Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள்

[ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 12:32 GMT ] [ தி.வண்ணமதி ]

யாழ்ப்பாணம், பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போது கரிசனை கொள்கிறது. ஆனால் தனது மனிதம்சார் அபிவிருத்தி தொடர்பாக அது எதுவுமே செய்யவில்லை.

போரில் வெற்றிகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், "எங்களது கல்வி முறையினையும் பொருளாதாரத்தினையும் அழித்துவிட்டார்கள்" என போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் கூறுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்க்கப்படுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் வழிவகுத்த தனது தவறினைக் கொழும்பு திருத்திக்கொள்ளவேண்டும் என இவர்கள் கோருகிறார்கள். "இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" என கொழும்பின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

யூன் 11 தொடக்கம் யூன் 13 வரையிலான காலப்பகுதியில் சிறிலங்காவின் தேசிய மீன்பிடி ஒற்றுமை அமைப்பு [National Fisheries Solidarity Movement] 52 பேரை ஓர் ஒற்றுமைப் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது.

இவர்களுடன் இணைந்து பயணித்த ஆசியா நியூஸ் [AsiaNews] என்ற செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தனது அனுபவத்தினைப் இவ்வாறு பகிந்துகொள்கிறார்.

மக்களுடன் உரையாடி அவர்களது கடந்தகால அனுபவங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் முழுமையாக அறிந்துகொள்வதற்கு மூன்றுநாள் பயணம் என்பது போதுமானதாக இருக்கவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னர் தொடராக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் தற்போது அகற்றப்பட்டிருக்கின்றன. எங்கே போகிறீர்கள் எனக் கேட்டு எம்மைத் துருவித்துருவி விசாரிக்கும் படையினரை இம்முறை குடாநாட்டில் காண முடியவில்லை.

பல பத்தாண்டுகளின் பின்னர் இதுபோன்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 'அலிமன்கட' எனச் சிங்களத்தில் அழைக்கப்படும் ஆனையிறவுப் பகுதியில் மாத்திரம்தான் பயணிகள் நின்று தங்களது வாகனங்கள் தொடர்பான விபரங்களைப் பதிவதோடு, படைத்தரப்பினரின் பயண அறிவுறுத்தல்களையும் செவிமடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் எனக்கூறும் சிங்களத்தில் எழுதப்பட்ட 20 எச்சரிக்கைகள் அடக்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தினை எங்களிடம் தந்தார்கள்.

'யாழ்ப்பாணம் ஒரு புனித பூமி', 'அமைதியுடனும் எளிமையுடனும் மக்கள் வாழ்ந்துவரும் புனிதமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலப்பகுதியினுள் நீங்கள் நுழைகிறீர்கள்', 'இந்தப் பகுதிகளில் இன்னமும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதால் அவதானத்துடன் இருங்கள்', 'இந்துக்களின் வணக்கத்தலங்கள் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது அவற்றுக்கு அதிக மதிப்பளித்துச் செயற்படுங்கள்' என்பது போன்ற முக்கியமான குறிப்புக்கள் அதில் இருந்தன.

ஏ9 வீதியின் இரு மருங்கிலும் தேனீர்ச்சாலைகள் மற்றும் வீதியோரக் கடைகள் பல முளைத்திருக்கின்றன. ஆனால் குடாநாட்டில் படையினரால் நடாத்தப்படுகின்ற 'ஜன அவன்கல' [Jana Avanhala restaurants] உணவகம்தான் அனைத்தையும் விட முதன்மையானதாகத் தெரிகிறது.

நவீனமயப்படுத்தப்பட்ட இந்த உணவகத்திற்கு அதிகளவானோர் வந்துசெல்கிறார்கள். ஏ9 வீதியை அண்டிய பகுதிகளில் இதே தரத்திலும் அமைப்பிலும் ஒத்த 10 உணவகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் இராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவு நிர்வகித்து வருகின்றன.

எங்களது மதிய உணவிற்கான நாங்கள் மாங்குளம் பகுதியில் பயணத்தை நிறுத்தினோம். மாங்குளம் சந்திக்கு அண்மையாக சிறியதொரு கொட்டிலில் வயதான ஒருவர் ஐஸ்கிறீம் விற்பனை செய்கிறார்.

"உள்ளூர் வாசிகளான எங்களுக்கு எதுவுமில்லை. அனைத்தையும் இழந்துநிற்கும் நாம் மீண்டும் ஆரம்பத்திலிருந்துதான் எங்களது வியாபாரத்தைத் தொடக்கவேண்டும். பெரிய கட்டடங்களில் போதிய தளபாட வசதிகளுடன் உணவு விடுதியினை அமைக்கும் ஆட்பலமும் பண பலமும் இராணுவத்திடம் இருக்கிறது" என அவர் எங்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"தெற்கிலிருந்து பேருந்துகளிலும் வான்களிலும் வருபவர்கள் இராணுவத்தினரால் நடாத்தப்படும் பெரிய உணவு விடுதிகளுக்கே செல்கிறார்கள். இவர்கள் எங்களிடம் வருவதில்லை. இவ்வாறு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமானவர்கள் சிங்களவர்கள். ஆதலினால் அவர்கள் இராணுவத்தினரின் உணவு விடுதிகளுக்குச் செல்லவே விரும்புகிறார்கள். ஏ9 வீதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும் வான்களும் பயணிக்கின்றபோதும் உள்ளூர்வாசிகளான எமக்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. அத்துடன் அனைத்தையுமே இழந்து, அடிமட்டதிலிருந்து எழும் எங்களது வியாபாரத்தினை நாங்கள் மேம்படுத்துவதும் கடினமானதொன்றே'" என்கிறார் அந்த ஐஸ்கிறீம் வியாபாரி.

குறைந்த செலவில் ஓரிரு நாட்கள் தங்கிச்செல்வதற்கான வசதிகளையும் சிறிலங்கா இராணுவத்தினர் வழங்குகிறார்கள். ஏ9 வீதியிலுள்ள கிளிநொச்சி மற்றும் ஆனையிறவிலும் பூநகரி போன்ற உள்ளூர் பிரதேசங்களிலும் இராணுவத்தினர் நினைவுத் தூபிகளை அமைத்திருக்கிறார்கள். அரசாங்கத்தினதும் படையினரதும் இராணுவ வெற்றியினைக் குறிக்கும் வகையிலேயே இந்தத் தூபிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் தங்களது நிலத்தில் இராணுவ ஆதிக்கத்தினைக் குறிக்கும் சின்னங்களாகவே நான் உரையாடிய உள்ளூர் தமிழர்கள் இராணுவத்தின் இந்தத் தூபிகளைக் கருதுகிறார்கள்.

தங்களது அன்புக்குரிய ஆயிரக்கணக்கான உறவுகள் கொல்லப்படுவதற்கும் அங்கவீனமடைவதற்கும் வழிவகுத்த போரின் வெற்றி விழாவினை இந்தத் தமிழர்கள் அறவே வெறுக்கிறார்கள்.

போரின் போது கொல்லப்பட்ட அல்லது காணாமற்போன ஆயிரக்கணக்கான பொதுமக்களை நினைவுகூரும் வகையிலான எந்த நினைவிடங்களையும் இப்பகுதிகளில் காணமுடியவில்லை.

குடாநாட்டுக்கான எமது பயணத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஏதாவது நினைவாலயங்கள் இருக்கின்றனவா என நான் பல இடங்களிலும் பலரிடமும் விசாரித்தேன். ஆனால், எதுவும் இல்லை என்றே பதில் கிடைத்தது.

விடுதலைப் புலிகளது துயிலகங்களைப் படையினரே முன்னின்று இடித்தழித்திருப்பது மிகவும் மோசமானது.

யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரையில் இதுபோல விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்கள் பரவலாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறைக்கும் கிளர்ச்சிக்கும் பெயர்போன அமைப்பாக இருந்தாலும், போரின் போது கொல்லப்பட்ட தங்களது உறுப்பினர்ளுக்கு மதிப்பழிக்கும் ஒரு முறையினைக் கொண்டிருந்தார்கள்.

இறந்தவர்களின் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் துயிலகங்களுக்குச் சென்று மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினார்கள்.

ஆனால் மடிந்துபோன தங்களது அன்புக்குரியவர்களுக்கு வணக்கும் செலுத்துவதற்கான எந்தவொரு இடமும் இல்லாத இக்கட்டானதொரு நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள். கடந்த 18ம் நாள் சிறிலங்கா அரசாங்கம் தனது போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் பெரும் வெற்றிவிழாவினை ஒழுங்குசெய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நகரின் மத்தியில், ஏ9 வீதிக்கு அருகாக இருந்த பிரமாண்டமான தண்ணீர் தாங்கியை விடுதலைப் புலிகள் தகர்த்து விழுத்தியிருக்கிறார்கள்.

கிளிநொச்சி நகரத்தில் நாம் சந்தித்த ஒருவர் தனது சொந்த நிலத்திற்குள் உட்பிரவேசிக்க முடியாத நிலையினை எங்களிடம் விபரித்தார்.

"எனது காணிக்குள் நான் செல்ல முனையும்போது தீடீரென அங்கு வந்த இராணுவத்தினர் எனது கழுத்தைப் பிடித்துத் திருகி வெளியே செல்லுமாறு பணித்தனர். ஆனால் அது எனது காணி. இந்தக் காணி என்னுடையது என்றும் எனது காணிக்குள் செல்வதற்கு நான் விரும்புகிறேன் என்றும் படையினருக்கு எவ்வாறு விளக்குவதென எனக்குத் தெரியவில்லை" என்றார் அவர்.

தனது சோகக் கதையினை அவர் எங்களிடம் விபரிக்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புக்கள், கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் இடம்பெயர்ந்து வசிப்பவர்கள் என நாம் குடாநாட்டில் பலதரப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

மூன்று நாட்களாக அங்கு தங்கியிருந்த நாம் இவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தோம்.

குடாநாட்டு வாசிகள் தென்பகுதிச் சிங்களவர்கள் தொடர்பில் இன்னமும் சந்தேகத்துடனே இருக்கிறார்கள்.

கடந்த பல பத்தாண்டுகளாக தங்களது கல்வியினையும் பொருளாதார முறைமையினையும் தொடர்ந்துவந்த சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வாறு சிதைத்துச் சீரழித்தனர் என்பதை இவர்கள் எங்களிடம் விபரித்தார்கள். இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் தமக்குக் கிடைக்கவேண்டும் என வாதிடுகிறார்கள் இவர்கள்.

தங்களைப் புரிந்துகொள்ளுமாறும், தமிழர்களது கலாச்சார ரீதியிலான தனித்துவத்தை விளங்கிக்கொள்ளுமாறு நாட்டினது ஏனைய சிங்களவர்களுக்கும் எடுத்து விளக்குமாறு அவர்கள் எங்களைப் பணித்தார்கள்.

"வீதி, பாலங்கள் மற்றும் கட்டடங்களின் மீள்நிர்மானம், இதர உதவிகள் மாத்திரம்தான் எங்களது இன்றைய தேவைகளன்று. மாறாக, நீடித்து நிலைக்கக்கூடியதோர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும். எங்களிடம் வளமான மண் இருக்கிறது, போதிய வளங்கள் இருக்கின்றன, சிங்கள சமூகத்தவர்களைப் போல எங்களையும் அமைதியுடன் வாழ வழிவிடுங்கள்" என குடாநாட்டவர்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்கள்.

ஏ9 வீதியை அண்டிய பிரதேசங்களிலும் குடாநாட்டிலும் பெரும் அமைதி நிலவுகிறது.

மதுபான விற்பனையகங்கள், உணவு விடுதிகள், விடுதிகள் ஆகியவற்றோடு யாழ்ப்பாணம் கொழும்பைப்போன்ற நவீன நகரமாகக் காட்சி தருகிறது. குடாநாடு கலாச்சார ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் வேகமான வளர்ச்சியினைக் காணும் எனப் பலரும் ஆரூடம் கூறுகிறார்கள்.

மொழியாக்கம்:தி.வண்ணமதி.

நன்றி - புதினப்பலகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.