Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் போர்க் குற்றம்: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் பரிந்துரைகள்

Featured Replies

சிறிலங்காவில் போர்க் குற்றம்: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் பரிந்துரைகள்

அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினால் [international Crisis Group - ICG] மே.17ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் சுருக்க வரைவும், பரிந்துரைகளும் இங்கே தமிழில் தரப்படுகின்றன. 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

30 ஆண்டுகளாகச் சிறிலங்காவில் தொடர்ந்த போரின் போது சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீண்டும் மீண்டும் மீறி வந்திருக்கிறார்கள்.

போர் இடம்பெற்ற இந்தக் காலப்பகுதியில் இரண்டு தரப்பினருமே பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களைப் புரிந்து வந்தாலும், போர் உக்கிரமடைந்திருந்த இறுதி நாட்களான சனவரி 2009 தொடக்கம் போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மே 2009ல் அரசாங்கம் அறிவித்த நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வன்முறைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்பட்டன.

குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதையும் எண்ணிலடங்காதோர் காயமடைந்திருந்ததையும் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டமையினால் பலர் இறந்துபோனதையும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு திரட்டிய ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சிறிலங்காவினது பாதுகாப்புப் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களும் இராணுவத் தளபதிகளும்தான் இதற்குப் பொறுப்பு எனவும் நம்புவதற்கு நியாயமான அடிப்படையினை இந்த ஆதாரங்கள் கொண்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவர்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதைக் காட்டும் ஆதாரங்கள் இருக்கின்ற போதும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இறந்துவிட்டமையினால் நீதியின் முன் இவர்களை நிறுத்துவது முடியாத காரியமே.

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையினை உள்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான அரசியல் ரீதியான விருப்பம் அல்லது திறன் சிறிலங்காவிடம் இல்லாதிருப்பதன் காரணமாக இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டியது அவசியமானது.

அத்துடன் சிறிலங்காவில் இனப்போருக்கு வழிவகுத்த தமிழர்களது துன்ப துயரங்களைப் போக்குவதற்கும், தத்தமது நாடுகளிலுள்ள கிளர்ச்சிகளுக்கு எதிரான முனைப்புக்களை மேற்கொள்வதற்கு அந்தந்த நாடுகள் சிறிலங்காவினை ஒரு உதாரணமாகக் கொள்வதற்கும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பது கண்டறியப்படவேண்டும்.

கீழ் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என்பதைக் காட்டும் வகையிலான போதிய, நம்பத்தகுந்த ஆதாரங்களைச் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு கொண்டிருக்கிறது.

பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து எறிகணைத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. 2009 சனவரி மாதத்தின் இறுதிப் பகுதி முதல் பொதுமக்கள் அனைவரும் அது பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய பகுதிக்குள் சென்றுவிடவேண்டும் என அரசாங்கமும் அரச படையினரும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

பின்னர், இவ்வாறாக பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட அளவில் சிறிய நிலப்பரபினுள் மக்கள் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் மீது வகை தொகையற்ற வகையில் சரமாரியான ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களையும் மோட்டார் குண்டுத் தாக்குதல்களையும் அரச படையினர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட இந்தப் பகுதிகளுக்குள் மக்கள் எந்தளவிற்குச் செறிவாக வசிக்கிறார்கள் என்பதையும் தாம் மேற்கொண்டுவரும் எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், மே மாதத்தின் நடுப்பகுதி வரை அரச படையினர் எறிகணைத் தாக்குதல்களை இடைவிடாது தொடர்ந்தார்கள்.

மருத்துவமனைகள் மீது வேண்டுமென்றே எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக காயமடைந்தவர்களால் நிறைந்திருந்த மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகளை இலக்குவைத்து படையினர் தொடர் தாக்குல்களை மேற்கொண்டிருந்தார்கள்.

குறித்த அந்தப் பகுதிகளில் மருத்துவமனைகள் இயங்குவதோடு அவை காயமடைந்த பொதுமக்களால் நிறைந்திருக்கின்றன என்பதை நன்கு அறிந்திருந்தும் படையினர் மருத்துவமனைகளை வேண்டுமென்றே இலக்குவைத்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மருத்துமனைகள் இலக்கு வைக்கப்படுவது தொடர்பாக அரச மருத்துவப் பணியாளர்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு என பலதரப்பட்டோரும் அரச படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எடுத்துக்கூறியும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் மே மாதம் வரை தொடர்ந்தன.

மனிதாபிமானப் நடவடிக்கைகளை இலக்குவைத்து வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள். இடம்பெயர்ந்து வசித்து வந்த மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை நன்கு அறிந்திருந்தும் படையினர் இந்த இடங்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதலை நடாத்தினார்கள். மனிதாபிமானப் பணியாளர்கள், நிவாரணப் பொருட்களைக் கொண்டுவந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்களால் இந்த இடங்கள் நிறைந்து காணப்பட்டன.

அத்தியாவசிய உதவிப் பொருட்களைப் பெறுவதற்காகக் காத்துநின்றவர்கள் அல்லது இந்தப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள், கைக்குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட எண்ணிலடங்காதவர்கள் கொல்லப்பட்டார்கள்.

தொடர் இடப்பெயர்வுகளுக்கு முகம்கொடுத்து நின்ற இந்த மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் அனுப்பப்படுவதைச் சிறிலங்கா அரசாங்கம் தடை செய்ததைத் தொடர்ந்தே பாதுகாப்புப் பிடையினர் பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களை முடுக்கிவிட்டார்கள்.

தவிர, இந்தப் பகுதிகளில் உண்மையாக இருந்த மக்கள் தொகை எவ்வளவோ அந்தத் தொகையின் மூன்றில் ஒரு பகுதி மக்களே அங்கிருப்பதாகவும் அரசாங்கம் வாதிட்டது.

குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகச் சிறிலங்கா அரசாங்கம் கருத்துக்கூறவேண்டும் என்ற அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினது வேண்டுகைக்கு அரசாங்கம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதை காட்டும் காத்திரமான ஆதாரங்கள் இவை:

பொதுமக்கள் மீது வேண்டுமென்றே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை. மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்ல முயற்சி பொதுமக்களை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டமையினால் பலர் கொல்லப்பட்டதோடு மேலும் பல பொதுமக்கள் காயமடைந்திருந்தனர்.

தொடர்ந்துகொண்டிருந்த மோதல்களின் விளைவாக பொதுமக்கள் கொல்லப்பட்டுக்கொண்டும் காயமடைந்துகொண்டும் இருந்தபோதும், அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் எதுவுமற்ற நிலையில் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோதும் அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை.

பொதுமக்கள் பலரைக் கட்டாயமாகப் படையினர் இணைத்துக்கொண்ட புலிகள் உடன்பட மறுத்தவர்களைக் கடுமையாக அடித்திருக்கிறார்கள். களமுனைப் பணிகளுக்காகவும் கட்டாயத்தின் பெயரில் மக்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

போர் நடாத்தப்பட்ட விதம் தொடர்பிலும் இரண்டு தரப்பினதும் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள் இதில் எத்தகைய பங்கினை வகித்தனர் என்பது தொடர்பாகவும் பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஓகஸ்ட் 2009 தொடக்கம் அனைத்துலக நெருக்கடிக் குழு திரட்டிய ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்தக் குற்றங்களை நேரடியாகக் கண்டவர்களது சாட்சியங்கள், நம்பத்தகுந்தது எனக் கருதப்படும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், காணொலிகள், செய்மதிப் படங்கள், ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் தொடர்புகள் என்பவற்றை பலதரப்பட்ட நம்பத்தகுந்த தகவல் மூலங்களிடமிருந்து அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு திரட்டியிருக்கிறது.

இறுதிப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடந்தேறிய ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களே தற்போதுள்ளது. ஆனால் போர்க் குற்றங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சியின் முதலாவது நகர்வாக இது அமையும்.

வயதில் குறைந்த சிறுவர்களைப் புலிகள் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தியமை மற்றும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடைந்த புலிகளைப் படையினர் சுட்டுக்கொன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்படவேண்டும்.

இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பெரும்பாலான சர்வதேச சமூகத்தினர் பாராமுகமாகச் செயற்பட்டார்கள். எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடவேண்டாம் என சர்வதேச சமூகத்தின் சில தரப்பினர் அறிக்கையினை மாத்திரம் விடுத்துவிட்டு நடவடிக்கை எதனையும் முன்னெடுக்காமல் இருந்த அதேநேரம் இதுபோன்ற எந்த வன்முறைச் சம்பவங்களிலும் தான் ஈடுபடவில்லை என சிறிலங்கா அரசாங்கம் அடித்துக் கூறிவந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பே எனப் பிரகடனப்படுத்தி பல நாடுகள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை வரவேற்றன. தமிழர்களது அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கோ அல்லது மனித உரிமை நிலைமைகள் மேம்படும் வகையில் செயற்படவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தத்தினைக் கொடுப்பதற்குத் தவறிய இந்த நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தினது கடும்போக்குடனான நிலைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டன.

பொது மக்களின் பெரும் அவலத்திற்கு மத்தியிலும் போரின் விதிமுறைகளுக்குச் சவால் விடுக்கப்பட்டதோர் நிலைமையிலுமே விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையினது நம்பகத்தன்மையினை குறைப்பதாகவே இது அமைந்ததோடு சிறிலங்காவிலும் உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கசப்புணர்வு வலுப்பெறுவதற்கும் காரணமாக அமைந்தது.

தத்தமது நாடுகளிலுள்ள கிளர்ச்சிக் குழுக்களதும் வன்முறையில் ஈடுபடும் குழுக்களதும் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்குச் 'சிறிலங்காவில் கைக்கொள்ளப்பட்ட முறைமையினை' நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சில நாடுகள் முனைகின்றன.

எதற்கும் கட்டுப்படாத இராணுவ நடவடிக்கை, பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்ற முடிவு மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறம்தள்ளுதல் போன்ற அம்சங்களைச் சிறிலங்காவில் கிளர்ச்சியினை முடிவுக்ககுக் கொண்டுவருவதற்காகக் கைக்கொள்ளப்பட்ட முறைமை தன்னகத்தே கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களிலிருந்து மீள வேண்டுமெனில், இரண்டு தரப்பினரும் புரிந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இந்தக் குற்றங்களைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்கா ஓர் அங்கத்துவ நாடாக இல்லை. அத்துடன் குறித்த இந்தக் குற்றங்களை சர்வதேசக் குற்றவில் நீதிமன்றின் முன் ஐ.நா கொண்டுசெல்வதற்கான ஏதுநிலை தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.

புரிந்த குற்றங்களுக்காக விடுதலைப் புலிகளின் குறித்த சில உறுப்பினர்கள் சிறிலங்காவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படலாம். ஆனால், தவறிழைத்தவர்கள் தண்டிக்காமல் விடப்படும் கலாச்சாரம் சிறிலங்காவில் இருக்கும் நிலையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதான விசாரணை இடம்பெறுவதற்கான சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமானது. அத்துடன் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சிலர் ஐக்கிய அமெரிக்கா போன்ற இரண்டு நாடுகளின் குடியுரிமையினைப் பெற்றிருக்கிறார்கள். போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை இந்த நாடுகள் தொடர்ந்தும் தங்களது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும்.

பரிந்துரைகள்: சிறிலங்கா அரசாங்கத்திற்கானது

01.

இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைதுப் போர்க் குற்றங்களையும் விசாரணை செய்தவற்கான சர்வதேசத்தினது முயற்சிகளுக்கு துணை நிற்றல். ஐ.நா சபையினது ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற இது போன்ற விசாரணைகளின் போது மோதல் இடம்பெற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றிச் செல்வதற்கு வழிசெய்வதோடு சாட்சியங்களுக்குத் தேiவான பாதுகாப்பினை வழங்குதல்.

02.

போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாக திறந்த நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்துவதோடு, குறிப்பிட்ட நபர் குற்றமிழைத்தார் என்பதை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்கள் இல்லாதிருந்தால் அவரை விடுதலை செய்தல்.

03.

கடந்த ஆண்டு போர் இடம்பெற்ற போர் நடாத்தப்பட்ட முறைமை தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், உணவைப் பெறுவதற்கான உரிமை, மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான உரிமை, பயங்கரவாதத்தினை எதிர்க்கும் அதேநேரம் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவர்களைச் சிறிலங்காவிற்கு அழைத்தல். இவர்களுடன், இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள், ஆயுத மோதல்களில் சிறுவர்கள் போன்றவற்றுக்கான விசேட பிரதிநிதிகளும் அழைக்கப்படவேண்டும்.

04.

சர்வதேசச் செஞ்சிலுவைக் குழுவினதும் அத்துடன்ஃஅல்லது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரினதும் துணையுடன் போரின் போது கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளவேண்டும். இவர்களது மரணத்துக்கான, காயமடைந்தமைக்கான அல்லது காணமற்போனமைக்கான காரணங்களும் உள்ளடக்கப்படவேண்டும். இறந்தவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதோடு கொல்லப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் சொத்துக்களை இழந்த மற்றும் சேதமக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும்.

05.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் உள்ளிட்ட அனைத்துத் தடுப்பு முகாம்களுக்கும் சென்று வருவதற்கான அனுமதி சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிற்கு வழங்கப்படுவதோடு சர்வதேசச் சட்ட நியமங்களுக்கு அமைய இவர்கள் நடாத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதனது அங்கத்துவ நாடுகளுக்குமான பரிந்துரைகள்

06.

போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமாக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கவேண்டும். அத்துடன் இரண்டு தப்பினரும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதோடு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைக்கவேண்டும் என இந்த விசாரணைக்குழுவினைப் பணிக்க வேண்டும்.

07.

ஐக்கிய நாடுகள் சபையினது சொத்துக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் போரின் இறுதி ஆண்டுகளில் ஐ.நா சபை நடந்துகொண்ட முறை தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்தல். போர் நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு கோரிய ஐ.நாவின் முயற்சி மற்றும் செப்ரெம்பர் 2008இல் கிளிநொச்சியிலிருந்து ஐ.நா வெளியேறியமை மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய இடம்பெயர்ந்தோர் முகாம்களில் ஐ.நாவினது செயற்பாடு தொடர்பாக ஆராய்தல்.

08.

கடந்த ஆண்டு போர் இடம்பெற்ற போர் நடாத்தப்பட்ட முறைமை தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், உணவைப் பெறுவதற்கான உரிமை, மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான உரிமை, பயங்கரவாதத்தினை எதிர்க்கும் அதேநேரம் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவர்களுக்குப் போதிக அதிகாரங்களை வழங்குதல். வயதில் குறைந்தவர்கள் கட்டாயமாகப் படையில் இணைக்கப்பட்ட விடயம் தொடர்பாக விசாரணையினை மேற்கொள்வதற்கு ஆயுத மோதல்களில் சிறுவர்களுக்கான விசேட பிரதிநிதிக்கு அதிகாரங்களை வழங்குதல்.

09. ஐ.நாவிடம் தற்போதிருக்கும் தகவல்கள் மற்றும் ஐ.நாவினால் பெறக்கூடிய தகவல்களை அடிப்படையாகவைத்து சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்குத் தேவையான அனைத்து தம்பத்தகு முனைப்புக்களையும் மேற்கொள்ளவேண்டும்.

10.

சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு அமையவே ஐ.நாவின் அமைதி காக்கும் பணிகளில் சிறிலங்காவினது படைவீரர்களும் ஈடுபடுத்தப்படுவது உறுதிப்படுத்தவேண்டும். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தார்களா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நாவின் அமைதி காக்கும் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு படைவீரர் தொடர்பாகவும் ஆராயவேண்டும்.

இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகளுக்குமான பரிந்துரைகள்:

11.

சர்வதேசச் சட்ட விதிகளுக்கு அமைய நீதியான சட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாடு இல்லாமல் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைச் சிறிலங்காவிற்கு நாடு கடத்தக் கூடாது.

12.

குறிப்பிட்ட இந்த நாடுகளில் குடியிருப்பவர்கள் அல்லது குடியுரிமை பெற்றவர்கள் யாராவது போர் குற்றங்களில் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டால் அவை தொடர்பான விசாரணையினை உடனடியாக மேற்கொள்ளுதல். இதுபோன்ற விசாரணைகளின் போது அரசாங்கத்திடம் உள்ள செய்மதிப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் அனைத்தையும் குறிப்பட்ட அரசாங்கங்கள் விசாரணையாளர்களுக்கு வழங்கவேண்டும்.

பாதுகாப்புப் படையினரின் அல்லது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீது போர்க் குற்றங்களில் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படிருந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்காது விடப்படவேண்டும் எனக்கோரி இவர்களின் சார்பாக விடுக்கப்படும் வேண்டுகைகளை நிகாரித்தல்.

13.

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையாளர்களுக்கு உதவியாக சாட்சியங்களைப் பாதுகாக்கும் ஒரு முனைப்பாக சாட்சியங்களுக்கு புகலிடம் வழங்கப்படவேண்டும் அல்லது சாட்சியங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

14.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு ஏதுவாக அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தவறுமிடத்து சிறிலங்காவினது அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களுக்குமான பயணக் கட்டுப்பாட்டினை விதிப்பது உள்ளிட்ட சிறிலங்காவிற்கு எதிரான தடைகளைக் கொண்டுவரவேண்டும்.

http://www.puthinappalakai.com/view.php?20100521101153

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.