Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளைத் தேடி கதறும் மக்களின் கண்ணீர் கதைகள்

Featured Replies

புலம்பெயர் நாடுகளில் தம் குடும்பத்துடன் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு வன்னி / ஈழ மக்களை மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டும் என எதிர்பார்க்கும் மனிதர்களுக்கு இந்த துயர் செறிந்த கதைகள் சமர்ப்பணம். இவற்றை வாசித்த பின்னும், இந்த மக்கள் அரச பாதுகாப்பை விரும்பித்தான் சென்றனர் எனச் சொல்லவும் எம்மிடம் ஆட்கள் இருப்பினம்

குளோபல் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு என் நன்றிகள்

மூல இணைப்பு

தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரியின் சகோதர வாரப் பத்திரிகையான மித்திரன் வாரமலர் நடுப்பக்க சினிமா மற்றும் கிசுகிசுக்கள், துப்பறியும் தொடர்கதைகள், மூன்றாந்தரப் பாலியல் தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள் எனப் பல்சுவை அம்சங்களுடன் தென்னிந்தியச் சினிமா நட்சத்திரங்களின் படங்களை முகப்பில் தாங்கி கடந்த 50 ஆண்டுளுக்கு மேலாக வெளிவரும் பத்திரிகையாக இருப்பினும் கடந்த சில வாரங்களாக உறவைத் தேடி எனும் பகுதி மூலமாக இலங்கையிலிருந்து வெளியாகும் எந்தவொரு தமிழ்ப் பத்திரிகையும் செய்யத் தயங்கும் ஒரு மனிதாபிமானச் செயல்பாட்டை முன்னெடுத்துள்ளது. வன்னிப் பெருநிலப் பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமோர் ஆவணப் பதிவாக அம்மக்களால் எழுதப்படும் கடிதங்களை உறவைத் தேடி எனும் பகுதி மூலம் தொடர்ந்து பிரசுரித்துவருகின்றது. உண்மையில் இச்செயல்பாடு பாராட்டுக்குரியதாகும். அப்பகுதியில் இடம்பெற்ற சில கடிதங்களை இங்கே தந்துள்ளேன். (உறவைத் தேடி பகுதியின் சில ஒளிநகல்களை இத்துடன் இணைத்துள்ளேன்).

*********************************************

உறவைத் தேடி

உற்றார், உறவினர், நண்பர்கள் என உறவுகளைப் பிரிந்திருக்கும் உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் களம் இது உங்கள் மனக் கொந்தளிப்பின் வடிகாலாகவும் உறவுகள் ஒன்றுசேரக் கைகொடுக்கும் களமாகவும் உறவைத் தேடி அமையும்.

உறவைத் தேடி மித்திரன் வாரமலர், தபால் பெட்டி இல: 160, கொழும்பு,

ஜூன் 28, 2009 அன்று வெளியிடப்பட்ட கடிதம்

என் உயிர் எங்கே? அவள் வேண்டும்

சின்ன வயதிலிருந்த தெரியும் என் ம. ரயிதாவை அவளைக் காணாது மனம் துடிக்கின்றது. எப்போது அவளைக் காண்பேனென்று பதைபதைக்கிறேன். அவள் அம்மாவும் தம்பியும் காயப்பட்டுக் கப்பலில் வந்து முகாமில் இருக்கின்றார்கள். ஆனால் அவளையும் அப்பாவையும் அவரின் அம்மா தேடுகிறார்கள். அவளை என் விழிகள் ஒவ்வொரு முகமாய்த் தேடுகிறது. அவள் இன்னும் என் கண்ணில் படவில்லை. மகேஸ்வரன், ரயிதாவைக் கண்டவர்கள் அறியத்தரவும். மித்திரனைப் பார்ப்பவர்கள் அவளைத் தெரிந்தால் சொல்லவும், கடிதம் போடவும். என் ரயிதாவிடம் பேசணும்போல இருக்கு கடைசியாக அவளைச் சுகத்திரபுரத்தில் கண்டேன். இந்த இடப் பெயர்வு காரணமாக என் அன்பு தேவதையைக் காண முடியவில்லை. என் உயிருக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. எப்படியெப்படி எல்லாமோ கனவுகண்டுகொண்டு இருந்தோம். இப்படி ஆகிவிட்டது. அவளை என் மனம் தேடுகின்றது. பள்ளி வாழ்க்கையை மறக்க முடியுமா? நானும் அவளும் பழகிய நாட்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளின் பேச்சைக் கேட்கணும் போல இருக்கு. அவள் எங்கு இருந்தாலும் மித்திரன் வாரமலருக்குக் கடிதம் போடவும். என் நண்பியை மறக்க முடியவில்லை. நான் நலம் நீ நலமா? வரவை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றேன். என் உயிரே அவளின் தொடர்புக்காகக் காத்திருக்கிறது.

எனது பிரண்ட் ஆருந்திரனையும் என் விழி தேடுகின்றது.

டா. அஜந்தன்

அருணாச்சலம் 111 முகாம்

மெனிக் முகாம், வவுனியா.

ஜூலை 26, 2009 அன்று வெளியிடப்பட்ட கடிதங்கள்

மெல்லிய உடல், பிட்டி நெற்றி, ஒற்றைச் சுழி கொண்ட ஒன்றரை வயது மகனைக் கண்டீர்களா?

20.04.2009 அன்று புதுமாத்தளன் வைத்திய சாலையின் அருகில் செல்லில் படுகாயம் அடைந்த ஞா. செல்வமணி ஆகிய நான், படுகாயத்தின் வேதனையில் இருந்த வேளை, வீதியால் வந்துகொண்டிருந்த பொதுமக்கள் என்னையும் எனது ஒன்றரை வயது மகன் ஞா. தஜீவனையும் காப்பாற்றி, காயத்திற்குத் துணியினால் கட்டுப்போட்டு, வீல்செயாரில் ஏற்றிக்கொண்டுபோய், புதுமாத்தளன் கடற்பரப்பில் விட்டுவிட்டு, துவாயினால் சுற்றிவைத்திருந்த மகன் ஞா. தஜீவனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு சென்று விட்டனர்.

என் பிள்ளையைக் காப்பாற்றியவர் பெயர், விவரம் எனக்குத் தெரியாது. நான் மரணத்தின் வாசலில் இருந்தமையால் என் பிள்ளையைக் கொண்டு சென்றிருந்தனர். என்னால் என் பிள்ளையைப் பிரிந்து வாழ முடியவில்லை. எழுந்து நடக்க முடியாத நிலையிலும் என் பிள்ளை எங்கேயாவது கண்ணுக்கு எத்துப்படுகிறானா என எதிர்பார்த்து, ஏலாக்காலுடன் நடந்து அலைகிறேன். என் ஒன்றரை வயது மகன் ஞா. தஜீவனைக் காப்பாற்றி, பராமரிப்பவர்கள் தாயாரிடம் ஒப்படைக்குமாறு மனவேதனை மேல் வேதனையாகக் கேட்கிறேன்.

கை மாறிய என் பிள்ளையின் விபரம்:

மெல்லிய உடல், சிறியவாய், சிறிய கண், காது, மூக்கு, சிறுமுகம்; பிட்டி நெற்றி, ஒற்றைச் சுழி; இவரது வலது அல்லது இடது முழங்காலின் கீழ்ப் பழைய சிறுகாய அடையாளம் சாதுவாக உள்ளது.

எனது பிள்ளை கடைசியாக என்னிடம் இருந்து, துவாயினால் சுற்றியபடி கை மாறியது. எனக்கு, என் அருமை மைந்தனை நினைத்து இரவு, பகல், நித்திரை, சாப்பாடு இன்றி, நிம்மதி இல்லாத வாழ்வு தனிமையில் வாழ்கிறேன். என் பிள்ளையைப் பெற்று தராவிட்டால், நான் தனியாக வாழ்ந்து என்ன பயன்? எனக்கு ஒரு மூலையில் அடித்து, தற்கொலை செய்யத் தோன்றும்.

நான் ஐந்து பேருடன் இருந்து, தற்போது நாட்டின் தனி மரம்போல் ஆகிவிட்டேன். என் பிள்ளையைப் பராமரிக்கும் அந்தப் பொதுசனத்தின் உதவியால் என் பிள்ளையைப் படைத்தவன்தான் மீண்டும் தாய், பிள்ளையுடன் சேர்த்துவைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன். என் பிள்ளையை எங்கேயாவது கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஞா. செல்வமணி ஆகிய என்னுடைய தாயார் நா. சிவக்கொழுந்து செல் விழுந்து காயம் இல்லை. ஆனால் மயக்கத்தில் இருந்து வைத்தியசாலை கொண்டுவந்ததாக அறிந்தேன். எந்த வைத்தியசாலையில் என்றும் தெரியாது. விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும்.

ஞா. செல்வமணி

எஸ். 3ஃ10 நலன்புரி நிலையம்

ஆனந்த குமாரசாமி முகாம், வவுனியா

தங்கையைத் தேடி . . .

எனது சொந்த இடம் இத்தாவில், பளை. தற்காலிக இடம் புளியம் பொக்கணை சந்தி, பெரியகுளம். எனது தங்கை இராஜன் டயனேஸ்வரி. இவர்16.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் காயப்பட்டு, வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தால் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டார். பின்பு எங்கு நிற்கின்றார் என எதுவும் தெரியவில்லை. இவரைக் கண்டவர்கள் அல்லது எங்களைத் தெரிந்தவர்கள் இந்த விலாசம் ஊடாகத் தொடர்புகொள்ளவும்.

இராஜன் ராஜ்குமார்

ஆனந்த குமாரசாமி முகாம்

வீட்டிலக்கம் 77ஃ5, வலயம்09, செட்டிகுளம்.

மகன் சாரங்கன் இறந்தது கணவனுக்கு தெரியாது

என் கணவரின் பெயர் சிவன் விமலரூபன். வயது 24, சொந்த முகவரி மாமூலை, முள்ளியவளை. இவரை முள்ளிவாய்க்காலில் தவறவிட்டுவிட்டோம். இன்று வரைக்கும் ஒரு தகவலும் அறியவில்லை. சிலர் இவரைக் காயமடைந்த நிலையில் கண்டதாகவும் சொன்னார்கள். நான் எல்லா இடங்களிலும் விசாரித்தும் அறிவித்தும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அத்தோடு எங்களது ஒன்றரை வயதுக் குழந்தை வி. சாரங்கனும் மாத்தளன் வைத்தியசாலையில் நோய் காரணமாக இறந்துவிட்டார். பிள்ளை இறந்ததுகூட என் கணவருக்குத் தெரியாது. இதனால் நான் மிகவும் துன்பப்படுகிறேன். எனது நிலையை உணர்ந்து, என் கணவரின் தகவல் தெரிந்தவர்கள் எனது விலாசத்திற்கு அறியத் தருவார்களென நம்புகிறேன்.

விமலரூபன் யூக்கிருஷா

வீட்டு இலக்கம். 936

வலயம் 11, இராமநாதன் நலன்புரி நிலையம்

செட்டிகுளம்.

மகள் தர்சினி முகாமிலா? வைத்தியசாலையிலா?

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவந்தோம். போர் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து, கடைசியாக முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் இருந்தோம். பின்னர் அங்கு இருக்க முடியாத அளவிற்குக் குண்டுகளும் ரவைகளும் அகோரமாக வந்தமையால் 17.05.2009 அன்று அனைவரும் வவுனியாவுக்கு செல்வதற்காக வட்டுவாகலூடாக, இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, எனது மூத்த மகளான திருமதி சிவதர்சினி பரமேஸ்வரனும் அவளுடைய ஒன்றரை வயதுப் பெண் குழந்தையான பரமேஸ்வரன் நிசாந்தி ஆகிய இருவரையும் 17.05.2009 அன்றே பி.ப 2 மணியளவில் சனநெரிசல் காரணமாக மாறவிட்டு விட்டோம்.

அவ்விடத்தில் தேடிப் பார்த்தோம்; காணவில்லை. எப்படியும் வவுனியாவுக்குத்தானே வருவாள் என்ற எண்ணத்தில், நாங்களும் வவுனியாவுக்கு வந்து சேர்ந்தோம். எனது மகளும் பேத்தியும் எந்த முகாமில் உள்ளார்களென்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம். தற்சமயம் பேத்தி மட்டும் எமக்கருகில் உள்ள முகாமில் யாரோ ஒரு குடும்பத்தோடு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. குழந்தையை எங்களுடையதுதான் என்று உறுதிப்படுத்துவதற்காக நேரில் சென்று பார்த்தோம். அது எங்ளுடைய குழந்தைதான். அக்குடும்பம் வட்டுவாகலூடாக வரும்போது குழந்தை மட்டும் அழுதுகொண்டிருந்ததாகவும் தாங்கள் தூக்கிக்கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். குழந்தை தற்போது எங்களுடன் இருக்கின்றது. எனது பேத்தி தாயிடம் இருந்து எப்படி பிரிந்தது என்று தெரியாமலுள்ளது. எனது மகளுக்கு என்ன நடந்தது? அல்லது வரும்போது ஏதாவது வருத்தம் காரணமாக எங்கேயனும் வைத்தியசாலையில் இருக்கின்றாளோ? இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.

எனது மகளுடைய கணவன் இங்கில்லை. அவர் இந்தியாவில்தான் இருக்கிறார். எனது மகளும் இந்தியாவில்தான் வசித்து வந்தாள். நாங்கள் கிளிநொச்சியில் இருக்கும்போது எங்களை பார்ப்பதற்காக 02.01.2008ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்தாள். போர்ச் சூழல் காரணமாக இவளால் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாமல் எங்களுடனேயே இருந்து போரினால் சொல்ல முடியாத துயரங்களையெல்லாம் அனுபவித்து வந்தாள்.

இப்பவும் எங்களையும் குழந்தையையும் பிரிந்து எங்கிருந்து தவித்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை. அவள் எங்கிருந்தாலும் எங்களுடன் வந்துசேர்வாள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனது மகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது கண்டவர்கள் எமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிவபாதம் பார்வதி

இல.எஸ். 4ஃ21

ஆனந்த குமாரசுவாமி நலன்புரி நிலையம்

செட்டிகுளம்

Edited by நிழலி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா?. நெஞ்சை உலுக்கும் சோகக்கதைகள். .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.