடன் இருந்த கவுதமியின் மன உறுதி பெரியதா? அல்லது எந்த செயலுக்கும் பிறரை எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்ள ஒருவரை 8 ஆண்டுகளாக எந்த முகச் சுளிப்போ சலிப்போ இன்றி சுத்தமாகவும் நோய்வாய்ப்பட்டத் தன்மையே இன்றி தோற்றமளிக்கும் அளவிற்கு பராமரிக்கவும் செய்த நிக்சியின் மன உறுதி பெரியதா?

இவர்களுக்கு இத்தகைய மன உறுதி அளித்தது எது? சிங்களர் மீதான கோபமா? அல்லது தங்கள் மக்கள் மீதான பாசமா? நிச்சயமாக கோபமும் வெறுப்பும் தரும் மன உறுதி இந்த அளவிற்கு நீடிக்காது என்று எந்த உளவியல் நிபுணரும் உறுதிப்படுத்துவார்கள். இதோடு நிற்கவில்லை ரேவதி. சமாதான காலத்தில் அரசின் அனுமதியோடு இவர்கள் ஈழத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டார்கள். அங்கே கவுதமிக்குக் கணினித் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கப்பட்டு.. அத்துறைக்குப் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

உடல்நலன் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவரை நம் சமூகம் என்னவாக நடத்துகிறது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. ஆனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு துறையில் நிபுணராக்கி, தன்னம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறது அந்த’பயங்கரவாத” இயக்கம். இதற்குப் பெயர் அன்பில்லாவிட்டால் வேறு எதற்கு நீங்கள் அன்பென்று பெயர் சூட்டுவீர்கள்? சமாதான காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர், செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைக் கண்டு நெகிழ்ந்த நிலையில், அங்கிருந்த 8 மாதகுழந்தை ஒன்றை தான் தத்தெடுக்க விரும்புவதாகக் கூறினார்.

அதற்கு, செஞ்சோலை இல்லப் பொறுப்பாளரான போராளி கூறிய பதில் என்ன தெரியுமா? ‘உங்கள் குழந்தையை நீங்கள் தத்துக்கொடுப்பீர்களா?” என்று. இதற்கும் உங்கள் அகராதியில் அன்பு என்று பொருள் கிடையாதோ? இன்று இவ்வளவு பெரிய இழப்பைப் போராளிகளால் தடுக்க இயலாமல் போனது உண்மைதான். உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒரு பக்கம் கை கோர்த்து நிற்க, தங்கள் மக்களைக் காக்க இயலாமல் போராளிகள் தோற்றது உண்மைதான். ஆனால் அந்த ஒரு உண்மை கடந்த காலத்தின் பல உண்மைகளை மறைத்து விடாது. எத்தனையோ ஆண்டுகாலமாகத் தங்கள் மக்கள் மீது கொண்ட நேசத்தால் அவர்கள் செய்த தியாகங்கள் பொய்யாகிவிடாது.

அந்தத் தியாகத்தின் பலனாய் அந்த மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்வை அவர்கள் அளித்தது பொய்யாகி விடாது. அந்த காலத்தில்தான் உங்களைப் போன்றவர்கள்அம்மண்ணிற்குள் சென்று வர முடிந்தது. இன்று அதையே சாக்கிட்டு வதை முகாமில் நிற்கும் அவர்களை நோக்கி கணினி வழியாக (நிச்சயம் அவர்கள் வந்து பதில் சொல்ல இயலாது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு) கை நீட்டி கேள்வி கேட்க முடிகிறது.

போர் நிறுத்தத்திற்கு தயார் என புலிகள் பல முறை அறிவித்தும், போர் நிறுத்தத்தைத் தவிர வேறெதையும் கோராமல் தமிழ்நாடு உட்பட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்திய போதும் சிங்கள அரசோ அதற்கு உறுதுணையாய் நின்ற இந்திய அரசோ, உலக நாடுகளோ இவை எதற்கும் செவி மடுக்க மறுத்தன என்பதையும், சிங்கள அரசே தொடர்ந்து போரை நடத்தியது என்பதையும் முற்றிலுமாக மறைத்து, புலிகள், குறிப்பாக புலிகளின் தலைமை ஏதோ தன் இச்சைக்கேற்ப கட்டாயமாக போரைத் தொடர்ந்து நடத்தியதாககுற்றம் சாட்டுவது, உலகறிந்த உண்மையை கோணி போட்டு மூட முயல்வதைப் போன்றதே.

“உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்பது இல்லை”. ஆனால் போருக்கு முன்நடுநிலைமை என்பது உண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே அது. உங்களைப் போன்றவர்களுக்கு மக்களின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் போராளிகளுக்கு எதிராக நிற்பதில்தானே ஆர்வம் அதிகமிருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள்.

போராளிகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. அம்மண்ணிலிருந்து, அம்மக்களிலிருந்து வந்தவர்கள். அம்மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள். அம்மக்களைக் காக்க இயலாமல் போனதில்.. உங்களையும் எங்களையும்நம் அனைவரையும் விட வலியும் வேதனையும் அவர்களுக்கே அதிகம். பெற்ற குழந்தையைக்கண் முன் பறி கொடுத்துவிட்டு நிற்கும் தாயின் வேதனைக்கு நிகரானது அது.

பெற்ற குழந்தையை காக்க முடியாமல் போன வேதனையில் மருகி நிற்பவர்களை, உங்கள் சொற்களால்ஏறி மிதிக்காதீர்கள். இந்த நிலையில் இருப்பவர்களை நோக்கி நலமா என்ற கேள்வியிலேயே கெக்கலியிட்டு சிரிக்கும் உங்களின் ‘நிறைந்த அன்பு” புலப்படுகிறது. அதிலும் எப்படி? உங்கள் சொற்களிலேயே சொல்வதானால், கால் வெட்டி வீசப்பட்டு வதை முகாமில் சிறையுண்டு இருப்பவரை நோக்கி, ‘என்னாச்சு பார்த்தியா.. ? நீ யாரையெல்லாம் நம்பினாயோ அவர்களின் யோக்கியதை இதுதான் கண்டியா?” என்று கேட்கும் தொனி வக்கிரமாக இல்லை?

“பிரபாகரன் உயிர்த்தெழுவார்” என்ற அவரது ‘பக்தர்களின்” நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் இறந்து விட்டார் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் நீங்கள் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்? ஏற்கெனவே மூன்று முறை அவரைக் கொன்று விட்டு, பின்னர் சிறிதும் வெட்கமின்றி, முன்னர் சொன்ன செய்திக்கு ஒருவருத்தம் கூட தெரிவிக்காமல், அவரின் பேட்டியையும் வெளியிட்டு காசாக்கி, இப்போது மீண்டும் கொன்றிருக்கும் ஊடகங்களில் வெளிவந்த படங்களை வைத்தா? உயிருடன் இருக்கிறார் என்பதை கேலிக்குள்ளாக்கும் உங்களுக்கு, சிங்கள அரசு வெளியிட்டப் படங்களை பகுத்தறிவின்பாற்பட்டு கேள்விக்குள்ளாக்கும் நேர்மை இல்லாது போனதேன்?

நாளை பிரபாகரன் வெளிப்படையாக வரும்போதும் கூட, நிச்சயம் இப்போது செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. மாறாக.. இத்தனை நாள் அவர் எங்கிருந்தார்? ஏன் தலைமறைவானார்? என்று பல வகையான ஆரூடங்களுடன் அதை வைத்தும் இப்படியான எழுத்து வணிகத்தைத்தான் நடத்துவீர்கள். மீண்டும் மீண்டும் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள்? ‘அரசியல் நீக்கிய ஆயுதப் போராட்டம்” என்ற ஒன்று இருக்கவே முடியாது என்பதை அறியாதவரா நீங்கள்? அரசியல் நீக்கினால் அதுவெறும் ‘ரவுடியிசம்” தானே ஒழிய ஆயுதப் போராட்டம் அல்ல.

எந்தவொரு போராட்டமும் ஓர் அரசியலின் பாற்பட்டே எழுகிறது என்ற அடிப்படையைக் கூட அறியாதவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் ‘அரசியல்” என்பது என்ன? ‘புலிகளை ஒழித்துக் கட்டிவிட்ட”.. ‘புலிகளுக்குப் பின்னான” இந்த 100 நாட்களில் என்ன மாதிரியான அரசியல் முன் முயற்சிகளைச் சிங்கள அரசு எடுத்திருக்கிறது? வெறுமனே ஒரு குழுவினரின் ஆயுதப் போராட்டம்தான் சிக்கல் எனில்.. அவர்களும் மக்களும் வேறு எனில்.. அந்த குழுவையும், அதன் தலைவரையும் அழித்து விட்டோம் என்றுஅறிவித்த பிறகு மக்களை அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? உங்களுக்குப் புரியாதது.. அல்லது நீங்கள் புரியாதது போல் நடிப்பதைச் சிங்கள அரசு புரிந்து வைத்திருக்கிறது.

அதனால்தான் குழந்தைகள் உட்பட, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதுபோராளிகளாகப் பார்க்கிறது. ஓர் அரசியலின் அடிப்படையில் கிளர்ந்தெழுந்த போராட்டமே அது என்பதை சிங்கள அரசு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்களின் போராட்ட உணர்வுகளை முற்றிலுமாக நசுக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிறது. ‘புலிகளின் அரசியல் தோற்றிருக்கிறது. அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை” என்றுநீங்கள் குறிப்பிடும் அந்த சூழ்ச்சி அரசியல் அவர்களுக்கு தெரியத்தான் இல்லை.

இந்தியாவையும் சிங்களத்தையும் போன்ற ஒரு சூழ்ச்சி அரசியலை முன்னெடுக்காமல் ஒருநேர்மையான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்ததன் விளைவுதான் இன்று நாம் காண்பது. ஆக, நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நேர்மையற்ற சூழ்ச்சி அரசியலை புலிகள் செய்திருக்கவேண்டும் என்பதைத்தானா? சிங்கள அரசு சொல்வது போல் போர் முடிந்துவிடவில்லை. ஒரு தலைப் பட்சமான போர் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது என்பதற்கு இலங்கை அரசின் ‘நலன்புரி” முகாம்களில் தினமும் செத்து விழுந்து கொண்டிருக்கும் மக்களே சாட்சி.

சொந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக ஓர் இனமே சிறைபடுத்தப்பட்டிருப்பது வரலாறு கண்டறியா கொடுமை. ‘இது ஓர் இனப்படுகொலைஅல்ல. இரு தரப்பினருக்கிடையே நடந்த போர்” என்று கூசாமல் சொல்பவர்கள், இந்த முகாம்களில் ஏன் ஒரு சிங்களர் கூட இல்லை என்பதற்கு பதில் சொல்ல முற்படுவதில்லை. இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக முகாம் என்ற பெயரில் சிறையிலடைத்துவிட்டு மற்றொரு இனம் அதிகாரத்தில் இருந்து கொண்டு நிருவாகத்தை நடத்துகிறது எனில் அதற்கு பெயரென்ன? அப்படியான நிருவாகத்தில் இந்தமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துவிட முடியும்?

‘புலிகளால்தான் இந்த நிலை” என்றுகூக்குரல் இடுபவர்கள், புலிகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த இனக் கலவரங்களுக்கும் அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் யாரை பொறுப்பாக்குவார்கள்? எதற்கு எதிர்வினை எது என்ற வரலாற்றையே மாற்றிச் சொல்கிற உரிமையை இவர்களுக்கு யார் தந்தது? புலிகள் தங்கள் மக்களை பாதுகாக்க தங்கள் மண்ணைக் காக்கும் போரை மட்டுமே நடத்தினார்களே ஒழிய, மிகுந்த பலம் பொருந்திய காலக்கட்டத்தில் கூட எல்லை மீறிச் சென்று சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ சிங்களர் வாழும் மண்ணை ஆக்கிரமிக்கவோ முற்பட்டதே கிடையாது என்பதே வரலாற்று உண்மை.

அப்படி தமிழ் மக்களை காத்து வந்த புலிகளும் இல்லாத நிலையில் சிங்கள அதிகாரத்தின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு யார் உறுதி அளிப்பது? இன்று (26௮௨009) வெளியான ஒளிப்படங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்களை நிருவாணப்படுத்திச் சுட்டுக் கொல்லும் காட்சிகளைக் கண்டது போல் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு இன்றைய கொடூரங்கள் வெளிவரக்கூடும். அனைத்தையும் இழந்து அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இம்மக்கள் மீது ஏவப்படும் உளவியல், உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை ‘ஒரு தலைப்பட்சமான போர்” என்று சொல்லாமல் வேறுஎப்படிச் சொல்வது?

நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு தலைப்பட்சமான போரை குறித்த கேள்விகளை விட்டுவிட்டு, நடந்து முடிந்தவற்றிற்கு போராளிகளை பொறுப்பாக்குவதில் நீங்கள் தீவிரம் காட்டுவதேன்? உலகுக்கெல்லாம் மனித நேயம் பேசிக் கொண்டு, காசுக்காவோ கலை தாகத்திற்காகவோ என் கௌண்டர் ஸ்பெஷலிஸ்டுகளுடன் சேர்ந்து படம் பண்ணும் உங்கள் அளவிற்கு அன்புள்ளவர்களாக அவர்கள் இல்லாமல் போகலாம்.

உலகிலேயே சுபிட்சமான இடம் மாணிக்பார்ம்தான் என்று கூசாமல் எழுதும் ‘இந்து” இதழைப் போன்ற நேர்த்தியானவர்கள் இவ்வுலகில் இல்லை என்று கருதும் நடுநிலைமை எனக்கில்லாமல் போகலாம். அல்லது நடுநிலைமையாளராகவும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் காட்டிக் கொள்வதற்காக இந்தியாவையும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளையும் சாடும் நாடகத்தை ஒரு புறம் நடத்திக்கொண்டே, நுட்பமான சொற்களால் நஞ்சை நுழைக்கும் திறன் எனக்கு இல்லாமல் போகலாம்.

(’இந்திய அமைதிப்படையின் கொடுமைகளால் போராளியானதாகச் சொன்னீர்கள் தமிழினி, நான் உங்களைச் சந்தித்த அதே கிளிநொச்சி நகரைப் புதுப்பிக்க இப்போது இந்தியா உதவி செய்யவிருக்கிற தகவல் உங்களுக்குத் தெரியுமா?” – இந்த வரிகளில் உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு தன்னையும் அறியாது வெளிப்பட்டுள்ளதே.)

ஆனாலும், உங்களிடம் கேட்பதற்கு எனக்கு ஒன்று உள்ளது. உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையிலும், சுயமரியாதையான ஒரு வாழ்விற்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் அந்த எளிய மக்களிடம் உங்கள் திறனைக் காட்டிநோகடிக்காதீர்கள். அவர்கள் விடுதலைக்கு ஏதேனும் செய்ய இயலுமாயின் செய்யுங்கள். இயலாதெனில் இடையூறாவது செய்யாதிருங்கள்.

நியாயமான உரிமைகளுக்கான அவர்களின் போராட்டம் அவை கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. அடக்குமுறைகளாலேயே ஒருவிடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்கிற போது அவதூறுகள் என்ன செய்துவிடும்?

- தோழமையுடன் பூங்குழலி

நன்றி மீனகம் வலைப்பூ

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமாவதி காலச்சுவட்டில் எழுதியது.

கட்டுரை

நலமா தமிழினி

ப்ரேமா ரேவதி

அன்புள்ள தமிழினி,

உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக விளிப்பதையேகூடப் பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். புராணக் கதாபாத்திரங்களைப் போன்று பிரபாகரன் ‘உயிர்த்தெழுவார்’ என அவரது ‘பக்தர்’கள் ஓயாத பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். மே 18க்குப் பிறகு புதுப்பலம் பெற்றுள்ள அவரது எதிர்ப்பாளர்களோ ‘ஒழிந்தான் பயங்கரவாதி’ எனக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், அவரது தங்கையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் (அரசியல்) பிரிவின் தலைவியுமான உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்திலிருந்து இந்த மடல்.

ஒரு வாரக் காத்திருப்புக்குப் பின் உங்களை, இன்று தரைமட்டமாகிவிட்ட கிளிநொச்சியில் இருந்த பெண்கள் பிரிவின் அலுவலகத்தில் சந்தித்த நாளை நினைத்துக்கொள்கிறேன். தீர்க்கமான விழிகள், ஒப்பனைகளின் சுவடறியாத கருமையான முகம், அழுத்தி வாரிப் பின்னப்பட்ட சிகை, ஆண்களுடையதைப் போன்ற சட்டை, நகைச்சுவை கலந்த உரையாடல், புதிய விஷயங்களை, குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள பெண்கள், பெண்ணிய அரசியல் பற்றிய உங்களது ஆர்வம் எல்லாம் என் நினைவில் தோன்றுகின்றன.

அப்போது அங்கே ஓரளவு அமைதி நிலவிக்கொண்டிருந்த காலம். ஓயாது நடைபெற்றுக்கொண்டிருந்த கொடிய போரினிடையே நீங்கள் சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தீர்

ஈழத் தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த, அவர்களை அடியோடு நாசமாக்கிய கொலைகாரன் ராஜபக்சேவின் கூட்டாளியாக நின்று அக்கொலைவெறிக்குத் துணைபோன ஒரு நாட்டின் குடிமகள் நான் என்பது எனக்கு மிகுந்த அவமானத்தையும் வேதனையையும் தருகிறது. ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து ஆதாய அரசியல் நடத்திப் பிழைத்துவருபவர்கள் உலவிடும் தமிழ்நாட்டில் இருப்பதும் கேவலமாய்த்தான் உள்ளது தமிழினி.

உங்களையும் உங்களைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களையும் முடிவற்ற துயரப் பாதைக்கு இட்டுச்சென்று, அவமானகரமான அடிமைகளாக வாழும்படி கைவிட்டுச் சென்றுவிட்ட உங்கள் தலைவரின்மீது கடும் கோபமும் வெறுப்பும் வருகிறது. ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும். நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறுதான் தீர்ப்பெழுதும் அல்லவா தமிழினி?

உதுக்குத்தான் எங்கன்ட முன்னோடிகள் எதுக்கு எடுத்தாலும் எல்லாம் அவன் செயல் என்று காலத்தை ஜாலியா கழித்தனரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.