Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வதை முகாம்களும், பெண் வாழ்வும்........

Featured Replies

நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.

நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம்

. அவர்கள் இல்லத்தில் இன்னொரு அறையில் அவரின் கணவோரோடு பேசிக் கொண்டிருந்த போது எங்கேயோ கேட்ட வெடிச் சத்தம் அப்பெண்ணின் அமைதியைக் குலைக்கிறது. ”வெடிச்சத்தம் கேக்குது. பிள்ளையைக் கூட்டிக்கொண்டு இங்கை வாங்கோ..” என்று அலறுகிறார். கணவர் சென்று தனது மனைவியான அப்பெண்ணை தேற்றுகிறார். சிறிது நேரம் கழித்து விசும்பலாக அப்பெண் குழந்தைகளை நினைத்து அழுகிறார். இவைகளை வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன்.

அப்பெண்ணுக்கு நரம்புத் தளர்ச்சி என்னும் குறைபாடு இந்த யுத்தக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. ஆமாம் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது? எங்கெ தேடுவது? என்றும் தெரியவில்லை. அவர் தன் குழந்தைகளை மறந்தாக வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் குழந்தைகள் பற்றிய நினைவுகள் மட்டுமே அவரது நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் உலகின் வேறேந்த யுத்தப் பிராந்தியத்திலும், இவ்வளவு தொகையான குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போயிருப்பார்களா? என்று தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் காணாமல் போகும், காஷ்மீரில் காணாமல் போகும் மனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இராணுவ வேலிகளுக்குள் காணாமல் போன ஈழ மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் எவரோ ஒருவரை யுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். சிதைக்கபப்ட்டுள்ள இந்த வாழ்வின் மொத்த துன்பங்களையும் அனுபவிக்கப் போவது பெண்கள்தான். ஆமாம் பெண்கள் மட்டுமே. ஏனென்றால் எதிர்காலம் என்ற ஒன்று பெரும் பாரமாக அவர்கள் மிது இறங்கியிருக்கிறது. இராணுவம், பேரினவாதம், கலாசாரவாதம், மறுகாலனியாதிக்கம் என்று அதிகார வர்க்கங்களுக்கிடையில் நிராதரவான பெண்கள் தங்களின் சுயமரியாதைக்காகவே ஏராளமாக போராட வேண்டியிருக்கிறது.

காணாமல் போதல் என்பது சிறுபான்மை மக்களினங்களுக்கு விடுக்கப்பட்ட நீண்ட கால அச்சுறுத்தல். அவர்கள் காணாமல் போன தங்களின் ரத்த உறவுகளை காலம் முழுக்க தேடிக் கொண்டே இருக்கும் படியான ஒரு மன உளைச்சலை, நிம்மதியின்மையை பேரினவாதம் அவர்களுக்கு பரிசளிக்கிறது. காணாமல் போதல் என்னும் நீண்ட கால அச்சுறுத்தல் வழியே அதிக மக்களை இழந்திருப்பது தமிழ் மக்கள்தான். நூற்றில் ஐந்து பேர் ஊனமடைந்திருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் மடிந்திருக்கிறார்கள், என்றால் இந்தக் காயங்களை யார் எப்போது ஆற்றுவார்கள்?

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005 – ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் கடத்தப்பட்ட யுத்த சூனியப் பகுதிகளுக்குள் சிக்கி காணாமல் போன குழந்தைகள், இளம் பெண்களுக்கு பொறுப்பாளிகள் யார்?

எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது. சந்திக்குச் சந்தி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்புகளும், சீருடை அணிந்த இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டற்ற சுதந்திரமுமே பெண்களை அதுவும் சிறுபான்மை தமிழ் பெண்களை அபகரித்துக் கொள்ளத் தூண்டுகிறது. இலங்கைத் தீவில் கட்டி எழுப்பட்டிருக்கும் பெரும்பான்மை வாதம் என்பது மிக மோசமான பாசிச பயங்கரவாத ஆபத்து நிறைந்தது. இங்கே ஒரு தமிழரை துன்புறுத்துவதன் மூலம் பெரும்பான்மை வாதம் பௌத்த சிங்கள பேரினவாதத்திடம் தன் நம்பிக்கையை ஒரு மடங்கு அதிகரித்துக் கொள்கிறது. உளவியல் ரீதியானதும், பெரும்பான்மை தேசிய வெறி சார்ந்ததுமான இந்தக் களிப்பு தென்னிலங்கையில் பற்றிப் படர்ந்திருக்கிறது.

மிகச்சரியாகச் சொன்னால் பம்பலப்பிட்டி பாலகிருஷ்ணன் சிவக்குமாரைச் சொல்லலாம். மன நலம் பாதிக்கப்பட்ட அந்த 26 வயது தமிழ் இளைஞர் பேருந்துகளின் மீதும் இரயில் மீதும் கற்களைக் கொண்டு எறிய அந்த தமிழ் மன நோயாளியை கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க அடித்தே கொன்றார்கள் சிங்கள போலீசார். ஒருவன உயிர் போகிற அளவுக்கு அடிப்பதும் அதை பல நூறு பேர் வேடிக்கை பார்ப்பதையும் நினைக்கும் போது சிங்களர்களே ஒரு கூட்டுவெறி மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பர்களோ என்றுதான் தோன்றுகிறது.

புலிகள் இருந்தவரை தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு பாதுகாப்பு நிலை இருந்தது என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. புலிகளையும் மக்களையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற வாக்கியத்தை அடிக்கடி உதிர்த்தது இந்தியா. ஆனால் இலங்கை எப்போதும் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அதனால்தான் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு என்ன நடந்ததோ அதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கும் நடந்தது. கூட்டுக்கொலையில் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாத அளவுக்கு குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களைத் துரத்திக் கொலை செய்தார்கள்.

தேசிய இனப்பிரச்சனையின் நிமித்தம் ஆயுதம் ஏந்திப் போராடும் போராடும் மக்கள் வேறு, போராளிகள் வேறு என்று எப்போதாவது இவர்கள் பார்த்தார்களா? அப்படிப் பார்த்திருந்தால் ஐமப்தாயிரத்திற்கும் மேலதிகமான மக்களை இப்படி கொடூரமாக கொன்றொழித்திருப்பார்களா? என்ற கேள்வியை இந்தியாவை நோக்கி நாம் கேட்டாக வேண்டும். வன்னிப் போர் முள்ளிவாய்க்காலில் கொடூரமான முறையில் முடிவுற்றதைத் தொடர்ந்து இராணுவத்திடம் பிடிபட்ட மக்கள் நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டார்கள். சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் எங்குமே அவர்கள் தப்பிச் செல்ல இயலாத நிலை. அதுவும் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ அது சாத்தியமே இல்லை. பல ஆண்கள் இறுதிப் போரின் போது தப்பியிருக்க, ஆதரவில்லாத பெண்கள் மிக மிக ஆபத்தான முறையில் இராணுவத்தினரிடம் சிக்கியிருக்கிறார்கள். செஞ்சோலை சிறுவர் இல்லக் குழந்தைகளும் அதில் அடக்கம். ஆனால் இன்று வரை அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

செஞ்சோலை படுகொலைகளைத் தொடர்ந்து செஞ்சோலை சிறுவர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் குழந்தைப் போராளிகளே என்று இலங்கை அரசு சொல்லி வந்த நிலையில் சுமார் 150 பேர் வரையான ஆதரவற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்தக் குழந்தைகளுக்கு பொறுப்பேற்கவும் யாரும் இல்லை என்கிற நிலையில் இந்தக் கேள்வி இன்றைய புலி ஆதரவாளர்களாலேயோ, மனித உரிமை ஆர்வலர்களாலேயோ, தமிழார்வலர்களாலேயே இன்று வரை முன் வைக்கப்படவில்லை.

மே மாதம் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணா ஒரு அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருக்கும் எவரும் பொது மக்கள் அல்ல எல்லோருமே போராளிகளாகவும், மாவீரர் குடும்பங்களை சார்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள் என்றார். போரின் இறுதி அழிவை வழி மொழிந்த முதல் குரல் அதுதான். அடுத்த சில நாட்களில் முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் பேர் வரையிலான போராளிகளும் பொதுமக்களும் அவர்களின் குடும்பங்களோடு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

பொது மக்களோ, போராளிகளோ, அவர்களின் குடும்பங்களோ, ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் குவித்து வைத்து இப்படியான கூட்டுக் கொலைகளை நிகழ்த்துவதும், அக்கொலைகளுக்கு போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று நியாயம் கற்ப்பிப்பதும் கூட போர்க்குற்றம்தான். ஆனால் அத்தோடு முடிந்து போன ஒன்றாக இக்கொலைகள் இல்லையே? மே மாதம் 13,14,15, 16,17,18,19 ஆகிய தேதிகளில் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல். அதன் பின்னர் நடந்தவைகளை உலகமும் சரி ஏனையவர்களும் சரி கொலைகளாக எண்ணும் நிலை இல்லை.

வதை முகாம்களும்… பெண் வாழ்வும்…

போர் முடிவடைந்த உடன் வவுனியா முழுக்க அமைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட முகாம்ககளுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் குறித்து எண்ணிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. வன்னி மககள் தொகை என்பதே அறியப்படாத நிலையில் அதையே இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு வாய்ப்பாகக் கருதினர். முகாம்களுக்குள் படையினருக்கும், பயங்கரவாதத் தடுப்புப் போலீசுக்கும் வழங்கப்பட்டிருந்த கட்டற்ற சுதந்திரம் அவர்களை பெரும் வேட்டையில் ஈடுபட வைத்தது. போர் முடிந்து சில மாதங்கள் கழித்து ஒட்டு மொத்தமாக இந்த முகாமகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 57,293 சிறுவர்களும், 7,894 விதவைப் பெண்களும், 3,100 கர்ப்பிணிப் பெண்களும், 11,877 காயமடைந்தோரும் இருப்பதாக பொத்தாம் பொதுவாக ஒரு கணக்கைச் சொன்னது இலங்கை அரசு.

ஆனால் மக்களின் எண்ணிக்கை குறித்து முதலில் ஒரு கணக்கை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எடுத்ததாகவும் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கெடுப்பை முகாம்களுக்குள் நடத்திய போது கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் மக்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்றோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ இலங்கை அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை என்று சர்வதேச தன்னார்வக் குழுக்கள் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக 13 வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான எந்தத தமிழரும் முகாமுக்குள் நிம்மதியாக உறங்கவோ உறவினர்களோடு சேர்ந்து வாழவோ சாத்தியமில்லாத சூழுல் அங்கே நிலவுவது மட்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆண்கள் என்றாலோ, ஆண் பிள்ளைகள் என்றாலோ அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் அவர்கள் திரும்ப வருவதே இல்லை. அவர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள். ஆனால் காணாமல் போனோர் பற்றி முகாம்களுக்கு வெளியில் இருக்கும் மக்களே முறையிட எந்த ஒரு நேர்மையான சட்ட ஆணையமும் இல்லாத போது முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? எங்கே போய் தொலைந்து போன தன் மகனைத் தேடுவார்கள்?

போர் முடிவடையும் தருவாயில் மே – 15 ஆம் தியதி இலங்கைப் படையினரிடம் பிடிபட்ட சூசையின் மனைவி, குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? அவர்களின் 17 வயது இளம் பருவ பெண்ணான மதியின் நிலை என்ன? புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச் செல்வனின் மனைவியும் படையினரிடம் சரணடைந்தார். அவரையும் அவரது குழந்தையையும் கருணா அம்மான் சென்று சந்தித்ததாக செய்தியும் வெளியானது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று இன்று வரை எந்தத் தகவலும் இல்லை.

அது போல மகளிர் அரசியல் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்த தமிழினி மெனிக்பாம் முகாமில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை குற்றப் புலனாய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்தே விசாரிக்கலாம் என்று நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ள நிலையில் அவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை யாராலும் அறிந்து கொள்ள இயலவில்லை. அறியப்பட்ட இம்மாதிரியான பிரமுகர்கள் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்பி இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக பிடித்துச் செல்லப்பட்டு வதை முகாம்களுக்குள்ளும், ரகசிய தடுப்பு முகாம்களுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள், சிறுவர்கள், போராளிகள் இவர்களுக்காக குரல் கொடுக்க ஏன் இன்று எவரும் முன்வரவில்லை.

அரசோடு பேரம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் புலம் பெயர் சக்திகள் கூட இந்த அரசியல் கைதிகளுக்காக பேச மறுக்கின்றனர். புத்தி உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பதைப் போல இலங்கைக்கு வெளியே முன்னாள் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்களுக்காக பல்வேறு தொழில்களையும் நடத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் இன்று இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு வடக்குப் பகுதியில் முதலீட்டிற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. ஆக பணம் இருக்கிறவன் பேரினவாதிகளுடன் சமரசமாகப் போகிறான். அல்லது பணத்தால் உறவை புதுப்பித்துக் கொள்கிறான். ஆனால் இப்பெண்கள், இந்தக் குழந்தைகள், இவர்கள் புலிகளிடம் இருந்து கடந்த காலங்களில் எவ்வித ஆதாயங்களையும் பெறாத ஏழைகள். இவர்கள்தான் தாயக விடுதலைப் போருக்காக தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைத்தவர்கள்.

இவர்களைத் தவிர புலிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களான பேபி சுப்ரமணியம், புதுவை இரத்தினதுறை, யோகி என்னும் யோகரத்தினம், பாலகுமார் போன்றோரைக் கூட போர் முடிந்த அன்றே ( 18,19, ) இராணுவம் பிடித்துச் சென்றதாக செய்திகள் வந்தன. இவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் இந்த அரசியல் கைதிகளை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை, என்பதெல்லாம் கூட கேள்விகளாக மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. கிடையில் சிக்கிக் கொண்ட ஆடுகளுக்கு அதைக் காவல் காக்கும் நரிகளால் என்ன நேருமோ அதுதான் இந்த அரசியல் கைதிகளுக்கு நேர்கிறது.

படையினர் முகாம்களில் உள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்து விட்டு அவர்களுக்கு உணவோ, உடுதுணியோ கொடுக்கிறார்கள் என்று லண்டன் மருத்துவர் வாணி குமார் குற்றம் சுமத்தினார். வாணி குமார் மட்டுமல்ல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இவ்விதமான குற்றச்சாட்டை முகாம்களில் உள்ள இராணுவத்தினர் மீது கூறியிருந்தது. ஆனால் வாணியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பேரழிவு மேலாண்மை, மனித உரிமைகள் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ விஜயசிங்கே ” வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம் ” என்று திமிராக பதில் சொல்லியிருக்கிறான்.

புலிகள் இருந்திருந்தால் இவன் கொல்லப்பட்டிருக்கக் கூடுமோ? புலிகள் தேவையில்லாத எத்தனையோ கொலைகளைச் செய்தார்கள், செய்ய வேண்டிய பல விஷயங்களைச் செய்யாமல் விட்டார்கள். அப்படி விடப்பட்டவர்களில் பலரும் இன்று பிரபாகரன் இல்லாதது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்களாம். ஒரு தமிழ் பெண்ணின் துன்பத்தை ஏளனம் செய்வதோடு அதிகாரம் கொடுக்கும் திமிரும் இங்கே சேர்ந்து விடுவதால் இந்த எள்ளல் வருகிறது. முகாம்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறியிருக்கிறது. முகாம்களுக்கு வெளியிலும் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பேணுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இலங்கையில் எப்போதெல்லாம் இராணுவம் பாரம்பரீய வசிப்பிடங்களை சுற்றி வளைக்காத பகுதிக்குள் மக்கள் வாழ்கிறார்களோ அதுவே மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வுக்காலமாக இருந்திருக்கிறது. இதை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் மத்திய இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரிலும் (உலகக் கோடீஸ்வரனான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா என்னும் சுரங்க நிறுவனத்திற்கு பாக்ஸைட் வளங்களை தாரை வார்த்திருக்கும் இந்திய அரசு, அந்த வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் பழங்குடிகளையும், மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடி அழிக்க ஆபரேஷன் க்ரீன் கன்ட் என்னும் போரை மத்திய இந்தியாவில் நடத்தி வருகிறது.) இதே நிலைதான்.

இராணுவ சுற்றி வளைப்பில் ஆண்கள் அழிக்கப்பட்டு பெண்கள் சிக்கிக் கொள்கிற போது பெண்ணுடல் இங்கே பேரினவாதத்திற்கு பலியாகிறது. போர்க்காலங்களில் பெண்ணுடல் இராணுவ வெறிக்கு இறையாவது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யுத்தமும், சமூகமும் ஆண்களை இழந்த பெண்களை நிராதரவான முறையில் கைகழுவி விடுகிறது. சமீபத்தில் லண்டன் மருத்துவர் வாணிகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளை நமது பழமைவாத தமிழார்வலர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்?

“தமிழ் பெண்கள் ஒரு வேளை உணவுக்காக கற்பை விற்கிறார்களா? வாணிகுமார் தமிழ் பெண்களை இழிவு செய்கிறார். புலியையே முறத்தால் விரட்டிய எமது பரம்பரைப் பெண்களா, சிங்களவனுக்கு தங்களை இறையாக்கிக் கொள்கிறார்கள்” என்று பண்பாட்டுப் பழமை மேலோங்க தமிழ் கற்பின் பெருமை பேசியிருந்தார்கள். வாணிகுமார் எங்குமே தமிழ் பெண்கள் தங்களை விற்றுக் கொள்வதாக சொல்ல வில்லை. பெண்களை அவர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள், வன்முறையான முறையில் புணர்கிறார்கள் என்றுதான் சொல்லிருந்தார். இப்படி பெண்கள் மீதான வன்கொடுமைக்காக பேசுபவரைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தமிழ் பண்பாட்டுவாதிகள், கிழக்கிலும் வடக்கிலும் மிகப் பெரிய தனிச் சமூகமாக உருவாகி நிற்கும் விதவைப் பெண்களை எப்படி கையாள்வார்கள் அல்லது எதிர்கொள்வார்கள் என்பதற்கு இதுவே சாட்சி….

வடக்கு – கிழக்கு விதவைகள்

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமூகம் இரு பெரும் பாரிய மனித அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒன்று 2004 – டிசம்பரில் வந்த சுனாமி அனர்த்தனம். இன்னொன்று 2007 – இல் துவங்கி 2009 முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இன அழிப்பு யுத்தம். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை சுனாமி பலி எடுத்தது என்றாலும் அது இயற்கை நிகழ்வு. இயற்கைப் பேரழிவுகளின் போது மனிதர்கள் தங்களுக்குள் உள்ள உறவுகளை பலப்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கை அனர்த்தனத்தை கூட்டு சேர்ந்தே எதிர் கொள்கிறார்கள். இடம் பெயர்கிறார்கள். உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். பல நேரங்களில் இயர்க்கை அனர்த்தனம் ஏற்படும் போது வீடு, குடும்பம், சொத்து இவைகளுக்கு அப்பாற்பட்ட மனித அன்பு பாதிக்கப்பட்ட சமூகங்களில் நிலவுவதைப் பார்க்கலாம்.

ஆனால் வன்னி மீதான யுத்தம் என்பது இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து உருவாக்கிய செயற்கையான யுத்தம். நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு ஒன்றை முன் வைப்பதற்குப் பதில் ஒடுக்கப்படும் இன மக்களை அழித்தொழிக்கும் கொடூரமான போரை முன்னெடுத்தன இந்திய, இலங்கை அரசுகள். எண்பதுகளில் வேர் விட்ட அரசியல் மேலாண்மையற்ற ஆயுதப் போராட்டச் சூழலும் கடந்த முப்பதாண்டு காலமாக மக்களை காவு வாங்கியிருக்கிறது. கடத்தல், காணாமல் போதல், கொலைகள், பாலியல் வன்முறை, கூட்டுக் கொலை என லட்சக்கணக்கில் மக்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இழந்திருக்கிறது. இதில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமான முறையில் உள்ளது.

”வடக்கிலும் கிழக்கிலுமாக 85 ஆயிரம் விதவைகள் உள்ளதாகவும் இதில் 45 ஆயிரம் பேர் யுத்த விதவைகள்” என்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஒரு முறை பாராளுமன்றத்தில் சொன்னார். உண்மையில் வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பது போல விதவைகளின் எண்ணிக்கையையும் இலங்கை இன்று வரை சரி வர வெளிப்படுத்தவில்லை. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு விதவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்றால் அவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும்.

இலங்கையின் கிழக்கு மாகாணமே விதவைகளின் எண்ணிக்கை அதிகமான மாகாணம் என்று சொல்லப்பட்டாலும் போருக்கு தங்களை ஈடுபடுத்தி கொண்ட சிங்களச் சிப்பாய்களின் மனைவிகளும் போரில் விதவைகளாகியிருக்கிறார்கள். சுமார் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை தென்னிலங்கையில் இவ்விதம் விதவைகளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள விதவைகளுக்கு அரசு பல்வேறு புனர்வாழ்வுத் திட்டங்களை அறிவித்திருப்பதோடு, அவர்கள் இன்று தேசிய நாயகர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதே வேளை வடக்கில் விதவையானவர்களுக்கு மாதா மாதம் அரசு தரும் தொகை வெறும் 100 ரூபாய்தான். விலைவாசி ஏற்றம், படுகுழிக்குப் போய்விட்ட பொருளாதாரம், வறுமை, வேலையிழப்பு உள்ள வடபகுதியில் இந்த நூறு ரூபாயை வைத்து ஒரு பெண் என்ன செய்ய முடியும்?

இம்மாதிரி ஆதரவற்ற பெண்கள் குறித்த புள்ளிவிவரங்களில் எல்லோரும் குறிப்பிடுகிற ஒன்று இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதுக்குட்பட்ட இளம் விதவைகள் என்பதைத்தான். இந்த வயதும் அது நமக்கு இந்த விதவைபெண்கள் குறித்து எழுப்பும் தோற்றப்பாடும் பாலியல் ரீதியான கலாசார கண்காணிப்பை இப்பெண்கள் மீது சுமத்தும் ஒரு பார்வையாகவும் தெரிகிறது. கடுமையான இந்து சாதி ஒழுக்கங்களைப் பேணும் தமிழ் சமூகத்தில் மாங்கல்ய பாக்கியம் வாய்த்த பெண்களே கௌரவமான சமையல்காரிகளாக நடத்தப்படும் போது, ஆதரவற்ற பெண்களை கடும் ஒழுக்கத்தை பின்பற்றும் சமூகம் எப்படி கையாளும் என்பதை தமிழ் பெண்களின் கற்பு நெறி தொடர்பான தமிழ் கதையாடலில் நாம் காண முடியும்.

ஆனால இந்த எல்லைகள் எல்லாம் ஒரு நாள் உடைபடும். பாலியல் உரிமைகளையும், சுயமரியாதையும் பேண முடியாத பெண்கள், தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் எண்ணம் வரும் போது சாதி, மத பிற்போக்குக் கோட்பாடுகள் உடைவதை யார்தான் தடுக்க முடியும்? அல்லது தடுப்பதற்கு நமக்கு என்னதான் உரிமை இருக்கிறது?

இவைகளை எல்லாம் எழுதி முடித்த பின்பு இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ள இப்பெண்கள் குறித்தும் அவர்களின் சமூக, வர்க்கப் பிரச்சனைகள் குறித்தும் நான் என்ன தீர்ப்பிடுவது என்பதை யோசித்தேன். தன்னார்வக் குழுக்கள் இவர்களை தத்தெடுக்க வேண்டும் என்றோ, உலகின் உயரிய பெண்கள் ஆணையம் இப்பெண்களை கவனிக்க வேண்டும் என்றோ, அரசு உதவித் தொகையை உயர்த்துவதோடு, அவர்களின் புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோ நான் எழுதலாம், அல்லது அவர்களின் உழைப்பிற்கான, பாலியல், சுயமரியாதை கௌரவம் உத்திரவாதப்பட வேண்டும் என்றோ, உற்பத்தியில் அவர்கள் நேரடியாக பங்கு பெறும் வழி வகை காணப்பட வேண்டும் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் செய்ய யார் இருக்கிறார்கள்?

வடக்கு கிழக்கின் ஏழைத் தமிழக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்பட்டுள்ள இந்த பெண்களை காப்பாற்றுவது என்பது என்ன? அவர்களது வாழும் உரிமை நசுக்கப்பட்டுள்ள நிலையில் நம்முடைய மனிதாபிமான மூச்சின் அருகதை என்ன? சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றி, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் தோல்விகள்…. இவற்றின் தொடர்ச்சியை மட்டும் நாம் துண்டித்து பார்க்க முடியுமா? இருந்தாலும் அந்த விதவைப் பெண்களின் நிர்க்கதியற்ற முகங்கள் நம்மை அமைதியாக பார்க்கின்றன, இல்லை கேட்கின்றன.http://uyirambukal.blogspot.com/2010/05/blog-post_7593.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.