Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இ.தொ.கா.வின் பிளவும் த.தே.கூட்டமைப்பின் முடிவும் – பொன்சேகாவை வலுப்படுத்துமா? -இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இ.தொ.கா.வின் பிளவும் த.தே.கூட்டமைப்பின் முடிவும் – பொன்சேகாவை வலுப்படுத்துமா? -இதயச்சந்திரன்

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த ஆண்டு, யுத்தம் ஏற்படுத்திய தீராத ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. சிதறுண்டு போன குடும்பங்கள், அங்கங்களை இழந்த மனிதர்கள், மகனைத் தேடியலையும் தாய் தந்தையர், பேரினவாதச் சிறைக் கூடங்களில் முகவரி இழந்து தவிக்கும் இளைஞர்கள் என்று தமிழினம் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது.

வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் சலுகையாக, மீன் பிடித் தடை நீக்கமும், பாதை திறப்புக்களும் முன் வைக்கப்படுகின்றன.

இயல்பு வாழ்வு திரும்பி விட்டதானதொரு கற்பிதம் உருவாக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்படவில்லை. சட்ட நீடிப்பிற்கான மாதச் சடங்கு மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது . கொழும்பில் நடைபெறுவது போன்று, காவல் துறையினரின் திடீர் தேடுதல் வேட்டைகளும் கைதுகளும் யாழ். குடாவில் இல்லை. வாக்கு வேட்டைக்காக அந்நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது போலிருக்கிறது.

தென்னிலங்கைக் கைதுகள், சிங்கள வாக்காளர்களைக் கவரும் பேரினவாத உத்தி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

யுத்தத்தின் பக்க விளைவுகளை அகற்றுவதன் ஊடாக இதுதான் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினையென்று அரசாங்கம் கூற முற்படுகிறது.

துரித கதியில் மீள்குடியேற்றம் நடைபெறுவதாக அரசாங்கம் தெரிவிப்பது, வெறும் தேர்தல் பிரசார உத்தி என சரத் பொன்சேகா கூறுவதால், கண்ணிவெடிக் கதையளந்து காலக்கெடு விதிக்க முடியாதென ஆட்சியாளர் மறுப்பறிக்கை விடுக்கின்றார்கள்.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை நேரில் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூடும் கூட்டம் வேடிக்கை பார்க்க வந்த கும்பலா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.

இ.தொ.கா.வின் உடைவோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரத்திற்கு ஆதரவளித்தால் கணிசமான தமிழர் வாக்குகளை அன்னப் பறவை பெற்று விடுமென ஐக்கிய தேசிய முன்னணி எதிர்பார்க்கிறது.

பாலையும் நீரையும் வெவ்வேறாகப் பிரிக்கும் வல்லமை கொண்ட அந்தப் பறவை, இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸில் தனது வாய் வரிசையைக் காட்டி விட்டது.

இ. தொ. கா.விலிருந்து வெளியேறிய அதன் தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜனும், பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்த னும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்க மமாகியுள்ளனர்.

நூற்றுக்கு மேற்பட்ட தடவை கூடிய, சர்வ கட்சி கூட்டு என்றழைக்கப்படும் ஆளும் தரப்பினரின் ஒன்று கூடலில் எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையற்றதென மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எண்ணுவதாக ஆர். யோகராஜன் தெரிவிக்கின்றார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அந்த அறிக்கையை வெளியிடாமல் இருப்பதால், அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருப்பதை உணரலாம்.

அதேவேளை, இவர்கள் இருவரின் வெளியேற்றம் தொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அச்சமடைகிறாராம்.

தேர்தல் காலத்தில், கட்சி மாறுவதென்பது, முதலாளித்துவ முறைமையின் ஜனநாயகப் பண்பு என்பதனை மனோ கணேசன் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் அதிகார வர்க்கமாக வரக் கூடியவருடன், கூட்டிணைவதில் அடிப்படைக் கொள்கைகள், அறம் சார்ந்த பொறுப்புகள் எதுவுமே கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஆனாலும் சர்வ கட்சிக் கூட்டமென்பது தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட ஒரு கண்கட்டு வித்தை என்பதை அதில் கலந்து கொண்டவர் ஏற்றுக் கொள்ளும் போது, அங்கு மக்களுக்கான செய்தி சொல்லப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மலையக மக்களை வாக்கு வங்கி மந்தைகளாகக் கருதும், தனிப் பெரும் தலைமைகளுக்கு, இப்பிளவு ஒரு பேரிடியாகவே இருக்கும். கை காட்டும் இடத்தில் புள்ளடி போடும் அரசியல் மரபினை மலையக மக்கள் மாற்ற வேண்டிய காலச் சூழல் உருவாகி வருவதை உணரக் கூடியதாகவிருக்கிறது.

அதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு, சர்வதேசப் புலிகள், சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கிய விமல் வீரவன்ச அதிரடிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இன்னமும் புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாதென்கிற கையறு நிலையில் பேரினவாதம் இருப்பதை விமலின் கூற்று புலப்படுத்துகிறது.

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறான முடிவே, அவர்களின் அழிவிற்கு காரணியாக அமைந்து விட்டதென சம்பந்தன் கூறும் இந்தியக் கருத்தியலிற்கு, விமல் வீரவன்ச எதிர்வாதம் புரிகிறார்.

சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவினை மேற்கொண்டால், புலிச்சாயம் பூச, விமல் வீரவன்ச போன்றோர் முற்படுவார்களென்பதை புரிந்து கொள்வதால், புலி எதிர்ப்பு விமர்சனங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் உத்தியினை, சம்பந்தன் மேற்கொள்வது போல் தெரிகிறது.

இவைதவிர, தமது தலைமையின் பின்னால் தமிழ் மக்கள் அணிதிரண்டு உள்ளார்கள் என்கிற அந்த நம்பிக்கையும் சம்பந்தன் அவர்களுக்கு உண்டு.

ஆனாலும் வடக்கு, கிழக்கு தாயகத்தில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத ஜனநாயகச் சூழல் குறித்த எதிர்பார்ப்பொன்றே மக்களிடம் காணப்படுகிறது. ஆயுதக் குழுக்களோ, இராணுவத்தினரின் பிரசன்னமோ இல்லாத சூழ்நிலையொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நீண்ட காலமாகவே வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் பேரவாவாக இருக்கிறது.

அரசியல் தீர்வு குறித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளிலும் இயல்பு வாழ்வின் மீள் வரவிற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, யாழ். மாநகர சபைத் தேர்தல் காலத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் தமது தொலைநோக்குப் பார்வை கலந்த செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று கூறுவதோ அல்லது சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமல்ல என்கிற வகையில் செயலாளர் ஸ்ரீரங்கனின் பார்வை அமைந்துள்ளது.

போட்டியிடுவதும், வாக்களிப்பதும் மக்களின் ஜனநாயக உரிமை சார்ந்தது. இதில் புத்திசாலித்தனமென்பது இராஜதந்திரம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இது தமிழ் மக்களுக்கான அரசியல் களமல்ல, என்பதற்கும் அப்பால், தெரிவு செய்யப்படும் நபர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட முழு இலங்கையையும் ஆளக்கூடிய அதிகாரம் கொண்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அத்தோடு இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆட்டுவித்து இயக்கும் பிராந்திய, மேற்குலக ஜாம்பவான்களுக்கு இடையே நிகழும் கடலாதிக்க யுத்தம் இதுவென்பதை உணர்ந்தால் போதும்.

இன்று சமுத்திரக் கடற் பிராந்தியம், வணிகப் போக்குவரத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்.

சீனச் சரக்கு கப்பலொன்று கடத்தப்பட்ட விவகாரம், இப் பிராந்தியத்தில் தனக்கான கடற்படைத் தளமொன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை சீனாவிற்கு உணர்த்துகிறது.

இதில் சீனாவிற்கு இரண்டு தெரிவுகள் உண்டு. அண்மையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (ஆச்டூணிஞிடடிண்tச்ண) கரையோரத்தில் அமைந்துள்ள “குவாடர்’ இல் (எதீச்ஞீச்ணூ) வர்த்தக துறைமுகமொன்றை நிர்மாணித்தது. அதனை ஒரு சிங்கப்பூர் கம்பனி நிர்வகிக்கிறது.

ஆனாலும் அப்பிரதேசத்தில் பலுச் விடுதலைப் போராட்டம் நிகழ்வதால் கடற்படைத் தளமொன்று அங்கு நிறுவுவது பாதுகாப்பானதாக அமையாதென சீனா கருதுகிறது.

ஆகவே, ஹம்பாந்தோட்டையில் தமது ஆதரவில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன வர்த்தக துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் சீனக் கடற்படைத் தளமொன்றை அமைப்பதே சீன தேசத்தின் இறுதித் தெரிவாக இருக்கலாம்.

இவ்வாறான நகர்வு ஏற்பட முன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தனக்குச் சார்பான அதிகாரவாசிகளை ஆட்சியிலமர்த்தும் நட வடிக்கையில் இந்தியா நிச்சயம் இறங்கும். ஆனாலும் இன அழிப்பினை மேற்கொண்டு, தமிழரின் வாழ்வினை பிறப்புரிமைப் போராட்டத்தைச் சின்னாபின்னமாக்கிய பேரினவாத அரசியலையும், அதன் துணை இராணுவக் குழுக்களையும் இவற்றையெல்லாம் தூக்கி நிறுத்திய இந்தியாவையும் தோற்கடிக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை இத்தேர்தல் வழங்குகிறது.

மாணவர் ஒன்றியம் விதந்துரைக்கும் புத்திசாலித்தனத்தை, இராஜதந்திரச் செயற்பாடாக மாற்றுவதில் சில நெருடல்கள் உருவாகும். ஆனாலும் அதனையும் உடைத்துக் கொண்டு வெளியேறும் அரசியல் ஆளுமை தமிழ் மக்களுக்கு உண்டென நம்பலாம்.

சரத்தை ஆதரிப்பதால், இழப்பதற்கு ஏதுமில்லையென இரா. சம்பந்தன் கருதலாம். ஆழமாக உற்று நோக்கினால், 2005 தேர்தலில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சரியான முடிவின் மறுபக்கத்தையே சம்பந்தன் புரட்டி வாசிக்கப் போகின்றார்.

நன்றி – வீரகேசரி வாரவெளியீடு

http://meenakam.com/?p=1826

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.