Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தை விசேடப்படுத்தாவிடின் இலங்கை-இந்திய உறவு பூரணமடையாது

Featured Replies

யாழ்ப்பாணத்தை விசேடப்படுத்தாவிடின் இலங்கை-இந்திய உறவு பூரணமடையாது

வட மாகாண மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள்,நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்காக தன்னால் முடிந்த அளவிற்கு இந்தியா பங்களிப்பை வழங்க முயற்சித்து வருகிறது.இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அர்த்த புஷ்டியான தீர்வுப் பொதியே இறுதியான அரசியல் இணக்கப்பாட்டுக்கு தேவைப்படும் சூழலை உருவாக்கும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார்.

குடாநாட்டுக்கு நேற்று விஜயத்தை மேற்கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணா யாழ்நகரில் இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ,வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அங்கு உரையாற்றிய இந்திய அமைச்சர் கிருஷ்ணா தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கை அரசாங்கம் வடமாகாணத்தில் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மீள்கட்டுமான முயற்சிகளுக்கான அனுசரணைகளை நாங்கள் இப்போது வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதையிட்டு நான் நன்றி தெரிவிக்கிறேன்.பொதுவாக வடமாகாண மக்களுக்கும் விசேடமாக யாழ்.குடாநாட்டு மக்களுக்கும் தென்னிந்தியாவில் உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள விஷேட உறவை முன்னிலைப்படுத்தாவிடின் இலங்கையுடனான இந்தியாவின் உறவு பூரணத்துவமானதாக அமையாது.

நூற்றாண்டுகளாக வரலாற்றின் முக்கிய திருப்பு முனைகளில் யாழ்ப்பாணம் எப்போதுமே இருந்து வருகிறது.வரலாறு, கலாசாரம்,மதம், மன்னர்கள்,இராச்சியங்கள்,வர்த்தகம்,வியாபாரம்,கலைகள், நடனம்,இலக்கியம் என்பனவற்றில் எப்போதுமே யாழ்ப்பாணம் முக்கியமான இடத்தில் இருந்துவருகிறது.யாழ்ப்பாண துறைமுகமானது பிரதானமான கடல்மார்க்க பாதையில் இருக்கிறது. உன்னதமான தமிழ் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் யாழ்ப்பாணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த யாழ்பாடிக்கு அரசன் பரிசாககொடுத்ததாக ஐதீகமும் உள்ளது. ஆறுமுகநாவலர்,சி.வை.தாமோதரம் பிள்ளை போன்ற தமிழ் புத்திஜீவிகளும் கல்விமான்களும் பண்டைய தமிழ் இலக்கியத்தை கற்று ஆழமாக விளங்கிக்கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டியுள்ளனர்.ஆதலால் யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதிகள் அலுவலகத்தை அமைப்பதற்கு இந்தியா தீர்மானித்திருப்பது இயற்கையானதொன்றாகும். யாழ்ப்பாணத்தில் கேந்திர ரீதியாக இந்தமாதிரியான பிரசன்னம் அமைவது அனேகமாக தவிர்க்க முடியாததொன்றாகும்.

பலாலியிலிருந்து திருச்சிக்கு நேரடியாக விமானசேவை இடம்பெற்ற நாட்களையும் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு கப்பல் சேவை இடம்பெற்ற நாட்களையும் பார்த்திருந்த பலர் இச் சபையில் இருக்கக்கூடும். மட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னைக்கு உங்கள் மத்தியிலுள்ள சிலர் படம் பார்ப்பதற்கு மட்டுமென சென்றிருக்கக்கூடும். அந்தப் பிணைப்புகளை மீள ஏற்படுத்துவதற்கான காலகட்டம் இதுவாகும்.தனது வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தினூடாக இலங்கை அண்மையில் பயணித்து வந்துள்ளது. கடந்த வருடம் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. நாட்டிலுள்ள சகல பிரிவினரும் இந்த மோதலினால் பாதிக்கப்பட்டிருந்தனர். வடமாகாண மக்கள் அளவுக்கு அதிகமான விகிதத்தில் இதன் தாக்கத்திற்குட்பட்டிருந்தனர். அப்பாவி ஆண்கள், பெண்கள், பெண் பிள்ளைகள் மோதலின் இடையில் சிக்கியிருந்தனர். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்தனர். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது இலங்கைக்கான சவாலாக இருக்கிறது. அத்துடன், இலங்கையின் வட பகுதியில் புனர்வாழ்வு மீள்கட்டுமான நடவடிக்கையை மேற்கொள்வதும் இலங்கையின் முன்னால் உள்ள சவாலாகும்.

வட மாகாண மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும் நெருக்கடிகளையும் தீர்த்துவைப்பதற்கு தன்னால் முடிந்தளவிற்கு பங்களிப்பை வழங்க இந்தியா முயற்சித்திருந்தது. ஆரம்பத்தில் நாம் உணவு, உடை, மருந்துகள் மற்றும் முகாம்களில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அனுப்பியிருந்தோம். முதலில் புல்மோட்டையிலும் பின்னர் மெனிக் முகாமிலும் கள மருத்துவமனைகளை ஏற்படுத்தினோம். அந்த மருத்துவமனைகள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு இந்திய மருத்துவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டனர். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எமது உறுதிப்பாடான நடவடிக்கையின் அடையாளமாக அது காணப்படுகிறது. சமீப மாதங்களில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு நாம் உதவிக் கரத்தை நீட்டியுள்ளோம். கூரைத் தகடுகள், சீமெந்து என்பவற்றை வழங்குவதன் மூலம் அவர்கள் இடைத்தங்கல் புகலிடங்களையும் விவசாய உபகரணங்களைப் பெற்று சிறிய விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்கும் நாம் உதவி வருகிறோம்.

இலங்கை அரசு மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக உதவி வழங்கும் முயற்சிகளை நாம் இப்போது மேற்கொண்டுள்ளோம். இன்று பிற்பகல் இந்திய அரசாங்கம் வட மாகாணத்தில் அமைத்துக் கொடுக்கவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கான அத்திவாரக் கல் நாட்டும் வைபவத்தில் நான் பங்கேற்கவுள்ளேன். இந்த மாத முற்பகுதியில் இந்தியா விதைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அத்துடன் 500 உழவு இயந்திரங்களையும் வழங்கியிருக்கிறது. வட மாகாண விவசாய சேவைகள் நிலையங்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. வட மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மீட்சி பெறச் செய்வதற்கு நாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். மக்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவுவோம்.

நிவாரண புனர்வாழ்வு தொடர்பான உடனடியாக மேற்கொள்ளப்படும் இலக்குகளில் நாங்கள் கவனத்தைச் செலுத்தியிருந்தாலும் கூட நீண்டகால அடிப்படையிலான மீள்கட்டுமானமானது மிகவும் முக்கியமானதொன்றாகும். இந்த இலக்கிலும் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும். இன்று பிற்பகல் மதவாச்சியிலிருந்து மடுவிற்கான ரயில் பாதை புனர்நிர்மாண நடவடிக்கையை நான் ஆரம்பித்து வைக்கவுள்ளேன். இதேபோன்ற வேலைத்திட்டம் மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலும் ஓமந்தைக்கும் பளைக்குமிடையிலும் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பிராந்தியமானது சமாதானம் இயல்பு நிலைக்குத் திரும்புவது இலங்கை, இந்திய அரசாங்கங்களின் முன்னணி இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலம் பழைமையான பிணைப்புகளை, தொடர்பாடல்களை மீள ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதனடிப்படையில் நாங்கள் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை பூர்த்தி செய்துள்ளோம். அதாவது கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும் தலைமன்னாருக்கம் இராமேஸ்வரத்திற்குமிடையிலும் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தையைப் பூர்த்திசெய்திருக்கிறோம். காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். யாழ்ப்பாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உயிரூட்டம் அளிக்கும் இடமாக காங்கேசன்துறை துறைமுகம் விளங்குவதற்கு நாம் அதனைப் புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். காங்கேசன்துறையிலிருந்து கள்ளிகோட்டைத் துறைமுகம் 40 கடல் மைல் தூரத்தில் மட்டுமே உள்ளது. இதேவேளை பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக இலங்கை அரசு அபிவிருத்தி செய்யுமென நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான தனது தொடர்பாடலை இலங்கை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளுமென நாம் கருதுகிறோம். இருநாடுகளுக்குமிடையிலான பலதரப்பட்ட பிணைப்புகள் மக்களுக்கிடையிலான தொடர்பாடல்களை மீள ஏற்படுத்திக்கொள்வதற்கு உதவுவது மாத்திரமன்றி இரு நாடுகளினதும் உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரியளவில் பங்களிப்பை வழங்குமென்பதில் நான் நம்பிக்கையைக் கொண்டுள்ளேன்.

யாழ்ப்பாணத்தின் கலாசார மேம்பாடு மீளெழுச்சி பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்தியாவின் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகம் உதவும். யாழ்ப்பாண கலாசார நிலையத்தை அமைப்பதன் மூலமும் துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பதன் மூலமும் கலாரீதியான மேம்பாட்டிற்கு உதவியளிப்பதாக அமையும். மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனரமைப்பதற்கான பணியை நாம் மேற்கொண்டுள்ளோம்.

2009 மே யில் இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தமையானது நிலுவையாக உள்ள விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. உண்மையான தேசிய நல்லிணக்கத்திற்காக பணியாற்றுவதற்கும் புரிந்துணர்விற்கும் பரஸ்பரம் உள்வாங்கிக்கொள்வதற்குமான அரிய சந்தர்ப்பத்தை யுத்தம் முடிவுக்கு வந்தமை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 13 ஆவது திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்ட அர்த்தபுஷ்டியான தீர்வுப் பொதியானது இறுதியான அரசியல் தீர்வுக்கான சூழலுக்குத் தேவைப்படும் நிலைமையை ஏற்படுத்தும் என்பதில் நாம் நம்பிக்கைகொண்டவர்களாக உள்ளோம். சகல சமூகங்களினதும் பங்களிப்புடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகுமென நாம் கருதுகிறோம். கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதே இறுதியான இலக்காகும்.

இந்த இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தைத் திறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அமைச்சர் பேராசிரியர் பீரிஸுக்கும் நான் பாராட்டைத் தெரிவிக்கின்றேன். அத்துடன், வடமாகாண ஆளுநர் அலுவலகம் யாழ்.அரச அதிபர் அலுவலகம் என்பவற்றிற்கும் இந்த நிலையத்தை அமைப்பதற்கு உதவியதற்காக நன்றி கூற விரும்புகிறேன்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2179:2010-11-28-01-42-57&catid=34:hotn-news&Itemid=99

யாழ்ப்பாணத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த யாழ்பாடிக்கு அரசன் பரிசாககொடுத்ததாக ஐதீகமும் உள்ளது.

யாழ்ப்பாணத்தை மகிந்தா இப்போ இந்தியாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார் ..புலிகளையும் தமிழ்மக்களையும் கொலை செய்து வெற்றி வாகை சூடியமைக்கு....இது சரித்திரமாகும் இனி .

Replying to யாழ்ப்பாணத்தை விசேடப்படுத்தாவிடின் இலங்கை-இந்திய உறவு பூரணமடையாது

யாழ்ப்பாணத்தானை வைத்து கொமேடி பண்ணுறதே சில ஆட்களின் வேளையாபோச்சு :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.