Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை - வியட்னாமியர்களை போல ஈழத்தமிழருக்கும் அநீதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை - வியட்னாமியர்களை போல ஈழத்தமிழருக்கும் அநீதி

[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 07:12 GMT ] [ தி.வண்ணமதி ]

போரின் இறுதிநாட்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மூடிமறைத்தே வருகிறது இதற்காக நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் ஒரு திரையையும் அது உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக 'காடியன்' என்ற ஆங்கில இணையத்தளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்திருப்பது தி.வண்ணமதி.

அதன் முழுவடிவம் வருமாறு,

பான் கீ மூன் வாக்குறுதிகளை வழங்கியிருந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இடம்பெற்ற அட்டூழியங்களை விசாரிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் இடம்பெறாமல் தடுக்கப்பட்டுவிட்டது.

வியட்னாம் போரின் போது, அதிகளவிலான வியட்கொங் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனத் தான் கூறுவதற்கு ஏதுவதாக அமெரிக்க இராணுவத்தினர் குறித்தசில வழிமுறைகளைக் கைக்கொண்டார்கள்.

'அவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் வியட்கொங் படைவீரர்களே' அமெரிக்கப் படைவீரர்களின் தாக்குதலில் வியட்னாமியர்கள் இறந்திருந்தால் அவர்களை எதிரிப்போர் வீரர்களாகவே கருதவேண்டும் என்ற நிலை இருந்தது.

சிறிலங்காவினது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூட இதுபோன்றதொரு எண்ணத்தின் அடிப்படையிலயே செயற்படுகிறார் போலும்.

மே 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகள் அமைப்புடனான போரின் இறுதி நாட்களில் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்தனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

ஆனால் போரின் இறுதி நாட்களில் ஒரு பொதுமகன் கூடத் தங்களால் கொல்லப்படவில்லை எனக் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.

போரின் போது காயமடைந்த புலிகளின் உறுப்பினர்கள் 'தங்களது சீருடைகளைக் களைந்துவிட்டு சாதாரண உடைகளில் இருந்ததாகவும்' போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளின் 6000 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதோடு 30,000 பேர் காயமடைந்ததாகவும் அண்மையில் உண்மை அறியும் ஆணைக்குழுவின் முன்னால் தனது வாக்குமூலத்தினை வழங்கிய கோத்தபாய கூறியிருக்கிறார்.

இவ்வாறாகச் சாதாரண உடையில் இருந்த விடுதலைப் புலிகளையே பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனக் கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கதை விடுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் என்பன இரண்டு தரப்பினருமே போர்க்குற்றங்களிலும் மற்றும் மனித உரிமை மீறல்களிலிலும் ஈடுபட்டதாகத் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை என்ற தனது வாதத்தினை உண்மை என்றாக்குவதற்குப் பாடாய்ப்படுகிறார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டதாகக் கூறும் எந்த முறைப்பாடும் தனது கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை என்கிறார் அவர்.

போரின் போது இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்தும் விசாரிக்கப்படும் என யூன் 2009ல் ஐக்கிய நாடுகள் சபையினது தலைவர் பான் கீ மூனுக்கு சிறிலங்காவினது குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதியினை வழங்கியிருந்தார். தவிர, போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய சட்ட ரீதியான கடப்பாடு சிறிலங்காவிற்கு உள்ளது.

ஆனால் கோத்தாவின் சகோதரரும் நாட்டினது குடியரசு அதிபருமாகிய மகிந்த ராஜபக்ச இதுபோன்றதொரு விசாரணை முயற்சிகள் எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி கண்டதை வாழ்த்தும் நாடுகள் கூட போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் போது அதிபர் மகிந்த ராஜபக்ச அதிர்ச்சியடைகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போரானது 'ஒரு மனிதாபிமான நடவடிக்கையே' என்றும் இந்த நடவடிக்கையின் போது 'பொதுமக்களின் இழப்புக்களைத் தவிர்க்கும் வகையில் படையினர் இடைக்கிடையே மோதல்களை இடைநிறுத்தி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதோடு அவர்களுக்கான உணவு நிவாரணத் தொடரணிகள் செல்வதற்கும் வழிசெய்யப்பட்டதாகக்' கூறுகிறார் கோத்தபாய ராஜபக்ச.

ஆனால் உண்மையில் நடந்தது வேறுகதை, பொதுமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு மனிதாபிமான அமைப்புக்கள் சென்றுவருவதற்கு அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யமுடியாத நிலைக்குத் தாம் தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியது.

போரின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இருட்டடிப்புச் செய்வதற்கானதொரு முயற்சிதான் இந்த உண்மை அறியும் ஆணைக்குழு என்ற உண்மையான கரிசனை பலதரப்பட்டோரிடமிருந்தும் வெளிவருகிறது.

சிறிலங்கா அரசாங்கம் தானே அமைத்திருக்கும் இந்த ஆணைக்குழுவினது முடிவுகளைக் கொண்டு அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணை மிகவும் குறுகியது. 2002ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்தமைக்கான காரணங்களைக் கண்டறிவதுதான் ஆணைக்குழுவின் பிரதான பணி. இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான தனியான, உறுதியான ஆணை இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.

போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன என்பதைக் கண்டறியும் உண்மையான, நேர்மையான விசாரணைகள் இடம்பெறுவதை அரசாங்கம் தவிர்க்கவே விரும்புகிறது.

போர்க் குற்ற விசாரணைகள் இடம்பெறுமிடத்து முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா அதற்குத் தனது ஒத்துழைப்பினை வழங்குவாரெனில் அவர் தூக்கிலிடப்படுவார் என பி.பி.சி செய்திச்சேவைக்குக் கடந்த யூனில் வழங்கிய செவ்வியில் கோத்தபாய எச்சரித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் இந்த முன்னாள் இராணுவத் தளபதியே.

இந்த ஆண்டினது முதற்பகுதியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலின் போது அதிபர் மகிந்த ராஜபக்சவினை எதிர்த்துக் களமிறங்கிய பொன்சேகா அண்மையில் இராணுவ நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டிருந்தார்.

இதன்போது பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்த பதவிநிலைகள், பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது. இதன் மூலம் போர் தொடர்பான ராஜபக்சவின் வாதத்தினை எதிர்த்து நின்று வாதிடும் தகுதிநிலையினை பொன்சேகா இழக்கிறார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பொறுப்புச்சொல்லும் தன்மை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவிற்குச் சிறிலங்கா பயண அனுமதியினை வழங்காது என கடந்த யூனில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவர்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கோ தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என்ற செய்தியினையே கொழும்பிலுள்ள ஐ.நா அமைப்பின் தலைமையத்திற்கு முன்னால் ஐ.நாவினது வல்லுநர் குழுவிற்கு எதிராக சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் முன்னெடுத்த போராட்டங்கள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குறை கூறுபவர்கள், மக்கள் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் அடக்கி ஒடுக்கப்படுவது மற்றும் மோதல்கள் இடம்பெற்ற நாட்டினது வடக்குப் பகுதிக்குச் சுந்திரக் கண்காணிப்பாளர்கள் சென்றுவருவது தடுக்கப்படுவது, 'புனர்வாழ்வு முகாம்களில்' தற்போது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 8000 போராளிகள் தொடர்பான பூரண தகவல்கள் இல்லாதிருப்பது என்பன மகிந்த ராஜபக்சவினது தலைமையிலான அரசாங்கத்தின் மனநிலையினைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தற்போது அது பெற்றுவரும் வாக்குமூலங்களை வைத்துக்கொண்டு கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு என்ன தீர்ப்பினை வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றது என்ன என்பதை ஆழமாக ஆராய்ந்து உண்மையினை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக போரில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை என்ற அரசாங்கத்தின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே இந்த ஆணைக்குழுவினது முடிவுகளும் தீர்மானங்களும் அமையும் எனப் பலரும் கருதுகிறார்கள்.

ராஜபக்ச சகோதரர்களால் புனையப்படும் கதைகளை இந்த ஆணைக்குழுவும் நம்பி அதற்கு வலுச்சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமிருப்பது கவலைக்குரியது.

http://www.puthinappalakai.org/view.php?20100906101971

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.