Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமும் இந்தியாவும்-08 : தமிழக அரசியலுடன் கலந்த ஈழப் பிரச்சினை

Featured Replies

eelamindia08.jpg

இலங்கை தொடர்பான தன்னுடைய இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இந்திரா காந்தி ஆரம்பித்த அதேவேளையில், தமிழகத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.திமு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்தன. தமிழகத்தில் முழு அடைப்பு, சத்தியாக்கிரகப் போராட்டம், ஜெயவர்த்தனவின் கொடும்பாவி எரிப்பு என போராட்டங்கள் சூடுபிடித்திருந்த நிலையில் ஷாஜகான் என்ற 22 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் சென்னையிலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயம் முன்பாக தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெற்ற முதலாவது தீக்குளிப்புச் சம்பவமாக இதனைக் கருதலாம்.

தீக்குளித்ததையடுத்து கடுமையான காயங்களுக்குள்ளான ஷாஜகானை தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தன்னுடைய தனிப்பட்ட நன்கொடையாக இரண்டு லட்சம் ரூபாவையும், அ.தி.மு.க. சார்பாக 1,50,000 ரூபாவையும் காயமடைந்த ஷாஜகானுக்கு வழங்கினார். இவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை இரு பிரதான தமிழகக் கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னெடுத்தமை காரணமாக தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பிக்கொண்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அதிரடியாதன அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.

அதாவது கருணாநிதியும், அவரது கட்சியின் பிரதித் தலைவராக இருந்த அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவிக்க தமிழக மக்களின் கவனம் மட்டுமன்றி உலகத் தமிழனித்தின் கவனமும் அவர்களின் பக்கம் திரும்பியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்தப் பிரச்சினையில் இந்திரா காந்தி அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கோரியுமே தமது பதவிகளை இருவரும் துறந்தார்கள். ஈழத் தமிழர்களுக்காகத் தமது பதவிகளையே தூக்கி எறிவதாகக் காட்டிக்கொள்வதன் மூலமாக எம்.ஜி.ஆரின் பிரச்சாரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும் என கருணாநிதி கணக்குப் போட்டார்.

அதேவேளையில் சட்டப்பேரவைக்கு நடைபெறக்கூடிய இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லை எனக் கூறியே தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுவிட முடியும் என கருணாநிதி திட்டமிட்டார். இதற் மூலம் எம்.ஜி.ஆரின் அரசியலில் ஒரு பின்னடைவை ஏற்படுத்த முடியும் என்பதும் அவரது உபாயமாக இருந்தது. தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததிலிருந்து அதற்கான பிரச்சாரங்களை அவர் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கருணாநிதியின் இந்த நடவடிக்கை ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் தமிழக அரசியல் சில காலத்துக்கு இயங்கப்போகின்றது என்பதைத் தெளிவாக உணர்த்துவதாக அமைந்திருந்தது.

கருணாநிதி எவ்வாறான அரசியல் வியூகம் ஒன்றை அமைத்துச் செயற்படுகின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத ஒருவராக எம்.ஜி.ஆர். இருக்கவில்லை. கருணாநிதியின் திட்டங்களைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். இதற்கு எதிரான உபாயங்களை வகுத்து இரண்டு அறிவித்தல்களை வெளியிட்டார். எம்.ஜி.ஆரின் இந்த இரு அறிவிப்புக்களும் கருணாநிதியின் வியூகங்களைத் தகர்ப்பதாக அமைந்திருந்தது.

ஒன்று - கருணாநிதியும், அன்பழகனும் இராஜினா செய்ததால் அண்ணாநகர் மற்றும் புரசைவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என எம்.ஜி.ஆர். அறிவித்தார். ஈழத் தமிழர் பிரச்சினைகளை மையப்படுத்தியே அவர்கள் தமது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்திருப்பதால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை தான் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு - ஆகஸ்ட் (1983) 16 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கறுப்பு ஆடைகளையே அணியுமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அறிவித்தார். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை இதன் மூலம் வெளிப்படுத்துமாறும் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஜி.ஆர். உட்பட கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் ஒரு மாத காலத்துக்கு கறுப்பு உடைகளுடனேயே பொது நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டனர்.

எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான இந்த அரசியல் போட்டா போட்டி தமிழக அரசியலில் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக்கியது. இந்த இரு அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான காணப்பட்ட போட்டா போட்டி அரசியலுக்கு அப்பால் மற்றொரு தரப்பு ஈழத் தமிழர் பிரச்சினையில் உளப்பூர்வமான அக்கறையைக் காட்டியது. அது பழ.நெடுமாறனின் செயற்பாடுகள்தான். காந்தி காமராஜ் காங்கிரஸின் தலைவராக அப்போதிருந்த ப.நெடுமாறன் அரசியல் அதிகார மோகங்களுக்கு அப்பால் நின்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்தவர். 1983 ஆகஸ்ட் மாதம் தமிழகக் கடற்கரையிலிருந்து அவர் ஆரம்பித்த போராட்டம்தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது முதலாவது போராட்டம் எனக் கருதலாம்.

ஈழத் தமிழர்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறைக்கு எதிராக நெடுமாறன் மேற்கொண்ட படகுப் பயணம் அப்போதுதான் இடம்பெற்றது. மதுரையிலிருந்து ஊர்வலமாக இராமேஸ்வரம் வந்த நெடுமாறனும் அவருடைய ஆதரவாளர்களும் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக படகுகள் மூலமாக இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டபோது கைது செய்யப்பட்டனர். தாம் கைது செய்யப்படுவோம் என்பதைத் தெரிந்துகொண்டே இவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதும் உண்மை. ஏனெனில் இராமேஸ்வரம் கரையில் இவர்கள் நிறுத்தியிருந்த படகுகள் இலங்கைக் கரை வரையில் செல்லக்கூடியவையல்ல. அத்துடன் அதற்கேற்ற படகோட்டிகளும் இவர்களிடம் இருக்கவில்லை. பொலிஸார் இவர்களைக் கைது செய்து காப்பாற்றவில்லை எனில் இவர்களுடைய படகுப் பயணம் ஆபத்தானதாகவே முடிந்திருக்கும்.

சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தன் மூலம் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய கருணாநிதி அடுத்ததாக மற்றொரு திட்டத்தை வகுத்துச் செயற்பட்டார். இரண்டு கோடி மக்களின் கையொப்பங்களைக் கொண்ட மனு ஒன்றை ஐ.நா. சபைக்கு அனுப்பிவைக்கப்போவதாக அவர் அறிவித்தார். இதன்மூலமாக இலங்கை விவகாரத்தில் ஐ.நா.வைத் தலையிடச் செய்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றப்போவதாக கருணாநிதி தெரிவித்தார். இதற்காக தமிழக மக்களிடம் சேகரிக்கப்படும் இரண்டு கோடி கையொப்பங்களுடன் தானே ஐ.நா. சபைக்குச் செல்வது என்பதுதான் அவருடைய திட்டமாக இருந்தது. இதன் மூலம் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட முடியும் என அவர் கருதினார்.

இருந்தபோதிலும் தானே நேரில் ஐ.நா. செல்வது என்ற தீர்மானத்தை கருணாநிதி இறுதியில் மாற்றிக்கொண்டார். தனக்குப் பதிலாக தனது கட்சியின் நம்பிக்கைக்குரிய வேறு மூன்று உறுப்பினர்களை அனுப்பிவைப்பதற்கு அவர் தீர்மானித்தார். முரசொலி மாறன், சி.டி.தண்டபாணி மற்றும் டாக்டர் கலாநிதி ஆகிய மூவரையும் ஐ.நா. சபைக்கு மகஜருடன் அனுப்பிவைப்பதற்கு அவர் முடிவெடுத்தார். ஐ.நா. சபைக்கான பயணத்துடன் இணைந்ததாக பிரித்தானியா, சிங்கப்பூர், மலேஷிய மற்றும் இந்தோனேஷிய ஆகிய நாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறும் கருணாநிதி உத்தரவிட்டார்.

இந்தக்காலப் பகுதியில் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கமும் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தார். தமிழகத்திலும், பதுடில்லியிலும் முக்கிய பேச்சுக்களில் இவர் பங்குகொண்டார். அமிர்தலிங்கத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த தமிழக அரசு அவர் தமிழகத்தில் தங்கியிருப்பதற்கான வசதிகளையும் செய்துகொடுத்தது. அமிர்தலிங்கத்தைத் தொடர்ந்து வேறு சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் வந்து தஞ்சமடையத் தொடங்கினார்கள். இதன் மூலமாக தீவிரவாத அமைப்புக்களின் பின்தளமாக மட்டுமன்றி, மிதவாத தமிழ்த் தலைமையின் அரசியல் தலைமையகமாகவும் சென்னை மாற்றமடைந்தது.

ஜெயவர்த்தன அரசுக்குச் சில அழுத்தங்களைக் கொடுத்து அவரைப் பணியவைப்பதற்காக இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பார்த்தசாரதியின் பயணங்கள் வெற்றிபெறவில்லை. பார்த்சாரதியைப் பேசிப்பேசியே சமாளித்த ஜெயவர்த்தன, மறுபுறத்தில் இந்தியாவுக்கு விரோதமான செயற்பாடுகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார். குறிப்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கொழும்புக்கு மேற்கொண்ட இரகசியப் பயணம் இந்தியாவுக்குச் சீற்றத்தை அதிகரித்த அதேவேளையில் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஜெயவர்த்தனவுக்கு அமெரிக்க தெரிவித்த ஆதரவும், திருமலையில் அமெரிக்காவின் தளம் ஒன்று அமையலாம் என வெளியான செய்திகளும் இந்தியாவுக்கு குழப்பமான நிலையை ஏற்படுத்தியது.

இந்திய மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்களுக்கு ஒத்துழைப்பதாக ஜெயவர்த்தன தெரிவித்தாலும் கூட அவரது செயற்பாடுகள் அதற்கு முரணானதாகவே இருக்கின்றது என்பதை பதுடில்லி புரிந்துகொண்டது. ஏதாவது செய்தாகவேண்டும் என்ற நிலைக்கு இந்திரா காந்தி வந்தார். அண்டை நாடுகளில் தலையிடுவதில்லை என்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருந்தாலும் கூட, இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என இந்திரா காந்தி பகிரங்கமாகவே அறிவித்தார். இதன் அடுத்த கட்டமாக றோவுடன் கலந்துரையாடிய இந்திரா காந்தி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள போராளிகளை ஆயுத மயப்படுத்துவது, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுப்பது போன்ற திட்டங்களுக்குப் பச்சைக்கொடி காட்டினார்.

அது பற்றிய தகவல்களுடன் அடுத்த ஞாயிறு ...

www.pooraayam.com

பூராயத்துக்காக

சிவயோகன்

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.