Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இப்போது ஒரு நாடு, முழு தேசத்திற்கும் அனைத்து நன்மைகளையும் கிடைக்கச் செய்வேன்: சிறிலங்கா அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா இப்போது ஒரு நாடு, முழு தேசத்திற்கும் அனைத்து நன்மைகளையும் கிடைக்கச் செய்வேன்: சிறிலங்கா அதிபர்

[ செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2010, 10:33 GMT புதினப்பலகை ] [ தி.வண்ணமதி ]

எத்தகைய அரசியல் தீர்வினை முன்வைக்கவேண்டும் என்றதொரு எண்ணம் என்னிடமுள்ளது. நாட்டினது அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்புடையதாக அந்தத் தீர்வு அமையவேண்டும்.

தனிநாட்டுக் கோரிக்கையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டிருப்பது சிறந்ததொரு அம்சம். தமிழ் மக்கள் தமக்கானதொரு புதிய தலைமைத்துவத்தினை விரும்புகிறார்கள். அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும். தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான 'இந்து'வுக்கு வழங்கிய செவ்வியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

அதிபர் மகிந்த ராஜபக்சவினது முதலாவது பதவிக்காலத்தின் போது நாட்டினது எதிர்க்கட்சிகளும் வெளி உலகும் அவரைக் குறைத்து மதிப்பிட்டிருந்தன. ஆனால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கு அதிபர் ராஜபக்ச கைக்கொண்ட அரசியல் இராணுவ மூலோபாயம் மற்றும் தொடர்ந்து வந்த இரண்டு தேர்தல்களிலும் மகிந்த அமோக வெற்றியீட்டியிருப்பது என்பன அவர் அரசியல் மேலாண்மையுடன் திகழ்வதற்கு வழிசெய்திருக்கிறது.

கடந்த நவம்பர் 19ம் நாளன்று மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலத்தினை ஆரம்பித்திருக்கும் நிலையில், அலரி மாளிகையில் வைத்து ஊடகவியலாளர் என்.ராமுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கு முன்னாலுள்ள சவால்கள் மற்றும் பணிகள் தொடர்பாக அவர் எடுத்து விளக்கியிருக்கிறார். ஒரு மணிநேரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இந்த நேர்காணலின் முதலாவது பகுதி தி.வண்ணமதியால் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கே தரப்படுகிறது:

கேள்வி: உங்களது முதலாவது பதவிக்காலத்தின் போது நிறையவே சாதித்திருக்கிறீர்கள். அண்மையில் இரண்டாவது பதவிக்காலத்தினை நீங்கள் ஆரம்பித்திருக்கும் நிலையில் சிறிலங்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளது. இதற்கு உங்களின் பதில் என்ன?

பதில்: எனது முதலாவது பதவிக்காலத்தின் போது நான் இந்த நாட்டில் உண்மையான அமைதியினை ஏற்படுத்தியிருக்கிறேன். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதுதான் எனது தற்போதைய இலக்கு. இதனைத் தொடர்ந்து மக்களின் மனங்களை வெல்லும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிறிலங்கா ஒரு தேசம். இது பிளவுபட்டிருக்கவில்லை. குறித்ததொரு சமூகம் மாத்திரமல்லாது, குறித்ததொரு பிராந்தியம் மாத்திரமல்லாது அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்துப் பிரதேசத்திற்கும் நன்மைகள் சென்றுசேரும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நாட்டினது பொருளாதாரத்தினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதன் ஊடாக அனைத்து மக்களும் நன்மையடைவார்கள்.

கேள்வி: முன்னதாக அபிவிருத்தி, சனநாயக மயப்படுத்துதல் மற்றும் அதிகாரப்பகிர்வு என்ற மூன்று 'டி' கள் பற்றி நீங்கள் பேசியிருந்தீர்களே?

பதில்: இல்லை. அபிவிருத்தி முதன்மையானதொன்று. அபிவிருத்தியும் அமைதியும் இல்லாமல் நாங்கள் சனநாயகத்தினை அடையமுடியாது. நாங்கள் ஒரு சனநாயக நாடென்பதால் மக்களாட்சி என்பது முக்கியமானதொன்று. அதிகாரப்பகிர்வு என்று வரும்போது, நாங்கள் தொடர்புடைய மக்களின் எண்ண ஓட்டத்தினை முதலில் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் தங்களுக்கான கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் குறிப்பாக இளைய சமூகத்தினர் மத்தியில் வேறுபட்ட பார்வைகள் உள்ளன. தமிழ் மக்கள் விரும்புவது எதனை என நாம் மீள உறுதிப்படுத்தவேண்டும். இதன் பின்னர்தான் இந்தச் செயற்பாட்டில் நாங்கள் இறங்கமுடியும். அமைதி நிலவவேண்டுமெனில் நிச்சயமாக இந்த மூன்றும் அவசியமானதுதான்.

கேள்வி: கிராமப்புறங்களுக்கு நீங்கள் செல்லும் போது மக்களின் பிரதிபலிப்பு எவ்வாறுள்ளது? இந்த ஆண்டினது முதற்பகுதியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலிலும் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் நீங்கள் அளப்பெரிய வெற்றியடைந்திருக்கிறீர்கள்.

பதில்: நான் கிராமங்களுக்குச் செல்லும் போது மக்களுடன் உரையாடுகிறேன். இவர்கள் உற்சாகத்துடனும் நட்புடனும்; பழகுகிறார்கள். இதனை என்னால் உணரமுடிகிறது.

கேள்வி: அரசியல் ரீதியில் பேசுவதானால் நாட்டில் பல்வேறுபட்ட எதிர்க்கட்சிகள் இருக்கின்ற போதும், உறுதியான எதிர்க்கட்சிகள் எதுவும் உங்களுக்கில்லை. இடையில் ஜெனரல் பொன்சேகா அரசியல் களத்தில் இறங்கியிருந்தார். விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற இரண்டு தேர்தல்களிலும் நீங்கள் அமோக வெற்றிபெற்றிருக்கிறீர்கள். இது போன்று அரசியல் ரீதியில் உறுதியான தலைமைப்பீடம் தென்னாசியப் பிராந்தியத்தின் வேறெந்த நாட்டிலும் நான் காணவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இதனையிட்டு நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

பதில்: இந்த நிலைமைக்கு நாட்டு மக்களுக்குத்தான் நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படுகிறார்கள். நாட்டு மக்களுக்கு அமைதியினைப் பெற்றுக்கொடுத்தது நான்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். தற்போதைய நிலையில் அபிவிருத்தியும் அமைதியும்தான் அவர்களுக்கான உடனடித் தேவைகள். இதனைத்தான் மக்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். 1.8 மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாங்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் எனக்கும் எனது கட்சிக்கும் பலத்தினைத் தருகிறது. மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதனை நாங்கள் வழங்குவோம்.

கேள்வி: தமிழர்களது இனப்பிரச்சினை விடயத்திற்கு வருவோம். விடுதலைப் புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் நீங்கள் எதிர்கொண்ட முதலாவது சவால் இடம்பெயர்ந்த 300,000 மக்களையும் முகாம்களில் வைத்து பராமரித்ததுதான். தற்போது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் மீளவும் குடியேற்றப்பட்டு விட்டார்கள். இன்றைய நிலையில் 18,000 பேர் மாத்திரமே இன்னமும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என நான் நம்புகிறேன். இது தொடர்பில் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 18,000 மக்களும் தொடர்ந்தும் முகாம்களில் தங்குவதில்லை. இவர்கள் தங்களது உறவினர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று திரும்புகிறார்கள். கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்வதாலேயே இவர்களை மீள்குடியேற்றுவது தாமதமாகிறது. இருப்பினும் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்க விரும்புவோரைத் தவிர ஏனைய அனைவரையும் டிசம்பர் மாத இறுதிக்குள் மீள்குடியேற்றிவிடுவோம்.

கேள்வி: மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் கிடைக்கும் வளங்கள் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

பதில்: ஆம். நான் திருப்தியடைகிறேன். அனைத்து நண்பர்களும் எங்களுக்கு உதவினார்கள். இல்லையேல் இந்த இலக்கினை எங்களால் நிச்சயம் அடைந்திருக்கமுடியாது.

கேள்வி: தற்போது 13 அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், ஏலவே உறுதியளிக்கப்பட்டதைப் போல அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்ற கடுமையான எதிர்பார்ப்பு நிலவுகிறதே.

பதில்: இன்றைய நிலையில் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பான அனைத்து அரசியல்கட்சிகளுடன் பேசத்தான் முடியும். இதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அரசியல் தீர்;வு தொடர்பில் எனது மனதில் இருக்கும் எண்ணம் சில சமயம் தமிழர்களுக்குப் போதுமானதாக இருக்காது, அவர்கள் அதனை ஏற்காமலிருக்கக் கூடும். நாட்டினது அனைத்து அரசியல் கட்சிகள் மாத்திரமல்லாமல் அனைத்துச் சமூகங்களைச் சேர்நத மக்களுக்கும் இந்தத் தீர்வு ஏற்புடையதாக இருக்கவேண்டும். இடம்பெயர்ந்து வசித்து வந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படும்போது அவர்களிடம் இதுபோன்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த மக்கள் எத்தகைய தீர்வினை விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறியவேண்டும். அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகளுடன் நாங்கள் ஏலவே இதுவிடயம் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறோம்.

கேள்வி: குறிப்பிட்ட திட்டம் தொடர்பான நீங்கள் தெளிவாக விளக்கத் தேவையில்லை. இருப்பினும் அரசியல் தீர்வு தொடர்பான தெளிவான எண்ணம் ஏதும் உங்களின் மனதில் இருக்கிறதா?

பதில்: ஆம், முதலில் அரசியல் தீர்வு தொடர்பான மக்களின் கருத்துக்களை அறியவே நான் விரும்புகிறேன். அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்காக இரண்டு சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை அமைக்க விரும்புகிறோம்.

கேள்வி: நாட்டினது எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பை வழங்குகிறார்களா?

பதில்: (சிரிக்கிறார்) எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் தக்கவைத்துக்கொள்வதுதான் அவர்களின் இன்றைய சவாலாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களது சுலோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டன. இன்றைய களயதார்த்தத்திற்கு அமைய அவர்கள் புதிய சுலோகங்களைத் தேடவேண்டும். ஒரு வகையில் இது நல்லதுதான். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். சனநாயகப் பண்புகளின் அடிப்படையில் சிறிலங்காவிற்குள் அவர்கள் எங்களது செயற்பாடுகளை எதிர்க்கவேண்டும். நாட்டுக்கு வெளியே என்று வரும்போது நாங்கள் அனைவரும் இலங்கையரே என்பதில் அடிப்படையில் எதிர்க்கட்சியினர் செயலாற்றவேண்டும். அவர்கள் எப்போதுமே நாட்டினை மதித்துச் செயற்படவேண்டும்.

கேள்வி: உங்களது அரசியல் வாழ்க்கையில், ஏன் எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதிலும் இதே கோட்பாட்டுக்கு அமையவே செயற்பட்டிருக்கிறீர்கள். அப்படித்தானே?

பதில்: ஆமாம். நாட்டுக்குக் கிடைத்த நன்மைகளையோ அன்றி உதவிகளையோ நிறுத்தும் வகையில் தாங்கள் எப்போதும் செயற்பட்டதில்லை. இதுபோன்ற செயலை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. சிறிலங்காவில் 'மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பது உண்மைதான். ஏனெனில் எதிர்க்கட்சியில் இருந்தபோது முதன் முதலில் ஜெனிவாவிற்குச் சென்று சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையிட்டவன் நான்தான். ஆனால் நம்நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலமைந்த உதவித்திட்டங்களை மீளப்பெறுமாறு அப்போது நாம் எந்த வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

கேள்வி: ஒன்றிணைந்த இலங்கைக்குள் கொண்டுவரப்படும் தீர்வுத் திட்டத்தினை ஏற்றுக்கொள்ளுவதற்குக் தாங்கள் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்லது அந்தக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் முதன் முதலாகக் கூறியிருக்கிறார்களே. இது தொடர்பில் உங்களின் கருத்து?

பதில்: இது நல்லதொரு விடயமே. ஏனெனில் தனிநாடுதான் வேண்டும் என முன்னதாக அவர்கள் வாதிட்டிருந்தார்கள். உண்மையிலேயே இது சிறந்ததொரு கருத்துமாற்றம். இந்தச் சூழமைவில் நாங்கள் கூட்டமைப்பினருடன் பேசமுடியும்?

கேள்வி: நீங்கள் அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கீறர்களா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமிருந்து மாத்திரமல்ல. நாட்டினது அனைத்துத் தமிழ்க் கட்சிகளிடமிருந்தும் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம். தமிழ் அரசியல் கட்சிகளினதும் தமிழ் மக்களது ஆதரவு எங்களுக்குத் தேவை. இது மிகவும் முக்கியமானது. ஆயுதங்களைப் பயன்படுத்தியவாறு பயங்கரவாத வழிமுறைகள் ஊடாகப் பிரபாகரன் கோரியது எதுவோ அதனை அவர்களால் பெறமுடியாது என்பதைத் தமிழர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். பிரபாகரனுக்கு எதை நாங்கள் கொடுக்க மறுத்தோமோ அதை தமிழ் மக்களுக்கும் வழங்கமாட்டோம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆதலினால் நடைமுறைச்சாத்தியமான, நீதியான கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கவேண்டும். ஏனைய சமூகத்தவர்களின் உணர்வுகளையும் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி: இங்கு என்ன ஒழுங்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகிறதே: நீங்கள் அரசியல் தீர்வு எதனையும் முன்வைக்கமுன்னர் தமிழர்கள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படுத்தப்படவேண்டுமே. ஏன் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது? இந்தத் தேர்தலை நடாத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கூட ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரியவில்லையே?

பதில்: ஆமாம். இன்றைய நிலையில் இடம்பெயர்ந்து வசிக்கும் மக்களை மீள்குடியேற்றுவதுதான் முதன்மையான பணி. இந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதோடு இவர்களது வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்படவேண்டும்.

கேள்வி: ஆனால் இந்த மக்கள் முகாம்களில் இருந்தபோதும் கூட குடியரசு அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்திருந்தார்களே. இவர்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படும் நாளுக்காக நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டுமா?

பதில்: வாக்காளர் இடாப்பினைப் புதுப்பிக்கவேண்டிய தேவையுள்ளது. 1981ம் ஆண்டினது குடிசன மதிப்பீட்டுக்கு அமைய நாங்கள் தேர்தல்களை நடாத்த முடியாது. கிழக்கிலிருந்து புலிகள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நாங்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருந்ததை நீங்கள் அறிவீர்கள். ஆனால் வடக்கில் மக்கள் முகாம்களில் வசித்துவரும்போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு நான் விரும்பவில்லை. இது தவறான பார்வையினை ஏற்படுத்திவிடும்.

கூடிய விரையில் வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கே நான் விரும்புகிறேன். அடுத்த ஆண்டு இந்தத் தேர்தலை நடாத்த முடியும் என நம்புகிறேன். எங்களைக் குறை கூறவிரும்புபவர்கள் யாரோ அவர்கள் நாங்கள் எத்தகைய செயற்பாடுகளில் இறங்கினாலும் அதனைக் குறைகூறத்தான் செய்வார்கள். இந்த நிலையில் அவசரப்பட்டு வடமாகாணசபைத் தேர்தலை நடாத்துமிடத்து வாக்களிப்பு வீதம் குறையுமெனில் அதற்கும் எங்கள் மீதுதான் குறைகூறுவார்கள். எது எவ்வாறிருப்பினும் 1981ம் ஆண்டினது குடிசன மதிப்பீட்டுக்கு அமைய நாங்கள் தேர்தல்களை நடாத்த முடியாது.

கேள்வி: சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் அளவில்பெரிய உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அனைவரும் பேசுகிறார்கள். கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இதுபோன்ற அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகக் கூறுகிறார்கள். அப்படியாயின் அபிவிருத்தியினை நோக்கிய பாதையில் நீங்கள் விரைவாக நகர்கிறீர்கள். இந்த துரித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் துணையாக ஏன் அரசியல் தீர்வு முயற்சிகளையும் விரைவுபடுத்தக் கூடாது?

பதில்: இதுபோன்ற அரசியல் முனைப்புக்களில் தற்போது பங்கெடுப்பதற்கு அனைவரும் தயாராக இல்லை. இது துரதிஸ்ரவசமானது. அரசியல் முனைப்புக்கள் முன்னெடுக்கப்படும்போது எதிர்க்கட்சியினரும் அதற்குப் போதுமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். முன்வைக்கப்படும் தீர்வானது எனது தனிப்பட்ட தீர்வாக இருக்கக் கூடாது. மாறாக அனைத்துத் தரப்பினரது எண்ணங்களையும் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். இது மக்களின் தீர்வாக இருக்கவேண்டும். இந்தத் தீர்வு அடி மட்ட மக்களிடத்திலிருந்து வரவேண்டும். இதுபோன்றதொரு தீர்வினைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

தற்போதைய சூழமைவில், ஒரே தேசம் ஒரு நாடு என்பதையே அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். நான் வடக்கிற்குப் பயணம் செய்திருக்கிறேன். எங்களது இளைய பாராளுமன்ற உறுப்பிர்களும் அங்கு அடிக்கடி சென்று நிலைமைகளை அவதானிக்கிறார்கள். வடக்கினது அபிவிருத்திக்கு பல பில்லியன் ரூபாய்களை நாங்கள் செலவிட்டிருக்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செலவிட்ட தொகையெதுவோ அதேயளவு தொகையினை நாங்கள் ஏனைய மாகாணங்களிலும் செலவிடவேண்டும். அபிவிருத்திப் பணிகளுக்காக மாகாண ரீதியில் செலவிட்ட நிதியினை எடுத்துக்கொண்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கே அதிக நிதியினைச் செலவிட்டிருக்கிறோம்.

கேள்வி: அரசியல் உடன்பாடு ஏற்படுமிடத்து சிறிலங்கா எதிர்கொள்வதற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் போர் முடிவுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இன நல்லிணக்க ஆணைக்குழுவானது பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்ளும். இந்த விடயத்தில் தென்னாபிரிக்காவில் கைக்கொள்ளப்பட்ட வினைத்திறன் மிக்க முறையொன்று இருக்கிறது. நீங்கள் அமைத்திருக்கும் இந்த ஆணைக்குழுவினது செயற்பாடு தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: ஆணைக் குழுவினது செயற்பாடுகள் திருப்திதரும் வகையில் சிறப்பாக உள்ளதென நான் கூறுவேன். ஆணைக்குழுவானது இதுவரைக்குமான தனது கண்டறிதல்களுக்கு அமைய இடைக்கால பரிந்துரைகளை எமக்கு வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். இது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழுவானது கொழும்பில் மாத்திரமல்லாது வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் தனது அமர்வுகளை நடாத்தி வருகிறது.

அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதற்கு அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கக்கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையினருக்குக் கூட அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் தங்களது நலன்களை முன்நிறுத்திச் செயற்படும் குறிப்பிட்ட சில தரப்புகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் இதுபோன்ற செயற்பாடுகளுக்குத் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்த போதும் ஐ.நாவின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக வல்லுநர் குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்து மனித உரிமை மீறல்களும் சுதந்திர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என சர்தேச அமைப்புக்கள் கோரி வருகின்றன. இது தொடர்பில்?

பதில்: இந்தச் அனைத்துலக நிறுவனங்களின் நிலையினை நான் விளங்கிக்கொள்கிறேன். அவர்கள் எதனையாவது செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள். நாங்கள் எத்தகைய முன்னெடுப்புக்களை முன்னெடுத்தாலும் இந்த அமைப்புக்கள் தங்களது கருத்துகளை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. குறிப்பிட்ட சில அமைப்புக்களது கருத்துக்களை மாத்திரமே எங்களால் மாற்ற முடிந்தது. உலகில் போர் இடம்பெற்ற எந்த நாட்டினை எடுத்துக்கொண்டாலும் அங்கு மனித உரிமையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

உதாரணமாக, போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து 300,000 மக்கள் இடம்பெயர்ந்தபோது அவர்களைத் தங்கவைத்துப் பராமரிப்பதற்கான முகாம்களை நாங்கள் அமைத்திருந்தோம். ஆனால் பொதுமக்களை நாங்கள் 'வதை முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாக' இந்த அமைப்புக்கள் கூறின. மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு நீங்கள் சென்றீர்கள்தானே. அது தடுப்பு முகாம்களா? தற்போது மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 'நிரந்தர வீடுகள் எதுவும் அற்ற நிலையில்' மக்கள் குடியேற்றப்படுவதாக இந்த அமைப்புக்கள் கூறுகிறன்றன. ஆறு மாத காலத்திற்குள் நாங்கள் நிரந்தர வீடுகளைக் கட்டிமுடிக்கவேண்டும். கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவுறாமல் நாங்கள் எவ்வாறு மக்களை மீள்குடியேற்றுவது. சரி, மக்களை வேகமாக மீள்குடியேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் மக்களை அங்கு அழைத்துச்சென்றால் 'கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றாமல் மக்களை குடியமர்த்துவன் மூலம் அவர்களைக் கொல்லப்பபார்க்கிறார்கள்' என இந்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தும்.

தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காவில் குறித்த சில தொண்டு நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை நாமறிவோம். ரான்ஸ்பரன்சி இன்னரநாஸ்னல் என்ற நிறுவனம் 2009ம் ஆண்டு 109 மில்லியன் இலங்கை ரூபாய்களைச் சிறிலங்காவில் செலவிட்டிருக்கிறது. இந்த ஆண்டு தை மாதம், அதாவது அதிபர் தேர்தல் இடம்பெற்ற மாதத்தில் 69 மில்லியன் ரூபாய்களை இந்த அமைப்பு செலவிட்டிருக்கிறது. இதுபோன்ற பெருந்தொகை நிதியினை அரச திணைக்களம் ஒன்றினால்கூட செலவிடமுடியாது.

தொண்டு நிறுவனங்கள் செய்தது இதைத்தான். நாட்டினது அரசாங்கம் மாறவேண்டும், அரசியல் தலைமை மாறவேண்டும் என்றே இவர்கள் கருதுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக இந்த நிறுவனங்கள் அலட்டிக்கொள்வதில்லை.

http://www.puthinappalakai.org/view.php?20101123102557

புதினப்பலகைக்கு வாழ்த்துக்கள்..

அருமையான ஒரு தலைவரின் சிறப்பான ஒரு செய்வியை மொழி பெயர்த்தமைக்காக... வாழ்க்க தேச ஒற்றுமை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.