Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்ந்த ஈழம் எழும்! காலம் அதைச் சொல்லும்

Featured Replies

தேசிய வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த மேதைகளுக்கும் அறிஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படும் வழக்கம் - இந்தியா குடியரசாக மலர்ந்த பிறகு 1954-ல் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கியத் தளபதிகள் குறித்தும் பல்வேறுபட்ட செய்திகள் மாறி மாறி வெளியிடப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களைச் சோர்வடைய வைத்தது.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் தங்கள் இன்னுயிரை ஈந்தும், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தும், அனுபவித்த துயரங்களும், துன்பங்களும், தியாகங்களும் ஈடு இணையற்றவை. ஆனால் இந்தத் தியாகங்கள் வீணாகிவிடுமோ, தமிழீழத் தாயகக் கனவு சிதைத்துவிடுமோ என்ற கவலை தமிழர்களின் உள்ளங்களைக் குடைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள வதை முகாம்களில் சிக்கிச் சீரழியும் தமிழர்களின் நிலை குறித்து உலகத் தமிழர்கள் சொல்லமுடியாத வேதனை அடைந்திருக்கிறார்கள். மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய-சிங்கள அரசுகளின் உளவுத் துறைகள் தமிழர்களின் உளவியலைச் சிதைக்கும் வகையில் பொய்யான செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதில் ஈடுபட்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை கொல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்தச் செய்திகளை யெல்லாம் பொய்யாக்கி மீண்டும் மீண்டும் அவர் உயிர்த்தெழுந்து நெடிதுயர்ந்து நிற்பதோடு சகப் போராளிகளையும் மக்களையும் பேரெழுச்சி பெறவைக்கிறார். 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது 17ஆம் வயதில் ஒரே ஒரு கைத் துப்பாக்கியுடனும் விரல்விட்டு எண்ணக் கூடிய சக தோழர்களுடனும் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள், டோரா படகுகள், போர் விமானங்கள் போன்ற நவீன ஆயுதங்களுடன் சிங்கள இராணுவம் வலிமை மிக்கதாக இருந்தது.

ஆனாலும் பிரபாகரன் கொரில்லா நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டுப்கோப்பு நிறைந்த இயக்கமாக விடுதலைப்புலிகளை உருவாக்கி சிங்கள இராணுவத்துடன் இடைவிடாது மோதி அவர்களை அச்சமடைய வைத்து முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க வைத்தார். திடீர் திடீர் கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் சிங்கள வீரர்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில் அரசியல் ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி விடுதலைப் போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றினார். புலிகளின் தியாகமும் வீரமும் நிறைந்த நடவடிக்கைளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்கள். அதன் விளைவாக அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவவும் தோள் கொடுத்து துணை நிற்கவும் முன்வந்தார்கள். 1970 களில் விடுதலைப் புலிகளை அடக்குவதற்காக அதிபர் ஜெயவர்த்தனா தனது மருமகனான பிரிகேடியர் வீரதுங்காவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்து 6 மாத காலத்தில் பயங்கர வாதிகளை அடக்கிவரும்படி ஆணையிட்டார்.

அவருக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வட மாநிலம் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டது. மிகக் கொடூரமான முறையில் இராணுவம் மக்களை, குறிப்பாக இளைஞர்களை வேட்டையாடியது. ஆனாலும் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தனவே தவிர குறையவில்லை. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பெருமளவில் ஒரு படையெடுப்பை நடத்தி சிங்கள இராணுவம் வடமராச்சி பகுதியை ஆக்கிரமித்தது. இராணுவ பலம் வாய்ந்த எதிரியை முறியடிக்க மில்லர் என்ற கரும்புலியை பிரபாகரன் உருவாக்கி நெல்லியடி இராணுவ முகாமை அடியோடு தகர்த்தார். நூற்றுக்கணக்கான வீரர்கள் மாண்டு மடிந்த நிகழ்ச்சியைக் கண்டு சிங்கள அரசு திகைத்தது. கரும்புலிகளாக இளைஞர்கள் மாறி மரண பயம் இல்லாமல் எதிரியைத் தாக்கி நடுநடுங்க வைத்தார்கள்.

புலிகளை ஒழித்துவிட முடியவில்லைபுலிகள் வலிமை பெற்று வருவதை உணர்ந்த சிங்கள அரசு இந்தியாவுடன் சேர்ந்து உடன்பாடு என்ற பெயரால் சதித்திட்டம் வகுத்து இந்தியப் படைகளைக் கொண்டுவந்து இறக்கியது. அமைதிப்படை என்ற பெயரால் வந்த படை விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அடியோடு ஒடுக்குவதில் முனைந்து ஈடு பட்டது. தமிழீழப் பகுதி முழுவதிலும் முக்கிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் 600க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்களை இந்தியப் படை அமைத்தது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மிக நவீன ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர். புலிகளின் நிலைகள் மீது அலை அலையாகப் படையெடுப்பு கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய இராணுவத்தின் சிறப்பு இராணுவப் பிரிவுகளையும், மலைக் காடுகளில் போராடும் பயிற்சி பெற்ற அதிரடிப் படை அணிகளையும் புலிகளுக்கு எதிராக ஏவிவிட்டது.

இந்திய-இலங்கை உடன் பாட்டினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த திலீபனின் போராட்டம் இந்தியாவைப் பற்றிய ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை சிதறடித்தது. தொடர்ந்து புலேந்திரன், குமரப்பா உட்பட 12 முக்கிய புலிகள் இந்தியாவின் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட நிகழ்ச்சியும் இந்தியா பற்றிய மாய வலையை முற்றிலுமாக அறுத்தெறிந்தன. இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்தை மிஞ்சிய அளவில் தமிழர்களைப் படுகொலை செய்தது. யாழ்ப்பாணப் போரில் மட்டும் 2000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட னர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வன் முறைக்கு ஆளாயினர். யாழ் மருத்துவ மனையில் நடத்தப்பட்ட படுகொலை காலத்தால் அழியாத அவமானக் கறையை இந்தியாவின் மீது படிய வைத்தது.

இந்திய இராணுவ வரலாற்றில் அது சந்தித்த போர் நெருக்கடிகளில் புலிகளுடன் நடத்திய போரே நீண்ட காலப் போராக நீடித்தது. இரண்டாண்டு வரை நீடித்த இந்தப் போரில் இந்திய இராணுவம் தனது நோக்கங்கள் எதையுமே பூர்த்தி செய்ய முடியவில்லை. புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்பது, புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது. புலிகளிடமிருந்து மக்களை அன்னியப்படுத்துவது ஆகிய அதனுடைய நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. மாறாக கொரில்லாப் படை என்ற நிலையிலிருந்து புலிகள் மரபு வழிப் படையாக பிற்காலத்தில் உருவாவதற்கு இந்தப் போர் உதவியது. ஆயுதங்கள் இல்லாமல் தத்தளித்த புலிகள் இந்திய இராணுவ ஆயுதங்களைப் பலவகையிலும் ஏராளமாகக் கவர்ந்தார்கள். நகர்ப்புறக் கொரில்லாக்களாக இருந்த புலிகள் வன்னிக் காடுகளுக்கு தங்கள் தளங்களை மாற்றினார்கள்.

அதுவே அவர்களுக்கு பெரும் பாது காப்பாகவும் வலிமையான அரணாகவும் அமைந்தது. புலிகளை அழித்து விட முடியவில்லை இந்திய இராணுவத்துடனான போரில் 654 புலிகள் மாண்டனர். மற்றும் கணிசமான பகுதியினர் சிறைப்பிடிக்கப்பட்டு அல்லது சிதறி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பிரபாகரனுடன் வெறும் 50 பேர் மட்டுமே இருந்தார்கள் என்பதும் அவர்களைக் கொண்டே கொரில்லாப் போரில் நவீன உத்திகளைக் கையாண்டு இந்தியப் படையை அவர் திணறடித்தார் என்பதும் வரலாறு. ஒருபுறம் இந்திய இராணுவத்துடன் போராடிக்கொண்டு மறுபுறம் தனது படையணிக்கு ஏராளமான இளைஞர் களை ஈர்த்து வன்னிக் காட்டில் அவர் களுக்குப் பயிற்சியளித்து வலிமை வாய்ந்த ஒரு படையை மீண்டும் அவர் கட்டியெழுப்பினார். வியட்நாமில் அமெரிக்க-பிரெஞ்சுப் படைகளை எதிர்த்துப் போராடிய ஹோசிமின் அவர்களுக்கு செஞ்சீனமும், சோவியத் ஒன்றியமும் துணை நின்றதால் அன்னியப்படைகளை வெளியேற்ற முடிந்தது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய கொரில்லா இயக்கங்களுக்கு அமெரிக்காவும், பாகிஸ்தானும் உதவியதால் சோவியத் படைகளை வெளியேற்ற முடிந்தது. ஆனால் இந்தியப் படைகளை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு உதவ உலகில் எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஆனாலும் தனியே மனஉறுதியுடன் போராடி இந்திய இராணுவத்தை வெளியேற வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உரியது. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த கொரில்லா இயக்கம் என்ற மதிப்பை புலிகள் இயக்கம் பெற்றது. இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாமல் போன இந்தியா, புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாக வெல்லத் திட்டமிட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் போலியான மாகாணச் சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி தனது கையாட்களான போட்டிக் குழுக்களைக் கொண்டு மாகாண அரசு ஒன்றையும் அமைத்தது.

ஆனாலும் இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் புலிகள் இயக்கம் பேச்சு நடத்தி இந்தியப் படை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை ஓங்கி ஒலிக்க வைத்தது. இதன் விளைவாக இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கப்பட்டது. இராஜீவ் காந்தி தோல்வியடைந்து வி.பி.சிங் பிரதமரானவுடன் இந்தியப் படை திரும்பப் பெறப்பட்டது. அந்தப் படைகளுடனேயே இந்திய கைப் பொம்மை வரதராசப் பெருமாள் கூட்டமும் இந்தியாவுக்குத் தப்பி ஓடியது. இராணுவ ரீதியாகவும் இராசதந்திர ரீதியாகவும் இந்தியாவை பிரபாகரன் முறியடித்தார். புலிகள் வீழ்ந்து விடவில்லைமுதல் 10 ஆண்டுகளில் கொரில்லாப் போர் முறையைக் கையாண்ட விடுதலைப் புலிகள் அடுத்த 10 ஆண்டுகளில் மரபு வழி இராணுவமாக உருவெடுத்தனர். தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளுடன் போராடி பல வெற்றிகளைப் பெற்று தங்கள் தாயகத்தின் பெரும் பகுதிகளை மீட்டெடுத்தனர்.

தமீழீழப் பகுதியில் தனி ஆட்சியை நிறுவினார்கள். இந்த நிலைமையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழர்களின் மனஉறுதியைக் குலைக்கவும் புலிகளின் முதுகெலும்பை முறிக்கவும் திட்டமிட்டு 1995ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெரும் படையெடுப்பை சிங்கள இராணுவம் தொடங்கியது. சிங்களரின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கத் திட்டமிட்ட பிரபாகரன் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவதென முடிவுசெய்தார். அந்த முடிவை ஏற்று புலிகள் மட்டுமல்ல 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாழ் மக்களும் வெளியேறிய நிகழ்ச்சி வரலாறு காணாததாகும். ஓர் இடத்தைக் கைப்பற்று வதைவிட அதைத்தக்க வைப்பது மிகக்கடினமானது என்பதை சிங்கள இராணுவம் காலம் கடந்து உணர்ந்தது. யாழ்ப்பாணத்தை தங்கள் வசம் வைத்துக்கொள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைப் பயன்படுத்த வேண்டி நேரிட்டது.

சிங்கள வீரர்களில் கணிசமானவர்களை இவ்வாறு முடக்கிய பிரபாகரன் 1996ஆம் ஆண்டில் தொடங்கி 4 ஆண்டு காலத்திற்குள் மாங்குளம், பரந்தன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெற்றிலைக்கேணி, பூநகரி போன்ற முக்கிய இராணுவ முகாம்களை வீழ்த்தினார். வவுனியா, வடமராச்சி, தென் மராச்சி கிழக்கு மாநிலத்தில் பெரும் பகுதிகள் ஆகியவற்றைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியாக வெல்லப்படமுடியாது என்று கருதப்பட்ட ஆனையிறவு முகாமைத் தகர்த்து சிங்கள இராணுவத்துக்கு புலிகள் மரண அடி கொடுத்தனர். இந்தப் போர்களில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவ வீரர்கள் மாண்டனர். பல நூறு கோடி பெறுமான ஆயுதங் களைப் புலிகள் கைப்பற்றினர். புலிகளை ஒழித்துவிட முடிய வில்லைவெற்றிக்கு மேல் வெற்றிபெற்று வந்த போதிலும் பிரபாகரன் சமாதானத் திற்கான கரங்களை நீட்டத் தயங்க வில்லை.

சிங்கள அரசுடன் தனித்துப் பேச தான் விரும்பவில்லை. மூன்றாவது நாடு ஒன்றின் முன்னிலையில் பேசுவதற்குத் தயார் என்று பிரபாகரன் அறிவித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அதிபர் சந்திரிகா மறுத்தபோது சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தந்தின் விளைவாக நார்வே நாட்டின் மத்தியஸ்தத்தை அவர் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலக அரங்கில் பிரபாகரனுக்கு கிடைத்த இராசதந்திர வெற்றி இதுவாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆகாய கடல்வெளிச் சமர், மணலாறு சமர், தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர், இடிமுழக்கம், ஓயாத அலைகள்-1, சத்ஜெய 2, 3 முறியடிப்பு சமர், பரந்தன், ஆனையிறவு சமர், வவுனத் தீவு சமர், கிளிநொச்சி, பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல், ஓயாத அலைகள்-2, ஜெயசிக் குறு முறியடிப்புச் சமர், ஓயாத அலை-3, ஓயாத அலைகள்-4, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல சமர்கள் பிரபாகரனின் இராணுவத் திறமைக்கு சான்று கூறுகின்றன.

அதிலும் வெல்லப்படமுடியாதது என்று கூறப்பட்ட ஆனையிறவு சிங்கள இராணுவ முகாமை தரை, கடல் மார்க்கமாகச் சுற்றி வளைத்து விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் உலக இராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது பிரான்சில் உள்ள நார்மண்டி கடற் கரையில் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் பெருமளவில் தரையிறங்கி ஜெர்மானியப் படைகளை முறியடித்து பெர்லின் வரை விரட்டிச் சென்றன. நார்மண்டி தரையிறக்கத்துடன் புலிகளின் ஆனையிறவு இறக்கத்தை உலக இராணுவ விமர்சகர்கள் இன்றும் ஒப்பிடுகின்றனர். உலக நாடுகளின் இராணுவ கல்லூரிகளில் இது வியப்புடன் போதிக்கப்படுகிறது.

பிரெஞ்சுப் படைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சரணடைய வைத்த வியட்நாம் ஜெனரல் ஜியா என்பவரின் போர்த் திறமைக்கு நிகரானது பிரபாகரனின் திறமை என இராணுவ விமர்சகர்கள் போற்றுகின்றனர். இந்திய-இலங்கை உடன்பாட்டின் சூத்திரதாரிகளில் ஒருவரும் பிரபாகரனை சுட்டுக்கொல்லுமாறு இந்தியப் படைத் தளபதிக்குக் கூறியவருமான ஜே.என். தீட்சித் பிற்காலத்தில் எழுதியுள்ள புத்தகத்தில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்:'புலிகளின் இயக்கத்தின் தலை வரான பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனஉறுதி, ஈழத்தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்துள்ளவை ஆகியவை சிறந்த குணாதிசயங்கள் ஆகும்.

இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும் நெஞ்சில் சுதந்திர தாகம் சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருப்பதையும் அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் சுபாவமும் இவரிடம் உள்ளது என்பதையும் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். அதைப்போல அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த லெப்.ஜெனரல் தீபிந்தர் சிங், லெப். ஜெனரல் சர்ரேஷ் பாண்டே போன்றவர்களும் பிரபாகரனை வியந்து பாராட்டியுள்ளனர். இன்னல்களும் இடர்களும் சூழ்ந்த நெருக்கடியான காலகட்டங்களிலும் தளராத தன்னம்பிக்கையுடனும் குன்றாத உறுதியுடனும் செயலாற்றுவது தான் பிரபாகரன் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம் என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கமும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் பிரபாகரனைத் திசை திருப்பவும், விலைக்கு வாங்கவும் செய்த முயற்சிகளும் - விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தவும் பலர் மேற்கொண்ட கடும் முயற்சிகளையெல்லாம் முறியடித்துத்தான் பிரபாகரன் புலிகள் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது தன்னலமற்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களை ஒரு கட்டுக்கோப்பான தேசிய இனமாக மாற்றி விடுதலைக்காகப் போராடுகிற முன்னணி அணியாக்கியவர் பிரபாகரனே. தமிழ்த் தேசிய இனத்தை ஒன்றுபடுத்துகிற மாபெரும் சக்தி மட்டுமல்ல அவர் அதன் உருவகமும் அவரேதான். தமிழர் தேசிய எழுச்சியின் வடிவமாக அவர் விளங்குகிறார். அவர் மரணத்தை வென்றவர். 17ஆம் வயதில் இருந்து சாவுடன் போராடி வருகிறார். தனது மக்களின் விடுதலை என்ற உன்னத கோட்பாட்டிற்காகவே அவர் வாழ்ந்து வருகிறார்.

அதற்காகவே போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கும் அவர் துணிந்திருக்கிறார். வெற்றிகளும் தோல்விகளும், பிரதேசங்களை இழப்பதும் மீண்டும் வெல்வதும் அவரை ஒருபோதும் பாதித்ததில்லை. உடனிருந்த போராளிகளை களத்தில் இழந்தபோதும். அவரது மனஉறுதி அதிகமாகியிருக்கிறதே, தவிர, குறைந்த தில்லை. அதைப்போல துரோகங்களும் அவரைத் துவளவைத்ததில்லை. முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தில் அடுத்து என்ன என்பதை யூகித்தறிவதிலும் அதற்கு மாற்று என்ன என்பதை முடிவு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரேதான். போரின் கடைசிக் கட்டத்தில் உருவாகப்போகும் நெருக்கடிகளை அவர் யூகித்தறிந்திருந்தார். அதனால்தான் பதிலடித் தாக்குதலில் வலிமையை விரயம் செய்யாமல் தனது தோழர்களையும் ஆயுதங்களை யும் பாதுகாப்பதில் குறியாக இருந்தார்.

போர் முடிந்து ஐந்து மாதகாலத்திற்கு மேலாகியும் புலிகளின் ஆயுதக் குவியல் களை சிங்கள இராணுவத்தினரால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. பீரங்கிகள், டாங்கிகள், கவச வாகனங்கள், மிக விரைவுப் படகுகள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை எல்லாம் என்ன ஆயின? எங்கு மறைந்தன? இந்த கேள்விகளுக்குரிய விடையைத் தேடித்தான் சிங்கள-இந்திய உளவுத் துறைகள் படாத பாடுபட்டுக்கொண்டி ருக்கின்றன. நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியதிலிருந்தே புலிகளின் குறி இராணுவ ரீதியான வெற்றிகளிலிருந்து விலகி சர்வதேச ஆதரவு என்பதன் மீதே குறியாக இருந்து வந்தது. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப் படுகிற விசயங்கள் அனைத்துமே புலிகளின் இராச தந்திர காய் நகர்த்துதலுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுக்கப்போகும் முக்கிய அம்சங்களாகும். சர்வதேச ரீதியிலான ஆதரவே தமிழீழம் விரைவில் உருவாக வழிவகுக்கும் என்பதை புலிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

புலிகளுக்கு தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு சிங்கள இராணுவத்தின் வலிமையோ - அதற்குத் துணையாக நின்ற சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ உதவியும் மட்டுமே காரணமல்ல. உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமான காரண மாகும். அமெரிக்கா மீது செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைச் சிறிதும் சகித்துக்கொள்ளமுடியாத சூழ் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கர வாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக்காகப் போராடும் அமைப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது. எனவே சிங்கள அரசு இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான தனது போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராகச் சித்திரித்து பல நாடுகளின் ஆதரவை பெற்றது.

30க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கர வாத அமைப்பு என்று கூறி தடை செய் துள்ளன. இதன் மூலம் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிங்கள அரசு மறைமுகமாகப் பெற்றுவிட்டது. இந்த வேண்டாத சூழ்நிலையை மாற்றுவதற்கு இப்போது வழி பிறந்துள்ளது. இலங்கையின் போர் அவலங்கள் உச்ச நிலை அடைந்தபோது உலக நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் உருவப் பதாகைகளுடனும் வீதிகளில் இறங்கி போர்க்குரல் கொடுத்தார்கள். தமிழகம் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் ஆவேசப் பேரணிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் வெளி நாடுகளிலும் 17 தமிழர்கள் தீக்குளித்து தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள். தமிழீழப் போராட்ட வரலாற்றில் இத்தகைய ஆதரவு எழுச்சி இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. இந்த தொடர் போராட்டங்களின் விளைவாக மேற்குலக நாடுகள் பலவும் சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கண்டனங்களை எழுப்பின.

சிங்கள அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் இந்நாடுகளால் எழுப்பப்பட்டன. இலங்கைக் களத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் உலக இராசதந்திரக் களத்தில் பிரபாகரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆசியப் பகுதியில் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் எதிர் துருவங்களாக ஈடுபட்டிருக்கும் சீன-இந்திய ஆதிக்கச் சக்திகள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள தேசத்திற்குக் கைகொடுத்தன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய உள்முரண்பாடுகள் நாளுக்கு நாள் கூடுமே தவிர குறையப் போவதில்லை. இந்துமாக் கடலில் இலங்கையின் ஊடாக சீனா காலூன்றுவது தனக்கு பேரபாயம் என்பதைக் காலம் கடந்தாவது இந்தியாவும் உணரத் தொடங்கியுள்ளது.

அதைப்போல அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இந்துமாக்கடலில் சீன ஆதிக்கம் வருவதை விரும்பவில்லை. மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கு நாடுகளுக்கும் செல்லுகின்ற கடல் மார்க்கம் வணிகரீதியில் மட்டுமல்ல இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது தங்களின் நோக்கங்களுக்கு அபாயகர மானது என்பதை இந்நாடுகள் உணர்ந்திருக்கின்றன. இதன் விளைவாகவும் உலக அரசியல் மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வெகுவேகமாக உருவாகி வருகின்றன. பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால் இனி ஒரு போதும் வேறு யார் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டம் உக்கிரமடையும் காலக் கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் தொடங்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழீழ மக்களும் போராளி களும் இதுவரை செய்துள்ள தியாகம் அளப்பரியது. சின்னஞ்சிறிய தமிழீழத்தின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது இந்தத்தியாகம் அதன் சக்திக்கு மீறியதாகும். மக்கள் தாமாக முன்வந்து தங்கள் மண்ணை மீட்க செய்துள்ள இந்த தியாகம் ஒருபோதும் வீணாகாது. கடந்த 30 ஆண்டு காலத்தில் அந்த மக்கள் அனுபவித்த துயரங்களும் இன்னும் அனுபவித்து வருகிற துன்பங்களும் அவர்களின் உள்ளங்களில் வைரமேற்றி உள்ளன. தங்கள் தலைமுறையிலேயே இந்தத் தன்னிகரல்லாத தலைவனின் காலத்திலேயே தமிழீழத் தாயகம் விடுதலை பெற்றாக வேண்டும்.

நமது அடுத்த தலை முறையினர் சுதந்திர நாட்டில் சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்ற மாறாத மனஉறுதியை இந்த மக்கள் கொண்டிருக்கிறார்கள். தாயக விடுதலைக்காகக் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையைத் தாருங்கள் என பிரபாகரன் கேட்டபோது கொஞ்சமும் தயங்காமல் தாய்மார்கள் தாங்கள் பெற்ற புதல்வர்களையும் புதல்வி களையும் உச்சிமுகர்ந்து முத்த மிட்டு அனுப்பி வைத்தனர். செல்பவர்கள் மீண்டும் வராமலும் போகலாம் என்பதைத் தெரிந்தே அவர்கள் பிள்ளை களைத் தியாகம் செய்ய முன் வந்தனர். அதைப்போல விடுதலை வேள்வியில் தான் பெற்ற மகனையும் அர்ப்பணித்த தங்கள் தலைவனைக் கண்டு அந்த மக்கள் நெக்குருகிப் போயிருக்கிறார்கள். வயதான தனது பெற்றோரைக் கூடப் பாதுகாக்க பிரபாகரன் முன் வரவில்லை. மக்களுக்காவது அவர் களுக்கும் ஆகட்டும் என்ற உறுதியோடு இருக்கும் தலைவனைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்துள்ளனர்.

முள்வேலி முகாமில் வதைபடும் இலட்சக்கணக்கான மக்களோடு அந்த மாவீரனைப் பெற்ற பெற்றோரும் துன்பங்களை அனுபவித்து வருவதை நேரில் காணும் மக்கள் தங்கள் தலைவனை முன்னிலும் அதிகமாக நேசிக்கிறார்கள். வாராது போல் வந்த மாமணியாகத் திகழும் இந்தத் தலைவனின் கீழ் அனைத்துவகைத் தியாகங்களையும் செய்ய அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள். வீரமே ஆரமாகவும் தியாகமே அணியாகவும் கொண்ட அந்தத் தலைவன் இவர்களின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறது. எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத தாக்குதலைத் தருவதுதான் பிரபாகரனின் சிறந்த போர் உத்தியாகும். வீழ்ந்த ஈழம் இனி எழும், வெல்லும், காலம் அதைச் சொல்லும்.

- பழ.நெடுமாறன்

நன்றி:தென்செய்தி

post-6666-12589509480271_thumb.jpg

. தாயக விடுதலைக்காகக் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையைத் தாருங்கள் என பிரபாகரன் கேட்டபோது கொஞ்சமும் தயங்காமல் தாய்மார்கள் தாங்கள் பெற்ற புதல்வர்களையும் புதல்வி களையும் உச்சிமுகர்ந்து முத்த மிட்டு அனுப்பி வைத்தனர். செல்பவர்கள் மீண்டும் வராமலும் போகலாம் என்பதைத் தெரிந்தே அவர்கள் பிள்ளை களைத் தியாகம் செய்ய முன் வந்தனர்
.

நெடுமாறன் ஜயா இப்படி சொல்லுரார், வேறு சிலர் மற்ற மாதிரி அல்லோ சொல்லினம்

போர் முடிந்து ஐந்து மாதகாலத்திற்கு மேலாகியும் புலிகளின் ஆயுதக் குவியல் களை சிங்கள இராணுவத்தினரால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. பீரங்கிகள், டாங்கிகள், கவச வாகனங்கள், மிக விரைவுப் படகுகள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை எல்லாம் என்ன ஆயின? எங்கு மறைந்தன? இந்த கேள்விகளுக்குரிய விடையைத் தேடித்தான் சிங்கள-இந்திய உளவுத் துறைகள் படாத பாடுபட்டுக்கொண்டி ருக்கின்றனஜயா

டிவன்ஸ் டொட் கொம் போய் பார்க்கிரதில்லை போலகிடக்கு

போரின் கடைசிக் கட்டத்தில் உருவாகப்போகும் நெருக்கடிகளை அவர் யூகித்தறிந்திருந்தார். அதனால்தான் பதிலடித் தாக்குதலில் வலிமையை விரயம் செய்யாமல் தனது தோழர்களையும் ஆயுதங்களை யும் பாதுகாப்பதில் குறியாக இருந்தார்
.

ஜயோ ஜயா 10ஆயிரம் போராளிகள் சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கிரார்கள்.

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.