Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட வன்னி விஜயம் தொடர்பான அறிக்கை:

Featured Replies

கடந்த மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட வன்னி விஜயம் தொடர்பான அறிக்கை:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வன்னி மாவட்டங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தினதுமாக மொத்தம் 28 கிராமங்களுக்கு மே மாதம் 21,22,23, 24 ஆகிய திகதிகளில் விஜயம் செய்தது தொடர்பான அறிக்கை.

12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு வன்னிக்கு மே மாதம் 21,22,23, 24 ஆகிய திகதிகளில் விஜயம் செய்தது. (1) மதியாமடு (2) நைனாமடு (3)நெடுங்கேணி (4) வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒலுமடு (5) தட்சணாமருதமடு (6) பாலம்பிட்டி (7) சின்னப்பண்டிவிரிச்சான் (8) ஈச்சலவக்கை (9) மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு (10) வற்றாப்பளை (11) முள்ளியவளை தெற்கு (12) வன்னிவிளாங்குளம் (13) தேராங்கண்டல் (14)உயிலங்குளம் (15) தென்னியன்குளம் (16) ஐயங்கன்குளம் (17) பாண்டியன்குளம் (18) நட்டாங்கண்டல் (19) ஆலங்குளம் (20) சிவபுரம் (21) வவுனிக்குளம் (22) கண்டாவளை (23) முல்லைத்தீவு மாவட்டத்தில் பாலிநகர் (24) கிளிநொச்சி பட்டினம் (25) திருவையாறு (26) தர்மபுரம் (27) கண்டாவளை (28) கிளிநொச்சி மாவட்டத்தில் முரசுமோட்டை ஆகிய கிராமங்களுக்கு நாங்கள் விஜயம் செய்தோம்.

எமது விஜயம் மற்றும் உள்ளூரில் இடம்பெயர்ந்து திரும்பியோருடன் நாம் நடத்திய கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் பயனாக இடம்பெயர்ந்து திரும்பியோரின் பல உடனடித் தேவைகள் குறித்த தகவல்களை எம்மால் திரட்ட முடிந்தது. நாம் அடையாளங்கண்டுள்ள அவ்வாறான தேவைகள் வருமாறு:-

உணவு:

உணவின் பிரதான அம்சங்களான அரிசி, மா, பருப்பு, சீனி, மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியன தற்போது உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒரு பெரிய நிவாரணம் ஆகும். இதற்காக மக்கள் பெரிதும் நன்றியுள்ளவர்களாவர். இல்லாவிட்டால் மீளக்குடியம்ர்ந்தோர் பட்டினிக்காளாகும் நிலை தான் ஏற்பட்டிருக்கும். அண்மைக்காலத்தில் சில பகுதிகளில் அரிசி விநியோகிக்கப்படவில்லை. பதிலாக கோதுமை மா அளவில் கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. (மீளத்திரும்பியோர் அரிசியைத்தான் விரும்புகின்றனர்). சில சமயங்களில் நிவாரணம் வழங்கப்படுவதில் தாமதம் காணப்படுகின்றது. உதாரணமாக மீளத்திரும்பியோருக்கு முதலில் ஒரு நாள் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படுகின்றது. இதன் பின்னர் அவர்கள் தங்கள் காணிகளுக்குத் திரும்புகின்றனர். சில சமயங்களில் உணவு நிவாரணம் தாமதமடைவதால் இவர்கள் சில நேரம் உணவு இல்லாத நிலைக்கு ஆளாகின்றனர். இது தவிர்க்கப்படவேண்டும். நிர்வாகம் ஒழுங்காக அமைவதன் மூலம் இத்தாமதத்தைத் தவிர்க்க முடியும். உலக உணவுத்திட்டத்தின் கீழான உதவி 2011 ஏப்ரல் மாதம் மாரிப்போக வேளாண்மை அறுவடை முடிவடையும் வரை தொடர வேண்டும் என்பதில் மீளத்திரும்பியோர் ஒருமனதாக எண்ணங் கொண்டுள்ளனர். வேறு எவ்வழியிலும் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்று மீளத்திரும்பியோர் கருதவில்லை.

2011 ஏப்ரல் வரை உலக உணவுத்திட்டம் தொடராதவிடத்து தாங்கள் பட்டினியை எதிர்நேக்க வேண்டியிருக்கும் என்று மீளத்திரும்பியோர் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த அபிப்பிராயமே எங்கும் தெரிவிக்கப்பட்டது. காய்கறிகள் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமலிருக்கின்றது. இதனைத் தவிர்ப்பதற்கு இப்பிரதேசங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். துரதிஷ்டவசமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது உதவ முடியாத நிலை உள்ளது. இப்பொருட்களை தற்போது தங்களால் வாங்குவதற்கு முடியாத நிலையில் மீளத் திரும்பியோர் இருக்கின்றனர்.

உலக உணவுத் திட்டத்தின் உதவிகள் 2011 ஏப்ரல் வரை தொடருவதற்கான அனைத்து முயற்சியும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மீளத்திரும்பியோருக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம்.

வீடு வசதி

நாம் பார்வையிட்ட கிராமங்களில் 80 முதல் 90 சதவீதமான வீடுகள் அழிக்கப்பட்டும் அல்லது திருத்த முடியாத அளவு சேதமடைந்தும் உள்ளன. நாம் பார்வையிட்ட கிராமங்களில் உள்ள 60 முதல் 90 சதவீதமான பழைய வீடுக்ள் கற்களால் கட்டப்பட்டு ஓடுகளைக் கொண்ட கூரைகளால் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை ஓலைக் கிடுகுக் கூரைகளுடன் கூடிய களிமண் வீடுகளாகும். வீடு வசதி செய்து கொடுப்பது பாரதூரமான பிரச்சினையாகும்.. தற்காலிக மற்றும் நிரந்தர வீடுவசதி செய்து கொடுப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பது துயரத்தை தருகின்றது. மழை காலம் ஆரம்பமாவதற்கு முன்பாக பலன் தரக்கூடிய திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், மீளத்திரும்பியோர் வெட்டவெளியில் வாழும் நிலையே ஏற்படும்.

தற்காலிகக் குடியிருப்பு வசதிக்காக பினவரும் பொருட்களே வழங்கப்பட்டுள்ளன:-

10 முதல் 12 வரையான தகரங்கள், 6 தடி அல்லது ஒன்று-இரண்டு தார்த்துணி, சில பகுதிகளில் 8 பக்கற் சிமெந்து. 9 அடி-6 அடி கொட்டிலைக் கூட அமைப்பதற்கு இவை போதுமானதல்ல. தற்காலிக குடியிருப்பை அமைப்பதற்கு மீளத்திரும்பியோர் இவற்றைப் பயன்படுத்துவதில்லை. காரணம், அவர்கள் குடியிருக்கக்கூடியதான கூரையுடனான ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். இப்பொருட்களும் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதில்லை, மற்றும் இவற்றில் ஒன்று கூட கிடைக்காத மீளத்திரும்பியோரும் இருக்கின்றனர். சிலருக்கு இப்பொருட்களின் ஒரு பகுதியே கிடைத்துள்ளன. இதன் விளைவாக சில சமயம் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரு கொட்டிலில் வசித்து சமாளிக்க வேண்டியுள்ளது. இத்தற்காலிகக் கொட்டில் முற்றாக திருப்திகராமானதாக இல்லை. இதனால் மீளத்திரும்பியோர் சீரற்ற கால நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றனர், மேலும் இதற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை அதிகமாகக் காணப்படுகின்றது.

நிரந்தர வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டிய ஏற்பாடு மிகவும் குறைந்தே காணப்படுகின்றது., மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முற்றாகப் போதுமானதாக இல்லை. மீளத்திரும்பியோர் அனைவருக்கும் தேவையான நிரந்தர வீடுகளை வழங்குவது குறித்து தீர்க்கமான திட்டம் ஏதும் இல்லாத நிலையே தற்போது காணப்படுகின்றது. நாம் சென்று பார்வையிட்ட 23 கிராமங்களில் மக்களுக்குத் ரெதரிந்த வகையில் நிரந்தர வீட்டுத்திட்டம் 3 பகுதிகளில் தான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஐநா ஹபிட்டாட் 250 வீடுகளை ஏ 9 நெடுஞ்சாலையில் அமைக்கின்றது SEED 250 வீடுகளை கனகராயன்குளம் தெற்குப் பகுதியில் அமைக்கின்றது.

N.E.K.P உலக வங்கியின் உதவியுடன் 265 வீடுகளை வன்னி விளாங்குளம் பகுதியில் அமைப்பது.

ஏனைய பகுதிகளுக்கான செயற்றிட்டங்கள் பற்றி மக்களுக்குத் தெரியாத நிலையில், ஏனைய பகுதிகளில் இவ்வாறான ஒழுங்குகள் இல்லை என்றே கருதலாம்.

வீடுகள் கட்டுவதற்காக மக்களுக்கு தவணை அடிப்படையில் 325,000 ரூபா முற்பணமாக வழங்க்கப்படுகின்றது. ஒரு சிறிய வீடு கட்டுவதற்குக் கூட இப்பணம் போதுமானதல்ல என்பதே அனைவரினதும் பொதுவான கருத்தாகும்.

வன்னிவிளாங்குளத்தில் I.O.M. என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒரு அரை நிரந்தர வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 80,000 ரூபா வழங்குவதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டது.

வீடு கட்டுவது தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீளத்திரும்பிய ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்களின் அழிந்து போன அல்லது திருத்தம் செய்யப்பட முடியாத அளவு சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக சிறிய, நிரந்தரமான வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆகக் குறைந்தது ஐந்து லட்சம் ரூபா கொடுக்கப்பட வேண்டும். இதுவே ஆகக் குறைந்த தொகையாக இருக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்

தொழில் - வாழ்வாதாரம்

நாம் பார்வையிட்ட பெரும்பாலான பகுதிகளில் மீளத்திரும்பியோரின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் ஆகியன நெற்செய்கை, காய்கறிச் செய்கை, சில பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியனவாக காணப்பட்டது.

நெற்செய்கை

நெற்செய்கை மற்றும் காய்கறிச் செய்கை மூலம் கணிசமான வருமானம் பெறப்பட்டது. ஏற்கனவே தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிய மீளத்திரும்பியோரில் சிலர் அரை ஏக்கர், ஒரு ஏக்கர், சில இடங்களில் 2 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொண்டிருந்தனர். அரசாங்கத்தின் செலவில் வயல் உழவு செய்யப்பட்டு, விதை நெல் வழங்கப்பட்டதாகவும் எமக்குத் தெரிவிக்கப்பட்டது. பிந்தி மீளத்திரும்பியோரில் பெரும்பாலானோர் விவசாயச் செய்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

சிறியதும் நடுத்தரமுமானதுமான குளங்கள் மற்றும் நீர்ப்பாசன வளங்களில் பெரும்பாலானவை யுத்தம் காராணமாக சேதமடைந்தும் அல்லது திருத்தப்பட வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றன. இவற்றை விவசாயிகளின் ஆலோசனையுடன் கவனமாக அடையாளங் காணப்பட்டு, அவற்றை புனரமைப்பதற்கான செயற்றிட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்டையில் செய்யப்பட வேண்டிய அவசர தேவை இதுவாகும். இது நெற்செய்கையை வெற்றிகராமாக மேற்கொள்வதற்கு மக்களுக்கு உதவும். அத்துடன் அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவையும் அதற்கு கூடுதலாகவும் உற்பத்தி செய்வதற்கும் இது உதவும்.

காய்கறிச் செய்கை

வருமானத்தை ஊக்குவிக்கும் அடுத்த பிரதான வளமாக காய்கறி உற்பத்தி அமைகின்றது. நாம் சென்ற பல கிராமங்களில் மக்கள் உள்ளுர் காய்கறிகளான வெங்காயம், மிளகாய் மற்றும் பயிர்களுடன் மலைநாட்டு காய்கறிகளான பீட்றூட், கரட், லீக்ஸ், கோவா ஆகிய காய்கறிகளையும் உற்பத்தி செய்திருந்தனர். இதற்கு அவர்களின் தோட்டங்களில் நல்ல நிலையிலான கிணறுகள் தேவைப்படுகின்றன. பெருமாபாலான கிணறுகள் அழிந்தும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. அவை புனரைமைக்கப்பட வேண்டும். பாவிக்கப்படக்கூடிய இக்கிணறுகளில் நீர் இறைக்கப்பட வேண்டும். அதற்கு மக்களுக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. காய்கறித் தோட்டங்களுக்கும் நீரிறைக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. கிருமிநாசினி மற்றும் களைகொல்லிகள் தெளிப்பதற்காக விசிறிக்கருவிகளும் தேவைப்படுகின்றன. காய்கறித் தோட்டங்களுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும், அவற்றிற்கான கம்பிக்கட்டைகள் உள்ளுர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டு வெட்டப்பட வேண்டியுள்ளது. வேலிக்கு தேவையான அளவு முட்கம்பிச் சுருள்கள் தேவைப்படுகின்றன. தரமான விதை மற்றும் உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு காய்கறி உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு விவாசயிக்கும் முற்பணமாக 50,000 ரூபா தேவைப்படுகின்றது. இவ்வாறான தேவைகளைப் பூர்த்தி வெய்வதற்கு பெரிய செலவு ஏற்படாது, ஆனால் அது கணிசமான அளவு உற்பத்தியை அதிகரிக்க உதவும். உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் கிளிநொச்சி சந்தை, யாழ்ப்பாணம் சந்தை மற்றும் கொழும்பு சந்தை ஆகியவற்றில் விற்கப்பட்டு வந்தன. காய்கறி உற்பத்தியினால் மக்கள் கணிசமான வருமானத்தைப் பெற்று வந்தனர் என்பது எமது விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. இம்முயற்சிக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். இதில் தாமதம் காட்டப்படக்கூடாது, அதனை விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கால்நடை வளர்ப்பு

மீளத்திரும்பியோர் தாங்கள் கைவிட்டுச் சென்ற கால்நடைகளை மீட்டெடுப்பதில் பெருமுயற்சி எடுத்து வருகின்றார்கள், அதற்கான சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அத்துறையில் தரமான திட்டமிடப்பட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீன்பிடித்தல்

மீன்பிடிக் கிராமங்கள் பலவற்றிற்கு நாம் செல்லவில்லை. ஆனால் மீனவர்கள் அனைத்து மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு மீன்பிடித் தொழிலை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வள்ளங்கள், வலைகள் வழங்கப்பட வேண்டும், அண்மைக்காலத்தில் இரணைமடுக்குளத்தில் பாரம்பரிய மீன்பிடித்தலில் ஈடுபட்டு வந்த 150 மீனவர்கள் அவ்வாறு தொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பாரம்பரிய தொழிலை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

நிதி உதவி

ஆரம்பத்தில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபா உதவி வழங்கும் என்று சொல்லப்பட்டது. பின்னர் வங்கியில் 20,000 ரூபா வைப்புச் செய்யப்படும் என்றும் அதன்மூலம் ஒரு குடும்பம் மொத்தமாக 25,000ரூபா பெறும் என்றும் சொல்லப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய அவசர தேவைகளை சமாளிக்கலாம் என்றும் மற்றும் அவசர செலவுகளை சமாளிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. சில குடும்பங்களுக்கு 18,000 ரூபா மட்டுமே கிடைத்தது, இன்னும் சில குடும்பங்களுக்கு 5,000 ரூபா மாத்திரமே கிடைத்தது. வேறு சில குடும்பங்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. எமக்கு கிடைத்த தகவலின்படி இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஒழுங்கான செயன்முறை ஒன்றும் கிடையாது. மீள திரும்பும் குடும்பங்கள் ஒரே சமயத்தில் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடத்தப்படவில்லை. மீளத்திரும்பிய குடும்பங்கள் அனைத்திற்கும் 25,000 ரூபா முழுமையாகவும் விரைவாகவும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். காரணம், ஒவ்வொரு குடும்பமும் தனக்குள்ள சில அத்தியாவசிய தேவைகளை கவனிப்பதற்கு பணம் அவசியமாகும்.

கல்வி

பெரும்பாலான பாடசாலைக் கட்டடங்கள் அழிவுற்றும் சேதமடைந்தும் உள்ளன, இக்கட்டடங்கள் மீண்டும் கட்டப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும. தேவையான தளபாடங்கள் விநியோகிக்கப்படவேண்டும். மாணவர்கள் பாடசாலைச் சீருடைகள், பாடசாலைப் பைகள், சப்பாத்துகள், பாட நூல்கள் மற்றும் காகிதாதிகள் இன்றி உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் சமய மற்றும் தர்ம ஸ்தாபனங்கள் அவர்களுக்கு உதவியுள்ளன. பெரும்பாலான் சந்தர்ப்பங்களில் மாணவரின் தேவைகளை அவர்களின் குடும்பங்களினால் நிறைவேற்ற முடியவில்லை.

பாடசாலைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைக்கு மாணவர் சிலர் ஆளாகியுள்ளனர். ஜிசிஈ உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. பஸ் சேவை திருப்பதிகரமானதாக இல்லை. இவ்வாறான மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும் பாடசாலைகள் சாதாரணமாக இயங்கும் சூழ்நிலையை விரைவாக ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மீளத்திரும்பிய மக்கள் அனைவராலும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தேவைகளையும் மற்றும் குறைபாடுகளையும் கவனித்து நடவடிக்கை எடுப்பதற்கு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். பாடசாலைத் தோட்டம் பெரிதும் விரும்பப்படுகின்றது. இதற்காக பாடசாலை சொத்து வேலி அமைத்து பராமரிக்கப்பட வேண்டும். அதனால் கிடைக்கும் வருமானத்தை பாடசாலைக்குப் பயன்படுத்த முடியும்.

சுகாதாரம்

வைத்திய நிலையங்களும் அழிவுகளுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளன. சில தப்பியுள்ளன. சிலவற்றிற்கு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறான உபகரணங்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும். பகலும் இரவும் முழுவதுமாக டாக்டர் ஒருவரை சேவையில் ஈடுபடுத்த வேண்டும். அரசாங்க அலுவலகங்கள் போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, சில ஆஸ்பத்திரிகள் செயற்படுவதில்லை என்று சொல்லப்பட்டது. இதனை அனுமதிக்கக்கூடாது. ஆஸ்பத்திரிகள் திறம்பட இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளான மீளத்திரும்பிய மக்களுக்கு நிலையான வைத்திய பராமரிப்பு தேவை. அவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

வாகனம், விவசாயம், மீன்பிடி உபகரணம்

உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் தப்பியோடும் போது கிடைத்த வாகனங்களைப் பயன்படுத்தினர். எம்மால் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, பல குடும்பங்கள் உழவு இயந்திரங்களையும், பெரும்பாலான குடும்பங்கள் லாண்ட் மாஸ்டர்கள், இரண்டு சக்கர ட்ராக்டர்களையும், மோட்டார் சைக்கிள்களையும், சில குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவைகளையும், எல்லாக் குடும்பங்களும் குறைந்தது ஒரு சைக்கிளையும் பெரும்பாலான குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சைக்கிளையும் மாணவர்களுக்கும் சேர்த்து வைத்திருந்துள்ளனர். அவர்கள் இவ்வாகனங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பல தடைவைகள் இடம்பெயர்ந்த போது, யுத்தம் அற்ற பிரதேசத்திற்கு மற்றும் முகாமுக்குச் செல்வதற்கு முன் கடைசி எல்லையில் கைவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரினால் கூட இவ்வாறு கைவிடப்பட்ட வாகனங்களை மீளப்பெறமுடியவில்லை.

இவ்வாறான குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆரம்பமாக குறைந்தது ஒரு புதிய சைக்கிளாவது வழங்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். இது முக்கியமான அவசரத் தேவையாகும்.

ட்ராக்டர்களும், லாண்ட் மாஸ்டர்களும் கூட்டு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அது உள்ளூர் மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒத்துழைப்பின் ஊடாக தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

கைவிடப்பட்ட வாகனங்கள் எல்லாம் என்ன நிலையில் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. எமது தூதுக்குழு, நாம் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புக்குச் செல்லும் வழியில் வீதியருகே மோட்டார் சைக்கிள்களும் பைசிக்கிள்களும், குவிந்து கிடக்கக் கண்டது. உண்மையான சொந்தக்காரர்களிடம் அவற்றைக் கையளிப்பதற்காக அவற்றை அடையாளங்காண என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி ஆராயப்பட வேண்டும்.

உள்ளூர் மட்டத்தில் எல்லா ஆளணியினரும் சேர்ந்து தான் இதனை மேற்கொள்ள முடியும். இவ்வாகனங்கள் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படின் அவர்களுக்கு பெரிதும் உதவும். இதனை தீவிர கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இது போன்று வாகனங்கள் வேறு இடங்களிலும் குவியலாக கிடப்பதாகவும் எமக்குக் கிடைத்த தெளிவற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு நிலவரம் நன்கு தெரியலாம்.

நீரிறைக்கும் இயந்திரங்கள், தெளிக்கும் விசிறிகள், படகுகள், வலைகள் போன்ற விவசாய மற்றும் மீன்பிடி உபகரணங்கள், தப்பியோடிய மக்களால் கைவிடப்பட்டுள்ளன. மீளத்திரும்பியோர் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இவ்வுபகரணங்களுக்கு பதிலாக புதியவை கொடுக்கப்பட வேண்டும். மிக விரைவில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.

காணி

உள்ளுரில் இடம் பெயர்ந்தோர் மீளத்திரும்பியோர் பலருக்கு குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள் உள்ளன. யுத்தம் காரணமாக அவற்றுக்கான காணி உறுதி மற்றும் பெர்மிட்கள் அழிந்தும் காணாமற் போயும் இருக்கலாம். இவ்வாறானவர்கள் தங்களின் உறுதிகள், பெர்மிட்கள் தொடர்பான அரச ஆவணங்களைப் பெறுவதற்கு கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் மற்றும் கச்சேரி ஆகிய உதவ வேண்டும். தனிப்பட்ட உறுதி தொடர்பான ஆவணங்கள் உரிய காணிப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். தனியார் உறுதி தொடர்பான காணாமற்போன ஆவணங்களின் பிரதிகளைப் பெறுவதற்கு அவற்றை இழந்தவர்களுக்கு சட்டத்தரணிகள் இலவச உதவித்திட்டத்தின் உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும். மீளத்திரும்பியோரில் சிலர் காணி இல்லாதவர்கள். குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அவ்வாறான புதிய குடும்பங்களுக்குச் சொந்தக் காணிகள் தேவை. அவ்வாறானவர்களுக்கு குடியிருப்பு மற்றும் விவசாயக்காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தங்களின் காணி உறுதி தொடர்பான ஆவணங்களை வைத்திருப்போர், தங்களின் குடியிருப்பு மற்றும் தம் வாழ்வாதாரம் தொடர்பாக வெவ்வேறு ஸ்தாபனங்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கு அவற்றை சமர்ப்பிக்க முடியும்.

உபகரணங்கள் வழங்கப்பட்டன

மீளத்திரும்பியோர் தங்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களான மண்வெட்டிகள், கோடரிகள், கத்திகள், நல்ல தரமானவையாக இருக்க வேண்டியது அவசியமாகும். காய்கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ள பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட மண்வெட்டி தரமற்றவையாக இருப்பதால் அவற்றை பலன் தரக்கூடியதாக பாவிக்கமுடியாமலிருப்பதாக முறையிட்டுள்ளார்கள். தங்களுக்கு தரப்பட்ட கத்தி தேங்காயை உடைப்பதற்கே பயன்படுவதாகவும் அதனால் மரத்தின் கிளை ஒன்றை வெட்ட முடியாதிருப்பதாகவும் சிலர் முறையிட்டனர். நல்ல தரமான உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் அக்கறை எடுக்க வேண்டும். மீளத்திரும்பியோருக்கு உண்மையில் என்ன தேவை என்பதை அவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள்

பெரும்பாலான இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளன. இடப்பெயந்தோர் திரும்பும் போது அவர்களின் ஆரம்ப அக்கறைகளில் ஒன்று குறைந்து ஒரு வழிபாட்டுத் தலமாவது புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுவே. இம்மக்களால் தங்களது சொந்தச் செலவில் இவ்வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டவையாகும். இவ்வழிபாட்டுத் தலங்களை மீண்டும் புனரமைக்கத் தேவையான வசதிகள் இம்மக்களிடம் தற்போது இல்லை. எனினும் ஒரு கிராமத்தில் குறைந்தது ஒரு வழிபாட்டுத் தலமாவது புனரமைக்கப்படணே;டும் என்பது முழு அத்தியாவசியமாகக் கருதப்படுகிறது. ஒரு கிராமத்தின் வாழ்வு கோயிலைச் சுற்றியே அமைந்துள்ளது. ஓவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு வழிகாட்டுத் தலத்தையாவது புனரமைக்கும் திட்டத்தை தயாரிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்துகின்றோம்.

மின்சார விநியோகம்

மின்சார விநியோகம் ஏ-9 நெடுஞ்சாலைக்கும் ஏனைய பிரதான வீதிகளுக்கும் என்று மட்டுபபடுத்தப்படக்கூடாது. மின்சார விநியோகம் உட்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். உட்பகுதிக் கிராமங்களில் நெற்செய்கை, காய்கறி செய்கை ஆகியவற்றிற்கு மின்விநியோகம் அவசரமாக தேவைப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் அருகில் மின்விநியோக லைன்கள் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து மின்விநியோகத்தை உட்பகுதிக்கு பெரும் செலவின்றி விஸ்தரிப்பது சாத்தியமானதே. மின் விநியோகத்தை இலகுவாக விஸ்தரிக்கக்கூடிய பகுதிகள் எவை என்பது பற்றிய ஒரு பட்டியலை இலங்கை மின்சார சபையிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும். பிரதேச செயலாளர்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்து இலங்கை மின்சார சபைக்கு தேவையான உதவியை வழங்க முடியும். மீளத்திரும்பியோரின் வாழ்வின் மேம்பாட்டுக்கு இது பெரிய பங்களிப்பாக அமையும். அவர்களின் தற்போதைய நிலையில் இவ்வாறான உதவிக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

குடிநீர்

சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்காக பல பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிணறுகளில் உள்ள நீர் இறைக்கப்படவேண்டும். பல சந்தர்ப்பங்களில் நீரிறைக்கும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் இது இடம் பெறவில்லை. மீளத்திரும்பியோரின் தற்போதைய நிலையில் அவர்களால் நீரிறைக்கும் இயந்திரத்தைப் பெறமுடியாதிருந்தது. சில இடங்களில் எல்லா கிணறுகளும் உவராகியுள்ளது. அவ்வாறான இடங்களில் குழாய் மூல நீர் விநியோகம் அத்தியாவசியமானது.

அரசசார்பற்ற நிறுவனங்கள்

I.O.M, UNHCR, கரித்தாஸ், சேவா லங்கா மற்றும் சிலவற்றைத் தவிர சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னியில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வன்னியில் தற்போது பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிடப்பட்ட சில செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றன. தங்களின் ஆணைக்குள் வராத அல்லது அரசாங்கம் வழங்கிய அதிகார எல்லைக்குள் வராத விடயங்களின் பேரால் மீளத்திரும்பியோருக்கு நிவாரணம் இந்த அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்க முடியாது.

மீளத்திரும்பியோரின் தேவைகள் பல பன்முகப்படுத்தப்பட்டவையாகும். மீளத்திரும்பியோரின் வாழ்க்கையை மீளக் கட்டி எழுப்பிவதற்காக அவர்களின் உணவு, போசாக்கு, வாழ்வாதாரம், குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் அவை தொடர்பான அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டால், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் தேவைகளும், பின்னர் ஏற்படும் தேவைகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் தீர்க்கப்பட முடியும்.

மீளத்திரும்பியோர் உண்மையில் ஆதரவற்றவர்களே. இம்மக்களின் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிர்வாகம் தன்னைத் தயார் செய்யவில்லை. இந்த நிலையில் பெரிதாக விட்டுக் கொடுக்கும் போக்கு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் செயற்பாடு மற்றும் சேவைகள் விடயத்தில் தேவைப்படுகிறது. வன்னியில் வேலை செய்வதற்கு ஒரு தொகை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இறுக்கமாக அனுமதி மறுப்பது மீளத்திரும்பிய மக்களுக்கு கடுமையான துன்பத்தை ஏற்படுத்துவதாக முடியும், மீளத் திரும்பியோர் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தவிர்க்கக்கூடிய இத்துன்பங்களை அனுபவிக்கும் நிலை தொடரும். ஆகவே, வன்னியில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

முகாம்களிலிருந்து வெளியேறி சொந்த வசிப்பிடங்களுக்குத் திரும்புவதில் காணப்படும் தாமதம்

மே மாதம் மூன்றாம் வாரம் நாம் வன்னிக்குச் சென்றிருந்த சமயம், சுமார் 220,000 பேர் சொந்த இடங்களுக்கு திரும்பியதாக கூறப்பட்டது சுமார் 70,000 பேர் முகாம்களில் இருப்பதாக கூறப்பட்டது சுமார் 90,000 பேர் உறவினர் குடும்பங்களுடன் இருப்பதாகக் கூறப்பட்டது

மே மாதம் 24 ம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு நாம் சென்ற போது, முகாம்களிலிருந்து 288 குடும்பங்கள் அங்கு வந்தனர். 400 இற்கு அதிகமான குடும்பங்கள் விரைவில் வந்து சேர்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கு வந்த குடும்பங்களால் தங்களது சொந்த வாசஸ்தலங்களுக்கு செல்ல முடியவில்லை. மே 24 அன்றுடன் அவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி 19 தினங்களாகிவிட்டது. திரும்பியவுடன் அவர்கள் உடனே தங்களின் சொந்த வீடுகளுக்குச் சென்று பார்த்தனர். அவர்களின் சொத்துக்களின் நிலை மிக சீர்கேடானதாக காணப்பட்டதாக அண்மையில் சென்று பார்வையிட்ட போது தெரியவந்தது.

மே 24 வரை மீளக்குடியமர்வு இடம்பெறாத கிராமங்கள் பின்வருமாறு :-

மேற் சொல்லப்பட்ட 288 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டிய

1. சாந்தபுரம்

2. உருத்திரபுரம்

3. பாரதிபுரம்

4. அருவியல்நகர்

5. பரவிப்பாஞ்சான்

6. சாந்தசோலை

7. மலையாளபுரம்

8. ஊற்றுப்புலம்

9. பனங்கண்டி

இவற்றிலிருந்து 400 குடும்பங்கள் வருவதாக எதிர்பார்க்கப்பட்டது.

இப்பகுதிகள் எல்லாம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்றன. இடம்பெயர்ந்தோர் திரும்புவதற்கு ஏற்படும் தாமதம் நிலக்கண்ணி அகற்றுவது தான் என்பது எமது விசாரணையில் வெளியாகவில்லை. சொந்தக்காணிகளுக்கு திரும்புவதில் ஏற்படும் தாமதம் குறித்து மீளத்திரும்பியோர் அச்சம் வெளியிட்டனர். அவ்வாறான தாமதம் இடம்பெறக்கூடாது.

தடுத்து வைக்கப்பட்டோர், காணாமற்போனோர், கொல்லப்பட்டவர்

மீளத்திருப்பியோரிடமிருந்து தொடர்ந்து வரும் வேண்டுகோள்:-

தடுத்து வைக்கப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் காணாமற் போனவர்கள் பற்றி தகவல் தெரியப்படுத்தப்பட வேண்டும் கொல்லப்பட்டவர்கள் பற்றி உறுதி செய்யப்பட வேண்டும்

தடுத்து வைக்கப்பட்டோர்

தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்டவர்கள். சிலர் நிர்ப்பந்தம் காரணமாக எல்.ரி.ரி.ஈ இற்கு சில வழிகளில் உதவியவர்கள். பெரும்பாலானோர் தாங்கள் விசாரிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்படுவர் என்ற நம்பிக்கையுடன் சரணடைந்தவர்கள் ஆவர். சாட்சிகள் எதுவுமில்லாதோர் அல்லது குற்ற எண்ணமின்றி சம்பந்தப்பட்டவர்கள், மற்றும் பாரதூரமாக சம்பந்தப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு எதிராக சாட்சியம் உடையவர்கள் இவ்வாறானவர்கள் யார் என்பது குறித்து வேறுபாடு காணப்பட வேண்டும். இளம் குடும்பங்கள் பல கணவனோ, தந்தையோ காவலில் இருப்பதன் காரணமாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று மகன் அல்லது மகளின் வயது முதிர்ந்த பெற்றோரும் துயரங்களை அனுபவிக்கின்றனர். அவ்வாறானவர்கள் புரிந்துணர்வுடன் நடத்தப்பட வேண்டும் மற்றும் அம்மக்களின் நிலை குறித்து அரசாங்கம் தனது உறுதியை அனுதாபத்துடன் வெளிப்படுத்த வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய கட்டுப்பாட்டை பூரணமாக இழந்த நிலையிலே தான் இந்த நிலவரத்தில் சிக்கிக் கொண்டவர்கள். பெரும்பாலோர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள். அவ்வாறானவர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை நாம் வலியுறுத்திக் கோருகின்றோம்.

ஏனையோருக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் இரக்கம் மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையுடன் தனது உறுதியை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை நல்லெண்ணம், இணக்கம் ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்த பெரிதும் உதவும்.

காணாமற் போனவர்கள்

காணாமற் போனவர்கள் குறித்து இறுதி முடிவு காணும் தேவை ஏற்பட்டுள்ளது. இதில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை காணாமற் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து துன்பப்படுவதற்கே உதவும். காணாமற் போனவர்கள் தொடர்பாக தீhமானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அவ்வாறானவர்கள் தொடர்பான உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறான நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அவர்களின் உளரீதியான தாக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வருவதாகவும் அமையும்.

கொல்லப்பட்டவர்கள்

கொல்லப்பட்டவர்களுக்கு மரண அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விதவைகள் மற்றும் அனாதைகள்

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, குடும்பத்தலைவர்களை, குடும்பத்தைப் பராமரித்தவர்களை இழந்த குடும்பங்களாகக் கருத வேண்டும்.

விதவைகளும், அனாதைகளும் அந்த வகைக்குள்ளே அடங்குகின்றனர். இவ்வாறான குடும்பங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பொருத்தமான நிவாரணம் விசேட வழிமூலம் வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அது குடும்பத்தைப் பாராமரிப்பவரை இழந்த குடும்பங்கள் அந்த இழப்புக்கு ஈடுகொடுக்கக்கூடிய நிலையையும் அவர்கள் உயிர் வாழ்வதற்கான போதுமான ஆதரவையும் வழங்குவதற்கு உதவும். அவர்களின் இச்சூழ்நிலை காலம் செல்ல மாற்றம் அடையும்.

திருமுருகண்டியில் 232 கிலோமீற்றருக்கும் 247 கிலோமீற்றருக்கும் இடையில் மீளக்குடியமர்வு

ஏ 9 நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் திருமுருகண்டியில் வாழும் சுமார் 1,000 குடும்பங்கள் யுத்தம் காரணமாக சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்தனர். அவர்கள் செட்டிகுளம் முகாமில் வசித்து வருகின்றனர். அக்குடும்பங்களில் சில 1977 தொடக்கம் திருமுருகண்டியில் வசித்து வருகின்றன. ஏனையோர் 1983 முதல் வசித்து வருகின்றன. இவர்கள் தாங்கள் வசித்த பிரதேசங்களிலிருந்தும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் ஆவர். எல்லா உடமைகளையும் இழந்து கிளிநொச்சிக்கு வந்து, காணிகளை துப்பரவு செய்து திருமுருகண்டியில் காணியில் குடிமயர்ந்தனர்.

அவர்கள் காணியை அபிவிருத்தி செய்து, அதில் வீடுகளை அமைத்துக் கொண்டு கடந்த 25-30 ஆண்டுகளாக தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களை மீளக்குடியமர்த்துவதை தற்காலிகமாக தாமதப்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுதாக தெரிகின்றது. ஏனையோருடன் தாங்களும் மீளக்குடியமர்ந்து வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களிடம் காணப்படுகின்றது. அதே வசதிகளும் அவர்களுக்கும் செய்து கொடுக்கப்பட்டு, இடம்பெயர்ந்த போது வாழ்ந்த காணிகளில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட உதவ வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப் பிரதேச செயலகப் பிரிவில் அடங்கிய கேப்பாப்புலவு கிராமம்.

கேப்பாப்புலவு கிராமத்தில் பாரம்பரியமாக யுத்தத்திற்கு முன்பு சிவில் மக்களினால் இடங்கொள்ளப்பட்டிருந்ததும், உரித்து ஆவணங்கள் மூலம் அவர்களால் தக்க வைத்துக்கொள்ளப்பட்டதுமான 2,259 ஏக்கர் நிலம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளினால் அரசாங்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் தாமதமின்றி மீளக்குடியமர்த்தப்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

போருக்கு முன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களினால் இடங்கொள்ளப்பட்டிருந்நதும் மற்றும் அது தொடர்பில் அவர்களினால் உரித்து ஆவணங்களைக் கொண்டுள்ளப்பட்டதுமான காணி தொடர்பில் இராணுவத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினால், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு கிராமம், மன்னார் மாவட்டத்தில் சன்னார், பெரியமடு, புலக்காடு, பாலமடு மற்றும் முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தல் தாமதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் அவர்களது கிராமங்களுக்கு தாமதமில்லாது திரும்பவும், போர் ஆரம்பிக்கப்பட முன்பிருந்த எல்லா வசதிகளையும் அனுபவிக்கவும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுர மக்கள்

தற்போது கிளிநொச்சி மத்திய கல்லூரியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரத்தை சேர்ந்த 288 குடும்பங்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியாதுள்ளன. அதே போல, கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு எட்டு கிராமங்களிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியாதுள்ளன.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் எமது விபர அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பங்கள் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்புவதற்கு அனுமதியளிக்கப்படுதல் வேண்டும்.

நடமாடும் கச்சேரி

மீளத்திரும்பியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கையாள்வது குறித்து அருகருகேயுள்ள கிராமங்களை ஒன்று சேர்த்து கொத்தணி அடிப்படையிலோ அல்லது ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவு ரீதியாகவோ நடமாடும் கச்சேரி ஒன்றை நடத்துவது பற்றி பரிசீலனை செய்வது பிரயோசனமானதாக இருக்கும். தங்களின் தேவைகளைக் கவனிக்கும் உத்தியோகத்தர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இது மீளத்திரும்பியோருக்கு வழங்குவதாக அமையும். பல விடயங்கள் தொடர்பாக மக்களிடமிருந்து பொருத்தமான தகவலை அதிகாரிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியத்தையும் இது வழங்கும். அவ்வாறான நடைமுறையின் மூலம் இந்த ஆவணத்தில் கூறப்பட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கும் இது உதவும். இந்த நடைமுறையுடன் மக்களும் இணைந்து போக இது உதவுவதுடன் மக்களின் விருப்பங்களை நல்லாக புரிந்து கொள்ள அதிகாரிகளுக்கும் இது உதவும். இவ்வாறான நடவடிக்கை புனர்வாழ்வுப் பணிக்கு உதவும்.

தார்மீக மற்றும் சட்டரீதியான கடப்பாடு

ஒவ்வொரு வகையிலும் உள்ளூரில் இடம்பெயர்ந்து மீளத்திரும்பியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. கணிசமான எண்ணிக்கையான உற்றார், உறவினர்களை அவர்கள் இழந்துள்ளனர். அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் அல்லது அழிந்தும் போயுள்ளன. அத்துடன் அவர்கள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.

இவர்கள் மதிப்புடன் கௌரவமாக வாழ்ந்தவர்கள். அவர்கள் தங்களின் சொந்தக்காணியில், சொந்த வீடுகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, குடிசைக் கைத்தொழில் மற்றும் தோட்டக்கலை மூலம் சொந்த வருமானத்தைப் பெற்று வாழ்ந்தவர்கள். சிவிலியன் மக்களின் பாதுகாப்பு குறித்து முற்றாகக் கவனிக்கப்படாமல் நடத்தப்பட்ட இரக்கமற்ற யுத்தம் காரணமாக இவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நடந்த அத்தனையும் நன்றாக கண்காணிக்கப்பட்டு முழு உலகுக்கும் தெரிந்த ஒன்றாகும். துரதிஸ்டம் வாய்ந்த இம்மக்கள் ஒன்றும் இல்லாத நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து கட்டி எழுப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அவர்கள் தங்களின் முயற்சியில் வெற்றி காண்பதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மிக மற்றும் சட்ட ரீதியான கடப்பாடு எல்லா இலங்கையர்களுக்கும், குறிப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. இம்மக்கள் சர்வதேச சமூகம் தங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இம்மக்கள் தங்களின் முயற்சியில் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த ஆவணத்தில் நாம் விபரித்துள்ளோம்.

ஒரு பொருத்தமான நட்டஈடு வழங்குவதற்கும் திட்டத்தின் தேவை பற்றி பரிசீலிக்க வேண்டும்.

துரதிஸ்டம் வாய்ந்த இம்மக்களின் மீளக்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு மற்றும் பிரதேசங்களின் புனருத்தாரணம் ஆகியன நல்லிணக்கம் மற்றும் உண்மையான சமாதானத்தின் முன் நிபந்தனைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

http://seithy.com/breifNews.php?newsID=29360&category=TamilNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.