Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

Featured Replies

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், 04.12.2010 ஆம் திகதி வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.

யூ.கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால் வரமுடியுமா? என ஜனாதிபதியின் தூதுவர் கேட்டார்.

இரண்டு பத்திரிகையாளர்களுமே அப்போதுதான் ஜனாதிபதியுடனான ஒரு மணிநேர நேர்முகத்தை முடிந்துவிட்டு வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.

ரைம்ஸ் பத்திரிகையை சேர்ந்த இந்த பத்திரிகையாள்ரகள் மேலே போனபோது கொறிடோரில் பொறுமையிழ்ந்த நிலையில் ஜனாதிபதி காத்திருப்பதை கண்டனர். நேர்முகம் அளிக்கும்போது முன்பு காட்டிய நடத்தைக்கு மாறாக இலங்கை ஜனாதிபதி கோபமாகவும் விரக்தியுடனும் காணப்பட்டார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனின் சமூகத் தலைவர் ஜேம்ஸ் கிங்ஸ்ரன், அடுத்தநாள் (டிசெம்பர் 2) நடைபெறவிருந்த தனது உரை இரத்துச் செய்யப்பட்டுவிட்டதாக அப்போதுதான் அறிவித்ததாக பத்திரிகையாளரிடம் ராஜபக்ஷ கூறினார்.

தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆயத்தப்படுத்துவதாகவும் ஒக்ஸ்போட் யூனியனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாதெனவும் காரணம் கூறப்பட்டது. இந்த பொடியங்களுக்கு இவர் பயந்துவிட்டார். - ஜனாதிபதி சட்டென கூறினார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன்

ஜனாதிபதியின் மனோநிலை விளங்கிக்கொள்ளப்பட கூடியதே. இலங்கையின் தலைவர், ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காக பெருமளவு உதவியாளர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார். இப்போது யூனியன், மிகக்குறுகிய கால அவகாசத்தில் இதை ஒரு தலைப்பட்சமாக இரத்துசெய்துவிட்டது. தமிழீழ விடுதலை புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த ஒரு மனிதருக்கு நிச்சியமாக இது அரசியல் ரீதியான அவமதிப்பே. இப்போது பிரித்தானியாவில் உள்ள புலிகளின் ஆரதவாளர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பை, ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து மீளப்பெற வைத்ததன் மூலம், பதிலடி கொடுத்துவிட்டனர்.

ஒரு தலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டமை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்மையில் அரசியல் ரீதியான சங்கடம்தான். அவர் அண்மைக்காலத்தில் வெற்றிப் பெருமிதத்தில் திளைத்தவர். இவரது உரையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்த ஒக்ஸ்போர்ட் யூனியனால், இவர் இப்போது இழிந்த இலைக்கஞ்சி குடிக்க வைக்கப்பட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காகவே இவ்வளவு தூரம் வந்த இலங்கையில் பிரபலமான அரசுத் தலைவர் கேவலப்படுத்தப்பட்டுள்ளார்.ஒக்ஸ்போர்ட் யூனியனின் அவமானப்படுத்தும் நடத்தைக்கு அப்பால் இது மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்த பிரச்சினையாகவும் உள்ளது.

முன்னாள் பிரித்தானிய பிரதம அமைச்சர் ஹரோல்ட் மக்மிலனால் மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் கொத்தளம் என வர்ணிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர், ஜனாதிபதியின் கருத்து சுதந்திரத்தை மறுத்தமை கசப்பான முரண்நகையாகும்.

அறிக்கை

இந்த கவலை தரும் நிலைமைக்கு இட்டுச்சென்ற நிலைமை யாது?

இது தொடர்பில், ஒக்ஸ்போட் யூனியன் சமூகத்தின் ஊடாக அலுவலர் அலஸ்ரெயர் வோக்கரினால் விளக்க அறிக்கை விடுவிக்கப்பட்டது. அது இவ்வாறு கூறியது:

இந்த வருடத்தின் முன்பகுதியில் எமது அங்கத்தவர் மத்தியில் உரையாற்ற, அவருக்கு வசதியான திகதியொன்றில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒக்ஸ்போட் யூனியன் அழைத்தது. உலகெங்கும் உள்ள பிரபல அரசியல்வாதிகளையும் அரசுத் தலைவர்களையும் அழைக்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனின் கொள்கைக்கு அமையவே ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திரு.ராஜபக்ஷவினால் இந்த அழைப்பு ஏற்கப்பட்டதால், ஜனாதிபதியின் விஜயத்துக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் பற்றி எமது யூனியன், தேம்ஸ்வலி பொலிஸுடனும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடனும் விரிவாக பேசியது. பொலிஸாரினால் அண்மையில் எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட ராஜபக்ஷவின் விஜயம் தொடர்பில் காணப்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான பயங்கள் காரணமாக, ஜனாதிபதியின் உரை நடைமுறையில் சாத்தியமற்றதென மனவருத்தத்துடன் உணர்ந்து கொண்டு அந்த உரையை இரத்துசெய்ய வேண்டியிருந்தது.

இந்த தீர்மானம் கவனமின்றி எடுக்கப்பட்டதல்ல. ஜனாதிபதியின் உரை இரத்து செய்யப்பட்டதையிட்டு யூனியன் ஆழ்ந்த கவலையடைகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பேச்சாளர்களை அழைக்கின்ற, பேச்சு சுதந்திர கொள்கையை நிலைநிறுத்தும் நீண்டகால பாரம்பரியம் உண்டு. ஆயினும் மிகப்பெரியளவில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதியின் உரை எதிர்பார்த்ததுபோல சமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்க முடியும் என நாம் உணரவில்லை.

உரையாற்ற வருவோர் தொடர்பில் யூனியன் அரசியல் ரீதியாக நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எமது இந்த தீர்மானம், திரு.இராஜபக்ஷவின் அரசியல் நிலைப்பாடு, அவரது அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்பவற்றுடன் தொடர்புப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது அல்ல.

கடந்த ஐந்து வருடங்களாக இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் திரு.ராஜபக்ஷ, தனது உரையில் பிராந்தியத்தின் அரசியல் நிலைப்பற்றி தனித்துவமான விளக்கத்தை வழங்குவாரென எமது யூனியன் நினைத்தது. இந்த துரதிஷ்டமான இரத்தையிட்டு எமது உறுப்பினர்களிடம் சங்கம் மன்னிப்பு கோருகின்றது.

டிசெம்பர் 02 ஆம் திகதிக்கு நிரலிக்கப்பட்ட இந்த நிகழ்வு, முதலில் நவம்பர் 8 இல் நடப்பதாக இருந்தது. பின்னர், ஜனாதிபதியே கேட்டுக்கொண்டதற்கு இணங்க டிசெம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு மும்முரமான வேலைகள் மிகுந்த காலமாக இருந்தது. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதிவியேற்ற, புதிய மந்திரி சபை அமைத்தல், வரவு செலவுத்திட்டம் தயாரித்தல், பாகிஸ்தானின் ஆஷிப் சர்தாரி, இந்தியாவின் எஸ்.எம்.கிருஷ்னா போன்ற இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள முக்கியஸ்தர்களை சந்தித்தல் என நெருக்கமாக பல விடயங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

ஒத்திப்போடுதல்

இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ டிசெம்பர் மாதத்துக்கு தனது உரையை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். யுத்தக் குற்றவாளி என கைது செய்யப்படலாம் என்ற பயத்தினாலேயே இலங்கையில் அரசுத் தலைவர் பிரித்தானியாவுக்கு வர தயங்கினார் என்ற ஊகங்கள் பலத்த கருத்துமோதலுக்கு காரணமாயின.

சர்வதேச நியாயாதிக்கத்தின் தத்துவத்தின் உதவியுடன், மே 2009 இல் நடந்த புலிகளுக்கெதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கை ஆயுதப்படைகளினால் செய்யப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்காக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் சில பிரிவுகளில் செய்திகள் காணப்பட்டன.

உலக தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் புலிசார்பான ஆட்கள் ஊடகங்கள் ஊடாக தமது உன்மத்தத்தை வெளிப்படுத்தியதுடன் யுத்தக்குற்றவாளியாக கைது செய்யப்படலாம் என்ற பயம் காரணமாக ராஜபக்ஷ பின்வாங்கியதாக பல செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர் நவம்பர் மாத்தத்தில் முதலில் திட்டமிட்டவாறு வந்திருந்தால் முன்னாள் சிலிநாட்டு சர்வாதிகாரிக்கு ஏற்பட்ட கதி ஏற்பட்டிருக்கும் எனவும் பேசப்பட்டது.

இதன் தாக்கம் இலங்கையிலும் வெளிப்பட்டது. கொழும்பு பத்திரிகைகளில், சர்வதேச நியாயாதிக்க தத்துவம் ஜனாதிபதிக்கு எதிராக பயன்படுத்தப்படும் சாத்தியம், அதன் விளைவுகள் பற்றி பல கட்டுரைகள் வெளியாகின.

இலங்கை ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு போவதனால் கைது செய்யப்படும் ஆபத்துக்கு முகங்கொடுக்கக் கூடாது என சிலவட்டாரங்கள் கருதின.

லண்டனுக்கான தனது பயணத்தை ஒத்திப்போடுவதனால் ராஜபக்ஷ கால அவகாசத்தை பெற்றுக்கொண்டார் என சில ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. விசாரணை நடைபெறாது என்ற பாதுகாப்பு உறுதியை, பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள இந்த கால அவகாசத்தை ஜனாதிபதி பயன்படுத்துவார் எனவும் கூறப்பட்டது. இவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டால் டிசெம்பரில் போவார் என்றும், இல்லாதுவிடின் போகமாட்டார் என்றும் கருதப்பட்டது.

சவால்

பிரித்தானியாவில் கைது செய்யப்படுவார் என்ற மிரட்டலுக்கு பயந்துவிட்டார் எனக் கூறியவர்கள், மெதமுலனவைச் சேர்ந்த ராஜபக்ஷ யார் என விளங்கியிருக்கவில்லை. சவால்களுக்கு பயந்து பின்வாங்குபவர் அல்ல ஜனாதிபதி. அவர், கைது செய்யப்படும் சாத்தியம் கருதி லண்டனுக்கு போகாமல் விடவில்லை.

தனது தனிப்பட்ட, அரசியல் துணிவுக்கு அப்பால் அவர் லண்டனுக்கு போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒக்ஸ்போட் அழைப்பை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. அவர் ஏற்கெனவே 2008 இல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளார். இப்போது அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. ஆட்களின் கூத்துக்கள் காரணமாக ராஜபக்ஷ இந்த சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பவில்லை.

ஒக்ஸ்போர்ட் யூனியன் என அறியப்படும் ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தில் உரையாற்ற கிடைக்கும் அழைப்பு மிகவும் கௌரவமான மதிப்பாக கருதப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம், ஒக்ஸ்போட் யூனியன் மாணவர் யூனியனிலிருந்து (OUSU) வேறுப்பட்டது. இது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பிரதிநிதித்துவ அமைப்பு ஆகும். (OUSU) இல் 20000 வரையிலான அங்கத்தவர்கள் உள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர்களும் பழைய மாணவர்களும் இணைந்த சங்கமாகும். இது பேச்சுத்திறமைக்கும், விவாதத்துக்கும் பேர் போனது. 1823 இல் அமைக்கப்பட்ட இது, பிரித்தானியாவில் உள்ள இரண்டாவது மிகப்பழைய பல்கலைக்கழக யூனியன் ஆகும். (கேம்றிட்ஜ் இதைவிட பழைமையானது).

ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக தெரிவுசெய்யப்படுவது ஒக்ஸ்- பிறிட்ஜ் வட்டாரங்களில் மகத்தான சாதனையாக கருதப்படுகின்றது. சுவாரஷ்யமான விடயமாக, நான்கு இலங்கையர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண்.

தலைவர்கள்

முதலாவது தலைவராக தெரிவு செய்யப்ட்ட இலங்கையர் றோயல் கல்லூரி பழைய மாணவனான லலித் அத்துலத்முதலியாவார். இவர் 1958 இல் தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக கண்டி திரித்துவ கல்லூரி பழைய மாணவனான லக்ஷ்மன் கதிர்காமர் 1959 இல் தெரிவு செய்யப்பட்டார். 1983 இல் தோமஸ் கல்லூரி மாணவர் ஒருவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஹிலாலி நூர்தீன் என்பவராவார். மூன்று வருடங்களின் பின் 1986 இல் முதலாவது இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டார். அவர் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி பழைய மாணவியான ஜயசுந்தரி வில்சன் ஆவார்.

ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இலங்கையரில் ஒருவர் சிங்களவர், இருவர் தமிழர், ஒருவர் முஸ்லிம்.

இலங்கை,ஒக்ஸ்போர்ட் யூனியன் ஆகியவை சம்பந்தப்பட்ட சோகமான நிகழ்வு ஒன்று 1959 இல் இடம்பெற்றது. அப்போது பிரதமராகவிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க செம்டெம்பர் 1959 இல் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர், வண. தலாதுவ சோமராம தேரோவினால் சுடப்பட்டு அடுத்த நாள் மரணமானார். லக்ஷ்மன் கதிர்காமர் அவருக்காக உரையாற்றினார்.

பல பிரபலமான முக்கியஸ்தர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளனர். இவ்வாறு உரையாற்றியவர்களில் அல்பேட் ஐன்ஸ்டீன், வின்சன்ட் சேர்ச்சில், தலாய் லாமா, அன்னை திரேஸா, றிச்சரட் நிக்ஸன், ஜிம்மி காட்டர், றொனால்ட் நீகன், ரொபர்ட் கென்னடி, ஹென்றி கீஸிஞ்சர், ஜோன் மக்கெயின் டேவிட் லாஞ்ச், பர்வேஸ் முஷாரப், ஸ்டீபன் ஹோக்கிங், றிச்சர்ட் டோகின், செரி யூத், ஜெரி அடம்ஸ் ஆகியோர் அடங்குவர்.

இந்த பின்புலத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு போக விரும்பியது இயற்கையானதே. சர்வதேச நியாயாதிக்கம் தனக்கெதிராக பயன்படுத்தப்படும் அபாயம், எந்த நேரத்திலும் அறுந்து தன்மேல் விழலாம் என நூலில் கட்டிய வாள்போல பயப்படுத்தும் நிலையிலும் புலம்பெயர்ந்தோருக்கும், தன்நாட்டு பிரஜைகளுக்கும் ஒரு விடயத்தை நிரூபிக்க விரும்பினார்.

இரண்டாவதாக ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவதால் கிடைக்கும் பேரையும் புகழையும் அவர் விரும்பினார்.

பிரச்சாரம்

ஜனாதிபதி ராஜபக்ஷ நவம்பர் 29 இல் லண்டனுக்கு புறப்பட்டுச்சென்று டிசெம்பர்2 இல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவார் என அறிந்தபோது, வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்கள் திடுக்குற்றன. அவர்கள் தமது பிரச்சாரத்தை தாமே நம்பி, ராஜபக்ஷ பயத்தினால் இனி வரமாட்டார் என நினைத்திருந்தனர். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் புலிகளின் இன்னுமொரு இயல்பு, விடயங்களுக்கு ஒளிப்பாய்ச்சுவதைவிட சூடு கிளப்புவுதில் கெட்டிக்காரராக இருப்பதாகும். இந்தப்பத்தி பல தடவைகளில் இவர்களை வாய்ப்பேச்சு வீரர்கள் என விமர்சித்துள்ளது. இவர்கள் NATO உறுப்பினர்களாவர். இதன் பொருள் NO ACTION TALK ONLY என்பதாகும்.

சர்வதேச நியாயாதிக்கத்தின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தல் என்பதும் வெறும் புசத்தலின் பாற்பட்டதே. இது தொடர்பில் செயற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன என பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், பிரத்தியட்சமான நடவடிக்கைகள் இல்லையென்றே கூறலாம்.

இப்படியான நடவடிக்கைகள் இரகசியமாக மௌனமாக மேற்கொள்ளப்படும் என்பதே யதார்த்தம். ஆனால், இந்த விடயத்தில் பேச்சு பெரிதாக இருந்ததே ஒழிய, விஷயம் ஏதும் நடக்கவில்லை. சலசலப்பே ஒழிய பலகாரம் இல்லை என்ற கதைதான் இது.

மஹிந்த லண்டன் வருகிறார் என்ற செய்தியை அறிந்ததும் எல்.ரீ.ரீ.ஈ. அமுக்கக் குழுவினர், அதிர்ச்சியடைந்ததனர். தகவல் தரவல்ல தமிழ் மூலமொன்றின் அறிக்கைப்படி ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான நடவடிக்கை எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. மேலும் புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஜனாதிபதியின் லண்டன் விஜயம் உண்மையிலேயே வெளிப்படையான சவாலாக இருந்தது.

இப்படியான சூழலில்தான், எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்கள் குறிப்பாக லண்டனில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். சட்ட நடவடிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காலம் கடந்திருந்தது. ஆனால் வெகுஜன நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான தெரிவுகள் இருக்கவே செய்தன.

ஹீத்ரோ

ஒக்ஸ்போர்ட்டில் ஜனாதிபதிக்கு நடக்கக் கூடியது எது என்பதன் அறிகுறியை ஜனாதிபதி தனி விமானத்தில் லண்டன் வந்தபோது காணக்கூடியதாக இருந்தது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுலோக அட்டைகளை தாங்கிய 300-350 தமிழ் ஆர்வலர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

அப்போது நிலவிய வானிலையில் நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்;கள் விமான நிலையத்தில் கூடியமை சாதனையென்றே கூறலாம். எல்.ரீ.ரீ.ஈ. இன் இலச்சினையாகிய உறுமும் புலியுடன் கூடிய கொடிகள், சுலோக அட்டைகளை அவர்கள் வைத்திருந்தனர். புலிசார்பு ஆட்கள் இது தமிழீழத்தின் தேசிய கொடி - என்றும் புலிக்கொடி அல்லவென்றும் கூறுகின்றனர். ஆனால், இதனால் வரலாறு பற்றிய அறிவில்லாத இளம் தலைமுறையினரை தவிர வேறுயாரையும் ஏமாற்ற முடியாது.

இந்த சத்தமிடும் ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்க்கும் வகையில் அதிவிசேட முக்கியஸ்தர்களுக்கான விசேட வழியூடாக ஜனாதிபதி விரைந்து அழைத்துச்செல்லப்பட்டார். ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 நிமிட பிரபல்யத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பரவலான ஊடகங்களின் கவனமும் கிடைத்தது.

பின்னர், பிரித்தானிய தமிழ் ஆர்வலர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற ஒக்ஸ்போர்ட் விடுத்த அழைப்புக்கு எதிராக பரந்தளவிலான இயக்கத்தை தொடக்கினர்.

எதிர்ப்பு இயக்கம்

மேற்கத்தைய நாடுகளில் இருந்த பல தமிழ் நிறுவனங்கள் நிரலிக்கப்பட்டிருந்த உரைக்கு எதிராக கடுமையான இயக்கத்தில் ஈடுபட்டன. பொதுவாக பிரித்தானிய அரசாங்கத்திற்கும், குறிப்பாக ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கும் முறையீடுகள் செய்யப்பட்டன. ஏராளமான கடிதங்களும், விண்ணப்பங்களும், மின்னஞ்சல்களும், தொலைநகல்களும் ஒக்ஸ்போர்ட்டின் உத்தியோகத்தர்களுக்கு பல தொலைபேசி அழைப்புகளும் இடம்பெற்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது உரையை நிகழ்த்தவிருந்த டிசெம்பர்2 ஆம் திகதி ஒக்ஸ்போட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒக்ஸ்போட்டில் கூடி அன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டது.

மஹிந்தவுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒக்ஸ்போர்ட் சுவர்களில் ஒட்டுவதற்கான திட்டமும் இருந்தது. தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படவிருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ஷ பேசவிருந்த இடத்துக்குப் போகும் சகல பாதைகளையும் தடுக்க திட்டமிட்டிருந்தனர்.

ஒக்ஸ்போர்ட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து செல்வதற்காக பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் விசேட பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நீதியீனமாக நடத்தியதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட சிங்கள செயற்படுநர்களும் அங்கே வரவிருந்தமை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விசேட அம்சமாக அமையவிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் அல்லாத மனித உரிமை நிறுவனங்களும், ஆர்வலர்களும் பங்குகொள்ள இருந்ததாக அறியப்படுகிறது. 2009 இல் உண்ணாவிரதமிருந்த ரிம் மார்ட்டின் தலைமையிலான “Act Now” என்னும் நிறுவனம் இவற்றுள் ஒன்றாகும்.

பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்தை திட்டமிட்டு இணைப்பு செய்தது. இது உலகத் தமிழ் அரங்கத்தின் (WTF) ஒரு கூறாகும். உலக எல்.ரீ.ரீ.ஈ. இளைஞர் பிரிவு அல்லது (TYO) அல்லது இளைஞர் நிறுவனம் தேவையான மனிதவலுவை வழங்கியது.

ஐரோப்பிய பெரு நிலப்பரப்பிலிருந்தும் பலநூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் ஆங்கில கால்வாயை கடந்து ஒக்ஸ்போர்ட் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

நிலை மாறுதல்

பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் -4; இராணுவ சிப்பாய்கள் குரூரமாக கைதிகளை கொல்வதாக கூறப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியதன் பின், அரசியல் நிலைமை உணர்ச்சி கொந்தளிக்கும் நிலைமைக்கு போயிற்று.

இணையத்தில் பரவலாக காட்டப்பட்ட வீடியோ காட்சியில் நிர்வாணமாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அருவருப்பான, பயங்கர உருவம் காட்டப்பட்டது. இது வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.யினால்; நடத்தப்பட்ட தொலைக்காட்சியின் அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் படமென கூறப்பட்டது. இவர் ஏற்கெனவே யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

குரூரமாக கொலை செய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. தளபதி கேணல் ரமேஷும் ஒருவர் எனக் குற்றம்சாட்டப்பட்டது. ரமேஷ் முன்பு யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என அரசாங்கம் அறிவித்திருந்தபோதும், ரமேஷ் இராணுவத்திடம்; சரணடைந்தார் என தமிழ் செய்தி வழங்குநர்கள் குற்றம் சாட்டினர். இணையத் தளத்தில் காட்டப்பட்ட இன்னொரு வீடியோ காட்சியில் ரமேஷ், சீருடை அணிந்தவர்களுடன் கெஞ்சிப் பேசும் காட்சி காட்டப்பட்டது. இந்த ரீவி படங்களையிட்டு உண்டான கருத்துமுரண்பாடுகளும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளும் கொந்தளிப்பான நிலைமையை ஏற்படுத்தின. அத்துடன் ஒக்ஸ்போர்ட்டில் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைமீதும் தமிழ் வட்டாரங்களில் கசப்புணர்வை தோற்றுவித்தது. முக்கியமான அந்த நாளன்று ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒக்ஸ்போட்டில் குவிந்து பலத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

ஒக்ஸ்போர்ட்

பிரித்தானியாவின் பிரதான தொலைக்காட்சி ஒன்றிலும் பத்திரிகைகளிலும் மேறகொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விடாப்பிடியான பிரச்சாரம் ஒக்ஸ்போர்ட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது ஒக்ஸ்போர்ட் வட்டாரத்திலும் இந்த நிகழ்வுப்பற்றிய விசேட அக்கறை ஏற்பட்டிருந்தது.

ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் மத்தியில் இரண்டு சிந்தனை பள்ளிகள் காணப்பட்டன. ஒரு பள்ளி, ஜனாதிபதி ராஜபஷ யூனியனில் பேசவிருந்ததை முழுமையாக எதிர்த்தது. இந்த பிரிவினர் ராஜபக்ஷ யுத்தக்குற்றம் இழைத்தவர் எனவும் இவருக்கு யூனியனில் உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்ட கூடாதெனவும் திடமாக நம்பினர்.

இவர்கள், யூனியன் உரையை நடத்துமாயின் ராஜபக்ஷவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் அறிகுறிகளை காட்டினர்.

அடுத்த சிந்தனைப்பள்ளியினர் ராஜபக்ஷவுக்கு அவரது பேச்சுரிமை வழங்கப்படவேண்டும் என கருதினர். இந்த கருத்துடையோர் இவர் யூனியனில் உரையாற்றுவதை விரும்பினர். ஆனால், உரையின் முடிவில் வில்லங்கமான கேள்விகளால் துளைத்தெடுக்கும் திட்டங்களை கொண்டிருந்தனர். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி, பல்கலைக்கழக மாணவர் தோழமையின் அடிப்படையில் அவரை விசாரிக்க திட்டமிட்டனர்.

இதிலிருந்து, ஒக்ஸ்போர்ட் அமைப்புக்குள்ளேயே ஜனாதிபதியின் உரைக்கு கணிசமான எதிர்ப்பு உருவாகியிருந்ததை காண முடிந்தது. தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்பில் ஒக்ஸ்போர்ட்டின் உயர்மட்டத்தில் ஆரவாரமில்லாத மாற்றம் ஒன்று உருவானது.

விரோத மனப்பாங்கு பரவலாக காணப்பட்ட நிலையை பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அமைப்புகள், இந்த உரைப்பற்றி, பாதுகாப்பு தொடர்பில் பேரச்சம் கொண்டனர். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும் சில வீதிகளுடாக வாகனங்கள் செல்வதை தடுப்பதும் ஒரு வழியாக யோசிக்கப்பட்டது. ஆனால் இதை பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை. இவர்கள், மதிப்புமிக்க ஒக்ஸ்போர்ட் சூழலில் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்ததாக தாம் குற்றஞ்சாட்டப்படுவதை விரும்பவில்லை.

எதிர்விளைவுகள்

கடந்த கால அநுபவம் பற்றிய கசப்பான நினைவுகளும் இருந்தன. 2009 இல் யுத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தபோது பிரித்தானிய பொலிஸார் தமிழ் இளைஞர்களின் ஆர்ப்பாட்ட முனைப்பை கண்டிருந்தனர்.

நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய ஊடக பிரசாரம் காரணமாக தமிழ் வட்டாரங்களில் உணர்ச்சிகள் கிளறப்பட்ட நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் மட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் முயற்சிகள், வன்முறைகள் உருவாக காரணமாகலாம் என்ற பயம் இருந்தது.

கருத்திலெடுக்கப்பட்ட இன்னொரு வழி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அவரது பாதுகாப்பு கருதி உரையை நிகழ்த்தாமல் விரும்படி கேட்டுக்கொள்வதாகும்.

அவருக்கு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு இது அரசியல் கௌரவம் பொறுத்தவிடயமாக இருந்தது. அவர் பணிந்து போக விரும்பவில்லை. ஆபத்துக்கு முகங்கொடுக்க பயந்து பணிவது மெதமுலன மஹிந்தவின் இயல்புக்கு மாறானது.

எனவே ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியோடு இருந்தார். ஒரு இலங்கை அதிகாரி இது பற்றி கூறியது எதிர்ப்புகள் காணப்படினும் உரையாற்றுவதில் ஜனாதிபதி வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை அவர்கள் பாராட்டினர் அவர் வில்லங்கமான கேள்விகளுக்கும் முகங்கொடுத்து தனது அபிப்பிராயத்தை கூற தயாராக இருந்தார். எந்த கட்டத்திலும் ஜனாதிபதி இந்த விடயத்தில் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. கிறவப்பட்டு வளவுக்காரன் துணிந்து போராட தயாராகவே இருந்தார்.

பிரித்தானிய உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கை உத்தியோகத்தர்கள் சிலர் ,எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யுமாறு கோரினர். பேச்சு சுதந்திரத்தை மதிக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லையாதலால் இந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது.

எரிபற்று நிலை

இந்த நிலையில், சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கு,ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதே ஒரேயொரு தெரிவாக காணப்பட்டது. யூனியன் உத்தியோகத்தர்களுக்கு கொந்தளிப்பு நிலைவரம் பற்றி விளக்கப்பட்டது. ஜனாதிபதியின் உரை நிகழ்த்தப்படுமாயின் அது பாரதூரமான வன்செயலுக்கு வழிவகுக்கும் என விளக்கபட்டது. யூனியனே இதற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டது.

ராஜபக்ஷவின் உரையை தடைசெய்யுமாறு மாணவர் சமுதாயத்தின் பெரும்பான்மையோர் வற்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் யூனியன், சங்கடமான நிலையில் தவித்துக்கொண்டிருந்தது. யூனியனுக்குள்ளே நடந்த ஆழமான கருத்தாடல்களின் பின் முற்றுகையிடப்பட்ட நிலையிலிருந்த ஒக்ஸ்போட் யூனியன் உத்தியோகத்தர்கள், ஜனாதிபதியின் உரையை இரத்துச்செய்து கொந்தளிப்பு நிலைவரத்தை தவிர்த்துக்கொள்ள தீர்மானித்தனர். இவ்வகையான விடயங்கள் ஒக்ஸ்போட் யூனியனின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது.

இரத்துசெய்தல்

ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடாமல் அவர் உரையை இரத்து செய்யும் வழமைக்கு மாறான, ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்தது, இரத்து பற்றி டிசெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தின் பாதுகாப்பு கொத்தளம் தனக்கு அதே சுதந்திரத்தை எதேச்சதிகாரமாகவும் திடீரெனவும் மறுக்குமென எதிர்பார்த்திருக்காத ஜனாதிபதிக்கு இது எதிர்பாராத அடியாக இருந்தது.

இருப்பினும் ஒக்ஸ்போர்ட் யூனியனால் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. 1998 இல் தீவிர வலதுசாரி தலைவரான ஜோன் ரின்டல் ஒரு விவாதத்துக்காக அழைக்கப்பட்டிருந்தார். இது மாணவர்களின் ஒரு பிரிவினரால் கடுமையாக எதிர்க்கபட்டது. இவர்களின் எதிர்ப்போடு பொலிஸின் ஆலோசனையும் சேர, விவாதம் இரத்து செய்யப்படுவதில் முடிந்தது.

சர்ச்சைக்குரிய சரித்திர ஆசிரியரும் ஹோலோகோஸ்ட் (ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள்) மறுப்பாளருமான டேவிட் இர்விங் 2000 ஆண்டில் தனிக்கை பற்றிய விவாத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். இதற்கு எதிராக இடதுசாரிகள், பாஸிஸ எதிர்ப்பாளர்களால் யூத சமுதாய ஆர்வலர்களால் ஒன்றிணைந்த எதிர்ப்பியக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இது ஒக்ஸ்போட் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த விவாதம் இறுதியில் இரத்துசெய்யப்பட்டது. ஆனால் 2009 இல் இர்விங் வேறொரு விவாதத்தில் உரையாற்றினார்.

உதவி வழங்கப்படும் தற்கொலை என்னும் தலைப்பில் விவாதிப்பதற்காக நன்கு அறியப்பட்ட கருணைக்கொலை பிரச்சாரகர் வைத்தியர் பிலிப் நிட்ஸ்ச் அழைக்கப்பட்டார். இதை நிட்ஸ்ச் ஏற்றுக்கொண்ட பின், வழங்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்று இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டது. வைத்தியர் நிட்ஸ்ச்சுடன் கருத்து வேறுபாடு கொண்ட பலமான அமுக்கக்குழு ஒன்று இந்த அழைப்பை இந்த அழைப்பை வாபஸ்பெற யூனியனை வற்புறுத்தியிருக்க வேண்டும். வைத்தியர் நிட்ஸ் இந்த செயலை மாபெரும் தணிக்கை என கூறி இதற்கு எதிராக பல விரிவுரைகளை நிகழ்த்தினார்.

நவம்பர் 2007 இல் ஹோலோகோஸ்ட் மறுக்கும் வரலாற்றாசிரியர் டேவிட் இரவில் மற்றும் பிரித்தானிய தேசிய கட்சி தலைவர் நிக் கிரிஃபின் ஆகிய இருவரையும் பேச்சு சுதந்திரம் என்னும் விடயத்தில் விவாதிப்பதற்கு ஒக்ஸ்போர்ட் யூனியன் அழைத்தது. பாரிய வீதிமறுப்பு அமர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு பேச்சாளர்கள் விவாதத்திற்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டனர். காடைத்தனம் பரவலாக காணப்பட்டது. இறுதியாக இர்வின், கிரிஃபின் ஆகியோர் இருவேறு அறைகளில் தனித்தனியாக உரையாற்றிய இரண்டு சிறிய விவாதங்கள் இடம்பெற்றன.

எனவே மேற்கத்தைய உலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் இறுதிக் கொத்தளத்தினால் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தரப்பங்கள் பல இருந்ததை காண முடிகிறது. மிரட்டல் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்றமை உண்மையில் கவலை தரும் விடயமே.

விரக்தி

விரக்தி காணப்பட்டபோதும் ஜனாதிபதி கலக்கமடையவில்லை. அவர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குறிப்பிட்ட முறையில் ஒரு அறிக்கையை எழுதும்படி கூறினார். ஜனாதிபதியின் அறிக்கை இவ்வாறு கூறியது: பாதுகாப்பு காரணங்களுக்காக கௌரவ ஜனாதிபதி ராஜபக்ஷ, பேச்சு சுதந்திரத்தின் தாயகமான ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான செயற்படுநர்களின் அழுத்தம் என அறியப்படும் காரணத்துக்காக ஒக்ஸ்போட் யூனியனால் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார் என அறியப்படுகிறது: இது இரத்து செய்யப்பட்டதையிட்டு நான் கவலையடைகின்றேன். ஆனால், இலங்கைக்கான எனது இலட்சியம் பற்றி பேசக்கூடிய களங்களை ஐக்கிய இராச்சியத்திலும் வேறு இடங்களிலும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். இலங்கையில் வாழ்ந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் சரி எங்கள் நாட்டு மக்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் எனது முயற்சியை தொடர்வேன்.

ஐக்கியப்பட்ட நாடு என்றவகையில் எமக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நாம் பிரிவினைகளை ஆதிக்கம் செலுத்த விடுவோமாயின் எமது முழுஅளவிலான ஆற்றலை வெளிப்படுத்த முடியாது போய்விடும். 30 வருட கால பிரிவினையும் மோதலும் எமக்கு பின்னால் உள்ளது. சகல இலங்கையருக்குமாக நாம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும்

ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்பட்டதையிட்டு எல்.ரீ.ரீ.ஈ.இன் ஆட்கள் பேருவகை அடைந்தனர். ஈழவாதிகளிடையே வெற்றிக்களிப்பு காணப்பட்டது. இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னும், டோச்செஸ்ரர் ஹோட்டலுக்கு எதிரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

புலி மற்றும் புலி ஆதரவு ஆட்களின் நடத்தை எப்படியிருந்த போதும் ஒருதலைப்பட்சமான இரத்தின் பின்னர் பெருந்தலைவருக்கான (Statesman) கண்ணியத்துடன் ஜனாதிபதி நடந்துகொண்டமையை பாராட்ட வேண்டும்.

சாதாரணமான ஒருவராக இருந்தால் சீறி, சினந்து கொதித்து, கிளர்ந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் ஜனாதிபதி அழுத்தம் காணப்பட்ட நிலையிலும் அமைதியாக இருந்தார். அவரது உடனடி அறிக்கை பெருந்தன்மையானதாகவும் பாராட்டும்படியும் இருந்தது.

இந்த ஒருதலைப்பட்சமான இரத்து ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியாக சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரித்தானிய அதிகார வர்க்கத்தினர் சிலர், தமது சொந்த காரணங்களுக்காக ஜனாதிபதியை அவமதிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களை பயன்படுத்தினார்கள் என்ற சந்தேகத்திற்கும் இடமுண்டு.

புலிகளினதும் புலிஆதரவாளர்களினதும் பொறுப்பில்லாத நடவடிக்கை ஆத்திரமூட்டலுக்கு காரணமாகலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இலங்கை தமிழர்களின் பெரும்பகுதியினர், சிதறடிக்கபட்ட தமது வாழ்வை இலங்கையில் மீளக்கட்டியெழுப்பிக்கொண்டு வாழ்க்கையை கொண்டுபோக முயன்றுக்கொண்டுள்ளனர். இதற்கு புலம்பெயர்ந்தோரின் கூத்தடிப்புகள் எவ்வகையிலும் உதவப்போவதில்லை.

வெற்றிபெருமிதம்

ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரையை இரத்துச்செய்ய வைத்ததை புலம் பெயர்ந்த தமிழர்களின் ஊடக அமைப்புகள் பெருவெற்றியென பெருமையடிக்கின்றனர். இந்த வெற்றிப் பெருமிதம் இலங்கையிலுள்ள சிங்கள கடும்போக்காளர்மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரித்த மனங்களும் பலப்பிரயோகமும் நல்லதற்கல்ல.

புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிகள் மற்றும் புலி ஆதரவாளர்களின் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி இதுதான்: ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதால் இலங்கையில் துன்பத்தில் உழலும் தமிழர்கள் அடைந்த இலாபம் என்ன? விளைவுகளை பற்றி கவலைப்படாமல் இதை வெற்றியென நீங்கள் கொண்டாடுகின்றீர்களா? ஏன் நீங்கள் கொண்டாடுகின்றீர்கள்?.

மஹிந்த ராஜபக்ஷ , இலங்கையில் மக்காளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இவருக்கு காட்டப்படும் மரியாதையின்மை இலங்கை மக்களுக்கு அவர்கள் சிங்களவர்களாக அல்லது தமிழர்களாக அல்லது முஸ்லிம்களாக அல்லது பறங்கியர்களாக இருந்தாலும் அவர்களின் மனதை புண்படுத்துவதாகவே அமையும். இப்படியான சமயங்களில் மக்கள் ஜனாதிபதியுடன் அணித்திரள்வர்.

இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பெருந்தலைவராக கண்ணியவானாக விடுத்த அறிக்கையை இந்தப்பத்தி மீண்டும் பாராட்டுகிறது.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனமையால் அவருக்கு உண்டான மனவுளைச்சலிலும், ஏமாற்றத்திலும் இந்தப் பத்தி பங்கு கொள்கின்றது. இந்த விடயத்தை அற்பமானதாக கருதும்படியும் இலங்கை மாதாவின் சகல பிள்ளைகளும் சமாதானத்துடன் வாழும் பொருளாதார செழிப்புமிக்க நாட்டை கட்டியெழுப்பும் வழியை தொடரும்படியும் இந்த பத்தி கேட்டுக்கொள்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.