Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலைகளின் பூமியில் பாலிவுட்டின் விருது வழங்கும் விழா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினப் படுகொலைகளின் பூமியில் பாலிவுட்டின் விருது வழங்கும் விழா – IIFA 2010 Colombo

ஏப்ரல் 7th, 2010 வன்னியன்

iifa-500x351.jpg

2010 ஜூலை 2ம் தேதியிலிருந்து 4ம் தேதிவரை கொழும்புவிலுள்ள சுகத்ததாச உள் அரங்கத்தில் IIFA தனது விருது வழங்கும் விழாவை நடத்த உள்ளது. உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். ( http://beta.thehindu.com/arts/cinema/article306428.ece ). இதன் மூலம் இவர்கள் இலங்கையை அற்புதமான நாடு, அமைதியான நாடு என்று உலகிற்கு சொல்ல இருக்கிறார்கள். இது உண்மையானதுதானா? தமிழ் இனத்தின் மீது சிங்கள அரசு நடத்திய ஈவிரக்கமற்ற போர், மனித அறத்திற்கு எதிரான மாபெரும் குற்றமாக விவாதிக்கப்படுகின்ற இன்றைய சூழலில் வைத்து இந்த விருது வழங்கும் விழா கொழும்புவில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தியா வரம்புமீறி இத்தகைய உதவிகளை இலங்கைக்கு ஏன் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதும்,ஆராய்வதும் நமக்கு அவசியமாகிறது

உலகம் முழுவதும் எழுகின்ற குற்றச்சாட்டுகளால் இலங்கை காயப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த வளர்ந்த மேற்குலக நாடுகளின் போக்குகள் இலங்கை அரசுக்கு சிறிது அச்சத்தை கொடுக்கத்தான் செய்திருக்கின்றன. போர்க் காலத்தின்போது இலங்கையில் நடந்ததைப் பற்றி அறிய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஐ.நா தலைவர் பான்கீ மூன் கூறுகிறார். இங்கிலாந்தும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை மறைமுகமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) அரசியல் பிரிவை பதிவு செய்யவும் அனுமதித்து இருக்கிறது. இலங்கையில் தனது வரிச்சலுகைகளை (GSP+) நீட்டிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா ஒன்றியம். இந்த வரிச்சலுகை இழப்பால் 10இலட்சம் சிங்களவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், தொழில் மற்றும் வருமானத்தை இழப்பார்கள். இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகும்.

ஐ.நா-வின் மனித உரிமைகள் பாதுகாப்பகத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையும், ( உலக குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் ருவாண்டாவிற்கான உலக குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ) Amnesty, HRW (human rights watch) போன்ற மனித உரிமை அமைப்புகளும் இலங்கையின் நேர்மையையும், நடத்தையும், நற்பெயரையும் கேள்விக்கு உள்ளாக்கியதன் மூலமாக இராஜபக்சேயின் அரசை அரசியல் நெருக்கடிக்கு உட்படுத்தி இருக்கின்றன. இந்த செய்திகள் உலகிற்கு “ஜனநாயகத்திற்கு புறம்பான நாடு இலங்கை” என்று சுட்டிக் காண்பிக்கின்றன. சேனல்4 வெளியிட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சி உலக மக்களின் நினைவில் மறக்கவே முடியாதபடி நிலைத்திருக்கின்றன. இலங்கையோ அது பொய்யான வீடியோ என்று மழுப்பியது (http://www.youtube.com/watch#!v=xiFVs4twzvw&feature=related.) ஆனால் அது உண்மைதான் என்று ஐ.நா சபையைச் சேர்ந்தவர்களே நிரூபித்தார்கள். அண்மையில் நடைபெற்ற டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையின் நற்பெயரை கிழித்தெறிந்து, அதனை போர்க்குற்றவாளியாகவும் அறிவிக்கிறது. இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் 40% சிங்கள வாக்குகள் பெற்ற இலங்கையின் முன்னால் இராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகா தகுந்த காரணங்கள் இல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக காவலில் வைக்கப்பட்டு உள்ளார். நேர்மையான பத்திரிக்கையாளர்கள் லசந்தா விக்கிரமதுங்கே போன்றவர்கள் சிங்கள அரசின் கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடாதவாறு பத்திரிக்கைகளும், பத்திரிக்கைக்காரர்களும் ஒடுக்கப்படுகின்றனர். அவசர நிலைச் சட்டம் அங்கு அமலில் இருக்கிறது. போர் முடிந்து பத்து மாதங்களாகியும், பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள்அவர்களின் சொந்த நிலங்களுக்கு இன்னும் திரும்பவில்லை. இத்தகைய சமீபத்திய நிகழ்வுகள் இலங்கையையை இனப்படுகொலை நாடாகவும்,பாதுகாப்பற்ற நாடாகவும், விரும்பத்தகாத ஜனனாயகமற்ற நாடாகவும், மன்னிக்கவே முடியாத போர்க்குற்றவாளியாகவும் உலக மக்களிடத்தில் நிலைநிறுத்துகின்றன. இவ்வாறு நன்மதிப்பை இழந்த எந்த ஒரு நாடும் அன்னிய முதலீடு மற்றும் வியாபாரப் பெருக்கத்தை அடைவது கடினம். இதனாலேயே ஐரோப்பா, வடஅமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்கள் முக்கியமாக இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறெல்லாம் ஜனநாயகத்திற்கு புறம்பாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் சிங்கள அரசு தனது நற்பெயரை பொய்யான முறையில் உருவாக்க முயல்கிறது. மக்கள் தொடர்பு செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகிறது. சீனா,திபெத்,இல்ங்கை,நந்திகிராம் தொடர்பான பொய்யான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டதன் மூலமாக “தி இந்து” நாளிதழ் தனது நம்பிக்கைத் தன்மையை, இந்தியாவுக்குள் இழந்த“தி இந்து” நாளிதழ் மூலமாக தனது நன்மதிப்பை இந்தியாவில் விதைப்பது இலங்கைக்கு கடினமான ஒன்றாகியது. உலக அளவில் தன்னைப் பற்றிய நல்ல செய்திகளை பரப்புவதற்காக, இங்கிலாந்தின் மக்கள் தொடர்பு நிறுவனமான “பெல் பாட்டிங்கரை” இலங்கை நியமித்துள்ளது. இந்நிறுவனம் மனித உரிமை மீறல் குற்றவாளி ”அகஸ்டோ பினோசெட்”-க்கு சாதகமான கருத்துக்களை பரப்பிய ஒரு வியாபார நிறுவனம். பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான Trafiguraவும் இந்நிறுவனத்தின் கட்சிக்காரர்தான். Trafigura எண்ணெய் நிறுவனம் பலநூறு டன்கள் கழிவு எண்ணெய்யை ”அபித்ஜான்” கடல் பகுதியில் கொட்டிய குற்றத்தை மறக்கடிக்க “பெல் பாட்டிங்கர்” வேலை பார்த்தது. Bell Pottinger அமெரிக்காவின் Oorvis என்ற நிறுவனத்தையும் இலங்கை அரசிற்காக வேலை செய்ய நியமித்துள்ளது. இந்த நிறுவனத்திற்காக இலங்கை செலவிடும் தொகை அமெரிக்காவில் மட்டும் சுமார் 4,83,000 டாலர்கள்.

எந்தவொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் நற்பெயர்தான் நிதிவளத்திற்கான மூலதனம். சுற்றுலா மூலமாக ஏற்படும் நிதிவளர்ச்சி கூட ஒரு நாட்டின் நற்பெயரைப் பொறுத்தே அமைகிறது. இந்த நற்பெயரை, தமிழ் இனத்தின் மீதான போரின் காரணமாக தவற விட்ட இலங்கை அரசு தனது நாட்டின் நிதிவளத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறது. ஆகவே நற்பெயரை மீட்டெடுப்பது என்பது இலங்கையைப் பொறுத்தவரை வாழ்வா சாவா போன்ற பிரச்சினையாகும். இலங்கை இம்முயற்சியில் ஒருவேளை தோற்குமாயின், உலகத்தின் விரல் இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு துணைபோனதிற்காக இந்தியாவின் அதிகார வர்க்கத்தின் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் திரும்பும். இதன் அடிப்படையில்தான் போர் முடிந்த மே மாதத்தில்(2009) 1000 கோடி ரூபாய் உதவித்தொகையை இலங்கைக்கு இந்தியா அறிவித்தது. இந்தியாவில் சோனியாவின் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த முதல் வாரத்தில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்தது. மே மாதம் இறுதியில் ஐ.நா சபையில் நடந்த மனித உரிமை மீறல் விசாரணைக் கூட்டத்தையும் இலங்கை எதிர்கொண்டது. அதிலிருந்து இந்தியா இலங்கையை காப்பாற்றியது. இதன் பின்னர் உலக வங்கியில் இருந்து இலங்கைக்கு வராமல்போகக்கூடியதாய் இருந்த 2.9 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்காவில் தனக்குள்ள செல்வாக்கின் மூலமாக இலங்கைக்கு பெற்றுத் தந்தது இந்தியா. இவ்வாறு தொடர்ந்து தனது நேரடி பண உதவியைக் கொண்டு இலங்கையை தூக்கி நிறுத்த முடியாது என இந்தியாவின் அதிகார மையம் புரிந்து கொண்டே உள்ளது. இலங்கை தானாக நிற்க அதன் நற்பெயரை உருவாக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் மட்டுமே இலங்கை நிற்பது சாத்தியம். தனது மதிப்பினை தூக்கி நிறுத்த உதவும் எந்த வாய்ப்பும் வசதியும் இல்லாமல் இலங்கை திணறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்தான் இந்தியா மிகச் சரியான ஆயுதத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இதற்காகத்தான் இலங்கைக்கு உதவும் வகையில், கொழும்புவில் விருது வழங்கும் விழாவை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் காரணமாக இலங்கையின் போர்க் குற்றங்கள் மறக்கடிக்கப்படும் என்று இந்தியாவும், இலங்கையும் நம்புகின்றன. அதுதான் உண்மையும் கூட.

26 மார்ச் 2010ல் IIFA விருதுகள் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மும்பையை தலைமையாகக் கொண்ட அகில இந்திய திரைப்படக் கழகம்( IIFA) பாலிவுட்டின் சந்தைகளை உலகெங்கும் பிரபலப்படுத்தும் ஒரு தனியார் நிறுவனம். ஆண்ட்ரி டிம்மின்ஸ்,விராவ் சர்க்காரி,சப்பாச் ஜோசப் ஆகியோரே இதனை நிறுவியவர்கள். இதைவிட முக்கியமானவர்கள் இதன் ஆலோசகர்கள். இதன் சிறப்புத் தூதுவர்-அமிதாப்பச்சன். ஆலோசகர்கள்-டேவிட் தவன்,ஜே.பி.தத்தா,ஜெயா பச்சன்,கரன் ஜோகர்,மன்மோகன் ஷெட்டி,பகலாஜ் நிஷ்லானி,ரமேஷ் சிப்பி,சியாம் ஷிராவ் மற்றும் வினோத் கன்னா.

இந்த நிகழ்ச்சியின் சாதகங்களைப் பார்த்தால் ஏன் வளர்ந்த நாடுகள் கூட இந்நிகழ்ச்சியை நடத்த போட்டி போடுகின்றன என அறிந்துகொள்ள முடியும். மேலும் இதனை ஏன் கொழும்பில் நடத்த இந்தியா ஆசைப்படுகிறது என்பதையும் அறிய முடியும். லண்டனில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமர் அலுவலகம் நேரடியாக அகில இந்திய திரைப்படக் கழகத்தை தொடர்பு கொண்டு விருது வழங்கும் விழாவை தங்கள் நாட்டில் இரண்டாம் முறையாக நடத்த அழைப்பு விடுத்தது. தனிமைப்பட்டுக் கிடக்கும் மக்களிடையே நன்மதிப்பைப் பெற இது உதவியாக அமையும் என இங்கிலாந்து எதிர்பார்த்தது. இதனை உலகிந்திய திரைப்படக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஜோசப் ஜூன்11,2009, மசாவ் நகரத்தில் நடந்த விருது விழாவில் நேரடியாக இங்கிலாந்தின் பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்தார்.(http://blog.taragana.com/e/2009/06/11/terrorism-defined-pre-and-post-iifa-awards-8588/ ) IIFA விருது என்பது பாலிவுட்டின் ஆஸ்கார் போன்றதாகும். உலகில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நிகழ்ச்சியென IIFA விருது மதிப்பிடப்படுகிறது. IIFA யின் முதல் நிகழ்ச்சியிலேயே (லண்டன்–2000) பணத்தையும்,புகழையும் பெற்றுத் தரக்கூடிய நிகழ்ச்சியாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடா,தெற்கு கொரியா,அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது நாட்டில் இந்நிகழ்ச்சியை நடத்த ஆர்வத்துடன் இருக்கின்றன.

பெர்னிஸ் பலூசி என்ற அயர்லாந்தை சேர்ந்த வணிகப் பெண்மணி IIFA ஐப் பற்றி கூறும்பொழுது, “இந்த விழா வெறும் பணம் சம்பாதிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. அயர்லாந்தினைப் பற்றிய பல்வேறு புரிதல்களை இது இந்தியர்களிடம் உருவாக்கும். இந்தியாவுடனான வணிக வாய்ப்புகளை உருவாக்கும் அயர்லாந்து முதலீடு செய்வதிற்கு ஏற்ற நாடு என்பதை இந்தியாவிற்கு தெரியப்படுத்தும்.” என்று குறிப்பிடுகிறார். IIFA 2008 பாங்காக்கில் நடந்த பொழுது அயர்லாந்தின் சுற்றுலாத்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போது அவர்கள் “இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அயர்லாந்தின் சுற்றுலாத்துறை மற்றும் அதன் நன்மதிப்பை இந்திய சமூகத்திற்கு தெரியப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு” என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்களை நிரூபிக்கத் தேவயான ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அகில இந்திய திரைப்படக் கழகத்தின் விருது வழங்கும் விழா 4 வருடங்களுக்கு முன்பாகவே, கிட்டத்தட்ட 450 மில்லியன் மக்களை தொலைகாட்சியின் மூலமாக கவர்ந்து இழுத்திருக்கிறது. 17.38 மில்லியன் டாலர்கள் செலவு செய்து கிடைக்கும் அளவிலான விளம்பரத்தை 2005 விழாவின் வாயிலாக ஆம்ஸ்டர்டாம் நகரம் இலவசமாகப் பெற்றது. IIFAயின் விருது வழங்கும் விழா பற்றிய அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 4.8 மில்லியன் டாலர்களுக்கான விளம்பர மதிப்பை யார்க்‌ஷயர் நகரம் (இங்கிலாந்து) பெற்றது. துபாய் நகரத்திற்கு இது 25 மில்லியன் டாலர் இலவச விளம்பரமாக உயர்ந்தது. (http://www.iifabusiness.com/website/cntnt/associationbenefits.htm மக்கள் தொடர்பின் வழியாக மரியாதையைக் கூட்டும் வியாபார உத்தியை அறிந்தவர்களுக்கு இதன் வீச்சு புரிந்திருக்கும். இந்தக் கணக்குகள் எல்லாமே நமக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகின்றன. குறிப்பிட்ட நாட்டின் நற்பெயரை மேம்படுத்தவும்,மக்கள் தொடர்பு எல்லைகளை விரிவடையச்செய்வதன் மூலமாக வணிக வாய்ப்புகளை பெருக்கவும் இந்த விழா உதவுகிறது என்பதுதான் அது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் இந்த விழாவை தனது நாட்டில் நடத்த 560 கோடிகளை IIFA-க்கு கொடுக்கத் தயாராக இருக்கின்றன.

விழாவில் பாலிவுட்டின் நட்சத்திரங்கள் நடனமாடுவது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் IIFA-யும், FICCI-யும் ( FIICI – இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டமைப்பு நிறுவனம். இது இந்தியாவின் பழமையாதும், முக்கியமானதுமான முதலாளிகளின் கூட்டமைப்பு ) இணைந்து புதிய வர்த்தக வாசல்களை (Memorandum of Understanding) திறக்கவும் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த அமைப்பின் வழியாக வர்த்தக உறவுகள்,பரிமாற்றங்கள்,பாலிவுட்டிற்கான சலுகைகள்,முதலீடுகள் எளிதில் உருவாகின்றன. யார்க்‌ஷயரில் விழாவின் போது IIFA- FICCI உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அதன் தலைவர் அம்பிகா சர்மா மற்றும் இந்தியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான

புரோபுல் படேல் முன்பு யார்க்‌ஷயர் பார்வர்டு நிறுவனத்தின் தலைவர் டாம் ரியோடோம் கையெழுத்திட்டார். அந்நிகழ்ச்ச்சியில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். (http://www.docstoc.com/docs/10235028/Sir-Martin-Sorell-CEO-WPP-Worldwide-Receives-FICCI-IIFA-Global ) அயர்லாந்தில் உள்ள டப்ளினில் இந்த விழா நடந்தால் அயர்லாந்திற்கு 800 மில்லியன் வர்த்தக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. IIFAயின் துணைத்தலைவர் ஷிபாலி முன்ஷி இது பற்றி குறிப்பிடுகிறார்.

“இது ஒரு விருது வழங்கும் விழா மட்டுமல்ல. இதையொட்டி 20 வகையான நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் ஐரிஷ் இனத்தவர்க்கு ஏற்றத்தை அளிக்கக்கூடிய நல்வாய்ப்பாக அமையும்” என்று கூறுகிறார்.(நாங்கள் அற்புதமான அழகிய நாட்டை தேடிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் டப்ளின் ஒரு அமைதியான, அழகிய நகரம்தான். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு வணிக வாய்ப்புகள் இங்கு நிறைந்துள்ளன. தங்குமிடம், உணவு, போக்குவரத்து, விருது வழங்கும் அரங்கம் எல்லாமும் கச்சிதமான வகையில் இங்கு உள்ளன-ஷிபாலி முன்ஷி )

இந்த விழா துபாயில் நடந்த பொழுது துபாய்க்கு நேரடியாக கிடைத்த வருமானம் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கை 400 மில்லியன். இதில் 25,000 வெளி நாட்டு பார்வையாளர்களும் அடக்கம். இதனால் துபாயின் சுற்றுலாத்துறை வருமானம் ஒரு வாரத்தில் 30% அதிகரித்தது. விழாவின் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே துபாயில் நடைபெற்ற படப்பிடிப்புகள் 100 நாட்களைத் தாண்டும்.(100 நாட்கள் நடைபெறும் அளவிற்கான படப்பிடிப்பு ஒரே மாதத்தில் முடிவடைந்தது) இதே போன்றுதான் யார்க்‌ஷயரிலும் நடந்தது. (150 நாட்கள் படப் பிடிப்பு) இத்தகைய காரணங்களினால்தான் தென்கொரியா, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த விழாவை தங்கள் நாட்டில் நடுத்துவத்துவதற்காக போட்டிபோடுகின்றன.

(http://www.radiosargam.com/films/archives/18752/ireland-in-line-to-host-iifa-2009.html)

இந்த கடுமையான போட்டிகளுக்கு இடையேதான் 2010 விருது வழங்கும் விழா கொழும்புவில் நடத்தப்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கிற்து. போனவருடம் வரை இதற்கான பட்டியலில் அயர்லாந்து முன்னணியில் நின்றது. ஆனால் ஜனவரி 2010ல் இந்த வாய்ப்பு சியோலுக்கு கிடைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஜனவரி 26 இந்தியாவிற்கு கொரிய ஜனாதிபதி ”லீ மியூங் பாக்” வந்தபோது அகில இந்திய திரைப்படக் கழகத்தின் விருது விழா கொரியத் தலை நகரில் நடத்தப்பட இருப்பதாக கொரிய ஜனாதிபதி அதிகார வட்டங்கள் தெரிவித்தன. இதை உலகிந்திய திரைப்படக் கழகத்தின் நிறுவனர் ஆண்ட்ரி டிம்மின்ஸ் உறுதி செய்தார். இந்த அறிவிப்பை கொரியாவின் நற்பெயரை ( Presidential Council for Nation Branding ) உயர்த்தும் கொரிய ஜனாதிபதியின் நிர்வாகக் குழுவே அறிவித்தது. (http://www.filmicafe.com/news13460.html, http://www.merinews.com/article/seoul-to-host-iifa-awards- 2010/15795565.shtml ) ஆகவே IIFAயின் பட்டியலில் 27 பிப்ர 2010 வரைகொழும்பு இல்லவே இல்லை. ஆனால் இன்றைய தேதியில் கொழும்புவில்தான் விருது வழங்கும் விழா நடக்கப் போகிறது என்பது உறுதிபடத் தெரிகிறது. இது குறித்து இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா குறுப்பிடுகையில் “இது இலங்கையின் மிகப்பெரிய உலகசாதனை. கடுமையான போட்டிக்ளுக்கு இடையே இலங்கைக்கு இது கிடைத்திருக்கிறது. இந்த விழாவினை ஒட்டி பல்வேறு வர்த்தக சந்திப்புகளும் நடைபெற உள்ளன” என்கிறார். http://beta.thehindu.com/arts/cinema/article306428.ece

இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்னெவென்றால் விழாவை நடத்துவதற்கான போட்டியில், முன்னணி நாடுகளை குறிப்பாக வளர்ந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, போட்டிப் பட்டியலிலேயே இல்லாத இலங்கைக்கு இது தாரைவார்த்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதுதான். இதிலிருந்து கொரியாவை விடவும் மிக முக்கிய நாடாக இந்தியாவிற்கு இலங்கை இருக்கிறது என உணர்த்தப்பட்டிருக்கிறது. கொரியாவுடன் பல்வேறு வர்த்தக,இராணுவ,அறிவியல் ஒப்பந்தங்களை, அதன் ஜனாதிபதி முன்பு ஜனவரி 26,27, 2010ல் செய்து, அவர்களை நமது குடியரசு தினவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, அந்த சந்திப்புகளில் IIFAயின் விழாவினையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு, இப்போது இலங்கைக்கு அதனை மாற்றுகிறது எனில் இது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இம்மாற்றத்தினால் இந்திய-கொரிய நட்பில் உருவாகும் ஏமாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறது இந்தியா. இந்திய-கொரிய உறவுகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை அளிக்கும். ஏனெனில் இந்திய-கொரிய வர்த்தக உறவுகள்( Hyndai Car Factory உட்பட) இலங்கையின் உறவைக் காட்டிலும் வலுவானதாகும்.

கொழும்புவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முக்கிய தூதர் அமிதாப்பச்சன். ஷாருக்கான் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியின் மேடையில் தோன்றுகிறார். இவற்றை விட நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள் இந்த விழாவில் இரண்டு இருக்கின்றன.

1.மணிரத்தினத்தின் “இராவணா” இந்த விழாவில் திரையிடப்பட இருக்கின்றது.

2. FICCI யின் தொடர்பு ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வணிகப் பிரிவின் தற்போதைய சேர்மனாக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த கடந்த மே மாதத்தில் கூட அமைதி காத்த இந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இதில் என்ன நிலை எடுக்கப் போகிறார்கள் என்பது ஒரு கேள்வியே. இனப் படுகொலைகளை எதிர்த்து அகில இந்திய திரைப்படக் கழகத்தின் விழாவில் இருந்து வெளியேற மணிரத்தினம் பாரதிராஜாவாகவோ, திபெத் படுகொலைகளை எதிர்த்து சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்க மறுத்த சிக்கிம் மாநிலத்தின் கால் பந்தாட்ட வீரர் பெய்சுங் பூட்டியாக கமல்ஹாசனோ இருந்து, தமிழனாக இல்லாவிட்டாலும் தன் திரைப்படங்களில் சொல்கிற மனித நேயத்திற்காக தன் சுயமரியாதையை காக்க வேண்டி புறக்கணிப்பார்கள் என்று நம்ப முயற்சிக்கலாம். இந்த விழா திட்டமிட்டபடி நடந்தால், இலங்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சொந்தங்களாய் இருந்த வணிக உறவுகளும்,ஏனைய உறவுகளும் பிணைந்த தமிழர் சமூகத்தை மறந்து, வடக்கிந்திய பெரு,சிறு முதலாளிகள் கடை விரிக்கப் போகிறார்கள். தமிழர்களின் வணிக இழப்பை மையமாக வைத்து மட்டும் இதனைச் சொல்லவில்லை. இதன் மூலமாக அறுந்து விழக்கூடிய மெல்லிய உறவுகள் எத்தனை?. ஜெயின்களும்,ப்டேல்களும்,அகர்வால்களும் தாம் இதுவரை கண்டிராத நிலத்தில் வணிக வலையை விரிக்கப் போகிறார்கள். இத்தகைய வணிக அமைப்புகள் உருவாக்கப்பட்ட பின் அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் எவ்வாறு மதிப்பிடப்பட போகிறது. திலீபன் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட இடத்தில் வட்டிக்கடைகள் கூட முளைக்கலாம். தமிழகம் மேற்கொள்ளும் ஈழத்திற்கான போராட்டங்கள் தனித்து விடப்பட்டு ஏனைய இந்தியா இலங்கையை விழா பூமியாக மாற்றப் போகிறது. நமது இருத்தலை மறுபடியும் நிராகரிக்கிற நிகழ்வு நம் கண்முன்னே ஜூலை2 முதல் 4வரை நடக்க இருக்கிறது. விருது வழங்கும் விழா கொழும்புவில் நடைபெறப் போகும் இந்த தருணத்தில் தமிழ் உணர்வாளர்களும்,போராளிகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. 400க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலபேர் இந்திய கடல் எல்லைக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் நீதிக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இந்திய அரசின் வழக்கறிஞர் “சர்வதேச கடல் எல்லையில் கொல்லப்பட்ட மீனவனுக்காக இந்தியா பொறுப்பேற்க முடியாது ” என்கிறார். அவர்கள் இந்திய எல்லையில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரம் அளிக்கப்பட்ட போது “ இதற்காக இலங்கையின் மீது போரா தொடுக்க முடியும்” என்றும் பதிலளிக்கிறார். சிங்கள மக்களின் நல்வாழ்விற்காக கொழும்புவில் விழா நடத்தத் துடிக்கும் இந்திய அரசாங்கமும், அதிகார வர்க்கமும் சொந்த நாட்டு மக்களின் உயிரை துச்சமாக மதிக்கிறார்கள். ஒருவேளை மும்பைத் தாக்குதலை மறந்துவிட்டு இந்த விழாவை கராச்சியிலோ, இஸ்லமாபாத்திலோ நடத்தலாம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? வடக்கிந்திய சமூகமும், போராளிகளும்,அறிவுஜீவிகளும் இந்த விழாவிற்கு எவ்விதத்தில் எதிர்வினையாற்றப் போகிறார்கள்? இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்தபோதெல்லாம் வாயை மூடிக் கிடந்த இவர்கள் இப்போதாவது ஏதாவது செய்வார்களா? விழாவிற்கு எதிராக குரல் எழுப்புவார்களா? அது நடக்கும் என நாம் நம்புவோம். குற்றவாளிகளை நாம் வெற்றியடைய விடக்கூடாது. படுகொலைகளின் மூலமாகவும்,போரின் மூலமாகவும் மக்களின் போராட்டத்தை நசுக்கிவிட முடியும் என்று இலங்கை அரசு நினைக்கிறது. வன்னியில் நடத்தப்பட்ட இனவிடுதலைக்கு எதிரான போர் மற்றும் போர்க்குற்றத்தின் வெற்றி ஆகியவை அரச பயங்கரவாதத்திற்கு பெரும் ஆற்றலைக் கொடுத்துள்ளது. இந்தப் போரின்போது மெளனம் காத்து நின்ற அறிவுஜீவிகளின் மனச்சாட்சியை உடைக்க இந்தியாவின் மையப்பகுதியில் “பச்சை வேட்டை” நடத்தப்படுகிறது.

இளைஞர்கள், போராளிகள், அறிவுஜீவிகள், அனைவரும் தங்களின் முரண்களைக் கடந்து, கரங்களை ஒன்றிணைத்துப் போராட மே பதினேழு இயக்கம் அழைப்பு விடுக்கிறது. தமிழ் தேசியவாதிகள்,இடதுசாரிகள்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள்,பெரியாரியவாதிகள்,தலித் அமைப்புகள்,மனித உரிமை அமைப்புகள், மற்றும் பலரும் ஒன்றிணைந்து இந்த விருது வழங்கும் விழா நடைபெறாமல் தடுக்க போராட வேண்டுகிறோம்.

இந்த விழா மிக குறுகிய காலத்தில் நடக்க இருப்பதால் காலம் தாழ்த்தாது போராட அழைக்கிறோம். உங்களின் நண்பர்களிடம் இதுகுறித்து பேசுங்கள். எல்லோரிடமும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள். நமது போராட்டம் உலகிந்திய திரைப்படக் கழகத்தின்( IIFA)முடிவை மாற்றியமைக்கட்டும். இலங்கையை விடுத்து வேறு ஒரு நாட்டில் நடத்தலாம் என்ற முடிவுக்கு அவர்களை உந்திச் செல்லட்டும். ஒன்றுபட்டு நிற்போம். நமக்கான போராட்டத்தை நாமே தொடங்குவோம்.

அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய “மால்கம் எக்ஸ்” அவர்களின் வார்த்தைகள் இந்த தருணத்தில் நாம் நினைவுகூற வேண்டிய ஒன்றாகும்.

“…இந்த அரசாங்கம் நம்மை தோற்கடித்தது. அதை இந்த அரசாங்கமே செய்தது. மிகப் பெருந்தன்மையுடன் திகழ்ந்த நமது வெள்ளைக்கார நண்பர்கள் நம்மை தோற்கடித்தார்கள். இதுவரை நாம் நம்பியிருந்த அனைத்து சக்திகளும் நம்மை தோற்கடித்த பின்னர் நாம் யாரையும் நம்பியிருப்பதை நிறுத்துவோம். நாம் நம்மை நோக்கி திரும்புவோம். நமக்கு நாமே உதவிக் கொள்கிற திட்டமே நமது தேவை. நமக்கு நாமே உதவிக் கொள்கிற ஒரு தத்துவமே தேவை. அது உடனடியாக செயல்பட வேண்டும் என்கிற தத்துவம். ஏற்கெனவே காலங் கடந்து விட்டது என்கிற தத்துவம். அந்த தத்துவம் கறுப்பின தேசியத்தை முன்வைக்கக் கூடிய சுய உதவித் தத்துவம். பிரிவினைகளுக்கும்,விவாதங்களுக்குமான தேவைகளை ஒதுக்கித் தள்ளும் தத்துவம்…. “

– மால்கம் எக்ஸ்

நாம் வெல்வோம்.

திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கம்

thiruja@yahoo.com

9444146806

உங்கள் எதிர்வினைகள்

• போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,பொதுக்கூட்டங்களில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

• இந்த செய்திகளை பரப்புரை செய்யுங்கள்

• வட இந்திய நண்பர்களிடம் உங்கள் உணர்வுகளை பரிமாறுங்கள்.

அவர்களையும் எதிர்வினையாற்றச் சொல்லுங்கள்.

• பாலிவுட் திரைப்படங்களை புறக்கணிப்பதாக நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

• இணையதளங்களில் எழுதுங்கள்.

• பாலிவுட் இணையதளங்கள், வட இந்திய செய்தி தளங்களின் (NDTV, CNNIBN, TIMES NOW etc) பாலிவுட் சம்பந்தப்பட்ட செய்திகளில் உங்களது IIFA-2010 Colombo Awards எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.

• Bollywood Blogகளில், பத்திரிக்கைகளில்,திரைப்படம் சார்ந்த ஏனைய இடங்களில் IIFA-2010 Awards எதிர்ப்பையும், Channel 4 video, Warwithoutwitness.com போன்ற ஈழப் படுகொலை தொடர்பான இணையதள முகவரிகளை பதிவு செய்யுங்கள்.

• உங்கள் நண்பர்களுக்கு தொடர்ந்து SMS, Email செய்திகளை அனுப்புங்கள். அவர்களையும் பங்கெடுக்கச் சொல்லுங்கள்.

• வட இந்திய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், போராளிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடம் செய்தியை எடுத்துச் செல்லுங்கள்.

Links :

Dublin Tribunal finds against Sri Lanka on charges of War Crimes

http://www.ifpsl.org/index.php?option=com_content&task=view&id=24&Itemid=1

Experts to advise Ban Ki Moon on Sri Lanka’s alleged war-crimes

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31310

Permanent People’s Tribunal report

http://www.ifpsl.org/images/files/peoples_tribunal_on_srilanka.pdf

Authenticated Video Recording of an

Extra-judicial Execution of Unarmed Prisoners

http://www.tamilnet.com/img/publish/2010/01/TAG-PPT-Extra-judicial_Executions-V3.pdf

Satellite Imagery Evidence Showing Sri Lanka Military “Purposely or

Intentionally” Targeted PTK Hospital

http://www.tamilsagainstgenocide.org/Docs/DublinTribunal/TAG-PPT-PTK-Hospital-Satellite-Final.pdf

Colombo’s cluster bomb attack on civilians in Vanni challenges international norms

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27625

more info on:

www.warwithoutwitness.com

http://meenakam.com/?p=12372

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.